இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவின் கார் ஈஷாவின் பிரதான வாயில்வரை வந்தது. யோகபாரம்பரியத்தில் நாகத்துக்கு முக்கியமான இடம் உண்டு. பாதுகாவலர்கள் கேமராவின் வீச்சுக்கு வெளியே நிற்க,  சத்குரு குடியரசுத் தலைவரை ஆசிரமத்தில் உள்ள பிரம்மாண்டமான நாகத்தின் சிலைக்கும், நீர்நிலைகளுக்கும், அரங்குகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார். தேவைப்படும் போது சத்குருவே ஜனாதிபதி பயணித்த வாகனத்தை ஆசிரமப் பாதைகளில் ஓட்டிச் சென்றார்.  குடியரசுத் தலைவர் விழாவில் பேசும் போது ஜக்கியை வானளாவப் புகழ்ந்தார். சென்ற முறை இந்துத்துவ அமைப்பின் தலைவரும் நாட்டின் பிரதமருமான மோடி இந்த விழாவுக்கு வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த முறை குடியரசு தலைவர். இந்துத்துவ அமைப்பினருக்கும்,  பொருளாதார சீர்திருத்த காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற நவீன மடங்களுக்கும் மிக உச்ச மட்டத்தில் தொடர்பு உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் விழாவாக அமைந்தது இந்த நிகழ்வுகள்.

ஈஷாவுக்கு செல்லும் இருட்டுப்பள்ளம் வழியிலும், தொண்டாமுத்தூர் வழியிலும் ஏழு எட்டு கிலோமீட்டர் முன்பிருந்தே கடும் போக்குவரத்து நெரிசலால் நகரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆயிரமாயிரம் ஈஷா பக்தர்கள் குடும்பங்களுடன் கார்களில் முடங்கிக் கிடந்தனர். ஈஷா நடனங்களைப் வேடிக்கை பார்க்க பல்லாயிரம் இளைஞர்கள் பைக்குகளில் குவிந்து கொண்டிருந்தனர். காட்டுப்பாதைகளில் பயணம் செய்யும் சாகசத்துக்காக ஒரு பெரும் கூட்டம் . . .

இரவு பதினோரு மணிவாக்கில் போக்குவரத்துக் கட்டுப்பாடு முற்றிலும் செயலிழந்தது. லட்சக்கணக்கானவர்கள் சிவராத்திரியை ஈஷாவைச் சுற்றியுள்ள வெட்டவெளிகளில் கழித்தனர். தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஈசன் வெட்டவெளியில் இருக்கமாட்டாரா என்ன?

அதே நேரம் ஆசிர மைதானத்தில் ராம் மிர்ஜலா, வேல்முருகன், குட்லே கான், அனன்யா சக்ரபோர்த்தி, நீலாத்ரி கான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சி இரவு முழுவதும் நடந்தது. எல்லா நெருக்கடிகளையும் மீறி அங்கே வந்து சேர்ந்தவர்களுக்கு இரவு முழுவதும் பக்தியும் பொழுது போக்கும் சம அளவில் கலந்திருந்த இந்த நிகழ்ச்சிகள் விருந்தாக அமைந்தன. இசையோடு பார்வையுளர்கள் நடனமாடவும் தூண்டும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது.  மிகவும் சக்தி வாய்ந்த விளக்குகளாலும் முழுவதும் ஒளியூட்ட முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான மைதானம் என்பதால் அங்கே பரவியிருந்த அரையிருள் பார்வையாளர்களுக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. நகரத்தில் நடுத்தர வர்க்கத்தால் அடியோடு புறக்கணிக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட ஒரு உணர்வு நடனமாடும் வேட்கை. மலைகளுக்கு நடுவே பரந்த வெளியில் வீசியடித்துக் கொண்டிருந்த பனிபோலக் குளிர்ந்த காற்று எல்லா அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளையும் விடுதலை செய்தது.

