அந்த நாட்களில் கொஞ்சம் கதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பெரும்பாலும், பிரபல பத்திரிகைகளில் பிரசுரமானவை. அவற்றில் ஒரு டஜன் கதைகளைத் தேர்ந்தெடுத்து, சொந்தச் செலவில் ஒரு தொகுப்பு வெளியிட்டேன். ஆயிரம் பிரதிகள் அச்சடிப்பதுதான் அப்போதைய வழக்கம். விற்பனையானவை, வெளிவராத மதிப்புரைக்காக இதழ்களுக்கு அனுப்பியவை, நைவேத்திய சுண்டல்போல இலவச விநியோகம் செய்தவை என ஒரு நூற்றிச்சொச்சம் போக, மீந்த பிரதிகள் அட்டைப் பெட்டிகளில், என் வீட்டுப் பரணில், பத்திரமாய் இருக்கின்றன. சிறுகச் சிறுக நான் எழுதுவதைக் குறைத்துக்கொண்டதற்கு, மேற்படிப் பெட்டிகளின் கனம் முதல் காரணம். இன்னொரு காரணமும் இருக்கிறது – கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறேன்.
அப்புறம், வேறொரு துறையிலும் ஆர்வம் உண்டு. குளியலறைக்குள்ளும், நெருங்கிய நண்பர்களுடனான குடி வைபவங்களிலும் பாடக்கூடியவன். பெரும்பாலும் சினிமாப்பாட்டுகள். அறுபது எழுபதுகளில் பிரசித்திபெற்றவை. அநேகமும், காதலை அல்லது காதல் தோல்வியை இசைத்தவை. எனது சிறப்பம்சம் என்னவென்றால், நானே எழுதி மெட்டமைத்து, வாயும் அசைத்ததுபோன்ற ஒருமையுணர்வுடன் பாடுவேன். அந்தப் பாடல்களின் நாயகன் நானேதான்; நாயகிகள் மட்டும் அவ்வப்போது மாறுவார்கள். அபூர்வமாகச் சில சமயங்களில், அசலைவிட உணர்வுபூர்வமாக என் பாட்டு அமைந்துவிடுவதும் உண்டு; அப்போதைய நாயகியைப் பொறுத்தது அது. பாடும்போது எனக்கே தெரிந்துவிடும் அபஸ்வரங்களை, சுருதிப் பிறழ்வுகளை, உச்சஸ்தாயியில் நேரும் குரல் கீறல்களை மற்றவர்கள் பொருட்படுத்தாததற்கு இதுவே காரணமாய் இருக்கலாம். மற்றபடி, இசைஞானம் என்பது ஆளுக்காள் மாறுபடக் கூடியதுதானே…
இதுபோக, அநேகருக்குத் தெரியாத இன்னொரு சங்கதியும் உண்டு ஓவியங்கள்மீது எனக்கிருந்த மிகப்பெரிய ஈடுபாடு. அதுவும் ஒரு சுபதினத்தில் அறுந்துபட்டது என்று வையுங்கள். ஆர்வம் இருந்த காலகட்டத்தில், பத்திரிகைகளில் வரும் கோட்டுச் சித்திரங்களைப் பார்த்து, அச்சுஅசலாகப் பிரதியெடுத்த மாதிரி வரையவும் செய்வேன். கோடுகளும் வளைகோடுகளும் புள்ளிகளும் உருவாக்கும் மாற்று உலகம் எப்போதுமே என்னைப் பிரமிக்க வைக்கும். வெறும் கோடுகளில் உதித்தெழும் மனிதாம்சம் கிறங்க வைக்கும். என்னையறியாமலே, நவீன ஓவியங்கள் பக்கமும் நகர்ந்திருந்தேன்.
ஓவியக் கண்காட்சிகளில், முதல் பார்வைக்கு மட்டுமின்றி, திரும்பத் திரும்பப் பார்த்தாலும், பார்த்துக்கொண்டே இருந்தாலும், ஆயுட்காலம் முழுக்கப் பார்த்தாலும நேரடியான அர்த்தமெதையும் உருவாக்கிக்கொள்ள அனுமதிக்காத அரூப ஓவியங்கள் முன்பு திகைத்துப்போய் நெடுநேரம் நின்றிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்ட அமைப்பாளர்கள்,
நீங்க யார் சார்? ஏன் இவ்வளவு நேரம் ஒரே இடத்திலெ நிக்கிறீங்க.என்று விசாரித்து, வெளியேற்ற முயன்றதும் ஒரு தடவை நடந்தது. அன்றைக்கு வீட்டில் வந்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன் – திருடன் என்று தோன்றவைக்கும் அம்சம் ஏதாவது என்னிடம் தென்படுகிறதா என்று. ஓவியத்தின் முன்பு நின்றதுபோலவே திகைத்துப்போய் நெடுநேரம் நின்றேனே தவிர, அதுவும் எனக்குப் புரியவில்லை – மேற்படி ஓவியம்போலவே.
ஒரேயொரு தடவை, என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட ஓவியர் ஒருவர், தமது தனி நபர்க் கண்காட்சியின் கடைசிநாளுக்கு என்னை மறுபடியும் வரவழைத்து, பத்தாயிரக் கணக்கில் விலைபோகக் கூடிய ஒரு ஓவியத்தைப் பரிசளித்தார்.
என் சிறு வீட்டின் மைய அறையில் மாட்டி வைத்திருக்கிறேன். அந்தப் பெண் வந்தபோது அதைப் பற்றித்தான் வெகுநேரம் விசாரித்துக்கொண்டிருந்தாள். அது அப்புறம்.
ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தோடு ஓய்ந்துவிட்ட என் கதைகளிலோ, கடிதங்களிலோ, நேர்ப்பேச்சிலோகூட ஓவிய ஆர்வம் பற்றி ஒரு சொல்லும் உதிர்த்ததில்லை. தெரியாததைப் பற்றிப் பேசுவானேன் என்றுதான். அம்மா அடிக்கடி சொல்வாள் – ’இரும்பெடுத்த கையும் அரிப்பெடுத்த கையும் சும்மா இருக்காது’ என்று. அது சரிதான்; வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ஒரேயொரு கதையில் சிற்சில வரிகள் தாமாய்ச் சிந்திவிட்டன…
தனியார் காலரியொன்றில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் என்னைத் தற்செயலாகச் சந்தித்த அந்தப் பெண், மேற்சொன்ன கதைத்தொகுப்பை வாசித்திருந்தாள் போல. எனக்கு ஆச்சரியம்தான்; அந்த நாள் மோஸ்தரில், முழுப் பின்னட்டையில் என் புகைப்படம் வெளியாகியிருந்தது. இத்தனை வருட காலத்தில் அதேவிதமாக என் முகம் நீடித்திருக்கிறது என்பது இன்னொரு ஆச்சரியம். ஆனால் இதைவிடவும் பிரமாதமான பேராச்சரியங்கள் பின்னால் வரவிருக்கின்றன என்பதால், இப்போதைக்கு இந்தத் தகவல் மட்டும் போதும்.
அந்தத் தொகுப்பை வாசித்திருந்ததால்தான் சந்தித்த மாத்திரத்தில் பேசத் தொடங்கியதாக, என் வீட்டுக்கு வந்தபோது சொன்னாள். அவள் இவள் என்கிறேனே என்று தவறாக நினைத்துவிட வேண்டாம்; கிட்டத்தட்ட என் சமவயதுப் பெண்ணைப் பன்மையில் குறிப்பிட்டால் செயற்கையாய் இருக்காதா. தவிர, ஒரேயொரு தடவை என்னை வீட்டில் சந்தித்தபிறகு, அவளுடைய மானசீக மொழியில் நானுமே ஒருமையில் திகழக்கூடும்.
என்ன ஒரு வயிற்றெரிச்சல், ’அந்தப் பெண்’ என்றுதான் கடைசிவரை குறிப்பிட்டாக வேண்டும் – சொல்லி முடிக்கும்போது காரணம் புரிந்திருக்கும். மற்றபடி, சமவயது என்கிறேனே தவிர, என்னைவிடப் பலவயது இளையவள்போல அவள் தோற்றமளித்ததற்கு, வசீகரமான மெல்லிய ஒப்பனை மட்டுமல்ல; சம்பாத்தியத்தின் செழுமையும், தனியாக வாழ்வதும்கூடக் காரணமாய் இருக்கலாம்…
எழுத்தைச் சிறுகச் சிறுகக் குறைத்துக்கொண்டதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது என்றேனே – அதையும் சொல்லிவிடுகிறேன். என் அம்மா சொன்னதன் பிரகாரம், என்னையறியாமல் எழுதிவிட்ட சில வரிகளையும், அதன் எதிர்விளைவுகளையும் சொன்னால் புரிந்துவிடும்.
அந்தக் கதையில் என்ன எழுதினேன் என்பதைவிட, அது பிரசுரமான விபத்தைத் தான் முதலில் சொல்ல வேண்டும். அந்த நாள் மோஸ்தரில், ராமமூர்த்தி என்ற பெயரை ’மூர்த்தி ராம்’ என்று மாற்றிப் புனைபெயராக வைத்துக்கொண்டேன். ‘சைத்ரிகன்’ என்று ஒரு பெயரையும் பரிசீலிக்கத்தான் செய்திருந்தேன். அப்புறம், வேண்டாமென்று விட்டு விட்டேன். ஆனால், பெயர் சூட்டிக்கொள்வதில் இருந்த கவனம் கதையில் இல்லாமல் போய்விட்டது. ஒரு ஓவியரைப் பற்றிய கதை அது.
அவருடைய ஓவியத்தில், அழுத்தமான கோடுகளும் இளம் வண்ணங்களும் ஆணும் பெண்ணும்போலப் பிணைந்திருந்தன.
என்று ஒரு வரி வரும்.
வழக்கம்போல, லட்சக்கணக்கில் விற்றுக்கொண்டிருந்த வணிகப் பத்திரிகைக்குக் கொடுத்திருக்கலாம். யாருமே படிக்காமலோ, படித்தவர்கள் பொருட்படுத்தாமலோ அந்தக் கதை திரைமறைவுக்குப் போயிருக்கும். இருங்கள், இந்தத் திரை சமாசாரத்தைப் பற்றியும் சொல்வதற்கு இருக்கிறது – சற்றுக் கழித்துச் சொல்கிறேன்.
ஆயிற்றா, விநோதமான ஒரு தினவுக்கு ஆட்பட்டு, ஐந்நூறு பிரதிகள் அச்சாகி, ஐம்பத்திச் சொச்சம் மட்டுமே விற்பனையாவதாகப் புறணி பேசப்பட்ட இலக்கியச் சிறுபத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினேன். வழக்கமான குடும்பக் கதை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அல்லது, ஓவியம் பற்றிய சில அவதானங்கள் இருந்த காரணத்தை முன்னிட்டு, பிரசுரித்தார்களோ என்று பிற்பாடு எனக்கே தோன்றியதுண்டு. பேசாமல் நிராகரித்து தொலைத்திருக்கலாம்.
அடுத்த இதழில், தமிழின் முன்னணிப் பெண்ணியவாதி ஆக்ரோஷமாகக் கடிதம் எழுதியிருந்தார்:
ஆண் என்றால், அழுத்தமும் வீரமும் ஆவேசமும்; பெண் என்றால், மென்மையும், நளினமும் பொறுமையும் என்று எதிரிடைகளைக் கட்டமைத்திருக்கும் அரை வேக்காட்டு ஆண்மனத்தின் இன்னொரு அவதாரமே மேற்படிக் கதையை எழுதியிருக்க வேண்டும்…
என்ற வரிகளை ஆயுட்காலத்துக்கும் மறக்க மாட்டேன். அரைவேக்காட்டு ஆண்மனத்தின் வேலை இது என்றால், முழுவேக்காடு என்னவெல்லாம் செய்யும் என்று என் தர்க்க மனம் கேள்வி எழுப்பத்தான் செய்தது.
