ஒன்றிய அரசின் ஆயுதக் காவல் படைக்கு (சிஏபிஎஃப்) ஆட்களைத் தேர்வு செய்வதற்கு வரும் ஜூலையில் நடைபெறும் கணினித் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. தமிழ்நாடு அரசு இதைக் கடுமையாக எதிர்த்தது. தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளும் தேர்வுமொழியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து ஆளுங்கட்சியும் பிற கட்சிகளும் குரல் கொடுத்தன. திமுக இளைஞரணியும் மாணவரணியும் ஏப்ரல் 17 அன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்புகளும் வந்தன. இந்நிலையில் ஒன்றிய அரசு ‘ஆங்கிலம் அல்லாத 13 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதத் தேர்வு அறிவிப்பின்படி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடக்கும். அடுத்து வரும் ஜூலை 2023 முதல் நடைபெறும் தேர்வுகள் 13 மொழிகளில் நடைபெறும். ஒன்றிய அரசு மனங்கனிந்து இறங்கி வந்திருப்பது மொழி அரசியலில் நல்ல அறிகுறி என்றே தோன்றுகிறது. எத்தனையோ வழிகளில் இந்தியைத் திணிப்பதற்கு ஒன்றிய அரசு முயன்று கொண்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தில் அவ்வாறு ஒருமொழியைத் திணிப்பது எளிதல்ல. இந்தியா போன்ற பல மொழி பேசும் நாட்டில் எல்லா மொழிகளுக்கும் சம மதிப்பு கொடுத்து நடத்துவதே சரியானது என்னும் உண்மையை இப்போதேனும் ஒன்றிய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.
இதை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு’ என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. உண்மைதான். ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பலவும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே நடைபெற்று வந்தன; வருகின்றன. ஒன்றிய அரசுத் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகைக்கான தேர்வுகள் என எல்லா வகைத் தேர்வுகளும் இந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே பல காலமாக நடந்து வருகின்றன. இது அப்பட்டமான மொழிப் பாகுபாடு.

இந்தியில் தேர்வை எழுதுவோருக்கு அது தாய்மொழி. ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு அது இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதுவோரையும் இரண்டாம் மொழியில் எழுதுவோரையும் போட்டியிடச் செய்வது முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் நடத்துவது போலத்தான். இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பயிலும் நம் மாணவர்களின் நிலை என்னவென்று தெரியும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அம்மொழியைக் கற்றாலும் வாசித்துப் புரிந்துகொள்ளவும் சுயமாகச் சில தொடர்களை எழுதுவதும் திறன் பெற்றவர்களாக அவர்கள் இல்லை. அதற்குப் பல காரணங்கள். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை ஆகியவை முக்கியமானவை.

இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பும் ஆங்கிலத்தின் இலக்கண அமைப்பும் வேறுபட்டவை. ஆகவே அதை இயல்பாகக் கற்றுக்கொள்ள முடிவதில்லை. கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. முதல் தலைமுறையாகக் கல்வி பயில வரும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியாததால் பள்ளிக் கல்வியை நிறுத்தியவர்கள் பலர். ஆங்கிலத்தில் பயில வேண்டும் என்பதற்காக அஞ்சி உயர்கல்விக்குச் செல்லாதவர்கள் பலர். உயர்கல்விக்குச் சென்று ஆங்கிலத் தாள்களால் அவதியுற்று பட்டம் பெறாமலே வெளிவந்தோர் பலர். உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து கூடிவருகிறது. அதற்கு ஆங்கிலமும் ஒருகாரணம் எனக் கருதப்படுகிறது.

இவ்வாறு அலைக்கழிக்கும் ஒருமொழியில் போட்டித் தேர்வுகளை எழுதுவது எத்தனை கடினம் என்பதை மாணவர்கள் அறிவர். கொள்குறி வகை வினாக்கள் இடம்பெற்றிருக்கும் தாளில் எதுவும் எழுத வேண்டியதில்லை. ஆனால் ஒரு வினாவுக்கு விடை
யளிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் போதுவதில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் அவ்வினாவை முதலில் வாசித்துப் பொருள் அறிந்துகொள்ள வேண்டும். கொடுத்திருக்கும் கால அளவு அதற்கே போதாது. பல வினாக்களுக்கு விடை தெரிந்தும் எழுத முடியாமல் வெளியே வருகிறார்கள் மாணவர்கள். ஒவ்வொரு வினாவும் போட்டித் தேர்வில் முக்கியம். பத்து விழுக்காடு வினாக்களுக்கு ஒருவர் விடை எழுத முடியவில்லை என்றால் அவர் எப்படிப் போட்டியில் நீடிக்க முடியும்?