மேடைக்கு அருகே லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இடம் வாங்கியவர்களை அவ்வப்போது ஜக்கியே தோன்றி நடனமாடி ஊக்குவித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் வணிகம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஈஷா தனது முத்திரையைப் பதித்திருந்தது. இங்கே நடப்பது வியாபாரம் மட்டுமல்ல. மனித குலத்தின் நன்மைக்கான முன்னெடுப்பும் கூட என்று நம்ப வைப்பது ஈஷாவின் தனித் திறமை.

அழியும் நிலையிலுள்ள பல கால்நடை இனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈஷா பாரம்பரியத்தைக் காப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறது என்று பறைசாற்றியது இந்தக் கால்நடைக் கண்காட்சி.

பாரம்பரிய போர்க்கலை நிகழ்ச்சிகள் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களால் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. பாரம்பரியம் என்றால் யாருடைய  பாரம்பரியம்? போர்க்கலை என்றால் யாருடைய கலை? இந்து மதத்தின் போர்புரியும் சாதிகளின் வீரபாரம்பரி்த்தைக் காட்டும் நிகழ்ச்சி இது. இந்துத்துவவாதிகள் இந்துமதம் வீரமதம். இந்துக்கள் வீரபரம்பரையினர் என்று கூறி பண்டைய போர் சாதிகளைத் தூக்கிப் பிடிப்பது வழக்கம்.

மென் இந்துத்துவராகக் காட்டிக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ் சங்கிகளுடன் இணையும் புள்ளி இது. பௌத்த ஸ்தூபிகளின் மாடலில் தியானலிங்கத்தை அமைத்த ஜக்கி வாசுதேவ்  வீரபாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தியது இந்துத்துவ திசையில் மிக முக்கியமான பாய்ச்சல்.

ஜக்கி வாசுதேவ் இந்து அறநிலையத்துறையிடமிருந்து இந்துக் கோவில்களை மீட்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார். இஸ்லாமிய சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் என்று சந்தேகிக்கப்பட்ட குடிமக்கள் திருத்தச் சட்டடத்தை ஆதரித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதை ஆதரித்தார். இப்போது ஆதியோகியின் மேடையில் இந்துக்களின் வீரக்கலைக்கு இடமளித்து அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்.

—————–

”வெற்றியே மனித வாழ்வில் மிகவும் இனிமையான அம்சம். அந்த வெற்றி பொருளாதர வெற்றியாகவும் இருக்கலாம், ஆன்மீக வெற்றியாகவும் இருக்கலாம். யதார்த்த வாழ்க்கையில் வெற்றியாகவும் இருக்கலாம்.  இந்த நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்வில் வெற்றியடையத் தேவையான கருவிகளை நாங்கள் கொடுக்கிறோம்” ஜக்கி வாசுதேவ் மிக அழகாக, உறுத்தாத விதத்தில் ஒளியூட்டப்பட்ட மேடையில் தோன்றி துல்லியமான ஆங்கில உச்சரிப்பில் பேசினார். இது மகாசிவராத்திரி மேடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கார்ப்பரேட் தன்மை கொண்ட இன்னொரு மேடை.

அந்த அரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருநூறு தொழிலதிபர்களும்,, தொழில் முனைவோர்களும் கூடியிருந்தனர். இவர்களில் பலர் பலகோடி முதலீட்டில் தொழில் செய்து வருபவர்கள். ஒருசிலர் பெரும்பதவி வகித்து ஓய்வு பெற்று தொழில் துறையில் கால்பதிக்க விருப்பம் கொண்டிருப்பவர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்ற உத்வேகத்தில், கடன் பட்டு நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 3,20,000 ரூபாய் செலுத்தி நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள். இந்நிகழ்வில் உரையாற்றவும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்புகழ் பெற்ற தொழிலதிபர்கள் வந்திருந்தனர்.

