இமையம் திராவிடக் கருத்தியலினால் ஈர்க்கப்பட்டவர்…திராவிட அரசியலில் பங்கு கொண்டிருப்பவர்.. இக்கருத்தியலின் பெரும்பான்மையான அம்சங்கள் அவரது ஆளுமையோடு இரண்டறக் கலந்திருக்கின்றன..எனினும் இவரது எழுத்துக்கள் காட்டும் அழகியல் அதற்குரிய தனி இலக்கணத்தோடு தான் அமைந்து நிற்கிறது. எந்தக் கருத்தியலினுடைய பரப்புரையாகவும் அதைக் கருத முடியாது. அவரது கதைகளின் காண்மறை அம்சங்கள் (உட்பொருளாக அமைந்திருப்பவை) மற்றும் அவரது காண்பாடு (கதைகள் தரும் ஒட்டு மொத்த அனுபவம்) என்பவை அவரது மனசாட்சியின் எதிரொலிகள். அழகியலின் பின்புலத்தோடு அவர் எடுத்துக்காட்டும் திராவிட வாழ்வு ஒரு புதிய மெய்யியலை முன் வைக்கிறது. அழகியல் வழிவரும் இந்த மெய்யியல், திராவிடக் கருத்தியலின் நீட்சியாக வரும் இந்த மெய்யியல் இமையம் மூலமாகவே உருக்கொள்கிறது.. இமையம் இதை உருவாக்குவதற்கு அவரது அவரது பெண் கதை மாந்தர்களே அவருக்கு உதவுகிறார்கள்…
’கோவேறு கழுதை’ நாவலில் வரும் ஆரோக்கியம் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவள்.. தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த அவளது வாழ்க்கை வெளியார் பார்வையில் மிகவும் கேவலமானது தான். அருவருக்கத் தக்கது தான். பெருமை என்று சொல்லக்கூடிய எந்த அம்சங்களும் இல்லாதது தான். ஆனால் அவளுக்குக் குறைகள் இல்லை.. மனிதரின் மேன்மையில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. . எப்போதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சமூகத்தின் பாகமாக இருந்து எவ்வாறோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்த ஒரு பிரிவின் பிரதிநிதியான அவள் அந்தச் சமூகம் அவளையும், அவளது குடும்பத்தையும் கை விட்டு விட்ட பிறகும், தனது கணவனின் மரணத்திற்குப் பிறகும், பிரியப்பட்டு வளர்த்த தனது மக்கள் எல்லோரும் தன்னை விட்டு அகன்று சென்று விட்ட பிறகும், தனது செல்ல மகள் கைம்பெண்ணான காட்சியைப் பார்க்க வேண்டிய தீயூழ் சூழ்நிலை வந்த பிறகும் அவளுக்கு வாழ்க்கையின் மீதிருந்த ஒட்டுதல் நீங்கவில்லை.. ‘அந்தோணியாருக்குக் கண் கிடையாது’… அந்தோணியார் செத்துப் பொணமாயிட்டாரு…’ என்று தான் சொல்ல முடிந்ததே தவிர அந்த ஊரை விட்டுப் போக வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. வலிகள் மிகுந்த வாழ்க்கையையும், சிறுமை கொண்ட மனிதர்களையும் ஒரு பொருட்டாகப் பார்க்காமல் எல்லாம் மறைந்த பிறகும் எங்கோ தொங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் மேய்மையைக் கொண்டாடும் மெய்யியல் ஆரோக்கியத்தினுடையது. இதைத் திராவிட மெய்யியல் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
‘எங்கதெ’ நாவலில் வரும் கமலா இளம் விதவையான பின்னே தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஒரு பள்ளியில் குமாஸ்தாவாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும்போது அவள் மீது மையல் கொண்ட ஒரு வாலிபன் அவளோரு பத்து வருடங்கள் தொடர்பிலிருக்கிறான். எல்லாப் பொருளிலும் அவர்கள் இல்லறமே நடத்துகிறார்கள். ஆனால் அந்த வாலிபன் அவளுக்குத் தாலி கட்டி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. காதலுக்கும், காமத்திற்குமிடையிலான அவனது மையல் அவனுக்கு வசதியாக இருக்கிறதே தவிர கமலாவுக்கு இம்சையாக இருக்கிறது. நாவல் முழுவதும் அவன் கமலா மீது கொண்ட மையல் தான் விவரமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கமலாவுக்கு இப்படிப்பட்ட எந்த மையலும் இல்லை. அவள் வாழ்க்கையை நேருக்கு நேராகச் சந்திக்கக் கூடியவள்.. அதே சமயம் மனிதர்களும், வாழ்க்கையும் இயல்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவள்.
