பஸ்ஸில் குடிகாரர் நுழைவது அபூர்வமான ஒன்று. குடிகாரர்களைப் பார்க்கும்போது ஒருவிதமான மிரட்சி ஏற்படுகிறது. அவர்கள் எதுவும் செய்யக்கூடும். கீழே விழுந்துவிடலாம். யாரையாவது அடித்துவிடலாம். யாராவது அவர்களை அடித்துவிடலாம்.
இந்தக் குடிகாரர் ஒரு தமிழர். சீனக் குடிகாரரைப் பார்க்கும்போது ஏற்படும் பதற்றத்தைவிட ஒரு தமிழ் குடிகாரரைப் பார்க்கும்போது அதிகப் பயம் ஏற்படுகிறது. முதலில் அவர் சொல்வதெல்லாம் நமக்குப் புரியும்.
அதிகம் பழக்கத்தில் இல்லாத சொற்களாக அவர் பேசிக் கொண்டு வந்தார். கழகத் தமிழ் அகராதி, கிரியா இரண்டிலும் பார்த்து அர்த்தம் தேடிக் கொள்ள முடியாத வார்த்தைகள். ஆனால் மற்ற சொற்களைவிட அதிக அர்த்தமுள்ள சொற்கள்.
‘இவனுங்களுக்கு ஏன் இந்த வேல?’ என்பது போன்ற சில சொற்களை மட்டும் வெளியே சொல்ல முடியும்.
‘இவனுங்க நாட்டுல இவனுங்க இருக்க வேண்டியது தான?’ என்று சொல்விட்டுச் சொல்ல முடியாத சொற்களில் தீவிரமாக உரை நிகழ்த்தினார். ‘இவனுங்க’ என்று அவர் சொல்லும் இவனுங்களால் அவருக்குப் பல தொல்லைகள் ஏற்படுவது பேச்சில் தெரிந்தது.
‘என்னமோ ஏஜெண்டுக்குக் காசு கொடுத்தானுங்களாம். பொண்டாட்டிய அங்க உட்டுட்டு இங்க வந்து லோல் படறானுங்களாம்…’ என்பதற்கு மேல் அவரிடம் இருந்து வரும் சொற்கள் சொல்லும்படியாக இல்லை.
பஸ்ஸில் பதினைந்து பேர் இருக்கலாம். சிங்கப்பூருக்கு இரண்டு மில்லியன் பேர் போதும் என்று பிரதமர் சொல்லி இருப்பதால் இன்னமும் ஆள் சேர்க்க ஆரம்பிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பயணிகள் கலைந்து அமர்ந்திருந்தனர். இது தேக்கா போகும் வழி என்பதால் நாலைந்து தமிழ் முகங்களும் இருந்தன. பின் இருக்கையில் இரண்டு பேர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று தோன்றியது. குடிகாரர் அவர்களைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனாலும் அவர்கள் அடக்கி அடக்கி அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள்.
அவர்களைத் திரும்பிப் பார்ப்பது சங்கடமாக இருந்தது. அவர்கள் பங்களாதேஷ்காரர்களாக இருக்கக் கூடாதா என்று மனம் விரும்பியது. ஆனாலும் அவர்களுடைய வெடிச்சிரிப்பு அவர்களைக் காட்டிக் கொடுத்தது.
குடிகாரரை அந்தச் சிரிப்பு உற்சாகப்படுத்துகிறதா என்பது தெரியவில்லை. சிங்கப்பூரில் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பழக்கத்தில் இருப்பது வியப்பாக இருந்தது. அடுத்த தலைமுறைக்கு இந்த வார்த்தைகள் போகுமா?
முழுமையாகத் தமிழில் பேசி இப்படித் தமிழில் திட்டிக் கொள்ளும் குடும்பங்கள் இன்னமும் இங்கே இருப்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது.
அறுபதுகளில் எழுபதுகளில் அத்தகைய வீடுகள் இருந்திருக்கலாம். சிவாஜி படங்கள். அகிலன் நாவல்கள். வீடு நிறைய மனிதர்கள். மனிதர்களே மனிதர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்த காலங்கள். ரத்தமும் சேறும் நிரம்பிய சொற்களுக்கு நிறைய வேலை இருந்தது.
இப்போது வீடு திரும்பியதும் மனிதர்களை மெளனம் கவ்விக் கொள்வதற்குப் போதுமான வசதி இருக்கிறது. இந்தக் குடிகாரரின் வீடு எப்படி இருக்கும்? இவர் குடித்துவிட்டு ஆடிக் கொண்டிருப்பதால் மனைவிதான் குடும்பத்தைக் கட்டிக் காக்க வேண்டியிருக்கும். அவளும் இதுபோன்ற சொற்களைக் கொண்டு இவரை வீட்டை விட்டு விரட்டக்கூடும். பிள்ளைகள் ஆரம்பத்தில் பயந்தும் பிறகு பயம் மறந்து இவர்களின் சொற்களில் அடிபடலாம். அவர்களிடமும் இந்தச் சொற்கள் இருக்கும்.
