நான் சமீபத்தில் கடந்து வந்த இரு நிகழ்வுகள் என்னை யோசிக்க வைத்தன. என் ஓட்டுனர் வண்டியை ஒரு வீட்டருகே நிறுத்தி இருந்தார். வண்டியை நிறுத்தியிருந்த அந்த வீட்டின் முன்னே நிறைய பேர் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர் என்னவென்று விசாரித்த பொழுது அது ஒரு நாயக நடிகரின் வீடு என்று தெரிந்தது. ஒரு வீட்டின் அடைத்த கதவின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் என்ன கிடைத்துவிடும் என்று தெரியவில்லை.
அதே வீட்டின் முன்பு, ஓர் இளம்பெண்ணும் அவரது பெற்றோர்களுடன் அதே அடைத்த கதவின் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி முன் நின்று கொண்டு வெகு தூரத்தில் இருந்து வருவதாகவும் தீவிர ரஸிகர்கள் என்றும் அதனால் அவர்களைப் பார்க்க
வேண்டும் என்று அந்த கேமரா முன்னர் கெஞ்சிக்கொண்டு இருந்தனர். இதைக்கேட்டவுடன் எனக்கு ஒரு ஆச்சரியம், கோபம் மற்றும் வருத்தம் கலந்த உணர்வு ஏற்பட்டது.
இது போலவே சில நாட்களுக்கு முன் வந்த இரு திரைப்படங்களுக்கான களேபரங்களில் இறந்த ஒரு இளைஞன். அதில் அவனுடைய அன்னையின் கண்ணீர். வீட்டிற்கும், நாட்டிற்கும் ஏதோ ஒரு வழியில் உபயோகமாக இருக்க வேண்டியவன், ஒரு காரணமும் இல்லாமல் வெட்டியாக உயிரை விட்டதைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. அது ஒரு விபத்துதான். வேறு ஒரு சூழ்நிலையிலும் அது போல் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஏதோ ஒரு போரைப்போல் இரு தரப்பினரும் செய்த கூத்துக்கள் அதில் ஈடுபட்ட அந்த இளைஞன், அவனது அநியாய மரணம். அதுதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது.
இது சிலர் செய்யும் செயல் அல்ல. ஒரு நடிகரின் படம் வெளியாகும் பொழுது ஏற்படும் கூத்துகளைப் பார்த்தால் இது பெரும்பாலான மக்களின் வழக்கமான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்க்கும்பொழுது எனக்கு அறுவெறுப்புதான் ஏற்படுகிறது. ஒரு வேளை
நான் தான் தவறாக அனுமானிக்கிறேனோ என்று என்னை நானே ஒரு சுயபரிசோதனையும் செய்து கொண்டேன். ஏனெனில் பல நேரங்களில் என் கருத்துக்கள் ஊரோடு ஒத்துப்போவதில்லை.
அதன் முடிவில் என் அனுமானம் சரிதான் என்று நம்புகிறேன். இது போலசெய்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் கூத்து, பிறகு அதன் வாரிசான நாடகம், அதன் பின்னர் வந்த திரைப்படம், அதில் நடிப்பவர்கள், அவர்களை ஆராதிக்கும் ரசிகர்கள். அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் புகைவண்டியில் பயணம் செய்தால் ஒவ்வொரு நிலையத்திலும் அவர் காட்சி தராவிட்டால் ரயில் நகராது என்று சொல்வார்கள். மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் அவர்கள் (புரட்சித்தலைவர் என்று பட்டம் சூட்டப்பட்டவர்) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதற்காக சாலையில் செல்லும் பொழுது சாலையோரத்திலிருந்த பெண்கள் பாலைப்பீச்சி அடித்ததாக ஒரு நிச்சயப்படுத்தாத செய்தி உண்டு. ஆனால் என்அனுபவத்தில் என் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற ஒரு இளைஞனின் இளம் மனைவி அவனை மடியில் போட்டுக்கொண்டு என் எம்ஜியாரே என்று கதறியதைப் பார்த்துள்ளேன்.
முந்தைய கால கட்டங்களில் விளம்பரத்திற்காகத் தெருவில் டமாரம் அடித்துக்கொண்டு மாட்டு வண்டியில் ஒலிபெருக்கி வைத்து சத்தமிட்டுக்கொண்டு செல்வார்கள். இன்று அந்தச் செயலை அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் செய்கின்றன.
