கோடியாரி, இந்திய நேபாள எல்லையிலுள்ள நக்சல்பாரி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம். இந்தக் கிராமத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வங்காளத்தைக் கைப்பற்றும் தனது ஆப்ரேஷன் லோட்டஸை (தாமரை நடவடிக்கையை) தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக கோடியாரி கிராமத்துக்கு வந்து ராஜு மஹாலி அவர் மனைவி கீதா மஹாலி என்ற தலித் தம்பதியினரின் வீட்டில் உணவருந்தி தாமரை நடவடிக்கையைத் தொடங்கி வைத்தார். நக்சல்பாரி பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் கம்யூனிசத்தின் மீதான இறுதி வெற்றியைத் தாங்கள் நிலைநாட்டப் போவதாகவும், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரிகளை அடியோடு ஒழித்துக் கட்டப்போவதாகவும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் கோடியாரியில் அறிவித்தனர். வங்காளத்தைக் காவிமயமாக்கும் திட்டத்தை நக்சல்பாரியில் தொடங்க அமித் ஷா விரும்பினார் என்றார் ஒரு பிஜேபி தலைவர்.
ஷாந்தி முண்டா ஒரு பழங்குடியினப் பெண். நக்சல்பாரி எழுச்சியை அடுத்து பெரும் போலீஸ் படைகள் நக்சல்பாரியைத் தாக்கிய போது விவசாயிகள் படையின் முன்னணியில் நின்று அம்புகளால் பல போலீசாரைக் கொன்றவர். இன்று அந்தப் பகுதியில் உயிருடனிருக்கும் ஒரே நக்ஸலைட் தலைவரும் அவர்தான். அவரது வீரம் காவியத் தன்மை வாய்ந்தது என்று அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது அவர் சிபிஐ எம்.எல்.லிபரேஷன் அமைப்பில் இருக்கிறார். தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. சிபிஎம், உள்ளிட்ட பல இடதுசாரி கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தன. அங்கு வலிமையாக உள்ள லிபரேஷன், ரெட் ஸ்டார், ஜனசக்தி ஆகிய எம்.எல். கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மறைமுகமாக அறிவுறுத்தின. என்ன விலை செலுத்தியாவது பிஜேபியைத் தோற்கடிப்பதே மேற்கு வங்கம் முழுவதிலிமிருந்த இடதுசாரிகளின் ஒரே நோக்கமாகயிருந்தது.
ஷாந்தி முண்டா வெகுண்டெழுந்து ‘‘என் வாழ்நாளில் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேரும் நிலையைப் பார்க்க வேண்டி வரும் என்று நினைத்தே பார்த்ததில்லை’’ என்றார். ‘‘வர்க்க விரோதிகளின் கட்சி அது. அதனோடு கூட்டு சேரும் நிலைமை வந்ததற்கு மார்க்சிஸ்ட் கட்சி மீது பரிதாபப்படுகிறேன். நான் எப்படி காங்கிரஸை ஆதரிக்க முடியும்? வாய்ப்பே இல்லை.” தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ் ஆதரித்து வந்த நிலப்பிரபுக்களையும், அவர்களின் அடியாள் படைகளையும் எதிர்த்துப் போராடி வந்த நக்ஸல்பாரிக் கட்சிகளின் ஊழியர்கள் நீண்ட வரிசைகளில் நின்று நோடாவுக்கு வாக்களித்தனர். “தலைமை என்ன சொன்னாலும் சரி. காங்கிரசுக்கோ, திரிணாமூல் காங்கிரஸுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று நக்சல்பாரி டிவிஷன் தோழர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார். அந்தப் பகுதி சிபிஐ எம்.எல்.ஜனசக்தி என்ற நக்சல்பாரி கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்.
ஒவ்வொரு தெருவிலும் காங்கிரஸ் அடியாள் படைகளுடன் நடந்த போராட்டங்களின் குருதி படிந்த நக்சல்பாரி பகுதி தோழர்களால் ஒருபோதும் எந்த வடிவத்திலும் காங்கிரஸையோ, திருணாமூல் காங்கிரஸையோ ஆதரிக்க முடியாது என்பதை மார்க்சிய லெனினிய கட்சிகளின் தலைமைகள் உணரவில்லை என்பதையே காங்கிரஸை ஆதரிக்கும் இந்த முடிவு காட்டுகிறது என்கிறார் நாதுராம் பிஸ்வாஸ் என்ற எம்.எல். ஊழியர். நக்சல்பாரி உட்பட சில்குரி டிவிஷன் முழுவதையும் பிஜேபி கைப்பற்றி அனைத்து வீடுகளிலும் கட்டடங்களிலும் காவிக்கொடி ஏற்றியது.
1960களின் தொடக்கத்தில் இந்தியா படுமோசமான நிலையிலிருந்தது. அரசால் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க முடியவில்லை. பஞ்சம் தலைவிரித்தாடியது. நாடு முழுவதும் உணவுக் கலகங்கள் நடந்து வந்தன. அமெரிக்கா அளித்த கோதுமையே பலரது பசி தீர்க்க உதவியது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ஏற்றி வந்த கப்பல்கள் நிற்கும் துறைமுகங்களை பட்டினியால் வதைபட்ட பல்லாயிரம் மக்கள் சூழந்து நின்றனர். கிராமங்களில் எண்பது சதவீத தலித் மக்கள் பெரும் பண்ணையார்களிடம் அற்ப கூலிக்குப் பணி செய்து வந்தனர். அல்லது பண்ணையத்துக்குக் கொத்தடிமைகளாக இருந்தனர். சிறு விவசாயிகளும், குத்தகைதாரர்களும் நிலப்பிரபுக்களால் கொடுமையாகச் சுரண்டப்பட்டு வந்தனர். கொடும் அடக்குமுறையும் சாதிவெறியும் சுரண்டலும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. நகரங்களில் வேலை வாய்ப்பின்மை உச்ச கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசு எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து விட்டது தெளிவாகத் தெரிந்தது. அப்போது இந்தியாவில் முக்கியமான எதிர்க்கட்சியாகவிருந்த இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) அரசியலதிகாரத்தை நோக்கிய தீர்மானகரமான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முடிந்த இடங்களிலெல்லாம் காங்கிரஸுடன் ஒத்துழைப்பு என்ற விசித்திரமான நிலையெடுத்தது.
சோவியத் யூனியனின் தலைவர் ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு அங்கு ஆட்சிக்கு வந்த குருச்சேவ் முதலாளித்துவ நாடுகளுடன் சமாதான சகவாழ்வு, புரட்சிகள் இல்லாமல் சமாதான வழியில் சோஷலிசத்துக்கு மாற்றம் ஆகிய கோட்பாடுகளை முன்வைத்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த குருச்சேவ் கோட்பாடானது உலக பாட்டாளி வர்க்க இயக்கங்களை முதலாளித்துவவாதிகளுக்குக் காட்டிக் கொடுப்பதாகும் என்று கடுமையாக விமர்சித்தது. குருச்சேவ் இந்தக் கோட்பாட்டின் மூலம் சோவியத் யூனியன் அடைந்திருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபமடைந்து ஏகாதிபத்தியமாக மாற வழி செய்வதே இந்தக் கோட்பாடு என்று இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டது. குருச்சேவ் உலகம் முழுவதும் சென்று முதலாளித்துவ அரசுகளுடன் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். சோவியத் யூனியன் பாட்டாளி வர்க்க நலன்களுக்காக நிற்பதற்கு பதிலாக அவர்களை ஒடுக்கி வரும் அரசுகளோடு நட்பு கொண்டு அவர்களுடன் உழைக்கும் மக்களை சமாதானமாக வாழச் சொன்னது மாபெரும் துரோகம் என்று கருதப்பட்டது.
