இதை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் பைத்தியம் பிடித்து விடாமல் இருப்பதற்காகத்தான். இதை எழுதுவதன் மூலம் நான் பைத்தியம் ஆவதைத் தள்ளிப் போட முடியுமா, எழுத்துக்கு அத்தனை வலு இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வலு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதை எழுதும்போது கண்ணுக்குப் புலனாகாத யாரோ ஒருவரிடம் பேசுவது போல் இருக்கிறது. இதோ இந்தக் கணத்திலேயே, துக்கத்தில் இருக்கும் ஒருவர் அந்த துக்கத்தை இன்னொருவரிடம் சொல்லும்போது துக்கத்தின் வலி குறைகிறது இல்லையா? நம் நெஞ்சை அழுத்தும் பாரத்தைக் கொஞ்சம் இறக்கி வைத்தாற் போன்ற உணர்வு. அப்படியானால் இந்த நாள்குறிப்புகளை எழுத நினைத்த என் முடிவில் தவறில்லை. இந்த எழுத்து நான் பைத்தியம் ஆவதைத் தள்ளிப் போடுகிறதோ இல்லையோ, மூச்சு முட்டும்போது கொஞ்சம் பிராணவாயு கிடைத்தது போல் ஒரு சிறிய ஆசுவாசத்தைத் தருகிறது. அதற்காகவே இதை எழுதிவிட வேண்டியதுதான் என்று தோன்றியது. ஆனால் எதையென்று எழுதுவது, எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றியெல்லாம் எந்தத் தெளிவும் இல்லை. இருந்தாலும் ஆரம்பித்து விட்டேன்…
இப்படித்தான் என் நாள்குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன். ஆனால் நாவல் என்று வரும்போது – இப்படியா ஆரம்பிப்பது ஒரு கதையை?
இல்லை. தப்பு. இது கதை அல்ல. என் வாழ்க்கை. இதை பெருமாளிடம் சொல்லி எழுதச் சொன்னபோது அவர்தான் என்னையே எழுதச் சொன்னார். அவருக்குத்தன்னுடைய கதையை எழுதும்போது கிடைக்கும் லயமும் லாவகமும் மற்றவர்களின் கதையை எழுதும்
போது கிடைப்பதில்லையாம். ஆனாலும் ஒரு விஷயம் இடிக்கிறது. என் வாழ்க்கை, என் வாழ்க்கை என்று சொல்லி எத்தனை பேர் ஜல்லிய
டித்துக் கொண்டிருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்களைத்தான் நீ போட்டுக் கிழிகிழியென்று கிழித்துத் தோரணம் கட்டுகிறாயே பெருமாள்? மேலும், என் கதையை எழுதினால் அது மற்றவர்களின் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேலும், அதை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

“கதை சொல்வதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? கொலைகாரன் கொள்ளைக்காரன். ரேப்பிஸ்ட். திருடன். வேசி. பணக்காரன். அரசியல்வாதி. சினிமா நடிகன். மகாத்மா. கைதி. துறவி. இப்படி யாரெல்லாம் மந்தையிலிருந்து பிரிந்தவர்களோ அவர்களுக்கெல்லாம் கதை சொல்லத் தகுதி இருக்கிறது. நீ ஏழரை ஆண்டுகள் காராக்கிரஹத்தில் வாழ்ந்திருக்கிறாய் என்ற ஒரு தகுதியே போதும் நீ கதை சொல்வதற்கு…
மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் எதன் பொருட்டு எழுத ஆரம்பித்தார்களோ அதே காரணத்தைத்தான் நீயும் உன்னுடைய நாள்குறிப்புகளின் தொடக்கத்தில் சொல்லியிருக்கிறாய். நாம் நம்முடைய மனப்பிறழ்வை நம் எழுத்தின் மூலமாகத்தான் கடக்க முயற்சிக்கிறோம். தைரியமாக எழுது. நானும் அவ்வப்போது உன்னோடு சேர்ந்து கொள்கிறேன்.”

பெருமாள் இத்தனை தைரியம் சொல்லியிருந்தாலும் எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. காரணம், லக்ஷ்மி என்ற அம்மாள் வேறு தமிழில் பெண்களின் கண்ணீர்க் கதைகளை ஏராளமாக எழுதியிருக்கிறாராம். கேள்விப்பட்டேன். படித்ததில்லை. ஓ, என்னைப் பற்றிய எந்த அறிமுகமுமே இல்லாமல் ‘நான் படித்ததில்லை’ என்று சொன்னால் உங்களுக்கு என்ன புரியும்? இப்போதுதானே உங்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது? அதிலும், இடையிலேயே நீங்கள் என் கதையில் சலிப்புற்று இதைத் தூக்கிக் கடாசி விட்டால் உங்களுக்கும் எனக்குமான உறவு பாதியிலேயே அறுந்து போகும். ஆனாலும் எடுத்த எடுப்பில் எப்படி என் கதையை ஆரம்பிப்பது என்பதில் இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

சரி, முதலில் இந்த நாள்குறிப்புகளை எப்படி எழுத ஆரம்பித்தேன் என்பதிலிருந்து தொடங்கலாம். முதல் பிரச்சினை, நாள்குறிப்புகளை எழுதுவதற்கான காகிதமும் பேனாவும். அப்போது லேப்டாப்பெல்லாம் கனவில் கூட சாத்தியம் இல்லாத தூரத்தில் இருந்தது. பாபா தன் கணக்கு வழக்குகளை எழுதுவதற்காக வைத்திருந்த டைரிகளில் ஒன்றை நான் திருடிக் கொண்டேன். ஒரு ட்ரங்க் பெட்டி முழுவதும் இருந்த டயரிகள் எல்லாவற்றிலும் நிறைந்திருந்தன எண்கள். எல்லாம் பாபாவின் வியாபாரக் கணக்கு வழக்குகள். அதில் ஒரு டயரி எழுதப்படாமல் இருந்தது. நான் எழுதுவதற்காகவே அது அப்படி இருந்தது என்று நினைக்கிறேன். இதையே அம்மா என்றால், தெய்வமே இப்படி ஏற்பாடு செய்திருக்கிறது என்பார்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதெல்லாம் வாழ்க்கையை சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆடம்பரம் என்று நினைக்கிறேன். நான் வாழ்க்கையை இழந்தவள். இழந்தவள் என்பது கூடத் தப்பு. இருந்திருந்தால்தானே இழக்க முடியும்? என் வாழ்க்கை தொடக்கத்திலேயே பொசுங்கி விட்டது. வாழ்க்கையில் நம்பிக்கையின் கீற்று தெரிவதற்கான எந்த வாய்ப்புமே இல்லாதவளாக இருந்தேன்.
கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதற்கு பாபாதான் முக்கியக் காரணம். எந்நேரம் பார்த்தாலும் கடவுளின் கூடவே இருப்பவர் பாபா. நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு பூஜை பண்ண ஆரம்பித்து விடுவார். ஏழு மணிவரை தொடரும் பூஜை. பூஜை முடிந்த கையோடு எதையாவது காரணம் வைத்து அம்மாவை அடிக்க ஆரம்பிப்பார். இல்லாவிட்டால் காது கூசும் வசைகள். எல்லாம் தமிழ் வசைகள். அது என்னவோ தெரியவில்லை, வீட்டில் பேசுவது பாங்ளா என்றாலும் திட்டும்போது மட்டும் தமிழுக்குத் தாவி விடுவார். தாய்மொழியின் புனிதம் கெட்டு விடக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ? அவர் பேசும் வசை வார்த்தை எதற்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. இப்போதுதான் பெருமாளின் எழுத்தைப் படித்த பிறகு, பெருமாளுடன் பழகிய பிறகு அர்த்தம் புரிகிறது.

பார்ப்பதற்கு பக்திப் பழமாகத் தெரிவார். ஊரெல்லாம் பெத்த பேர். வீட்டில் இப்படி சைக்கோவைப் போல் நடந்து கொள்கிறார் என்று சொன்னால் நம்மைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள்.

