சுயமரியாதை இயக்கமானது பெண்களின் மறுமலர்ச்சிக்கும் சீர்திருத்தத்திற்கும் இடையறாது தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுள்ளது என்பதனை வரலாற்றுத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. பெண் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் நிலவி வந்த பெண்களின் மோசமான நிலைமையினையும் அவர்களின் அடிமைத்தனத்தையும் பற்றிக் கவலை கொண்ட சுயமரியாதைக்காரர்கள், அத்தகைய ஆணாதிக்க அமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்களைக் கேள்விக்கு உட்படுத்தினர். இந்தச் சூழலில் இந்தக் கட்டுரையானது சுயமரியாதை இயக்கம் முன்வைத்த பெண்ணிய விடுதலை குறித்தான வாதங்களை உரிய வரலாற்றுத் தரவுகளுடன் விளக்க முற்படுகின்றது.
ஆணாதிக்கதிற்கு எதிரான ஓர் சமூகப்போர்
பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களை நடைபிணமாக்கும் என்று கருதி, அதை சமூகத்தினில் இருந்து நீக்க அரும்பாடுபட்டனர் தந்தை பெரியார் மற்றும் அவர்தம் வழிவந்த சுயமரியாதைக்காரர்கள். (பெரியார். 2004: 64.) பெண் மக்கள் விடுதலை என்பதனை சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படைக் காரணி என்று பிரகடனப்படுத்தி களத்தினில் இறங்கி அதற்கான வேலைகளைச் செய்தனர். (விடுதலை. 31.08.1959.)
சுயமரியாதைக்காரர்கள் பொதுவாகவே அரசியல் விடுதலையினைக் காட்டிலும் சமூக விடுதலையினையே பெரியது எனக் கருதினர். நாட்டின் விடுதலையென்பது பெண்களின் விடுதலையினைச் சார்ந்தே உள்ளது என்று சுயமரியாதைக்காரர்கள் ஆணித்தரமாக நம்பினர். (குடி அரசு. 29.06.1930.) ஆணுக்கும் பெண்ணிற்கும் சமஉரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச யாருக்கு தகுதி இருக்கிறது என்ற கேள்வியினை தந்தை பெரியார் அவர்கள் எழுப்பினார். (விடுதலை. 28.06.1973.) 1929-ம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடானது ‘சுயமரியாதை’ என்பது ஒவ்வொருவருக்குமான பிறப்புரிமை என்று வரையறுத்து, அத்தகையதானது ‘சுயஆட்சி’ என்ற கற்பிதத்தினைக் காட்டிலும் ஆகச்சிறந்தது என்றது. (குடி அரசு. 08.12.1929.) ‘தேசம்’ என்றகற்பிதத்தினைப் பற்றி பெரிதும் கவலை கொள்ளாதுடன், சுயாட்சி என்பதனை அடிப்படை உரிமை என்பதுடனேயே சுயமரியாதைக்காரர்கள் தொடர்புபடுத்திக் கண்டனர். (குடி அரசு. 30.07.1927.)
தந்தை பெரியார் அவர்கள் சமூக சீர்திருத்தங்கள் என்பவை எல்லாம் மானிட எழுச்சிக்காகவே அல்லாமல் நாட்டின் மீள் உருவாக்கத்திற்கான நிறுவனம் என்பது மட்டும் இல்லை என்று 1928-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய சமூக சீர்திருத்த மாநாட்டின் தலைமை உரையின் பொழுது குறிப்பிடுகின்றார். (Revolt. 5, 12.12.1928.) தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு முன்னெடுப்புகளும் மனிதத்தை அடிப் படையாகக் கொண்டே இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்திய நாட்டில் அநேகமாய் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதையும், மனிதத் தன்மையும், நாகரிகமும் உடைய சமூகம் எனவும் உலகத்தவர்களால் மதிக்கப்பட வேண்டுமானால்; முக்கியமானதாகவும் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதாகவும் இருக்கும் கொடுமைகள் இரண்டு உண்டு என்ற தந்தை பெரியார் அவர்கள், அதில் முதலாவதாக இந்திய மக்களுக்கிடையே உள்ள பலசமூகங்களைப் பிறப்பிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற, விலங்குகளிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும், இழிவாகவும் நடத்தும் முறை என்றும், இரண்டாவதாக, இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க “கடவுளாலேயே” படைக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்தும் முறையாகும் என்றார். (குடி அரசு. 05.10.1930.) இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் அரைக்கணம்கூட இருக்கவிடக் கூடாத சமூகத்தீமைகள் என அறிவித்து களத்தில் நின்று போராடியவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
பெண் விடுதலையின் முக்கியத்துவங்கள் பற்றிய தீர்மானங்களை அலர்மேல்மங்கையத் தாயம்மாள் போன்ற சுயமரியாதை இயக்க பெண்கள் பல்வேறு சமூக மாநாடுகளில் முன்மொழிந்ததனை வரலாற்று ஆவணங்களைக் காணும் பொழுது அறியமுடிகின்றது. (குடி அரசு. 08.06.1930.) 1929ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சம உரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்தியது. (குடி அரசு. 08.12.1929.) பெண்கள் விடுதலை என்பது பெண்களுக்கான விடுதலை மட்டு
மல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்குமானது ஆகும் என்றும், சமூகத்தில் அவை மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தச் செய்யும் என்றும் தந்தை பெரியார் அவர்கள் தீயர் மாநாட்டினில் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 08.06.1930.)
பெண்கள் ஆண்களைப் போலவே எதிலும் உரிமை கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையை சுயமரியாதைக்காரர்கள் கொண்டிருடிந்தனர். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 366.) ஆண், பெண் சமத்துவமும், சுயமரியாதையும் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதைப்பற்றிக் கவலை கொள்ளத்தேவை இல்லை என்று பிரகடனப்படுத்தி சமூகமாற்றத்திற்கான வேலைகளைச் சுயமரியாதைக்காரர்கள் செய்துவந்தனர். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 368.) இதையொட்டியே தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகள் மாநாடானது பிறப்பின் அடிப்படையிலான பாலின வேறுபாடுகளைக் களைந்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்தித் தர வேண்டுமென்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. (Revolt. 11.12.1928.)
பெண்களானவர்கள் தார்மீக அடிப்படையிலும், ஆன்மீக அடிப்படையிலும் அடிமைப்படுத்தப்பட்டே வந்துள்ளனர் என்றும், அவர்களுக்கான பொதுவெளியானது மறுக்கப்பட்டு, சமையலறைக்கு உள்ளேயே அடைக்கப்பட்டனர் என்றும் சுயமரியாதைக் காரரான குஞ்சிதம் அம்மையார் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Revolt. 06.10.1929.) மேலும், ஆணாதிக்க சமூக அமைப்பானது பெரும்பாலும் பெண்களைப் பாலியல் இச்சைக்கான பொருளாகவும், சொத்தாக எண்ணியதுடன் (குடி அரசு. 24.11.1929.), பெண்களைக் குழந்தை பெரும் இயந்திரமாகக் கருதி, அவர்களை விலங்குகளுக்குச் சமமாக நடத்தி வந்துள்ளது என சுயமரியாதைக்காரரான நீலாவதி அம்மையார் அவர்கள் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 28.06.1931.)
சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன என்ன உரிமைகள் உள்ளன என்றும், அவர்களுக்கு இடையே வித்தியாசங்கள் என்பவை ஏன் இருக்க வேண்டும் என்பதே சுயமரியாதைக்காரர்களின் அடிப்படை வாதமாகும். (குடி அரசு. 12.02.1928.) பெண்களால் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் உண்டான பலன் என்பதென்ன; பெண்களின் இன்றைய வேலைகள் என்பது என்ன; ஓர் ஆணுக்கு ஒர் பெண் என சமூகம் கட்டமைப்பது என்பது எதற்கு; இத்தகைய சமூக அமைப்புகளானது பெண்களை ஆண்களின் நலத்திற்கும், திருப்திக்கும், பெருமைக்கும் பயன்படுத்துவற்கு உரிய ஒரு உபகருவியாகவே பயன்படுத்தியதே அல்லாமல் வேறு என்ன; ஓர் ஆணிற்கு ஒரு சமையல்காரர் போலவும்; அவனின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரியினைப் போலவும்; அவனின் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையினைக் கொடுக்கக்கூடிய அடிமையைப் போலவும்; ஆணின் கண் அழகிற்கும், மனப் புளகாங்கிதத்திற்கும் ஏற்றவகையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய பதுமை போலவும் என்று இல்லாமல், பெண்கள் பெரிதும் வேறு எதற்குப் பயன்படுகிறார்கள் அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஆணாதிக்க சமூகத்தின் ஆணிவேரீனையே அசைக்கக்கூடிய அடிப்படைக் கேள்விகளை தந்தை பெரியார் அவர்கள் எழுப்பினார். (குடி அரசு. 29.01.1946.)
இச்சமூகமானது பெண்களை ஒரு பாவமாகவும், அவர்களின் நிழல் கடப்பதைக்கூட குற்றமாகவும், பெண் குழந்தைகளைப் பெறுவதையே சாபமாகவும் கருதிவருவதை மிகக் கடுமையாக சுயமரியாதைக்காரர்கள் விமர்சித்தனர். (குடி அரசு. 15.05.1932.) இதைப்போன்ற சாபம், பாவம் போன்ற கருத்தியல்களை சாடிய சுயமரியாதைக்காரர்கள், தீண்டத்தகாதவர்கள் என சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையினைக் காட்டிலும் பெண்களின் நிலைமை என்பது மோசமானதாகவே இருந்து வருகின்றது என்றனர். எனவே பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதன் மூலமே சமூகத்தில் அவர்களின் நிலைமையினை மேம்படுத்த முடியும் என்று சுயமரியாதைக்காரர்கள் நம்பினர். மேலும், பெண்கள் அவர்கள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம் நம்பிக்கையாகவும் தைரியமாகவும் சமூகத்தில் செயல்பட முடியும் என்றும் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர முடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தினார். (குடி அரசு. 21.09.1930.)
பொதுவாகவே பெண் மக்களை ஆண்கள் நடத்துவது என்பது மேல் சாதிக்காரராகத் தன்னைக் கருதிக் கொள்பவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவதைவிட, பணக்காரர் ஏழைகளை நடத்துவதை விட, எசமான் அடிமைகளை நடத்துவதைவிட மோசமானதாகவே உள்ளது என்ற தந்தை பெரியார் அவர்கள், மேற்குறிப்பிட்ட பிரிவினர்கள் எல்லாம் இருவருக்கும் தொடர்பு ஏற்படும் இடங்களில் மட்டும்தான் ஒருவர் மற்றொருவரைத் தாழ்மையாய் நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது என்றும், ஆனால், ஆண்
களோ பெண்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா தருணங்களிலும், அடிமையாகவும் கொடுமைப்படுத்தியுமே வருகின்றனர் என்ற சமூக அவலத்தினைப் பற்றி குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 08.02.1931.)
பெண் அடிமைத்தனம் என்பது மனித சமூக அழிவு என்பதை நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் என்பது பகுத்தறிவு இருந்தும் தேய்ந்துகொண்டே வருகின்றது என்று அறுதியிட்டார் தந்தை பெரியார். (குடி அரசு. 16.06.1935.) மேலும், உலகின் மனித வர்க்கத்தில் உள்ள அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள், இத்தகையவை எல்லாம் ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் வெள்ளி முளைத்த தருணங்கள் என்றார். (குடி அரசு. 22.08.1926.)
பெண்களுக்குத் தங்களின் விடுதலையினைப் பற்றிய அறிவும், உணர்வும் போதிய அளவு இருக்கவில்லை என்றும், அவர்களுக்கு உரித்தான விடுதலையினை உருவாக்க இந்த சமூகத்தில் இதுவரை எந்தவிதமான முயற்சிகளும் செய்யப்படவில்லை என்றும், மேலும், அவர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கான வசதியும் வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்படவும் இல்லை என்றும் சுயமரியாதைக்காரர்கள் கருதினர். (விடுதலை. 11.10.1948.) பொதுவாக, இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்திருப்பதுடன், மற்றவர்களுடன் தாராளமாகப் பழகவும் அனுமதி மறுக்கப்பட்டே வந்துள்ளனர். இந்தகைய முன்னெடுப்புகள் பெரும்பாலும் பெண்களை ஒன்றும் தெரியாத முட்டாள்களாகவே ஆக்குகின்றன. (விடுதலை. 11.10.1948.) எனவே, பெண்களை ‘நீ பெண்; அங்கு போகாதே’ என்று சொல்லாமல் சரிசமமாக வளர்க்கவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்திய தந்தை பெரியார் அவர்கள், பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு பல திறமைகளை பயிற்றுவித்து ஆண்களைப் போலவே வளர்க்கவேண்டும் என்றார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 365.) மேலும், இந்த சமூகமானது பெண்களை ஓர் அஃறிணைப் பொருளாகவே உருவாக்கிக் கொண்டு வருகின்றது என்ற தந்தை பெரியார் அவர்கள், இந்த உலகில் மனித சமுதாயத்தினைத் தவிர வேறு எந்தவொரு உயிரும், ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம்’ என்ற கருத்துடனும், நடத்தையுடனுமா இருக்கின்றன என்ற அடிப்படைக் கேள்வியினை எழுப்பினார். (குடி அரசு. 29.01.1946; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 361.)
‘சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள்’ என்று நினைத்து அவர்களை என்றைக்குமே அடிமைத் தளையில் கட்டிப்போட்டு வைத்திருப்பது என்பது பெரும் சமூகத் தீமையையே முடிவில் விளைவிக்கும் என்றார் தந்தை பெரியார் அவர்கள். (விடுதலை. 11.10.1948.) பெண்களுக்கு உண்மையான விடுதலை வரவேண்டும் என்ற சுயமரியாதைக்காரர்கள் (விடுதலை. 11.10.1948.), பெண்களும் தாங்கள் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சியினை உடையவர்கள் என்ற உணர்வினைப் பெற்று இருக்க வேண்டும் என்று விரும்பினர். (விடுதலை. 28.06.1973.) அப்படிப்பட்ட சம உரிமையினை அவர்கள் பெற்றால், அவர்கள் ஆண்களை விட சிறப்பாகவே செயல்படுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் உளப்பூர்வமாக நம்பினார் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 367.) அதற்காகவே தனது இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடலானார்.
