1975. பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இடைக்கால நெருக்கடிப் பிரகடனம் அறிவித்த காலம். பாரதக் குடிமகன்/ள் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கிய இந்திய அரசியல் சட்டம் ‘கோமா’வில் இருந்தது. தடியெடுத் தவன் தண்டல்காரனாக இருந்தான்.
அப்பொழுது நான் தில்லி லோதிரோட் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகச் செயலராக இருந்தேன். பள்ளி முதல்வர் ஜகந்நாத் கஞ்சு. காஷ்மீரைச் சேர்ந்தவர்.
அக்கால கட்டத்தில், வகுப்புதோறும் இறுதித் தேர்வுகள் இருந்தன. பாஸ்/ஃபெயில் நடைமுறைகளும் இருந்தன. அப்பொழுது பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெறவில்லை. அவன் தந்தை, தமிழர்தான், ஒரு தண்டல்காரர். தில்லி குறுமாநிலத்தில் ‘லெஃப்டி
னண்ட் கவர்னராக’ இருந்தவரின் ஆஸ்தான ஜோதிடர். அதிகார வட்டாரங்களில் உயர்ந்த செல்வாக்கு.
அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் மகன் தேர்வில் தோற்றிருப்பதைப் பற்றிச் சொன்னார். அதோடு மட்டுமல்லாமல், நான் கஞ்சுவோடு பேசி அவர் மகனுக்கு ‘பாஸ்’ போட்டாகவேண்டுமென்பதை ஆணையிடுவது போல் சொன்னார்.
நான் சொன்னேன்: ‘எனக்கு பள்ளிக்கூட ‘அகெடெமிக்’ விஷயங்களில் குறுக்கிட அதிகாரமில்லை. அந்த அதிகாரம் பள்ளி முதல்வருக்குத்தாம் உண்டு. நானே ஓர் பல்கலைக்கழக ஆசிரியன். இது பற்றி எனக்கு உறுதியான அபிப்பிராயங்கள் உண்டு.’
‘நான் யார் என்று தெரியுமா, உங்களுக்கு?’ என்றார் அவர்.
‘நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னால் இந்த விஷயத்தில் கண்டிப்பாக உதவ இயலாது’ என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டேன். அப்பொழுது ’கல்கி’யில் என் நாவல் ‘தீவுகள்’ தொடராக வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு
குறிப்பிட்ட அத்தியாயத்தில் ஒரு சம்பவம்.
ஒரு தொழிலதிபர் காரோட்டிச் சென்று கொண்டிருக்கும்போது, எதோ ஒரு நினைவில், ‘சிகப்பு சிக்னலை’த் தாண்டிச் செல்ல முற்படும்போது, காவலர் வண்டியை நிறுத்தி விடுகின்றார். தொழிலதிபர் அவர் கையில் நூறு ரூபாயைத் திணித்ததும், அவர் மேலே தொடர்ந்து பயணிப்பதை அனுமதித்து விடுகின்றார். தொழிலதிபர் பக்கத்திலிருந்தவர் கேட்கின்றார்: ‘இது லஞ்சம் இல்லையா?’
‘லஞ்சந்தான்,நான் மறுக்கவில்லை. ஆனால் எனக்கு என்னுடைய நூறு ரூபாய் யாரிடம் இருக்கின்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் தண்டனையாக அரசாங்கத்துக்குக் கொடுத்தால், அந்தப் பணம் யாருக்குப் போகின்றது என எனக்குத் தெரியாது. இது சுறாமீன்களின் அரசாங்கம்.’
தண்டல்காரர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘லெஃப்டினண்ட் கவர்னரிடம்’ கொடுத்து விட்டு, ‘ இந்த எழுத்தாளர் அரசாங்கத்தை எதிர்த்து நாச வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பத்திரிகை அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு வார இதழ். இதைத் தடை செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். தில்லிக்கு வந்த அந்த வார ‘கல்கி’ இதழ்கள் அனைத்தும் அரசாங்க உத்தரவால் பறிமுதல் செய்யப்பட்டன.
பத்திரிகை சென்ஸார் அதிகாரி நான் இவ்வாறு எழுதியதற்கு விளக்கம் கோரி, விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் நான் கைது செய்யப்படுவேன் என்ற மிரட்டலும் இருந்தது. அப்பொழுது உள்துறைத் துணைச் செயலராக சி.வி. நரசிம்மன் இருந்தார். அவர் குடந்தை அரசினர் கல்லூரியில் எனக்குக் கணித ஆசிரியராக இருந்தவர். தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர். அவரைப் போய் பார்த்தேன்.
அவர் சொன்னார்; ‘இதன் பின்னணி எனக்கு நன்றாகத் தெரியும். உனக்கும் (தண்டல்காரர் பெயரைக் குறிப்பிட்டு) அவருக்கும் என்ன பகை?’
நான் பள்ளிச் சம்பவத்தை விளக்கிச் சொன்னேன்.
‘சரி, நான் கவனித்துக் கொள்கிறேன். சென்ஸார் தடைகள் இலக்கியத்துக்குக் கிடையாதென்று பிரதமர் பார்லிமெண்டில் அறி
வித்திருக்கிறார். அரசியல் கட்டுரைகளுக்குத்தாம். நீயும் இந்தமாதிரி எழுதுவதைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வை.’ என்றார் நரசிம்மன் புன்னகையுடன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அத்தியாயம் வந்த அதே இதழில், இந்திராவின் சர்வாதிகாரத்தைக் கிண்டல் செய்து, ‘ஆராய்ச்சி மணி’ என்று உருவகக் கதை ‘பராந்தகன்’ என்ற பெயரில் எழுதியிருந்தேன். அது அந்தத் தண்டல்காரர் கண்ணில் படவில்லை. படவில்லையோ அல்லது அவருக்கு அது புரியவில்லையோ தெரியாது.
தடியெடுத்த தண்டல்காரர்கள் மிகுந்து வரும் இக்கால கட்டத்தில் அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
parthasarathyindira@gmail.com