சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வழக்கமான சவடால்களில் ஒன்றாக கார்ல் மார்க்ஸ் சிந்தனை இந்தியாவை சிதைத்துவிட்டது என்ற கருத்தைக் கூறியிருந்தார். மார்க்ஸியத்தோடு மட்டும் அவர் நிற்கவில்லை, டார்வினின் பரிணாமக் கோட்பாடு, மேற்குலக அறிவியல் சிந்தனைகள் என அனைத்தின் மீதும் அவர் தனது வன்மத்தைக் கக்கியிருந்தார். இது ஆளுநரின் தனிப்பட்ட சொந்தக் கருத்து அல்ல; மாறாக, ஆர்.எஸ்.எஸ். அதன் தொடக்ககாலம் தொட்டு பரப்பிவரும் சித்தாந்தங்களை இன்றைக்கு ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்.என்.ரவி பிரச்சாரம் செய்கிறார். அவர் வகிக்கும் பதவி காரணமாக அந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று விவாதத்திற்குரியனாவாக மாறுகின்றன. அவர் பதவியேற்றதிலிருந்து தமிழ் மொழி குறித்தும் திராவிடம் குறித்தும் தொடர்ந்து கூறிவரும் போலியான கருத்துக்கள் கடும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தின.
ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறிவரும் பல்வேறு கருத்துக்கள் அடிப்படையில் இரண்டு பொதுவானக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக உன்னதமான பறந்த பாரத நாடு ஒன்றும் அதை சார்ந்த வேதகால ஆரியப் பண்பாடு ஒன்று இருந்தது என்றும் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் வருகை மூலம் இந்த உன்னதமான சனாதன தர்மம் பாழ்பட்டுவிட்டது என்றும்தான் ஆர்.என்.ரவியும் அவரை இயக்குபவர்களும் சொல்லும் கோட்பாடு.
இந்த கோட்பாடுகள் அனைத்தும் கற்பனையானவை, வரலாற்று சான்றுகளுக்கும் புறம்பானவை. வெறும் மதவாதக் கட்டுக்கதைகள் என்பதைத் தவிர அவற்றிற்கு எந்தப் பொருளும் இல்லை. ஆனால் இந்தக் கட்டுக்கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகின்றன.
இவர்கள் சொல்லும் பாரதப் பண்பாடு அல்லது பாரத கலாச்சாரமென்ற ஒறு இந்தியாவில் எந்த காலத்திலும் எங்கும் நிலவியதில்லை. இந்திய துணைக்கண்டம் என்பது பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடுகளின் சிதறுண்ட ஒரு வெளியாகவே எப்போதும் இருந்திருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைமுறை மொழிகள், தொழில்கள், தட்பவெப்ப நிலை, வழிப்பாட்டுமுறை என இந்திய துணைக்கண்டம் எந்தப் பொதுமையும் அற்ற சமூகங்களின் களமாகவே இருந்திருக்கிறது. ஒரு அகண்ட பாரதத்தை பிடிக்க இவர்கள் முன்வைக்கும் வேதங்கள் , சமஸ்கிருதம் சார்ந்த பண்பாடு கூறுகள் கூட இந்திய நிலப்பரப்புகளின் சில பரப்புகளில் தான் நிலவிவந்திருக்குமே தவிர , இந்திய அல்லது இந்துத்துவ பொதுப்பண்பாடு நிலவியதற்கான எந்த சான்றும் இல்லை.
இவர்கள் கட்டமைக்கும் இந்தியா கற்பனை வரபடங்களாலானது. பல்வேறு முரண்பட்ட நம்பிக்கைகளில் இந்தியப் பண்பாடு அல்லது இந்து மதம் என்ற குடுவைக்குள் அடைத்து அதுதான் இந்திய மரபு , இந்திய பண்பாடு என்ற கற்பனை வரைபடத்தை இவர்கள் தொடர்ந்து கட்டமைத்து வந்திருக்கிறார்கள். இந்தியாவில் மாபெரும் பேரரசுகள் நிலவியதாக குறிப்பிடப்படும் வரலாற்றுக் காலக்கட்டங்களில்கூட அவர்கள் இன்றய இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் ஆட்சி செய்ததில்லை. அதுமட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் இந்த நிலப்பரப்புகள் ஒன்றோடொன்று இடையறாதப் போர்களிலும் ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செலுத்தும் செயல்களிலும் ஈடுபட்டும் வந்திருக்கின்றன. முகலாயப் பேரரசுகளின் காலத்திலும் அப்படித்தான். ஆங்கிலேயர்கள் வந்தபோது தான் ஓரளவு இன்றைய இந்தியாவின் ஆட்சிப்பரப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போதும்கூட, சமஸ்தானங்கள் தனித்தே இயங்கி வந்தன. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தைகளின் மூலமும், ராணுவ நடவடிக்கைகளின் மூலமும் போலி ஒப்பந்தங்களின் மூலமும் இந்த சமஸ்தான்ங்கள் இணைக்கப்பட்டன. ஐதராபாத் முதல் காஷ்மீர் வாரை இதுதான் கடந்த கால வரலாறு.