அந்த நாட்களில், ‘கட்டுடைப்பு’ என்ற புதிய வகை விமர்சனம் தமிழில் உதயமாகியிருந்தது. எழுத்தை ஆராய்வதைவிட, எழுத்தாளனின் ஆழ்மனத்தை அலசி ஆராயும் முறை என்கிற மாதிரி என் நண்பன் ஒருவன் விளக்கினான். அவனுக்குத் தெரிந்தவரை சொல்லியிருக்கலாம், ஒருவேளை. விளக்கும்போது ’பகுப்பாய்வு’ என்ற சொல்லையும் பயன்படுத்தினான். எழுதுவதை விட்டு இவ்வளவு காலம் ஆகி விட்டாலும், இந்த மாதிரியான கலைச்சொற்கள் மறக்கவில்லை எனக்கு.
அந்தப் பெண்மணியின் கடிதத்துக்கு பதில் எழுதவில்லை. என்னத்தையாவது எழுதித் தொலைக்கப்போய், என் ஆழ்மனத்தில் ஊரும் விஷப்பாம்புகளை நானே எடுத்துக் காட்டிவிடுவேனோ என்று பயம்.
ஆனாலும், ஒரு ஆதங்கமும், ஒரு நிம்மதியும் இன்றுவரை நீடிக்கிறது. நிம்மதியை முதலில் சொல்கிறேன்: அந்தக் கதையில்,
… இரண்டாம் முறை பார்க்கத் தூண்டாத முகம் அவளுடையது…
என்று எழுயிருந்தேன். நல்லவேளை, அம்மணி இந்தவரியை ஊன்றிப் படிக்கவில்லை. ஒருவேளை, ‘…ஆனாலும், அந்தக் கண்கள்; அவற்றின் ஆழம்; ரகசியமாய் அவை புதைத்து வைத்திருந்த காந்தம்…’ என்று தொடர்ந்த வரிகளால் சலுகை வழங்கினாரோ என்னவோ.
ஆதங்கம் இதுதான்: கதையின் ஆரம்பத்தில், நாயகன் ஒரு ஞானியைச் சந்திப்பது பற்றி வரும். அவர் சொல்லியிருப்பார்:
தம்பீ, திரையில் வீழும் பிம்பங்கள் எதுவுமே திரைக்குச் சொந்தமில்லை. அவை திரையின் பகுதியுமில்லை. விநோதம் என்னவென்றால், திரை இல்லாமல் அவை புலப்படவும் வாய்ப்பில்லை…
கதை முடியும் இடத்தில், மேற்சொன்ன வாக்கியங்களின் இன்னொரு பரிமாணத்தை எழுதியிருப்பேன்.
…தானே திரை என்று உணரும்போது மனித மனம் விமோசனம் அடைய வாய்ப்புண்டு.
பெண்ணியத்தம்மாள் இதையும் விட்டுவைக்கவில்லை. ’திரை’ என்றால் curtain ஆ, screen ஆ என்று கேள்வியெழுப்பியதோடு, ’இந்த மாதிரியான அத்வைதப் பிலாக்கணங்களெல்லாம் அரதப் பழசு. நவீனயுகச் சிறுகதையில் இவற்றுக்கு இடமேயில்லை.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சத்தியமாக, நான் சொந்தமாக யோசித்து எழுதிய வரிகள்தாம் அவை. தவிர, ‘அத்வைதம்’ என்ற சொல் எனக்கு அறிமுகமானதே மேற்படிக் கடிதத்திலிருந்துதான். இதையெல்லாம் நிரூபிக்கவா முடியும்? எது எப்படியோ, ’போதும் போதும் எழுத்தாவது, ….. ஆவது’ என்று ஒரு கணம் தோன்றியது. அசுர கணம் அது. சிறுகச் சிறுக வளர்ந்து உக்கிரமடைந்து, அறுதியான ஒரு தீர்மானத்தில் என்னைக் கொண்டு தள்ளியது.
அப்புறம் என்றோ ஒருநாள் தோன்றியது – இதைவிடவும் மோசமாக வசவு வாங்கியவர்கள் எல்லாம் தொடர்ந்து எழுதத்தானே செய்கிறார்கள்? உள்ளூர, வாகான ஒரு சாக்கு கிடைப்பதற்காகக் காத்திருந்தேனோ என்னவோ. பின்னே, நான் ஒன்றும் பிறவி எழுத்தாளன் இல்லையே…
நாலடிக்கு நாலடி பரிமாணமுள்ள சட்டகத்தில் இருந்த ஓவியம். வலது ஓரத்திலும் இடது ஓரத்திலும் அடர்த்தியான ஆரஞ்சு நிறம் தீட்டப்பட்டிருந்தது. செதில் போன்றும், வெட்டிப்போட்ட நகம் போன்றும் வளைவான குறுங்கோடுகள் ஆரஞ்சுப் பகுதியை நிறைத்திருந்தன. ஒன்றின்மேல் ஒன்றாகப் பதிந்த செதில்கள் மெல்ல மெல்ல வெளிறி ஓவியத்தின் மத்தியப் பகுதிக்கு வரும்போது எரிக்கும் வெண்ணிறமாய் மாறின. அரையடி தூரம் நீடித்துவிட்டு, மீண்டும் ஓவியத்தின் மறுகோடி நோக்கிப் போகும்போது சன்னஞ்சன்னமாய் ஆரஞ்சு நிறமேற்று, அடர்த்தி கூடி ஓய்ந்தன.
’புத்தகத்தைப் பார்த்து சிலம்பம் கற்றுக்கொள்வது போன்ற அபத்தம்தான், ஓவியத்தை விவரித்துப் புரியவைப்பது’ என்று ஒரு வாக்கியம் அனிச்சையாய் எனக்குள் கோத்துக்கொண்டது. அதை ஒருபோதும் எழுத மாட்டேன் என்று வையுங்கள். ஆனாலும், வாக்கியங்கள் உருவாகி உருவாகி அழிவது என்ற மனப்பழக்கம் மட்டும் வாழ்நாள் முழுக்க ஓயாது என்றே படுகிறது.
