கட்டுரைக்குப் போகும் முன் ஒரு சின்ன கொசுவர்த்திச் சுற்றல்! இதுவரை மனம் என்பது மூளையில்தான்இருக்கிறது என்றும் மூளையின் இயக்கமே மனம் என்றும் பார்த்தோம். புலன்கள் மூலம் புற உலகை உணரும்மூளை அப்புறவுலகைப் பற்றிய சித்திரத்தைத் தனக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறது. அந்தக் குறியீடுகளே மொழியாகவும், அப்படி உருவான புற அகச் சித்திரங்களே எண்ணங்கள் என்றும் அவை மூளையின் எந்தெந்தப் பகுதிகளில் உருவாகினறன என்றெல்லாம் பார்த்தோம். அடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகுதிகளைப் பார்த்தோம். உணர்ச்சிகளின் முக்கிய நோக்கமே விழிப்புணர்வைத் தூண்டிப் புற உலக நிகழ்வுகளுக்குஏற்றவாறு எதிர்வினை புரியவேண்டும் என்பதே எனவும் பார்த்தோம். உணர்ச்சிகள் பரிணாம ரீதியாக முக்கியமானவை, ஆதார உணர்ச்சிகள் மற்றும் வெளிப்படுத்தும் விதங்கள் மனித இனம் முழுமைக்கும் பொதுவானவை என்பதையும் பார்த்தோம். இனி மூளையில் உணர்ச்சிகள் உருவாகும் இடத்தைப் பார்க்கலாம்.

மூளையில்தான் உணர்ச்சிகள் உருவாகின்றன என்பதை ஹிப்போகிராட்டஸ் காலத்திலேயே சொல்லியிருந்தாலும் மூளையில் எந்தப் பகுதியில் உணர்ச்சிகள் உருவாகின்றன என்பது கடந்த நூற்றாண்டுவரை அறியப்படாமலேயே இருந்தன. மற்ற உறுப்புகள் போல் அல்லாமல் மூளை மிகச் சிக்கலானது மட்டுமல்ல, அதை அணுகுவதும் மிகக் கடினமானது. மூளையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருக்கும் என்பதையே பல நூற்றாண்டு ஆய்வுகளுக்குப் பின்னரே கண்டறிந்தனர். ஒருவருக்கு வலதுகையில் பக்கவாதம் வந்திருந்தால் அவரது மண்டையைப் பிளந்து (அவர் இயற்கையாக மண்டையைப் போட்டபிறகுதான்) எந்தப் பகுதியில் எதாவது பாதிப்பு இருக்கிறது என ஆராய்வார்கள். அந்தப் பகுதிதான் மூளையில் வலதுகைக்கான பகுதி என முடிவுசெய்து கொள்வார்கள்.

இந்த மாதிரி சர் ஃப்ரான்ஸ் கேல் என்ற ஜெர்மன் மருத்துவர் பதினெட்டாம் நூற்றாண்டில் மண்டையோட்டினைத் தடவிப் பார்த்து ஒருவரது ஆளுமை எப்படிப்பட்டது என அறிந்து கொள்ளலாம் எனக் கூறினார். அதாவது மூளையின் சில பகுதிகள் பெரிதாக இருந்தால் அது மண்டை ஓட்டில் சில மேடு பள்ளங்களை உருவாக்கும். அதைத் தடவிப் பார்த்தால் நாம் ஒருவரது மூளையில் எந்தெந்தப் பகுதிகள் நன்றாகச் செயல்படும் எனக் கண்டறியலாம் என்றார். இதற்கு அவர் ஃப்ரீனாலஜி (Phrenology) என்று பெயரிட்டார். Phreno என்றால் கிரேக்க மொழியில் மனது. சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லியிருப்பார்- மலையாளக் கவிதைகளைப் புரிந்து கொள்ள மலையாளத்தைவிட சமஸ்கிருதம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என. அது போல் மருத்துவ நூல்களைப் படிக்க ஆங்கிலத்தைவிட கிரேக்க லத்தீன் மொழி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மண்டை ஓட்டைத் தடவும் அறிவியலுக்கே வருவோம். ஃப்ரான்ஸ் காலின் கூற்றுப்படி ஒருவனது தலையை அவன் காதலி தடவிப்பார்த்து அவன் காதலிப்பானா இல்லை கழட்டி விடுவானா எனக் கண்டறியலாம். அவர் சொன்ன கருத்து அபத்தமாக இருந்தாலும் மூளையில் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட செயலுக்குக் காரணமாக அமைகின்றன என்ற கருத்து வலுப்பெற்றது.

