கொரோனா பேரலைக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு உடல் நலனின் மீது மிகுந்த அக்கறையும், பாதுகாப்புணர்வும் வந்திருக்கிறது. அளவாக சாப்பிடுவது, சரியான நேரம் தூங்குவது, உடற்பயிற்சி செய்வது, யோகா கற்றுக்கொள்வது என ஆரோக்கியமான விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதே போல உடலில் என்னென்ன நோய்கள் வரலாம், வந்தால் என்ன விதமான சிகிச்சை எடுப்பது, அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முழு உடல் பரிசோதனைகளைக் குறிப்பிட்டு வயதில் செய்து கொள்வது போன்றவற்றைப் பற்றியெல்லாம் தேடித்தேடி தெரிந்து கொள்கிறார்கள். “விட்டமின் டி குறைவாக இருப்பதால் தான் எனக்கு டிரை ஸ்கின் வருகிறதா?” என பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நடுத்தர வயது பெண் கேட்டபோது எனக்கு வியப்பாகதான் இருந்தது. உடலில் வரக்கூடிய நோய்கள் பற்றி பெரும்பாலானவர்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள். நல்வாழ்வு தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், நல்வாழ்வு என்றாலே அது உடல் நலன் மட்டும்தான் என நினைக்கும் அவர்களின் மனப்பான்மை ஏமாற்றமாகவும் இருக்கிறது.

நலமான வாழ்க்கைக்கு உடல் நலன் மட்டுமே போதுமானதல்ல, மனநலன் தான் அதற்கு அடிப்படையானது. என்ன தான் உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லையென்றால் நம்மால் அதன் பலன்களை அனுபவிக்க முடியாது. அதனால் நல்வாழ்க்கைக்கு எப்போதும் மனநலத்துடன் இருப்பது இன்றியமையாதது.

மனம் நலமாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றியே சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தினால் தான், மனதில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியான புரிதல்களும் மக்களிடம் தவறானதாகவே இருக்கிறது. மனம் என்பதை நம் உடலின் ஒரு அங்கம் என்றே யாரும் ஏற்றுக்கொள்வதில்லை அதனால்தான் மனதில் வரும் நோய்களையும் நோய்களாகவே யாரும் உணர்வதில்லை.

உதாரணத்திற்கு நீங்கள் யாரிடமாவது சென்று “எனக்கு மனசு கஷ்டமா இருக்கு” என்று சொல்லிப் பாருங்கள், ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா’, ‘எல்லாம் மனசுலதான் இருக்கு’, ‘மனச தைரியமா வச்சுகிட்டா எந்த பிரச்சினையும் இல்ல’, ‘நீயா தான் பயந்துகிட்டு கற்பனை பண்ணிக்கிற’. ‘எத பத்தியும் யோசிக்காம மனச உறுதிய வச்சுக்க’ என்று ஏராளமான ஆறுதல் வார்த்தைகள் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரவர்க்கு தெரிந்த ஆறுதல் மொழிகளை உங்களுக்கு சொல்வார்கள். பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை ‘மனதில் வரும் பிரச்சினைகள் எல்லாம் பிரச்சினைகளே அல்ல, தனிப்பட்ட ஒருவர் தைரியமாக இல்லாதிருப்பதும், தேவையில்லாமல் யோசிப்பதும், கோழைத்தனமாக இருப்பதும் தான் மனதில் வரும் பிரச்சினைகளுக்கு காரணம், அப்படியில்லாமல் ஒருவர் தைரியமாகவும், உறுதியாகவும், தேவையில்லாமல் யோசிக்காமலும் இருந்தால் மனதில் எந்தப் பிரச்சினையும் வராது’ என்பது தான் மனநோய்களைப் பற்றிப் பொதுவாக இருக்கும் கண்ணோட்டம்.