பாபா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஏதாவது ஒரு மந்திரம் டேப் ரெக்கார்டரில் ஓடிக் கொண்டிருக்கும். அதோடு கூடவே கெட்ட வார்த்தைகளில் திட்டு, அடி, உதை எல்லாம் நடக்கும். யாருக்குக் கடவுள் நம்பிக்கை வரும்?
பெருமாளிடம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மனநலப் பிரச்சினைகளை சொன்னேன்.
(ஏய் பெருமாள், உனக்கென்று எங்கிருந்துதான் கிளம்பி இப்படிப்பட்ட பைத்தியக்கார கேசுகள் வந்து விழுகின்றன என்று தெரியவில்லையே? பேய்களைப் பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அதாவது, சில குறிப்பிட்ட அலைவரிசைகளை எப்படி ஆன்ட்டனா ஈர்க்கிறதோ அதேபோல் சில பேரிடம் மட்டும்தான் பேய்கள் வந்து தங்குமாம். அந்த மாதிரி, மனநோய்ப் பிரச்சினைகளை உடையவர்களை மட்டுமே ஈர்க்கும் ஆன்ட்டனா உன்னிடம் ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறேன்! – கொக்கரக்கோ)
என்னால் யாரோடும் பேச முடியவில்லை. யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் அது என் காதிலேயே விழுவதில்லை. நேருக்கு நேர் நின்று கேட்டால் கூட செவிகள் அதை வாங்குவதில்லை. ஏதோ கேட்கிறார்கள் என்று புரியும். ஆனால் என்னவென்று தெரியாது.

உடல் உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விடும். ஒருத்தருக்கு ஒருத்தரே இப்படியென்றால், கூட்டத்தில் விட்டால் என்ன ஆகும்? எந்தப் புலனும் அதன் இயல்பில் இருக்காது. கண்கள் பார்க்கும். என்ன பார்க்கிறதென்று மூளையில் பதியாது. சத்தம் கேட்கும். என்ன சத்தம் என்று மூளையில் பதியாது. சிறிய சப்தத்துக்கெல்லாம் ஓட்டுக்குள் ஆமை ஒடுங்கிக் கொள்வது போல் உள்ளுக்குள் பதுங்கி விடுவேன். அதேபோல் அடுத்த மனிதரின் அண்மை அச்சத்தையும் பீதியையும் அளிக்கும். இதைக் கூட பெருமாளின் எழுத்துகளைப் படித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன்னால் அது ஒரு பிரச்சினை என்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஒருவிதமான பைத்தியம் பிடித்திருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
***
ஒரே ஒரு சம்பவம்தான் என் வாழ்வைப் பறித்தது. எல்லாம் இந்த உடம்பால் வந்தது. உடம்பின் வேட்கை. அந்தச் சம்பவத்தினால்தான் பதினாறு வயதிலிருந்து ஏழரை ஆண்டுகள் அந்த இருள் சூழ்ந்த கொட்டடியில் வாழ்ந்தேன்.

பார்த்தீர்களா, எடுத்த எடுப்பில் கதையின் முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு எதையும் கோர்வையாக சொல்லத் தெரியாது. நான் எழுதி வைத்திருந்த நாள்குறிப்புகளை மாற்றாமல் அப்படியே கொடுத்து விடலாம் என்றால் ஓடிப் போய் விடுவீர்கள். எல்லாம் ஒரு மனநோயாளியின் பிதற்றல்களாக இருக்கும். அதனால் கொஞ்சம் நகாசு வேலை செய்துதான் தரவேண்டியிருக்கிறது. நகாசு வேலை செய்வதற்குக் கொஞ்சமாவது இலக்கியம் படித்திருக்க வேண்டும். நான் படித்ததோ பெருமாளை மட்டும்தான். இல்லாவிட்டால் பாங்ளாவில் சில ஆன்மீகப் புத்தகங்கள். அதைக் கூட படித்தது ஆன்மீக நாட்டத்தினால் அல்ல; பாங்ளா மொழியைப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினால்தான். வாழ்வின் மீது எந்தப் பிடிப்பும் இல்லாத நான், வாழ்வின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத நான் எப்படி பாங்ளா மொழியைப் படித்தேன் என்று இப்போது சொல்ல முடியவில்லை. படிப்பது எனக்குப் பிடிக்கும். இன்னது என்று எதுவும் குறிப்பாக இல்லை. எதுவாக இருந்தாலும் படிப்பேன். பெருமாள், இதை நீ சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் வேறு எந்தத் திறப்பும் இல்லாத ஒரு பதின்பருவத்துப் பெண்ணுக்கு படிப்பதற்கு மட்டும்தான் வாய்ப்பு இருக்கிறது என்றால், அவளுக்குப் படிப்பு என்ற காரியம் பிடித்துப் போகும்தானே? அப்படித்தான் எனக்கு படிப்பு என்ற விஷயமே மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகவும் பிரியத்துக்குரியதாகவும் இருந்தது.

ஆனால், இதோ இப்போது, எனக்கு முன்னால் பல்வேறு வழிகள் திறந்து கிடக்கின்றன. நாள் பூராவும் உலக சினிமா பார்த்துக் கொண்டிருக்கலாம். அபிஜித்தோடு சேர்ந்து ஊர் சுற்றலாம். பப்புக்குப் போகலாம். அவனுக்கும் எனக்கும் இருவருக்குமே பப்புக்குப் போவது பிடிக்கும். ஆனால் இது எல்லாவற்றையும் விட எனக்குப் படிப்புதான் பிடித்திருக்கிறது. அதிலும், இலக்கியம். அதிலும், உன்னுடைய எழுத்து.
என்னுடைய இன்னொரு இயல்பு என்னவென்றால், படிப்பது எல்லாமே ஏதோ ஸ்கேன் பண்ணியது போல் மனதில் பதிந்து விடும். அது நல்லதா, கெட்டதா என்றுதெரியவில்லை. கல்விக்கூடங்களில் மதிப்பெண் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.
இப்படியாகத்தான் பாங்ளா மொழியை எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக் கொண்டேன்.
ஆக, பாங்ளா மொழியில் படித்த ஆன்மீக நூல்கள், பெருமாளின் எழுத்துக்கள் ஆகிய இந்த இரண்டு வாசிப்பும் போதுமா என் கதையைச் சொல்வதற்கு?
”உன் கதை அசாதாரணமாக இருக்கிறது. அது போதும்
நீ கதை சொல்ல” என்கிறார் பெருமாள். அப்படியானால் கதாசிரியர் லக்ஷ்மியின் பெண்களும் அசாதாரண
மானவர்களா? லக்ஷ்மியின் பெண்கள் கண்ணீர்க் கதை நாயகிகள் என்றால் நான் மட்டும் எப்படி விதிவிலக்கு? நானுமே கண்ணீர்க் கதை நாயகிதானே??
(இல்லை கண்ணே, செல்லப்பாவின் ஜீவனாம்சம் கதையில் வரும் சாவித்திரியும் கண்ணீர்க் கதை நாயகிதான்.
ஆனால் லக்ஷ்மியின் நாயகிகளுக்கும் சாவித்திரிக்கும் வித்தியாசம் இருக்கிறது. லக்ஷ்மியின் பெண்கள் ஜனரஞ்சகத் தேவைக்காக உருவாக்கப்பட்டவர்கள். அச்சு வார்ப்பாக ஒன்றே போல் வந்து விழும் பிளாஸ்டிக் குவளைகளைப் போல. சாவித்திரியோ மானுட வாழ்வு தரும் துயரத்தின் குறியீடு. எனவே இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் உன் கதையை தைரிய
மாகச் சொல். – பெருமாள்.)
இந்தப் பின்னணியில்தான் என் கதையை சொல்லத் துணிந்தேன். ஆனால் எழுத ஆரம்பித்த பிறகு எதை முதலில் சொல்வது, எதைப் பின்னால் சொல்வது என்ற குழப்பம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். என் மனதில் தோன்றுவதையெல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் சொல்லி விடுவது. வரிசைக்கிரமமெல்லாம் பார்க்க வேண்டாம். சரியா? படித்து முடிக்கும்போது உங்கள் மனதிலேயே ஒரு சித்திரம் உருவாகியிருக்கும். அது கோட்டுச் சித்திரமாக இருந்தாலும் சரி, அச்சு வார்ப்பாக இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன்.