ஏறக்குறைய அந்தக் காலத்தில் தான் 1957 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி கேரளாவில் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் 1959 ஆம் ஆண்டு நேரு அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த அனுபவத்தின் காரணமாக இந்திய பொதுவுடமைக் கட்சி வெளிநாட்டு உறவுகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் இந்திய அரசை ஆதரிக்கும் நிலையை எடுத்து வந்தது. அவ்வாறு எடுக்காவிட்டால் இந்தியாவில் தன்னை இயங்க ஆளும் வர்க்கம் அனுமதிக்காது என்பதை உணர்ந்திருந்தது. இப்போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் முதலாளித்துவ நாடுகளுடன் வர்க்கப் போருக்கு பதில் சமாதான சகவாழ்வு என்ற நிலை எடுத்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதை உற்சாகத்துடன் ஆதரித்தது. காங்கிரஸ் கட்சி பல முற்போக்கான கொள்கைகளைக் கொண்டுள்ளது என்று கூறும் அளவுக்குச் சென்றார் இந்திய பொதுவுடமைக் கட்சித் தலைவர் அஜாய் கோஷ். இந்த நடவடிக்கைகள் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. களத்தில் காங்கிரஸ் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருந்த தோழர்கள் இந்த நிலை பாடுகளை ஏற்க மறுத்தனர். இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்டுகளை இந்திய பொதுவுடமைக் கட்சியிலிருந்து வெளியேரும்படி கோரியது. உலகம் முழுவதும் பலநாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடைந்து சீனப் பாதையைப் பின்பற்றும் கட்சிகள் தோன்றின. 1962 ஆம் ஆண்டு சீனாவுடன் போர் தொடங்கிய போதும் இந்திய பொதுவுடமைக் கட்சி இந்திய அரசை உறுதியாக ஆதரித்தது. இந்தச் சூழநிலையில் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்குள்ளிருந்த அதிருப்தியாளர்கள் கட்சியை உடைத்து வெளியேறுவது என்ற முடிவெடுத்தனர்.
1964 ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் உருவானது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆயுதப் போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்றாலும் நாட்டில் நிலவிய கொடுமையான சூழலையும், பஞ்சங்களையும், நடந்து வந்த கலகங்களையும் கணக்கில் கொண்டு தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கவும், இந்திய பொதுவுடமைக் கட்சி எடுத்திருந்த காங்கிரஸ் ஆதரவு நிலைபாட்டை மாற்றவும் உறுதி கொண்டிருந்தது. இரண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் தலைமையைத் தவிர்த்து அனைத்து மட்டங்களிலும் ஊழியர்கள் ஆயுதம் தாங்கியவர்களாகவே இருந்தனர். அவ்வாறு இருந்து தீர வேண்டிய நிலைமையே நாட்டில் இருந்தது. இதன் காரணமாகவே அடுத்த பிளவு வந்து நக்சல்பாரி எழுச்சி தோன்றிய போது கட்சியினர் எளிதாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முன்பே 1964 டிசம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில் கட்சியின் பல்லாயிரம் ஊழியர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் டார்ஜிலிங் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரான சாரு மஜும்தாரும் இருந்தார். சிறையில் அவரும் டார்ஜிலிங் தோழர்களும் கட்சி என்ன நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து தலைமையுடன் தத்துவார்த்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சாரு மஜும்தார், முழுமையாக சீனப் பாதையைப் பின்பற்றுவது, உடனடியாக ஆயுதப் போராட்டத்தில் இறங்குவது, வர்க்க விரோதிகள் மீது தாக்குதல் தொடுப்பது ஆகியவற்றை வலியுறுத்தி ஆறு கட்டுரைகள் எழுதி சுற்றுக்கு விட்டிருந்தார். சிறைக்குள் நடந்த தத்துவார்த்தப் போராட்டம் ஒரு முடிவை எட்டவில்லை என்றாலும், சாரு சிறையிலிருக்கும்போதே சிலிகுரி பகுதியில் தோழர்கள் அவரது வழியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர், சாரு மஜும்தார் உட்பட 1967 தேர்தல் வரும்போதே விடுதலை செய்யப்பட்டனர். இந்த இடைக்காலத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்ததை ஒட்டி காங்கிரஸ் நாடு முழுவதும் தேசபக்தியைத் தூண்டி தன் பின்னே அணிதிரட்டியிருந்தது. இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உறுதியாக அமர்ந்திருந்தார். எனவே 1967 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்களும் தொண்டர்களும் விடுதலையாகி வரும் போது நிலைமை தீவிரமான போராட்டங்களுக்கு ஏற்றதாக இல்லை என்ற கருத்து கட்சிக்கு இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியானது, காங்கிரஸிலிருந்து உடைந்து வந்து வங்காள காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியிருந்த அஜாய் குமார் முகர்ஜியுடன் கூட்டணி அமைத்து 1967 தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. இந்த முடிவானது இந்திய பொதுவுடமைக் கட்சி சென்ற வழியிலேயே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் செல்கிறது என்ற எண்ணத்தை புரட்சியை நோக்கி நகர வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்த தலைவர்கள், ஊழியர்களிடையே ஏற்படுத்தியது.மார்க்சிஸ்ட் கட்சியானது தனது புரட்சிகர லட்சியங்களிலிருந்து விலகிச் செல்கிறது என்ற விமர்சனம் கட்சியின் இரண்டு மையங்களில் இருந்து வந்தது. பரிமல் தாஸ் குப்தா என்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் தலைமையிலான கல்கத்தா குழுவினர் தலைமையுடன் தத்துவார்த்த போராட்டம் நடத்துவதன் மூலமும், அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமும் கட்சியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்று கருதினர். இது தத்துவார்த்தக் குழு என்றழைக்கப்பட்டது. சாரு மஜும்தார், கன்சன்யால் தலைமை தாங்கிய வடக்கு வங்காள குழு உடனடியாக மக்களுக்குப் பெரும் கொடுமைகள் இழைத்து வந்த பெரும் நிலப்பிரபுக்களுக்கு எதிராகப் புரட்சிகர நடைமுறையில் இறங்க வேண்டும் என்றது. இது செயல்பாட்டாளர்கள் குழு என்றழைக்கப்பட்டது (Towards naxalbari1953-1967: An account of inner party ideological struggle).
