அரசவையில். அகத்தியர் அழைத்து வந்திருக்கும் இரு சிறுவர்கள் பாட இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு அரசவை கூட்டத்தினால் நிறைந்திருந்தது.
சக்ரவர்த்தி இராமன் சோகமே உருவெடுத்தாற்போல, அரியணையில் அமர்ந்திருந்தான். சிறுவர்கள் அற்புதமாகப் பாடுவதாகச் சொன்னார்கள். ஆனால் இதைக் கேட்க சீதைதான் இங்கு இல்லை! அவளுக்குப் பதிலாக அவளைப் போல் உருவாகியிருந்த சிலை அவையை அலங்கரித்தது. அசுவமேத யாகம் பத்தினியுடன் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்! யாகம் செய்வதற்காகத் திருமணம் செய்து கொண்டு, யாகம் முடிந்ததும் அந்தப் பெண்ணை விலக்கி வைத்துவிடலாமென்று கூட யோசனை சொன்னார்கள் சாத்திரம் தெரிந்ததாகச் சொல்லிக் கொண்ட மூத்தவர்கள். ஏக பத்தினி விரதன் என்று தன்னை அடிக்கடி நினைவுறுத்திக் கொண்ட இராமன் இந்த யோசனையை நிராகரித்து விட்டான்.
யார் இந்தச் சிறுவர்கள்?
குறுமுனி அகத்தியர் அச்சிறுவர்களுடன் அவையில் நுழைந்தார். இராமன் வணங்கினான். அவர் அவனை ஆசீர்வதித்தார். அவரது இருக்கையிலிருந்து எழுந்து சென்று சிறுவர்கள் இராமனை வணங்கினார்கள்.
சிறுவர்கள் முகத்தில் என்ன பொலிவு! என்ன கம்பீரம்! மானுரித் தரித்துத் தவ வேடத்தில் கனலாக ஒளிர்ந்தார்கள்!
அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும், இராமன் புன்னகையுடன் சொன்னான். “குழந்தைகளே! நீங்கள் பாடிக் காட்ட இருக்கும் கதையைக் கேட்க அரசவை ஆவலுடன் காத்திருக்கிறது.”
சிறுவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
‘குழந்தைகளே! ஏன் இந்த மௌனம்? பாடுங்கள்” என்றான்
அமைச்சன் சுமந்திரன். “என் பெயர் லவன். இவன் பெயர் குசன். நாங்கள் தர்ப்பையினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். சக்ரவர்த்திக்குச் சரி நிகர் சமானமாக எங்களுக்கு ஆசனமிடப்பட்டால்தான் எங்களால் பாடமுடியும். தகுதி எங்களுக்கு இல்லை. நாங்கள் பாட இருக்கும் கதையின் தகுதி” என்றான் லவன்.
அவையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள்.
சுமந்திரன் இராமனைப் பார்த்தான். இராமன் தான் திடுக்கிட்டதாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பது அவன் முக பாவனையில் தெரிந்தது. சில கணங்களுக்குப் பிறகு அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. அவர்களுக்கு அவர்கள் கேட்டபடி ஆசனமிடும்படி உத்தரவிட்டான் ராமன். ஆசனம் வந்ததும், லவனும் குசனும் அவையினரை வணங்கிவிட்டு அதில் அமர்ந்தார்கள்.
அவர்கள் பாடத் தொடங்கினர்.
அவையினர் திடுக்கிட்டனர் மறுபடியும். இப்பொழுது இராமன் உள்பட.
அவர்கள் பாடியது இராமனுடைய கதை. யார் இந்தச் சிறுவர்கள்? இருவருடைய குரல்களும் ஒன்றியைந்து
அதன் இனிமையினால் அவையினரைக் கட்டிப் பிணைத்தது. ஆடாமல் அசையாமல் மெய்மறந்து அனைவரும் அவர்கள் பாட்டில் ஆழ்ந்தார்கள். இராவணனை வெற்றி கொண்டு. இராமன் அயோத்தி திரும்பி முடிசூடியதைப் பாடி முடிந்ததும் சிறிது நேரம் மெளனம், ”அருமையாகப் பாடுகிறீர்கள். யார் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்?” என்றான் இராமன் அவர்களிடம் “வால்மீகி முனிவர்” என்றான் லவன்.
“வால்மீகி முனிவரா?” என்று குரலைச் சற்று உயர்த்திக் கேட்டுவிட்டு, திகைப்புடன் எழுந்து நின்றான் இராமன்.
‘அவர்தாம். இச்சிறுவர்களை உன்னிடம் அழைத்துச் செல்லும்படி என்னைப் பணித்தார்” என்றார் அகத்தியர். வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்தினருகே சீதையை விட்டு வரும்படி இலக்குவனிடம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இராமன் நினைவுக்கு வந்தது.
அப்படியானால். இச்சிறுவர்கள் யார்?