ஆண்-பெண் சரிநிகர் சமம்
பெண்ணுரிமை என்பது என்னவெனில், ஆணினைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டு என்பதை ஆண்மக்கள் ஒப்புக் கொள்வதே ஆகும் என்ற தந்தை பெரியார், (குடி அரசு. 12.02.1928.) ‘ஆணைத் தொழுது எழவேண்டும்’ என்று பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், ‘பெண்ணைத் தொழுது எழவேண்டும்’ என்று ஆணுக்கும் நிபந்தனை இருக்கவேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிச உரிமை என்பது ஆகும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றென சமூகவெளியினில் முன்வைத்தார். (குடி அரசு. 12.02.1928.)
ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒரே ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம். அத்தகைய ஒழுக்கம் என்பதோ, கற்பு என்பதோ ஆண் பெண் இருபாலாருக்கும் உரித்தானதே இருக்க வேண்டுமே தவிர பெண்களுக்கு மட்டும் சார்ந்தது அல்ல என்ற தந்தை பெரியார் அவர்கள், (குடி அரசு. 22.12.1929.) ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமானவர்கள், அவர்கள் வெறும் அடிமை மாத்திரம் இல்லை என்று தனது வாதத்தினை ஆணித்தரமாக முன்வைத்தார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 369.) படித்த பெண்ணாக இருந்தாலும், படிக்காத பெண்ணாக இருந்தாலும், எல்லோருமே இந்த நவீன காலத்திலும் கூட வெறும் அலங்காரப் பதுமைகளாகவே இருக்கிறார்கள் என்ற வருத்தம் கொண்டதோடு (குடி அரசு. 29.01.1946.), ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுவது எதனால் என்ற அடிப்படைக் கேள்வியினையும் சுயமரியாதை இயக்கத்தினர் எழுப்பினர். (குடி அரசு. 29.01.1946.)
சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்றுக்கே உரித்தான ஆள் அல்ல பெண்; அவர்கள் சமமானவர்கள்; நண்பனைப் போன்றவர்கள், வாழ்க்கைத் துணைவியானவர், இருவருக்கும் உரிமை என்பது ஒன்றே என்று பொதுவெளியில் தந்தை பெரியார் அவர்கள் முழங்கினர். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 369.) மேலும், ஆண்களுக்கு எனச் சொன்ன விடயங்கள் எல்லாம் பெண்ணுக்கும் பொருந்தும், அவர்களும் அதை உணர்ந்தே நடந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்படும் என்பதோடு உண்மையான திருப்திகரமான இன்பத்தையும் காதலையும் அடையமுடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தினார். (குடி அரசு. 12.10.1930.)
பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள், இரண்டொரு உடல் உறுப்புகளில் உள்ள மாற்றம் இல்லாமல், மற்றபடி பெண்கள் என்பவர்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 29.01.1946.) எனவே உண்மையான சமத்துவத்திற்கு மனித சமூகம் மதிப்புக் கொடுக்க வேண்டுமானால், உண்மையான அன்பு இருக்குமே ஆனால், குழந்தையைச் சுமந்து பெறும் வேலை ஒன்றினைத் தவிர, மற்ற காரியங்கள் எல்லாம் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தினார். (குடி அரசு. 12.02.1928.)
வாழ்க்கை இன்ப, துன்பங்களில் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமை உண்டு. பெண் விடுதலை குறித்த விடயங்களில் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே ஒருவர் சிந்திப்பதை விடுத்து அவரரவர் செல்லப்பெண் குழந்தைகளையும் அன்புச் சகோதரிகளையும் மனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 367.) மேலும், தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடும் பொழுது, பெண்கள் உப்பு, மிளகாயினைப் போல் தனி உடைமைச் சொத்து ஆகிவிடுவது என்பது ஒரு நாட்டின் பொதுநலன் கருதியும், பெண்களின் முன்னேற்றம் கருதியும் நன்மையன்று, எனவே அவசியமான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றும், சமூகத்தின் சரிபாதியாகிய பெண்கள் சமூகம் என்பது எந்தவித முன்னேற்றமும் இன்றி இப்படி அடிமைப்பட்டுக்கிடத்தல் என்பது நியாயம் அல்ல என்றார். (குடி அரசு. 11.10.1948.)
பெண்களின் அடிமைத் தன்மை என்பது பெண்களை மட்டும் பாதிப்பதில்லை என்றும், அது குறிப்பிட்ட வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது என்ற
தந்தை பெரியார் அவர்கள், இதனை சாதாரணமாக ஆண்கள் ஒருபோதும் உணருவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். (குடி அரசு. 12.08.1928.) ஆண்களுக்குச் சரிநிகர் சமமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதையும் உணர்ந்திருக்கவில்லை. போதிய உரிமை வேட்கையுடைய பெண்களும், தம்மை எங்கு உலகம் தூற்றுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்துவிடுகிறார்கள். இது ஒரு சமூகத் தீமையாகும். எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த விதத்திலும் வேற்றுமை இருக்கக்கூடாது. பெண்கள் வெறும் விலங்கு இனம்போல் நடத்தப்படும் நிலை என்பது ஒழிந்தே ஆகவேண்டும் என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 11.10.1948.)
‘ஆண்மை’ ஒழிய வேண்டும்
மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலினத்தவருக்கும் இருபாலினர் குணங்களும் சமமாய் இருக்கவேண்டும். அதற்குண்டான வாய்ப்புகள் அனைத்தும் இயற்கையிலேயே இருந்திருக்கின்ற பொழுதும், ஆண்களின் சுயநலத்தால், சூழ்ச்சியால் ஒரு மாறுபட்ட செயற்கையான சமூகச் சூழல் உருவாக்கப்பட்டு பெண்களின் சமவாய்ப்புகளும், உரிமைகளும் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 12.02.1928.) இத்தகைய நிலைக்கு ஆணிவேறான ‘ஆண்மை’ (masculinity) என்ற கருத்துருவாக்கத்தின் மீது சுயமரியாதைக்காரர்கள் மிகக்கடுமையான விமர்சனப் பார்வையினைக் கொண்டிருந்தனர். உண்மையான பெண் விடுதலையென்பது ‘ஆண்மை’ என்ற கருத்தியலை ஒழித்தாலொழிய ஏற்படாது என்ற தந்தை பெரியார் அவர்கள், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், அத்தகைய முன்னெடுப்புகளே பெண்கள் அதிகாரம் பெறவைக்க கூடிய வழி என்று தீர்க்கமாக கருதினார். (குடி அரசு. 12.08.1928.)
தந்தை பெரியாரைப் பொறுத்தவரை, ‘ஆண்மை’ என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்படும் குறியீடு என்பதாகும். (குடி அரசு. 12.08.1928.) நீண்ட நெடிய மானுடசமூகத்தில் ‘ஆண்மை’என்ற கருத்தாடல் உள்ளவரை பெண்களுக்கான எந்த விடுதலையும், முன்னேற்றமும் ஏற்பட்டுவிட முடியாது. அதனால் ‘ஆண்மை’ என்ற கருத்தியலானது மானுட சமூகத்தினில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்றும், பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது ‘பெண்மையின்’ விடுதலை என்பது சாத்தியம் இல்லை என்றும், (குடி அரசு. 12.08.1928.) ஆணின் தன்மைகள் என வீரம், கோபம், வன்மை, ஆளுந்திறம், என்றும், பெண்களின் தன்மைகள் என அன்பு, மென்மை, சாந்தம் மற்றும் பேணுந்திறம் என்றும் கூறுவதில் இருந்தே சமுதாயத்தினில் கட்டமைக்கப்பட்ட பாலின வேறுபாடுகளை உணரமுடிகின்றது என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 12.02.1928.) சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ‘ஆண்மை’க்குத் தான்உண்டு என்று ஆண்மக்களே முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும் என்ற உதாரணத்தினையும் முன்வைத்தார் தந்தை பெரியார். (குடி அரசு. 12.08.1928.)