’பூகம்பம், சுனாமி, நிலநடுக்கத்திலே மாட்டிக்கிட்டாலும்’ ‘வர்றப்போ பாத்துக்கலாம்… அதுக்காக இப்பியே ஏன் கவலப்பட்டு சாவணும்?’
என்று கேட்கக்கூடியவள். அப்படிப்பட்டவளைத்தான் இந்த வாலிபன் தான் ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக முழுமையாக ’பெண்டாள’ நினைக்கிறான். எது அவனை இவ்வாறு சிந்திக்க வைத்தது? தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவன் நினைப்பதற்குப் பின்னால் இருக்கக் கூடிய குப்பைக் கிடங்குகள் எவை? எதுவாக இருப்பினும் அதற்கான கமலாவின் பதில் நேரடியாகவே இருக்கிறது.
‘ஒன் பணத்த புடுங்கிட்டனா? ஒன் சொத்த எழுதி வாங்கிட்டனா? என்னா ஏமாந்திட்ட? மீறியும் ஏமாந்திட்டன்னு சொன்னின்னா வா…வந்து எனக்குத் தாலியக்கட்டு.. புருசனா இரு… சம்பாரிச்சுப்போடு… நாளயிலிருந்து நான் வேலக்கிப்போவல…நானும் ஒனக்கு வப்பாட்டிங்கற பேரோட சாவ விரும்பல..’என்கிற அவளது எதிர்வினைக்கு அந்த வாலிபனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. வேறு வழி தெரியாததால் அவள் நன்றாக இருக்கட்டும் எனச்சொல்லி விட்டு அவளிடமிருந்து விலகிக்கொள்கிறான். கமலாவின் மெய்யியல் மிகவும் எளிமையானது. பெண்களுக்கு மட்டுமே உரியது.. ஆனால் அந்த மெய்யியலைப் புரிந்து கொள்வது கடினம். அவளை நெருங்கிய அந்த இளைஞனுக்கு அது நிச்சயமாகப் புரியாது. அதுதான் அவனுக்குத் தெரிந்த மெய்யியல். எந்த விதத்திலும் தனது வாழ்வோடு ஒட்டிப்போகாத மெய்யியல். கமலா ஒரு மெய்யியலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதை வாழ்ந்தும் காட்டுகிறாள். அக்கமகாதேவியும், காரைக்காலம்மையாரும் இப்படித்தான் உயிருள்ள ஒரு மெய்யியலைக் காண்பித்திருந்தார்கள்.
திருமணமான சில வருடங்களிலேயே கணவனை இழந்த தனபாக்கியத்தின் வாழ்க்கை தறிகெட்டுப் போனதைப் பேசும் ‘ஆறுமுகம்’ நாவல் அவளின் தன்னம்பிக்கையையும், இயலாமையையும் ஒருசேரப் பேசுகிறது…‘தம்பி… நான் கெச்சம் கெட்டுப்போயித்தான் உசுர வச்சிட்டு கெடக்கறன்… ஆனா, நான் நொளப்பறச்சி இல்ல.. சனங்க தான் நொள.. காத்து தள்ளிட்டுப்போற தூசா இருந்துட்டன்… ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்னும் தேர் வடச்சங்கிலியாட்டம் பெணஞ்சிப் பெணஞ்சி கெடந்துருச்சி..ஒதுங்கவும் முடியல.. கத்திரிச்சிக்கவும் முடியல.. நான் எண்ணப்பண்ணுவன்… ரத்தம் சூடாயிப்போனன்?’
இதுவும் ஒரு மெய்யியல் தான்… ஆனால் இதில் ஒரு ஆற்றாமை இருக்கிறது. கையறுநிலைத்தனம் இருக்கிறது..தனபாக்கியத்தின் மெய்யியலையும், கமலாவின் மெய்யியலையும் உருவாக்கித் தருவது சமூகம் தான்.. இருவரையும் உருமாற்றம் செய்வது சமூகம் தான்.. உருமாற்றத்தில் கரையாமலிருப்பது கமலா.. கரைந்து போவது தனபாக்கியம்.