பாபா, அம்மா, நான் – மூவர்தான் எங்கள் குடும்பம். நாங்கள் வசித்த பகுதியில் எங்கள் சொந்தம் என்று ஒரு பத்து இருபது குடும்பங்கள் இருந்தன. ம், சொல்ல மறந்து விட்டேன். நாங்கள் வங்காளிகள். தமிழ்நாட்டில் தெலுங்கர், கன்னடியர், மலையாளி, மராட்டியர் எல்லாம் குடியேறியிருக்கிறார்கள். ஆனால் வங்காளிகள் எப்படி இத்தனை தூரம் கடந்து வந்து இங்கே குடியேறினார்கள் என்று நான் வீட்டுச் சிறையில் இருந்த காலத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பிஹாரில் உள்ள பகல்பூரில் அவுரிச்செடி பயிரிட்டு அதிலிருந்து சாயம் தயாரிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தார்கள் எங்கள் மூதாதையர். ரொம்ப காலத்துக்கு முன்னாலெல்லாம் இல்லை. இதோ, பதினெட்டாம் நூற்றாண்டில்தான். பிஹாரிகள் அல்ல, வங்காளத்திலிருந்து பகல்பூருக்குக் குடிபெயர்ந்தவர்கள். சாயத் தயாரிப்பு அப்போது இந்தியாவில் பெரும்பணம் ஈட்டக் கூடிய தொழிலாக இருந்திருக்கிறது. பகல்பூர் பட்டு வணிகத்துக்குப் பெயர் பெற்ற ஊராக இருந்தாலும் அங்கே குடியேறிய வங்காளிகள் ஆரம்பத்தில் அவுரிச் சாகுபடி செய்து சாயத்தை விற்பனை செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். நல்ல பணப்புழக்கத்தின் காரணமாக அங்கே அவர்கள் லேவாதேவி தொழிலிலும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் 1855இல் அங்கே நடந்த ஸந்த்தால் ஹூலின் போது உயிருக்குத் தப்பி தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்தான் என் மூதாதையர். இதுதான் இந்தப் பிராந்தியத்தில் உள்ள வங்காளிகளின் பூர்வகதை என்று என் தாதா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

வீட்டுச் சிறையிலிருந்த எனக்கு என் திருமணத்தின் மூலமாக விடுதலை கிடைத்தது. ஆனால் அந்த விடுதலையும் கூடப் பேயிடமிருந்து தப்பி பிசாசிடம் மாட்டிய கதையாக ஆகி விட்டது.

ஆம், அங்கே என் பாபாவுக்கு பதிலாக ஷாஷூரி இருந்தார். ஒரு வருடம் அபிஜித் வீட்டில்தான் இருந்தோம்.
அபிஜித் என் கணவன். அவனைப் பற்றி போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.
பேயிடம் தப்பி பிசாசிடம் மாட்டிய கதையெல்லாம் படு சாதாரணமான மத்தியதரக் குடும்பங்களில் நடக்கும் மாமியார் கொடுமைதான். நான் அபிஜித்தோடு பேசக் கூடாது. எப்போதுமே மாமியாரோடுதான் ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். மாமியார் நில் என்றால் நிற்க வேண்டும்; உட்கார் என்றால் உட்கார வேண்டும். ஆனால் மற்ற மாமியார்களுக்கும் என் ஷாஷூரிக்கும் என்ன வித்தியாசம் என்றால், இவர் அபிஜித்தையும் சித்ரவதை செய்தார். அவனுமே இவரைக் கேட்காமல் எங்கேயும் போகக் கூடாது. யாரோடும் பேசக் கூடாது. அப்படியே ஒரு அடிமை போல் வளர்க்கப்பட்டிருந்தான்.

பொறுங்கள். அடிமை என்று சொன்னால் போதாது. கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டும்.
பெருமாள்தான் இந்தச் சம்பவத்தை தினசரியில் படித்ததாகச் சொன்னார். மனநோயாளியான பெண்ணொருத்தி ஒரு குழந்தையைத் தத்து எடுத்திருக்கிறாள். வீட்டில் ஆண் துணை கூட இல்லை. (அப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் தத்துக் கொடுப்பார்களா என்ன? ஆனால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.) குழந்தை அழும்போதெல்லாம் இஸ்திரிப் பெட்டியை சூடேற்றி அந்தக் குழந்தையின் முதுகில் வைத்திருக்கிறாள் அந்தப் பெண். கொஞ்ச நாளில் போலீஸில் மாட்டிக் கொண்டாள்.

அபிஜித்தின் இளமைக் காலமும் அந்த தினசரிச் செய்தி மாதிரியேதான் இருந்திருக்கிறது. செய்தியில் வந்தவள் மனநோயாளி. ஆனால் அபிஜித்தின் அம்மா பார்ப்பதற்கும் பழகுவதற்கும் சாதாரணமாகத்தான் இருந்தாள். சொல்லப் போனால் அபிஜித்தின் தம்பியை அவள் சீராட்டிப் பாராட்டி வளர்த்திருக்கிறாள். அபிஜித்தின் மீது மட்டும்தான் தனக்குள்ளிருந்த அத்தனை வன்மத்தையும் கொட்டியிருக்கிறாள். இது எந்த மாதிரியான மனநோய் என்று தெரியவில்லை.

தினசரிச் செய்தியில் இஸ்திரிப் பெட்டி என்றால், அபிஜித்துக்கு தோசைக் கரண்டி. திருமணம் முடிந்ததுமே என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். முதுகு, தொடை, பிருஷ்டம் என்று உடம்பில் கண்ணுக்குப் புலப்படாத இடம் எல்லாவற்றிலும் கோடு கோடாகத் தோல் கருகிப் போய் இருந்தது. அபிஜித் வேறு தொட்டால் ரத்தம் வரும் சிவப்பு. எப்படி இருக்கும்? என் உடம்பெல்லாம் நடுங்கிப் பதறி விட்டது. அதிலும் ஒரு தொடையில் தோசைக் கரண்டியின் கைப்பகுதியால் அல்லாமல் அதன் பட்டையால் வைத்துத் தீட்டியிருக்கிறாள்.
“அட மூடனே, இதையெல்லாம் ஏன்டா பொறுத்துக் கொண்டிருந்தாய், நீ ஒரு ஆண் பிள்ளைதானே? உயிரே போனாலும் பரவாயில்லை என்று திருப்பித் தாக்கியிருக்க வேண்டியதுதானே?” என்று அலறியபடி கேட்டேன்.

“செல்லம்… என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே அடியும் உதையும்தான் தின்றேன்” என்றான்.
ஆனால் அப்புறமாக யோசித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது, என் அம்மா மட்டும் என்ன, என் அப்பாவை எதிர்த்துத் திருப்பித் தாக்கினாளா என்ன?
அபிஜித் சொல்வதைப் பார்த்தால் ஆறு மாதக் குழந்தையிலிருந்தே அவனை அவள் அடித்து உதைத்திருக்கிறாள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவனுடைய முதல் ஞாபகம் என்று பதிந்திருப்பதே அடியும் உதையும்தானாம். ஒரு சம்பவம் சொன்னான். எத்தனை வயது என்று அவனுக்குத் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு விட்டான். கும்மிருட்டு. பயந்து விட்டான். அழுதுகொண்டே எழுந்து தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து எங்கெங்கோ போயிருக்கிறான். ஒரு இடத்தில் வழி முடிந்திருக்கிறது. கையால் சுவரைத் தடவிக் கொண்டே நகர்ந்தபோது ஒரு இடத்தில் கதவு திறந்து கொண்டு விட்டது. பார்த்தால் முழு வெளிச்சத்தில் அவனுடைய அம்மாவும் அப்பாவும் உடம்பில் துணி இல்லாமல் கட்டிப் பிடித்த படி அசைந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவனுடைய அழுகை சத்தம் கேட்டதும் எழுந்து வந்த அம்மா இவனைத் தூக்கித் தரையில் போட்டு மிதி மிதியென்று மிதித்தாளாம். மிதித்தபோது அவள் தொடைகளின் நடுவே கருப்பாக முடி இருந்ததைப் பார்த்திருக்கிறான். நமக்கு ஏன் அப்படி முடி இல்லை என்று அந்த அடியின் போதும் யோசித்திருக்கிறான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தொடர்ந்து பல நாட்கள் அவள் அவனைக் கால்களால் உதை உதை என்று உதைத்துக் கொண்டே இருந்தாளாம். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உதை. ஒருநாள் ஆவேசம் தாங்காமல் செத்துப் போடா தேவ்டியாப் பையா என்று கத்திக் கொண்டே கழுத்தில் காலை வைத்து நசுக்கியிருக்கிறாள். அப்போதுதான் அவன் அப்பா வந்து அவளைத் தடுத்து அபிஜித்தைக் காப்பாற்றியிருக்கிறார். சொல்ல மறந்து போனேன். இத்தனை அடி உதைகளுக்கும் அப்பா அதைக் கண்டு கொள்வதே இல்லையாம். இரண்டு பேரையும் ஆடையில்லாமல் பார்த்த அன்று மரண அடி வாங்கிய போதுகூட அவர் வந்து தடுக்கவில்லையாம். எப்போதும் அவள் அடிப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருப்பாராம்.

