பொதுவாகவே தமிழ் சினிமாக்கள் என்பவை நிரூபிக்கப்பட்ட தடங்களில் தொடரும் பயணம்தான். காதல் படமோ, நகைச்சுவைப்படமோ, பேய்ப்படமோ, தாதா படமோ ஒரு திரைப்படம் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டால் பிறகு அதேபோல் பல திரைப்படங்கள் வெளியாவதுதான் தமிழ் சினிமா வழக்கம். இப்போது சாதியப்பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது தான் வெற்றிகரமான பேசுபொருள். 2000-த்தின் இடைப்பகுதிக்கு முன்புவரையிலான தமிழ் சினிமாக்களிலும்கூட சாதியும் பாலியல் வன்முறையும் சித்திரிக்கப்பட்டன. ஆனால் ஆதிக்கச்சாதிப் பெருமிதங்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் அடிமைகளாகவும் சிறுபான்மையினர் தீவிர
வாதிகளாகவும் கிரிமினல்களாகவும் சித்திரிக்கப்பட்ட அவலம், ஒரு பெண்ணுக்குக் கற்பே முக்கியம், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் தன்னை வன்முறைக்கு உள்ளாக்கியவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது தற்கொலை செய்து தன்னை நிரூபிக்கவேண்டும் என்ற சித்திரிப்புகளே நிரம்பிவழிந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகாலத் தமிழ் சினிமா இவற்றிலிருந்து தனித்து விலகிப் பயணிக்கிறது. அப்படியொரு தனித்த பயணத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
ஒரு பாரம்பரியமான இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து பல தயக்கங்களுக்குப் பிறகு வேலைக்கு அனுப்பப்படுகிறாள் ஃபர்ஹானா. தன் உடலை மறைக்கும் ஃபுர்ஹாவை அணிந்தபடி பணிக்குச் செல்லும் ஃபர்ஹானா அங்கு தன் முகத்தை மறைத்து குரல் வாடிக்கையாளர்களுடன் உரையாட வேண்டும். கிரெடிட் கார்டு, பேங்க் லோன் போன்றவை குறித்த அழைப்புகளில் இருந்து அவள் இன்னொரு பணிக்கு, அது என்னவென்றே தெரி
யாமல் மாறுகிறாள். அது ஆண்களிடம் மனம் திறந்து உரையாடும் ‘ஃப்ரென்ட்ஸ் சாட்’ பணி.
தன் குடும்ப ஆண்களுக்கு வெளியே பரிச்சயமில்லாத ஃபர்ஹானாவுக்கு அந்நிய ஆண்கள், முகம் தெரியாதவர்கள் என்றாலும் உரையாடத் தயக்கமாக இருக்கிறது. அதிலும் பெரும்பாலான உரையாடல்கள் பாலியலை மையப்படுத்தியவை. ‘என்ன சைஸ், என்ன கலர் உள்ளாடை போட்டிருக்கே’ என்பதான உரையாடல்களே அதிகம். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக அந்தப் பணியில் தொடரும் ஃபர்ஹா
னாவுக்கு ஆறுதலாக வந்து சேர்கிறது தயாளன் என்ற இசைக்கலைஞனின் குரல். ஆனால் அதுவே பின்னாளில் எப்படி சிக்கலாகிறது என்பதை க்ரைம் த்ரில்லராக முன்வைக்கிறது ‘ஃபர்ஹானா’.
முதலில் கால் சென்டரில் இருந்து அழைக்கும் ஒரு பெண் குரலைக்கூட எதிர்கொள்ளாமல் அல்லது நிராகரிக்காமல் நம்மின் ஒருநாளும் கடந்துவிடுவதில்லை. கிரெடிட் கார்டு, பேங்க் லோன், ஆதரவற்றோர் இல்லத்துக்கான நிதியுதவி, சுற்றுலா என்று விதவிதமான கோரிக்கைகளுடன் வரக்கூடிய குரல்களில் பெரும்பாலானவை பெண்குரல்கள்தான். பல சமயங்களில் இவை நமக்கு எரிச்சலை
யூட்டக்கூடியவைதான். ஆனால் நமக்கு அப்பால் முகம் தெரியாமல், பொருளாதாரக் காரணங்களுக்காக இதையே பணியாகச் செய்துகொண்டிருக்கும் பெண்களிடம் கண்ணியத்துடனும் நிதானத்துடனும் உரையாடுவது ஒன்றே ஆண்கள் செய்ய வேண்டிய, செய்ய முடிந்த அறச்செயல். ஆனால் இதை எல்லா ஆண்களும் செய்வதில்லை என்பதாலேயே அது சிக்கலாகிறது. கால்சென்டர் என்னும் கதைக்களத்தைக் கொண்டு அதன் சிக்கல்களைப் பேசும் முதல் தமிழ் சினிமா என்று ‘ஃபர்ஹானா’வைச் சொல்லலாம்.