ஈஷா பவுண்டேஷனின் ஒரு பிரிவான ஈஷா லீடர்ஷிப் அகாடமி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கார்ப்பரேட் பயிற்ச்சி அரங்குகள் ஈஷாவால் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் டி என் ஏ ஆஃப்ப் சக்ஸஸ்,  போன்ற தலைப்புகளில் நாராயண மூர்த்தி, டாட்டா போன்ற மாபெரும் தொழிலதிபர்கள் உரையாற்றியுள்ளனர். வரும் மார்ச் மூன்றாம் தேதியிலிருந்து பிராண்ட் இன்சைட் – டிகோடிங் பிராண்டிங் (Brand insight- Decoding Branding ) என்ற தலைப்பில் பிராண்ட்களை செயல்திறனுடன் உருவாக்குவது பற்றிய வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. உங்கள் லாபத்தை உச்சத்தைத் தொடவைக்க திட்டமிடுகிறீர்களா? இந்த வகுப்புகளில் பங்கு கொள்ளுங்கள். பல புகழ்பெற்ற பிராண்டுகளை உருவாக்கிய நிபுணர்கள் பேச இருக்கின்றனர். உங்கள் வணிகத்தை விரிவாக்குங்கள் என்று ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் முகநூல் விளம்பரம் அழைக்கிறது. ஒரு பிராண்டை எப்படி உருவாக்குவது, மக்களிடையே பிரபலப்படுத்துவது என்பது குறித்து உரைகள் இருக்கும் என்று இந்த அமைப்பின் முகநூல் பக்கம் கூறுகிறது.

மக்களாகிய நமக்கு ஆன்மா இருப்பதைப் போல ஒரு வணிகத்துக்கு பிராண்ட் தான் ஆன்மா என்கிறார் இப்படியொரு நிகழ்வில் உரையாற்றிய அனிஷா மோட்வானி. இடையிடையே ஈஷா சம்ஸ்க்ருதி நடனங்கள், பாடல்கள் வீடியோ கிளிப்பிங்குகள் என்று நிகழ்ச்சி மிக நேர்த்தியாக அதற்கேற்ற நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டது. உணவும், தங்குமிடமும் கொடுத்த பணத்திற்கேற்ற விதத்தில் நட்சத்திர ஓட்டல் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

:நீங்கள் கொடுக்கும் பணம் இங்கே பரிமாறிக் கொள்ளப்படும் விசிட்டிங் கார்டுகளுக்குத்தான். நிகழ்வில் சொல்லித் தரப்படுவது அதற்கு அடுத்ததுதான் என்று சத்குரு கூறினார்” என்று ஒருபங்கேற்பாளர் கூறினார்.

நான்குநாட்கள் வகுப்புகளுக்கு நபர் ஒன்றுக்கு 3,20,000/- ரூபாய். வரி தனி. அதிகபட்சம் இருநூறு பேர் இந்த வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள் என்றால் மொத்த வருமானம் 6,40,00,000 ரூபாய் ஆகிறது. இது ஈஷாவுக்கு ஒரு தொகையே இல்லை. நிகழ்வுக்கு வரும் அதி முக்கிய மிகப் பெரும் பணக்கார நிபுணர்களுக்கான ஊதியம், செலவுகள் போக அப்படியொன்றும் பெரிய தொகை நின்று விடாது.

 

டாட்டா, நாராயண மூர்த்தி போன்றவர்களும் பணத்துக்காக இங்கே வருவதில்லை. அப்படியானால் நாட்டின் மிகவும் வலிமை வாய்ந்த பெரும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை ஈஷாவை நோக்கி ஈர்ப்பது எது?

———————

இதற்கு முன்பு ஒருநாள் இதைவிட பிரம்மாண்டமாக யமுனை கரையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் பாபாவின் ஆர்ட் ஆஃப் லிவிங் பவுண்டேஷன் நடத்திய உலக பண்பாட்டு விழா நடைபெற்றது. 35 லட்சம் பேர் இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். 37,000 கலைஞர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் போது சுற்றுச் சூழலை இரக்கமின்றிச் சூறையாடியதன் காரணமாக  தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீ ஸ்ரீ பவுண்டேஷனுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நிகழ்வுக்கும் பிரதமர் மோடியும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலும் வந்து ஸ்ரீ ஸ்ரீ பாபாவுக்கு புகழ்மாலைகள் சூட்டினர்.

