பணியாளர் கதவைத் திறந்துவிட, ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இருந்த பார்வையாளர்கள் காத்திருப்பு அறைக்குள் வந்தார் டி.ஜி.பி. பணியாளர் தண்ணீர் பாட்டில், காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக்கொண்டு வந்து டீபாயில் வைத்தார். “காபி கலக்கட்டுமா ஐயா?” என்று பணியாளர் கேட்டதற்கு, “வேண்டாம்” என்று சிடுசிடுப்புடன் சொன்னார். சத்தம் எழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் பணியாளர். தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறக்க ஆரம்பித்தார் டி.ஜி.பி. அப்போது பணியாளர் கதவைத் திறந்துவிட தலைமைச் செயலாளர், அறைக்குள் வந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத டி.ஜி.பி., “குட் ஈவினிங் சார்” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று சல்யூட் அடித்தார்.
“ப்ளீஸ் சிட் டவுன்” என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தார் தலைமைச் செயலாளர். அவருக்கு எதிரில் இருந்த சோபா
வில் உட்கார்ந்தார் டி.ஜி.பி.
“வாட் எ சர்ப்ரைஸ்” டி.ஜி.பி. சொன்னார். அப்போது பணியாளர் தண்ணீர் பாட்டில், காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக்
கொண்டு வந்து தலைமைச் செயலாளர் உட்கார்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த டீபாயில் வைத்துவிட்டு மிகவும் சன்னமான குரலில், “காபி கலக்கட்டுமா ஐயா?” என்று கேட்டார்.
“வேண்டாம்.” தலைமைச் செயலாளர் சொன்னதும் பணிவுடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் பணியாளர்.
“எனிதிங் ஸ்பெஷல் சார்?.” டி.ஜி.பி. கேட்டார்.
“சார் பாக்கணும்னு சொன்னாரு. ஃபைவ் டென்னுக்கு அப்பாயிண்மண்ட்னு கவர்னரோட செகரட்டரி சொன்னாரு.” தலைமைச் செயலாளர் சொன்னதைக் கேட்டு வியந்துபோன டி.ஜி.பி., “அஞ்சி மணிக்கு வரச் சொல்லி எனக்கும் அவர்தான் போன் பண்ணி சொன்னார்” என்று சொன்னார்.
“அப்படியா!” என்று கேட்ட தலைமைச் செயலாளர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துவிட்டு மீண்டும் போட்டுக்கொண்டார்.
“ஒங்களையும் என்னையும் ஒரே நேரத்தில் வரச் சொன்னது புதுசாவும் இருக்கு, ஆச்சரியமாவும் இருக்கு.”
டி.ஜி.பி. சொன்னதற்குத் தலைமைச் செயலாளர் சன்னமான குரலில், “எஸ்” என்று மட்டும் சொன்னார். சாதாரணமாகத் தலைமைச் செயலாளர் அதிகம் பேச மாட்டார். இவர் மட்டுமல்ல, பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அப்படித்தான். கோபத்தை, அதிகாரத்தைப் பார்வையில் மட்டும்தான் காட்டுவார்கள். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவர்களுக்கு நேரெதிர். தனக்குக் கீழே இருக்கிற அதிகாரிகளை டி.எஸ்.பி.களாக இருந்தாலும் ‘இடியட்’ என்று சொல்லித் திட்டுவார்கள். மிரட்டுவதன் மூலமாகவே தங்களுக்கான அதிகாரத்தைக் காட்டுவார்கள்.
“சென்ட்ரல் கவர்மண்ட்டுலயிருந்து ஏதாவது ரகசியமா சர்க்குலர் அனுப்பி இருக்காங்களா?”
“இதுவர என்னோட நாலேஜிக்கு எதுவும் வரல.”
தலைமைச் செயலாளர் பட்டும்படாமலும் சொன்னார். அவர் எப்போதுமே இப்படித்தான் பதில் சொல்வார். அவருடைய பதிலிலிருந்து யாரும் எதையும் அனுமானித்துவிட முடியாது.
“சாதாரணமா கவர்னர் ஆட்சி நடக்கும்போதுதான் சீஃப் செகரட்டரியையும் டி.ஜி.பி.யையும் ஒரே நேரத்தில் வரவழைச்சிப் பேசுவாங்க. இவரு கொஞ்சம் வித்தியாசமா இருக்காரு. ஸ்டேட் கவர்மண்ட் ‘ஆ’ன்னா சென்ட்ரல் கவர்மண்ட் ‘ஊ’ங்குறாங்க, சென்ட்ரல் கவர்மண்ட் ‘ஆ’ன்னா ஸ்டேட் கவர்மண்ட் ‘ஊ’ங்குறாங்க. நடுவுல இந்த கவர்னரு வேற, இதுவர எந்த கவர்னரும் செய்யாத புது பாலிட்டிக்ஸ் பண்றாரு. பொலிட்டிக்கல் பார்ட்டிங்ககிட்ட மாட்டிக்கிட்டு நாமதான் சாக வேண்டியிருக்கு.”