சிறையிலிருந்து வெளிவந்த டார்ஜிலிங் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் சாரு மஜும்தாரின் வழியை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் பெரும் பகுதிகளைப் போலவே வடக்கு வங்காளத்திலும் ஜோதேதார்கள் என்ற பெரு நிலப்பிரபுக்களை எதிர்த்தும், தேயிலைத் தோட்ட நிர்வாகங்களை எதிர்த்தும் மக்கள் பணி செய்துவந்த தோழர்கள் ஏற்கனவே கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் தயாராக இருக்கும் சூழலில்தான் இருந்து வந்தனர். அவர்களுக்குத் திருப்பித் தாக்க தலைமையின் ஒப்புதலும் உதவியும் தேவைப்பட்டது. அதிர்ச்சியடைந்த மார்க்சிஸ்ட் கட்சி சாரு, மஜும்தாரை கட்சியிலி ருந்து நீக்க முயன்றது. ஆனால் கட்சிக்குள் தோன்றிய எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சியை அப்போதைக்குக் கைவிட்டது. 1966 செப்டம்பரில் டார்ஜிலிங் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடங்கியது. கலகக் குழு தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்துடன் மற்ற தொழிற்சங்க உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். மலைகளுக்கு கீழே இருந்த சிலிகுரி பகுதி விவசாயிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றனர். போராட்டத்தை உடைக்க ஏவப்பட்ட அரச படைகளையும், கூலிப்படைகளையும் ஆயுதமேந்திய விவசாயிகளும் தொழிலாளர்களூம் இணைந்து நின்று முறியடித்தனர். தொழிற்சங்க கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பாதையை ஆதரித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தப் போராட்டமே நக்சல்பாரி எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்த நக்சல்பாரி எழுச்சி முழுவதிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றனர். சிலிகுரி சப்டிவிஷனில் நடந்த விவசாயிகள் மாநாடு பெரும் வெற்றியடைந்தது. திட்டமிட்ட முறையில் அமைப்பாக்கப்பட்டதால் உத்வேகம் பெற்ற நிலமற்ற விவசாயிகள் ஜோதேதார்களுக்கு எதிரான தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். அந்த நேரத்தில் 1967 இல் நடந்த தேர்ந்தலில் மார்க்சிஸ்ட் மற்றும் வங்காள காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அஜாய் முகர்ஜி முதலமைச்சரானார். இந்த அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சி அங்கம் வகித்தது. அதுவரை காங்கிரஸைத் தவிர வேறு ஆட்சியை மக்கள் பார்த்தது இல்லை என்பதால் கல்கத்தா நகரம் விழாக்கோலம் பூண்டது. தெருவிளக்குகள் செங்கொடிகளால் போர்த்தப்பட்டன. தெருவெங்கும் செம்பதாகைகள் படபடத்தன. சிவப்பு சுவரொட்டிகள், பலூன்கள் என்று நகரமே செங்கடலில் மூழ்கிவிட்டது போலிருந்தது. இனி எல்லாம் நலமே நடக்கும் என்ற எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம் முழுவதும் வெறுக்கத்தக்க காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டதை ஒட்டி பெரும் கொண்டாட்டங்கள் நடந்தன. சோஷலிச அரசே உருவாக்கப்பட்டு விட்டதைப் போன்ற தோற்றம் இதனால் உருவானது. இதனால் கொஞ்சமும் எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு விரும்பத்தகாத விளையும் ஏற்பட்டது. உழுபவனுக்கே நிலம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை முழக்கமாகும். நிலப்பிரபுக்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் நிலமற்ற விவசாயிகள் நிலப்பிரபுக்களால் அட்டை போல உறிஞ்சப் பட்டு கொடும் வறுமையில் உழன்று வந்தனர்.
ஜோதேதார்கள் மற்றும் அவரக்ளது அடியாள் படைகளால் கடுமையான அடக்குமுறைக்கு நிலமற்ற விவசாயிகள் ஆளாகி வந்ததுடன் பாலியல் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை ஜோதேதார்கள் பறித்துக் கொண்டு வட்டிக்கு கடன் வழங்கினர். பெரும்பாலான குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாகக் கடன் சுமையிலும் அவதிப்பட்டு வந்தன. இந்தக் குத்தகை விவசாயிகளுக்கு, அவர்கள் உழுதுகொண்டிருக்கும் நிலம் உரிமையாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மார்க்சிஸ்ட் கட்சி அளித்திருந்தது. சிலிகுரி டிவிஷன் நிலப்பிரபுக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தான் சொன்னபடி குத்தகை நிலங்களை விவசாயிகளுக்கு உரிமையாக்கி விடக்கூடும் என்ற அச்சத்தில் தங்கள் நிலங்களில் இருந்த எண்ணற்ற குத்தகைதாரர்களை வெளியேற்றினர். பல்லாயிரம் விவசாயிகள் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்து தெருவில் நின்றனர். இதுவும் வடக்கு வங்காளத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியது. கனுசன்யாலின் கூற்றுப்படி சிலிகுரி பகுதியில் 1967 மார்ச் முதல் ஏப்ரல் வரை 20,000 நிலமற்ற விவசாயிகள் முழுநேர ஊழியர்களாகக் கலகக் குழுவினருடன் சேர்ந்தனர். சாரு மஜூம்தார், கனுசன்யால் ஆகியோர் ஒழுங்கமைத்த சிலிகுரி தோழர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட விவசாயிகளின் ஆயுதக் குழுக்கள் நேரடியாகத் தாக்குதலில் இறங்கின. அதுவரை எதிர்த்து ஒரு சொல் பேசவும், நிமிர்ந்து நடக்கவும் அஞ்சிக் கொண்டிருந்த நக்சல்பாரியின் நிலமற்ற விவசாயிகள் வீறு கொண்டு எழுந்து ஜோதேதார்களின் நிலங்களைக் கைப்பற்றி, நில உரிமை தொடர்பான எல்லா ஆவணங்களையும் எரித்து அழித்தனர். விவசாயிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருக்கப் பயன்பட்ட எல்லா கடன் பத்திரங்களையும் எரித்தனர். குரூரமான நிலப்பிரபுக்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் நாட்டுத் துப்பாக்கிகள் முதல் வில் அம்புகள் ஏந்திய ஆயுதந்தாங்கிய குழுக்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. நிலப்பிரபுக்களின் நிலங்களில் இருந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு பட்டினியில் வதைபட்ட குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த எழுச்சி நக்சல்பாரியைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கும் விரைந்து பரவியது.
மேற்கு வங்க அரசில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் அமைச்சரான ஹரி கிருஷன கோனார் சிலிகுரி வந்து அரசே நிலங்களைப் பகிர்ந்து தரும். தாக்குதல் நடத்து
வதையும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதையும் கைவிட்டு அரசிடம் மனுகொடுங்கள். அரசு சட்டப்படி நிலம் வழங்கும் என்றார். நிலப்பிரபுக்களின் உறுதி வாய்ந்த ஆதரவாளர்களாக இருந்த அரசு அதிகாரிகள் மூலம் நிலப்பகிர்வு என்பதைப் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். சிபிஎம் கட்சி தனது கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர் களுடன் வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே அக்கட்சி அங்கம் வகித்த அமைச்சரவையின் முதலமைச்சர் அஜாய் முகர்ஜி அரசு நக்சல்பாரியை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. சிபிஎம் கட்சி தாங்கள் புரட்சிக்காரர்களுடன் ஒப்பந்தத்துக்கு வந்து விட்டதாகவும் அரசு அதை முன்னெடுத்துச் செல்வதற்கு பதில் சிலிகுரி பகுதியில் காவல்நிலையங்களை ஏன் திறக்கிறது என்ற கேள்வியை 29 மே மாதம் எழுப்பியது.
சிபிஎம் கட்சி தான் அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசு விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்தது. முதல்வர் அஜாய் முகர்ஜி நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டியது. நக்சல்பாரி விவசாயிகளின் கலகத்துக்கு ஜோதேதார்கள் மற்றும் தேயிலை தோட்ட நிர்வாகங்களின் இரக்கமற்ற சுரண்டலும், நிலப்பறிப்பும், மற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளுமே காரணம் என்ற நிலையை சிபிஐஎம் கட்சி எடுத்தது. மறுநாள் கல்கத்தாவிலிருந்த கல்லூரி சாலை என்ற பெயர் பெற்ற சாலை முழுவதும் கொலைகார அஜாய் முகர்ஜியே பதவி விலகு என்று சிபிஎம் மாணவர்களின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த மாணவர்கள் சிபிஎம் தலைமை மீதி அதிருப்தி கொண்டிருப்பதும், சாருவின் அரசியலை நோக்கி நகர்வதும் தெளிவாகத் தெரிந்தது.
காங்கிரஸிலிருந்து வெளியேறியிருந்த அஜாய் முகர்ஜியும், மத்தியில் ஆண்டு வந்த காங்கிரஸும் கைகோர்த்துக் கொண்டன. நக்ஸல்பாரி பகுதி முழு
வதும் தாக்குதல்களும் எதிர்தாக்குதல்களும் தொடர்ந்தன. பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்றார் முதலமைச்சர் அஜாய் முகர்ஜி.
