உன் ஊரைக் கடக்கையில்
உனை சந்திக்காமல் செல்வதான முடிவை
மெச்சிக்கொண்டவள்தான்

கண்ணோடு கண் பார்க்கையில்
சலனமின்றிப் பேசியதாக
நம்பியவள்தான்

கைபேசித் திரையில் ஒளிரும்
உன் பெயர்
முன்புபோல்
எப்பரவசத்தையும் ஏற்படுத்தவில்லையென
பிரகடனம் செய்தவள்தான்

எனினும் பார்

ஒளிக்கீற்று தீண்டும் தொலைவில்தான்
என்னை இருளில் வைத்து இருந்திருக்கிறேன்

நீ திரும்பிப் பார்க்கும் தூரத்தில்தான்
உனைக் காணக்கூடாதெனும் வைராக்கியத்தோடு நின்றிந்திருந்திருக்கிறேன்

கைவைத்தால் திறந்துகொள்ளும்படியாகவே
கதவை தாழிட்டிருந்திருக்கிறேன்

கற்திரையென நம்பி
ஒரு நீர்க்குமிழியின் அடர்த்தியில்தான்
எனக்கான திரையை
உருவாக்கியிருக்கிறேன்
கடற்கரையில் சோப்புக்குமிழியை உடைத்து விளையாடும் குழந்தையென
அத்திரையை உடைத்துவிட்டு
உள்நுழைகிறாய்
திகைத்து நிற்கிறேன்