முன்பு சமைக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. இன்றைய காலத்திலோ அது எப்படி சமைக்கப்படுகிறது என்று செய்து காட்டப்படுகின்றது. அது போல எங்கோ உருவான திரைப்படம் அரங்கத்திரைகளில் காட்டப்பட்டது. இன்று அதில் பங்கெடுத்த நடிகர்களையும் மற்ற தொழில் வல்லுனர்களையும் பேட்டி எடுத்து அது எப்படி உருவாக்கப்பட்டது, அதன் படப்பிடிப்பில் அவர்கள் நடித்தது முதல் அவர்கள் உடுத்தியது வரை விலாவாரியாக விவாதிக்கப்பட்டு, விதந்தோதப்பட்டு, ஆராதிக்கப்பட்டு சின்னத்திரையில் காட்டப்படுகிறது.
சாப்பிடப்போகும் நமக்கு அது எப்படி சமைக்கப்படுகின்றது என்பது தேவையா? படம் பார்க்கப்போகும் நான் அது எப்படிப் படமாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமா?
இது போலவே வாழ்வின் எல்லா அம்சங்களிலும், ஏன் சாவிலும் கூட நமது மக்களை பாதிக்கும், இந்த நாயக மோகத்தை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஏழு முதல் இன்று வரை தமிழகத்தில் ஆள்பவர்கள் திரைப்படத்திற்கு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியலில் இருப்பவர்கள் திரைப்பட நடிகர்களை ஒரு போட்டியாளராகத்தான் பார்க்கி
றார்கள். திரைப்பட நாயகர்களும் முதலமைச்சர் கனவுகளை சுமந்து கொண்டுதான் அலைகிறார்கள்.
இக்கட்டுரை நாயகர்களைப்பற்றியோ, அரசியலாளர்களைப்பற்றியோ அல்ல. அவர்களை இது போல நினைக்க வைக்கும் அவர்களை ஆராதிக்கும் நம் மக்களைப்பற்றியதுதான்.
இது ஒரு வெகுசன உளவியல் நோக்கிலானது. இதன் உளவியல் கூறுகளைக் கண்டு அவைகளை உரைத்தால் யாருக்கும் இல்லாவிட்டாலும் எனக்கு ஒரு தெளிவு கிடைக்குமே என்ற நோக்கம்தான் தலையாயது.
ஒரு நிகழ்வைக்காணும் நாம் அதனுடன் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். அந்த நாடகத்துடன் அறிந்தோ அறியாமலோ ஒரு இணக்கம், சுயத்தைக் கழட்டி வைத்துவிட்டு அதன் மாயையில் ஆழ்கிறோம். அந்தக் கதாபாத்திரத்துடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். அதன் உளப்போராட்டங்களை உள்வாங்கி அதற்கான உணர்ச்சிகளை அனுபவித்து அவைகளையும் வெளிப்படுத்துகிறோம். இதில் நாயகன் மட்டுமே முன்னிலை, நாயகி உள்பட மற்ற எல்லோரும் நாயகனைத் தூக்கி நிறுத்தும் உபபாத்திரங்களே. நாயகியை முன்னிருத்தும் படங்கள் கூட நாயகன் கண்ணோட்டத்தில் இருந்துதான் உணரப்படுகின்றன. ஆம், திரைப்படங்கள் பார்க்கப்படுவதில்லை. ஒட்டு மொத்தமான உணர்ச்சியாகத்தான் அனுபவிக்கப்படுகின்றன.