அதுவரை கலகக்காரர்கள் சிபிஎம் கட்சியினராகவே கருதப்பட்டு வந்தனர். சாருவும், மற்ற நக்ஸல்பாரி தலைவர்களும் சிபிஐஎம் தலைமையைக் கைப்பற்றி மொத்தக் கட்சியையும் புரட்சிப் பாதையில் திருப்புவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் தலைமையை கைப்பற்றுவதற்கான நேரமோ சூழலோ நக்சல்பாரி கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. சிபிஐ எம் தலைமையால் நக்சல்பாரி உழவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அளிக்க முடியவில்லை. சிபிஐஎம் கட்சியானது அஜாய் முகர்ஜி அரசு, மத்திய அரசு ஆகியவற்றிடமிருந்து கடும் அழுத்தத்தை சந்தித்து வந்தது. ஜூலை மாத இறுதியில் சிபிஐ எம் தலைமை நக்சல்பாரி கலகக்காரர்களுக்கு எதிரான நிலையை வெளிப்படையாக எடுத்தது. பல்வேறு காரணங்களால் சிபிஐ எம் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்தவர்கள், நக்ஸல்பாரி நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட கட்சிசார்பற்றவர்கள் நக்ஸல்பாரி புரட்சிக்காரர்க்கள் பின்னால் திரண்டனர். கட்சி உருவான மூன்றே ஆண்டுகளில் இன்னொரு பிளவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. சிபிஐஎம் அதிருப்தியாளர்களும், பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், நக்சல்பாரி எழுச்சியின் ஆதரவாளர்களும் கல்கத்தா ராம்மோகன் நூலக அரங்கில் நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட உதவிக் குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டமே சிபிஐஎம் எல் உருவாக்கத்துக்கான அடித்தளமாக அமைந்தது. இந்நிலையில் பீகிங் வானொலி நக்ஸல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடிமுழக்கம் என்றழைத்தது. மேற்கு வங்க அரசை பிற்போக்குவாதிகளின் கருவி என்று விமர்சித்தது. இது உலக அரங்கில் சிபிஐ எம் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ கட்சியை ஆதரித்து வந்தது. சிபிஐ எம் கட்சி சீன ஆதரவை இழந்ததன் காரணமாக உலக அரங்கில் தனிமைப்பட்டுப் போனது. அது மேலும் புரட்சியாளர்களிடமிருந்து விலகிச் சென்றது.
ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு நக்ஸல்பாரி மீது பெரும் தாக்குதல் நடத்தியது. முதலமைச்சர் அஜாய் முகர்ஜி இது சிஐஎம் கட்சியினரும் கலந்து கொண்டு எடுத்த முடிவு என்று கூறினாலும் சிபிஐ எம் கட்சியானது இது விவசாயிகள் மீதான அடக்குமுறை என்று கூறியது. அக்டோபர் வாக்கில் நக்ஸபாரியில் அனைத்து நக்ஸல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். அந்த டிவிஷன் முழுவதும் போலீசாரும் நிலப்பிரபுக்களின் படையினரும் காங்கிரஸாரும் கிராமம் கிராமமாகச் சென்று சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி சூறையாடினர். பல கிராமங்கள் எரிக்கப்பட்டன. பல உள்ளூர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். விவசாயிகள் அமைத்திருந்த ஆயுதக் குழுக்களுக்ளுக்கு நல்ல ஆயுதங்களோ பயிற்சியோ இல்லை. அனுபவம் வாய்ந்த தலைமையும் இல்லை. பின்வாங்கிச் செல்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பின்புலமும் இல்லை. இந்தக் குழுக்கள் நவீன ஆயுதந்தாங்கிய அரசு படைகளுக்கு எதிர்நிற்க முடியாமல் பெரும் சேதத்தைத் சந்தித்தன. நக்ஸல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. “நூற்றுக்கணக்கான நக்ஸல்பாரிகள் வெடிப்பதற்காகப் புகைந்து கொண்டிருக்கின்றன. நக்ஸல்பாரி சாகவில்லை. அதற்கு மரணமில்லை” என்றார் சாரு மஜும்தார். அது உண்மைதான். மேற்கு வங்கத்தின் மிட்னாபூரிலும் வேறு பல கிராமப் பகுதிகளிலும் நிலப்பிரபுக்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டமும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்து நடந்துதான் வந்தன. நக்ஸல்பாரி எழுச்சி பரவத் தொடங்கியதும் அஜாய் குமார் முகர்ஜி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு துணை ராணுவப் படையினரை வங்க கிராமங்களுக்கு அனுப்பியது. 1968 இறுதியில் வங்காளக் கிராமங்களில் தோன்றிய புரட்சி நெருப்பு அரசின் மூர்க்கமான தாக்குதல்களால் அணைக்கப்பட்டு விட்டது போலத் தோன்றினாலும் வெவ்வேறு எதிர்பாராத இடங்களில் வெடித்துக் கொண்டே இருப்பது வழக்கமாகிப் போனது. காங்கிரஸ் கட்சியின் சித்தார்த்த சங்கர் ரே இந்த தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்தினார். நக்ஸல்பாரி முறியடிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஆந்திராவின் காகுளம் மாவட்டத்தில் பழங்குடி மக்களின் எழுச்சி தோன்றியது. இந்தப் பகுதியில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி பலமாக வேரூன்றியிருந்தது. அடுத்தடுத்து வந்த பிளவுகளால் குழப்பமடைந்திருந்த தோழர்கள் புரட்சியாளர்கள் பக்கம் சாயத் தொடங்கினர்.
1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவர் நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டனர். பதிலடியாக பழங்குடி மக்கள் நிலப்பிரபுக்களின் நிலங்களையும், குடோன்களையும், வீடுகளையும் தாக்கிக் கொள்ளையிட்டனர். நிலப்பிரபுக்களின் தானியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இது ஒரு தீ போல அடுத்தடுத்த கிராமங்களுக்குப் பரவியது. நக்ஸல்பாரியில் நடந்ததற்கு மாறாக கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் காகுளத்தில் மக்கள் எழுச்சியை அடுத்து விவசாயிகளின் தாக்குதல் குழுக்களைத் திட்டமிட்டு அமைக்கத் தொடங்கினர். அரசு 12,000 சி ஆர் பிஎஃப் படையினரை காகுளம் பகுதிக்கு அனுப்பியது. ஆறுமாதங்கள் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குன்றிலும் நடந்த சண்டைகளில் 120 போலீசார் கொல்லப்பட்டனர். எண்ணற்றவர்கள் காயம்பட்டனர். நக்ஸலைட்டுகள் தரப்பிலும் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்டனர். புகழ்பெற்ற கவிஞரான சுப்பாராவ் பாணிக்கிரஹி ஆயுதமேந்தி சி ஆர் பி எஃப் படையினருடன் போரிட்டு மரணமடைந்தார். ஒரு ஆயுதப் போராட்டம், முறையான படை என்ற இடத்துக்கு நக்ஸலைட்டுகள் நகர்ந்தது காகுளத்தில்தான் என்ற போதிலும் தலைவர்களை இழந்ததால் போராட்டம் மெல்ல வலுவிழந்தது. ஆனாலும் கூட இரண்டு தாலுக்காக்கள் மட்டுமே கொண்ட காகுளம் பகுதி பல்லாயிரம் அரச படையினருக்கு எதிராக ஆறுமாதங்கள் வீரத்துடன் போரிட்டது சிபிஐஎம் கட்சியிலிருந்த பலருக்கு உத்வேகம் அளித்து ஆயுதப் போராட்ட அரசியலை நோக்கி நகர்த்தியது.