பெண்ணுடல் மீதான அடக்குமுறைகளைக் குறித்துக் கவலை கொண்ட சுயமரியாதைகாரர்கள், பெண்கள் தாழ்ந்து இருக்க காரணமான பல்வேறுவகைப்பட்ட தொன்மங்களைக் கட்டுடைத்தனர். நீண்ட சமூகமயமாக்கல் செயல்முறையின் மூலம் பெண்களானவர்கள் ‘ஆண்மை’ என்ற கருத்தியலை மேன்மையானதெனக் கருதப் பழக்கப்படுத்தப்பட்டு வந்தனர் என்பதனை தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டு, இந்த தொடர் முயற்சிகளே ஆணாதிக்க சமூக அமைப்பினை இங்கே நிலைநிற்கச் செய்யும் பயிற்சி முறைகளாக இருந்து வருகின்றது என்கிறார். (குடி அரசு. 18.01.1931.) அதேபோல், ‘ஆண்மை’யும் ‘பெண் அடிமைத்தனமும்’ கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிப்பதும், பெண் மக்களும் இதை உண்மை என்று தலைமுறைகளாக நினைத்துக் கொண்டு வந்த வழக்கத்தாலும், பெண்ணடிமைத் தனத்திற்கு இந்த உலகத்தில் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 12.08.1928.)
பொதுமக்களிடம் பிறவியிலேயே உள்ள உயர்வு-தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற ‘இந்து’மதக் கொள்கையினைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமாகிறது. அது போலவே, பெண் மக்களும் உண்மை விடுதலை பெற்று உண்மைச் சுதந்திரம் பெற வேண்டுமானால், ‘ஆண்மை’யும், ‘பெண் அடிமைத்தனமும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 12.08.1928.)
பெண்களை வெறும் போகப் பொருளாக ஆக்கப்படாமல். அவர்கள் புது உலகைச் சிந்திக்கவல்லவர்களாக்க வேண்டும் என்பதுவே தந்தை பெரியாரின் விருப்பமாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாலினபேதத்தின் அடிப்படைகொண்டு அழையாமல், பாலின பேதமற்ற சொல்லாடல்கள் மூலமே அழைக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள், பெண் குழந்தைகளுக்கு பெயர்கள் இடும்பொழுது கூட பாலின பேதமற்ற சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றதுடன், அவர்களின் உடைகளும் ஆண்களைப் போல அணியப் பழக்கப்படுத்தி, எளிதில் ‘இவர் ஆணா, பெண்ணா’ என்று மற்றவர்கள் அறியா வகையில் வளர்க்க வேண்டும் என்றார். மேலும், பெண்களும் தங்களை, ‘பெண் இனம்’ என்று யாரும் கருத எந்தவொரு இடமும் எண்ணமும் உண்டாகும்படி நடவாமல் இருப்பதுடன், ஒவ்வொரு பெண்ணும், தங்களுக்குள்ளான பேதம், கட்டுப்பாடுகள் மற்றும் உயர்வு-தாழ்வுகள் ஏற்படுவதன் காரணங்கள் என்பவை என்ன என்பதனை அறிந்து கொண்டு சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 29.01.1946.)
பாலியல் பேதங்கள் அடிப்படையிலான மொழியியல் அரசியல்
பெண்ணுடல் மீதான மொழியியல் அரசியலைக் (linguistic politics) குறித்து சுயமரியாதைக்காரர்கள் சமூக வெளியில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர். ‘கற்பு’ மற்றும் ‘பதிவிரதை’ போன்ற கற்பிதங்களை ஆணாதிக்க பேரினவாதமானது தாங்கிப் பிடிப்பது என்பது சமூகத்தில் பாலியல் தொழிலினை நிலைநிறுத்தச் செய்யவே வழிவகை செய்யும் என்று சுயமரியாதைக்காரர்கள் கருதினர். (குடி அரசு. 29.05.1932.) மேலும், ‘வேசி’ என்ற சொல்லானது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவே சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்ற சாமி சிதம்பரனார் அவர்கள், பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக இருக்கச் செய்யவே ‘விபச்சாரம்’ போன்ற சொற்களானது உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். (குடி அரசு. 02.11.1930.)
‘விபச்சாரி’ (prostitute) என்ற வார்த்தையினைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடும்பொழுது அந்த வார்த்தையானது பொதுப்புத்தியில் விபச்சாரம் (prostitution) என்ற தொழிலில் ஈடுபடும் பெண்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் அத்தொழிலினில் ஈடுபடும் ஆணினைக் குறிக்கும் பொருட்டு அதற்கு இணையான சொல் என்பது பெரும்பாலான மொழிகளின் சொற்பிறப்பியலியலில் (etymology) இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டியதுடன், ‘விபச்சாரன்’ என்ற சொற்பதத்தையும் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். (குடி அரசு. 26.10.1930.) மேலும், ‘விதவைத் திருமணம்’ (widow remarriage) என்கிற சொல்லினைப் பற்றி குறிப்பிடும்போழுது அந்த வார்த்தையானது பெண்கள் விடயத்தில் தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர ஆண்கள் விடயத்தில் குறிப்பிடப்படுவது இல்லை என்பதையும், அதைப் போலவே மனைவியை இழந்த ஆண்கள் இரண்டாவதாக செய்யும் திருமணங்களை ‘விதவைத் திருமணம்’ என்று அழைப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டதுடன், அத்தகைய திருமணத்தை ‘விதவன் திருமணம்’ என்றே அழைக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். (விடுதலை. 07.04.1959.)
‘அழகு’ போன்ற கருத்தியல்களானது எவ்வாறு பெண்களை சிந்திக்க விடாமல் மட்டுப்படுத்துகிறது என்று சுயமரியாதைக்காரர்கள் விளக்கினர். பெண்களின் சிறப்புகளைக் குறித்துப் பயன்படுத்தப்படும் பெருமைகளிலும், வருணனைகளிலும் பெண்களின் உடல் அங்கங்களையும், அவயவங்களையும் பற்றிய குறிப்புகள் ஐம்பது வரிகள் இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் வெறும் ஐந்து வரிகள்கூட இருப்பது இல்லை. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது என்பவை எல்லாம் பெண்கள் சமுதாயத்திற்கே ஓர் அவமானம், இழிவு என்பதுடன், அடிமைத்தனமான காரியமாகவே அமைகின்றது என்றார் தந்தை பெரியார் அவர்கள். (குடி அரசு. 29.01.1946.)
‘அழகு’ எனும் பெயரில் பெண்கள் தங்களின் நீண்ட முடியை வளர்த்து வருவதற்கு மேற்கொள்ளும் செயல்களானது பொருத்தமற்றது என்றனர் சுயமரியாதைக்காரர்கள். அந்தகைய செயல்பாடுகளானது பெண்களை அடிமை மனநிலையுடனேயே இறுக்கச் செய்கின்றது என்று சுயமரியாதைக்காரரும், பொதுவுடைமைவாதியுமான சிங்காரவேலு அவர்கள் தனது ‘பொதுவுடைமையும் பெண்களும்’ என்ற கட்டுரையினில் எடுத்துரைத்தார். (குடி அரசு. 15.11.1931.) பெண்கள் ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டு, அலங்கார மூடர்களாக இருக்கும் சுயமரியாதையற்ற அடிமைத்தன்மையும் இழிவுமுறையும் ஒழியவேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 29.01.1946.), பிறரின் கவனங்களை ஈர்க்கும்படியான ஆடை ஆபரணங்களை எல்லாம் பெண்கள் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏனென்ற கேள்வியினை எழுப்பினார். (குடி அரசு. 29.01.1946.)