வரலாறும் மனசாட்சியும்
ஒரு சமூகத்தின் வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் மட்டுமே அச்சமூகத்தின் மனசாட்சியாக இருக்க முடியும்.. இங்கு வரலாறு என்பது அச்சமூகத்தின் எல்லா அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்கிறது..அரசியல், சமூகம், பண்பாடு என்பவை அதில் முக்கிய அம்சங்கள்.. இந்த அம்சங்கள் அழகியல் நோக்கில் பார்க்கப்படுகின்றன. இதற்கு மூலமாக இருப்பது மொழி. ஒரு மண்டலத்தின் மொழி. இந்த மொழி. ஒரு பண்பாட்டின் ஆன்மாவாக இருக்கிறது.. தொண்டை மண்டல நடுநாட்டின் மொழியை இமையம் அளவுக்குக் கையாண்டவர் யாருமில்லை. இது மேல் நோட்டத்தில் வேளாண் சமூக மொழியாகவும், நடுத்தர மக்கள் மொழியாகவும், தலித் மொழியாகவும் இருந்தாலும் கூர்ந்த நோக்கில் சிக்கலின் மொழியாகவும், சமரசத்தின் மொழியாகவும், வலியின் மொழியாகவும் இருக்கிறது. இந்த மொழியைக் கையாண்டு தமிழ்ச் சமூகத்தின் அமைப்பையும், வரலாற்றையும் பார்க்கிறார் இமையம்
• படிநிலைத்தான, அதர்ம வழிப்பட்ட சாதீய அமைப்பில் மனித அறத்தை உயர்த்திப்பிடிப்பவள் பெண்ணாகவே இருக்கிறாள் (கோவேறு கழுதைகள்-1994)
• தன்மான உணர்வு மழுங்கிப்போகிற நிலைக்குத் தள்ளப்பட்டு பாலியல் தொழிலில் வீழும் பெண்கள் வாழும் சூழல் அதற்கென சில இயங்குமுறைகளை உருவாக்கிக் கொள்கிறது. பிரியம், கேவலம் என்பதற்கு அங்கே கொள்ளப்படும் பொருட்கள் வேறுபட்டவை. (ஆறுமுகம்-1999)
• உழவுத்தொழில் நசித்துப்போய் நிலம் மனிதனுக்குப் பாரமாய் மாறியிருக்கிறது. (மண்பாரம்-2004)
• பொட்டுக்கட்டி விடுதல் என்னும் மரபில் சிக்கிய ஒரு பெண் சமூகத்தால் இழிநிலைப்படுத்தப்பட்ட போதும் மனித மாண்புகளைக் கை விடாதிருக்கிறாள் (செடல்-2006)
• எல்லோருக்கும் பொதுவான சாமி, எல்லாரையும் காக்கிற சாமி சில தெருவுகளில் மட்டும் போகாமலிருக்கிறது (வீடியோ மாரியம்மன் – 2008)
• காணொலி ஊடகம் தமிழ்ச்சமூகத்தின் அடியாழம் வரை ஊடுருவி அதன் வாழ்வியலையே மாற்றுகிறது (மணலூரின் கதை-2013)
• அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காவியம் இருக்கிறது.. காவியத்தைப் படிக்கத்தான் யாருக்கும் நேரமில்லை (அவரவர் பாடு – 2013)
• சபரிமலைக்குப் போதல் என்னும் ஆன்மீக நிகழ்வு பல குடும்பங்களில் பொருளாதார நெருக்கடியையும், உளவியல் நெருக்கடியையும் உண்டாக்குகிறது. இது ஒரு புதிய இறையியல். (பழம்புளி வீட்டுக்கதை – 2013)
• விடலைப்பையன் செல்வத்தை விதவைப்பெண் கோகிலா ’சேர்த்து’க்கொண்டாள். செல்வம் கோகிலாவின் மகளையும் ‘சேர்த்துக் கொண்டான்.. இப்போது இன்னொரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான். இப்போது கோகிலா கொலைச்சேவல் விட்டு அவனைத் தண்டிக்கப் போகிறாள். பிரார்த்தனை ஒன்று தான். அதற்கான காரணங்கள் தான் வேறானவை. இதுவும் ஒரு இறையியல். (கொலைச்சேவல் – 2013)
• தாழ்ந்த சாதிக்காரனுடன் ஓடிப்போகும் பெண்ணாக இருந்தாலும் தாய் அவளுக்கு உதவி செய்வதையே விரும்புவாள். அந்தக்குடும்பம் ஓடிப்போன பெண்ணுக்கு கருமாதி செய்து சாவுச்சோறும் சாப்பிட்டு விட்டது. தாயும் தான் சாப்பிட்டாள். (சாவு சோறு – 2014)
• இறையியல் என்பது சமூகத்துக்குச் சமூகம் வேறுபடுகிறது.. திராவிடச் சமூகத்திற்கும் ஒரு இறையியல் இருக்கிறது. திருடப்போவதற்கு ஆண்டவனின் அருளையும், ஆசீர்வாதத்தையும் வேண்டுவது கூட இறையியலின் ஒரு பாகம் தான்…. (ஆகாசத்தின் உத்தரவு-2014).