பார்க்கும் ரசிகன் எந்தப் பாலினமாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் நாயகனுடன்தான் உறவு. அவன் பார்வைதான் அங்கு. யாராக இருந்தாலும் எந்த மொழியில் படத்தையோ, நாடகத்தையோ பார்த்தாலும் முதலில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவனின் முதிரா மனநிலைக்குச்செல்ல வேண்டும். மாயையை, கனவை, பொய்யை நிஜம் என்று நம்ப வேண்டும். அது அடிப்படைத்தேவை. இரண்டாவதாக நம் நிஜ வாழ்வின் உண்மைத்தன்மையையும், நிதர்ஸனங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு அந்தப் பொய்யான நிதர்ஸனத்தை தற்காலிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கனவின், கற்பனையின் வரையறைகளையும், களங்களையும் ஏற்றுக்கொண்டு நுழையவும், அதில் சஞ்சரிக்கவும் வேண்டும்.அந்த நடிகர்கள் ஆடும் கதைக்களம் நமது களங்களை விட அப்பொழுது நிஜமாகிவிட வேண்டும். அந்தக் களத்தில் நடக்கும் நிகழ்வுகள் அதன் தாக்கங்கள் நம் உண்மையான நிகழ்வுகளை விட அதீதமாக நம்மைத் தாக்க அனுமதிக்க வேண்டும். அதாவது அவன் கஷ்டங்களையும், துக்கங்களையும் நம் துரதிர்ஷ்டங்களை விட அதிகமாக உணர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.கண்ணீர் விட வேண்டும். அவனுக்குப் பதிலியாக நம்மைக் கற்பனை செய்து கொண்டு அவன் சுகதுக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். இது படம் முடியும் வரை மட்டும் இருந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் பலர் வாழ்க்கையில் இந்த உணர்ச்சிகள் அரங்கை விட்டு வெளியே வந்த பின்னும் தொடர்கிறது. படம் பார்க்கும் பொழுது நாம் நாயகனோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அப்படி இல்லாவிட்டால் படம் பார்ப்பதில் சுகமில்லை. அர்த்தம் கூட இல்லை. சிலர் நாயகியின் பக்கம். நாயகியே முக்கிய பாத்திரம் என்றால் அவரோடு அடையாளம். அப்பொழுதுதான் படத்தில் ஈடுபட முடியும். பதிலியாக(vicarious) ஈடுபடும் நம் உணர்ச்சிகள் நம்மைப் பொறுத்தவரையில், நிஜமானவை. நாம் விடும் கண்ணீர் நடிப்பல்ல.செயற்கையல்ல. அதன் தாக்கம் சர்வ நிச்சயமான உண்மை அதில் போலி இல்லை. துரதிர்ஷ்டவசமாக நடிப்பவர்கள் அதைப் போலியாகச்செய்கிறார்கள் என்ற உண்மையை நாம் யோசிப்பதும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை. பின்னும் நினைவில் வைத்துக்கொள்வதும் இல்லை.
பெரும்பாலானோர் படத்தின் காட்சிகளை நிஜ வாழ்க்கையை விட அதிகமாக நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அதை அவர்கள் வாழ்க்கையில் உபயோகிக்கிறார்கள். அதாவது அவர்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் திரையில் வந்த தீர்வுகள் பலிக்கும் என்ற நம்பிக்கையும், அதையே செயல்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்கிறார்கள். சிறுவர்கள் அவர்கள் விளையாட்டில் திரையில் நாயகன் செய்ததைப்போல செய்வதும், அவரைப்போல பாவித்துக்கொண்டு சண்டையில் ஈடுபடுவதும் பார்த்திருக்கிறீர்கள். பதின் பருவத்தினர் நாயகனைப்போல கற்பனை செய்து கொள்வதும் எதிர்பாலாருடன் உறவு கொள்ள நினைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. திரையில் காட்டப்படுவது போல பெண்ணைக் கேலி செய்து துரத்தினால் அடுத்த சந்திப்பில் காதல் வயப்பட்டுவிடுவாள் என்று நம்பும் எத்தனை விடலைகளை நாம் பார்க்கிறோம் அல்லது அது போன்ற நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகளில் படிக்கிறோம். இது போல அதீதமாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் திரைப்பட வசனங்களை தினசரி வாழ்க்கையில் சர்வசாதாரணமாக உபயோகிக்கிறோம். அதைத் தவறாகச்
சொல்லவில்லை. நிகழ்கிறது என்று மட்டும் பதிவு செய்கிறேன். `நேரடியாக இதுபோல் தாக்கங்கள் இருந்தால், மறைமுகமான தாக்கங்கள் இதை விட நுண்மையாக நம்மீது தாக்கம் செலுத்தும். அதன் செல்வாக்கு எல்லோருக்கும் புரிவதில்லை.
தமிழ்ப் படங்களில் தங்கையை வில்லன் கெடுத்து விட்டால் நாம் கோபப்படுகிறோம், அதே வேளையில் அதற்குப் பழிவாங்க நாயகன் அந்த வில்லனின் தங்கையைக் கெடுக்கலாம்.அது ஏற்புடையது. இதன் அபத்தம் யாருக்கும் நெருடுவதில்லை.