இன்றைய இந்தியாவை இணைத்துவைத்திருக்கும் ஒரே சக்தி, நமது அரசியல் சாசனமும் நிர்வாகக் கட்டமைப்பும் தான். இன்றும் இந்திய அரசு என்பது மாநிலங்களின் கூட்டமைப்பாகவே செயல்பட்டுவருகிறது. மொழிவழி மாநிலங்களின்வழியே இந்த கூட்டமைப்பின் ஒவ்வொரு அலகும், தனித்துவமான கலாச்சாரப் பொருளாதாரப் பாதைகளைக் கொண்டுள்ளன. கடந்தக் கால வரலாற்றிலும் சரி , நிகழ்காலத்திலும் சரி, இந்தியத் துணைக்கண்டம் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. முரண்பட்ட மத நம்பிக்கைகள் பண்பாட்டுக்கூறுகளின் வழியே இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய அரசுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களின்படி செயல்படும் ஒரு கூட்டமைப்பேத் தவிர, இந்திய தேசத்திற்கென்று பொதுவான கலாச்சார உணர்வுகளோ, மொழி உணர்வுகளோ அல்ல. இந்து மதத்தின் வழியாகவும் இந்தியின் வழியாகவும் இவர்கள் செயற்கையாக ஒரு மதவாதப் பண்பாட்டு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள். காந்தி இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று விரும்பியதும் இத்தகைய ஒரு செயற்கை தேசியத்தை உருவாக்கத்தான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த எல்லா அரசுகளுமே இந்திய நிலப்பரப்பில் வாழும் இனக்குழுக்களின் பன்முகத்தன்மையை நசுக்கி ஒரு செயற்கையான ஒரு பண்பாட்டு தேசியத்தை உருவாக்க முயற்சித்து வந்திருக்கின்றன. இந்த பண்பாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இன்றைய இந்தியாவின் பல மாநிலங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அந்த போராட்டக் களத்தின் முன்னணியில் இருக்கிறது. ஆளுநர் ரவி திராவிடம், தமிழ் மரபு பற்றியெல்லாம் கூறிவரும் கருத்துகள் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளின் தனித்துவங்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதற்காகவே.
அடுத்ததாக, இந்தியாவின் கடந்தகாலப் பெருமிதங்கள் பற்றிய கூற்றுகளின் உண்மை என்ன? பண்டைய இந்தியாவில் அறிவியல் இருந்தது; தத்துவம் இருந்தது; கட்டடக்கலை இருந்தது. இன்னும் என்னவெல்லாமோ இருந்த்து என்று சொல்லி மேற்கத்திய சிந்தனைகள் அதையெல்லாம் பாழ்படுத்திவிட்டன என்று கூறிவருகிறார்கள். பண்டைய இந்தியாவில் மக்களுடைய வாழ்க்கைநிலை என்னவாக இருந்தது.மன்னராட்சி முறையின் கொடுங்கோன்மைக்கு மக்கள் ஆட்பட்டிருந்தார்கள். அடிமைமுறை இருந்தது. பெண்களும் தலித்துகளும் மிருகங்களிலும் கீழான நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். பால்ய விவாகம் நடைமுறையிலிருந்தது. கல்வி உயர்சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. கொடூரமான மூடப்பழக்கங்களும் உடன்கட்டை ஏறுதலும் பரவலாக இருந்தன. விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மக்கள் நிலமற்றவர்களாக இருந்தார்கள். கோவில்களில் தாழ்த்தப்ப்ட்டவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. ஏழ்மையும் வறுமையும் மனிதர்களின் தலைவிதி என்று கருதப்பட்டது. இதுதான் உன்னதமாகக் காட்டும் பழைய இந்தியா.
