எமது மலைக்கிராமப் பள்ளிக்கூடத்தில் அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் முடியும்முன் ஒரு மணி நேரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தாம். அந்நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எனது பாட்டோ ஆட்டமோ இருக்கும். அங்கே நான் பாடிய மூன்று பாடல்களை இப்போதும் எப்போதாவது முணுமுணுப்பேன். பாடுவாதில்லை, என் பாடல் என்னவென்று இப்போது எனக்குத் தெரியும். அன்று நான் பாடிய அப்பாடல்கள் லக்ஷ்மி விஜயம் படத்தின் ‘நாயகா பாலகா’, ஆசீர்வாதம் படத்தின் ‘சீமந்தரேகயில்’, யுத்தபூமி படத்தின் ‘ஆஷாட மாசம்’. இதில் ‘ஆஷாட மாசம்’ ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆர் கெ சேகர் இசையமைத்த பாடல். மூன்றையும் பாடியவர் வாணி ஜெயராம். பாடல்களை கவனமாக ரசிக்க ஆரம்பித்த அந்த பதின்பருவத்தில் நான் மிகவும் ரசித்த பெண் குரல் வாணி ஜெயராமுடையது.
‘சீமந்தரேகா’ பாடலின் மீதான காதலால் அந்தப் பாடலில் நடித்த விதுபாலாவை ஆழமாக காதலித்தாலும், அப்போது ஒரு பாதிரியாராக மாற முடிவெடுத்திருந்ததால் அந்தக் காதலை அடக்கினேன். ‘மாவின்டெ கொம்பில்’, ‘ஸ்வப்ன ஹாரம்’ போன்ற பாடல் காட்சிகளில் வாணி ஜெயராம் குரலில் விதுபாலாவே பாடுகிறார் என்றுதான் நம்பினேன்.
பின்னாளில் பாடல்களின் மேலான கவனமும் அவற்றின் சுவாரஸ்யமும் மொழிகளைக் கடந்து தீவிரமடைந்த காலத்தில் வாணி ஜெயராமின் பாடல்களின்மேல் எனக்கு ஆர்வம் குறையத் தொடங்கியது. அந்த விமர்சனப் பார்வை மேலேறி மலையாளத்தில் வாணி ஜெயராமுக்கு இருந்த சிறிய உச்சரிப்புப் பிழைக்களைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாமல் ஆக்கிவிட்டது.
பின்னணிப் பாடகர்கள் குரல் நடிகர்களாக மாறி கதாபாத்திரங்களில் மூழ்கும்போதுதான் திரைப்படப் பாட்டு முழுமையடையும் என்கின்ற கறாரான உணர்வால் வாணி ஜெயராம் உட்பட பல பாடகர்களின் மீது ஆர்வமிழந்தேன். சுருதி சுத்தத்திலும் பாடும் உத்தியிலும் சிறந்து விளங்கிய பல பாடகர்கள் உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனில் தோல்வியடைவதை உணர்ந்தேன்.
ஆனால் மலையாளத்திலும் தமிழிலும் வாணி ஜெயராம் பாடிய பல பாடல்களை ஒருபோதும் என்னால் தவிர்க்க முடியவில்லை. தமிழில் குறிப்பாக ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ‘ஏழு சுரங்களுக்குள்’, ‘ஒரே நாள் உனை நான்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’, ‘கவிதை கேளுங்கள்’, ‘ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே’ போன்றவை. 90களில் கூட தமிழில் அவர் பாடிய பல திரைப்படப் பாடல்களும் கிறிஸ்தவ பக்திப் பாடல்களும் வாணி ஜெயராமின் குரலை என் காதுகளுக்கு தொடர்ந்து கொண்டுவந்துகொண்டேதான் இருந்தது.
இதற்கிடையே அவருடைய சில நேர்காணல்கள் மலையாள இதழ்களில் காணக்கிடைத்தன. அவற்றில், தனக்குக் கிடைத்ததில் திருப்தியடையாமல், மலையாளத்தில் தனக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குறை மட்டும் சொல்லும் ஒரு பாடகியைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. பணிவு மட்டுமே கொண்ட பலரது பேட்டிகளைப் பார்த்து என் கண்கள் இருட்டாகிப் போயிருந்தது. வாணி ஜெயராமை மிகவும் திமிர் பிடித்த ஒருவர் என்று மனதுக்குள்ளே தீர்மானம் செய்தேன். அதோடு வாணி ஜெயராமுடன் பாடிய சிலர் ஊதியத்தில் சமரசம் செய்யாத அவரது மனப்பாண்மை குறித்து கூறிய கருத்துக்களையும் சேர்த்துக்கொண்டேன். பின்னாளில் எனது வேலை சம்பந்தமான விஷயங்களுக்காக வாணி ஜெயராமிடம் பேசும்போதெல்லாம் அவரது உரையாடல்கள் அனைத்தும் எனது கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன!
இசைக் கலைஞர்களிடமிருந்து அவரது இசைத்தட்டு, ஒலிநாடா, குறுவட்டுப் பிரதிகளின்மேல் கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். வாணி ஜெயராமை நேரில் சந்தித்தபோது, மலையாளத்தில் கொலம்பியா வெளியீடாக வந்த இசைத்தட்டில் அவரது கையெழுத்தை வாங்கினேன். அதன் அட்டையில் இருந்த அவரது புகைப்படம் தனது கணவர் ஜெய்ராம் எடுத்ததாக அவர் சொன்னார். அந்தநாளில் அவருடன் சில நேரம் இருந்தபோதிலும், எனக்குத் தெரியாத ஏதோ காரணங்களால் எரிச்சலுடன் காணப்பட்ட அவரிடம் என்னால் எதுவும் பெரிதாகப் பேச முடியவில்லை.