டி.ஜி.பி. சலிப்பாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “சி.எம்.முக்குத் தகவல் சொல்லிட்டீங்களா?” என்று தலைமைச் செயலாளர் கேட்டார்.
“எஸ் சார்.”
“நானும் சொல்லிட்டுத்தான் வந்தன்.” தலைமைச் செயலாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போது பணியாளர் கதவைத் திறந்துவிட ஆளுநரின் செயலாளர் அறைக்குள் வந்தார்.
“ஹலோ சார்” என்று சொல்லிவிட்டு தலைமைச் செயலாளருக்குப் பக்கத்தில் இருந்த சோபாவில் ஆளுநரின் செயலாளர் உட்கார்ந்தார். அவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். எத்தனை ஆளுநர்கள் மாறிமாறி வந்தாலும் அத்தனை ஆளுநர்களுக்கும் தனிச் செயலாளராகவும், பிடித்தமான செயலாளராகவும் இருக்கிற வித்தை அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
“காபி சாப்பிட்டீங்களா?” ஆளுநரின் செயலாளர் கேட்டார். அவர் கேட்ட விதம் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பாளராக இருக்கும் பெண் கேட்பதுபோல இருந்தது.
“எஸ்” என்று தலைமைச் செயலாளர் சொன்னதும், நாட்டில் நடக்கிற விஷயங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்பதுபோல, “வேலை எப்படிப் போகுது?” என்று ஆளுநரின் செயலாளர் கேட்டார்.
“குட். வழக்கம்போலத்தான்” என்று தலைமைச் செயலாளர் நாடகப் பாணியில் சொல்லி முடித்ததும், டி.ஜி.பி. “எனிதிங் ஸ்பெஷல்?” என்று ஆளுநரின் செயலாளரிடம் கேட்டார்.
“நத்திங்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ஆளுநரின் செயலாளர் சிரித்த விதம் சினிமா நடிகை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது சிரித்தது போல் இருந்தது.
“ஒன் மினிட் ப்ளீஸ், சார்கிட்ட கேட்டுட்டு வந்திடுறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனார் ஆளுநரின் செயலாளர். போன வேகத்திலேயே திரும்பிவந்து டி.ஜி.பி.யைப் பார்த்து, “சார் கூப்பிடுறாங்க. ப்ளீஸ் கம்” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார். அவருக்குப் பின்னால் டி.ஜி.பி., தன்னுடைய உடை, இடுப்பில் போட்டிருந்த பெல்ட், தலையிலிருந்த தொப்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்துவிட்டு, உடலை விரைப்பாக்கிக்கொண்டு போனார்.
ஆளுநரின் இருக்கைக்குப் பத்திருபதடி தூரம் தள்ளி நின்றுகொண்டு உச்சபட்ச உயர் அதிகாரிகளுக்கு எப்படி சல்யூட் அடிக்க வேண்டுமோ அதே முறையில் சல்யூட் அடித்தார். அதே நேரத்தில் சத்தம் வராமல் பார்த்துக்கொண்டார். அப்போது ஆளுநரின் செயலாளர் அறையைவிட்டு வெளியே போனார். மணலில் பாம்பு ஊர்ந்து போகும்போது எப்படிச் சத்தம் உண்டாகாதோ அதே மாதிரிதான் ஆளுநரின் செயலாளர் வெளியே போகும்போது சிறு சத்தமும் எழவில்லை. காற்றின் அசைவுகூட இல்லை.
“நேத்து என்னோட புரோகிராம் ஷெடியூல் உங்களுக்குத் தெரியும்தான?” ஆளுநர் கேட்டார்.
அதிகப்படியான மரியாதை வெளிப்படும் குரலில் டி.ஜி.பி. சொன்னார். “எஸ் சார்.”
“நேத்து பட்டமளிப்பு விழாவுக்கு யூனிவர்சிட்டிக்குப் போய்க்கிட்டு இருக்கும் போது ரெண்டு மாடுங்க குறுக்க வந்துடுச்சி. டிரைவர் பிரேக் போட்டான். அடுத்த பத்தாவது நிமிஷத்துல பன்றிங்க கூட்டமா ரோட்ட கிராஸ் பண்ணுதுங்க. டிரைவர் பிரேக் போட்டான்.
ஒரு ஆளு பொறுமையா மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போறான். ஹாரன் அடிச்சா மாடுங்க ஒதுங்க மாட்டங்குது. தெரியுமா?”
“எஸ் சார். நோ சார். சாரி சார். செக்யூரிட்டிய டைட் பண்ணியிருந்தன் சார்.”