அவன் இதயம் கனத்தது.
அவர்கள் இருவரையும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ளவேண்டுமென்று உள்ளம் துடித்தது.
அவனால் முடியாது. அவன் அரசன். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“நாடு, என் குடிமக்கள், அப்புறந்தான் மனைவி” என்று ஒரு தடவை அவன் சீதையிடம் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
“எனக்காகத்தான் இலங்கை மீது போர் தொடுத்து வந்தீர்கள் என்று நினைத்தேன் . இப்பொழுது புரிகிறது” என்றாள் சீதை.
“என்ன புரிகிறது?”
“மனைவியை இன்னொருவனிடம் பறிகொடுத்து விட்டார் நம் அரசர் என்று உங்கள் மக்கள் உங்களைப் பற்றி நினைக்கக் கூடுமே என்ற கவலை. அப்படித்தானே?” என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்தாள் சீதை.
அதுவா உண்மை? இல்லை இல்லை. இல்லவே இல்லை.
எட்டாண்டுகளாக அவளைப் பிரிந்திருக்கும் தன் வேதனையை அவள் புரிந்து கொள்வாளா?
ஆட்சியை பரதனிடம் ஒப்படைத்து வீட்டு இந்தக் குழந்தைகளுடன் வால்மீகி ஆஸ்ரமத்துக்குப் போய்விடலாமா?
அவனால் முடியாது. அவன் அரசன்! மக்கள் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டவன்.
“கதை முடியவில்லை சக்கரவர்த்தி” என்றான் குசன்.
இப்பொழுது அகத்தியர் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்தார். “இதுவரை பாடியது வால்மீகி முனிவர் கற்றுக் கொடுத்தது. எங்கள் அன்னை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது இன்னும் இருக்கிறது” என்றான் லவன்.
“பாடுங்கள்.கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்றான் இராமன்.”இன்னும் இருக்கிறது என்ற செய்தியைத்தான் சொன்னோமே தவிர நாங்கள் பாடப் போவதாகச் சொல்லவில்லை” என்றார்கள் இருவரும் ஒரே சமயத்தில்.
இராமனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அரியணையிலிருந்து வேகமாக இறங்கி ஓடிவந்து இருவரையும் தழுவிக் கொண்டான்.
*என் அருமைக் குழந்தைகளே! உங்கள் அன்னையை, என் மனைவியை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்யப் போகிறேன்” என்றான் இராமன் உணர்ச்சி மேலிட்டு
இருவரும் அவனிடமிருந்து சட்டென்று விலகி நின்றனர். “எங்கள் அன்னை இங்கு வர மாட்டார். சக்ரவர்த்தி. நீங்கள்தான்.அவரைப் போய்ப் பார்க்க வேண்டும்” என்றார்கள் இருவரும். “புறப்படுங்கள். போகலாம்” என்றான் இராமன்.
”நீங்கள் மட்டுமல்ல. உங்கள் பரிவாரங்கள், உங்கள் குடிமக்கள் எல்லோரும். இதுதான் எங்கள் அன்னையின் விருப்பம்.” “இப்பொழுதே பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் சக்ரவர்த்தி” என்றான் அமைச்சன் சுமந்திரன் பணிவாக எழுந்து நின்று. சித்திரக்கூடம் சென்றடைந்ததும் இராமன் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த வால்மீகி முனிவர் அவனையும் அவன் பரிவாரங்களையும் வரவேற்றார்.
பல ஆண்டுகளுக்கு முன் தந்தையின் ஏவலில் காட்டுக்குப் புறப்பட்டு வந்தபோது சீதையுடன் இவ்வருமை இயற்கைக் காட்சிகளை ரசித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த இன்பகரமான சுகாநுபவத்தை மீண்டும் பெறுவது சாத்தியமா?
அவனையும் அவன் பரிவாரங்களையும் கண்டு. வேட்டையாட வந்திருக்கின்றான் என்று நினைத்து மான்கள் அஞ்சி ஓடி ஒளியத் தொடங்கின. ஏற்கனவே. ஒரு மானை வேட்டையாடப் போய் அவன் பட்ட துன்பங்கள் போதும்!
“உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றேன்” என்றான் இராமன் வால்மீகியிடம்.
அவர் பதில் சொல்லவில்லை. புன்னகை பூத்தார். ”என் மகன்கள் பட்டாபிஷேகம் வரைதான் கதையைச் சொன்னார்கள். மேலும் கதை தொடர்கிறது என்றார்கள். கேட்க வந்திருக்கிறோம்” என்றான் இராமன்.
அப்பொழுது சீதை ஆஸ்ரமத்திலிருந்து வெளியே வந்தாள், எட்டாண்டு வன வாழ்க்கை அழகுக்கு அழகு கூட்டியிருந்தது.
