இன்றைய தகவல் தொழில்நுட்ப அசுர வேக வளர்ச்சியில் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்களுக்கு இருந்த தனிப்பட்ட பெயரும், புகழும் இல்லாமல் போய்விட்டது அல்லது மிகமிக குறைந்து விட்டது. ஆனால் இத்தகைய அறிவிப்பாளர்கள் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு இணையான புகழோடு இருந்த காலங்கள் உண்டு. அப்படி மிகப் புகழ் பெற்ற அறிவிப்பாளராக இருந்தவர் ராபின் லஸ்டிக். அவர் பிபிசியின் உலக சேவை வானொலியிலும், பின்னர் அதன் தொலைக்காட்சி சானலிலும் பணியாற்றியவர். ஒரு செய்தியாளராக நீண்ட காலம் பணிசெய்த தமது அனுபவங்களை Is Anything Happening? என்று எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் அனுபவப்பகிர்வு, அபூர்வத் தகவல்கள், இளம் செய்தியாளர்களுக்கு வழிகாட்டல் என்று பல்வேறு விதங்களிலும் சிறப்பாக இருக்கிறது. அதோடு செய்தி நிறுவனங்களின் வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம், அவற்றிற்கு இருக்க வேண்டிய அற உணர்வுகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறது. இன்று கேமரா உள்ள கைபேசி வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்கள் என்ற நிலையில், செய்தியாளர் என்றால் யார்? என்று விரிவாக விவாதிக்கவும் செய்கிறது.
படிப்பை முடித்து ராய்ட்டர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர் அவர். ராய்ட்டர் நிறுவனம் பால் ஜுலியஸ் ராய்ட்டர் என்பவரால் 1851இல் ஆரம்பிக்கப்பட்ட செய்தி நிறுவனம். அவர் செய்தி சுமந்து செல்லும் புறாக்களை வைத்து ஜெர்மனியில் செய்தி நிறுவனத்தை நடத்திவிட்டு, பின்னர் லண்டனுக்குக் குடியேறினாராம். அவரது புறாக்கள் பங்குச் சந்தை செய்திகளை எடுத்துக் கொண்டு பெர்லினுக்கும், பாரீசுக்கும் இடையில் பறந்து கொண்டே இருந்தனவாம். அப்போது தந்தி இணைப்பு இல்லை. புறாக்கள் ரயிலை விட வேகமாகப் பறந்தன. புறாக்கள் என்ன வேகமாகப் பறந்தாலும், செய்திகள் மிக மெதுவாகத்தான் வெளியாயின. 1865இல் லிங்கன் சுடப்பட்டு இறந்த செய்தி ஐரோப்பாவிற்கு 12 நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. அதற்கே ராய்ட்டா் அத்தனை சிரமப்பட்டிருக்கிறது என்கிறார் லஸ்டிக். லிங்கன் படுகொலைச் செய்தி முதலில் வாஷிங்டனிலிருந்து நியூயார்க்கிற்கு தந்தியில் அனுப்பப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த செய்தி ஐரோப்பாவிற்கு செய்திக் கப்பல் மூலம் செல்ல வேண்டும். அந்தக் கப்பல் கிளம்பிச் சென்று விட்டது. அடுத்த கப்பல் மறுநாள் மதியம்தான் கிளம்பும். ராய்ட்டர் செய்தியாளர் ஒரு மீன் பிடிப் படகைப் பிடித்து, செய்திக் கப்பலை கடலில் விரட்டிச் சென்று செய்தியைக் கப்பலில் தருகிறார். அங்கிருந்து அது அட்லாண்டிக் கடலைக் கடந்து ஐயர்லாந்து செல்கிறது. ஐயர்லாந்திலிருந்து செய்தி ஐரோப்பா முழுவதற்கும் தந்தியில் செல்கிறது. இதற்கு 12 நாட்கள் !
ராய்ட்டர் நிறுவனம்தான் லஸ்டிக்கை ஒரு நல்ல செய்தியாளராகப் பயிற்றுவிக்கிறது. முதல் ஆளாக தவறான செய்தியைச் சொல்வதை விட, சரியான செய்தியை சற்று தாமதமாகச் சொல்வது நல்லது என்று கற்றுத் தருகிறது. தினத்தந்தியில் வரும் செய்தி அங்கு பணிபுரியும் எளிய தொழிலாளிக்குப் புரிவதாக இருக்க வேண்டும் என்று ஆதித்தனார் சொல்வார் என்பார்களே, அது போலத்தான் ராய்ட்டா் முதலாளியும். என்ன செய்தி எழுதினாலும், அது கான்சாஸ் நகரத்தின் பால்க்காரருக்குப் புரியவேண்டும் என்பாராம் அவர். கான்சாஸ் தான் அமெரிக்காவின் மையத்தில் இருக்கும் நகரம். பின்னாளில் லஸ்டிக் பிபிசியில் சேர்ந்த போது, அங்கு அவர்கள் இந்த செய்தி பியோரியாக்காரருக்குப் புரியுமா? என்பார்களாம். இதுவும் கான்சாஸ் போல் ஒரு சராசரியான மையமான இடம். லஸ்டிக் ராய்ட்டரில் வேலைபார்த்த போது உடன் வேலை பார்த்தவர் பிரடெரிக் ஃபார்சித். பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரானார்.