முன்பே சொன்னதைப்போல் பெண்கள்மீதான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அதிகம் வெளியாகின்றன. பாபநாசம், அனல்மேலே பனித்துளி, மிஷ்கினின் திரைப்படங்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. ஒருவகையில் இத்தகைய படங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும் இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.
பெண்கள்மீதான பாலியல் வன்முறை பற்றியே மீண்டும் மீண்டும் பேசும்போது இதையே முதன்மைப் பிரச்னையாக மாற்றி, பெண்களின் மற்ற பிரச்னைகளைப் பேசாமலே கடந்துவிடுகிறோமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் பெண்கள் கடத்தப்படுவது, பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது ஆகியவற்றை மையப்படுத்தியே வெளியாகும் திரைப்படங்கள் பெண்கள் பொதுவெளிக்கு வருவதையே முடக்கிவிடுமோ என்னும் சந்தேகமும் எழுகிறது. மிஷ்கின் படங்கள் போன்றவற்றில் பெண்களை மீட்கும் ரட்சகர்களாக ஆண்களே இருக்கிறார்கள் என்பது சிக்கலை இன்னும் அதிகப்படுத்துகிறது. இத்தகைய படங்களில் இருந்து தனித்து விளங்குகிறது ‘ஃபர்ஹானா’.
தனக்கு ஏற்படும் சிக்கலைத் தானே துணிச்சலாக எதிர்கொள்கிறாள் ஃபர்ஹானா. தயாளனை ஷாப்பிங் மாலில் பார்க்கச்செல்லும்போது ‘நானும் வரட்டுமா?’ என்று கேட்கும் தன் சக ஊழியர்களான ஆண், பெண் இருவரையும் தவிர்த்துவிட்டுத்தான் அவள் செல்கிறாள். இறுதியில் சட்டரீதியாகவே தன் பிரச்னைக்குத் தீர்வும் காண்கிறாள். ஒரு பிரச்னை, அதிலிருந்து மீண்டபின் அவள் முடங்கிவிடவில்லை. மீண்டும் அதே பணியைத் தொடர்கிறாள். அதற்கு அவள் கணவனும் உடன்நிற்கிறான் என்று முன்வைக்கும் ஃபர்ஹானாவின் கதைசொல்லல் வரவேற்கத்தக்கது.
உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது உருவாக்கத்திலும் தொழில்நுட்பத்திலும்கூட ஃபர்ஹானா நேர்த்தியான சினிமாவாக முழுமை பெற்றிருக்கிறது. இறுதிவரை தொய்வடையாத திரைக்கதை, காட்சிகளுக்கு உயிரூட்டும் இசை மற்றும் ஒளிப்பதிவு, இயல்பான அதேநேரம் அழுத்தமான வசனங்கள் ஆகியவை இதற்குக்காரணம். அதேபோல் ஃபர்ஹானாவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம், இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் பதிவு.
தமிழ் சினிமாக்களில் தீவிரவாதிகளாகவோ அல்லது வாழ்க்கைப் பின்னணியற்ற துணைப்பாத்திரங்களாகவோதான் இஸ்லாமியர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்ட திரைப்படங்கள் தமிழில் வருவது அரிதினும் அரிது. திரையில் மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் உள்ள ஆர்யா, ஷாம், தாமிரா, மீரா கதிரவன் என்று நடிகர்களும் இயக்குநர்களும்கூட இஸ்லாமிய அடையாளத்தை மறைத்துக்கொண்டு இயங்குவதுதான் கோலிவுட் எதார்த்தம். ஆனால் ஃபர்ஹானாவில் மார்க்கக்கடமைகளை நிறைவேற்றுவது முதல் ரம்ஜான் கொண்டாட்டம் வரை உண்மைக்கு நெருக்கமான இஸ்லாமிய வாழ்வு பதியப்பட்டிருக்கிறது. முதன்மைப்பாத்திரங்களாக இஸ்லாமியர்களே இருக்கிறார்கள். ஆனால் முரண்நகை என்னவென்றால் ஃபர்ஹானாவுக்கான முதல் எதிர்ப்பு இஸ்லாமியர்களிடமிருந்து குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்தே எழுந்தது.
கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்
பட்ட அநீதியின் பின்னணியில் இந்த மனநிலை புரிந்துகொள்ளப்படக்கூடியதுதான். மேலும் புர்கா, கேரளா ஸ்டோரி, ஃபர்ஹானா என்று அடுத்தடுத்து வந்த படங்கள் ‘எல்லாமே இஸ்லாமியர்களுக்கு எதிரானதுதானோ?’ என்ற மனநிலையை உருவாக்கியது. ஆனால் மூன்று படங்களும் தம்மளவில் வெவ்வேறானவை.
ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியான கே.எம்.சர்ஜுனின் ‘புர்கா’, கணவனை இழந்து இத்தா என்னும் மதக்கடமையில் இருக்கும் ஓர் இஸ்லாமியப்பெண்ணுக்கும் அந்நிய ஆண் ஒருவனுக்கும் நடைபெறும் உரையாடலை அடிப்படையாகக் கொண்டது. இதேபோல் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு மணவறையிலேயே கணவன் கைதாகிவிட, மறுமணத்துக்காக ‘இத்தா’ இருக்கும் இஸ்லாமியப் பெண் குறித்து கீரனூர் ஜாகிர்ராஜா எழுதி ‘இத்தா’ என்னும் நாவல் வெளியாகியுள்ளது. அந்த நாவலில் உள்ள தீவிரம்கூட இந்தப் படத்தில் இல்லை. ஒரு பெண்மீதான ஒடுக்குமுறைக்கு மதம் காரணமா இல்லையா என்பதைக்கூட தெளிவாகச் சொல்லாத உரையாடலைக்கொண்ட படம் ‘புர்கா’.
‘கேரளா ஸ்டோரி’ முற்றிலும் இந்துத்துவ அஜென்டா கொண்ட படம். கேரளாவில் லவ் ஜிகாத் மூலம் இந்துப்பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகிறார்கள் என்ற இந்துத்துவவாதிகளின் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இதை மோடி முதல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரை தூக்கிப்பிடித்தும் மக்களைச் சென்றடையவில்லை.
ஃபர்ஹானாவோ மேற்கண்ட இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படம். நவீனத் தொழில்நுட்ப உலகில் வேலைக்குச் செல்லும் பெண் சந்திக்கும் சவாலையும் எப்படி அவள் அந்தச் சவாலை எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. அவள் இஸ்லாமியப் பெண் என்றாலும் அடிப்படையில் பெண். எல்லாப் பெண்களும் சந்திக்கும் பிரச்னைகளையே அவளும் சந்திக்கிறாள். ஆனால் இதுகுறித்த எந்தப் புரிதலுமின்றி எழுந்த எதிர்ப்பும் பின் அடங்கிப்போனது. ஒரு புரிதலுக்குப்பின் எதிர்ப்பு அடங்கிப்போனாலும் இத்தகைய எதிர்ப்புகள் எழுவதன் தோற்றுவாய் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்.
இது அடையாள அரசியலின் காலம். பேரியக்கங்கள் தங்கள் நலன்களைக் கண்டுகொள்ளவில்லை, தங்கள் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற அடிப்படையில் தலித்துகள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர், பால் சிறுபான்மையினர் தனி இயக்கங்கள் அமைத்து செயற்படுகின்றனர். இத்தகைய அடையாள அரசியல் தவிர்க்க முடியாதது. அதன் நியாயங்கள் வரவேற்றுப் பேசப்பட வேண்டியவை. அதேநேரத்தில் இந்த அடையாள அரசியலுக்கு வரம்புகளும் அபாயங்களும் உள்ளன என்பதை நாம் கவனம்கொள்ள வேண்டும்.
பேரடையாளங்களின்கீழ் தங்கள் தனித்துவம் ஒடுக்கப் படுவதாகக் கருதும் சமூகங்கள் தனித்த அரசியலைப் பேசும் அதேநேரத்தில் அது குறுகல்வாதமாக முடியும் அவலத்தையும் தம்மைத்தானே தனிமைப் படுத்திக்கொள்ளும் சிக்கலையும் காண்கிறோம். இத்தகைய சிக்கல் ஏதோ இஸ்லாமிய அமைப்புகளுக்கு மட்டுமில்லை. தலித் அரசியல் போன்ற அடையாள அரசியலுக்கும் இருக்கின்றன. தலித் என்னும் பரந்து
பட்ட அடையாளத்தைக் கைவிட்டு உட்சாதி அடையாளங்களை முன்னெடுப்பது, ஆதிக்கச்சாதியினரைப் போலவே தங்களுக்கான ஆண்ட பரம்பரைக் கதைகளை உருவாக்குவதுடன் அதற்குத் தத்துவார்த்த ஆய்வு முலாம் பூசுவது, பிற ஒடுக்கப்பட்டவர்களை முற்றிலும் புறக்கணிப்பது ஆகியவற்றை சமகாலத்தில் பார்க்கிறோம். சாதிய, மதவாதச் சக்திகளை எதிர்ப்பதைவிடவும் சமூக ஜனநாயக முற்போக்குச்சக்திகளை மூர்க்கமாக எதிர்ப்பது இதன் மோசமான துணைவிளைவாக இருக்கிறது. ‘அந்தணன்’, ‘பிள்ளை’ பட்டங்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டி விழா எடுத்துக்கொள்வது போன்ற மோசமான சூழலை நாம் இப்போது காண்கிறோம். இது சாதி உறுதியாக்கத்துக்கு இட்டுச்செல்லுமேயல்லாது சாதி ஒழிப்புக்கான வழியல்ல. இதன்மீது விமர்சனங்களை முன்வைத்தாலே அதைத் தலித் விரோதமாகப் பார்க்கும் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது.