அவளை நேருக்கு நேர் பார்க்க அஞ்சினான் இராமன். தன்னிச்சையாக அவன் தலை குனிந்தது. அவர்கள் ஆஸ்ரமத்துக்கு வந்தடைந்ததுமே ஆஸ்ரமத்துக்குள் ஓடிய லவ குசர்கள், இப்பொழுது தாயின் அருகில் அவளை அணைத்துக் கொண்டு நின்றார்கள்.
இராமன் தான் அந்நியப்பட்டு நிற்பதை உணர்ந்தான்.
“உன்னையும், நம் மக்கட் செல்வங்களையும் அழைத்துப் போக வந்திருக்கின்றேன். இதுதான் மீதிக் கதை” என்றான் இராமன். “உங்கள் மக்கள் செல்வங்கள் அதோ உங்களுடன் நிற்கிறார்கள். இவர்களிருவரும் என் மக்கள். இதுதான் மீதிக் கதை” என்றாள் சீதை புன்முறுவலுடன்.
இராமன் பதில் சொல்ல இயலாமல் மெளனமாக நின்றான்,
“தான் இதுவரை உங்களுடன் வழக்காடியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடன் காட்டுக்கு வருவேன் என்று பிடிவாதம் பிடித்ததைத் தவிர. இப்பொழுது கொஞ்சம் பேசலாமா?” என்றாள் சீதை. இராமனின் மௌனம் தொடர்ந்தது.
முதலில் ஒரு கேள்வி. எட்டாண்டுகளுக்கு முன் வண்ணான் சந்தேகத்துக்கு மதிப்பளித்து என்னைக் காட்டுக்கு அனுப்பினீர்களா அல்லது உங்கள் அடிமனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவா?” என்றாள் சீதை.
“என்ன சொல்கிறாய். தேவி? என்னைப் பற்றி இதுதான் உன் அபிப்பிராயமா?”
“நான் நம் தந்தவனத்தில் அசோகவனம் மாதிரி ஒன்றை உருவாக்க வேண்டுமென்று சொன்ன போது நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள். நினைவிருக்கிறதா?”
“வேதனையை நினைவூட்டவா என்றேன்.”
“இதைப் பிறகு சொன்னீர்கள். முதலில் சொன்னது. ‘அசோகவன வாழ்க்கை உனக்குப் பிடித்திருந்ததா?’ என்றுதான். இக்கேள்வி எனக்கு அப்பொழுது அதிர்ச்சி ஊட்டியது. இந்தக் கேள்வியின் அரிப்பினால்தான். இராவணனை வெற்றி கொண்டதும், என்னைத் தீக்குளிக்கச் சொன்னீர்கள். உங்கள் குடி மக்கள் அங்கு யாருமில்லை, என்னைப் பற்றி அவர்கள் சந்தேகப் பட்டிருக்கக் கூடும் என்பதற்கு. அக்னிப் பிரவேசம் செய்தும் உங்கள் அடிமன ஐயம் உங்களை விட்டு அகலவில்லை.. சுருவுற்றிருந்த என்னைக் காட்டுக்கு அனுப்பி விட்டீர்கள். யாரோவொரு துணி வெளுக்கிறவன் சொன்னதைக் காரணமாகக் கொண்டு.”
இராமன் இதை எதிர்பார்க்கவில்லை. திகைப்புடன் சீதையையே பார்த்துக் கொண்டு நின்றான். “சந்தேகப்படும் உரிமை ஆண்களுக்குத்தாம் உண்டா? பெண்களுக்குக் கிடையாதா? அன்று காட்டில் சூர்ப்பனகை அழகிய பெண்ணாக உருக் கொண்டு உங்களை மயக்க வந்த போது. அவனை ஏன் உங்கள் தம்பியிடம் அனுப்பி வைத்து விட்டீர்கள்? கிண்டலா அல்லது உங்களைக் கண்டு உங்களுக்கே பயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நான் சந்தேகப்பட்டிருக்கலாம் அல்லவா? ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. காரணம், உங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை. அப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு என்மீது இருந்தது என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா சக்ரவர்த்தி? இதுதான் என் கேள்வி. மீதிக் கதை” என்று சொல்லிவிட்டு ஆஸ்ரமத்துக்குள் வேகமாகப் போய்விட்டாள் சீதை.
திடுக்கிட்ட இராமன் அவளைத் தொடர்ந்து ஆஸ்ரமத்துக்குள் செல்ல முயன்ற போது வால்மீகி அவனைத் தடுத்தார். “இக்கேள்வியைக் கேட்கத்தான் அவள் இதுவரைக் காத்திருந்தாள். அவளை நீ இனிமேல் பார்க்க முடியாது. லவனும், குசனும் இனி உன் பொறுப்பு” என்றார் வால்மீகி.
(அகத்தியர் அழைத்து வரும் சிறுவர்கள் இராம கதையைப் பாடி இராமன் கேட்டான் என்று குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் வருகிறது.)