• அரசாங்கப்பள்ளிக்கூடங்களில் மாணவர் ஒழுக்கம் தாறுமாறாகிப் போயிருக்கிறது. அதை வரைமுறைப் படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பெற்றோரே உதவுவதில்லை..(அரசாங்கப்பள்ளிக்கூடம் – 2014)
• காதல் உணர்வு ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. சொல்லப்போனால் காதல் என்பது ஒரு உணர்வே இல்லை.. நடைமுறை வாழ்க்கை சிதிலமாகும் போது காதல் கந்தலாகி விடும். இருப்பினும் காதலுக்கென்று ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு இடம் இருக்கிறது (ராணியின் காதல்- 2014)
• சகோதரன் முறையுள்ள ஒரு பையனோடு பெண் ஓடிப்போய் விட்டாள். அவன் ஒரு தாழ்ந்த சாதிக்காரனோடு ஓடிப்போயிருந்தால் கூடப் பரவாயில்லையே என்று தாய் நினைக்கிறாள். இது ’தாழ்ந்த சாதி’ க்குக் கொடுக்கப் படும் ‘மரியாதை’ (வரம்-2014)
• நெடுஞ்சாலைகள் உருவாகிற போதே விழுமிய மாற்றங்களும் நிகழ்கின்றன. அதற்காக நெடுஞ்சாலைகளைத் தவிர்க்க முடியுமா? (நறுமணம்- 2016)
• ‘காலம் மாறிட்டா சாதியும் மாறிடுமா?’ என்ற கேள்விகள் கேட்கப்படும் சூழலில் கூட சந்திரவதனமும், கலியம்மாளும் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நேசம் தனிமனிதர்களுக்கிடையிலே தான் இருக்கும். சமூகங்களுக்கிடையில் இருக்க முடியாது (ஈசனருள்- 2016)
• உள்ளூர்ச் சொந்தக்காரன் தொடர்ந்து கொடுத்த வந்த பாலியல் தாக்குதலால் தனது ஒழுக்கக்கோட்டைத் தாண்டுகிறாள் துபாய்க்காரன் பொண்டாட்டி.. அவளது மனசாட்சி கேட்கும் கேள்விகள் முற்றிலும் அறத்தின்பால் பட்டவையாக இருக்கின்றன.. இளகிய மனசும், ஒழுக்கக்கோட்பாடுகளும் ஒத்துப்போவதில்லை.. செத்துப்போவதைத் தான் பத்மாவதி தீர்வாகக் கண்டாள் (துபாய்க்காரன் பொண்டாட்டி -2016)
• சொந்த ஊரில் நமக்கு வீடு என்ற ஒன்று இருக்க வேண்டும் என்று ஆண் நினைக்கலாம்.. பெண்ணுக்கு ஏது வீடு? அது சரி.. எந்த வீடு சொந்த வீடு? ’வீடு’ கிடைப்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர வீடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய? (மணியார் வீடு – 2016)
• தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் பிணத்தை உயர்சாதிப் போலீஸ்காரன் தூக்க மாட்டான் (போலீஸ் – 2019)
• மோகத்தையும் பிரியத்தையும் மாற்றும் வல்லமை காலத்திற்குக் கூட இல்லை (பணியாரக்காரம்மா – 2019)
• ஒரே சாதியாக இருந்தால் கட்சிக்காரனே கட்சிக்காரனைத் தோற்கடிப்பான் (நம்பாளு- 2019)
• சமூகத்தில் மதிப்பு மிகுந்தவராகக் கருதப்படும் பள்ளி ஆசிரியர் தனது சகோதரியின் சுதந்திரத்தை மதிப்பதில்லை..கவுரவமும், அந்தஸ்தும் அவருக்கு முக்கியம்.. அதே சமயம் அவருடைய மாணவன் தன் அம்மாவுக்கும், அவளது வேறு கணவர்களுக்கும் பிறந்தவர்களைக் கூட தனது ரத்த சொந்தங்களாகப் பார்த்து அவர்களுக்கு உதவ நினைக்கிறான். இதில் யார் விஷப்பூச்சி? (விஷப்பூச்சி- 2022)