இந்த நாயகனோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் மனநிலை அவனோடு ஒரு மெய்நிகர் உறவை ஏற்படுத்துகிறது. அதில் அவனுடன் நெருங்கி விடுகிறோம். அவன் திரையில் அனுபவிக்கும் இடர்களும், உணர்ச்சிகளும் நாமும் அவனுடன் சேர்ந்து அனுபவிக்கிறோம். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் ஒருவருடன் மாய நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நிதர்ஸனம் அல்ல என்று புத்திக்குத் தெரிந்தாலும் உணர்வுப் பூர்வமக அதைப் பல்வேறு படிநிலைகளில் ஏற்றுக்கொள்கிறோம்.
பெரும்பான்மையோர் திரையைக்காணும் வரை அந்த மனநிலையில் இருந்துவிட்டு முடிந்து அரங்கை விட்டு வெளியே வரும் பொழுது சமநிலைக்கு வந்து விடுகிறோம். சில கலைஞர்கள் படம் முடிந்த சில மணித்துளிகளுக்கோ, நாட்களுக்கோ அந்த பாதிப்பை ஏற்படுத்துவார்கள். இது வரை சகஜம் அல்லது நார்மல் என்ற வரையறைக்குள் வரும். சிலர் முதிரா மனநிலையில் சீர்தூக்கும் பார்வை இல்லாமல் நிஜத்திற்கும் மாயத்திற்கும் உள்ள எல்லைகள் தெளிவாக இல்லாமல் இருக்கும் பொழுது திரை மாயங்களை நிதர்ஸனம் போல உருவகித்துக்கொள்கின்றனர். அதில் சிலருக்கு நிஜ வாழ்க்கை அவ்வளவு ருசிக்காமல் இருக்கும் பொழுது இது ஒரு ஆசுவாசத்தையும் மகிழ்வையும் கொடுக்கிறது.
இந்த சூழலில், ஊடகங்கள் திரையில் தோன்றுபவர்களுக்கு ஊதிப்பெருக்கிய ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகிறது. அவர் மூன்று இட்லி சாப்பிட்டார் என்பது எனக்கு முக்கியமாகத்தெரிய வேண்டிய செய்தி என்று எந்த ரூபத்திலோ தெரியப்படுத்தப்படுகிறது. இது போன்ற செய்திகள் திரும்பத் திரும்ப நம்மை வந்து அடையும் பொழுது அதில் உள்ள அபத்தம் மறந்துபோய் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆகி விடுகிறது. மேலும் இதில் உள்ள வியாபார சாத்தியங்கள் மற்றவர்களையும் உள்ளே இழுத்து விடுகின்றன. இதன் விளைவாக திரையைப் பார்க்காத பொழுதும் மற்ற ஊடகங்கள் மூலமாக நம் புலன்களில் அறைந்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் நுண்மையாக(subtle) நம்மை, நம் பார்வைகளை, அபிப்பிராயங்களை மாற்றுகிறது. அப்படி மாறாதவர்கள் சமூகத்தில் சிறுபான்மையினராக மாறிவிடுகிறார்கள்.
நாயகர்களை, அவர்களின் பிம்பங்களை ஊதிப்பெருக்கும் முயற்சிகள் சிலவே தற்செயலானவை. பெரும்பாலும் பல நேர்முகமான அல்லது மறைவான காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. திரைப்படத்தொழில் ஒரு வர்த்தகம். சாதாரணர்களாகிய நாம் நினைக்க முடியாத கற்பனைக்கு அப்பாற்பட்ட பணம் விளையாடும் கிட்டத்தட்ட ஒரு சூதாட்டம். போட்ட பணத்தை எடுக்க எந்த எல்லையையும் தாண்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே நாயகர்களை அசாதாரணர்களாக, அதிமானுடர்களாக(superman) காட்சிப்படுத்தவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தீயூழாக அதைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவமோ, முதிர்ச்சியோ நமக்கு இல்லை. சொல்லப்படும், எழுதப்படும் வார்த்தைகளையும், காணும் காட்சிகளையும் அதன் மெய்ப்பொருள் காணாது அப்படியே எடுத்துக்கொள்கிறோம். உண்ணும் உணவு நம் வயிற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடலின் ஒரு பகுதி ஆவதைப்போல் இந்த தகவல்களும் புத்தியால் கேள்வி கேட்கப்படாமல், ஆராயாமல் ஏற்கப்பட்டு மனதில் ஒரு பகுதியாக ஆகி விடுகிறது.
இதை நம்மிடம் கொண்டு சேர்க்கும், அதை ஏற்க வைக்கும் அந்த முயற்சிகளை சரி, தவறு என்று சொல்வதல்ல என் நோக்கம். மாறாக, மக்கள் இதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான தீர்வைக் கண்டடைவதுதான் முதன்மையானது.