1967 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரையில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நக்சல்பாரி எழுச்சியை தீவிரவாதம் என்றும் இடது விலகல் என்றும் வரையறுத்தது. சீனப் பொதுவுடமைக் கட்சி நக்சல்பாரியை ஆதரித்ததற்காக அதை மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்தது. இது அகில இந்திய அளவில் கட்சிக்குள் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பல்லாயிரம் பேர் கட்சி புரட்சியை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையிழந்து நக்ஸல்பாரித் தோழர்களை நோக்கி வரத் தொடங்கினர். அக்டோபர் மாதம் சாரு மஜும்தார் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டிய காலம் வந்து விட்டது என்று எழுதினார். இவர்களின் பிரதிநிதிகள் கல்கத்தாவில் கூடி அகில இந்திய பொதுவுடமைப் புரட்சியாளர்கள் கூட்டமைப்பு என்ற குழுவை உருவாக்கினர். இதில் தமிழகத்திலிருந்து எல். அப்பு, சம்புநாதன், கேரளாவிலிருந்து குனிக்கல் நாராயணன், ஒரிஸாவிலிருந்து ரபிதாஸ், ராதாமோகன் தாஸ் குப்தா, பிஹாரிலிருந்து சத்ய நாராயண் சிங், மிஸ்ரா. உபியிலிருந்து சிங்குமார் மிஸ்ரா, எஸ்.என். திவாரி, கர்நாடகாவிலிருந்து பாபு ஆகியோர் கலந்து கொண்டு மேற்கு வங்க புரட்சியாளர்களுடன் இணைந்தனர். பின்பு பஞ்சாபிலிருந்து வந்த தோழர்களும் இந்தக் குழுவில் இணைந்தனர். ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மாநில கமிட்டியிலேயே பெரும்பான்மையினர் நக்சல் புரட்சியாளர்களை ஆதரித்தனர். தமிழ் நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி தனது தலைமையிடத்தை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மே மாதம் விசாகப்பட்டணத்தில் நடந்த சிபிஐ எம் எல் கட்சிக் கூட்டத்தில் வர்க்க எதிர்களை அழித்தொழிப்பது பற்றிய சாருவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையொட்டி லிபரேஷன் இதழில் வந்த கட்டுரை கெரில்லா குழுக்களை எப்படிக் கட்டுவது, ஆயுதப் போராட்டத்தை எப்படி தொடங்குவது, மரபு ரீதியிலான ஆயுதங்களைப் பயன்படுத்துவது, தாக்குதல்களுக்குப் பிறகு மக்கள் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை விரிவாக விளக்கியிருந்தது.
சாரு மஜும்தார் அனைத்து மாணவர்களையும் பள்ளி கல்லூரிகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குச் சென்று ஏழை விவசாயிகளுடன் ஐக்கியப்படும்படியும் செங்காவலர் குழுக்களைக் கட்டும்படியும் அறைகூவல் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு எண்ணற்ற மாணவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்குச் சென்றனர். இவர்களில் பிஹார் எல்லையில் உள்ள கிராமங்களுக்குச் சென்ற ஒரு குழுவில் பிரிட்டனில் பணிபுரிந்து நக்சல்பாரி இயக்கத்தில் சேர்வதற்காக வந்திருந்த ஒரு பொறியாளரும் அவரது மனைவியான மேரி டெய்லர் என்ற இளம் பிரிட்டிஷ் பெண்ணும் இருந்தனர். இக்குழு விரைவில் கைது செய்யப்பட்டது. மேரி டெய்லர் ஐந்து ஆண்டுகள் பிஹாரில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். விடுதலையானபின் அவர் எழுதிய மை இயர்ஸ் இன் இண்டியன் பிரிசன் என்ற நூல் இந்திய சிறைகளில் இருந்த அரசியல் கைதிகள், ஏழை மக்கள் ஆகியோரின் படுமோசமான நிலைமையை உலகறியச் செய்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎம் தோழர்கள் ஆயிரக்கணக்கில் கட்சியை உடைத்து வெளியேறிக் கொண்டே இருந்தனர். ஏறக்குறைய சிபிஎம் கட்சியின் மூன்றில் ஒருபகுதி வெளியேறியது என்று மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. உண்மை இன்னும் அதிகம் என்கின்றனர் பல செய்தியாளர்கள். வெளியேறியவர்கள் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 லெனின் பிறந்த நாள் அன்று தங்களை சி.பி.ஐ.(எம் எல்) என்ற கட்சியாக அமைத்துக் கொண்டனர்.
“1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் இந்தியாவிலேயே முதல் முதலாக உருவாக்கப்பட்ட கல்லுரியான புகழ்வாய்ந்த கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் நுழைந்த போது தேசியக் கொடி ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த உயர்ந்த கொடிக்கம்பத்தில் பளிச்சிடும் ரத்தச்சிவப்பு வண்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. இந்தியாவில் புரட்சி தொடங்கிவிட்டது என்று அறைகூவியழைக்கும் சுவரொட்டிகள் எல்லாச் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. மாவோவின் படங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன. “சீனாவின் தலைவர் எங்கள் தலைவர், ஒழுங்குமுறை அநீதிக்காக நின்றால் அதைக் குலைப்பதே நீதிக்கான போராட்டத்தின் துவக்கம்” போன்ற முழக்கங்கள் வகுப்பறைக்கு உள்ளும் புறமும் நிறைந்திருந்தன. பிரசிடென்சி கல்லூரியின் ஒவ்வொரு சதுரடி நிலமும் ஒவ்வொரு வரலாறு ஆகும். சுபாஷ் சந்திர போஸ் இங்கே படித்துக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிறவெறி அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த மாடிப்படிகளின் அருகே சென்றேன். ஒரு மாணவர் குழு புரட்சிகர முழக்கங்களுடன் படிகளின் மேலே தோன்றியது. அவர்கள் அமார் நாம் துமார் நாம் வியட்னாம் என்ற முழக்கங்களுடன் என்னைக் கடந்து சென்றனர். இதுதான் நக்சலைட்டுகளுடனான எனது முதல் சந்திப்பு”.
பிரசிடென்சி கல்லூரியில் நக்சல் எழுச்சி பெரும்பாலும் அறிவுத் தளத்தில் இருந்தது. அதே நேரம் புறநகர் பகுதிகளில் இருந்த கீழ் நடுத்தர வர்க்க
மாணவர்கள் படித்த கல்லூரிகளில் வர்க்கப் போராட்டம் இன்னும் தீவிரமான வடிவம் எடுத்தது. காங்கிரஸ் அடியாட்களுடன் மோதல்கள் ஒவ்வொரு நாளும் நடந்தன. பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் மிட்னாபூர் மாவட்டத்தீல் டெப்ரா கோபிபல்லப்பூர் பகுதியில் இருந்த பல கிராமங்களுடன் தொடர்பு ஏர்படுத்திக் கொண்டனர். இயற்பியல் இறுதியாண்டு மாணவர் மிட்னாபூரில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகிறார். ஆங்கில இலக்கிய மாணவர் சந்தால் பர்கானாவில் விவசாயிகளுடன் இணைந்து அரசு மற்றும் நிலப்பிரபுக்களின் படைகளுடன் போரிட்டு வருகிறார் என்பது போன்ற செய்திகள் வழக்கமானவையாகி விட்டன. ‘‘புரட்சிகர நடவடிக்கைகளுக்காகத் தேடப்பட்ட மாணவர்கள் சில நேரங்களில் கல்லூரியின் கைவிடப்பட்ட ஹாஸ்டல் கட்டடங்களில் பதுங்கியிருப்பதாக வதந்திகள் உலாவும்” என்றார் அக்காலத்தில் பிரசிடென்ஸி கல்லூரியில் படித்த கோஷ். இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் புகழ்பெற்ற கல்கத்தா இயக்கம் இப்படித்தான் தொடங்கியது. இந்தக் கல்லுரியிலிருந்து மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் என்ற சாரு மஜும்தாரின் அழைப்பை ஏற்று கல்லூரியிலிருந்து வெளியேறினர்.