வங்காளத்தின் நவீன தலைமுறை ஓவியர் சம்பு மித்ரா வரைந்தது அந்த ஓவியம். சமீபத்தில்கூட செய்தியில் அடிபட்டார் – வேறு விவகாரத்துக்காக. ஓவியத்தின் கீழே ஒட்டப்பட்டிருந்த வாழ்க்கைக் குறிப்பில் தெரியவந்தது – கிட்டத்தட்ட என் வயதுடையவர்தான். ’Sun Travel’ என்ற தலைப்பின் காரணமாக சிறு திறப்பு கிடைத்திராவிட்டால், இன்னும் திகைத்து நின்றிருப்பேன்.
திறந்த பிறகும், ஓவியத்தின் நுட்பங்கள் காரணமாக எனக்குள் பிரமித்துப்போய் நின்றிருந்தேன். முப்பரிமாண விந்தையைக் கொண்டிருந்த ஓவியம், இளம் பெண்ணின் ஒளிரும் கண்கள்போன்ற அபூர்வமான காந்தத் தன்மையுடன் இலங்கியது. தனக்குள் என்னை ஈர்த்துக்கொள்ள முற்படுகிற மாதிரி, நான் மெல்ல மெல்ல அந்த ஓவியத்தின் பகுதியாக ஆகி வருகிற மாதிரி, உணர்வு தட்டியது. இன்னும் ஓரிரு கணங்கள் போயிருந்தால், யார் கண்டது, ஓவியத்தின் உள்ளேயே போய்விட்டிருப்பேனோ என்னவோ.
ஸார், ஆர் யு மிஸ்டர் மூர்த்தி ராம்?
என்று என் முதுகுப்புறம் ஒரு குரல் கேட்டது. இனிமையான பெண்குரல். உடனடியாக ஓவியத்திலிருந்து என்னை வெளியே இழுத்துப்போட்டது.
அந்தப் பெண்ணை நேருக்குநேர் பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. கண்முன்னால் தெரிந்த உருவத்தின்மீது, மானசீக பிம்பம் ஒன்று படிந்ததுதான் காரணம் என்று பிற்பாடு பலதடவை தோன்றியது – ஆமாம், சர்ச்சைக்குரிய கதையொன்று எழுதினேன் என்று சொன்னேனில்லையா, அந்தக் கதையில் வரும் பெண்ணுருவத்தை எனக்குள் எப்படிக் கற்பிதம் செய்திருந்தேனோ அதே மாதிரி எதிரே நின்றாள் அவள். ஒரேயொரு வித்தியாசம், திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் முகம் இது.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவள். ‘கல்கத்தாவில் இயங்கிவரும் பிரபல விளம்பர நிறுவனத்தின் தலைமை காப்பி ரைட்டராக இருக்கிறேன்’ என்றாள். அதன் காரணமாக, இந்தியாவின் பிரசித்திபெற்ற ஓவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்களுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகச் சொன்னாள்.
எனக்கு ஆங்கிலத்தில் அத்தனை பாண்டித்தியம் கிடையாது; அதை நேரடியாய்ச் சொல்வதற்குத் தயக்கமாய் இருந்தது. அவளுடைய பணி என்ன என்கிற மாதிரிப் பூடகமாய்க் கேட்டேன். வசீகரமான விளம்பர வாக்கியங்கள் எழுதுவதும், பிற மொழிகளில் எழுதப்படுபவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அளிப்பதும் அவளுடைய வேலையாம். சர்வசரளமாகத் தன் சம்பளத்தைக் குறிப்பிட்டாள். குமாஸ்தாப் பணியில் நான் வாங்கும் சம்பளத்தைப்போலப் பலமடங்கு அதிகம்!
அருகில் இருந்த உயர்தர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாள். நான் சாதாரணமாகப் போகும் இடங்களில் ஒரு முழுச் சாப்பாட்டுக்குக் கொடுக்கும் விலையை, ஒரு கோப்பைக் காபிக்கு வசூலிக்கும் உணவகம் அது. என்ன, ஒரே ஒரு காபி குடித்துவிட்டு நாள் முழுக்க அமர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். என்னைப்போலவே, வாசிப்பிலும் இசையிலும் ஈடுபாடு உள்ளவள். ஓவியத்தில் உள்ள ஈடுபாட்டைக் கேட்கவே வேண்டாம் – அவளுடைய தகப்பனார் மிகப் பெரிய ஓவியராம். ’திறமைக்கேற்ற புகழ் கிடைக்காமலே வாழ்ந்து மறைந்துவிட்டார், பாவம்’ என்று ஆங்கிலத்தில் அங்கலாய்த்தாள்.
எனக்கு அவர் பெயரைக் கேட்க ஆசைதான். அவள் அளவு நயமாக ஆங்கிலம் பேச வராது என்று ஏற்கனவே சொன்னேனே. இந்தக் கேள்வி பிரச்சினையில்லை – இதைத் தொடர்ந்து நாலு வாக்கியம் பேசவேண்டியிருந்தால் என்னாவேன்! நல்லவேளை, பின்னர் தமிழுக்கு மாறிவிட்டாள். என்ன, எனக்குத்தான் நான் கேட்க நினைத்த கேள்வி மறந்து போயிருந்தது.
மொபைல் ஃபோன் அறிமுகமாகிய ஆரம்ப நாட்கள். புகைப்படக் கருவிகளும் அவற்றில் பயன்படும் ஃபிலிம் ரோல்களும் இன்னமும் புழக்கத்திலிருந்தன. பத்திரிகை களில் விளம்பரம் வரும்.
பிம்பங்களைச் சாதாரணமாய் நினைக்காதீர்கள் – உங்கள் ஆழ்மனத்தின் கண்ணாடியே அவை…
என்ற தலைப்பு வாக்கியத்துடன் வெளியான, ஜப்பானிய ஃபிலிம் நிறுவன விளம்பரம் வெகு பிரபலம். அந்த வாக்கியம் இவள் சொந்தமாக எழுதியதேதானாம்.