சரி, இந்தியா முழுவதும் மாணவர்கள் இப்படித்தான் சமமாகத் துன்பப்படுகிறார்களா? இல்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு இந்தச் சிரமம் இல்லை. அவர்கள் தம் தாய்மொழியில் எழுதுகிறார்கள். வினாக்களைப் புரிந்து கொள்வதில் அவர்களுக்கு மொழித்தடை இல்லை. கூடுதல் முயற்சி தேவையில்லை. ஒரு வினாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினாலே முழுமையாக எழுதிவிடலாம். ஒரு பிரிவினர் தம் தாய்மொழியில் தேர்வெழுதலாம். இன்னொரு பிரிவினர் தமது இரண்டாம் மொழியில் எழுத வேண்டும். இது எப்படிச் சமமான போட்டியாகும்? எழுதிய விடைகளைக் கொண்டுதானே போட்டியைத் தீர்
மானிக்க வேண்டும்? விடை எழுதும் முன்னரே மொழியின்காரணமாக ஒருவருக்கு முன்னுரிமை கிடைத்துவிடுகிறது. இன்னொருவர் பின்தங்கிப் போய்விடுகிறார். பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில் இந்தச் மொழிச் சமமின்மை அநீதி.

இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கும் (JRF) கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதிக்குமாகப் (NET) பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் ஒரே தேர்வு அனேகமாக 1986 முதல் நடைபெற்று வருகிறது. முதுகலை இரண்டாமாண்டு பயிலும்போதே அத்தேர்வை எழுதலாம். 1988இல் முதன்முறையாக நான் எழுதினேன். எல்லாத் துறை மாணவர்களுக்கும் பொதுவானது முதல் தாள். அது இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் இருந்தது. சிறுசிறு திருகல்களைக் கொண்ட வினாக்கள் அத்தாளில் இடம்பெற்றிருக்கும். நேரடியான வினா
வையே ஆங்கிலத்தில் புரிந்துகொள்வது கடினம். திருகல்களை எப்படிப் புரிந்துகொள்வது? முதல்தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அப்போதுதான் துறைசார்ந்த வினாக்கள் கொண்ட இரண்டாம், மூன்றாம் தாள்களைத் திருத்துவார்கள். துறை சார்ந்த தாள்களை
மிகச் சிறப்பாகவே எழுதியிருந்தேன். எனினும் முதல்தாள் காரணமாக அத்தேர்வில் தோல்வி அடைந்தேன். அதன்பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். மாணவனாகச் சேர்ந்து விடுதியில் தங்கிப் பயின்றேன். விடுதியில் பலதுறை மாணவர்களும் அத்தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து கடினமாக முயன்று கிட்டத்தட்ட ஆறுமாதம் தயார் செய்தேன். ஆங்கிலத் திருகல்களை அறிந்து கொள்ள அந்தக் கூட்டுப்படிப்பு பெரிதும் உதவியது. இரண்டாம் முறை தேர்ச்சி பெற்றேன். முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கு ஐந்தாண்டுகளுக்கு உதவித்தொகை கிடைத்தது. அது என் வாழ்வில் பலவகை மாற்றங்களை ஏற்படுத்தியது.

அந்தத் தேர்வு இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெருங்கனவோடு எழுதுகிறார்கள். ஆனால் தேர்வு மொழியில் மாற்றமில்லை. இந்தியும் ஆங்கிலமும்தான். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக இருமொழிகளில் மட்டுமே தேர்வு. தமிழிலக்கியம் பயின்ற நான் முதல்தாளை மட்டும் ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்துகொண்டு எழுதினால் போதும். என் துறை சார்ந்த தாள்களைத் தமிழில் எழுதலாம். வேறு துறை சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. வரலாற்றுப் பாட மாணவருக்கு மூன்று தாள்களுக்கான வினாக்களும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டில் இளநிலைப் பட்ட வகுப்புகள் தமிழ் வழியில் இருக்கின்றன. தமிழ் வழியில் பயின்ற மாணவர்களாக இருப்பினும் முதுநிலை வகுப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே பயில முடியும். இது தமிழ்நாட்டில் இருக்கும் மொழிப் பாகுபாடு. சரி, எப்படியோ முதுநிலைப் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் ஆங்கிலப் புலமை கொண்டிருக்க வாய்ப்பேயில்லை. அவர்கள் மனதில் தமிழ் மொழி வழிப் பாடங்களே இருக்கும். ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேர்வை அவர்கள் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். இப்போது எல்லாத் தாள்களுமே கொள்
குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்வரை பத்தி அளவிலும் கட்டுரை வடிவிலும் விடைகளை எழுதும் நிலை இருந்தது. ஆங்கில மொழியில் சுயமாக எழுத இயலாத காரணத்தாலேயே எத்தனையோ அறிவாளி மாணவர்கள் தேர்ச்சி பெற இயலாமல் வாய்ப்பை இழந்தனர்.

இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களில் இருந்தும் எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களோடு போட்டியிட இரண்டாம் மொழியில்தான் எழுத வேண்டும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குப் பிரச்சினையில்லை. அவர்கள் தாய்மொழியிலேயே எழுதலாம். இந்தி பேசும் மாநிலத்தவர் இந்தியில் எழுத வாய்ப்பு கொடுப்பது தவறல்ல. அதுதான் சரி. ஒருவருக்கு அவர் தாய்மொழியில் கற்கவும் தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்க வேண்டும். பல மொழி பேசும் ஒருநாட்டில் ஒருமொழியினருக்குக் கிடைக்கும் அதே வாய்ப்பைப் பிறமொழி பேசும் மாநிலத்தவருக்கும் வழங்க வேண்டும் அல்லவா?

தாய்மொழியில் எழுதும் வாய்ப்பு மட்டும் கிடைத்திருந்தால் தமிழ்நாட்டு மாணவர்களில் இன்னும் நூற்றுக்கணக்கில், ஏன், ஆயிரக்கணக்கில்கூட தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்களின் கல்வி வாய்ப்பு பறி போயிராது. தமிழ்ச் சமூகத்திலேயே பெருமாற்றம் நிகழ்ந்திருக்கும். சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாம் மொழிச் சமத்துவத்திற்காகவும் போராடி வருவதன் தேவை இதுதான். ஒருவகையில் இந்தியாவின் மொழி அரசியல் சமூக நீதியோடும் பெரிதும் பிணைந்திருக்கிறது.

ஒன்றிய ஆயுதக் காவல் படைத் தேர்வை ஆங்கிலம் தவிர பதின்மூன்று மொழிகளில் நடத்துவதாக வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த முடிவின் விளைவாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வை எழுத முடிவதோடு அவர்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுவரைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் ஒன்றிய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. ஜூலையில் நடைபெறும் தேர்வையே அனைத்து மொழிகளிலும் நடத்துவதாக அறிவித்திருக்கலாம். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் வினாத்தாள் எல்லா மொழிகளிலும் தயார் செய்வது பெரிய விஷயமல்ல. சரி, 2024ஆம் ஆண்டு நல்லதாக அமையட்டும்.

சரி, இந்த ஒரு தேர்வைப் பதின்மூன்று மொழிகளில் நடத்தினால் போதுமா? ஒன்றிய அரசு நடத்தும் பிற தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அப்படியே தொடருமா? இது எப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாகும்? ‘ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துவகைத் தேர்வுகளும் இனி இந்திய மொழிகள் அனைத்திலும் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு. ஒரே ஒரு தேர்வை இப்படி நடத்துவதாக அறிவிப்பதில் என்ன பெருமை இருக்கிறது? இம்முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாட்டு முதல்வர் ‘ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்க வேண்டும் என்னும் எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தேர்வு அறிவிக்கும்போதும் நாம் போராடிக் கொண்டிருக்க இயலாது. ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துப் பெரும்போராட்டம் நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கலாம். இந்தக் கோரிக்கைக்குப் பிற மாநிலங்களின் ஆதரவைத் திரட்டலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து பேசலாம். தேசியக் கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்குப் பெற விரும்பும் காலகட்டத்தில் இத்தகைய கோரிக்கைகளை நாம் வலுவாக முன்வைக்க வேண்டியது அவசியம். வேறு வழியற்று வாக்குக்காகவேனும் இவற்றை ஆதரிக்கும் நிர்ப்பந்தம் தேசியக் கட்சிகளுக்கு ஏற்படும். நிறைவேற்றும் நிலையை ஒன்றிய அரசு மேற்கொள்ளும்.

மேலும் மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல கோடி மக்களின் வாழ்க்கை இதில் அடங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட இலக்கிய மரபு கொண்ட தமிழ் போன்ற மொழிகளை ‘பிராந்திய மொழி’, ‘வட்டார மொழி’, ‘உள்ளூர் மொழி’ என்றெல்லாம் இழிவுபடுத்தப்படும் நிலை மாறும். இவ்வாறு இந்தி அல்லாத இந்திய மொழிகளின் உரிமைகளைப் பெறுவதும் இந்தக் கோரிக்கைக்குள் அடங்கியிருக்கின்றது. ஆகவே நாம் விடக்கூடாது.

murugutcd@gmail.com