காலமும் அனுபவமும் எனது இசை கேட்டலையும் கருத்துக்களையும் புதுப்பித்துக்கொண்டே இருந்தன. சமீபத்தில் ‘வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன்’ செய்தியைப் பார்த்தபோது, பத்து வருடங்களுக்கு முன், எஸ்.ஜானகி அதே அங்கீகாரத்தை தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி நிராகரித்தது நினைவுக்கு வந்தது. “அதுபோல் தாமதமாகாமல் வாணியம்மாவுக்கு இந்த பெரிய அங்கீகாரம் கிடைத்ததே” என்று மகிழ்ச்சியுடன் எனக்கு போன் செய்த பாடகி மின்மினி வாணி ஜெயராமைப் பற்றி நிறையப் பேசினார். தான் எண்ணற்ற முறை ஸ்டுடியோவில் சந்தித்திருக்கும் வாணி ஜெயராம் தன்னிடம் மிகவும் அன்பாகப் பழகியவர் என்றும், தனது பாடும் குரலை தான் இழந்த நாட்களில் தன்னை மிகுந்த பாசத்துடனும் அரவணைப்புடனும் நடத்தியவர் அவர் என்றும் மின்மினி சொன்னார்.
வாணி ஜெயராமின் பாடும்முறையைப்பற்றியும் ஒரு தனி நபராக அவரது குணாதிசயங்களைப்பற்றியும் நீண்ட நேரம் பேசினோம். திரையிசைத்துறையில் அடிமைகளைப்போல் செயல்பட்டு எதுவுமே வெளிப்படையாகப் பேசாமல் இருப்பவர்களை ஏற்றுக்கொள்வதும், தனக்கென்று ஒரு நிலைப்பாடும் கருத்தும் உள்ளவர்களை தறுதலைகளாக தள்ளிவைப்பதும் வழக்கம் என்றும், அதுதான் வாணி ஜெயராமை எப்போதுமே ஒரு தனிமரமாக வாழ வைத்தது என்றும் எனக்கு தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. எனக்குள்ளே அவரைப்பற்றி வைத்திருந்த தவறான எண்ணங்களுக்காக வருந்தினேன். மனதார அவரிடம் மன்னிப்புக் கோரினேன்.
அன்றிலிருந்து வெறும் பத்தே நாட்களில் வாணி ஜெயராம் இறந்த செய்தியை மிகுந்த அதிர்ச்சியுடன் கேட்டேன். என் மனது உடைந்துவிட்டது. ஏதோ ஒரு பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. வாணி அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மின்மினியையும் அழைத்துக்கொண்டு சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. நான் இறந்தவர்களைக் கடைசியாக பார்க்கச் செல்வது அரிது. ஆனால் வாணி அம்மாவை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று என் மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது.
குடியிருந்த வீட்டிலிருந்து இறுதி ஊர்வலத்திற்காக அவரை வெளியே எடுத்துச் செல்வதற்கு சற்று முன்பு தான் நாங்கள் அங்கு சென்றோம். மந்திரங்கள் நிறைந்த அந்த சிறிய அறையில் இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வாணி அம்மாவின் உறவினர்கள் மட்டுமே இருந்த அந்த இடத்தில் அவரது இசை உறவினராக நாங்களும் நின்றோம். சடங்குகளின் முடிவிலுள்ள பாத நமஸ்கார வேளையில் நான் அம்மாவின் பாதங்களைத் தொட்டேன். மனதளவில் அவரிடம் நான் செய்த அனைத்து அறியாமைகளுக்கும் மன்னிப்புக் கேட்டேன்.
அம்மாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அரசாங்க மரியாதைச் சடங்குகள் வெளியே நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் மூன்று பேர் மட்டுமே அந்த வீட்டிற்குள்ளே நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். வாணி அம்மா, மின்மினி மற்றும் நான். அம்மாவின் படங்களும் விருதுக் கேடயங்களும் வைக்கப்பட்டிருந்த அந்த சிறிய கூடத்தின் வெறுமையிலும் மௌனத்திலும் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். அம்மா கடைசியாக படுத்திருந்த தரையில் சிதறிக் கிடந்த மலர்களில் ஒன்றை குனிந்து எடுத்தேன். அதோடு வெளியே வந்து திரும்பி பார்த்தபோது அந்த அறையில் யாருமே இருக்கவில்லை.
வாழ்நாள் முழுவதும் இசையை தன் உயிருக்கும் மேலாக வணங்கிய வாணி ஜெயராம் அம்மா வாழ்ந்த அவ்வீட்டிற்கு இனி ஒருபோதும் நான் வரப்போவதில்லை என்கின்ற சோக உணர்வோடு மீண்டும் அந்த அறைக்குள் சென்று அவரது ஒரு புகைப்படத்தை மட்டும் நான் எடுத்துக்கொண்டேன்.
எனது பதின்பருவ மலைக்கிராமத்தின் குன்றுகளுக்கிடையே குரலாய் தவழ்ந்து வந்து என் மனதில் இடம்பிடித்து அந்த மாபெரும் பாடகிக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை மாநகரம் வரைக்கும் என்னை வரவழைத்தது என்னவாக இருந்திருக்கும்? அனைத்து வலிகளையும் சரி செய்யும் காலம் இதற்கும் பதில் சொல்லட்டும்.
(ஷிஜோ மானுவல் கேரளத்தில் முதல் இடத்திலிருக்கும் எ ஃப் எம் வானொலியான ரேடியோ மேங்கோவின் இசைப் பிரிவு மேலாளர்)