எனக்குத் தெரிந்த நண்பரின் தங்கை நீண்ட நாட்களாக “என்னமோ தெரியல எனக்குள்ள ஏதோ பாரமா இருக்கு, படபடப்பா இருக்குனு” சொல்லிட்டே இருந்திருக்கிறாள் ஆனால் யாரும் அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கொள்ளவில்லை. “நீயா தான் மனசப் போட்டுக் குழப்பிக்கிற, உனக்கு என்ன பிரச்சினை, தைரியமா இரு” என்று எப்போதும் போல அவளுக்கு அறிவுரைகளும், ஆறுதல்களும் தான் சொல்லப்பட்டன. திடீரென ஒரு நாள் இரவு, யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த மாத்திரைகளையெல்லாம் எடுத்துப்போட்டுத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். கடைசி நேரத்தில் கண்டுபிடித்துப் போராடிக் காப்பாற்றியிருக்கிறார்கள், ஒரு வழியாக மனநல மருத்துவரை அணுகியபோது அவளுக்கு ‘மனச்சோர்வு’ இருப்பது தெரியவந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். சில வாரங்களிலேயே முழுமையாக மீண்டு வந்துவிட்டாள். பிறகு மருத்துவம் படித்து இப்போது இங்கிலாந்தில் மேற்படித்து படித்துக்கொண்டிருக்கிறாள்.

உண்மையில் மன ரீதியாகத் தொந்தரவுகள் ஆரம்பத்தில் மிக சாதாரணமாகவே ஆரம்பிக்கின்றன. உடனடியாக அதைக் கவனிக்கும் பொழுது மிக விரைவாகவே அதிலிருந்து மீண்டு வந்து விடலாம். ஆனால் நாம் மனரீதியாக ஒருவர் பாதிக்கப்படும்போது அதை அவரது தனிப்பட்ட பலவீனமாக மட்டுமே பார்ப்பதால் அவருக்கு ஆறுதல் மட்டும் சொல்லி விட்டுவிடுகிறோம் அதற்கான சிகிச்சையைக் கேட்டுப்பெறுவதில்லை. இதனால் சிறிய மனநலப் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து விபரீதமான முடிவுகளில் சென்று முடிகின்றன. அதனால் உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்கும் நாம் கொடுக்க வேண்டும், உடலைப் போல மனதையும் நலமாக வைத்துக்கொள்வது தான் உண்மையில் நல்வாழ்வு என்பதை நாம் உணரவேண்டும்.

ஏன் மனநலத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை?

ஒருவரின் மனநலம் என்பது பெரும்பாலான நேரங்களில் அவர் வாழும் சூழலைப் பொறுத்தது. அன்றாட வாழ்க்கையே மிகவும் சிக்கலானதாக, சவாலானதாக, சலிப்பூட்டுவதாக, பாகுபாடான ஒன்றாக இருக்கும் போது நிச்சயம் அது அவரின் மனநலத்தில் பிரதிபலிக்கும். ஆனால் நமக்கு சொல்லிக்கொடுத்ததெல்லாம் வெளியே எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதை சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் என்பதே!. அதை சகித்துக்கொள்ளாத நிலையில் அது ஒருவரின் மனநலத்தை பாதிக்கும். அப்போது நாம் இந்தப் புறச் சூழலை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அந்த தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் புத்திமதிகள் சொல்கிறோம். வெளியே உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் ஒருவர் அவதிப்படுவதை அவரது தனிப்பட்ட பலவீனமாகப் புரிந்து கொள்கிறோம்.

உதாரணத்திற்கு, ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வருகிறது என்றால் உடனடியாக அதை நோய் என உணர்ந்து அவருக்கு வைத்தியம் செய்கிறோம் அதே நேரத்தில் அவர் வாழும் சூழலில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்கிறோம் இல்லையா? ஆனால் அதே போல சுற்றுப்புறத்தில் உள்ள பிரச்சினைகளால் ஒருவருக்கு மனச்சோர்வு வரும்போது நாம் அந்த மனச்சோர்வையும் சரி செய்வதில்லை, சுற்றுபுறத்தையும் சரி செய்வதில்லை. காரணம், நாம் மனச்சோர்வை தனிப்பட்ட ஒருவரின் பலவீனமாக மட்டுமே நினைத்துக்கொள்கிறோம். அதை ஒரு பிரச்சினையாகவோ, சிகிச்சை கொடுக்க வேண்டிய நோயாகவோ ஏற்றுக்கொள்வதில்லை.

ஏன் மனநலத்தின் மீது நமக்கு இந்த ஒவ்வாமை?