தொடர்ந்து ஓவியம் பற்றி, வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் நேரில் பார்க்கக் கிடைத்த புகழ்பெற்ற ஓவியங்கள் பற்றி விவரித்துக்கொண்டு போனாள். ரெம்ப்ராண்ட், வான் கா, பிக்காஸோ என்கிற மாதிரி ஓரிரண்டைத் தவிர மற்றவை அத்தனையுமே நான் அறிந்திராத பெயர்கள். புரியாத வாக்கியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தால் என்ன செய்வது? வேறு வழியின்றி அவளை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதும், பார்வை முகத்தில் மட்டுமே பதிந்திருக்கவில்லை என்பதும் பின்னாட்களில் அவள் நினைவு வரும்போதெல்லாம் எனக்குள் ஊறிய அவளது பிம்பத்தின் வெவ்வேறு அங்கங்களில் கவனம் குவிந்தபோது உணரக் கிடைத்தது…
மூச்சைச் சற்று இறுக்கிப் பிடித்துக்கொண்டு, சுற்றுலாவாகச் சென்றுவந்த எல்லோரா, சித்தன்னவாசல் என்று நானும் அவ்வப்போது ஈடுகொடுத்து வந்தேன். ஓவியத்தைப் பேசும்போது சிற்பம் பற்றிப் பேசுவதிலும் தவறில்லையே – கஜுராஹோ பற்றிப் பேசும்போது என்னிடம் கொஞ்சம் உணர்ச்சிவேகம் அதிகமாய் இருந்ததோ என்று இப்போது உறுத்துகிறது.
புறப்படும்போது, தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். என்னிடம் நீட்டினாள் – ’உங்களுக்குத்தான்’ என்று சொல்லியபடி.
அடுத்த ஆச்சரியம் அது.
பள்ளியிறுதி நாட்களில், என் கவனத்தை ஈர்த்த ஓவியர்கள் பெரும் பத்திரிகைகளில் தொடர்கதைகளுக்கு வரைந்தவர்கள்தாம். அதிலும், உடற்கூறியல் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், பெண் சித்திரங்களில் முலைகளை மட்டுமே பெரிது பெரிதாக வரைந்த ஓவியரிடம்தான் சொக்கிக் கிடந்தேன். அதாவது, அவரிடம் அல்ல. பெயரைச் சொல்வது சரியாய் இருக்காது – ஆண்பெயர் கொண்டவர் அல்ல என்று மட்டும் சொல்லலாம்.
கல்லூரி அளவுக்கு முதிர்ந்தபோது, பொன்னியின் செல்வனுக்கும், எனக்கு மிகவும் பிடித்த, பெயர் மறந்துவிட்ட, படக்கதை ஒன்றுக்கும் வினு என்பவர் வரைந்த ஓவியங்களின் மீது கவனம் பதிந்தது.
இரண்டாம் வருடம் பொருளியல் போதித்த வேலாயுதம் சார் வழியாக வேறுவிதமான ஓவியங்கள் பரிச்சயமாயின. உள்நாட்டு, வெளிநாட்டு ஓவியர்கள் பலரின் பெயர்களும்தான். அநேகமாக அத்தனையும் மறந்தேபோன பிறகும், அம்ரிதா ஷேர்கில் என்ற பெயர் மட்டும் மறக்கவேயில்லை. அவர் வரைந்தவை என்று சார் எங்களுக்குக் காட்டிய நிர்வாணத் தன்னோவியங்களும்தான்.
தமக்கே பாடம் நடத்தும் ஆர்வம் இல்லாதபோதோ, பாடம் நடத்த முடியாத அளவுக்கு வகுப்பில் சலசலப்பு அதிகமாய் இருந்தாலோ, ‘அடேய்!’ என்று செல்லமாய் அதட்டி, ஓவியம் சினிமா என்று வேறுபக்கம் திசைதிரும்பி முக்கால்மணி நேரமும் எங்களை வசியப்படுத்தி வைத்திருப்பார்…
இந்த இடத்தில், எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் எதிரிவீட்டில் இருந்த சகோ. தேவசகாயம் நினைவு வருகிறது. படு விஷமக்காரனான கீழ்வீட்டுப் பையனை, ‘சரியான விரியன் குட்டியில்லா அது!’ என்று குறிப்பிடுவார். மாவட்டத்தில் முதல் மாணவனாக அவன் வந்தபோதும், ‘சரியான விரியன் குட்டியில்லா!’ என்றுதான் சொன்னார்! ஆனால், இந்தமுறை, செல்லமாகச் சொன்னார். போதகம் மட்டுமின்றி, அவர்கள் சபையில் எலக்ட்ரிக் ஆர்கன் வாசிக்கவும் செய்கிறவர். கடும் இசை ஆராதகர். எம் ப்பி சுந்தரராமன் போன்ற சில கர்நாடக சங்கீதப் பெயர்கள், பாட்டியா சகோதரர்கள் என்று புகழ்பெற்ற வட இந்திய வித்வான்கள் போன்று சில பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். .
தொடர்ந்து ஓரெழவும் புரியாமலே சாஸ்திரீய சங்கீதம் கேட்கும் பழக்கம் தொற்றியது என்னை. பெரும்பாலும் கருவியிசைதான். அபூர்வமாகச் சில நள்ளிரவுகளில் புல்லாங்குழல் இசையோ ஸித்தாரோ கேட்கும்போது எனக்குள் ஊதுபத்திப் புகை மாதிரி சுழன்றெழும் பெண்மோகத்தை இன்றுவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்த நேரத்தில் மனம் தானாய் உருவகித்துக்கொள்ளும் பெண்பிம்பங்கள் எதற்குமே முகம் இருந்ததில்லை என்பதும், அவை குறைந்தபட்ச உடைகூட உடுத்தியிருந்ததில்லை என்பதும் எனக்கு மட்டுமான குறளிகளா எல்லாருக்கும் அப்படித்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முயன்றதில்லை.
வேலாயுதம் சாரில் ஆரம்பித்தவன், என்னைப் பற்றிப் பேசக் கிளம்பிவிட்டேன் பாருங்கள். ஆனால், மனத்தின் இயல்பே இதுதான் என்று சார் சொல்லியிருக்கிறார்.
மானசீகமாய் தான் கேட்கும் ஒலியைத்தானே சங்கீதக்காரன் எனக்கு வழங்குகிறான்… ஓவியனும் அப்படித்தான், உருவங்களையும் வடிவங்களையும் தான் என்னவாய்ப் பார்க்கிறானோ அதை இம்மிபிசகாமல் வரைய முனைகிறான்.
