கோடையில் உலர்த்திய துணி
ஆறாண்டு நட்பை
பிரியங்களை
காதலை ஃபேஸ்புக் காட்டுகிறது
அது ஒரு ப்ரோக்ராம்
அல்காரிதம்
எந்திரத்தனமான ஏற்பாடு
ஆயினும் அது
மனிதத் தன்மையுடையதாக இருக்கிறது
அது எல்லாவற்றையும்
நினைவில் கொண்டிருந்தது
மீளக் காட்டுகிறது
மனிதர்களுக்குத்தான்
எதுவுமே நினைவில் இருப்பதில்லை
ஆறாண்டுகள் என்பது
கோடையில் கொடியில் உலர்த்திய
ஈரத்துணிபோல
அத்தனை சீக்கிரம் உலர்ந்துவிட்டது
பாடல்களால் அளந்த தூரம்
உன்னிடம் வருவதற்கான
தூரத்தைக் கணக்கிட்டேன்
அது ஐம்பத்து மூன்று
பாடல்களின் தூரம் என்று
கூகுள் மேப் காட்டியது
வழியெங்கும்
ஒவ்வொரு பாடலாய்
கேட்கக் கேட்க
உனக்கும் எனக்குமான
இடைவெளிகள்
குறைந்துகொண்டே வரும்
கடைசிப் பாடல் ஒலிக்கும்போது
கண்களில் நீர் மல்க
எனக்கு நீ கதவு திறப்பாய்
உனக்கும் எனக்குமான
பயண தூரங்கள்
தயக்கங்களாலானவை
தடுமாற்றங்களலானாவை
நிச்சயமின்மைகளாலானவை
புகைமூட்டமான சொற்களாலானவை
பற்றிகொள்ள முடியாத பரிதவிப்புகளாலானவை
பொருள்கொள்ள முடியாத வாக்குறுதிகளாலானவை
வெற்று நம்பிக்கைகளாலானவை
வெய்யிலாலானவை
தாகத்தாலானவை
உனக்கும் எனக்குமான
தூரத்தின் மைல்களை
பாடல்களால் அளந்தால் மட்டுமே
கடந்துவிடலாம் என
கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது
இரண்டு பாதைகள்
இரண்டு பாதைகள்
பிரியுமிடத்தில்
காரின் வேகத்தை மிதமாக்கிய
சாரதியின் குரல் வினவியது :
“சார்.. இதில்
எந்தப் பாதையில் செல்லட்டும்?”
நான் தடுமாறுகிறேன்
என்னால் ஒருபோதும்
பதில் சொல்ல முடியாத
கேள்வி ஒன்று இருக்க முடியும் என்றால்
அது இதுதான்
“இரண்டு பாதைகளில்
எந்தப் பாதையில் செல்வது?”
இரண்டு படிப்புகளில்
எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்
இரண்டு வேலைகளில்
எந்த வேலையை தேர்ந்தெடுப்பது என்பதில்
இரண்டு நம்பிக்கைகளில்
எந்த நம்பிக்கையை தேர்ந்தெடுப்பது என்பதில்
இரண்டு சீட்டுகளில்
எந்தச் சீட்டை தேர்ந்தெடுப்பது என்பதில்
இரண்டு முடிவுகளில்
எந்த முடிவை எடுப்பது என்பதில்
இரண்டு காதல்களுக்கு நடுவே
எந்தக் காதலைத் தேர்ந்தெடுப்பது என்பதில்
எல்லாவற்றிலும்
நிலை குலைந்து நின்றிருக்கிறேன்
எந்தப் பாதையில் சென்றாலும்
செல்லும் பாதைக்கு
என்னால் பொறுப்பேற்க முடியாது
நான் தவிர்த்த மாற்றுப் பாதையில்
நான் இழந்தவற்றை நினைத்து
வாழ்நாளெல்லாம் ஏங்கிப்போவேன்
எப்போதும்
இரண்டு பாதைகள் இருக்கும்
இந்த உலகில்
நான் எங்கும் போகவிரும்பாமல்
இங்கேயே உட்கார்ந்துவிட்டேன்
இல்லாமலாகிவிட்ட நாள்
நாளைக்கான ஒரு வேலையை
இன்றென நினைத்து
எல்லா ஆயத்தங்களும் செய்து
படியிறங்கப் போகையில்தான் கவனித்தேன்
இல்லை,
அது இன்றில்லை
நாளை என
என்னவோ சஞ்சலம்
ஏதோ ஒரு வருத்தம்
எங்கேயோ ஒரு தடுமாற்றம்
ஒரு நினைவு பிசகுகிறது
ஒரு பிடி நழுவுகிறது
இந்த நாளின் வேலை என
நான் நம்பிய ஏற்பாடு கலைந்துவிட்டால்
இந்த நாளை நான் என்ன செய்வது?
அதை நான் ஒரு காதலுக்கு தருவேன்
அல்லது மீன்களுக்கு இரையாகத் தருவேன்
அல்லது எப்போதோ இழந்த ஒருவரை
தேடிச் செல்வேன்
அல்லது என் அறையை
மீண்டும் ஒழுங்கமைப்பேன்
அல்லது என் வாழ்வை
மேலும் கொஞ்சம் சீரழிப்பேன்
தொகை ஏதும் எழுதப்படாத
கையெழுத்திட்ட ஒரு ” ப்ளாங்க் செக்” என
வசீகரமாய் இருக்கிறது இந்த நாள்
அதை பலிபீடத்தில்
ஒரு மலரென வைத்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் செல்கிறேன்
தேவதை என அறியும் வழி
கண் தெரியாத தேவதைகளுக்கு
தாம் தேவதை என
அறிந்துகொள்ள
என்ன வழி இருக்கிறது ?