நான் எனது மாணவர்களிடம் அவர்களுடைய முதல் நாள் வகுப்பில் எப்போதும் ஒரு கேள்வியை கேட்பேன்:

“உங்களில் யாருக்காவது மனரீதியான பிரச்சினை எப்போதாவது இருந்ததா?”

முழு அமைதி மட்டுமே அந்த வகுப்பில் அந்த பொழுதில் நிறைந்திருக்கும், சில பேர் தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள், சில பேர் வேறு யாரோ ஒருவரை பார்த்து மெளனமாக சிரிப்பார்கள்.

நான் அடுத்த கேள்விக்கு செல்வேன்.

“சரி, உங்களில் யார் முழு மனநலத்துடன் இருக்கிறீர்கள்?”

அதற்கும் அதே நமட்டு சிரிப்புகளே பதிலாகக் கிடைக்கும்.

மனநலன் என்பதே கேலிக்கு உரியதாக, வெளிப்படையாகப் பேசுவதற்கே தயங்குகிற ஒன்றாக இருக்கிறது. மனநலத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் இந்த ஒவ்வாமையே மனநலத்தின் மீதான அத்தனை களங்கங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக மனிதர்களின் பரிவும், அன்பும் கிடைத்துவிடுகிறது. அதுவே அவர் மனரீதியாக ஏதாவது பாதிப்பில் இருக்கிறார் என்றால் சக மனிதர்கள் அவரைக் கேலியாகவும், பரிகாசமாகவும் பார்க்கும் நிலைதான் இருக்கிறது, அதனாலேயே பெரும்பாலான நேரங்களில் மனரீதியான பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

மனதில் வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றல்ல!

மனநலனின் மீதான பொதுமக்களின் களங்கப்பார்வைக்கான மற்றொரு காரணம் மனதில் வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் ‘தீவிர மனநோயாக’ நினைத்துக்கொள்வதே. பொதுவாகவே மனநோயாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு பொதுப்பார்வை சமூகத்தில் இருக்கிறது. அதாவது மனநோயாளிகள் அனைவரும் தனியாகப் பேசிக்கொள்வார்கள், சிரித்துக்கொள்வார்கள், எந்த வேலையையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பார்கள், சுத்தமாக இருக்க மாட்டார்கள், மற்றவர்களுக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் ஒருவருக்கு மனம் பாதிக்கப்பட்டது என்றாலே அவரும் பின்னாளில் இப்படி மாறிவிடுவார் என நம்புகிறோம். இந்தத் தவறான பார்வையே மனநலத்தின் மீதான களங்கத்திற்குக் காரணம். மனச்சிதைவு நோய் போன்ற தீவிர மனநோய்க்கு ஆளானவர்களில் சரியாக சிகிச்சையை எடுத்துக்கொள்ளாத வெகுசிலர் வேண்டுமானால் இப்படி இருக்கலாம். ஆனால் மற்ற மனநோய்களோடு ஒப்பிட்டால் மனச்சிதைவு என்பதே மிக அரிதான ஒன்று.

பெரும்பாலான மனரீதியான பிரச்சினைகள் மிகவும் எளிமையானவை, எளிதில் குணமாகக்கூடியவை, சிகிச்சையில் முழுமையாக சரியாகக்கூடியவை. மன ரீதியான அத்தனை பிரச்சினைளையும் தீவிர மனநோய் என நம்புவதாலேயே இந்த மிக எளிமையான மனநலப் பிரச்சினைகளையெல்லாம் சிகிச்சையெடுக்காமல் அலட்சியப்படுத்திவிடுகிறோம். உண்மையில் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலானதாகவும், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்குக் காரணமாகவும் இருப்பது மனச்சோர்வு, மனப்பதட்டம் போன்ற மிக எளிமையான மனநோய்களே!. மனநோய்களின் மீதிருக்கும் தவறான பார்வையினாலும், களங்கத்தினாலும் இந்த எளிமையான நோய்களுக்கான உதவியை யாரும் கோருவதில்லை, அதனால் இந்த மிக சாதாரணமாக குணமாகக்கூடிய மனநலப் பிரச்சினைகளெல்லாம் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. மக்களின் நல்வாழ்வோடு மனநலம் பின்னிப்பிணைந்திருக்கிறது.. மனதை நலமாக வைத்துக்கொள்ளாமல் உடலை நலமாக வைத்துக்கொள்ள முடியாது என்பதை மக்கள் உணர்ந்து மனநலத்தை மேம்படுத்துவதற்கான, மனரீதியான பிரச்சினைகளை சரி செய்து கொள்வதற்கான தயக்கங்களைக் கலைந்து அதற்கான உதவியைக் கோரினால்தான் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்ய முடியும்.

மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது?

உடலின் மற்ற பாகங்களைப் போல மனம் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாததற்கு காரணம் அதற்கு உருவமோ அல்லது அமைப்போ இல்லாததே!. மனதிற்கும் ஒரு உருவம் இருந்திருந்தால் அதை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி எந்த உருவமும் இல்லாமலிருப்பதால் தான் அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பதே அத்தனை குழப்பமானதாக இருக்கிறது.

மனம் என்பது ஒரு மென்பொருள். நமது கண்ணியில் வன்பொருள், மென்பொருள் என்று இருப்பதை போல, நமது உடலிலும் வன்பொருள், மென்பொருள் என்று இருக்கின்றன. உடலின் பாகங்களெல்லாம் வன்பொருட்கள், மூளை ஒரு வன்பொருள். மனம் என்பது மூளை என்ற வன்பொருளில் உள்ளீடு செய்யப்பட்ட மென்பொருள். நமது செல்போனில் இருக்கும் சாஃப்ட்வேரைப் போல, மனம் என்பது மூளையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாஃப்ட்வேர்.

நம் அனைவருக்கும் வன்பொருட்களில் எந்த வித்தியாசமுமில்லை. உங்களது மூளையையும், எனது மூளையையும் கழட்டி ஒரு மேசையில் வைத்துப் பார்த்தால் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் உங்களுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இந்த வித்தியாசங்களுக்குக் காரணம் நம் மனம் எனும் மென்பொருள். மனம்தான் தனித்துவமானது. மிருகங்களில் இருந்து மனிதன் வேறுபட்டிருப்பதற்கும், ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் பிறரிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கும் மனம்தான் காரணம்.

மனம் என்பது ஒரு செயல் அலகு. அதாவது மூளை என்னும் கணினியின் செயல்பாட்டிற்கு மனமே காரணம். மூளை எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதை அலட்சியப்படுத்த வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்வது மனமே!. ஒரு சினிமாவைப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம், அந்த சினிமா காட்சியாக, ஒலியாக மூளைக்கு வரும்போது அதையொட்டிய உணர்வுகள் மனம் வழியாக வெளிப்படும். அந்த சினிமாவைப் பார்க்கும் எல்லோருடைய மூளைக்கும் ஒரே காட்சி, ஒரே ஒலி தான் செல்கிறது, ஆனால் சிலருக்கு அந்த சினிமா பிடித்துப்போகிறது, சிலர் ஒரு முறை பார்க்கலாம் என்கிறார்கள், சிலர் குடும்பமாகப் பார்த்தால் ஓகே என்கிறார்கள், சிலர் சூரமொக்கை என்கிறார்கள். அந்த சினிமா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வைக் கொடுப்பதற்குக் காரணம் மூளை அல்ல, மனமே!. மனதில் அதையொட்டி எழும் உணர்வுகளைப் பொறுத்தே ஒரு விஷயம் நமக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. அதே போலவே மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. மூளையின் அமைப்பில் அல்ல, அதன் செயல்பாடுகளின் வழியாகவே நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறோம், அந்த செயல்பாட்டு அலகே மனம்!.