இந்த வாக்கியத்தை, தேநீர் குடித்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தபோதோ, என் வீட்டுக்கு அவள் வந்திருந்த ஒரே தடவையின்போதோ – சரியாய் நினைவில்லை – அந்தப் பெண்ணிடம் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்:
ஆக, பெண்களும் பாடுகிறார்கள், வரைகிறார்கள் என்பது உங்கள் பேராசிரியருக்குத் தெரியாது போலிருக்கிறது!
எனக்கு அடிக்கடி தூக்கிவாரிப் போடும் என்று சொன்னேனோ…? இப்போதும் அதுவேதான் நடந்தது. அந்தப் பெண் கேட்ட கேள்வியில்லை – என் கதைக்கு எதிர்வினையாய், நிம்மதியைக் குலைத்த நீண்ட கடிதம் எழுதினாரே அந்தப் பெண்மணியின் தொனி அப்படியே அவள் குரலில் ஒலித்ததுதான் காரணம்.
ஆனாலும், பேராசிரியர் அறிமுகப்படுத்திய இரண்டு பெயர்களை அவளிடம் சொன்னேன். சில்பி, மனோகர் தேவதாஸ். சிற்பங்களையும் விக்கிரகங்களையும் கோபுரங்களையும் முன்னவர் தீட்டிய அதே நுட்பத்தோடு, துல்லியத்தோடு, கட்டடங்களையும் மரங்களையும் சிற்றுருவங்களையும் தீட்டிக் காட்டியவர் பின்னவர் என்று சொன்னேன். மேற்கத்திய ஓவியர் ஒருவரிடமும் இதே அம்சம் உண்டு என்று அவள் குறிப்பிட்ட பெயர், வழக்கம்போல எனக்கு மறந்துவிட்டது.
ஆனால், அந்தப் பெயர்களை நான் சொன்னபிறகுதான் அவள் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். அதனால், அந்த உரையாடல், தேநீர்ச் சந்திப்பில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். ‘அரூப்’ என்ற பெயரில் இயங்கிய ஓவியரின் சித்திரங்களைத் தொகுத்த நூல். வழுவழுவென்ற உயர்தர ஆர்ட் காகிதத்தில் சுமார் இருநூற்றைம்பது ஓவியங்களைத் தொகுத்திருந்தது. நான்கு தனித்தனிப் பகுதிகளாய் இருந்தது.
உங்களுக்குத்தான் இது. நிதானமாய்ப் பாருங்கள்.
என்று சொன்னவள்,
அடுத்த வியாழனன்று பொதுவிடுமுறை நாள்தானே, அன்று நாம் சந்திக்க முடியுமா! என்று கேட்டு, என் தொலைபேசி எண்ணையும் முகவரியையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டாள்.
உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னிட்டு, குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தஞ்சாவூர் போகிறாள் என் மனைவி என்ற தகவலையெல்லாம் அவளிடம் சொல்வானேன் என்று எனக்குத் தோன்றியதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அப்புறம் அந்த விசேஷத்துக்கு நான் ஏன் போகவில்லை என்று சொல்ல வேண்டிவரும்; அவர்கள் வீட்டுப் பெண்ணொருத்தி என்மீது சுமத்திய அபாண்டப் பழியால், அவர்கள் பக்கமே நான் தலைவைத்துப் படுப்பதில்லை என்பதையும்தான்…
வியாழனன்று எங்கள் வீட்டுக்கு அவள் வந்ததை விவரிப்பதற்கு முன்னால் மூன்று செய்திகள் சொல்லிவிடுகிறேன். ஒன்று, வெற்று நெற்றியுடன், மேல் பித்தான்கள் திறந்து மார்ப்பிளவை லேசாகக் காட்டிய ஆண் சட்டையும், விரித்துப் போட்ட கூந்தலுமாக இருந்த அவளது தோற்றம்; மேற்சொன்ன ஒவ்வொரு சங்கதியுமே அவளுடைய சுதந்திர உணர்வின் குறியீடுகளாக எனக்குத் தோன்றியது. அடுத்தது, முதல் சந்திப்பிலேயே என்னுடைய புஜத்தையும் தோள்முனையையும்; உடன் நடந்தபோது முதுகையும் முன்னங்கையையும் அவள் சரளமாகத் தொட்டுப் பேசியது…
மேற்சொன்னவற்றைச் சொன்ன மாத்திரத்தில், இன்னும் இரண்டு விஷயங்களும் நினைவு வருகின்றன.
ஒன்று, பேச்சில் விழுந்த சிறு இடைவெளியை நிரப்புவதாக நினைத்துக்கொண்டு, நான் கேட்ட அசட்டுக் கேள்வி.’ உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா!’. அவள் தோளைக் குலுக்கிய விதத்தில், இந்தக் கேள்வியை அவள் ரசிக்கவில்லை என்று புரிந்தது. ஆனால், சிந்திய கேள்வியை என்ன செய்ய முடியும்? அது சும்மா ஒப்புக்குக் கேட்டதுதான் என்பதையும் விளக்கவா முடியும்? ஆனாலும், அவள் பதில் சொல்லத்தான் செய்தாள்:
ஆகி, முறிவும் வாங்கியாகிவிட்டது.
அவளுடைய கீழ்த்தாடை இறுகியிருந்த விதம் ஏனோ எனக்கு பீதியூட்டியது. அதை விடுங்கள், இரண்டாவது விஷயத்தைச் சொல்கிறேன்.
அவள் பரிசளித்த புத்தகத்தை வீட்டுக்கு வந்து நிதானமாய்ப் பிரித்துப் பார்த்தேன். அத்தனையும் ஓவியங்கள். அவர் வரைந்தவற்றை, என் கல்லூரி நாட்களில், ஏதோ ஒரு பத்திரிகையின் தீபாவளி மலரில் பார்த்திருக்கிறேன் – வழுவழு தாளில் ஒளிர்ந்த நாலு ஓவியங்கள். கிட்டத்தட்ட சில்பி போன்றே வரைந்திருந்தார். ஒரு வித்தியாசம், சில்பியின் ஓவியங்கள் கறுப்புக் கோடுகளால் ஆனவை. இவருடையதில் வண்ணக் கோடுகளும் தாராளமாய் இருக்கும். அதாவது, விக்கிரகத்தின் உடை, ஆபரணங்கள், சிற்பத்தைச் சுற்றிலும் இருக்கும் திருவாட்சி, முன்னால் கிடத்தப்பட்ட பூஜைப் பொருட்கள் என எல்லாமே பல நிறக் கோடுகளால் ஆனவை; அடர்த்தியான கறுப்புக்கோடுகளால் ஆன விக்கிரகத்தை முன்னால் துருத்திக் காட்டுபவை.