அடியும் உதையும் சலித்துப் போகும்போதுதான் தோசைக் கரண்டியால் சூடு. இதையெல்லாம் கேட்பதற்கு
அந்த வீட்டில் ஒரு நாதி இல்லை.

சரி, அந்தக் காயமெல்லாம் மருந்து போடாமல் எப்படித் தானாக ஆறும்? கேட்பதற்கு நாதியில்லாத வீட்டில் யார் மருந்து போட்டு விட்டது?
வீட்டு வேலைக்காரிதான் தேங்காய் எண்ணெய் போட்டு ஆற்றியிருக்கிறாள். அந்த விஷயத்திலும் அபிஜித்தின் அம்மா அதிர்ஷ்டக்காரிதான் போல. பொதுவாக இது போன்ற விஷயங்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மூலம்தான் வெளியே கசிந்து, பிறகு போலீஸ் கேஸாக மாறும். ஆனால் அபிஜித் வீட்டு வேலைக்காரி இது பற்றி வெளியே வாயே திறக்கவில்லை போல. அபிஜித்தின் துரதிர்ஷ்டம்.

ஹைஸ்கூலுக்குப் போக ஆரம்பித்த பிறகு சூடு போடுவது குறைந்திருக்கிறது. ஆனால் அடியும் உதையும் நிற்கவில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் மாட்டை அடிப்பது போல் அடிப்பாளாம். அடிப்பதற்கு அவளுக்குப் பிடித்த இடம், தலை. தலையிலேயேதான் குறி பார்த்து அடிப்பாளாம். கரண்டி, சப்பாத்திக் கட்டை மாதிரி கையில் எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு அடி. சப்பாத்திக் கட்டையால் அடி வாங்கி பல சமயங்களில் மண்டை உடைந்திருக்கிறது. பிரம்பு என்றால் மட்டும்தான் உடம்பு.

அடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா, அப்படி ஒரு காரணமும் இருக்காதாம். போகிற போக்கில் தலையைப் பார்த்து ஓங்கி ஒரு குட்டு. கூடவே சாவுடா தேவ்டியாப் பயலே என்று வசை. சரமாரியாகக் கெட்ட வார்த்தைகள் வந்து விழுமாம். அபிஜித்தின் வாழ்வில் வேறு எந்தப் பெண்ணும் கெட்ட வார்த்தை பேசிக் கேட்டதில்லை என்கிறான்.

என்னென்ன கெட்ட வார்த்தைகள் என்று கேட்டேன்.

புண்டைய நக்கி, சாண்டக் குடிக்கி என்று என்னென்னமோ என்கிறான். அவனுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் சேரிகளில் கூடப் புழங்காத அளவுக்கு மட்டமான கெட்ட வார்த்தைகள்.

தலையில் அடி வாங்கி அடி வாங்கி அபிஜித்தின் மூளை நிரந்தரமாகவே கலங்கி விட்டது என்று நினைக்கிறேன். எப்போதுமே பித்துப் பிடித்தவனைப் போல் மோட்டு வளையைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பான். எதைப் பார்த்தாலும் பயம். நடுக்கம். தனியாக இருந்தாலே உடம்பு நடுங்க ஆரம்பித்து விடுகிறது. அதனால்தான் என்னை நிழல் போல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான். கழிப்பறைக்குக் கூட என்னால் நிம்மதியாகப் போக முடியவில்லை. ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆகி விட்டால் குட்டி குட்டி என்று கதவைப் பிறாண்ட ஆரம்பித்து விடுகிறான்.
போன ஜென்மத்து ஞாபகம் போல் எல்லாம் மங்கலாகத் தெரிகிறது குட்டி. எதுவும் என் கற்பனை அல்ல. எல்லாமே எனக்கு நடந்திருக்கிறது. நடத்தியது எல்லாமே என் அம்மாதான். முகம் மட்டும் தெளிவாக இருக்கிறது. என் முகத்தில் தன் அகன்ற கையை வைத்து சுவரிலேயே அடிக்கிறாள் அம்மா. பின் மண்டை தெறிக்கிறது. ஆனால் மண்டை உடைவதில்லை. பிரக்ஞை கலங்குவது போல் வலி பிளக்கிறது. பல மணி நேரத்துக்கு சுவாதீனம் இல்லாமல் பிணம் போல் கிடக்கிறேன். அப்போதும் அம்மாவுக்குத் திருப்தி இல்லை போல. காலைக் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டே இருக்கிறாள். அப்படிக் கழுத்தில் காலை வைத்து அழுத்தினால் வாஸ்தவத்தில் உயிர்தானே போக வேண்டும்? அடி வாங்கி சவம் போல் கிடக்கும் எனக்கோ பிரக்ஞை வந்து விடுகிறது. என் வயிற்றில் காலை வைத்து ஓங்கி ஒரு எத்து எத்தி என்னைச் சுவரில் அடித்து விட்டுப் போய் விடுகிறாள்.

எப்போதுமே கவனித்திருக்கிறேன், அடி உதை எப்போது நிற்கும் என்றால், அடித்து அடித்து அம்மா தானாகவே களைத்துக் போகும்போதுதான். மண்டை சுவரில் மோதும்போது பத்து நிமிடங்களுக்குக் கண் தெரியாமல் போய் விடும். முழு இருளாக அல்ல. கலங்கலாக. நிழல் உருவங்களாக. பேய்ப் படங்களில் வரும் ஆவி ரூபங்களைப் போல. அலை அலையாக. நிலைத்து நிற்காமல் பறப்பது போல. மனிதர்களும் பொருள்களும் காற்றில் மிதப்பது போல. நானுமே மிதக்கிறேன். அம்மாவும் மிதக்கிறாள். அந்த உணர்வு நன்றாக இருக்கிறது. அம்மா, என் தலையை சுவரில் மோதும்போதுதான் அப்படி ஆகிறது. அது நன்றாக இருக்கிறது அம்மா. மோதிக் கொண்டே இரு. அப்போதுதான் நானும் நீயும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களும் பறக்கலாம். பறப்பதற்கு இது ஒரு சுலப வழி.

ஏன்டா இப்படி என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் பைத்தியமாகவே இருக்கிறீர்கள்? நான் என்னடா பாவம் பண்ணினேன்? பார்த்தீர்களா, நானே இந்த நம்பிக்கையாளர்களின் மொழியில் பேச ஆரம்பித்து விட்டேன்? என்னைச் சுற்றி நடக்கும் கொடூரங்களைப் பார்த்துத்தான் நான் கடவுள் நம்பிக்கையே இல்லாதவளாக இருக்கிறேன். நம்பிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள், அபிஜித் தன் முந்தின ஜென்மாவில் செய்த பாவத்துக்கான தண்டனையை இந்த ஜென்மாவில் அனுபவிக்கிறான். அப்படித்தானே? என்னடா வாழ்க்கை இது? ஒரு பச்சிளம் சிசுவின் கழுத்தை நெறித்துக் கொல்லப் பார்த்திருக்கிறாள் ஒரு ராட்சசி. ஆறு மாதக் குழந்தையிலிருந்தே ஆக்கினை ஆரம்பித்திருக்கிறது. அபி சொல்வதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மண்டையை சுவற்றில் மோதினால் பொறி கலங்கி மயக்கம் வந்து விடும் இல்லையா? அந்த மயக்கத்தைத்தான் சொல்லுகிறான் இந்த லூசுப் பயல். போதைக்காக வார்னிஷைக் குடித்துச் சாகிறார்கள் இல்லையா, அந்தக் கதை.