பெண்கள் தங்களின் உடலினை அலங்கரித்துக் கொண்டு மற்றவர்களின் கவனத்தை தங்கள்பால் ஈர்க்கும் காரியங்கள் எல்லாம் இழிவான மற்றும் அநாகரிகமான செயல் என்பது கூட யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் என்பது பெண்ணானவர்கள் போகப் பொருள் என்று பொதுமக்களிடையே நிகழும் பொதுவான கருத்தேயாகும் என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 29.01.1946.) மேலும், இந்தியப் பெண்கள் என்பவர்கள் எல்லாம் என்ன நகைகள் மாட்டும் ஸ்டாண்டா என்ற வினாவினைப் பொதுவெளியில் வைத்த சுயமரியாதைக்காரர்கள் (குடி அரசு. 29.01.1946.), எவ்வளவுக்கு எவ்வளவு அடிமைத்தன்மையில் பெண்களுக்கு மோகம் உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு நகைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்கள் தங்களை விகாரமாக அலங்கரித்துக் கொள்கிறார்கள் என்றனர். (புரட்சி. 17.06.1934.) பெண்கள் நகைகளுக்காகவும் துணிகளுக்காகவும் செலவு செய்யும் பணத்தினையெல்லாம் வங்கியிலிட்டு அதில் பெறப்படும் வட்டியினைக் கொண்டு, குழந்தைகளைப் பராமரிக்க ஆட்களை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய தந்தை பெரியார் அவர்கள், அதன் மூலம் அன்பு என்ற ஒன்று ஒருபோதும் குறைந்து விடுவதில்லை என்று வாதிட்டார்.
பெண்கள் சமையல் தவிர்த்து உயர்வேலையினைப் பார்க்கவேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் நகைகளை மாட்டும் ஸ்டாண்டுகளாக இருக்கக் கூடாது என்றார். (குடி அரசு. 29.01.1946.) இவ்வாறெல்லாம் கூறுவதால், பெண்களை தரமான (டீசென்சி), சுத்தமான, கண்ணுக்கு வெறுப்பில்லாத, ரம்மியம் அற்றவர்களாக இருக்க வேண்டுமென்று சொல்லுவதாகாது என்ற தந்தை பெரியார் அவர்கள், அத்தகையவைகளெல்லாம் அவசியம் வேண்டுமென்றார். அவ்வாறு இருந்தபொழுதும், அவை எல்லாம் அதிகம் பணம் செலவு செய்யக் கூடிய, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த, நவநாகரீக ‘பேஷன்’ அலங்காரத்தால் செய்யவல்லது அல்ல என்றும், அவை சாதாரண ஆடம்பரம் குறைந்த தன்மையிலே பெற முடியும் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தினார். (குடி அரசு. 29.01.1946.)
பெண்களின் தேர்வு என்பது மதிப்புமிக்கது ஆகும்.
சுயமரியாதைக்காரர்கள் பெண்களின் ஆளுமையைக் குறித்தும், அவர்களின் தேர்வுகள் குறித்தும், அவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்தும் மிகுந்த மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்டிருந்தனர். பெண்கள் அவர்களின் முடிவுகளைத் தாங்களாகவே தேர்வு செய்யவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தினார். (குடி அரசு. 29.12.1929) பெண்கள் சுதந்திரம் என்பது அவர்தம் சிந்தனைகளிலும் செயல்களிலுமே உள்ளது என்றார் சுயமரியாதைக்காரரான நாகலிங்கம். (குடி அரசு. 10.11.1925.) பெண்
களுக்கு ஆண்களைக்காட்டிலும் அவர்களுக்கு அவர்களே தடைகற்களாக உள்ளனர். பெண்கள் தங்களின் சுயமதிப்பு இன்னதென்று அறியாது விடுதலை அடைய முடியாதவராக உள்ளனர் எனக் குடி அரசு இதழானது குறிக்கின்றது. (குடி அரசு. 12.08.1928.) மேலும், பெண்களும் தாங்கள் முழுமையான விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எந்தவொரு எண்ணமும் தோன்றாது உள்ளனர் என்ற சுயமரியாதைக்காரர்கள், ஆண்களுக்கு அடிமையாகப் பெண்களைக் கடவுள் படைத்திருக்கின்றான் என்பதே இயற்கைத் தத்துவங்களின் தன்மை என பெண்கள் கருதப்பழக்கப்பட்டு வரலாயினர் என்றனர்.
எப்படியெனில், பெண் இல்லாமல் சமூகத்தில் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழவே முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் கருதிக்கொள்ளச் செய்யப்பட்டனர் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 12.08.1928.)
பெண்களின் இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் என்பது வெறும் சட்டத்தினாலும், மதத்தினாலும் மட்டுமே ஏற்பட்டது என்று சொல்லுவதற்கு இல்லாமல், பெண் சமூகமும் அதனை ஒப்புக் கொண்டு, இந்த தாழ்வான நிலைக்கு உதவி புரிந்து வருவதானாலுமே, இது வலுபெற்று வருகின்றது என்ற சுயமரியாதை இயக்கத்தினர் (குடி அரசு. 08.01.1928.), பெண்களுக்காக ஆண்கள் முடிவுகள் எடுப்பதைக் குறித்து தர்க்க ரீதியிலான ஐயங்களை வெளிப்படுத்தினர். பெண்களுக்கே அவர்களின் உரிமைகளையும், சிரமங்களையும், ஆற்றல்களையும் புரிந்து கொள்ளும் வல்லமை உள்ளதென்று குஞ்சிதம் அம்மையார் அவர்களும் குறிப்பிடுகிறார். (Revolt. 06.10.1929.) பெண்கள் ஒருபோதும் அவர்களுக்கு வேண்டியவைகளை தேர்வு செய்ய ஆண்களை அனுமதிக்க கூடாது என்றும், ஆண்களால் செய்யப்பட்ட சட்டங்களே இந்த உலகம் முழுவதும் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான காரணம் என்றும் சுயமரியாதைக்காரர்கள் குறிப்பிடுகின்றனர். (Revolt. 24.11.1929.) மேலும், பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதே அவர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று குடி அரசு இதழும் குறிப்பிடுகின்றது. (குடி அரசு. 07.02.1932.)
இந்நிலையில், பெண்கள் விடுதலை என்பது ஆண்களின் கைகளில் இருந்து ஒருபோதும் பெறமுடியாது என்பதனை சுயமரியாதைக்காரர்கள் நன்கு உணர்ந்தி
ருந்தனர். (குடி அரசு. 12.08.1928.) பூனை எலிகளுக்கோ; நரி ஆடுகளுக்கோ அல்லது கோழிகளுக்கோ ஒருபோதும் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாது என்ற உவமையின் மூலம் ஆண்களின் முயற்சியினால் மட்டுமே செய்யப்படும் எந்தவித விடுதலை இயக்கமும், எந்த வழியிலும், வகையிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையினைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்ற தந்தை பெரியார் அவர்கள், ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் என்பது வளருவதுடன், பெண்கள் என்றென்றும் விடுதலை பெறமுடியாத அளவிற்குண்டான கட்டுப்பாடுகள் எல்லாம் பலப்பட்டுக் கொண்டே வரும் என்று குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 12.08.1928.)