மூளையின் செயல்பாடுகளில் ஏதேனும் கோளாறு வருகிறதென்றால் மூளையின் வன்பொருளும் காரணமாக இருக்கலாம் அல்லது மென்பொருளான மனமும் காரணமாக இருக்கலாம். காரணத்தை இரண்டிலும் தேட வேண்டும். வன்பொருளில் உள்ள கோளாறுகளை ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளில் கண்டுபிடிக்கலாம். ஆனால் மென்பொருளின் கோளாறுகளை எந்தப் பரிசோதனைகளிலும் கண்டறிய முடியாது, எந்த பரிசோதனையிலும் கண்டறிய முடியவில்லை என்பதற்காக கோளாறே இல்லை என சொல்ல முடியாது. கோளாறு வன்பொருளில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் அவன். திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. ஒரு நாள் இரவு திடீரென அவனுக்கு இதயம் வேகவேகமாகத் துடித்தது, படபடப்பாய் இருந்தது, மூச்சு அடைத்தது, கண்கள் இருண்டன, உடலெல்லாம் வியர்த்துப் போனது, ஏதோ ஒரு இனம் புரியாத பயம், பெரிய பாறையை வைத்தது போல அவனது நெஞ்சை அடைத்தது. உடனடியாக அவனது மனைவி பயந்து போய் மருத்துவமனை அழைத்துப் போனாள். அங்கு ஈசிஜி, ரத்த பரிசோதனை, எக்கோ அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன, அத்தனையும் நார்மலாக இருந்தது. சிறிது நேரத்திலேயே அவனது படபடப்பும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தான். “எல்லாம் நார்மலாக இருக்கிறது, ஏதோ ஸ்ட் ரெஸ் தான், மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்” என மருத்துவர் அறுவுரை வழங்கி அனுப்பினார். அதற்குப் பிறகு அடிக்கடி அவனுக்கு அதே போல வர ஆரம்பித்தது, ஒவ்வொரு முறையும் மருத்துவமனை,  பரிசோதனை, சற்று நேரத்தில் இயல்பு நிலை என அதே சங்கிலியாகத் தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் அவனது மனைவி சலிப்புற்றாள். “நீங்க நார்மலாகத் தான் இருக்கீங்க, ஒவ்வொரு முறையும் எல்லா டெஸ்ட்டும் நார்மலாகத் தானே இருக்கு, உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என டாக்டர் சொல்லிவிட்டார், நீங்களா தான் தேவையில்லாமல் பயப்படறீங்க” என ஒரு நாள் கோபமாக அவனிடம் கத்தினாள்.

“நிஜமா என்னால முடியல, நான் வேணும்னு பண்ணல, திடீர்னு எனக்குள்ள என்னமோ நடக்குது, அந்த நேரத்துல என்னால ஒண்ணும் பண்ண முடியல, ஏன் அப்படி வருதுனு தெரியல, எல்லா டெஸ்ட்டும் நார்மலா தான் இருக்கு. நான் ஒத்துக்குறேன், ஆனா நான் நார்மலா இல்ல” என அழுதான்.

அவன் மனைவி சொல்வது போல அந்த இளைஞர் நார்மலாகதான் இருக்கிறானா அல்லது ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? பிரச்சினை இருக்கிறது என்றால் ஏன் எல்லா பரிசோதனைகளும் நார்மலாக இருக்கிறது?

அவனுக்குப் பிரச்சினை இருக்கிறது. அவனுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளாக இருப்பதால் எல்லாரும் அதன் காரணத்தை உடலில் தேடுகிறார்கள். இதயம் படபடப்பாக அடிப்பதனால் இதயம் சரியாக இருக்கிறதா என்ற பரிசோதனைகள் தான் அவனுக்கு செய்யப்பட்டது. அந்த பரிசோதனைகள் நார்மல் என்றால் இதயம் நார்மலாக இருக்கிறது என்று தான் பொருளே தவிர அவனே நார்மலாக இருக்கிறான் என்று பொருள் அல்ல. அவனுடைய பிரச்சினைக்கு இதயமோ அல்லது மற்ற வன்பொருட்களோ காரணமல்ல. மாறாக, அவனுடைய மென்பொருள் அதற்குக் காரணாக இருக்கலாம். அதாவது மனதின் பிரச்சினைளும் உடலின் செயல்பாட்டை பாதிக்கும் என்று யாரும் உணர்வதில்லை. அதே போல மனதின் நோய்மைகளை எந்த பரிசோதனை வழியாகவும் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் குறிப்பிட்ட இளைஞனுக்கு நோய்மை உடலில் அல்ல, மனதில்.