அந்த ஓவியங்களும் இந்த நூலில் இருந்தன. ஓவியத்தின் இடதுகீழ் ஓரத்தில் ஓவியரின் முத்திரையாக ‘அ’ என்ற ஒற்றை அட்சரம் ஒளிர்நீலத்தில் இருந்தது. நான்கு பகுதிகளாய்ப் பகுக்கப்பட்ட நூலின் நாலாவது பகுதி சற்று வித்தியாசமானது. நீரிலிருந்து வெளியேறிக் கரணம் அடிக்கும் மீன் சித்திரங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் கீழே ஒரு வாக்கியம் அச்சாகியிருந்தது. எல்லாப் பக்கத்திலும் ஒரே வாக்கியம்தான்.
நீரின் பகுதியல்ல என்றாலும், நீருக்கு வெளியில் வாழ்வில்லை மீனுக்கு.
முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது. நான் எழுதுவதை நிறுத்தக் காரணமாய் இருந்த கதையின் நாயகர், இந்த ஓவியரேதான்.
வியாழக்கிழமை முற்பகல் பதினொரு மணி சுமாருக்கு வந்தாள். காலையிலிருந்தே மோடம் போட்டிருந்தது. மந்தமான வெளிச்சத்துடனும், குளுமையுடனும் நகரும் பகல்பொழுது ஒரு பெண்ணின் அருகாமைபோல இதமாய் இருந்ததாகப் பட்டது. ஆணின் அருகாமை பெண்ணுக்கும் இதேபோலத்தான் இருக்குமா என்று எனக்குள்ளேயே விசாரித்துக்கொண்டிருந்தபோது, அழைப்பு மணி ஒலித்தது.
முந்தைய தடவை பார்த்ததைவிட இன்னும் நேர்த்தியாய் இருந்தாள். தளர்வாக உடுத்தியிருந்தாள். உபரியாக இன்னொரு பித்தானையும் அவிழ்த்துவிட்டிருந்தாள் என்பது மாதிரி நினைவு. சகஜமாய் உள்ளே வந்து அமர்ந்தாள். படிப்பதற்கும் படுப்பதற்கும் தனித்தனி அறைகள் உள்ள மாளிகை அல்லவே. யாராவது வந்தால், படுக்கையறையில்தான் அமர்ந்து பேசவேண்டி வரும். பத்தடிக்குப் பத்தடி ஹாலில், குழந்தைகள் பரத்திப்போட்ட பொருட்கள் இறைந்து கிடக்கும். நான் கட்டிலிலும், அவள் ப்ளாஸ்ட்டிக் நாற்காலியில் எதிரேயும் அமர்ந்து பேசத் தொடங்கினோம்.
ஓவியப் புத்தகத்தைப் பார்த்தீர்களா! என்றாள்.
ஆமாம். அவருடைய சித்திரங்களை என் கல்லூரிக் காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.
என்றேன். அவள் முகம் மலர்ந்த விதம் கண்கொள்ளாக் காட்சியாய்ப் பொலிந்தது.
அவளுடைய அப்பாவாம் அவர். ஆச்சரியம் பொங்கியது எனக்குள். அதைவிட, அதை அன்றைக்கே சொல்லாமல், நான் பார்த்து முடித்தபிறகு சொல்லும் சாமர்த்தியம் கூடுதலாய் வியப்பளித்தது. அவருடைய நீர்வண்ண ஓவியங்களில், அன்று கண்காட்சியில் பார்த்த சம்பு மித்ராவின் சாயல் இருந்தது என்று தெரிவித்தேன். அவள் முகம் ஏனோ ஒரு கணம் கூம்பி மீண்டது.
காபி கலந்து கொடுத்தேன். ருசித்துக் குடித்தாள். தொடர்ந்து பேச்சு எங்கெங்கோ அலைந்தது. இசை ஆர்வம் பற்றியும் பேச்சு வந்தது. என் பங்குக்கு நான், ஏற்கனவே குறிப்பிட்ட எம் ப்பி சுந்தரராமன், பாட்டியா சகோதரர்கள், இன்னும் நாலைந்து பேரைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.
அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு, தனக்குக் குரலிசையைவிடவும் வாத்திய இசைதான் கேட்கப் பிடிக்கும் என்றாள். எனக்கும் அதேமாதிரி ரசனை இருப்பதைக் குறித்த ஆச்சரியத்தைத் தெரிவித்தேன். திடீரென்று, குறும்பான புன்னகையுடன்,
எல்லாருமே உங்கள் வயதுக்காரர்கள்…! அதுசரி, வித்வான்களை மட்டும்தான் கேட்பீர்களாக்கும்? வித்வாம்ஸினிகளைக் கேட்கப் பிடிக்காதோ!! என்றாள். அட, இப்படி நான் யோசித்ததேயில்லையே! அசடு வழிந்தபடி,
ஏன், பி சுசீலாவை எனக்கு ரொம்பப் பிடிக்குமே.
என்றேன். தவிர, நானாகத் தேடிக் கேட்பவனில்லை; யாராவது சொன்னால் கேட்டுப் பார்ப்பேன். பிடித்திருந்தால் தொடர்ந்து கேட்பேன். அதுவும் முறையாகக் கேட்கிறேன் என்று சொல்ல முடியாது – அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்துத்தான் என்றெல்லாம் விளக்கிக்கொண்டே போனேன். எதற்காக இவ்வளவு மன்றாடும் குரலில் சமாதானம் சொல்கிறோம் என்றும் தோன்றியது…
முதுகுக்குத் தலையணையை அண்டக்கொடுத்து வசதியாகக் கட்டில் மெத்தையில் நான் உட்கார்ந்திருக்க, மர நாற்காலியில் விறைப்பாக அமர்ந்து சிரமப்படுகிறாளே, பாவம் – என்று தோன்றியது. பேச்சுவாக்கில், என் அருகில் கையைத் தட்டி, இங்கே வந்து உட்காரலாமே. என்று சொன்னேன்.