“என்னத்தப் பண்ணியிருந்திங்க மிஸ்டர்” ஆளுநரின் குரலில் நக்கல் இருப்பது தெரிந்தது. முன்பைவிடக் கூடுதல் கவனத்துடன் ஆளுநரைப் பார்த்தார் டி.ஜி.பி.
ஆளுநரின் அலுவலக அறை பெரிய பங்களா அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் ஆளுநர் உட்கார்ந்திருந்தது ஒரு பூச்சி உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் தெரிந்தது. தானும் ஒரு பூச்சியைப் போலத்தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தாலும் உடலை விறைப்பாக்கிக்கொண்டு டி.ஜி.பி. சொன்னார்: “எஸ் சார், சாரி சார். இனிமே அப்படி நடக்காம பாத்துகிறது என்னோட டூயூட்டி சார்.”
“நடந்த பிறகு பாத்துக்கிறதுக்கு நீங்க எதுக்கு டி.ஜி.பி.யா இருக்கணும்.” ஆளுநரின் குரலில் சூடேறியிருப்பது டி.ஜி.பி.க்கு நன்றாகவே தெரிந்தது. ‘மாடு எப்ப குறுக்க வரும், பன்றிங்க எப்ப ரோட்ட கிராஸ் பண்ணும்னு எப்படி சார் தெரியும்? தெரிஞ்சாலும் அதப் பாக்கிறதா சார் போலீஸோட வேல’ என்று டி.ஜி.பி.க்குக் கேட்கத் தோன்றியது. மனதிலிருந்ததைக் கேட்கவில்லை. கடைநிலை ஊழியர் மாதிரி மிகவும் பணிவான குரலில், “எஸ் சார். யூனிவர்சிட்டி இருக்கிற இடம் ஃபாரஸ்ட் ஏரியா. அதனால தவறு நடந்துடுச்சி. இனிமே இப்படி நடக்காது. ஐயாம் ஷ்யூர் சார்” என்று சொன்னார்.
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வேகமாக விட்டெறிவதுபோல் மேசைமீது வைத்தார். ஆளுநர் கண்ணாடியைக் கழற்றி வைத்த விதம் அவர் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறார் என்பதைக் காட்டியது. நாமாகப் பேச வேண்டாம். அவராகப் பேசட்டும் என்று டி.ஜி.பி. காத்துக்கொண்டிருந்தார். கேட்டால் மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டும் என்று டி.ஜி.பி.யே தனக்குக் கீழே வேலை செய்கிற அதிகாரிகளிடம் அடிக்கடி சொல்வார். உயர் அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும்தான் கீழ் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும்.
கேட்காத கேள்விகளுக்குப் பதில் சொல்வதோ, தானாகவே ஒரு வார்த்தை கூடுதலாகப் பேசுவதோ குற்றம் என்பதுதான் காவல்துறையின் நடைமுறை. அதிகாரம் செய்தலும் கீழ் பணிதலும்தான் காவல்துறையின் சட்டம். அதைச் சரியாகவே டி.ஜி.பி. கடைப்பிடித்தார். பேச்சில் மட்டுமல்ல, அவர் நின்றுகொண்டிருந்த விதமும் காவல்துறையின் நடைமுறைபடியே இருந்தது. ஆளுநரின் முகத்தைத் தவிர அறையிலிருந்த பொருட்களை, சுவரில் மாட்டப்பட்டிருந்த நவீன ஓவியங்களை, பிரதமர், ஜனாதிபதி, பழைய ஆளுநர்களின் புகைப்படங்களைக்கூட அவர் பார்க்கவில்லை. ஐ.பி.எஸ்.
பயிற்சியின் போதுகூட அவர் தன்னுடைய உடலை இவ்வளவு விறைப்பாக வைத்துக்கொண்டு நின்றதில்லை. சாதாரணமாக ஆளுநரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திக்க வரும்போது உட்காரவைத்துப் பேசுவது தான் நடைமுறை. டீ கொடுப்பது வழக்கம். ஆனால்,
ஆளுநர் ‘உட்காருங்கள்’ என்றுகூடச் சொல்லாதது வருத்தமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் சாமி சிலையின் முன்நிற்பதைவிடவும் கூடுதலான பயபக்தியுடன் நிற்பதுபோல் டி.ஜி.பி. நின்று கொண்டிருந்தார்.