பெண் விடுதலைக்குப் பொருளாதார சுதந்திரம் என்பது இன்றியமையாததாகும்
சுயமரியாதை இயக்கமானது பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சொத்துரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. (குடி அரசு. 05.10.1930.) “பெண்களும் தொழிலாளிகளே” என்ற நீலாவதி அம்மையார் அவர்கள், குடும்ப வேலை ஒன்றிற்காகவே பிறந்த பெண்கள் எப்படித் தொழிலாளர்களாவார்கள் என்று கேட்கப்படுகின்றது, பெண்களுக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்பதும், பெண்கள் குறிப்பிட்ட சில (குடும்பம் என்பதையும் தாண்டி ஆண்களுக்கு மனைவியர்களாகவும், அவர்களுக்கு குழந்தைகளை ஈன்றெடுக்கவும் மட்டுமே) வேலைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு கூட்டம் என்பதும், ஆண்களோடு பெண்கள் சேர்ந்து தொழிலாளர் தன்மையை அடைய முடியாதென்பதும் பலரது கருத்தாகும்.
இதற்கு எடுத்துக்காட்டாக; ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்ற வாக்கியத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். உத்தியோகம் என்பதற்கு ஓர் தனிப்பெருமை இருந்து வருகின்றது என்பதை எந்தப் பகுத்தறிவுவாதியும் ஒப்புக்கொள்ள முடியாது. (புரட்சி. 29.04.1934.) அத்துடன், தனிவுடைமைத் தன்மை எவ்வாறு தவிடு பொடியாக வேண்டுமோ அவ்வாறே ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்ற கருத்தும் ஒழிந்து பட்டு பொதுவாக ‘உழைப்பு என்பது மனித லட்சணம்’ என்று ஏற்பட வேண்டும் என்றும், உழைப்பிற்கும், தொழிலிற்கும் வந்தனை செய்து, வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்து பிழைப்பிற்கென் செய்வோமெனும் ஏக்கம் தவிர்த்து பேரின்ப சமதர்ம வாழ்வடந்திட “பெண்களே! விழியுங்கள், பேதம் மாற்றிட உழையுங்கள் என்று அறைகூவலிட்டார். (புரட்சி. 29.04.1934.)
பெண்களுக்கான சொத்துரிமையின் முக்கியத்துவத்தையும், சொத்துரிமை, பாதுகாப்பு நிலையாளர் (guardianship), தத்தெடுத்தல் போன்றவற்றில் ஆண்-பெண் என எந்தவொரு பாலின பேதமும் இன்றிஅனைவரும் சமம் என்ற நிலைபெற்று அதற்கான சமஉரிமையினைப் பெற வேண்டுமென்று பல்வேறு மாதர் மாநாடுகளில் சுயமரியாதைக்காரர்கள் தீர்மானங்களை நிறைவேற்றினர். (குடி அரசு. 18.05.1930.) பெண்ணடிமைக்கான முக்கியமான காரணங்களாக சொத்துரிமை இல்லாததும், வாழ்க்கைத் துணையினைத் தேர்வு செய்யும் உரிமை இல்லாததுமே என்று லட்சுமி அம்மையார் அவர்கள் இரண்டாம் சுயமரியாதைக்கான பெண்கள் மாநாட்டினில் குறிப்பிடுகிறார். (குடி அரசு. 04.05.1930.) இதேபோல், தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் மாநாடானது கைம்பெண்களுக்கு அவர்களின் இறந்த கணவரின் சொத்தில் சமஉரிமையினைப் பெறச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியது. (Revolt. 11.12.1928.) இது கைம்பெண்களின் பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது என்று சுயமரியாதைக்காரர்கள் கருதினர்.
பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கப்படாதற்குக் காரணம் இதுதான் என்று இதுவரை யாரும் காரணம் சொன்னதே கிடையாது என்ற விடயத்தை முன்வைத்த தந்தை பெரியார் அவர்கள், பெண்ணடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே தலையாய காரணம் என்றும் (குடி அரசு. 05.10.1930.), பெற்றோர்களின் சொத்தில் ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் சரிபங்கு உரிமை உண்டு என்றும் வாதிட்டார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 369.) மேலும், பெண்களுக்குத் பெற்றோர் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டார்களா என்ற கேள்வியினை எழுப்பிய தந்தை பெரியார் அவர்கள், பெண்களைப் பயன்படுத்திக்கொள்கின்றவர்கள், அவர்களிடம் வேலை வாங்கிப்பயன் அடைகின்றவர்கள் அவர்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணமே என்றார். (குடி அரசு. 29.01.1946.)
பெண்களுக்குச் சொத்துரிமை என்பது இருந்து விட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவிதமான அசவுகரியங்களும் ஒழிந்துபோகும் என்ற தந்தை பெரியார் அவர்கள், பெண் வாரிசுகள் சொத்து உரிமையினை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்பது கொடுமையும் அநீதியுமே ஆகும் என்றார். (குடி அரசு. 05.10.1930.) பெண்கள் வரதட்சனை, நன்கொடை முதலியவற்றைப் பெற்று அவைகளை நிர்வகித்து வரத்தக்கவர்கள் என்ற உரிமையும் வழமையும் இருக்கும்போது, வாரிசுரிமையின் அடிப்படையிலான சொத்தினை அடைய ஏன் அவர்கள் தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற வினாவினை எழுப்பிய தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 05.10.1930.), ஆண்களைப் போன்றே சொத்துரிமை பெறுவதற்கு பெண்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதன்மூலம் பெண்களுக்குச் சரிபங்கு சொத்துகள் கிடைப்பதுடன், பெண்கள் ஆண்களைவிட செல்வந்தர்களாக மாறமுடியும். ஏனெனில், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் இருந்து பெண்களுக்கான சொத்துகள் வந்து சேருகின்றது. இதன்மூலம் பெண்களுக்கான உரிமைகளும், அதிகாரமும் சமூகத்தில் நிலைபெறச் செய்ய முடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் உறுதியாக நம்பினர். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 367.)
இந்தியத் துணைக்கண்டத்தினைச் சார்ந்த பெண்கள் மேல்நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை, ஊக்கம் உடையவர்களாவர்கள் என்ற நம்பிக்கை கொண்ட தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 15.09.1946.), பெண்கள் உரிய பதவிகளை வகிக்க வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 369.) மேலும், பெண்களின் பதவிக் குறைப்புக்குக் காரணங்கள் என்பவைகளெல்லாம் அவர்களை அனுபவம் அற்றவர்களாகச் செய்வதுதான் என்றும், அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளைக் களைய வேண்டும் என்றும் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 369.) அவைமட்டுமல்லாமல், பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய பாலின பாகுபாடுகளின் அடிப்படையில் நிர்ப்பந்திக்கப்படுவதை சுzயமரியாதைக்காரர்கள் சாடி வந்ததனையும் அறியமுடிகின்றது. (குடி அரசு. 18.05.1930.)
பெண் மக்களும், அவர்தம் கல்வியும்
பெண் கல்வி என்பது பெண் விடுதலைக்கு முக்கியமான அளவுகோல் என்று சுயமரியாதைக்காரர்கள் கருதினர். (குடி அரசு. 29.06.1930.) இந்தியப் பெண்களின் கீழான நிலைமைக்கும் அடிமைத்தனத்திற்கும் கல்வி அறிவின்மை என்பது முக்கிய காரணிகளில் ஒன்றெனக் கருதிய தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 03.06.1928.), மனிதச் சமூகம் சுதந்திரமாகக் கவலையற்று இருக்க வேண்டுமெனில் பெண்களுக்கு கல்வி என்பது அவசியம் என்றார். (குடி அரசு. 16.06.1935.)
