அவன் வானத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
பதினேழு வயதில் மூன்று காதல் தோல்வி என்பது கொஞ்சம் அதிகமாகத்தான் பட்டது.
பட் பட் என்று காதலிக்காமல் கொஞ்சம் மெதுவாகக் காதலித்திருந்தால் கொஞ்சம் தோல்விகள் குறைவாக இருந்திருக்கும்.
ஆனால் காதல்கள் பஸ் மாதிரி மெதுவாக வருவதில்லை. ஒன்று போனதும் அதே வேகத்தில் மற்றொன்று வந்து விடுகிறது.
வரும்போது ஏறாமல் இருக்க முடிவதில்லை.
தப்பு அவனுடையது அல்ல.
காதல்தான் அவசர அவசரமாக வந்துவிட்டது. எவ்வளவு அவசரமாக வந்ததோ அதே அவசரத்தோடு போய்விட்டது.
இனி எதுவும் இல்லை.
அவனுக்கு மட்டுமல்ல. இந்த உலகத்துக்கே இனி எதுவும் இல்லை.
இல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று உலகம் நினைத்தது.
அவனும் அதைத்தான் நினைத்தான்.
இல்லாமல் இருந்துவிடுவதால் என்ன குறை?
இனி அவனும் வானத்தைப் போல மனம் படைத்த சின்னவனே. அவன் பாட்டுக்கு இருக்கப் போகிறான். எது நடந்தாலும் கண்டுகொள்ளப் போவதில்லை. பூமி மாதிரி எதற்கு எடுத்தாலும் ஆடிக் கொண்டிருந்தது போதும்.
காயத்திரிக்கு ஏ லெவல் பரீட்சை முடிவு மோசமாக வந்ததற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?
‘நீ என்னைத் தொட்ட பெறகுதான் எல்லாமே மோசமாயிருச்சு!’ என்றாள்.
அவனால் அதிகம் பேச முடியவில்லை. அவனுக்கு அடுத்த வருஷம்தான் ஏ லெவல். அதன் பிறகுதான் அவளைத் தொட்டதால் அவனுடைய பரீட்சை என்ன ஆனது என்று சொல்ல முடியும்.
ஆனால் காயத்திரி இதற்கு முன் இப்படிச் சொல்லவில்லை.
‘எனக்குப் பிடிச்ச பாடத்த எடுத்து படிக்க விட மாட்டறாங்க. உனக்குப் பரவாயில்ல, உங்க அம்மா அப்பா சிங்கப்பூரியன்ஸ்! அவுங்க தமிழ்நாட்டுல இருந்து வந்திருந்தா உனக்கு என் கஷ்டம் புரியும்!’ என்றாள்.
அவள் அப்படிப் பேசும்போது கன்னங்களைத் தாண்டிச் செல்லும் கண்ணீரை அவன் துடைப்பான்.
அது தவறா?
ஒரு காதலனின் வேலை என்ன?
ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைப்பதுதானே?
அதுகூட இல்லாவிட்டால் அது என்ன காதல்?
சில சமயங்களில் அவள் விம்முவது உண்டு. அது போன்ற சமயங்களில் மட்டும் அவளைக் கட்டி அணைத்துக் கொள்வான். அவளுக்குப் பதினெட்டு வயது என்பதால் அவளைக் கட்டி அணைக்கும்போது அவனால் இறுக அணைக்காமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால் ஒன்று. மிகவும் அபூர்வமாகத்தான் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டது.
அதனால் எல்லாம்கூடப் பரீட்சை பாதிக்குமா?
சொல்லத்தான் நினைத்தான். ‘நீ விரும்பிய பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் நீ விரும்பிய மதிப்பெண் வந்திருக்கும்!’ என்று சொல்ல நினைத்தான்.
ஆனால் அவள் ஏற்கனவே கோபமாக இருந்தாள். அப்பாமீதும் அம்மாமீதும் பரீட்சைமீதும் காதல்மீதும் அவன்மீதும்.
அதுபோன்ற நேரங்களில் எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. எனவே அவன் வானத்தைப் போல மனம் படைத்த சின்னவனாக இருந்துவிட்டான்.
சில சமயம் வானத்தைப் பார்த்து ‘நீ எங்கள என்ன எம்சுக்காகப் படைச்ச?’ என்று மனிதர்கள் கேட்பது உண்டு. அதுபோன்ற ஒரு கோபத்தோடு காயத்திரி அவனைப் பார்த்தான்.
அவன் புரிந்து கொண்டான். மூன்றாவது காதல் என்பதால் அவனுக்குப் புரிந்தது. தொடங்கும் நேரத்தில் எல்லாமே சரியாக இருக்கும். முறியும் நேரத்தில் எல்லாமே தப்பாக இருக்கும். பேசினாலும் தப்பாகத் தெரியும். பேசாவிட்டாலும் தப்பாகத் தெரியும்.
காதல் உடைந்து கொண்டிருப்பது அவன் காதில் கேட்டது. ஒன்று மட்டும் அவனுக்கு வருத்தமாக இருந்தது. காயத்திரி போன்ற அழகான பெண்ணைச் சந்திப்பது சாத்தியம் இல்லை.