“போகும்போதுதான் நான்சென்ஸா இருந்ததுன்னா, திரும்பி வரும்போது ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு, குரங்குங்க அங்கங்க கூட்டம் கூட்டமா நடுரோட்டுல ஒக்காந்திருக்குது. ஹாரன் அடிச்சாலும் போகல. கார ஸ்லோ பண்ற நேரத்தில ரெண்டு மானுங்க குறுக்க ஓடுது. அந்த நான்சென்ஸ் டிரைவர் அடிக்கடி பிரேக் போடுறான்.” ஆளுநர் பல்லைக் கடிக்கிற சத்தம் கேட்டதும் டி.ஜி.பி.யின் உடல் மேலும் விறைப்பானது. அவர் நின்றுகொண்டிருந்த விதம் ஒரு இரும்புக் கம்பியை நிறுத்திவைத்ததுபோல் இருந்தது. மாநிலத்தின் மொத்த போலீஸும் சட்டம் ஒழுங்கும் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், எங்கு வந்து எப்படி நின்றுகொண்டிருக்கிறோம்? அதிகாரத்தின் வலிமை என்ன என்பதையும், அதிகாரத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் முழுமையாக உணர்ந்தவராக டி.ஜி.பி. நின்றுகொண்டிருந்தார்.
“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைக்கிறிங்களா மிஸ்டர்? நான் ரெண்டாவது முறையா கவர்னரா இருக்கன் தெரியும்தான?” ஆளுநரின் குரலில் வேகம் கூடியிருப்பது நன்றாகவே தெரிந்தது. மொழு மொழுவென்றிருந்த அவருடைய கன்னத் தசைகள் துடிப்பது தெரிந்தது.
“எஸ் சார்.”
“ரூட்ட முடிவு செஞ்சது யாரு?’’
டி.ஜி.பி.யால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி.யைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார். கொஞ்ச நேரம் கழித்து சத்தமில்லாமல் சொன்னார்: “அது கொஞ்சம் ஃபாரஸ்ட் ஏரியா சார்.”
“ஃபாரஸ்ட் ஏரியாவுல யார் யூனிவர்சிட்டிய கட்டச் சொன்னது?” கோபமாகக் கேட்டார் ஆளுநர்.
பல்கலைக்கழகம் கட்டுவது காவல்துறையின் கட்டுப்பாட்டில வராது. அது மாநில அரசின், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்லலாமா? உயர் அதிகாரிகளின் முன், அதிகாரத்தின் முன் கூடுதலாகப் பேசுவது குற்றச்செயல், அது பதவியைக் காலி செய்துவிடும் என்று அவருடைய போலீஸ் மூளை சொன்னதும் பேசாமலிருந்தார் டி.ஜி.பி.
“டைரக்ட்டா எஸ்.பி.யா?”
“எஸ் சார்.”
“ட்ரெயினிங்கில ஒண்ணும் சொல்லித் தரலியா?”
“…”
“போயி டூயூட்டிய ஒழுங்கா பாருங்க.”
“எஸ் சார். தேங்க் யூ சார். அது ஃபாரஸ்ட் ஏரியாங்கிற
தாலதான் தவறு நடந்துடிச்சி. கன்சர்ன் ஆபீசர்ஸ் மேல இன்னிக்கே நடவடிக்க எடுத்துடுறன் சார்.” டி.ஜி.பி.யின் குரலில் முழுமையான பணிவு நிறைந்திருந்தது.
“ஃபாரஸ்ட் ஏரியாவாவே இருக்கட்டுமே. கவர்னரோட காருக்கு முன்னால மாடு போறதும், பன்றிங்க போறதும், மாட்டு வண்டி போறதும், மான் ஓடுறதும், கூட்டம்கூட்டமா குரங்குங்க ஒக்காந்திருக்கிறதும் சரியா? கவர்னருக்கும், கவர்னரோட காருக்கும் என்ன மரியாத? அந்த ரூட்டுல இந்த மாதிரி இருக்கும்னு போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு முன்னாடியே தெரியும்தானே. அதுக்காக என்ன நடவடிக்க எடுத்திங்க? லோக்கல்ல என்ன நடக்குது, என்ன இருக்குதுன்னு தெரியாம எதுக்கு டி.ஜி.பி.யா இருக்கிங்க? கவர்னர கார்ல ஒக்கார வச்சிக்கிட்டுத்தான் ரோட்டுல இருக்கிற டிஸ்டபென்ஸ கிளியர் பண்ணுவாங்களா? அதுக்குப் பேர்தான் செக்யூரிட்டியா? போலீஸ் டிபார்ட்மண்டா?”
“இனிமே அப்படி நடக்காது சார்” சத்தியம் செய்வதுபோல சொன்னார். டி.ஜி.பி. சிறிது நேரம் பேசாமல் இருந்தார். “உங்க அனுமதியோட ஒரு வார்த்த பேசலாமா சார்?” கடைநிலை ஊழியர் மாதிரி அனுமதி கேட்டார். முகத்தைச் சுளித்துக்கொண்டே, வேண்டா வெறுப்பாக, “சொல்லுங்க” என்று ஆளுநர் சொன்னார்.