1969 ஆண்டு நடந்த தேர்தலில் திரும்பவும் ஆட்சிக்கு வந்த இடது கூட்டணி அரசு ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருந்த நக்சல் தலைவர்களை விடுதலை செய்தது. ‘ஏறக்குறைய அதே நேரம் கிராமங்களுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மாணவர்கள் அக்கிராமங்களில் எழுச்சி நக்சபாரியில் நடந்தது போலவே ஒடுக்கப்பட்டதால் கல்கத்தாவுக்கு திரும்பி வந்தனர். ஆயுதப் போராட்டத்தில் சில அனுபவங்கள் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் கல்கத்தாவில் பேரணிகளும் ஊர்வலங்களும் நடத்தத் தொடங்கினர். ஈச்வர சந்திர வித்யா சாகர், தாகூர், விவேகானந்தர் போன்றவர்களின் சிலைகள் வர்க்க விரோதிகளின் சிலைகள் என்று சேதப்படுத்தப்பட்டன. சீன எதிர்ப்பு போலி தேசபக்தி சினிமாக்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டு ஆயுதபாணியாக்கப்பட்ட அடியாட்படைகள் விடுவிக்கப்பட்ட நக்சல் தலைவர்கள் மேலும், மாணவர்கள் மேலும் துப்பாக்கி சூடுகளும், குண்டு வீச்சுகளும் நடத்தத் தொடங்கின. புரட்சியாளர்களின் வீடுகளைச் சுற்றி வளைத்து குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்துவது, புரட்சிக்காரர்களை தெருவில் கொடூரமாக அடித்தும் வெட்டியும் கொல்வது என்று கொலைவெறித் தாண்டவத்தை காங்கிரஸ் நடத்தியது. புரட்சிக்காரர்கள் பதிலுக்கு போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். நக்சலைட்டுகள் நாட்டுத் துப்பாக்கிகள், சுருள் கத்திகள் கொண்டு போலீசாரைத் தாக்கினர்.
நக்சல்பாரி இயக்கமான சிபிஐ எம் எல் கட்சியின் கொள்கைப்படி நகர்ப்புறங்கள் எதிரியின் உள்ளங்கை போன்றவை. ஆயுதப் போராட்டம் நடத்த ஏற்றவை அல்ல. அரசு பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்களும், காடுகளுமே கெரில்லாப் போருக்கு ஏற்றவை, அங்கிருந்தே நகரங்களைச் சுற்றி வளைக்க வேண்டும் என்ற மாவோவின் கோட்பாட்டை கட்சி ஏற்றுக்கொண்டிருந்தது. என்ற போதிலும் கல்கத்தா நிகழ்வுகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக தொடர்ந்து அழிவை நோக்கி உருண்டு கொண்டே இருந்தன. கல்கத்தாவில் ஆயுதப் போராட்டம் என்பது எந்த நோக்கத்தையும் எட்டக் கூடியதாக இல்லை. கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டம் விவசாயிகளுக்கு நிலம், கொத்தடிமைகளுக்கு விடுதலை, ஆயுதப் போராட்டத்துக்கான தளப்பிரதேசத்தை உருவாக்குவது ஆகியவற்றை அளிப்பதைக் காரணமாகக் கொண்டிருந்தது. இப்படி எதுவும் இல்லாத இடத்தில் ஆயுதப் போராட்டம் தேவையே இல்லாத நிலையிலும் சாரு மஜும்தாரும், சரோஜ் தத்தாவும் கல்கத்தா இயக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக இது புரட்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பினர். கல்கத்தாவில் கலகங்களில் ஈடுபட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கவும் செய்தனர். அவர்கள் தடுக்க முயன்றிருந்தாலும் மாணவர்களும் இளைஞர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
பிரசிடென்சி கல்லூரியின் வடக்குபுறமாகச் சென்ற பாபானி தத்தா சாலை முக்தா ஆஞ்சல் அதாவது விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்றழைக்கப்பட்டது. மாணவர்கள் சாலையை நோக்கியிருந்த கல்லூரி வகுப்பறை ஜன்னல்களிலிருந்து தெருவில் வரும் போலீஸ் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடுகளும், குண்டு வீச்சுகளும் நடத்தினர். போலீஸ் கல்லூரிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்ததால் போலீசார் தெருவில் நின்று வகுப்பறைகளுக்குள் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். 1970 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களால் கொல்லப்பட்டார். அரசு நிதானித்துக் கொண்டு தனது ஆயுதப் படைகளையும் அடியாட் படைகளையும் திரட்டித் திட்டமிட்டு ஒவ்வொரு பகுதியாக கோரமான தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. நக்சலைட்டுகள் இருக்கும் பகுதிகள், நக்சல்களின் வீடுகள், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள் திட்டமிட்ட முறையில் போலீசாராலும் அடியாட் கும்பல்களாலும் தாக்கப்பட்டன. இரவு முழுக்க சாலைகளில் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. நகரம் இரவானதும் இருளில் மூழ்கியது. மக்கள் அன்புக்குரியவர்கள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமென்று தவித்துக் கிடந்தனர். ஒவ்வொரு விடியலிலும் எப்படி இளைஞர்கள் நக்சலைட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டு போலீசாரால் வீட்டிலிருந்து இழுத்து வரப்பட்டு தெருக்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் வரும்.
1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் வங்க மக்களுக்கு எதிராக மேற்கு பாகிஸ்தான் ராணுவம் மாபெரும் படுகொலைகளை நடத்தத் தொடங்கியது. லட்சக்கணக்கானவர்கள் அங்கிருந்து அகதிகளாக மேற்கு வங்கம் வந்தனர். முக்தி பாஹினிக்கு உதவ ராணுவம் மேற்கு வங்க கிராமங்களுக்கு அனுப்பப் பட்டது. அவற்றின் சில பிரிவுகளை நக்சலைட்டுகளை ஒழிக்க சித்தார்த்த சங்கர் ரே பயன்படுத்தினார் என்ற வதந்திகள் உலாவின. இதை பின்பு இந்திய ராணுவத்தின் கிழக்கு பகுதி தளபதி ஜேக்கப் ஒப்புக் கொண்டார். இது ஆபரேஷன் ஸ்டேபிள் சேஸ் என்று பெயரிடப்பட்ட ரகசிய ராணுவ நடவடிக்கையாகும். கல்கத்தாவில் நக்சலைட்டுகளின் கடைசி செந்தளங்களான பரநகர் சண்டிடலா ஆகிய பகுதிகள் அதிரடிப்படையினர், ஆயுத போலீசார், காங்கிரஸ் குண்டர் படையினர் ஆகியோரால் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டன. பிடிபட்ட நக்சலைட்டுகள், அவர்களது ஆதரவாளர்கள் அல்லது வெறுமனே சந்தேகிக்கப்பட்டவர்கள் அவர்கள் வீட்டுக்கு முன்னாலிருந்த விளக்குக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் போலீசால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு காணாமல் போயினர். இப்படி கூட்டம் கூட்டமாக நக்சலைட்டுகள் அரச படைகளால் கொல்லப்பட்டனர். காங்கிரஸ், போலீஸ் சிலபோது சிபிஐ எம் இணைந்து நடத்திய படுகொலைகளில் முக்கியமானது கோசிபூர் பரானகர் படுகொலையாகும். ஆயுதமேந்திய குண்டர்கள் வீடுவீடாகச் சென்று பெண்களை பாலியல் வன்முறை செய்தனர். வீடுகளை எரித்தனர். இளைஞர்களை அடித்தும் தீ வைத்து எரித்தும் கொன்றனர். பஞ்சு டே என்ற நக்சல் தலைவரின் கால்கள் வெட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். கருணா ஷங்கர் என்ற பெண் தோழரின் மார்பில் CPIML என்று கொலைகாரர்கள் கத்தியால் எழுதினர். மிருணால் சென்னின் கல்கத்தா 71, பதாதிக், சத்யஜித் ரேவின் பிரதிவந்தி, ஜன அரண்யா, கோவிந்த் நிகலானியின் ஹசார் சௌராசியா கா மா ஆகிய படங்களில் இந்நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். (Calcutta gripped with naxal violence Jawahar sircar the wire). இந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட பல காங்கிரஸ்காரர்கள் பின்பு பெரிய தலைவர்களாகினர்.