கடைசியாக ஒருமுறை அவளைக் கட்டி அணைத்துவிடலாமா என்று நினைத்தான். அவனுடைய உள்ளம் முதல் முறையாகப் பரிதவித்தது. நல்ல வேளையாக அவன் அப்படி எதுவும் செய்துவிடவில்லை.
அவள் மெளனமாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.
உடனே எழுந்து போய்விட அவளால்கூட முடியவில்லை. ஒருவேளை அவளே நாளை மனம் மாறி அவனை நோக்கித் திரும்பி வரலாம்.
ஆனால் இனிமேல் அவனால் அவளைப் பழையபடி காதலிக்க முடியாது. அரசாங்கம் நடத்தும் பரீட்சைக்காக அவனைக் குற்றம் சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவள் எழுந்து நடந்து சென்றபோது அவன் பேசாமல் இருந்துவிட்டான்.
நாவலாசிரியர் டாக்டர் மு வரதராசனார் சொல்வது போல் வாளாவிருந்துவிட்டான்.
விருட்டென்று எழுந்து வீட்டுக்குச் சென்ற கரித்துண்டு நாவலைப் படிக்க வேண்டும் போல் அவன் மனம் ஆவேசம் கொண்டது.
அவன் வீட்டில் டாக்டர் முவ எழுதிய புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும். அவருடைய பதின்மூன்று நாவல்களும் இருந்தன. ஆனால் கள்ளோ காவியமோ மட்டும் தொலைந்து போய்விட்டது.
தொலைந்து போய்விட்டதாக அப்பாவிடம் சொல்லிச் சமாளித்துவிட்டான். ஆனந்தி வாங்கிச் சென்றவள் திருப்பிக் கொடுப்பதற்குள் காதல் முறிந்து அவளிடம் அதை வாங்காமல் கோபத்தில் விட்டுவிட்டான்.
ஆனந்தியோடு இருந்தது மட்டும்தான் புனிதமான காதலோ என்று தோன்றுகிறது.
அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். வேண்டும் என்றே அவன்மீது உரசுவாள்.
‘ச்சே!’ என்று கண்டிப்பான்.
அப்படி கண்டிப்பது அவளுக்குப் பிடிக்காது. இன்னும் அதிகமாக உரசுவாள். அப்போதுகூட அவனுக்குக் கவிதை எழுத வந்ததில்லை. அவள்தான் பேஸ்புக்கில் கவிதைகள் எழுதினாள்.
அவளுக்காகத்தான் அவன் பேஸ்புக் திறந்தான். அதில் அவளுடைய கவிதைகளை மட்டும்தான் படிப்பான்.
அவளுக்குத்தான் அவன் அதிகமான முத்தங்களைக் கொடுத்தான். கொடுத்துக் கொடுத்து முடிந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு முத்தம் கொடுத்தான்.
பயந்தது போலவே ஆகிவிட்டது.
ஒருநாள் முத்தம் முடிந்துவிட்டது.
பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் சுவர் மறைவில் வைத்து நாம் இனி பிரிந்துவிடுவோம் என்று அவள்தான் சொன்னாள்.
கள்ளோ காவியமோ நாவலை வாங்கிச் சென்ற மூன்றாவது நாள்.
அவன் அது பற்றி யாருக்கும் தெரியாமல் நிறையத் திட்டி இருக்கிறான். யாரைத் திட்டினான் என்று தெரியவில்லை. ஆனால் ஆனந்தியைப் பிரிவது உயிரைப் பிரிவது போல் இருந்தது.
எனவேதான் அவசர அவசரமாக காயத்திரியைக் காதலித்தான். அவனால் ஆனந்தியை மறக்க முடியவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஒன்றை மறப்பதாக இருந்தால் இன்னொன்றை நினைத்தால்தான் முடியும் என்று அவனுக்கும் தெரியும்.
ஆனந்தி அவனுக்குத் தந்த முத்தங்களும், அவள் எப்போதும் கொண்டுவரும் சிரிப்பொலிகளும் அடங்கிப் போய்விட்டன.
ஆனந்தியிடம் ஒரு துணிச்சல் இருந்தது. அது எப்படி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அவள் பயந்து பயந்து கொண்டு காதலிக்கவில்லை. எல்லாருக்கும் தெரியும்படியாகக் காதலித்தாள். யார் இருந்தாலும் நேராக ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்வாள். முத்தங்களை மட்டும் ரகசியமாகத் தந்தாள்.
அவளுக்கு அவனை எவ்வளவு பிடிக்கும் என்பதை அந்த முத்தங்களை வைத்துச் சொல்லிவிடலாம். அழுத்தமாக எதையும் மிச்சம் வைக்காமல் சொல்லப்படும் முத்தங்கள். உதடுகளை எடுத்த பிறகும் அந்த முத்தங்கள் வெகுநேரம் அங்கேயேதான் இருக்கும். சில சமயம் ஒரு சில நாள்வரை அந்த முத்தம் மறைவதில்லை.