‘என்ன இதுக்குடா நீங்க அங்க இருந்து இங்க வர்றீங்க? இது தேவையாடா உங்களுக்கு?’ என்று சொன்னால் தேசியம் பேசும் குடும்பத் தலைவரின் இலக்கியப் பேச்சில் நயம் செத்துவிடுகிறது. கெட்ட வார்த்தைகள்தான் அவருடைய பேச்சுக்கு ருசி கொடுக்கின்றன. அந்தச் சொற்களை அவர் கையாளும் விதம் அவருக்கு அதில் நல்ல பயிற்சி இருப்பதைக் காட்டுகிறது. தினமும் பயன்படுத்தினால் மட்டுமே வரக்கூடிய லாவகம் அது.
கெட்ட சொற்களை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவர் இப்போது ஆற்றுவது நல்ல சொற்பொழிவு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இமயம் நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுக்கலாம். ஆனால் சொல்லில் நல்ல சொல் கெட்ட சொல் என்று பிரித்திருப்பதால் இமயத்தில் போட மாட்டார்கள்.
போகும் வேகத்தை வைத்துப் பார்த்தால் டிரைவர் எந்த நேரத்திலும் பஸ்ஸை நிறுத்திக் குடிகாரரை இறங்கச் சொல்லக்கூடும். பஸ் கேப்டன் என்று சொல்லப்படும் டிரைவருக்கு அப்படி ஒரு நினைப்பு இந்நேரம் வந்திருக்கலாம்.
பஸ் இயந்திரத்தின் இரைச்சலைவிடச் சொற் பொழிவின் இரைச்சல்தான் காதை அடைத்தது.
சீனனுக்கும் புரிந்துவிடக் கூடிய தமிழ்ச் சொற்கள்தான். ஆனால் இறங்கு என்று சொன்னால் குடிகாரர் உடனே இறங்கிவிட மாட்டார்.
பஸ்ஸை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். களைப்பான வேலை. என்ன நடந்தது என்று எஸ்பிஎஸ் பஸ் நிறுவனத்தில் இருந்து கேள்விகள் வரும். யாருக்கும் தொந்தரவு தராத பட்சத்தில் இதை ஏன் பெரிதுபடுத்தினாய் என்று டிரைவருக்குக் கரும்புள்ளிகள் குத்தலாம். ஒரு பயணத்துக்கு இத்தனை நிமிடம் என்று ஒரு கணக்கு இருக்கிறது.
டிரைவர் சரியான நேரத்துக்கு நிலையத்தைப் போய்ப் பிடிக்க முடியுமா என்பது முக்கியம். மற்ற சில்லறை வேலைகளை நிலைமையை அணுசரித்துக் கவனமாகச் செய்ய வேண்டும்.
நற்குடிமரும், தேசிய உணர்வு மிக்கவரும், குடும்பத் தலைவரும், காலையில் குடிக்கும் பழக்கமுள்ளவருமான குடிகாரர் நியாயத்தை எப்படியும் புரிய வைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். உள்ளே இறங்கியுள்ள திரவம் அவரை மிகவும் ஆட்டிப் படைக்கிறது. அவருடைய சொற்களைக் கீழே கொட்டினால் கபகபவென்று பஸ்ஸே தீப்பிடித்து எரிந்து போகும்.
வெட்கமாகவும் மற்றவர்கள் பார்க்கிறார்களே என்று கூச்சமாகவும் வாழ்க்கையை நகர்த்திவிட்டதால் இந்தத் தருணத்தை ரசிக்க முடியாமல் திணறல் ஏற்பட்டது. பஸ்ஸைவிட்டு இறங்கிக் கொஞ்சம் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் போய்விடலாம் என்றுகூட யோசனை வந்தது.
அந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது.
புதிய கண்டாங் கெர்பாவ் கேகே ஆஸ்பத்திரி வாசலில் நாலைந்து பேர் ஏறினர். அதில் ஒரு தமிழ் நர்ஸ். சிங்கப்பூரில் தாதி என்று சொல்வோம்.
பஸ்ஸே திடுக்கிடும்படியாக அந்தப் பெண் அந்தக் குடிகாரக் குடும்பத் தலைவர் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்கு எதிரே உட்கார்ந்தது.
குடிகாரர் பஸ் நின்றதால் நிறுத்திய சொற்பொழிவை பஸ் புறப்பட்டதும் தொடங்கப் போகிறார். அப்போது அந்தப் பெண் குறுகி அந்த இருக்கையில் செத்துப் போகும் என்ற பயம் பஸ் முழுவதும் பரவியது.
நர்ஸ் என்றதும் நம் மனதில் ஏற்படக்கூடிய பவ்யங்கள் நிறைந்த அண்மையில் திருமணமான அல்லது திருமணத்தைச் சற்றே ஒத்திப் போட்டிருக்கும் ஒரு தாதி.
பின்னால் வரும் வாகனங்களைக் கண்ணாடியில் கவனித்துவிட்டு மெதுவாக பஸ் புறப்பட்டது. எல்லாரும் சொற்பொழிவுக்குத் தயாராகிவிட்டனர்.
குடிகாரர் பேசினார்.
‘என்னத்துக்கு? நம்ம புள்ள இருக்கு. எதுக்குக் கண்டதெல்லாம் பேசிக்கிட்டு?’
indrajit8363@gmail.com