நீங்கிய பின்னரே
திருவிழா இரவொன்றில்
வானில் நிகழ்ந்து மறையும்
வண்ணமயமான வாண வேடிக்கை
சம்பவித்து முடிந்து விடுகிறது
உன் வருகையும் பிரிவும்
வெகு தூரம் அனுப்பி விட்டிருக்கும்
வளர்ப்பு புறாவொன்றின் திரும்புதலுக்காக
உள்ளங்கையில் அது பொதிந்திருந்த
கதகதப்புடன் காத்திருப்பதைப் போல
எதிர்நோக்கி இருக்கிறேன்
நீ மீண்டு வருவதை.
நீ விட்டுச் சென்றிருக்கும் வெறுமை
ஒரு திடப்பொருளென உருக்கொள்கிறது
உண்மையில்
நீ நீங்கிச் சென்ற பின்னரே
தொடங்குகிறது
உன்னைத் தீண்டுதல்.
பாரம்
முன்பொரு காலத்தில்
ஒரு காதல் இருந்தது
அது இருவருக்கிடையில் இருந்தது
பின்பு
இருவருக்கான காதலின்
மொத்த பொறுப்பும்
அதில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது
அந்த சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்
அதன் ஆயுளுக்கான
வெல்லத் துண்டு
அதன் முதுகை
ஒடித்துக் கொண்டிருக்கிறது.
மட்டும்
எலும்பு வரை ஊடுருவும்
குளிரைப் போக்க
நீ என்னவெல்லாம் செய்யக்கூடும்?
கொஞ்சம் மது அருந்தலாம்
கனத்த கம்பளியொன்றைத் தேடலாம்
ஒரு கனப்பை மூட்டலாம்
காதலற்ற காமமுமற்ற
ஓர் உடல் – என்னைத்
தழுவிக் கொள்ளும் போது
நான் வெப்பத்தை மட்டும்
எடுத்துக் கொள்கிறேன்.
எதிர் சமன்
உன் லௌகீக லட்சியங்களில்
இல்லை ‘இறவாத காதல்’
அடைய வேண்டிய
இலக்குகளின் பட்டியலில்
ஏற்கனவே அடைந்தவற்றை எல்லாம்
சிவப்பு மசியில் அடித்து விட்டிருந்தாய்
ஆதலால்
இப்போது
தான் தங்கும் இடமெல்லாம்
விளக்கேற்ற வேண்டி சிம்டாவை
கையோடு தூக்கிச் செல்லுமொரு
நாக சன்யாசியைப் போல
உன் பாதைகளில் ஒளி கூட்ட
என் காதலின் வெளிச்சத்தோடு
உன்னைப் பின் தொடர்வது
உனக்கு உறுத்தலாகிறது
வருந்தத் தேவையில்லை நீ
தன் கடன் பணி செய்து கிடப்பதே
என்பது – எல்லோருக்கும்
பொருந்தும் தானே..!
இன்னும் கவலை எதற்கு…?
இதோ பார்..
தன் நெறி தவறாது ஒழுக முயலும்
காபாலிகன் ஒருவன்
கையிலேந்தும் திருவோடு என்பது
மாண்டு விட்ட எவனோ ஒருவனின்
மயானத்து மண்டையோடு தானே..!!
umashanthi24@gmail.com