“இனிமே சாரோட புரோகிராம் எல்லாத்தயும் என்னோட நேரடிக் கட்டுப்பாட்டுல வச்சி நானே பாத்துக்கிறன் சார். அதே மாதிரி சாரோட கார் போற ரூட்ல குரங்கு இருக்கா, மான் இருக்கா, பன்றிங்க இருக்கா, ஆடுமாடுகள் இருக்கானு செக் பண்ண தனியா ஒரு டீம் போட்டுடுறன். குரங்கப் புடிக்கிறதுக்கு, மானப் புடிக்கிறதுக்கு வலையோட ஒரு டீம் போடுறன். ஆடு, மாடு, பன்றி வச்சியிருக்கவங்கக்கிட்ட முன்னாடியே அலர்ட் பண்ணிடுறன். மாட்டு வண்டி, டயர் வண்டி, லோடு வண்டினு எதுவும் போகாம பாத்துக்கிறன் சார். சாரோட புரோகிராமுக்கு முதல் நாளிலிருந்து புரோகிராம் முடிஞ்ச மறுநாள் வரைக்கும் ஆடுமாடுகள வீட்டிலேயே கட்டி வச்சியிருக்கணும். கோழியக் கூண்டவிட்டு வெளிய விடக் கூடாது. பன்றியிருந்தா காட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போயிடணும். மீறுறவங்க மேல தேச விரோத வழக்கு, குண்டாஸ் போடப்படும்னு இன்னிக்கே ஆர்டர் போட்டு எல்லா எஸ்.பி.க்களுக்கும் அனுப்பிடுறன். சாரோட கார் போகும்போது வானத்தில காக்கா, குருவினு எது பறந்தாலும் முன்கூட்டியே சுடச் சொல்லிடுறன். ரோட்டுல ஈ, எறும்பு இருந்தாக்கூடப் பூச்சி மருந்து தெளிக்கச் சொல்லிடுறன். தெரு நாயிங்க இருந்தா அதுகளப் புடிக்கிறதுக்கு நாய் வேன் ஒண்ணு அரேன்ஞ் பண்ணிடுறன் சார். ஒங்களோட பாதுகாப்புதான் சார் எங்களுக்கு முக்கியம். ஒங்களப் பாதுகாக்கறதுக்காகத்தான் நாங்க இருக்கம். ஏன்னா அது நாட்டோட பாதுகாப்பு, கௌரவம்” என்று சொன்ன டி.ஜி.பி.க்குத் தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்ற கவலை வந்தது. ஆளுநர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்காக அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்தார். ஆளுநரின் முகத்தில் எந்தச் சலன முமில்லை.
“என்ன செய்யணுமோ செய்ங்க.” ஆளுநர் வேண்டாவெறுப்பாகச் சொன்னார்.
“எஸ் சார்.”
“நீங்க போகலாம்.”
“தேங்க் யூ சார்” என்று சொன்ன டி.ஜி.பி. எந்த அளவிற்குத் தன்னுடைய உடலை விறைப்பாக்கிக் கொண்டு சல்யூட் அடிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆளுநருக்கு சல்யூட் அடித்தார். பிறகு, தண்ணீருக்குள் மீன் போவதுபோல எந்தச் சத்தமும் எழாமல் அறையைவிட்டு வெளியே வந்தார். முன்பு உட்கார்ந்திருந்த அறைக்குள் வந்தார். அறையில் தலைமைச் செயலாளர் மட்டும்தான் இருந்தார். டி.ஜி.பி. வெளியே வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல எங்கிருந்தோ அறைக்குள் வந்த ஆளுநரின் செயலாளர், “ப்ளீஸ் கம் சார்” என்று சொன்னார். தலைமைச் செயலாளர், எஜமானருக்குப் பின்னால் போகும் பணியாளர் மாதிரி ஆளுநரின் செயலாளருக்குப் பின்னால் போனார்.
டி.ஜி.பி. டீபாய் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். அவருக்கு இன்னும் ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. தலையிலிருந்த தொப்பியை எடுத்து டீபாயின் மீது வைத்தார். வியர்த்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் நெற்றியை, கழுத்தின் பின்பகுதியைத் தடவிப்பார்த்தார். லேசாக ஈரமாக இருப்பதுபோல உணர்ந்தார். இடுப்பு பெல்ட், நெஞ்சுக்கிடையே குறுக்காகப் போட்டிருந்த பெல்ட், இறுக்கமாக இருப்பதுபோல் தெரிந்ததால் லேசாகத் தளர்த்திவிட்டார். கிளம்பிப் போய்விடலாமா? என்று யோசித்தார். தலைமைச் செயலாளர், ஆளுநரின் அறைக்குள் இருக்கும்போது சொல்லாமல் போவது சட்டச் சிக்கலாகிவிடும் என்று நினைத்தார். “ஐ.ஏ.எஸ். பசங்களே திமிர் பிடிச்சவனுங்க. ட்ரான்ஸ்ஃபர் பண்ற அதிகாரம் அவங்கக்கிட்டதான இருக்கு” என்று சொல்லி முனகினார்.