அடுத்த சில நாட்களில் ஓஜாஸ்விடா என்ற மால்ட் பானத்தின் விளம்பரம்  டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கம் முழுவதையும் ஆகிரமித்துக் காட்சியளித்தது. இதைத் தயாரித்தது ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா என்ற நிறுவனம். இது ஆர்ட் ஆஃப் லிவிங் பவுண்டேஷனுக்குச் சொந்தமானது என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? இந்த நிறுவனத்தின் ஆசிரமத்திலும் கிளைகளிலும் ஆர்ட் ஆஃப் லிவிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் அமெரிக்க கிளையில் மட்டும் 300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக பிசினெஸ் ஸ்டாண்டர்டு கூறுகிறது. இது ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய விவரம். அண்மைக் காலங்களில் இது மேலும் அதிகரித்திருக்கலாம் என்கிறது அந்த ஏடு. ஆன்மீக மேம்பாட்டை கார்ப்பரேட் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, அஷ்வினி தியன பவுண்டேஷன், பிரசன்னா டிரஸ்ட் ஆகியோருக்கு இடைய கடும் போட்டி நிலவுகிறது. ஜக்கியிடம் டாட்டா என்றால் இங்கே ரிலையன்ஸ்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் தனது கண்டுபிடிப்பான சுதர்சன கிரியா தியான முறைக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இவரது பவுண்டேஷன் சாக்லேட்டுகள், நெய், எண்ணெய், ஷாம்பூ, ஜெல் கிரீம், சோப்புகள் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கிறது. அதன் மூலம் பிரம்மாண்டமான லாபம் ஈட்டிவருகிறது.

ஸ்ரீ ஸ்ரீ பவுண்டேஷனும்  கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கும் நிகழ்வுகள் நடத்துகிறது. ரிலையன்ஸ், விப்ரோ, கூகுள் போனற நிறுவனங்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கின்றன.

————————————————

இன்னொரு யோகியான பாபா ராம்தேவின் பதஞ்சலி நாட்டின் மிக முக்கியமான கார்ப்பரேட் கம்பெனி ஆகும். ஆயுர்வேத பிஸ்கட்டுகள், நெய், பற்பசை, சாக்கோ ஃபிளேக்ஸ், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், இன்னும் எண்ணற்ற பொருட்களை ஆயுர்வேத முறையில் தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் ஆண்டு வருமானம் பல ஆயிரம் கோடி என்கிறார்கள்.

பாபா ராம்தேவி ஆர்ய சமாஜ் பள்ளிகளில் படித்தவர். யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்து பல்கிருஷ்ணா என்ற இன்னொரு துறவியுடன் இணைந்து இந்த வணிகத்தில் ஈடுபட்டு பெரும் வெற்றி ஈட்டியுள்ளார்.

பாபா ராம்தேவுக்கும் பிஜெபி அரசுக்கும் உள்ள தொடர்பு உலகம் அறிந்தது.

—————————

இந்த மூன்று நிறுவனங்களும் இந்தியாவின் முன்னணி ஆன்மீக நிறுவனங்கள் என்று கருதப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும், இந்துத்துவவாதிகளும் இந்த ஆசிரமங்கள் நடத்தும் பவுண்டேஷன்களும் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன. எந்தப் புள்ளி இவற்றை இணைக்கிறது என்பதைக் கண்டறிய இந்த நிறுவனங்கள் தோன்றுவதற்கான சமூக சூழலையும், இவை வணிக நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றதற்கான சூழலையும் ஆராய்வது அவசியமானது.