“நக்சல்பாரி எழுச்சியை பற்றிக் கேள்விப்பட்டதும் நானும் என் மனைவியும் லண்டனில் இருந்து ஒரு காரிலேயே கல்கத்தா வந்து சேர்ந்தோம்.” என்கிறார் அஸ்ஸாமில் நக்சல்பாரி இயக்கத்தைக் கட்டியெழுப்பியவரான பாஸ்கர் நந்தி. “மாவோவை நான் படிக்கப் படிக்க மாவோயிசம் மட்டுமே விடுதலையைத் தரும் என்ற எண்ணம் எனக்குள் உறுதிப்பட்டது.’’ இந்தியா திருபியதும் நந்தி ஜல்பைகுரி சென்று விவசாயிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இவரது அர்ப்பணிப்பைக் கண்ட சாரு மஜும்தார் நக்சல் இயக்கத்தை விரிவு படுத்த அஸ்ஸாமுக்கு அனுப்பினார். மிக விரைவில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பை பாஸ்கர் நந்தி ஏற்படுத்தினார். இந்த அமைப்பு நிலப்பிரபுக்களின் அறுவடையைக் கைப்பற்றியது. 5000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி விவசாயிகளுக்கு வழங்கியது. ஆனால் இதெல்லாம் பொருளாதாரப் போராட்டங்கள். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களை நீக்க வேண்டும் என்றார் சாரு மஜும்தார். எனவே அஸ்ஸாம் இயக்கம் தனிநபர் அழித்தொழிப்பில் இறங்கியது. விவசாயிகள் இயக்கம் ஆழமாக வேரூன்றும் முன்பே ஆயுதப் போராட்டத்தில் இறங்கி அடக்குமுறையை சந்திக்க வேண்டி நேர்ந்ததால் வெகுவிரைவில் வீழ்ச்சியைச் சந்தித்தது. பாஸ்கர் நந்தி உள்ளூர் விவசாயிகளாலேயெ காட்டிக் கொடுக்கப்பட்டார். காகுளம், கல்கத்தா இயக்கம், கோபில்லப்பூர் ஆகியவற்றின் பின்னடைவுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினரான சுரின் போஸ் சீனா சென்று சூ என் லாயைச் சந்தித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி சில பரிந்துரைகளை முன்வைத்தது.
1) மாவோவின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய எழுத்துக்களை இந்திய நிலைமைகளுக்குப் பொருத்துவது ஏற்புடையதல்ல.
2) சீனாவின் தலைவர் எங்கள் தலைவர் என்று நீங்கள் கூறுவது தவறாகும். நாம் இருவரும் சகோதரகட்சிகள். ஒரே கட்சியல்ல.
3) விவசாயிகள் அரசியல் அதிகாரத்துக்கு மட்டுமே போராட வேண்டும். நிலம் என்பது பொருளாதாரப் பிரச்சினை என்பது சரியல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகும்
4) நீங்கள் குறிப்பிடும் தனிநபர் அழித்தொழிப்பு என்பது கெரில்லா யுத்தம் அல்ல.
5) வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவர்கள் கம்யூனிஸ்ட் அல்ல என்பது போன்ற உணர்ச்சிகரமான முழக்கங்கள் சரியல்ல.
இந்த விமர்சனங்கள், மற்றும் தங்கள் சொந்த அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறையிலிருந்த நக்சல் தோழர்கள் சாருவின் மீது விமர்சனங்களை வைத்தனர். சத்யநாராயண சிங் தலைமையிலான குழு சாருவைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்தது. சாரு மஜும்தார் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு 28 ஆம் நாள் கொல்லப்பட்டார். ஏற்கனவே உள்முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த கட்சி சாருவின் மரணத்துக்குப் பின்பு மூன்று அரசியல் பார்வைகளின் அடிப்படையில் பல துண்டுகளாக உடைந்தது. சாருவின் பாதையை அப்படியே பின்பற்றுதல், ஆயுதப் போராட்டத்தைத் தொடரும் அதே நேரத்தில் பலவேறு தொழிற்சங்கங்கள், மக்கள் திரள் அமைப்புகள் உருவாக்குதல். ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்து மக்களைத் திரட்டும் இளைஞர் மாணவர் விவசாயிகள் தொழிலாளர்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பாதை. ஆனால் அதற்குள் சிபிஐ எம்எல் கட்சியின் அனைத்து முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர். தமிழகத்தில் சில அழித்தொழிப்புகள் நடந்தாலும் எந்தப் பகுதியிலும் எழுச்சியாக மாறவில்லை. தமிழக கட்சித் தலைவர் எல். அப்பு போலீசாராரால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பின்பு தலைமைப் பதவிக்கு வந்த ஏ.எம். கோதண்டராமனும் விரைவில் கைது செய்யப்பட்டுவிட்டனர். புலவர் கலியபெருமாளும் கைது செய்யப்பட்டுவிட்டார். இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் இருந்தது. கட்சி முழுவதும் செயலிழந்து பல துண்டுகளாக உடைந்து கொண்டிருதது. அந்த நேரத்தில் தோன்றியது போஜ்பூர் எழுச்சி.
சுப்ரதா தத்தா
சுப்ரதா தத்தா 1946 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவரது தகப்பனார் வங்காளத்தில் மாணவர் இயக்கத்தை உருவாக்கியவர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் நிருபராகப் பணிபுரிந்து வந்தார். பின் பணிநிமித்தமாக டெல்லிக்குக் குடி பெயர்ந்தார். சுப்ரதாவின் மாணவப் பருவம் டெல்லியில் கழிந்தது. கல்லூரிப் படிப்புக்காக கல்கத்தா திரும்பியவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார். கட்சி முதல்முறை உடைந்ததும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். திரைப்படத் துறையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் தெற்கு கல்கத்தா சினி கிளப் என்ற திரைப்பட இயக்கத்தைத் தொடங்கினார். நக்சல்பாரி எழுச்சி தொடங்கியதும், தலைமைக்கு எதிராகக் கலகம் புரிந்து வெளியேறியவர்களில் சுப்ரதாவும் ஒருவர். அவருக்கு வங்காள பிஹார் எல்லையில் உள்ள சோடாநாகபுரி பீடபூமியில் நிலமற்ற விவசாயிகளை அமைப்பாக்கும் பணி கொடுக்கப்பட்டது. விரைவில் சுப்ரதா பிஹார் மாநிலக் குழுவின் உறுப்பினரானார். சாருவின் மரணத்துக்குப் பிறகு கட்சியில் தீவிர செயல்பாடுகளுக்கான இடது தீவிரவாதமும், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான வலது சந்தர்ப்பவாதமும் தோன்றின. சுப்ரதா இரண்டுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடினார். இந்த இருகுழுவினரையும் கட்சியிலிருந்து வெளியேற்றினார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அவரால் வெளியேற்றப்பட்டவர்களில் அவரது தகப்பனாரும் ஒருவர். பின்பு சுப்ரதா தத்தா சிபிஐஎம் எல் கட்சியின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப்ரதா ஜோஹர் என்ற தனது புனைபெயரிலேயே புகழ் பெற்றிருந்தார்.