செய்திகளின் நம்பகத் தன்மை குறித்து ராய்ட்டரில் மிக கவனமாக இருப்பார்கள். ஒருமுறை லஸ்டிக் ஸ்பெயினில் மாணவர் போராட்டத்தில் குதிரைப்படை போலீசார் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியது பற்றி செய்தி அனுப்பினார். தலைமை அலுவலகத்திலிருந்து ஆதாரம் கேட்டார்கள். லஸ்டிக் தான் நேரில் பார்த்ததாக பதில் அனுப்பினார். அன்று செய்தி சொல்லப்பட்ட போது, மாணவர்களை குதிரைப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதை எங்களது செய்தியாளர் ராபின் லஸ்டிக் நேரில் பார்த்தார் என்று குறிப்பிட்டார்கள்.
லஸ்டிக் சார்லஸ், டயானா திருமணம், பின்னாளில் டயானாவின் மரணம், போப்பின் மரணம், புதிய போப் தேர்வு, ஒபாமா பதவியேற்பு என்று எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு நேரலையில் செய்தி சொல்லியிருக்கிறார். 1984இல் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்து பிந்தரன்வாலே உள்ளிட்ட சீக்கியத் தீவிரவாதிகளை ஒழித்த செய்தியை உலகிற்கு அறிவித்தவர் லஸ்டிக்தான். பின்னாளில் இந்திராகாந்தியின் படுகொலை, அதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்கள் மீதான வெறித் தாக்குதல் ஆகியவற்றையும் உலக நாடுகளுக்குத் தெரிவித்தவர் அவர்தான். 1984 முழுவதும் அவர் இந்தியாவில் இருந்திருக்கிறார். லெபனானில், ஈராக்கில் போர்ச் செய்திகள் வழங்கியிருக்கிறார். லெபனானில் கோஷ்டி கோஷ்டியாக மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு கொலைகார கோஷ்டியினர் அனைவரும் ஒரே மாதிரி டீசர்ட் போட்டிருக்கிறார்கள். எதிரில் வருபவன் நண்பனா, எதிரியா என்று பார்க்காமல் கொல், மேலே கடவுள் பிரித்துக் கொள்ளட்டும் என்கிறது அவர்களது டீசர்ட் வாசகம் ! யாசர் அராஃபத், கடாஃபி என்று எத்தனை எத்தனையோ ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். ஆப்ரிக்காவின் மிக உள்ளடங்கிய அடர்காட்டில் ஆப்ரிக்கப் பழங்குடியினம் ஒன்றின் தலைவரை அவர் நேர்காணல் செய்த போது இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்களாம். ஒருவர் காயப்போ என்ற அவர்களது ஆப்ரிக்க மொழியிலிருந்து போர்த்துக்கீசிய மொழிக்கு மொழிபெயர்த்துச் சொல்வார். அடுத்தவர் போர்த்துக்கீசிய மொழியில் சொன்னதை ஆங்கிலத்தில் லஸ்டிக்கிற்கு மொழிபெயர்த்துச் சொல்வார். இப்படியே ஒரு முழு நேர்காணலை நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரானாலும் சரி, ஆப்பிரிக்க பழங்குடியினத் தலைவரானாலும் சரி, எல்லா தலைவர்களிடமும், நான் யார் என்பதை மறந்துவிடாதே.. தேவையில்லாமல் என்னை உரசாதே என்ற மறைமுகமான எச்சரிக்கை ஒன்று அவர்களது புன்னகைக்குப் பின்னால், மிகக் கனிவான தலைவர் என்ற பாவனைக்குப் பின்னால் இருக்கும் என்கிறார் லஸ்டிக். பதிலுக்கு லஸ்டிக்கும் நான் உலகின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பிபிசியின் செய்தியாளன். நீ என் அரங்கில் இருக்கும் போது, நீ யாராக இருந்தாலும் சரி நான் கேட்பதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்ற செய்தியாளனின் அறத் துணிச்சலுடன்தான் அவர்களை எதிர்கொள்வார். ஆனால், உலக நாடுகளின் அதிபர்களை நேர்காணல் செய்வதை விட எழுத்தாளர்களை, கலைஞர்களை நேர்காணல் செய்வதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் லஸ்டிக். ஒருமுறை நைஜீரிய எழுத்தாளர் சிமமண்டா நிகோசி அடிசியை நேர்காணல் செய்தபோது, ‘நாம் இருவரும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அதைப் பற்றி எழுதினால், நீங்கள் எழுதியதும், நான் எழுதியதும் எவ்வகையில் மாறுபட்டிருக்கும்?‘ என்று லஸ்டிக் கேட்டார். அப்போது அடிசி, ‘நீங்கள் எழுதியதன் மூலம் மக்கள் செய்தியை மட்டும் அறிவார்கள். நான் எழுதியதைப் படிக்கும் போது, உணர்ச்சிவசப் படுவார்கள்,‘ என்றாராம்.