————————-

கார்களிலும் பைக்குகளிலும் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திலுள்ள ஈஷா ஆசிரமத்துக்கு படாத பாடுபட்டு வந்து சேரும் அல்லது வர முடியாமல் திரும்பிச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் தான் ஈஷாவின் பலம்.  மக்கள் எதை நாடி ஈஷாவிடம் வருகிறார்கள்? தங்கள் குலதெய்வ கோவில்களையும், மிகவும் பிரசித்தி பெற்ற, சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படும் பழைய சிவன் கோவில்களையும் விட்டு விட்டு மகாசிவராத்திரியன்று எதனால் ஈஷா வந்து குவிகிறார்கள்?

துளசி ஸ்ரீனிவாஸ், ஸ்மிருதி ஸ்ரீனிவாஸ் போன்ற ஆய்வாளர்கள் சத்ய சாய்பாபா மடத்தை காஸ்மோபாலிட்டன் என்கிறார்கள். அது எல்லாவிதத்திலும் சாய்பாபாவுக்குப் பின்வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், ஜக்கி, அமிர்தானந்த மாயி போன்ற சாமியார்களுக்கும் பொருந்தும்.

இந்த நவீன மடங்கள் பெரும்பாலும் நகரங்களை மையமாகக் கொண்டே வளர்கின்றன. நகர்ப்புற நடுத்தர வர்க்கமே இவர்களுக்கான பின்புலம். கிராமங்கள் வேறுவிதமான ஆன்மீகப் பின்புலம் கொண்டவை. கிராமம் கிராமமமாகப் போய் மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது. கிராமங்களில் மக்களுக்கு நெருக்கமான குலதெய்வக் கோவில்கள், இறுக்கமான சாதிய உறவுகள், பாரம்பரிய மடங்கள் ஆகியவை இருக்கின்றன. ஒப்பீட்டளவில் நகரங்களில் இருக்கும் பாதுகாப்பின்மை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இல்லை.

இந்திய நகரங்கள் மக்கள் தொகை பரப்பளவு ஆகியவற்றில் பெரியவை என்றாலும் இன்னும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் மறையாதவை. நவீன மருத்துவ விஞ்ஞான வசதிகள் இல்லாதவை. எல்லாவற்றுக்கும் மேலாக சமூகப் பாதுகாப்பு இல்லாதவை. எனவே இந்திய நகரங்கள் ஒருவிதமான மனநெருக்கடியைத் தரக்கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலான கூட்டுக் குடும்பங்கள் சிதறிய நிலையில், நகரங்களுக்கு இடம்பெயர்ந்த குடும்பங்களில் மூத்தவர்கள் இல்லாத நிலையில் அவசர உதவிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் போய் நிற்க ஒரு இடமே இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

இந்து மதத்தில் முறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டவட்டமான வடிவம் இல்லாத காரனத்தால் கிருத்துவ மதம் போன்றவற்றில் இருக்கும் கவுன்சிலிங், கூட்டுப் பிரார்த்தனை, குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடும் சமூக நிகழ்வு ஆகியவை இல்லை. கிராமத்துக் கோவில் பூசாரிகளுக்காவது சிரகடிப்பது, மந்திரித்து கயிறு கட்டுவது போன்றவை தெரியும். நகரத்து பெரிய கோவில்களின் பூசாரிகள் கொஞ்சம் நாள் நட்சத்திரத்தை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உரையாடலுக்கும் வழி இல்லாதவர்கள். இவர்களிடம் தத்துவமோ, நூல் அறிவோ, பிரச்சினைகளுக்குத் தீர்வோ கிடைக்க வாய்ப்பே இல்லை.

ஆறுதலாக ஒன்றைச் சொல்ல, நம்பிக்கையூட்ட, ஏதாவது பயிற்சிகள், தியானங்கள் மூலம் ஒரு அமைதியளிக்க ஆட்கள் தேவையான நிலையிலேயே நகரங்களில் வந்து குவிந்த இந்து சமூகம் இருந்தது. இன்றும் இருந்து வருகிறது. ஜோசியம், வாஸ்து என்று போய் குவிவதன் காரணமும்,  இவற்றுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள புதிய வரவேற்பும் இந்த நம்பிக்கையின்மையின் காரணமாகத்தான்.