உடலின் நோய்மைகளை நாம் ஆராய்ந்து, சிகிச்சையளித்து குணப்படுத்துவதைப் போல மனதின் நோய்மைகளையும் ஆராய்ந்து, சிகிச்சையளித்து குணப்படுத்த வேண்டும். ஆனால் நாம் அதைச் செய்வதில்லை, மாறாக “மனதை தைரியமாக வைத்துக்கொள்” என அறிவுரையை மட்டும் சொல்லிவிட்டு மனதின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விடுகிறோம். தைரியமாக வைக்க முடிந்தால் அவன் ஏன் உதவியை நாடப் போகிறான் என யாரும் யோசிப்பதில்லை.

 மனதின் பண்புகள்:

 மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functioning Unit). அது மூளையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது என்றால் மனதில் பண்புகள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? மனம் என்ற ஒன்று ஏன் நமக்கு இருக்கிறது?

ஏனென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால்தான் மனம் நலமாக இருப்பது என்றால் என்ன? மனம் நோய்மையுற்றிருப்பது என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

மனதில் மூன்று பரிமாணங்கள் உள்ளன:

சிந்தனைகள் (Thoughts)

உணர்வுகள் (Emotions)

புத்தி (Intelligence)

மனம் ஆரோக்கியமாக இருக்கும்போது இந்த மூன்றும் சமநிலையில் இருக்கும். இந்த மூன்றிற்கு இடையேயான சமநிலை பாதிக்கப்பட்டால் மனம் ஆரோக்கியமாக இல்லை என்று பொருள்.

உதாரணமாக, நாம் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்த வேலை தொடர்பான எண்ணங்கள் வரவேண்டும், அந்த வேலை செய்வதற்கான உந்துதலை உணர்வுகள் தர வேண்டும், அந்த வேலையை செய்து முடிக்கும் நுட்பத்தை புத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வேலையை நாம் சரியாக செய்து முடிப்போம். ஒருவேளை அந்த வேலைக்குத் தொடர்பற்ற சிந்தனைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தாலோ அல்லது அதை செய்வதற்கான ஈடுபாட்டை உணர்வுகள் கொடுக்கவில்லையென்றாலோ அல்லது அதன் நுட்பங்கள் கைவராமல் போனாலோ நம்மால் அந்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காக செய்து முடிக்க முடியாது. அதற்குக் காரணம் மனதின் இந்த சமநிலையற்ற தன்மையே. ஒரு வேலையை நாம் சரியாகச் செய்யவில்லை என்றால் நம் மீதான நமது நம்பிக்கை குறையும், அது அந்த வேலையை இன்னும் கடினமாக்கும், தொடர் தோல்விகள் ஏற்படும், ஒரு கட்டத்தில் நம் மீதான நம்பிக்கை பிறருக்கும் குறையத் தொடங்கும், நம்மை அலட்சியப்படுத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள், அது இன்னும் மனநிலையை மோசமாக்கும், அப்போது சாதாரண வேலை கூட கடினமானதாகத் தோன்றும், அது மேலும் மேலும் நம்மை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும். இப்படித்தான் மனம் நோய்மையடைகிறது.

மனதின் மூன்று பரிணாமங்களும் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டவை. அதாவது நமது சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ அதற்கேற்றபடியே நமது உணர்வுகளும் இருக்கும், அதையொட்டியே புத்தியும் வேலை செய்யும். இந்தப் பிணப்பு குலையும் போதும் மனம் நோய்மையடைகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு சந்தோசமான தருணத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது சந்தோசமான எண்ணங்களே வராமல் முற்றிலும் எதிர்மறையான எண்ணங்களாகவே வந்து கொண்டிருந்தால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். சமீபத்தில் ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவன் என்னைப் பார்க்க வந்தான் “எங்க அம்மா சிரிக்கிறத பார்த்தாலே அவங்க செத்துப் போறது மாதிரி எண்ணம் வருது சார்” என்று அழுதான். அதனால் அவன் அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதையே தவிர்த்து வந்தான். எண்ணங்கள் இப்படி தன்னிச்சையாக வந்தாலோ அல்லது உணர்வுகள் தன்னிச்சையாகத் தோன்றினாலோ மனம் சரியில்லை என்று பொருள்.

மனதின் தேவை என்ன? மனம் என்று எதற்காக இருக்கிறது?

மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?

ஐந்தறிவு, ஆறறிவு எனப் பல கதைகள் சொல்வார்கள். அதெல்லாம் உண்மையில்லை. மனிதர்களுக்கும், மிருகங்களுக்குமான பிரதான வேறுபாடு மனிதர்கள் ‘சமூக விலங்கு’ என்பதே!.

அதென்னசமூக விலங்கு’?

அடிப்படையில் நாம் அனைவரும் விலங்குதான். ஆனால் சமூக விலங்கு. சமூக விலங்கென்றால் சமூகத்திற்காக நமது விருப்பு, வெறுப்புகளை விட்டுக்கொடுப்பதே!.

உதாரணத்திற்கு, மிருகங்களைப் பொருத்தவரை, அதற்கு என்ன தேவையோ அதை அடைவதில்தான் முனைப்பாக இருக்கும். பசித்தால் உடனே சாப்பிட வேண்டும், பாலுறவை உடனடியாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் என்பவனுக்கு சமூகத்தின் நலனே பிரதான ஒன்றாக இருக்கும். தனக்குப் பிடிக்கும் ஒன்று சமூக நலனுக்கு எதிரானதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் பண்பு மனிதனுக்கு இருப்பதாலேயே அவன் சமூக விலங்காகப் பரிணமித்திருக்கிறான். சமூகத்திற்காக வாழும் இந்தப் பண்பு தான் மனதின் பிரதான பண்பு.

மனம் என்ற ஒன்றுதான் மனிதனை சமூக விலங்காக மாற்றியது. ஒரு சமூகமாக வாழ்வதும், சமூகத்திற்காக வாழ்வதும், பிறருக்காகக் கவலைப்படுவதும், சுய நலமற்று சமூகநலனின் மீது அக்கறையாக இருப்பதுமே மனதின் பிரதான பண்பு.

நமது எண்ணங்கள், உணர்வுகள், புத்தி போன்றவற்றின் வழியாக சமூகத்தின் நலனையும், நமது நலனையும் பாதுகாப்பதே மனதின் பிரதான செயல்பாடு. சமூகத்தின்மீதான இந்தப் பிணைப்பு குறைகிறது என்றால் மனதின் செயல்பாடு குறைகிறது என்று பொருள்.

உதாரணத்திற்கு, பிறரைப் பற்றிக் கவலையேபடாத, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்காத ஒருவரை நாம் என்ன சொல்கிறோம்? “நீ என்ன மனிதனா, இல்லை மிருகமா?” எனக் கேட்கிறோம்.

நமது சிந்தனைகளினாலோ அல்லது உணர்வுகளினாலோ அல்லது புத்தியினாலோ பிறரோ அல்லது சமூகமோ அல்லது நாமோ பாதிக்கப்படுகிறோம் என்றால் நம் மனம் நலமாக இல்லை என்று பொருள்.

மனம் நலமாக இருக்கிறது என்றால் “நமது சிந்தனைகளும், உணர்வுகளும் மற்றும் புத்தியும் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நலமாக வைத்துக்கொள்வதையே ‘மனநலம்’ என்கிறோம்”.

மனநலத்தில் மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன:

நம்மை நாமே முழுமையாக உணர்ந்து கொள்வது.

நமது எண்ணங்களும், செயல்களும் நமக்கும், பிறருக்கும் உதவியாக இருக்குமாறு வைத்துக்கொள்வது. குறைந்தபட்சம் தீங்கிழைக்காதவாறு பார்த்துக்கொள்வது.

சக மனிதர்களுடன் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்வது

இவை மூன்றும் மன நலத்தின் முக்கியமான அம்சங்கள். இந்த மூன்று அம்சங்களின்படி பார்த்தால் யாராவது மனநலத்துடன் இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா?

நிச்சயமாக முடியாது. முழுமையான மனநலம் என்பதே ஒரு ஐடியல் நிலை அவ்வளவு தான். நடமுறையில் சாத்தியமில்லாதது. மனநலம் மட்டுமல்ல, உடல் நலமும்கூட அப்படித்தான். யாரையாவது இவர்கள் முழுமையான உடல் நலத்துடன் இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா? நிச்சயம் இல்லை. நலம் என்பதே ஒரு ஐடியல் நிலையே. அது உடல் நலமாக இருந்தாலும் சரி, மனநலமாக இருந்தாலும் சரி.