இப்போதும் இந்தச் செத்துப் போன சும்மா வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட எப்போதோ மறைந்துபோன ஆனந்தியின் முத்தங்கள் ஈரம் காயாமல் சிரிக்கின்றன.
கள்ளோ காவியமோ நாவல் மட்டும் அவன் கையில் கிடைத்தால் கிழித்துக் கிழித்துக் காலில் போட்டுத் துவைத்துக் காலா வாடா!
அதுபோன்ற ஒரு காதல் மிகுந்த வலி தரக்கூடியது. கடவுள் ஒருமுறை ஆனந்தியைப் படைத்துவிட்டு மறுபடியும் ஆனந்தியைப் படைக்காமல் விட்டதற்குக் காரணம் அவரே திகைத்துப் போயிருப்பார்.
ஓ ஆனந்தி!
‘கையப் புடிக்காதீங்க! என்னா கையெல்லாம் புடிக்கறீங்க?’
‘ஏன்?’
‘இதெல்லாம் வேணாம். கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்குவோம்.’
‘கல்யாணமா?’
‘அப்ப என்னைக் கல்யாணம் பண்ண மாட்டீங்களா?’
‘இப்போ உனக்கு என்னா வயசு? அதுக்குள்ள கல்யாணம்?’
‘இப்போ இல்ல. எப்ப இருந்தாலும் அப்பதான் தொடலாம்!’
‘அதுவரைக்கும்?’
‘பேசிக்கிட்டு இருப்போம்.’
‘எவ்ளோ பேசறது? என்ன பேசறது?’
‘பாடத்த பத்தி பேசுங்க. நீ கணக்குல கிங்குன்னு சொல்றாங்க.’
‘அப்போ நீ டியூஷனுக்கு வந்தியா?’
‘சொல்லிக் குடுங்க! தொடாம சொல்லிக் கொடுங்க!’
‘தொடாம எப்படி?’
‘தொடாதீங்க! அப்போ நீங்க என் உடம்பதான் காதலிக்கறீங்களா?’
‘உடம்புன்னா?’
‘எனக்குப் பயமா இருக்கு!’
‘அப்போ கட்டிப் புடிச்சுக்கோ.’
‘வேணாம், கட்டிப் புடிச்சா காச்ச அடிக்கும்!’
‘ராஜேஸ்வரி நில்லு! எங்க ஓடற?’
துக்கம் தொண்டையை அடைப்பது போல் பிரமித்து நின்றது வானம். வெறிச் சோடிக் கிடந்தது. ஒரு செடி கொடி இல்லை. ஒரு ஆறு கடல் இல்லை. பஸ் லாரி இல்லை. சேறு சிலிப்பர் இல்லை. இந்த வானமா மனிதனைப் படைத்திருக்க முடியும்?
மூன்று காதலோடு போதும் என்று தோன்றியது அவனுக்கு. இனி பெண்களைப் பார்த்தால் முகத்தில் எட்டி உதைக்க வேண்டும். அதற்கு கராத்தே பழகுவது என்று முடிவு செய்து கொண்டான்.
எழுந்து சிலிப்பரை மாட்டிக் கொண்டான். அரசாங்கம் கட்டிய குளத்துக்கு மேல் இருந்த பாலத்தில் நடந்தான்.
பாலத்துக்கு அப்பால் சமூக மன்றம் இருக்கிறது. அதில் கராத்தே வகுப்பு உண்டு. முதல் வேலையாக அதில் பதிவது என்று மனதில் தீர்மானம் இட்டுக் கொண்டான்.
அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. அவன் ஒரு தீர்மானம் போட்டுவிட்டால் அதில் மாற்றம் கிடையாது. நினைத்ததை முடித்துவிடுவான்.
சமூக மன்றத்தில் படிகளுக்கு அருகே போஸ்ட்டர் இருந்தது. அதில் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பவனின் உருவம் இருந்தது. எட்டி முகத்தில் உதைக்கலாம். உன்னால் முடியும் என்று நினைத்துக் கொண்டான். இரண்டாவது மாடியில் பதியும்படி இருந்தது.
உள்ளே ‘ஆவூ’ என்று கத்திக் கொண்டிருக்க வாசல் ஓரமாக ஒல்லியாக அழகாக போன ஜென்மத்து ஞாபகங்களைக் கொண்டுவரக் கூடிய சீனப் பெண் நின்று கொண்டிருந்தாள்.
கராத்தே கற்றுக் கொள்ள பதியலாமா என்று கேட்டபோது இவ்ளோ லேட்டாவா என்பது போல் ஒரு புன்னகையை வெளியே சொல்லாமல் மறைக்கப் பார்த்தாள்.
‘இது அக்கிடோ!’ என்றாள்.
அவன் அக்கணமே அக்கிடோவையும் அவளையும் காதலிக்க ஆரம்பித்தபோது இதை நாலாவது காதல் என்று யாராலும் சொல்ல முடியாது. அவன் இதுவரை சீனப் பெண்ணைக் காதலித்ததே இல்லை. ///