இந்தச் சூழ்நிலையில் உருவான குருக்கள் மூன்றுவிதமானவர்கள் என்று மீரா நந்தா God market  என்ற நூலில் கூறுகிறார். அதன் உத்தேசமான தழுவல் சிறிய மாறுதல்களுடன்.

  1. அற்புதங்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் குருக்கள். சத்ய சாய்பாபா, மேல் மருவத்தூர் அடிகளார் போன்றவர்கள்.
  2. யோகா, தியானம் மூலம் அற்புத சக்திகள், மன அமைதி ஆகியவற்றைப் பெறலாம், நோய்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பவர்கள் மகேஷ் யோகி, பாபா ராம்தேவ் போன்றவர்கள்.
  3. வாழ்க்கைக்கு வேதங்கள், உபநிஷத்துக்கள் இந்துத் தத்துவ நூல்களில் இருந்து விளக்கங்கள் அளிப்பவர்கள் மூன்றாவது விதமான குருக்கள். ஓஷோ இவர்களில் முக்கியமானவர்.

இந்தப் பிரிவுகள் அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை என்கிறார் மீரா நந்தா. உதாரணமாக தியானமும் யோகாவும் அறிவியல்பூர்வமானவை என்று கூறும் ஜக்கி தன்னை கடவுளுக்கு நெருக்கமானவராகவும், பலபிறவிகளை நினைவுகூர்பவராகவும் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்.

ஓஷோ ஆசிரமத்தில் தியானம் உண்டு. சுதர்சன கிரியா என்ற மூச்சுப் பயிற்சி மூலம் உடல் மனம் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தும் முறையை கற்றுத் தருவதாகக் கூரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபா ஆயுர்வேதம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுகிறார்.

இந்த நவீன மடங்கள் நடனங்கள், பாடல்கள்,  பயணங்கள் என்று ஒரு கொண்டாட்டமான வாழ்வை தருகின்றன. பேக்கேஜ் என்ற முறையில் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், பதினைந்து நாட்கள் இது போன்ற வித்தியாசமான வாழ்க்கை வாழவதற்கான வாய்ப்பை அளிக்கின்றன. இப்படி பேக்கேஜ் அடிப்படையில் ஆசிரமம் வர முடியாதவர்களுக்கு உள்ளூர் ஆசீரியர்கள் மூலம் பயிற்சிகள், கூடுகைகள் ஏற்பாடு செய்கின்றனர். இதில் பக்தர்கள் ஓரிருமணிநேரம் கலந்து கொண்டு தாங்கள் அன்றைய தினத்துக்கான மன அமைதி பெற்றதாக உணர்கின்றனர்.

இது வாழ்க்கையை துறப்பது, ஆசைகளைத் துறப்பது, இறைவனிடம் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என்ற பழைய பாணி மடங்கள் குருக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அவ்வளவு நீண்டதாக இல்லாத ஐம்பது ஆண்டுகாலத்தில் இந்த நவீன மடங்கள் பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகி பெரும் வலிமை பெற்று பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. இந்துதுவ அரசின் பெரும் பின்புலமாக மாறியுள்ளன. இவை இந்த இடத்துக்கு வந்து சேர்ந்த கதை சுவாரஸ்யமானது.