ஆடைகளைக் களையச் சொல்லி குப்புறப் படுக்க வைத்து முதுகிலும் பிருஷ்டத்திலும் விளாரு விளாரு என்று விளாறுவாள் அம்மா. இதெல்லாம் வெகு இயல்பாக பாபாவின் எதிரிலும் தம்பி ஆதித்யாவின் எதிரிலுமே நடக்கும். அவர்களும் இதை வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். ஆதி மட்டும் அவ்வப்போது குறும்பாகச் சிரித்து விட்டுப் போவான். ஆனால் இது எல்லாவற்றையும் விடப் பெரிய தண்டனை என்னவென்றால், அம்மாவின் திடீர்த் தாக்குதல்தான். மற்ற அடி உதைகளெல்லாம் அவை வருவதற்கு முன்பாக அதற்கான முஸ்தீபுகளுடன்தான் வரும். அவள் பிரம்பை எடுத்தாலே நான் சட்டையையும் டிராயரையும் கழற்ற ஆரம்பித்து விடுவேன். தோசைக் கரண்டியை அடுப்பில் போடும்போதும் தெரிந்து விடும். இரு, ஒனக்கு தோச சுட்டுத் தர்றேன் என்று சொல்லி விட்டுத்தான் செய்வாள். மண்டையை சுவற்றில் மோதுவதும் ஒரு ஆவேசத்துடன்தான் நடக்கும். எது என்னால் தாங்கவே முடியாதது என்றால், நான் படித்துக் கொண்டோ மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டோ அமர்ந்திருக்கும்போது நான் சற்றும் எதிர்பார்க்காதபடி என் மண்டையில் சப்பாத்திக் குழவியால் போடுவதுதான். இல்லாவிட்டால், திடீரென்று நான் எதிர்பாராத சமயத்தில் காலால் ஒரு உதை விடுவாள். பத்து அடி தூரத்தில் போய் விழுவேன். இல்லாவிட்டால் நடு மண்டையில் ஒரு குட்டு. அவளுக்கு இரும்புக் கை. சப்பாத்திக் குழவிக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கும் அந்தக் குட்டு.

இப்போது அந்த முண்டைக்கு அறுபது வயது இருக்கும். நன்றாகத்தான் இருக்கிறாள். வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவித்தது இல்லை. ராணி மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எங்கே இருக்கிறது தர்மம்? எங்கே இருக்கிறது நியாயம்? எங்கே இருக்கிறது தர்க்கம்? முற்பகல் செய்து எங்கே விளைந்தது பிற்பகல்? முழுக்க முழுக்க முற்பகலாகவே போய்க் கொண்டிருக்கிறதே? இதில் எதற்காகக் கடவுளை வணங்க வேண்டும்? எனக்கு என்னவோ ஹிட்லர் போன்ற ஒரு கொடுங்கோல் ஆட்சியாளனை வணங்க வேறு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது போல் இருக்கிறது? என்னை என் போக்கில் விடுங்களேன் ஐயா, அந்தக் கொடுங்கோல் இறைவனை என் பாட்டுக்கு வெறுத்து விட்டாவது போகிறேன்? சொல்லப்போனால் வெறுப்பு கூட இல்லை. கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, fuck off என்றுதான் தோன்றுகிறது.

சமீபத்தில் ஒருநாள் ஒரு மாலுக்குப் போயிருந்தோம். தஹி பாவ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என்னுடைய ஜீன்ஸில் கொஞ்சம் சிந்தி விட்டது. ரெஸ்ட் ரூமுக்குப் போய் சுத்தம் செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு, பக்கத்திலேயே இருந்த ரெஸ்ட் ரூமுக்குப் போனேன். சுத்தம் செய்து விட்டு டிஷ்யூ பேப்பரால் துடைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ரெஸ்ட் ரூமுக்குள் வந்த ஒரு பெண் என் பெயரைக் குறிப்பிட்டு சத்தமாக அழைத்து “உங்களை உங்கள் கணவர் வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்” என்றாள். எப்படி இருக்கிறது கதை? தனியாக இருப்பது என்றால் அந்த அளவுக்கு அச்சம். கோபமாக வெளியே வந்தேன். பார்த்தால் வேர்த்து விறுவிறுத்து வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருக்கிறான். வந்த கோபமெல்லாம் பறந்து விட்டது.

அபிஜித்துக்கு சென்னைக்கு மாற்றலாகி நாங்கள் தனிக்குடித்தனம் வந்த பிறகுதான் ஷாஷூரி ராட்சசியிடமிருந்து எனக்கும் அவனுக்கும் விடுதலை கிடைத்தது. ஆனால் அதுவும் ஓரளவுக்குத்தான். போனிலேயே விதவிதமான சித்ரவதைகளைக் கொடுத்தாள் அந்த ராட்சசி. அபி ஏதாவது அவசரமான அலுவலக வேலையில் இருப்பான். கொரோனாவுக்குப் பிறகு அநேகமாக வீட்டிலிருந்தபடியேதானே வேலை? ஷாஷூரியிடமிருந்து போன் வரும்.

ஒரேயடியாக நீ என்னை மறந்து விட்டாய். உன்னைப் பெற்று வளர்த்ததற்கு இதுதான் நீ செய்யும் நன்றிக் கடனா? உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற என்னை விட நேற்று வந்த தேவடியாள் உனக்குப் பெரிதாகப் போய் விட்டாளா? நான் உன் அம்மா. இல்லாவிட்டால், அவள் உனக்கு எதைக் கொடுத்து உன்னை மயக்குகிறாளோ அதைக் கூட உனக்கு நான் கொடுத்திருப்பேன், நன்றி கெட்ட நாயே? (இந்த வாக்கியத்துக்கு அவனுக்கு அர்த்தம் தெரியவில்லை. என்னிடம்தான் கேட்டான். சொன்னேன்.)

இது சும்மா ஒரு மாதிரிக்காகச் சொன்னேன். இது போல் இன்னும் என்னென்னவோ. நான் நினைக்கிறேன், பகல்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த கும்பல் முழுக்கவுமே இப்படித்தான் ஸைக்கோவாக மாறி விட்டதோ என்று.
***
ஒருமுறை பெருமாளுடன் மூன்று தினங்கள் தொடர்ந்தாற்போல் பேச முடியாமல் போனது. பாபா ஊரிலிருந்து வந்திருந்தார். பாபா ஊருக்குத் திரும்பியதும் பெருமாளுக்கு போன் செய்தேன். பாபா இருக்கும்போது பேச முடியாது என்றேன். அப்போது பெருமாள் சொன்னார், “நீ உன் அப்பனிடம் சொல்ல வேண்டும். ‘இதோ பாரும், எனக்குத் திருமணம் ஆகி விட்டது. இனிமேலும் நான் உம்முடைய அடிமை இல்லை. இனிமேலெல்லாம் நீர் என்னை மிரட்ட முடியாது. மரியாதையாக உம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போரும்’ என்று சொல். யார் உன்னைத் தடுக்கிறார்கள்?”

தடுப்பது ஒன்றே ஒன்றுதான். எனக்கென்று ஒரு வேலை வேண்டும். ப்ளஸ் டூ மட்டுமே படித்த ஒரு பெண்ணுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? அதனால் இப்போது நான் படிப்பில்தான் முழுக் கவனமும் செலுத்திக் கொண்டிருக்கிறேன். பாபா கூடத் தேவலாம். ஷாஷூரி கூடத் தேவலாம். இந்த அபிஜித்தின் தொல்லைதான் பெருந்தொல்லையாக இருக்கிறது. நான் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அவனால் இருக்க முடியவில்லை. சரி, மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு வந்து தொலை என்றேன் ஒருநாள்.

வீட்டுக்கு வந்த கையோடு என்ன செய்தான் தெரியுமா? டீவியில் உட்கார்ந்து விட்டான். அவனுக்கு நான் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அவன் பார்வையிலேயே இருக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி நோ ரொமான்ஸ், நோ கிஸ்ஸிங், நோ ஃபக்கிங், நத்திங். நத்திங். நத்திங். சரியான ஜடம். மாதம் ஒருமுறை, அதுவும் நானே போய் அவனை ரேப் பண்ணினால்தான் உண்டு.

ஆனால் பெருமாள், இந்தப் பயல்களெல்லாம் அன்பு காதல் என்று சொல்வதெல்லாம் பெரிய பித்தலாட்டம். வாழ்க்கையில் எத்தனை அடிபட்டு வந்திருக்கிறான். இந்த உலகில் எவனாவது இவனைப் போல் பெற்ற அன்னையிடம் இத்தனை அடி வாங்கியிருப்பானா? இப்படிப்பட்ட ஒருவனிடமிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓட வேண்டாமா? நம் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம் அன்பையும் காதலையும் கொட்ட வேண்டாமா? ஆனால் இவனோ பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி இருக்கிறான்.