நேரலையின் சிரமங்கள் பற்றி நிறைய வேடிக்கையாகச் சொல்கிறார் லஸ்டிக். லிங்க் கிடைக்காதது. தாம் நேரலையில் காட்டப் போகும் விஷயம் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் சமாளிப்பது, நேர்காணல் செய்பவரைப் பற்றி அதிகம் ஹோம் ஒர்க் இல்லாமல் செல்வது என்று நிறையவே பிரச்சனைகள். எதுவும் தெரியாத நிலையில், இது எந்த அளவு முக்கியத்துவமானது என்று நினைக்கிறீர்கள்? இப்படி நடந்ததற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா? அடுத்து என்ன நடக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ற மூன்று கேள்விகளை வைத்து நிகழ்ச்சியை ஓட்டுவது நம் தமிழ் சேனல்களில் மட்டுமல்ல, பிபிசியிலும் தான் என்று தெரிகிறது. மற்றொரு முக்கியமான பிரச்சனை இடம், ஆட்களின் பெயர்களை எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் திணறுவது. கூகுள் இல்லாத காலத்தில் அது மிகவும் சிரமம். ஹவாய் தீவின் ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியில் பிபிசி செய்தியாளர் நீல் ஸ்லீட் அந்தப் பெண்ணின் பெயரை சரியாக உச்சரித்ததற்காக உலகமே அவரைப் பாராட்டியதாம். Keihanaikukauakahihulijeakahaunaele என்ற அந்தப் பெயரை எங்கெங்கெல்லாமோ விசாரித்து சரியாக உச்சரித்தாராம் அவர். இத்தனைக்கும் அவரைப் பழிவாங்குவதற்காக செய்தியாசிரியர் அந்தப் பெயர் செய்தியில் இரண்டு முறை வருவதாக செய்தியை எழுதியிருந்தாராம் ! செய்தித் தொகுப்பின் இறுதியில் என்ன சொல்லி முடிப்பது என்பதும் பெரிய பிரச்சனை. நம் ஊர்களில் செய்திக்கு நடுவிலேயே என்ன பேசுவது என்று தெரியாமல், லிங்க் கிடைக்காதது மாதிரி தலையைத் தலையை ஆட்டி செய்தியாளர்கள் சமாளிப்பது வேறு விஷயம். கடைசியில் எப்படி மங்களம் பாடுவது? ஒன்றும் தெரியாவிட்டால், ”இதோ, இந்த மலைகளுக்குப் பின்னால், மாலைச் சூரியன் மறையும் இந்த வேளையில் நான் உங்கள் முன் நிற்கும் போது, என் மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடை இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இனி ஒருபோதும் விஷயங்கள் முன்பு போல் இருக்காது. பிபிசிக்காக உங்கள் லஸ்டிக்” என்று மங்களம் பாடவேண்டியதுதான் என்கிறார்.
செய்தி எழுதுவதும் கடினமான கலை என்கிறார் லஸ்டிக். அவர் செய்தியாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு மணி நேர செய்தித் தொகுப்புகளுக்கு செய்தியாளர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் எழுதித் தரச் சொல்லி வாங்கி வைத்துக் கொள்வாராம். வெள்ளிக் கிழமை இரவு பிளாஸ்க்கில் பிளாக் காப்பியுடன் உட்கார்ந்து, அதிகாலை 4 மணியளவில் எல்லாவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதி முடிப்பாராம். பிபிசியில் terrorist என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றொரு எழுதப்படாத விதி ஒன்று இருந்ததாம். எனவே, செய்தி எழுதும் போது சூழலுக்குத் தகுந்தாற்போல், Killer, attacker, gunmen, bomber, kitnapper என்று வார்த்தைகளைப் போடவேண்டும். செய்தி சேகரிக்கப் போய் தங்கும் இடங்களிலும் இந்த தீவிரவாதிகள் தொல்லை தாங்க முடியாது. ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம் கதைதான். இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான். அயர்லாந்து என்று எங்கு போய்த் தங்கினாலும். ஹோட்டல் மேலாளர் உங்களுக்கு அறை எந்தப் பக்கம் ஒதுக்கலாம்? பீரங்கித் தாக்குதல் பக்கமா? இல்லை கார்குண்டு வெடிக்கும் பக்கமா? என்று கேட்பார்.