டி.ஜி.பி.யாகப் பதவி உயர்வு பெற்று நான்காண்டுகள் முடிந்துவிட்டது. ஆனாலும் அதிகாரம்மிக்க மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாகவோ, மாநிலத் தலைநகரின் கமிஷனராகவோ பதவி வகிக்கவில்லை. ஓய்வுபெற இருக்கிற காரணத்தினால்தான் அவருக்குக் கடைசியாகப் பாவம் பார்த்து சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாகப் பதவி கொடுத்தார்கள். அதுவும் மூன்று மாதமே இருக்கும்போது, அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும்
முப்பத்தி ஆறு நாட்களே இருக்கின்றன. இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கல் வந்துவிட்டதே என்று நினைத்த டி.ஜி.பி.க்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யின் மீது ஆத்திரம் உண்டானது. “இடியட்” என்று சொன்னார்.
ஐந்து, பத்து நிமிடங்களிலேயே திரும்பிவந்த தலைமைச் செயலாளர், “நீங்க இன்னும் போகலியா?” கேட்டுக்கொண்டே களைப்படைந்த மாதிரி தளர்ந்துபோய் சோபாவில் உட்கார்ந்தார்.
“சார்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு இருந்தன் சார்.” டி.ஜி.பி. சொன்னார்.
“வேல முடிஞ்சா போக வேண்டியதுதான? எதுக்கு ஃபார்மலிட்டிஸ்” என்று சொல்லிவிட்டுத் தலைமைச் செயலாளர் சிரிக்க முயன்றார். அவருக்குச் சிரிப்பு வரவில்லை. அவர் சிரித்துப் பேசி இதுவரை யாரும் பார்த்ததில்லை என்று தலைமைச் செயலகத்தில் பேச்சு இருந்தது. அவர் யாருக்கும் நன்மை செய்ய மாட்டார். அதே மாதிரி தனக்கும் செய்துகொள்ள மாட்டார். அவரிடம் ஒரு ஃபைலில் கையெழுத்து வாங்குவது எளிதல்ல என்பது தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிற கடைநிலை ஊழியர்கள்வரை தெரியும். ‘மிஸ்டர் களீன்’ என்ற பெயருக்காகப் பிச்சைக்கூடப் போட மாட்டார். அவர் தலைமைச் செயலகத்திற்கு வரும்போதும் போகும்போதும், ‘ரூல்ஸ் வருது, ரூல்ஸ் போவுது’ என்று கடைநிலை ஊழியர்கள்கூடக் கிண்டலடிப்பார்கள்.
டி.ஜி.பி.க்கு ஆளுநர் என்ன சொன்னார் என்று கேட்க வேண்டும்போல இருந்தது. கேட்டாலும் சொல்ல மாட்டார் என்பது நன்றாகவே தெரியும் என்றாலும், “எனிதிங் ராங் சார்?” என்று கேட்டார்.
“வெளியே போயிடலாமா?”
“எஸ் சார்” என்று டி.ஜி.பி. சொன்னதும் எழுந்து நின்ற தலைமைச் செயலாளர், “நேத்து புரோகிராம்ல ஏதாவது பிரச்சனயா?” என்று கேட்டார். டி.ஜி.பி.யும் எழுந்து நின்றுகொண்டு, “நேத்து சார் போகும்போது மாடு, பன்றிங்கனு குறுக்க வந்திருக்கு. திரும்பி வரும்போது ரோட்டுல குரங்குங்க இருந்திருக்கு. மாட்டு வண்டி போயிருக்கு. மான் குறுக்க ஓடியிருக்கு. டிரைவர் பிரேக் போட்டிருக்கான்” என்று சொன்னார்.
“ஓ” என்று தலைமைச் செயலாளர் சொன்னார்.
“அனிமல்ஸுக்கு மாநில மந்திரியோட காரு, மத்திய மந்திரியோட, கவர்னரோட, முதலமைச்சரோட, பிரதமரோட, ஜனாதிபதியோட, நீதிபதியோட காருனு தெரியுமா சார்?” என்று கேட்டார் டி.ஜி.பி.