இது தான் இமையம் காட்டும் சமுதாயம். அவரும் நாமும் வாழும் திராவிடச் சமுதாயம். திராவிடச் சமூகத்தினரை மட்டும் உட்கொண்டது தானா இந்த நிலவியல்? இமையம் படைத்திருக்கும் கதை மாந்தர்கள் எல்லோருமே திராவிடச் சமூகத்தின் அங்கங்கள் தானா? இந்தத் திராவிடச் சமூகத்திற்கென்று ஒரு கருத்தியல் இருக்கிறதா? அப்படி இருக்குமானால் அந்தத் திராவிடக் கருத்தியல் ஆரோக்கியமான ஒன்றா? அப்படி ஆரோக்கியமாக இருக்குமானால் இக்கதை மாந்தர்கள் ஏன் இப்படி நொம்பலப் படுகிறார்கள்? வேறு சமூக மாந்தர்கள் இத்தகைய நொம்பலங்களை அனுபவிப்பதில்லையா? ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் படைத்த கதை மாந்தர்களும் கிட்டத்தட்ட இதே மாதிரியான துன்பங்களை அனுபவித்தார்கள் தானே? அவர்களுக்கும், இமையத்திற்கும் என்ன வேறுபாடு..?
புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும் காட்டிய கதை மாந்தர்களுக்கு தனிப்பட்ட சமூக அடையாளங்கள் இல்லை. கந்தசாமிப்பிள்ளைக்கும், கடவுளுக்குமிடையிலான உறவு தத்துவார்த்த அடிப்படையிலானது. அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஒரு சமூக மெய்யியலைத் தேடிப்போவதற்கான அக்கறையும், ஆர்வமும் புதுமைப்பித்தனிடம் இல்லை. ஜெயகாந்தனின் காண்பாடு நகர்மயமாகி வருதலுக்குட்பட்ட தமிழ்ச்சமூகத்தின் காண்பாடு. தங்கள் காலப்பிரதிபலிப்பாக ஒரு புதிய தமிழனின் பிம்பத்தை அவர்கள் காண்பித்தார்கள். இருவருக்குமே காண்பாடுகள் உண்டு.
இமையத்தின் கதைக் கட்டுமானம் அவர்களிடமிருந்து வேறுபட்டது. இந்தக் கட்டுமானத்தில் ஒரு மொழி இருக்கிறது. ஒரு காண்பாடும் இருக்கிறது. இவரது மொழி எந்த வகையிலும் பொதுமைப் படுத்தப்பட்ட, ‘நாகரீக’ மொழியாக இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவின் வாழ்வைக் காண்பிக்கிற, தனித்த அடையாளம் கொண்டிருக்கிற ஒரு மொழியாக இருக்கிறது. இவர் காட்டும் மனித நெருக்கடிகள் வெறும் விவரணைகளாக இல்லாமல் ஏதாவது ஒரு கருத்தியலை கேள்விக்குட்படுத்துகிற, அது குறித்த ஒரு நீண்ட விவாதத்தைத் துவக்கி வைப்பவையாக இருக்கின்றன. அவற்றின் போக்கில் மறைகாண் அம்சங்களை உட்கொண்ட அழகியல் அனுபவத்தைத் தரக்கூடியவையாக இருக்கின்றன. இவையெல்லாமும் பாசாங்கித் தனத்திலிருந்தும், போலிமையிலிருந்தும் விலகி நிற்பவையாக ஏதோ ஒரு மெய்ப்பொருளைக் காண முயற்சிப்பவையாக இருக்கின்றன. இந்த மெய்ப்பொருள் ஒரு மெய்யியலை உருவாக்கும். அந்த மெய்யியலின் சாதக, பாதக அம்சங்களை காலம் தான் அடையாளப்படுத்தும். தன் மனசாட்சி எழுதத் தூண்டியதை அந்த மெய்யியல் உருவாக்கத்திற்கு இமையம் பயன்படுத்தியிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இமையம் தமிழ் சமூகத்தின் மனசாட்சியாகக் கருதப்படத் தகுதியுடையவராகிறார்..
( பழனி.கிருஷ்ணசாமி என்னும் இயற்பெயர் கொண்ட ப.சகதேவன் புனைகதையாசிரியரும், மொழிபெயர்ப்பாளருமாவார்.
மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.)