அவ்வளவு அவசரமாகப் பேச்சு முடிந்து கிளம்பிவிடுவாள் என்று நினைத்தே பார்த்திருக்கவில்லை; ஆயுட்கால முள்ளாக எனக்குள் நிலைத்து உறுத்தப் போகிறாள் என்றும்தான். நான் உபசரித்ததில் தவறு ஏதும் இருந்ததாகவும் இன்றுவரை படவில்லை.
இறுதியாய்ச் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.
அடுத்த ஆறு மாதங்களில், மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பான மூன்றுநாள் விழா சென்னையில் நடந்தது. அதையொட்டி ஏற்பாடான ஓவியக் கண்காட்சிக்குப் போனேன். அரங்கத்தில் நுழைந்து நாலைந்து ஓவியங்கள் பார்த்திருப்பேன் – எதிரில் அந்தப் பெண் வருகிறாள்!
தனியாகத்தான் வந்தாள். என்னை நேருக்கு நேர் பார்க்கவும் செய்தாள். பிரியமாய்ப் புன்னகைத்தேன். இன்னாரென்றே தெரியாதமாதிரி அவசரமாக என்னைக் கடந்துபோனாள்.
எனக்குப் புரியவேயில்லை. முகம் மறக்குமளவு காலம் ஓடிவிடவில்லையே; என் தோற்றத்திலும் திடீர் மாற்றமேதும் இல்லை. எவ்வளவோ ஆண்டுகள் கழித்து, பின்னட்டை முகத்தை அடையாளம் கண்டவளா அப்படிச் செய்தாள்?
மனம் கனத்துவிட்டது. தொடர்ந்து ஓவியங்களில் மனம் செல்லவில்லை. வந்தது வீணாகக் கூடாதேயென்று கொஞ்சநேரம் சுற்றிவிட்டு, வெளியில் வந்து சிகரெட் பற்றவைத்தேன்.
அட! அவளும் இப்போதுதான் வெளியே வருகிறாள் போல. இரண்டாவது முறையாக, கண்ணுக்குக் கண் பார்த்தாள். உணர்ச்சியற்ற, வறண்ட பார்வை என்று அன்றைக்குப் பட்டது; இன்றைக்குக் குரோதம் என்று பொருள்படுகிறது. அதைத்தானே இவ்வளவு நீளமாய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்…
இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எவ்வளவு சமாசாரங்கள் மறந்துபோய் விட்டன. அப்படித்தான், அப்படியொருத்தியைச் சந்தித்தேன் என்பதும் எனக்கு மறந்திருந்தது. அவள் முகம்கூடத் துலக்கமாக நினைவில் இல்லை. புத்தக அலமாரியின் பின்வரிசையில் இருக்கிறது அவள் அன்பளித்த புத்தகம். பெரும்பாலும் கண்ணில் படாது.
நேற்று ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தேன். வெளிநாட்டுப் பெண்மணியின் பதிவு ஒன்றை யாரோ பகிர்ந்திருந்தார்கள்.
எம் ப்பி சுந்தரராமனிடம் சங்கீதம் பயில வந்தவராம் அவர். ஜெர்மானியர். பாதியிலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும், me too புகார்களின் வரிசையில் தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தேதி நேரக் குறிப்புகளுடன் விலாவரியாய் எழுதியிருந்தார். ‘தன்னியல்புபோல, சுவாதீனம்போலத் தென்பட்ட ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் ஒரே இலக்கை நோக்கி நகர்ந்து வந்தவை என்பதை உச்சியிலிருந்து எதிர்பாராமல் கீழே வீழ்ந்தபோதுதான் உணர முடிந்தது’ என்று சொல்லியிருந்தார். ’கலை உன்னதமானதுதான்; யார் இல்லை என்றது. மனித விழுமியங்கள் அதைவிட உன்னதமானவை அல்லவா’ என்று முடித்திருந்தார்.
ஏகப்பட்ட பின்னூட்டங்கள். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு துறைகள் சம்பந்தமான ஆண்கள்மீது புகார்கள் பீறிப் பெருகிய பின்னூட்டங்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், சம்பு மித்ரா மட்டுமல்லாது, பாட்டியா சகோதரர்கள் உள்ளிட்டு, அன்றைக்கு நான் அவளிடம் குறிப்பிட்டுப் பேசிய பலரும் அவற்றில் வெளிப்பட்டு வெளிறியிருந்தார்கள். கரையோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை இனம்புரியாத கைகள் உந்தி சமுத்திரத்துக்குள் தள்ளி அழுத்துவதாக உணர்ந்தேன். மூச்சுத் திணறியது.
ஏனோ, பின்வரிசையில் ஒளிந்திருந்த ஓவிய நூலை எடுத்துப் பார்க்கத் தோன்றி யது. அவசரமாய் நாலாவது பகுதிக்கு விரைந்தது என் அனிச்சை…
அந்தரத்தில் மிதந்த மீன்கள் அங்கேயே நிலைத்திருந்தன. புத்தகத்தில் மட்டும்தான். நிஜத்தில், சில கணங்கள் மட்டும்தானே அவை நீருக்கு வெளியே இருக்க முடியும் என்று தோன்றியது. இந்த மாதிரி தானாக வாக்கியங்கள் உருவாவது எப்போதுதான் ஓயுமோ என்று கொஞ்சம் அலுப்பாகவும் இருந்தது.
இதையெல்லாம்கூட மறுபடியும் மறந்துவிடலாம். கட்டிலைத் தட்டிக்காட்டிய அந்தக் கணத்தில் நிஜமாகவே எனக்குள் என்னதான் நடந்தது என்பதை ஒருபோதும் நினைவுகூர முடியவில்லையே; இந்த ஏக்கத்தை என்ன செய்வது.
*** *** ***