அவர்களின்
மனம் இருக்கிறது
பாதாளங்களில் மலரும் மலர்
“ஒரு நாளேனும் வீட்டுக்கு வா”
என்றாள் மெய்யான அன்புடன்
உன் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் என்று
நான் கேட்கவில்லை
” உன் வீட்டிற்கு ஏறி வர
எத்தனைப் படிகள்?” என்றேன்
சங்கடமான மெளனத்திற்குப்பின்
” முதல் தளம்
பணிரெண்டு படிகள்
லிஃப்ட் இல்லை
நாம் படிக்கட்டில் வேண்டுமானால்
அமர்ந்து பேசலாமா?” என்றாள் பரிதவிப்புடன்
வீடு என்பது
படிக்கட்டுகளும்
சேர்ந்ததுதானே
நான் நெருங்கவிரும்பும் நிலவுகள்
எப்போதும் ஆகாயத்தில் இருக்கின்றன
என்னை விரும்பும் அரசிகள்
எப்போதும் மலைமேல் இருக்கிறார்கள்
நானோ
பாதாளங்களில் மலரும்
மலராக இருக்கிறேன்
அன்பைச் சொல்ல
அவளது அன்பைச் சொல்ல
அவளிடம் சொற்கள் இல்லை
கண்ணீர் இல்லை
தழுவிக்கொள்ள கைகளின் நீளம்
போதவில்லை
ஒரு கடிதம் எழுத விரும்பினாள்
கூச்சமின்றி அதில் தன்னை
வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை
ஆனால்
அந்தத் தாளமுடியாத அன்பை
சொல்ல விரும்பினாள்
அவனை எப்போதோ
ஒரு வெய்யில் நிரம்பிய
மத்தியானத்தில்
முதன்முதலாகத் தேடி வந்த
பாஸஞ்சர் ரயிலின் டிக்கட்டை
இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்
அதை அவனுக்கு
ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினாள்
அந்த ரயில் டிக்கட் புகைப்படம்
ஒரு பெண்ணின் புகைப்படத்தைவிடவும்
வசீகரமாக இருந்தது
அதில் ஒரு கணம்
அவன் மனதைப் பறிகொடுக்கிறான்
அது ஒரு உதிர்ந்த இலைபோலும் இருந்தது
அது அவனை வருத்தமுறச் செய்கிறது
அது இன்னும் முடியாத
ஒரு பயணத்தின் டிக்கட் ஆதலால்
அது இப்போதும் செல்லுபடியாகும்
வழியில் இறங்கிப் போகாதிருக்கட்டும்
ஒரு நிமிடம் போதும்
என்னவோ ஒரு மனத்தாங்கல்
பாராமுகமாக இருக்கிறார்கள்
என்னவென்று சொன்னால்
சரிசெய்ய எனக்கு
ஒரு நிமிடம் போதும்
சரிசெய்துவிடுவேன் என்பதால்தான்
பாராமுகமாக இருக்கிறார்கள்
கோடை என்பது…
என் கண்களைப் பாராமலே கூறினாள்:
“உன்னிடம்
மறைக்கவேண்டும் என்று நினைத்து
மறைக்கவில்லை
சொல்லக் கூச்சமாக இருந்தது
சொல்ல பயமாக இருந்தது
என்னைப் பற்றி உன் நெஞ்சிலிருக்கும்
சித்திரம் அழிந்துவிடும் என
தடுமாற்றமாக இருந்தது
உன் நம்பிக்கை ஒன்று உடைவதைக்காண
துணிவில்லாமல் இருந்தது
எல்லாவற்றையும்விட
என் மனம் தந்திரமாக ஒன்றை யோசித்தது;
உன் வாழ்விலும்
புதிதாக யாராவது வந்திருந்தால்
இதையெல்லாம் சமப்படுத்திவிடலாம் என நம்பினேன்”
அவள் அருகில்
யாரோ ஒருவன் நின்றுகொண்டிருந்தான்
கோடை என்பது
மறைவிடங்களற்றது
நாம் ஆவேசமாக நடந்து செல்லவேண்டும் என
முடிவு செய்துவிட்டால்
எவ்வளவு தூரம் வேண்டுமானாலும்
வெய்யிலில் நடக்கலாம்
எப்போதாவது
“இந்த மஞ்சள் கொன்றை
மலர்கள்தான்
எத்தனை நறுமணமாக இருக்கின்றன
மீன் வாங்கச் செல்லும் பாதையில்
மேற்கொண்டு நடக்க மனமில்லாமல்
இந்த மரத்தடியிலே நின்றுகொண்டிருக்கிறேன்”
என்றாள் இருநூற்றி பதினைந்து கிலோ மீட்டர்
தொலைவில் இருந்து
அப்போதும் நானும்
அதேபோன்ற
ஒரு மஞ்சள் கொன்றை
மரத்தின் கீழ் அமர்ந்தபடி
அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்
காலை வெய்யிலின்
சோம்பல் கலையாத நீலவானம்
தன் இருகைகளால் அந்த மலர்களை
எட்டித் தொட முயன்றுகொண்டிருந்தது
சிறுபொழுது
என் நெஞ்சின் பாரங்கள்
இறக்கிவைத்துவிட்டேன்
எப்போதாவது
இரண்டு மனங்களுக்கு இடையே
பொதுவாக ஒரு வசந்தம் வருகிறது
பொதுவாக மஞ்சள் கொன்றைகள் மலர்கின்றன
இடைவெளிகளை தூரங்களை
இட்டு நிரப்புகின்றன
எப்போதாவது,
ஆம்
எப்போதாவது
manushyaputhiran@gmail.com