இத்தனை ஆபத்துகளைத் தாண்டி லஸ்டிக் பிபிசியில் பணியாற்றியது வீண் போகவில்லை. மூன்றாம் உலக நாடுகளில் எத்தனை எத்தனையோ பேர் பிபிசியில் அவரது ஆங்கிலத்தைக் கேட்டு அதன் மூலம், ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2014இல் ஈராக்கைச் சேர்ந்த செய்தியாளர் கெய்த் அப்துல் அஹமத் என்பவருக்கு சிறந்த செய்தியாளருக்கான ஜார்ஜ் ஆர்வெல் விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, லஸ்டிக் தான் அவருக்கு அந்த விருதை வழங்கினார். ஏற்புரை வழங்கிய அஹமத், நான் யாருடைய ஆங்கிலத்தை பிபிசியில் கேட்டு, ஆங்கிலம் கற்று, செய்தியாளராக ஆனேனோ, அவரது கையாலேயே இந்த விருதை வாங்குவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றாராம். பிபிசியின் உலக சேவை அத்தகையது.
மின்னஞ்சல், ஃபேஸ்புக் என தகவல் தொடர்பில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிபிசி வளர்ந்தது. ஆனாலும், அதன் அடிப்படை நெறிகளைக் கைவிடவில்லை. நீங்களும், நானும் ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். நீங்கள் உங்கள் வலைப்பூவில் அல்லது ஃபேஸ்புக்கில் அது பற்றி எழுதுகிறீர்கள். நான் அது பற்றி பிபிசியில் கூறுகிறேன். அப்படியானால், நாம் இருவருமே செய்தியாளர்கள்தானா? என்றால் இல்லை என்கிறார் லஸ்டிக். ஒரு விஷயத்தை ஒரு படம் எடுத்து அது பற்றி ஒரு பத்தி எழுதுவது செய்தி தரும் நடவடிக்கை ஆகிவிடாது. சேகரித்த தகவலை திரும்பத் திரும்ப சரிபார்த்துவிட்டுத் தருவதுதான் செய்தியாளனின் கடமை என்கிறார் லஸ்டிக். ராய்ட்டரும், பிபிசியும் அவருள் உருவாக்கிய அறநெறி அது.
உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்து விட்டு, அது தொடர்பாக நம் பெயர் செய்தியில் அடிபட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுபவர்கள் ஒரு வகை. மற்றொரு வகையினர் எதுவுமே செய்யாமல், அதே சமயம் தனது பெயர் தினமும் செய்திகளில் பேசப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். துரதிருஷ்டவசமாக, இரண்டாவது வகையினரைப் பற்றிதான் செய்திகள் அதிகமாக சொல்லப்படுகின்றன. ஆனால், அவர்களை விடுத்து, நல்லதைச் செய்து விட்டு, எந்த பெயர், புகழுக்கும் ஆசைப்படாமல் இருப்பவர்கள், அல்லது கெட்டதைச் செய்து விட்டு தன் பெயர் வெளியில் வந்துவிடக் கூடாதே என்று நினைப்பவர்கள் என்ற இருசாரார் பற்றியும் செய்திகளைச் சொல்வதுதான் செய்தியாளனின் கடமை என்கிறார் லஸ்டிக்.
இப்படியான உணர்வோடு பணிபுரியும் செய்தியாளர்களால்தான் உலகில் சிறிதளவேனும் அறஉணர்வுகள் காப்பாற்றப்படுகின்றன என்று தோன்றுகிறது.
செய்தி என்பது என்ன? என்று லஸ்டிக் சொல்வதும் மேம்போக்காகப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தாலும், ஆழ்ந்த சிந்தனைக்குரியது. செய்தி என்பது எங்கோ, யாரோ, ஒருவர், யாரும் இதை வெளியில் சொல்லிவிடக் கூடாதே என்று அஞ்சும் ஒரு விஷயம். மற்றதெல்லாம் விளம்பரம்தான் என்கிறார் லஸ்டிக்.
இப்போது நாம் வாழ்வது விளம்பர யுகத்தில் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலும் !
ஆர்வமுள்ளோர் வாசிக்க – Is Anything Happening? – Robin Lustig.