ஒருநாள் எனக்கு ஜுரம் வந்தது. பயல் எனக்காக ஒரு வெந்நீர் கூடப் போட்டுத் தரவில்லை. எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டான். நானேதான் என்னுடைய தேவைகளையெல்லாம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. ஸ்விக்கியிலிருந்து பிரியாணி வரவழைத்துத் தன் வயிற்றை ரொப்பிக் கொண்டான். ஜுரத்தில் என்னால் பிரியாணியெல்லாம் சாப்பிட முடியவில்லை. கஞ்சி வேண்டும். வைக்கத் தெரியாது என்று சொல்லி விட்டான். கற்றுக் கொள்ளேன்டா அறிவு கெட்டவனே? ம்ஹும். தெரியாது. அதோடு முடிந்தது கதை. அது குறித்து அவனுக்கு ஒரு வருத்தம் கிடையாது. ஒரு பிச்சைக்காரன் உன்னிடம் காசு கேட்டு, உன்னிடம் காசு இல்லை என்றால், இல்லை என்று சொல்வாய் அல்லவா, அந்த தொனியில் சொல்கிறான் எனக்குத் தெரியாது என்று.

ஆனால் இவனுக்கு உடம்புக்கு வந்து விட்டால் மட்டும் இருபத்துநான்கு மணி நேரமும் இவன் பக்கத்திலேயே உட்கார்ந்து சிசுருஷை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சமயங்களில் எனக்குக் கொடூரமாகத் தோன்றும், இவன் இவனுடைய அம்மாவிடமிருந்து வாங்கினதெல்லாம் இவனுக்குத் தேவைதானோ என்று. பிறகுதான் ‘ஏன் இப்படி ஆகி விட்டோம்?’ என்று வருத்தப்படுவேன்.
அதனால்தான் இந்தப் பயலையெல்லாம் நம்பி குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று முதல் நாளிலிருந்தே உறுதியாக இருக்கிறேன். ஒரு பெண்ணோடு கூடத் தெரியாத இந்த ஆண்மையற்ற பயல்களின் விந்து நம் கருப்பைக்குள் போய் விட்டால் மட்டும் எப்படியென்று தெரியவில்லை, ஒரே ஆட்டத்தில் குழந்தை உண்டாகி விடுகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் தன் கணவனின் கடந்த காலத்தைப் பற்றி அப்படி உருகி உருகிப் பேசினாள், இப்போது இப்படிப் பேசுகிறாளே என்று பார்க்கிறாயா? என்ன செய்வது, கருணை என்பது கிஞ்சித்தும் இல்லாதவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது? சரி, கருணையெல்லாம் வேண்டாம், இவனே ஒரு நோயாளியாகக் கிடக்கும்போது இன்னொரு உயிரை நான் எப்படி கவனித்து வளர்க்க முடியும்? ஒரு இருபத்து நான்கு மணி நேரம் இவன் நான் இல்லாமல் தனியாக இருந்து காண்பித்தால் அது பற்றி யோசிக்கலாம். அது கூட யோசனைதான். செயல்படுத்துவதெல்லாம் சாத்தியமில்லை. இவன் ஒரு மண் குதிரை. இவனை நம்பி ஆற்றில் இறங்க முடியாது.

வெளியுலக அனுபவமே இல்லாத எனக்கு இந்த விஷயமெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? எல்லாம் உன் எழுத்தைப் படித்துத்தான். போர்ஹேஸின் கதையில் வரும் அலெஃப் என்ற எழுத்து வழியாக அந்தக் கதை நாயகனுக்கு என்னென்னவோ தெரிவது போல எனக்கு உன்னுடைய எழுத்து வழியாகத்தான் எல்லாமே தெரிந்தது. அதனால் நான் எந்த ஆபத்திலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. இந்த மாதிரி பெண்டாட்டி நடமாட முடியாமல் படுத்துக் கிடக்கும்போது கூட எதுவும் தெரியாது என்று காலாட்டிக் கொண்டு இருப்பவனை நம்பி நான் எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது? மேலும், எனக்கு இந்தக் குடும்பம் என்ற அமைப்பின் மீதே காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது. என்ன மயிர்
குடும்பம்? நான் பார்த்த எல்லா குடும்பங்களுமே மனநோய்க் கூடாரங்களாகக் கிடக்கின்றன. ஒன்று, பெண் அடிமையாக இருக்கிறாள், என் அம்மா மாதிரி. இல்லாவிட்டால் அவள் அடிமைப்படுத்துகிறாள், என் ஷாஷூரி மாதிரி. ஆனால் என் ஷாஷூரி வீட்டில் என் ஷாஷூரி என் அம்மா அளவுக்கு சித்ரவதை அனுபவிக்கவில்லை. ஷாஷூரி சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடுவார். அவ்வளவுதான். அவர்
ஷாஷூரியிடம் பேசுவதே தோப்புக்கரணம் போடுவது போல்தான் இருக்கும்.
இதற்கெல்லாம் பெயர் குடும்பமா? த்தூ…
***
அபிஜித்தும் நானும் எங்கள் மூதாதையர் வாழ்ந்த நிலத்தைத் தேடிப் போனோம். ம்ஹும். வேர்களைத் தேடுவதெல்லாம் என்னுடைய நோக்கமில்லை. பாபாவின் ட்ரங்குப் பெட்டிகளொன்றில் எனக்கு இரண்டு டயரிகள் கிடைத்தன. ஒன்று பாங்ளாவிலும் இன்னொன்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஆங்கில டயரியை எழுதியவர் பெயர் ஹைட் பார்க்கர் என்று கண்டிருந்தது.

1825ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டாண்ட்டன் என்ற கிராமத்தில் பிறந்த ஹைட் பார்க்கர் தனது பன்னிரண்டாவது வயதில் கப்பல் படையில் சேர்ந்து, அதன் பின்னர் ஃபிலிப்பைன்ஸில் சில காலம் சர்வேயராகப் பணி புரிந்து மெட்ராஸ் வந்து சேர்ந்தான். அதன் பிறகு மெட்ராஸில் வசித்த ஒரு கப்பல்காரனின் நெப்டியூன் என்ற வணிகக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்து மெட்றாஸுக்கும் சிலோனுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்தான். பிறகு 1850இல் பிஹார் மற்றும் வங்காளத்தில் ரயில் பாதை அமைக்க வேண்டியிருந்ததால் அங்கே சர்வேயராகச் சேர்ந்தான். அவனுடைய நாள்குறிப்பு ஒரு நாவலைப் போல் இருந்தாலும் நம்முடைய கதைக்கு அதெல்லாம் தேவையில்லையாதலால் எது எது தேவைப்பட்டதோ அது அதை மட்டுமே எடுத்துக் கொண்டேன்.