“—”
“மனுசனுக்குத்தான் கவர்னர், முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, எம்.எல்.ஏ., எம்.பி., ஸ்டேட் மினிஸ்டர், சென்ட்ரல் மினிஸ்டர் தேவ. போலீஸ், கோர்ட், நீதிபதி தேவ. பணம், செல்வாக்கு, அதிகாரம் தேவ. இதெல்லாம் அனிமல்ஸுக்கு என்ன தெரியும்? கொரோனா காலத்தில சனங்க சோத்துக்கு இல்லாம செத்துக்கிட்டிருந்தப்பதான் நம்ப நாட்டுல ஒரு கட்சியோட தலைவரு ஒரே ஒரு நாள் போட்டுக்கிற கோட்டுக்காக பதிமூணு லட்சம் செலவு செஞ்சாரு. எதனால? அதிகாரத்தினாலதான்” என்று சொல்லி டி.ஜி.பி. முடிப்பதற்குள்ளாகவே அவசரப்பட்ட மாதிரி, “பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்” என்று தலைமைச் செயலாளர் சொன்னார். அவருடைய குரலில் எச்சரிக்கையும் அதிகாரத் தொனியும் வெளிப்பட்டது.
“எஸ் சார்.”
“கவர்னர் கேட்டதுக்கு என்ன சொன்னிங்க?”
“கவர்னர் எந்த ரூட்டுல போனாலும், அந்த ரூட்டுல குரங்கு இருந்தாலும், மான் இருந்தாலும் புடிக்கற
துக்கு வளையோட ஒரு போலீஸ் டீமயே போடுறன். ஆடு, மாடு, பன்றி வளர்க்கிறவங்க வீடுகளுக்கு ஒரு போலீஸுனு போட்டு, ஆடு, மாடுகள எதயும் அவிழ்த்துவிடாம பாத்துக்கிறனு சொல்லி அஷ்யூரன்ஸ் கொடுத்திருக்கன்.”
“குட்” தலைமைச் செயலாளர் சொன்னார். அவர் சொன்ன விதம் இதுதான் சரியான சட்ட ரீதியான நடவடிக்கை என்பது போலிருந்தது.
“ஒரு சின்ன தகவல் சார்.”
“நாம வெளிய நின்னுகூடப் பேசலாம். ஜர்னலிஸ்ட்ங்க பாத்தாங்கன்னா சீஃப் செகரட்டரியும், டி.ஜி.பி.யும் கவர்னரை ஒன்றாகச் சந்தித்தனர்னு நியூஸ் போட்டு பெரிய புரளியக் கிளப்பிடுவாங்க. அதிலயும் யூடியூப் சேனல்காரங்களுக்குக் குண்டூசி கீழ விழறதும் இப்ப நியூஸ்தான். அதுக்குப் பயந்துகிட்டுத்தான் ரூமுலியே பேச வேண்டியிருக்குது. ரூலிங் பார்ட்டிக்குப் பயப்படுறமோ இல்லியோ, மீடியா பீப்பிள்ஸுக்கு பயந்து சாக வேண்டியிருக்கு. இதுதான் அதிகாரத்தோட மர்மம். அதிகாரத்தோட தன்மை. தனிமையும்கூட” என்று சொன்னார். தலைமைச் செயலாளரின் பேச்சு டி.ஜி.பிக்குப் பிடித்திருந்தது. ‘மத்தவங்ககிட்டதான்னு இல்லை, நம்மகிட்டகூட நாமே பேசிக்க முடியாது. அதுதான் அதிகாரத்தோட பெரும. மகிம’ என்று சொன்ன வார்த்தை கூடுதலாகப் பிடித்திருந்தது.
“கேரளாவில் ஒரு ஜட்ஜ் ரயில் ஏறுறதுக்குப் போயிருக்காரு. பிளாட்பார்மில அவர ஒரு கொசு கடிச்சிடிச்சிபோல. அதுக்காக ஸ்டேட் கவர்மண்டுக்கும், சென்ட்ரல் கவர்மண்டுக்கும் அவர் போட்ட உத்தரவு இருக்கே, அது மாதிரி உத்தரவ ஒலகத்தில எந்த நீதிபதியும் போட்டதில்ல. இதுக்கே அவர் கீழ் லெவல்ல உள்ள நீதிபதிதான்” என்று சொல்லிவிட்டு டி.ஜி.பி. சிரித்தார். தலைமைச் செயலாளரும் சிரித்தார். அவர் சிரித்தது அரசாங்க சிரிப்புப்போல இருந்தது.
“நானும் பேப்பர்ல அந்தச் செய்தியப் பாத்தன், போன குடியரசு விழாவுக்காக ஜனாதிபதிய அழைச்சிக்கிட்டு வரும்போது ஒரு குதிர அப்பப்ப தலை ஆட்டிக்கிட்டே இருந்திருக்கு. இன்னொரு குதிர யூரின் போயிருக்கு. குதிரைக்கு ஏன் சரியா ட்ரெயினிங் கொடுக்கல? பப்ளிக்கில அதுவும் ஜனாதிபதிய அழைச்சிக்கிட்டு வரும்போது, குதிர எப்பிடித் தலய ஆட்டலாம், குதிர எப்படி யூரின் போகலாம்னு கேட்டு, பிரதமர் அலுவலகத்திலிருந்து, ஜனாதிபதியோட அலுவலகத்திலிருந்து என்கொயரி மேல என்கொயரி செஞ்சதோட, குதிரைப் படை சம்பந்தப்பட்ட டீமையே டோட்டலா காலி பண்ணிட்டாங்க. நியூஸ் தெரியும் தான? என் சர்வீஸ்ல இது மாதிரி பல விஷயங்களச் சொல்ல முடியும். ஒங்களாலயும் சொல்ல முடியும். அதுக்காக நாம என்ன செய்ய முடியும்? அதிகாரம்” சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு தலைமைச் செயலாளர் சொன்னார்.