‘ஔவை படித்திருந்தார்’,‘காரைக்காலம்மையார் படித்திருந்தார்’ என்று பழைய ஏட்டைப் புரட்டிப்பார்த்து வீண் பெருமை பேசிக் கொள்வதால் ஒரு பயனுமில்லை என்ற குஞ்சிதம் அம்மையார் அவர்கள், இந்த நிமிடத்தில் நமது நாட்டில் ஆயிரத்திற்கு எத்தனை பெண்கள் படித்திருக்கிறார்கள் என்பதே எனது கேள்வி என்றார் (குடி அரசு. 26.06.1932.). அதேபோல், ஆண்களின் கொடுமையினின்று அனைவரும் மீள வேண்டுமானால் ஒருவர் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்று குறிப்பிட்டார் குஞ்சிதம் அம்மையார் அவர்கள். (குடி அரசு. 26.06.1932.) கல்வியின் முக்கியத்துவத்தினைப் பற்றி நன்கறிந்த சுயமரியாதைக்காரகள் 1930-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டினில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தினை ஆதரித்து தீர்மானங்களை நிறைவேற்றியதை குடி அரசு இதழின் வழி அறியமுடிகின்றது. (குடி அரசு. 04.05.1930.) ரிவோல்டில் வெளியான இந்திய பெண்களின் துயரங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையானது, இந்திய பெண்களின் உரிமைகள் குறிப்பாக கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதைக் குறித்து உரிய ஆதாரங்களுடன் விவரித்தது. (Revolt. 27.10.1929.)
கல்வியில் ஆண்-பெண் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று குடி அரசு இதழின் கட்டுரைகளானது தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. (குடி அரசு. 21.09.1930.) அதேபோல், ஆண்-பெண் இருபாலினத்தவருக்கும் குறைந்தது பதினாறு ஆண்டுகளாவது இலவசக் கல்வியினை வழங்க வேண்டுமென்று சுயமரியாதை இயக்கத்தினர் 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டினில் தீர்மானத்தினை நிறைவேற்றினர். (குடி அரசு. 18.05.1930.) 1928-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகள் மாநாடும், சாதி, சமய, பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது கிடைக்கவேண்டும் என்றும், பள்ளிக்குச் செல்லும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் சிறப்பு சலுகைகளாக இலவச தங்கும் வசதி, புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை வழங்கவேண்டும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியது. (Revolt. 11.12.1928.)
ஒரு நாட்டின் மக்கள் உடல் ஆரோக்கியமும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவும் உள்ளவர்களாக இருக்கவேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் கொண்டே தங்கள் பெற்றோர்களால் கவனிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், மனக்கவலைகள் ஏதும் இன்றி அன்பாக வளர்க்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 01.03.1931.) பெண்களை நகைகளிலோ, ஆடைகளிலோ உள்ள விருப்பத்தை ஒழித்துவிட்டு, கல்வியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் விரும்பினார். (குடி அரசு. 05.06.1948.) இந்தியப் பெண்களும், மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளையும் பெற்று, இன்ப வாழ்வினை வாழ வேண்டும் என்றும், அதற்குப் பெண்களும் ஆண்களைப் போலவே கல்வி அறிவு பெற வேண்டும் என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 05.06.1948.) மேலும், இந்தியப் பெண்கள் சமூகப் பிரச்சினைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி சுதந்திரம் அடைய வேண்டும் என்று சுயமரியாதைக்காரர்கள் கூறினர். (Revolt. 27.10.1929.)
உலகில் பெண்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்பவர்கள், பெண்களை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் ஆண் குழந்தைகளை லட்சியம் செய்யாமல், பெண்களுக்கே அதிகம் செலவு செய்து படிக்கவைக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 01.03.1936; விடுதலை. 11.10.1948.), குடும்பத்தில் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்கவைக்க வேண்டும் என்றார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 367.) அதுவே அவர்களை சட்டத்தின் மூலம் பெறப்படும் சொத்துரிமை, விவாகரத்து உரிமை மற்றும் இன்னும் பிற உரிமைகளை அனுபவிக்கச் செய்யக்கூடிய முக்கிய விடயமாக மாற்றும் காரணிகளில் பிரதானமானது என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 05.06.1948.) மேலும், கல்வி, அறிவு, செல்வம் ஆகியவை இல்லாத பெண் என்பவர் தாயாகும் பொழுது எவ்வாறு நல்ல தாராள புத்தியும் சமத்துவ ஞானமும் திருப்தியான மனமும் உள்ள குழந்தைகளைப் பெறமுடியும் என்ற அடிப்படைக் கேள்வியினையும் சுயமரியாதை இயக்கத்தினர் எழுப்பினர். (குடி அரசு. 16.06.1935.)
மேற்குலகில் உள்ள பெண்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள், வாழ்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் நாகரிகம் உள்ள மக்களாக மாறினார்கள் என்ற சுயமரியாதைக்காரர்கள் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 368.), இந்தியச் சமூகமோ பெண்களைச் சுதந்திரமாக நடந்துகொள்ளத் தகுதியுடையவர்களாக ஆக்குவதில்லை என்ற தங்களது வருத்தத்தினைப் பதிவு செய்தனர். (விடுதலை. 11.10.1948.) பெண்களைக் கல்வி அறிவில் விருப்பம் கொள்ளச்
செய்வதுடன், வீரப் பெண்களாக விருப்பம் கொள்ளச் செய்ய வேண்டுமென்றும், அப்படிப் பெண்கள் மாறினால் அவர்களின் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது என்பது வெகுசுலபம் என்றனர். (குடி அரசு. 05.06.1948.) மேலும், இந்திய நாட்டுப் பெண்களை உலகத்தினின்று மறைத்து வைப்பதும், அவர்களை உலக ஞானத்தை அடையவிடாமல் தடுத்து வைப்பதும் மிகமிகக் கேடானதாகும் என்றார் தந்தை பெரியார். (விடுதலை. 11.10.1948.)
இந்திய துணைக்கண்டத்தில் பெண்களின் கல்வி என்பது ஒரு பிற்போக்குத் தனமான முயற்சியாகவே இருந்து வருகின்றது என்ற தந்தை பெரியார் அவர்கள், (குடி அரசு. 29.01.1946.) இந்தியச் சமூகத்திலோ சிலர் பெண்களைப் படிக்க அனுமதிப்பார்கள்; ஆனால், பிறருடன் பழக அனுமதிக்க மாட்டார்கள். பெண்களுக்கு வேண்டியது வெறும் புத்தகப்படிப்பு மட்டும் அல்லாமல், உலக அறிவினையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும்; அதனுடன் நல்லது எது, கெட்டது எது என்பது போன்றவற்றை ஆராய்ந்து அறியும் அறிவினையும் அளிக்க வேண்டும் என்றும்; அவ்வாறு பெண்களைப் பழகவிடாமல் தடுத்துவிட்டு பெண்களைத் தங்களது வாழ்க்கைத் துணையினைத் தேர்வு செய்ய அனுமதித்தோமானால், அவர்களின் தேர்வு என்பது ஆக்கபூர்வமாகவோ அறிவு பூர்வமாகவோ இருக்காது என்றும் குறிப்பிடுகின்றார். (விடுதலை. 11.10.1948.)