ஒருமுறை அவனுடைய ப்ளூட்டோ புயலில் மாட்டிக் கொண்ட போது பத்து கிலோமீட்டர் தூரத்தை நீந்தியே
கடந்து மெட்றாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கதை அதிசாகசமாக இருந்தது. அதையெல்லாம் இங்கே சேர்த்தால் நாவல் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அபி என் நிழலைப் போல் தொடர நான் இந்த பகல்பூருக்கு வந்தது இங்கே உள்ள மலைவாழ் ஸந்த்தால்களையும் இந்த மலையையும் ஒரு முறை பார்ப்பதற்காகத்தான். மற்றபடி நூற்றி அறுபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு இருந்த பகல்பூருக்கும் இன்றைய பகல்பூருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? எந்த ஸந்த்தாலுக்காவது அவர்களின் மூதாதையரைக் கொன்று போட்ட பிரிட்டிஷ் காரர்களைப் பற்றியோ அதற்குக் காரணமாகவும் உடந்தையாகவும் இருந்த பாங்ளா மகாஜன்களைப் பற்றியோ தெரிந்திருக்குமா என்ன? நம்மில் யாருக்கு நம் மூத்தோரின் கதை கேட்க ஆர்வம் இருந்திருக்கிறது? கானு ஸந்த்தாலும் ஸித்தூ ஸந்த்தாலும் இன்று தொன்மங்களாகி விட்டதால் அவர்களை இங்கே யாரும் மறக்கவில்லை. ஆனால் ஸந்த்தால் ஹூலுக்குக் காரணமாக இருந்த ஜமீந்தார் பாக்குர் ராஜை இப்போது யாருக்கும் தெரியவில்லை. ஸந்த்தால் ஹூலின் போது நடந்த சம்பவங்களையெல்லாம் ஆவணப்படுத்திய ஒருசில பிரிட்டிஷ்காரர்களின் நாள்குறிப்புகளில்தான் ஜமீந்தார் பாக்குர் ராஜ் பற்றியும் அப்போதைய ஸந்த்தால் ஹூல் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் வெகு சாதாரணமான அரசாங்கத் தகவல் பரிமாற்றச் சொற்களில் எழுதியிருக்கிறார்கள்.
***
பாங்ளாவில் எழுதியிருந்த மற்றொரு டயரியில் இருந்த குறிப்புகள் ஹைட் பார்க்கரின் நாள்குறிப்புகளை விடவும் சுவாரசியமாக இருந்தன. ஸந்த்தால் ஹூல் நடந்து இந்த நூற்றி அறுபத்தெட்டு ஆண்டுகளில் அந்தப் பகுதிகள் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்பதை நான் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த இடங்களைப் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றாலும் அந்த மண்ணை மிதித்து விட்டாவது வர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகராக இருந்தால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவீர்கள் இல்லையா, அதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஸந்த்தால் பர்கானா என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதி பிஹாரில் இருந்தது. இப்போது ஜார்க்கண்டில் இருக்கிறது. பகல்பூர் மாவட்டம் மற்றும் பீர்பூம் (வீரபூமி) மாவட்டங்களின் சில பகுதிகள் சேர்ந்ததுதான் ஸந்த்தால் பர்கானா. அங்கேதான் 1855 – 1857 கால கட்டத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

முதலில் நாங்கள் பீர்பூம் ஜில்லாவில் உள்ள உல்ப்பஹரி என்ற வன கிராமத்துக்குச் சென்றோம். அந்த கிராமத்தில் நூற்றுக்கும் குறைவான ஸந்த்தால் குடும்பங்களே வாழ்கின்றன. தங்களுக்குள் ஸந்த்தாலியில் பேசிக் கொண்டாலும் அவர்களுக்கு பாங்ளாவும் தெரிந்திருக்கிறது. பெரும்பாலும் குங்கிலிய இலைகளைக் கோர்த்து சாப்பாட்டு இலையாக விற்கிறார்கள். இந்த இலையில் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்பதால் நல்ல விலைக்குப் போகிறது. ஸந்த்தால் மொழியில் அதை சாலா அல்லது சால் என்கிறார்கள். இந்தக் குங்கிலிய மரத்தின் பிசினைத்தான் நம் ஊர்களில் சாம்பிராணி என்கிறோம். உல்ப்பஹரியிலும் சாம்பிராணிப் புகை போடும் பழக்கம் இருக்கிறது.
ஹடியா என்ற சாராயத்தைக் குடிக்கிறார்கள். கோதுமை மாவு, சில மூலிகைகள், அதோடு சோறு, மூன்றையும் கலந்து மூன்று நாள்கள் நொதிக்கச் செய்கிறார்கள். அதுதான் ஹடியா. நானும் அபியும் அதைக் குடித்துப் பார்த்தோம். பயந்து கொண்டேதான் குடித்தோம். ஆனால் ஹடியாவும் ஸந்த்தால்களைப் போலவே மென்மை குணம் கொண்டிருந்தது.
இனி ஹைட் பார்க்கரின் டயரிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன்.
***
நாள் குறிப்பின் முதல் பக்கம் (தேதி இல்லை)
இந்தியாவில் நியமிக்கப்பட்ட முதல் சர்வேயரான மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ரென்னல் எழுதிய நாள் குறிப்புகளை (1764 – 1767) படித்து விட்டுத்தான் இந்தப் பகுதிக்கு வந்தேன். அவர் அக்குறிப்புகளை எழுதித் தொண்ணூறு ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு. ஆனாலும் இத்தனை ஆண்டுகளில் இந்தப் பகுதி எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது. அதற்காகத்தான் கம்பெனி இங்கே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத்தான் எத்தனை எதிர்ப்புகள், எத்தனை கொலைகள்…

ஸந்த்தால் ஆண்கள் நிர்வாணமாக இருந்தார்கள். இடையில் மட்டும் ஒரு சிறிய துணியால் ஆணுறுப்பை மறைத்திருந்தார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க ஒரு சட்டை அணிந்து, கீழே ஒரு நீண்ட துணியை இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். பெண்கள் அணிந்திருந்த நகைகள்
தான் பெரிதும் என்னை ஆச்சரிய மூட்டின. எப்படித்தான் சுவாசிக்கிறார்களோ என்று தோன்றும் அளவுக்கு
மூக்கில் பெரிய பெரிய வளையங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. விசேஷங்களின் போது கழுத்தில் யானையின் காது அளவுக்கு நகைகளை அணிந்து கொள்கிறார்கள். திருமணம், மரணம், குழந்தைப் பேறு ஆகிய விசேஷங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெண்கள் பருவம் அடைவதைக் கூட விமரிசையாகக் கொண்டாடுவதைப் பார்க்கும்போதுதான் இன்னும் இந்த மக்கள் நாகரீகம் அடையவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

இவர்களின் கொண்டாட்டம் என்றால் இரண்டே இரண்டுதான். ஹடியா மற்றும் ஆட்டம். ஆனால் அந்த ஆட்டத்தை நான் கலை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒரே மாதிரியான தாள லயத்திலேயே மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். அதனால்தான் நான் இவர்களைக் குழந்தைகளைப் போன்றவர்கள் என்றேன். குழந்தைகளைக் கவனித்தால் தெரியும், அலுப்பு சலிப்பே இல்லாமல் ஒரே காரியத்தை மணிக்கணக்கில் செய்யும் குழந்தைகள். உதாரணமாக, ஒரு வளையத்தை உங்கள் தலையில் வைத்துக் கொண்டு குழந்தையிடம் காண்பியுங்கள். உடனடியாக அந்த வளையத்தை எடுக்கும் குழந்தைகள். எடுக்க அனுமதியுங்கள். பிறகு இன்னொரு வளையத்தைத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் எடுக்கும் குழந்தைகள். இப்படியே மாற்றி மாற்றி இருபத்தைந்து தடவைகளுக்கு மேல் என் கடைசித் தம்பியுடன் நான் விளையாடியிருக்கிறேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது. அவன் எட்டு மாதக் குழந்தை.

1855இன் குளிர்காலத்தில் கானு ஸந்த்தால், ஸித்து ஸந்த்தால் என்ற இரண்டு சகோதரர்களின் கனவில் ஏழு நாள்கள் தொடர்ந்து தோன்றினார் ஸந்தால்களின் கடவுளான தாக்குர். முதலில் ஒரு ஆங்கிலேயனாக வந்தார். பால் நிறத்தவராக இருந்தாலும் தாக்குர் ஸந்த்தால்களின் உடையையே அணிந்திருந்தார். அடுத்த நாள் தீச்சுவாலையாக வந்தார். அடுத்த நாள் வண்டிச் சக்கரமாக வந்தார். அந்த ஏழு நாள் கனவிலும் தாக்குர் சொன்ன சேதி என்னவென்றால், இனிமேல் மகாஜன்களிடம் ஸந்த்தால்கள் செய்யும் வேலைக்குக் கூலி கிடைக்க வேண்டும். கூலி இல்லாமல் வேலை செய்ததெல்லாம் போதும். இனிமேல் ஒருநாளும் கூலி இல்லாமல் உழைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் எந்தத் தடை வந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிய வேண்டியது ஒவ்வொரு ஸந்த்தாலின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு ஸந்த்தாலும் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