“ட்ரூ சார். ஒன் மோர் திங் சார். ஒலகத்திலியே செல்வாக்கான அமெரிக்காவையே மிரள வைக்கிற சீன அதிபரும், நம்ம நாட்டுப் பிரதமரும் மகாபலிபுரத்தில சந்திச்சப்ப இரு நாட்டு போலீஸையும் உளவுத் துறையையும் ஏமாத்திட்டு ஒரு நாய் ஓடிப்போனதுக்கு நாம பட்டமே சார். வாழ்க்கயில மறக்கக்கூடிய விஷயமா சார்? அதுதான் அன்னிக்கி உலக நியூஸா இருந்துச்சி. அந்த டென்ஷன் ஒரு வாரத்துக்கு இருந்துச்சி. என் வாழ்க்கயில அந்த நாய மறக்க முடியாது சார். அந்த நாயி எப்படி அங்க வந்துச்சிங்கிற ரகசியத்த மட்டும் என்னால புரிஞ்சிக்கவே முடியல சார். ஒரு நாயிக்கு முன்னால சீன நாட்டு போலீஸும் உளவுத் துறையும், நம்ம நாட்டு போலீஸும் உளவுத் துறையும் தோத்துப் போயிடிச்சி. சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. நாயிக்குத் தெரியுமா இவர் பிரதமர், இவர் ஜனாதிபதின்னு. அதிபர் பதவியெல்லாம் மனுசங்களுக்குத்தான். அனிமல்ஸுக்கு இல்ல” என்று டி.ஜி.பி. சொல்லி முடிப்பதற்குள், “நான்
ஐ.ஏ.எஸ். ஆனதும் நீங்க ஐ.பி.எஸ். ஆனதும் பதவிக்காகத்தான், அதிகாரத்திற்காகத்தான். யூ நோ.” தலைமைச் செயலாளர் சொன்னதும், சட்டென்று டி.ஜி.பி.யின் முகம் மாறி விட்டது. “ட்ரூ சார்” என்று சொன்னார் டி.ஜி.பி.
“வாங்க போகலாம்” என்று சொல்லிவிட்டுத் தலைமைச் செயலாளர் கதவைத் திறந்துகொண்டு முதலில் வெளியே போக, அவருக்கடுத்து டி.ஜி.பி.யும் அறையைவிட்டு வெளியே வந்தார். இருவரும் வாசலை நோக்கி பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
“முதலமைச்சர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு, ஒங்கள ட்ரெயினிங் அகாடமி டி.ஜி.பி.யா ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லிட்டாரு. டிரைவருக்கு சஸ்பெண்ட், துணை வேந்தருக்கு நோட்டீஸ்.”
“தேங்க் யூ சார். காத்திருப்போர் பட்டியல்ல வையிங்க. இல்லன்னா மாநகராட்சி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் டி.ஜி.பி.யா போடுங்கன்னு சொல்லுவார்னுதான் நெனைச்சன் சார். அந்த ஆபீசில ஒக்காருறதுக்கு நாற்காலிகூட இல்ல. ஒங்களுக்குத் தெரியும். அப்படிச் செஞ்சியிருந்தா ரிட்டையர் ஆகப்போகிற சமயத்தில டிபார்ட்மண்டுல ரொம்ப அசிங்கமா ஆகியிருக்கும்.”
“என்னெத் தப்பா எடுத்துக்கக் கூடாது. முதலமைச்சரும் கவர்னரும் சொல்றதச் செய்யுறது மட்டும்தான் என்னோட வேல. அது மட்டும்தான். யூ நோ.”
“எஸ் சார். ஐ நோ சார்” என்று டி.ஜி.பி. சொன்னார்.
அப்போது நடைப்பயிற்சிக்காக அழைத்துக்கொண்டு போயிருந்த, கொழுத்த பன்றி போன்றிருந்த உயர் ரக வெளிநாட்டு நாயைக் காவலர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஆளுநரின் மாளிக்கைக்குள் போவது தெரிந்தது. தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.யும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சைரன் விளக்கு ஒளிர தலைமைச் செயலாளரின் காரும், டி.ஜி.பி.யின் காரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்றன. இருவரும் அவரவர் காரில் ஏறிக்கொண்டனர்.
imayamannamalai@gmail.com