ஆங்கிலேயர்களின் வருகையோடுதான் மனித உரிமை கோட்பாடுகள் வந்தன. ஆங்கிலேயக் கல்வியின் மூலமாகத்தான் ஜனநாயகம், மக்களாட்சிக் குறித்த தத்துவங்கள் இங்கு அறிமுகமாயின. மனிதர்களுக்கிடையே சமத்துவம், பாலின சமத்துவம் என்பன இருண்ட இந்தியாவின் நிலப்பரப்பில் புதிய வெளிச்சம் பாய்ச்சியது. மேற்கத்திய அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக இந்தியாவில் ரயில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கின. மனிதர்கள் சாதியாலும் அடிமைத்தனத்தாலும் கட்டுண்டுக்கிடந்த நிலப்பரப்பின்மீது புதிய வெளியை நோக்கி நகர்ந்துசென்றனர். இந்தியாவின் இருகிய பண்பாட்டு தனிமைகள் உடையத்தொடங்கின. மெக்காலே கல்விமுறை வேதபாட கல்விமுறைக்கு மாற்றாக கல்வியை ஜனநாயகப்படுத்தத் தொடங்கியது. கிறித்துவ அமைப்புகள் பழங்குடிகள் மற்றும் ஆதிவாசிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கல்வியையும் மருத்துவத்தையும் கொண்டு சென்றனர். மேற்கத்திய ஜனநாயக கருத்தியல்களின் விளைவாகவே பெரியார், அம்பேத்கர் போன்ற விடுதலை சிந்தனையாளர்கள் எழுந்துவந்தார்கள். இந்தியர்கள்மேல் சுமத்தப்பட்டிருந்த சாதிய மற்றும் பெண்ணடிமை சார்ந்த இழிவுகளை அழித்தொழிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். இன்னொருபுறம், மேற்கத்திய அலோபதி மருத்துவத்தின் வளர்ச்சிக் காரணமாக இந்தியர்கள் கொடுமையான நோய்களில் இருந்தும் மீட்கப்பட்டார்கள். இளவயது மரணங்கள் தடுக்கப்பட்டன. மலேரியா, தட்டம்மை. போலியோ ,காலரா போன்ற பெரும் கொல்லை நொய்களிலிருந்து இந்திய சமூகம் மீட்கப்பட்ட்து. எல்லாவற்றையும்விட மனிதர்களிடையே சமத்துவத்தையும் , தனிமனித ஒற்றுமையையும் , விரும்பிய இடத்தில் வசிக்கிற உரிமையையும் , விரும்பியத் தொழிலை செய்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த அரசியல் சாசனம் மேற்கத்திய ஜனநாயக சமத்துவக் கோட்பாடுகளின் வழியே உருவாக்கப்பட்டது. இது எதுவுமே இந்திய மரபில் இல்லை என்பதுதான் உண்மை.
இன்று நாம் வாழுகிற ஜனநாயக அமைப்பும் ,நாம் அனுபவிக்கிற அறிவியல் தொழில்நுட்ப வசதிகளும் மேற்கிலிருந்து நமக்குக் கிடைத்த கொடைகள். சமத்துவம் குறித்த கருதுகோல்களை உலகம் முழுக்க பரவச் செய்ததிலும் , அறிவியல் பார்வையை ஒரு வாழ்வியல் நோக்காக பரவச் செய்ததிலும் மார்ஸியத்திற்கு பெரும் பங்கு உண்டு.
இதில் ஆளுநர் ரவியும் அவரது எஜமானர்களும் எந்த மேற்கத்திய சிந்தனையை எதிர்க்கிறார்கள்; எந்த மேற்கத்திய சிந்தனை இந்தியப் பண்பாட்டை சித்தித்து. இந்தியப் பண்பாடக இருந்த சாதிய , பெண்ணடிமைத்தனத்தையும் பழமைவாத சனாதான கருதுகோல்களையும் மேற்கத்திய சிந்தனைகள் சிதைத்ததென்றால் அந்த சிந்தனைகள் கொண்டாடப்படவேண்டியவை. போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. அடிமைத்தனத்திலும் மூடத்தனத்திலும் கட்டுண்டுகிடந்த இந்தியர்களை விடுதலைசெய்து மேற்கத்திய ஜனநாயக கோட்பாடுகளும் அறிவியல்கோட்பாடுகளுமே . அந்த அறிவியலாலும் ஜனநாயகத்தாலும்தான் புதிய இந்தியா பிறந்தது. இன்று அந்த புதிய இந்தியாவை பண்டைய இந்தியாவின் போலி பெருமிதங்களுக்குள் மூழ்கடிக்க விரும்புகிறார்கள்.
ஆனால், அது சாத்தியமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும் ஒருபுறம் நவீன கார்ப்பொரேட் பொருளாதாரக் கொள்கைகள் , இன்னொருபுறம் பண்டைய இந்தியப் போலிப்பெருமிதங்கள் . இந்த இரண்டு குதிரைகளிலும் அவர்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஒன்றுக்கொன்று முரண்பாடுகளின் மூட்டையாக திகழும் ஆளுநர் ரவி போன்றவர்களின் பேத்தல்கள் எதையும் சீர்த்தூக்கிப் பார்ப்பதற்கு மனமற்ற ஒரு கும்பலுக்கு தீனிப்போடுவதைத் தவிர வேறெதையும் சாதிக்கப்போவதில்லை. அவர்கள் உருவாக்குவது போலிக்கருத்தாக்கங்களின் புழுதிப்புயல். இந்த புழுதிப்புயல் மக்களின் மனங்களில் படியாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் அவற்றை உருதியாக துடைத்துக்கொண்டிருக்கிறது.