1855 ஜூலை 9:
பகல்பூருக்கும் ராஜ்மஹலுக்கும் இடையிலான தபால் தொடர்பு முழுமையாக நின்று போய் விட்டது. என் அதிகாரி கல்கத்தாவிலிருந்த அரசாங்கச் செயலருக்கு முன்பு அனுப்பிய கடிதத்தையே ஒரு சிப்பாய் மூலம் திரும்பவும் அனுப்பினார். பகல்பூருக்கும் மோங்யாருக்கும் இடையேயிருந்த டாக் சௌக்கிகள் அனைத்தும் செயல்படாமல் போய் விட்டன. தபால்காரர்கள் அனைவரும் ஸந்த்தால்களின் விஷ அம்புகளுக்குப் பயந்து ஓடி விட்டார்கள். ஆனால் தபால்களை வாங்கி எரித்துப் போடுவதைத் தவிர தபால்காரர்களை ஸந்த்தால்கள் ஒன்றும் செய்வதில்லை. இருந்தாலும் உயிர் பயம் யாரை விட்டது?
ஸந்த்தால் பர்கானா முழுவதுமே ஒரு தபால்காரரைக் கூட காண முடியவில்லை. டாக் சௌக்கிகள் அனைத்தும் ஆள் இல்லாமல் கிடக்கின்றன. இதற்கிடையில் பகல்பூர் கமிஷனர் பகல்பூர் அஞ்சல் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். “எந்தத் தபாலும் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவித சுணக்கமும் இல்லாமல் விலாசதாரரைப் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; இதற்கு பகல்பூர் அஞ்சல் அதிகாரிதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.” தபால் நிலையத்தில் ஒரு ஆசாமி கூட இல்லாமல்அதிகாரி என்ன செய்வார்? அவரும் எல்லோரையும் போல் தலைமறைவாகி விட்டார். ஆக, ஸந்த்தால் ஹூல் முடிவுக்கு வரும் வரை – கிட்டத்தட்ட ஒரு வருட காலம் – பகல்பூருக்கும் ராஜ்மஹலுக்கும் இடையே ஒரு கடிதப் பட்டுவாடா கூட நடக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் என் அதிகாரி அரசுச் செயலருக்கான கடிதத்தை ஒரு சிப்பாய் மூலமாகக் கொடுத்து அனுப்ப வேண்டி வந்தது.

ஜூலை 27:
இன்று கம்பெனி ராணுவத்தினர் 17 பேர் செத்தார்கள். ஸந்த்தால்கள் வெறும் வில்லையும் அம்பையும் மட்டுமே வைத்திருந்தாலும் ஆயிரக்கணக்கில் வந்து தாக்குகிறார்கள்; நம் படையிலோ அதிக பட்சம் நூறு பேர்தான் இருக்கிறார்கள். அதனால் நம்மிடம் துப்பாக்கியும் பீரங்கியும் இருந்தாலும் கூட ஸந்த்தால் பேய்களை நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.
நம்முடைய படை துப்பாக்கியால் ஸந்த்தால்களை நோக்கிச் சுடுகிறது. வெறும் லங்கோடை மட்டும் கட்டிக் கொண்டு வெறும் வில்லும் அம்புமாக நின்று கொண்டிருக்கும் ஸந்த்தால் பேய்கள் தன் விஷ அம்புகளை எங்கள் மீது விடுகின்றன. காற்றில் அம்பு மழை பொழிவது போல் எங்கெங்கு பார்த்தாலும் அம்புகள். அதேபோல் எங்கள் சிப்பாய்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கண்மண் தெரியாமல் அம்புகள் வந்து விழுந்து கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் சுடுவது கூட அசாத்தியமாகி விடுகிறது. இருந்தாலும் துப்பாக்கிக்கு அம்பு நிகராகுமா என்ன? துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்து கொண்டேயிருக்கின்றன ஸந்த்தால் பேய்கள். ஆனால் நம்ப முடியாத ஆச்சரியம் என்னவென்றால், முன்வரிசையில் நிற்கும் ஸந்த்தால்கள் குண்டு பட்டு செத்து விழுந்தால் உடனடியாக அடுத்த வரிசை ஸந்த்தால்கள் துப்பாக்கி ரவையை மார்பில் தாங்குவதற்காக முன்னேறுகிறார்கள். மொத்த கூட்டத்தையும் அழித்து விட்டு நாங்கள் முன்னே சென்றால், இரண்டு மைல் தூரத்தில் இன்னொரு ஸந்த்தால் படை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறது.

எங்களில் பலரால் ஸந்த்தால் கூட்டத்தின் நிர்வாணத்தைத்தான் சகிக்க முடியவில்லை. ஆனால் என் சக சிப்பாய் ஒருவன் சொன்னான், ஹிந்துஸ்தான் முழுவதுமே ஆண்கள் ஆடை அணிவதில்லை என்று. அவன் இங்கே பல ரெஜிமெண்டுகளில் வேலை செய்திருக்கிறான். இடையில் மட்டுமே ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மக்கள். ஆனால் புகைப்படம் எடுப்பதை அனுமதிக்கிறார்கள். அது மட்டுமல்ல, அதை விரும்பவும் செய்கிறார்கள். மற்ற ஆதிவாசி சமூகங்களைப் போல் பணம் கேட்பதில்லை.
ஆம், நான் இங்கே வந்த புதிதில் ஆதிவாசிகள் என்றதும் எதிரிகளின் தலைகளைக் கொய்து கால்களால் உதைத்து விளையாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தால் ஸந்த்தால்கள் எதுவுமே தெரியாத அப்பாவிகளாகவும் – குறிப்பாக வன்
முறையையே அறியாதவர்களாகவும் இருந்தார்கள். வேட்டை தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் தம் விஷ அம்புகளைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தார்கள். ஆனால் யாரும் கற்பனையே செய்திருக்க மாட்டார்கள், இவ்வளவு வெகுளியாக இருந்த இவர்கள் ஒரு காலத்தில் எதிரிகளின் தலைகளைக் கொய்து காலால் உதைத்து விளையாடுவார்கள் என்று. ஆம், அப்படியும் ஒரு நாள் வந்தது.
***
30 ஜூன் 1855. முப்பதாயிரம் ஸந்த்தால்கள் கானு ஸந்த்தால், சித்து ஸந்த்தால் என்ற சகோதரர்களின் தலைமையில் கையில் வில்லும் அம்புமாகக் கூடினார்கள். பொதுவாக ஸந்த்தால்கள் எதிர்த்துப்பேச மாட்டார்கள். வம்பு பண்ண மாட்டார்கள். ஆனாலும் தாக்கூர் சொன்ன பிறகு எந்த யோசனையும் இல்லை. தாக்கூர் சொன்னதைச் செய்து முடிப்பதுதான் ஒரே கடமை. அதற்காக அவர்கள் உயிரையும் கொடுக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள்…

நாங்கள் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் ஸந்த்தால்கள் தங்கள் பறைகளை அடிப்பதை நிறுத்த
வில்லை. முதலில் வானத்தை நோக்கிச் சுட்டோம். அவர்கள் கலையவில்லை. மாறாக, அவர்கள் கூட்டத்திலிருந்து அம்பு மழை பொழிய ஆரம்பித்தது.

அதனால் மார்பில் சுட வேண்டியதாயிற்று. சிலர் செத்து விழுவார்கள். உடனே ஸந்த்தால் கூட்டம் ஒரு கால் மைல் பின்னே நகரும். அப்போதும் கலைய மாட்டார்கள். அங்கே போய் தங்கள் பறையை அடிப்பார்கள். நாங்களும் முன்னே நகர்ந்து சுடுவோம். சிலர் செத்து விழுவார்கள். உடனே கால் மைல் பின்னே நகர்ந்து பறையை அடிக்க ஆரம்பிப்பார்கள். யாரும் கடைசி வரை கலைந்து ஓடவேயில்லை.
இன்ஸ்பெக்டரும் மற்ற போலீஸும் ஸந்த்தால் தலைவன் சித்துவின் குடிசையை நோக்கிச் சென்றார்கள். சித்து ஒரு கிழவன். உடம்பு பூராவும் ரத்தம் வழிந்து கொண்டிருக்க நிமிர்ந்து நின்று கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் அவன் அருகே சென்று அவனுக்குக் கை விலங்கு மாட்ட முயற்சித்தார். அப்போது சித்து இன்ஸ்பெக்டரைத் தன் வாளால் வெட்டினான். இன்ஸ்பெக்டரின் தலை தனியாக வந்து விழுந்தது. கூடியிருந்த ஸந்த்தால்கள் தங்கள் பறைகளை அடிக்க ஆரம்பித்தார்கள்…
* இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து
சில பகுதிகள்..

charu.nivedita.india@gmail.com