இந்தியா முழுவதிலும் கட்சியில் ஏற்பட்டிருந்த பிளவுகளையும் பின்னடைவுகளையும் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் போஜ்பூர் பகுதியில் உருவாகி வந்த புரட்சிகர தளப்பிரதேசத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அழிந்து கொண்டிருந்த சிபிஐ எம் எல் கட்சியை மீட்டெடுக்கும் வல்லமை கொண்டவர் அவர் என்று கணித்த அரசு அவரை ஒழித்துக் கட்டுவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. பிஹாரின் போஜ்பூர் மாவட்டத்தில் பூமிஹார் நிலப்பிரபுக்களே உண்மையில் ஆட்சி நடத்தி வந்தனர். பத்து வயதிலிருந்து தலித் மக்கள் பூமிஹார் நிலங்களில் கொத்தடிமையாக உழைக்க வேண்டும் என்பது விதியாகும். தலித் பெண்கள் திருமணமானதும் முதலிரவை நிலப்பிரபுவின் வீட்டில் கழிக்க வேண்டும் எனப்படும் மோலி பராடா என்ற விதி இந்தப் பகுதி முழுவதும் வழக்கத்திலிருந்தது. இந்த பூமிஹார் நிலப்பிரபுக்கள் அரசு ஆதரவு, பணபலம், படைபலம் கொண்டவர்களாக இருக்க தலித் மக்கள் அரைவயிற்று உணவுடன், தங்கள் உடல்கள் மீதான உரிமை கூட இல்லாமலிருந்தனர். ஜகதீஷ் மஹ்டோ என்ற தலித் செயல்பாட்டாளர் தலைமையில் ஒன்று திரண்ட தலித்துகள் ஹரிஜன்ஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி ஒரு பேரணி நடத்தினர். இவர்கள் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து போராடினாலும், தேர்தல்களில் வாக்களிக்கக் கூட முடியவில்லை. பூமிஹார்கள் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி அனைத்து வாக்குகளையும் போடுவதைத் தடை செய்ய முயன்ற ஜகதீஷ் மஹ்டோ கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போது எதுவும் பேசாத மஹ்டோ பின்பு அடிக்கடி காணாமல் போகத் தொடங்கினார். அந்தப் பகுதி முழுவதும் வைக்கோல் போர்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. நிலப்பிரபுக்களின் பயிர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டன. இப்போது ஜோஹர் என்றழைக்கப்பட்ட சுப்ரதாவை சந்தித்த ஜகதீஷ் மஹ்டோ நக்சலைட்டாக மாறியிருந்தார். அவருடன் ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த ராமேஸ்வர் அஹிர் என்பவரும் இணைந்து கொண்டார். இவர்களுடன் மருத்துவரான நிர்மலும் இணைய வலிமை வாய்ந்த ஒரு குழு உருவாகியது.
1971 ஆம் ஆண்டிலிருந்து 1973 வரை பதினைந்து வலிமை வாய்ந்த நிலப்பிரபுக்கள் இந்தக் குழுவால் கொல்லப்பட்டனர். நக்சல் இயக்கம் அருகிலிருந்த நூறுகிராமங்களுக்கு மேல் பரவியது. மத்திய அரசு துணை ராணுவப்படைகளை அங்கே குவித்தது. நிலமற்ற தலித் மக்களும், நிலப்பிரபுக்களால் நரக வேதனை அனுபவித்து வந்த சிறுநில உடமையாளர்களான பின்தங்கிய வகுப்பினரும் ஒன்றிணைந்து அரச படைகளை எதிர்கொண்டனர். போஜ்பூர் பகுதி முழுவதும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் முற்றாக ஒடுக்கப்பட்டு மக்கள் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. நிலப்பிரபுக்களின் நிலங்களிலிருந்து அறுவடை கைப்பற்றப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சாதி பாகுபாடுகள் கடைப்பிடிப்பது முற்றாக ஒழிக்கப்பட்டது. போலீசும், உள்ளூர் உயர்சாதி படைகளும் இணைந்து ஒவ்வொரு தலித் குடியிருப்பாகத் தாக்கி தீ வைத்து சூறையாடினர். பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நக்ஸல்பாரி போலல்லாமல் போஜ்பூரில் புதுபுது தலைவர்கள் உருவாக்கிக் கொண்டே இருந்தனர். போராட்டம் பலவேறு பகுதிகளுக்கு விரிந்து பரவிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் தாக்குதலும் எதிர்தாக்குதலும் நடந்து கொண்டே இருந்தன. அருகிலிருந்த ஜெஹானாபாத் மாவட்டத்திலும் நக்சல்பாரி நெருப்பு பற்றிக் கொண்டது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், பொருளாதார விடுதலைக்கான போராட்டமும் ஒன்றிணைந்து போஜ்பூரில் ஒரு புதிய வடிவம் எடுத்தது.
1975 ஆம் ஆண்டு அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. இப்போது ஒளிவு மறைவின்றி இன்னும் அதிக படைகளுடன் கிராமங்கள் மேல் தீவிரத் தாக்குதல் நடத்தியது. ஒரு கிராமத்தில் ஜோஹரும், ஜகதீஷ் மஹ்டோவும் டாக்டர் நிர்மலும் சுற்றி வளைக்கப்பட்டனர். பலமணி நேரம் நடந்த போரில் போஜ்பூரில் கிளர்ச்சியை நடத்தி வந்த அத்தனை தலைவர்களும் கொல்லப்பட்டனர். அப்போது தோழர் ஜோஹருக்கு இருபத்தி ஒன்பது வயதுதான் ஆகியிருந்தது. போஜ்பூர் எழுச்சியின் முடிவுடன் நக்சல்பாரி எழுச்சியின் முதல் அலை முடிவுக்கு வந்ததது. சிலிகுரி டிவிஷன், தெப்ரா கோபிபல்லப்பூர், மிட்நாபூர், கல்கத்தா, காகுளம், போஜ்பூர், ஜெஹானாபாத் என்று விரிந்து பரந்திருந்த நிலப்பரப்பில் நடந்த போராட்டங்களில் குறைந்தது பத்தாயிரம் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். முப்பதாயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டிருந்தனர். பல்லாயிரம் பேர் வாழ்நாள் முழுவதற்குமாக ஊனப்பட்டிருந்தனர். பலநூறு தலித் குடியிருப்புகளும் பழங்குடி கிராமங்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டிருந்தன.அணைக்க அணைக்க பரவிக் கொண்டேயிருந்த நக்சல்பாரி நெருப்பு இறுதியாக அணைக்கப்பட்டுவிட்டது என்று பல மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டன…
தனது புவியியல் வரைபடத்தில்
அந்தக் பெயரைக்
காணாத என் மகன்
ஏன் அது அங்கே
இல்லையென்று கேட்கிறான்.
பீதி என் நெஞ்சைக் கவ்வுகிறது.
மௌனமாகவிருக்கிறேன்.
அந்த ஆறெழுத்துச் சொல்
ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல என்பதை
அறிந்திருக்கிறேன் நான்…
பானர்ஜி The name of a village
அடுத்த இதழில்
iramurugavel@gmail.com