பெற்றோர்கள் அவர்களது பெண் குழந்தைகளைப் பட்டம் படிக்கவைத்து திருமணம் செய்விப்பது என்பது அந்தப் பெண்களை சமையல் செய்யவும், குழந்தைகளை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் பொதுமக்களின் கவனங்களை ஈர்க்கவும் செய்யவே என சுயரியாதைக்காரர்கள் கருதினர். (குடி அரசு. 29.01.1946.) அதுமட்டும் அல்லாமல், குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு பெற்றோர் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் போன்ற கவின்கலைகளை கற்றுக்கொடுத்து, அவற்றில் தேர்ச்சி பெறச் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற பெண்ணை ஒருவர் மணந்து கொண்ட பின்பு, அந்தக் கலைகளின் பயன்பாடுகள் என்பவை எல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரும்பாலும் எந்தவிதமான பயனையும் கொடுப்பதில்லை என்றும் (குடி அரசு. 29.01.1946.), இத்தகைய கல்வி முறைகளானது பெண்ணிற்கு ‘சிறந்த’ வாழ்க்கைத் துணையினைப் பெற்றுத் தரக்கூடிய ‘விளம்பர யுத்திகளாகவே’ சமூகத்தால் பயன்படுத்தப்படுகிறது என்றும் சுயமரியாதைக்காரர்கள் குறிப்பிட்டனர். (குடி அரசு. 29.01.1946.) இத்தகைய பயனற்ற, பகுத்தறிவிற்கு இடம் தராத கல்வி முறைகளுக்காக அரசாங்கம் செய்த செலவும், மக்களின் வரிப்பணமும் வீணாவதானது ஒரு தேசியக் குற்றம் என்றே தந்தை பெரியார் அவர்கள் கருதினார். (குடி அரசு. 29.01.1946.)
பெண்களுக்குத் தொழிற்கல்வியின் முக்கியத்துவத் தையும், சமூகப் பணிகளில் அவர்கள் ஆர்வம் கொள்ள வேண்டுமென்றும் மாதர் மாநாடுகளில் சுயமரியாதைக்காரர்கள் தீர்மானங்களை நிறைவேற்றினர். (குடி அரசு. 18.05.1930.) தந்தை பெரியார் அவர்களும் பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு உரித்தான ஏதாவதொரு தொழிலினைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றார். (குடி அரசு. 28.02.1936.) பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டுவிட்டால், சொத்துக்களைச் சம்பாதிக்கும் சக்தி அவர்களுக்கு தாமாகவே வந்துவிடும் என்ற தந்தை பெரியார், பிறகு தங்களின் வாழ்க்கை இணையினைத் தாங்களே தேர்ந்தெடுக்கவும், அவ்வாறு இல்லாமல், பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் வாழ்க்கைத் துணையோடு சுதந்திரமாக தங்களின் வாழ்வினை நடத்தக் கூடியதன்மை என்பது ஏற்பட்டுவிடும் என்றார். (குடி அரசு. 05.10.1930.) ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், தொண்டுகளையும் பெண்களால் சிறப்பாகவே செய்ய முடியும் என்று ஆழமாக நம்பினார் தந்தை பெரியார். (குடி அரசு. 15.09.1946.) இதேபோல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்களும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தினைப் பற்றிக் குறிப்பிட்டு அத்தகைய முன்னேற்றத்திற்கு உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினைப் பற்றி பெண்கள் மாநாட்டினில் எடுத்துரைத்தார். (குடி அரசு. 18.05.1930.)
மேற்குறிப்பிட்டவை மட்டுமல்லாமல் உரிய பருவமடைந்த ஒரு ஆணோ, பெண்ணோ அவரவர்களுக்கு உண்டான திருமணத்தினை எப்போது செய்துகொள்ள வேண்டும் என்று அவரவர்களுக்கே தெரியும் என்ற தந்தை பெரியார் அவர்கள், தனக்கென்று ஒழுக்கமான, குணமுள்ள ஒருவரைப் பார்த்துப் பெண்ணே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக அறிவுபெற, அவர்களைப் படிக்கவைத்து அறிவுள்ளவர்களாக்க வேண்டும் என்று தனது அவாவினையும் தெரிவித்தார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 365.)
முடிவுரை
‘ஆண்மை’, திருமணம், சொத்துரிமை, பர்தா/கோஷா அணிவது, மணவிலக்கு, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, விபச்சாரம், கருத்தடை, பாலியல் சமத்துவமற்ற மொழியியல் மற்றும் உளவியல் கூறுகள், போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தீர்க்கமான விமர்சனப் பார்வைகளைக் கொண்டிருந்தனர் சுயமரியாதைக்காரர்கள். பாலினச் சமத்துவத்திற்கான முக்கியத்துவத்தினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு சார்ந்த கருத்துகளைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதையே மிகமுக்கிய வேலையாகச் சுயமரியாதைக்காரர்கள் செய்து வந்தனர். இவ்வாறு இந்திய சூழலில் குறிப்பாக தமிழக வெளியினில் பெண்ணியம் மற்றும் பெண்ணிய விடுதலை குறித்தான வாதத்தினில் சுயமரியாதை இயக்கத்தின் பங்கானது மிக இன்றியமையாதது ஆகும். 1960-களில் மரபுசாரா பெண்ணியவாதிகள் (radical feminist) முன்வைத்த பெண்ணியவாதங்களை சுயமரியாதைக்காரர்கள் 1930-களின் தொடக்கத்தினில் எந்த ஒரு சமூக நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் மிகத் தீவிரமாகப் பொதுவெளியில் முன்வைத்தனர்.
குறிப்புதவி நூல்கள்
இதழ்கள், உண்மை, குடி அரசு, திராவிடன், பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, Revolt
தமிழ் நூல்கள்
ஆனைமுத்து, வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1-6. சென்னை: பெரியார் ஈ.வெ. இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, 2009.
பெரியார், தந்தை. பெண் ஏன் அடிமையானாள்? சென்னை: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 2004.
அழியட்டும் ‘ஆண்மை’. சென்னை: பெரியார் திராவிடர் கழகம், 2010.
ராஜதுரை, எஸ்.வி. மற்றும் வ. கீதா. பெரியார்: சுயமரியாதை சமதர்மம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம், 1999.
வீரமணி, கி. தொகுப்பு. பெரியார் களஞ்சியம். சென்னை: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, 2010.
ஆங்கில நூல்கள்
Engles, Frederick. The Origin of the Family Private Property and the State. Chicago: Charles H. Kerr and Company, 1909.
Geetha, V and S.V. Rajadurai. Towards a Non-Brahmin Millennim: From Iyothee Thass to Periyar. Calcutta: Samya, 1998.
Revolt: A Radical Weekly from Colonial Madras. Chennai: Periyar Dravidar Kazhagam, (n.d.).
hooks, bell. Feminist Theory: From Margin to Center. Boston: South End Press, 1984.
Ain’t I a Woman: Black Women and Feminism. New York: Routledge, 2015.
Jeevanandam, S and Rekha Pande. Devadasis in South India: A Journey from Sacred to Profane Spaces. Delhi: Kalpaz Publications, 2017.
Morgan, Sue. Ed. The Feminist History Reader. London: Routledge, 2006.
Ramasami, Periyar E.V. Women Enslaved. New Delhi: Critical Quest, 2009.
jeeandm@gmail.com