நமது வாழ்வியல் நெறிகளை, அன்றாடப் பழக்கவழக்கங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் வழியாக முழுமையான நல்வாழ்வை நோக்கி நகர்கிறோம் அவ்வளவே!. முழுமையான நலன் என்பது ஒரு இலக்கே. வெறும் நோயில்லாத நிலை மட்டுமே முழுமையான நலன் அல்ல. நலம் என்பது ஒரு முழுமையான உடல், மனம் மட்டும் சமூக ஆரோக்கியம். அதே போலவே மன நலன் என்பது வெறும் நோயில்லாத நிலை மட்டுமல்ல, நமது எண்ணம், உணர்வுகள், அறிவு என அத்தனையையும் நமக்கும் மற்றவர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் பார்த்துக்கொள்வது. அப்படி இல்லாதபோது நம் மன நலமும் குறைபாடாகயிருக்கிறது என்று பொருள். அது மனநோயல்ல, மனநலமின்மை. அன்றாட வாழ்க்கையின் இந்த நலமின்மைகள் பெரும் சவாலாகயிருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் நலமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த நலமின்மைகளைப் பற்றி வெளிப்படையாக உரையாட வேண்டும். உதாரணத்திற்கு உடல் எடை அதிகமாக இருப்பது நோயல்ல, ஒரு நலமின்மை. எடையைக் குறைக்க வேண்டும் எனப் பாடுபடுகிறோம் அதற்காகத் தேடித்தேடிப் படிக்கிறோம், உணவை கட்டுப்படுத்துகிறோம், உடற்பயிற்சி செய்கிறோம் தினமும் எடையைப் பார்த்து சலிப்படைகிறோம். இதுவே மனம் ஏதோ ஒரு சரியில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரே எதிர்மறையான எண்ணங்களாக வருகிறது, எதிலும் நம்பிக்கையற்று, பிடிப்பற்று இருக்கிறது. மனதின் இந்த நிலை நோயல்ல, அது நலமின்மை. இந்த மன நலமின்மைகளை, அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு மன நெருக்கடிகளை சரி செய்து கொள்ள நாம் என்ன முயற்சியை செய்கிறோம்? அலட்சியப்படுத்துகிறோம். அதைப்பற்றி வெளிப்படையாகக் கூட உரையாடுவதில்லை. இப்படி நம்மால் அலட்சியப்படுத்தும் அன்றாட வாழ்க்கையின் மிக எளிமையான மனநலப் பிரச்சினைகளே, மனநலமின்மைகளே பின்னாளில் பெரிய மனநோயாக மாறுகின்றன, அப்படிப்பட்ட சூழ்நிலையிலே மனிதர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள்.

மனம் என்பதும் உடலைப் போலவே ஒரு அமைப்பு. உடலைப் போலவே நலமின்மைகளும், நோய்மைகளும் மனதிலும் வரலாம். மனதின் பரிமாணங்களான எண்ணங்களிலும், உணர்வுகளிலும், புத்தியிலும் இந்த நலமின்மைகள் எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அப்படி வருவதில் எந்த அவமானமும், அசிங்கமும் இல்லை. அது ஒரு தனிப்பட்ட பலவீனம் இல்லை. எனவே அப்படி வரும் மனரீதியான பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், அதற்கான உதவியைத் தேடிப்பெறுவதன் மூலமும் நம் மனதை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் பல்வேறு வகைகளில் முக்கியமானது. ஏனென்றால் ஒருவர் உடல் நலமின்றி இருக்கிறார் என்றால் அது அவரது தனிப்பட்ட நலத்தை மட்டுமே பாதிக்கும். அதுவே அவர் மனநலமின்றி இருக்கிறார் என்றால் அது அவரைச் சுற்றிய எல்லோரையும் பாதிக்கும். அதனால்தான் மனநலப் பிரச்சினைகளைப் புறக்கணிக்காமல் உடனுக்குடன் சரி செய்து கொள்ள வேண்டும்.

sivabalanela@gmail.com