அதற்கு முன் இது போல நாயகர்களை ஆராதிப்பது சரியா தவறா என்பது விடை காண வேண்டிய ஒரு கேள்வி. இது சரி என்று நினைப்பவர்களுக்கு சில தெளிவுஅடைய வேண்டிய விஷயங்கள்.
அதற்கான சில கேள்விகள். விளக்கங்கள்.
ஒரு திரைப்படம் காணச்செல்லும் பொழுதே அதன் மாயைக்கு அடி பணிய முடிவு செய்து விட்டே செல்கிறோம். அதன் பொய் காட்சிகளுக்கும். மாய உணர்ச்சிகளுக்கும் நாம் உண்மையாகவே எதிர்வினைகளை ஆற்றுகிறோம். திரையில் நாயகன் படும் துன்பம் பொய், ஆனால் அதற்காக நாம் விடுவது நிஜக்கண்ணீர். மனம் அடையும் பாரம், தொண்டை அடைத்தல் எல்லாம் நிஜம். திரைக்காட்சிகளும், வசனங்களும் நம் வாழ்வில் ஊடுருவி விட்டன. அந்த வசனங்களைப் பல தருணங்களில் நிஜ வாழ்க்கையில் உபயோகிக்கிறோம். திரைப்படங்களின் தாக்கம் அந்த அளவிற்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. இப்படி இருந்தாலும் மன வருத்தம் ஏற்படுத்தும் விஷயம் அதில் சொல்லப்படும் அறிவுரைகளைப் பெரும் பாலானோர் எந்தக்காலத்திலும் நாம் கடைப்பிடித்ததே இல்லை. மாறாக, பலர் அவர்கள் செய்த தீய செயல்களைத் திரைப்படம் பார்த்தே செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். அது போல் செய்யக்கூடிய மனநிலை உடையவர்கள் அதைப்பார்த்துக் கொஞ்சம் உந்தப்பட்டிருக்கலாம். அதுவும் ஒரு ஹேஷ்யமே. இவர்கள் வெகு சிறுபான்மையினர்.
பெரும்பாலானோர் நிதர்ஸனத்தையும், மாயையையும் இனம் காண முடியாதோர். திரையில் தோன்றும் மாயத்தை நம்பி அதன் பின் ஓடி நிஜ வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டு இருப்பவர்கள். கனவையும் நனவையும் சரியாகப் பிரித்துப் பார்க்கும் கலை சிலருக்கு மட்டுமே கைவந்திருக்கிறது. அவர்களை உதாரணமாகக்கொண்டு அந்தக் கலையை மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிஜத்திற்கும், கனவிற்கும் வித்தியாசம் புரியாமல் உழண்டு கொண்டு இருக்கிறார்கள்.
நம் நாட்டில் ஒரு நோய் போல இந்தக் கலாச்சாரம் பரவி இருப்பதாகவும், மேலும் பரவி வருவதாகவும் நான் கருதுகிறேன். ஒரு கல்வியாளனுக்கு இல்லாத, பொறியாளனுக்கு இல்லாத மதிப்பு திரையிலும் மேடையிலும் தோன்றும் நடிகனுக்கு இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இது போன்று நாயகர்களுக்குப் புகழும், பணமும் பாராட்டுகளும் கிடைக்கும் பொழுது மக்களைப்பெற்ற பெற்றோர் தக்கள் பிள்ளைகளை இந்தத்துறையில் சேர்க்கத்தான் நினைக்கிறார்கள். அதன் விளைவாகப் பல சிறுவர்கள் இதில் நாட்டமடைந்து வாழ்க்கையை இதில் இழக்கலாம். அது அவர்கள் வீட்டுக்கோ அல்லது நாட்டுக்கோ நல்லது அல்ல.
இந்த நிலை தொடங்கி விட்டது என்றே என் அனுமானம். ஏனெனில் இன்றைய தொலைக்காட்சிகளில் ஆடவும் பாடவும் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வருவதும் அக்குழந்தைகள் ஒரு சிறிய வெற்றியைப் பெற்று விட்டால் குபேர நிதி கிடைத்தது போல குதிப்பதும் தோற்று விட்டால் குடி முழுகியது போல் கூப்பாடு போடவும் நாம் சின்னத்திரையில் காண்கி றோம். இதற்கு ஒரு முடிவும் விடிவும் காண்பது அவசியம்.
rrajkumar1953@gmail.com