—————————————

ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற நவீன சாமியார்களின் அத்தியாயம் மகரிஷி மகேஷ் யோகியில் இருந்து தொடங்குகிரது. மகரிஷி மகேஷ் யோகி ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான பிரம்மானந்த சரஸ்வதியின் செயலாளராகவும் முதன்மை சீடராகவும் இருந்தார். அவரது நம்ப்பிக்கைக்கு உரியவராக மடத்தின் கடிதங்களுக்கு சுயமாகவே பதில் அனுப்பும் அதிகாரமும் பெற்றிருந்தார்.  தனது குருவிடமிருந்து விரைவாகவும், ஆழ்ந்தும் மூச்சுவிடும் தியானமுறையை கற்றுக் கொண்டார். இந்த தியான முறையானது  ரகசியமானது. நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த அளவுக்கு குருவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தபோதும் மகேஷ்யோகி பிராமணர் அல்லாத காயஸ்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சங்கராச்சாரியார் ஆக முடியவில்லை. எனவே தனது குருவின் மரணத்திற்குப்பிறகு மடத்தைவிட்டு வெளியேறி தனிமையில் இரண்டாண்டுகள் வாழ்ந்தார். பின்பு நாடு முழுவதும் சுற்றித் தன் குருவிடமிருந்து கற்றுக்கொண்ட ட்ரான்செண்டெண்டல் தியானத்தை பலருக்கும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். இவ்வாறு இந்த ரகசிய தியான முறையை பொதுமக்களுக்குக் கற்றுக் கொடுக்கச் சொன்னவர் தனது குருதான் என்றும் உலகுக்கு அறிவித்தார். அப்படியானால் அந்தக் குருவே ஏன் பொது மக்களுக்குச் சொல்லித் தரவில்லை என்று அவரிடம் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.  தென்னிந்தியாவுக்கு வந்த அவர் இந்தி எதிர்ப்புணர்வு உச்சத்திலிருந்த காரணத்தால் ஆங்கிலத்தில் பேசப் பழகிக்கொண்டார். பின்பு ஒரு சின்னஞ் சிறிய கைப்பெட்டியையும், இப்போது தன்னுடையதாகிவிட்ட தியான முறையையும் தூக்கிக் கொண்டு உலகம் சுற்றத் தொடங்கினார். மேல் நாடுகளில் அவரது தியானமுறை நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக யோகியின் புகழ் இந்தியாவிலும் அதிகரித்தது.

ரிஷிகேஷில் தியானப்பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை உருவாக்குவதற்கு ஒரு பள்ளியை நிறுவினார். இது பின்பு ஆசிரமமாக வளர்ச்சி பெற்றது.

1963ல் இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இருபதிற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இவரது தியானமும், நோக்கங்களும் சிறப்பானவை, பின்பற்றத்தக்கவை என்று சான்றிதழ் அளித்தனர். உலகம் முழுவதும் யோகியின் புகழ் பரவியது. ஆன்மீக வழி உலக அமைதி, யோகாவின் மூலம் மன அமைதி, அலைபாயும் மனதை அமைதிப் படுத்துதல், மெய்யறிவை அடைதல் என்று கலந்துகட்டி அடித்ததில் ஏராளமான மேல்நாட்டு அறிவுஜீவிகளும், பணக்காரர்களும் அவரது ஆதரவாளர்களாயினர்.

யோகிக்கு இந்தியாவில் பாரம்பரிய மடத்தலைவர்கள், ஆன்மீகவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புத் தோன்றியது. தவமும், துறவறமும் இல்லாமல் ஆன்மீக அமைதியை அடையும் முறை இந்துமதத்தின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும், பாரம்பரியத்திற்கும் எதிரானது என்றனர் அவர்கள்.

மதம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஆய்வுகள் செய்தவரான சீன் மெக் க்ளவுட் என்பவர் “யோகி ஒரு எளிய முறையின் மூலம் எல்லா மக்களும் தியானம் செய்வதையும் அதன்மூலம் மெய்யறிவு பெறுவதையும் ஊக்குவித்தார். இது தன்னைத் தானே துன்புறுத்திக்  கொள்ளுதல், துறவறம் பூணுதல் ஆகியவற்றின் மூலமே மெய்யறிவு பெறமுடியும் என்ற பழைய நம்பிக்கையைத் தகர்க்கிறது என்பதாலேயே எதிர்க்கப்பட்டது” என்றார்.