நமக்கெல்லாம் லியனார்டோ டாவின்ஸியை ஒரு ஓவியராகத்தான் தெரியும். ஆனால் அவர் உடல் தொடர்பாகவும் பல ஆய்வுகள் செய்திருக்கிறார். மூளையைப் பகுத்தறிந்து பல ஓவியங்கள் வரைந்திருக்கிறார். மூளைக்கு உள்ளும் அதைச் சுற்றியும் ஒரு திரவம் இருக்கும். செரிப்ரோஸ்பைனல் ஃப்ளூயிட் (Cerebro Spinal Fluid) என கிரேக்க மொழியில் திட்டுவது போன்ற பெயரால் அழைப்பார்கள். மூளைக்குள் இந்த திரவம் வெண்ட்க்கில்ஸ் எனப்படும் அறைகளுக்குள் நிரம்பி இருக்கிறது. இந்த அறைகளைச் சுற்றித்தான் உணர்ச்சிகளின் மையம் இருக்கிறது எனக் கூறினார்.கிட்டத்தட்ட அவர் சொன்னது சரிதான்.

மொழி பற்றிக் கூறும்போது ப்ரோக்கா என்பவரைப் பற்றிப் பேசினோம் அல்லவா அவர்தான் மூளையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டு இந்தப் பேட்டைகள்தான் மூளையில் கோபம், வருத்தம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளுக்கெல்லாம் காரணம் எனக் கண்டுபிடித்துச் சொன்னார். இதற்கு அவர் லிம்பிக் பகுதி (Limbic lobe) எனப் பெயரிட்டார்.

முன்பு மூளையின் அமைப்பைப் பற்றிக் கூறும்போது பரிணாம ரீதியாக மூன்று விதமான பகுதிகளாக மூளையைப் பிரிப்பார்கள் என்று கூறியிருந்தேன்.அவை என்னவென (சுஜாதா இருந்திருந்தா எத்தனை ன என அலுத்துக் கொண்டிருப்பார்) என எனக்கே மறந்து விட்டதால் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம். பால் மெக்லீன் என்ற மூளை நரம்பு ஆய்வாளர் சொன்னகருதுகோளாகும் இது.

1. அடிப்படை மூளைப் பகுதி – Reptile brain – இது வெறும் உடலியக்கம், மூச்சு, இருதய துடிப்பு ஆகியவற்றை மட்டும உடைய, அவற்றைக் கட்டுப்படுததும் பகுதி. சிறிய விலங்குகளுக்கு உள்ள மூளை இவற்றை மட்டுமே கொண்டிருக்கும். உயிர்வாழ அடிப்படையான விஷயங்கள் இவை. நமது மூளைத் தண்டு (Brain stem) மற்றும் தண்டுவடம் (Spinal cord) ஆகிய பகுதிகள் இச்செயல்களைப் புரிகின்றன
2. பரிணாம ரீதியாகக் கொஞ்சம் அதிகம் வளர்ச்சியடைந்த மிருகங்களுக்குக் கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள், நினைவுத்திறன் ஆகியனவற்றை இயக்கும் பகுதிகள் மூளையில் இருக்கின்றன (Paleo mammalian Brain) .இந்தப் பகுதிதான் நம் மூளையில் உணர்ச்சிகள் உற்பத்தியாகும் இடமாக இருக்கிறது. இது மேலே சொன்ன தண்டுப் பகுதியைச் சுற்றி இருக்கும் பகுதிகளாகும். பால் மெக்லீன் இதை லிம்பிக் சிஸ்டம் எனப் பெயரிட்டு அழைத்தார்.
3. பரிணாமரீதியாக மிகவும் முன்னேறிய மனிதன் போன்ற விலங்குகளுக்கு மேலே குறிப்பிட்ட விலங்கின அடிப்படை மூளைப் பகுதிகளைச் சுற்றிப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் பகுதி தான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதி (Neo cortex). இப்பகுதி மனிதர்களுக்கு மிகவும் அதிகமாக வளர்ச்சி அடைந்திருப்பதால்தான் அவனால் சமூகமாக ஒருங்கிணைந்து பல்வேறு முன்னேற்றங்களை அடைய முடிந்தது. குறிப்பாக, மூளையின் முன்பகுதியைப் பற்றி முன்பே பார்த்தோம். இப்பகுதி பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இருப்பார்கள்.

சரி ! பலவிதமான உணர்ச்சிகள் இருக்கின்றனவே! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் இருக்கிறதா இல்லை, ஒரே பகுதிதானா? உணர்ச்சிவசப்படும் பொழுது உடலில் ஏன் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன? இதற்கெல்லாம் தொடர்ந்து விடை தேடுவோம்.

ramsych2@gmail.com