ஒருநாள் அப்போது உலகம் முழுவதும் பெரும்புகழ் பெற்றிருந்த பீட்டில்ஸ் குழுவினர் யோகியின் பாதையை ஏற்றுக்கொண்டனர். போதை மருந்துகளுக்கு மாறாக ஆபத்து இல்லாமல் ஆனால் அதே போன்ற மன அமைதியைத் தரும் ஒன்றை ஜான் லென்னான் தேடிக் கொண்டிருந்தார். அவர் மகேஷ் யோகியைக் கண்டுகொண்டதும் மேற்கத்திய எதிர்க்கலாச்சாரமும் கீழை தேச நவீன ஆன்மீகமும் ஒன்றிணைந்தன. மகேஷ்யோகியின் புகழ் எவரெஸ்ட்டையும் கடந்து சென்றது. இந்தக் கூட்டு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது என்றாலும் யோகி ஒரு அகில உலக சூப்பர் நட்சத்திரமாக மாறிவிட்டார். யோகி ஆசிரமத்தில் தங்கியிருந்த மியா ஃபர்ரோ என்ற ஹாலிவுட் நடிகையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. பீட்டில்ஸ் ஜான் லென்னன் இவரை செக்ஸி சாது என்றார். இருந்தபோதும் அடுத்த நட்சத்திரங்கள் உருவாகும்வரை யோகியே உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

மேல்நாட்டவர்கள் இந்தியாவை மர்மங்கள், மனித அறிவுக்கு எட்டாத அற்புத சக்திகள்,  மாயமந்திரங்கள் கொண்ட நாடாக சித்திரம் தீட்டுவது வழக்கம். மகரிஷி மகேஷ்யோகி இந்த பிம்பத்தை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து யோகா, தியானம் செய்வதன் மூலம் வானில் பறக்கலாம் என்றெல்லாம் கூறினார். மகேஷ் யோகியின் ஆசிரமத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சீடர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் எழுவதைப் போன்ற படங்கள் உள்ளன. இந்த விண்ணில் பறக்கும் படங்கள் பொய்யானவை என்று பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தில் வளர்ந்துவந்த ஓஷோ, ’மகேஷ்யோகி மக்களுக்கு நன்மையளிக்கிறார் என்ற விதத்தில் அவர் செயல் வரவேற்புக்குரியது. ஆனால் அவரது யோகமுறை என்பது மக்களைத் திரும்பத் திரும்ப ஒரு மந்திரத்தை உச்சரிக்கச் செய்வதன் மூலம் மனம் வேறு விஷயங்களைச் சிந்திக்காமல் தடுப்பதாகும்.. இதனல் மன அமைதி கிடைப்பது போன்ற தோற்றம் உண்டாகிறது. இது மிக எளியமுறை, இதனால வாழ்வின் நோக்கங்களை அடைவது, மெய்யறிவு காண்பது என்பதெல்லாம் சாத்தியமில்லை’ என்றார்.

எது எப்படியிருந்தாலும் பாரம்பரியத்திலிருந்து முறித்துக் கொண்டு தியானம், யோகா, வேதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பணமும், புகழும் அதிகாரமும் அடையமுடியும் என்பதைக் காட்டியவர் மகேஷ்யோகிதான்.

 

இந்தப் பாதையில்தான் பின்பு வந்த ஜக்கி போன்றவர்களின் பயணம் தொடர்ந்தது. இவர்கள் மகேஷ் யோகியிடமிருந்து இன்னும் முன்னேறி கார்ப்பரேட் சாமியார்களாக உருமாற்றம் பெற்று இந்துத்துவ அரசியலின் பிரிக்கமுடியாத அங்கமாகினர். இவர்கள் கர்மா கேபிடலிசம் என்ற புதிய சொல்லையே,  கார்ப்பரேட்டுகளின் இயக்குநர் அரங்குகளுக்குக் வழங்கினர்.