இன்றுள்ள சூழல் கொடிய இந்துத்துவப் பாசிசமும் ஆதிக்கச்சாதி வெறியும் நம்மைச் சூழ்ந்துள்ள சூழல். தலித்துகளோ மதச்சிறுபான்மையினரோ தனித்துச் செயல்பட்டு வெல்ல முடியாத சூழல். அடையாள அரசியலாளர்கள் தங்களுக்கான தனித்துவங்களுடன் முற்போக்குச்சக்திகளுடன் இணைந்து சமூகநீதிக்கும் சமத்துவத்துக்குமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். ஆனால் சமூக ஜனநாயகச் சக்திகளின்மீது வன்மம் கக்கி, அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் மதவாத, சாதிய வன்முறைக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட மக்களைத்தான் இந்த விலகல்வாதிகள் பலிகொடுக்கின்றனர். இத்தகைய விலகல்வாதத்தை அம்பலப்படுத்த வேண்டியதும் எதிர்த்து முறியடிக்கவேண்டியதும் நம் அனைவரின் கடமை.
இஸ்லாமியர்களைத் தீவிரவாதத்துடன் இணைத்துப் பார்ப்பதைப் போலவே இஸ்லாமியர்களை ஆணாதிக்கம், பழமைவாதத்துடன் இணைத்துப்பார்க்கும் பொதுப்புத்தி மனநிலையும் நிலவுகிறது. இந்துத்துவ அரசியலால் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், இஸ்லாமியர்களுக்கும் இந்துத்துவ அரசியலுக்கு அப்பால் உள்ள சாதாரண இந்துமக்களுக்கும் உள்ள நேசத்துடன் கூடிய உறவு, இஸ்லாமியர்களின் பொருளாதாரச்சூழல், பண்பாட்டு வாழ்வியல் என எதையுமே சித்திரிக்காமல் வெறுமனே இஸ்லாமியர்கள் ஆணாதிக்கவாதிகள் என்று படைப்புகளில் சித்திரிப்பது நேர்மையற்ற செயல்.
எல்லா மதங்களிலும் எப்படி ஆணாதிக்கமும் பழமைவாதமும் இருக்கிறதோ அதேபோல் இஸ்லாத்திலும் இஸ்லாமியர்களிடமும் ஆணாதிக்கமும் பழமைவாதமும் இருக்கின்றன. அதேநேரம் பெண்களுக்கான மறுமண உரிமை, சொத்துரிமை போன்றவற்றை இஸ்லாத் அங்கீகரித்திருப்பது குறித்துக் கண்டுகொள்ளாமல் இஸ்லாமியப் பெண்களை எந்த உரிமைகளுமற்ற அடிமைகளாக மட்டுமே சித்திரிப்பது அறியாமையுடன்கூடிய பொதுப்புத்திதான். கண்டிப்பாக இத்தகைய போக்கு விமர்சிக்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரத்தில் இஸ்லாமியர்கள் என்றாலே ஆணாதிக்கப் பழமைவாதிகள் என்று சித்திரிப்பது எப்படித் தவறோ அதேபோல் இஸ்லாமியர்களுக்குள் நிலவும் ஆணாதிக்கத்தையும் பழமைவாதத்தையும் விமர்சிக்கவேகூடாது என்னும் மறுப்பு மனநிலையும் தவறேயாகும்.
அந்தவகையில் ஃபர்ஹானாவில் ஒரு படைப்புச்சமநிலை பேணப்படுவது வரவேற்கத்தக்கது. ஃபர்ஹானாவின் தந்தைக்கு அவள் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை. அவள் மட்டுமல்ல, எந்தப் பெண்ணும் வேலைக்குச் செல்வதை அவர் விமர்சிக்கவே செய்கிறார். அத்தகைய மனநிலையை ஒரு காய்கறிக்கடைக்காரப் பெண்மணி இயல்பாகக் கேள்விக்குள்ளாக்குகிறார். இன்னொருபுறம் ஃபர்ஹானாவின் கணவன் புரிதலுடன் அவளுக்கான வெளியை அங்கீகரிக்கிறான். முதன்முதலாக வேலைக்குச் செல்லும் தன் மனைவியின் கால்களில் புதுச்செருப்பை அணிவிக்கிறான். அவன் அவளைப் பின்தொடர்வதுகூட சந்தேகப்பட்டு அல்ல; அவள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டாளோ, அச்சத்
தில் தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறாளோ என்னும் பதற்றத்தில்தான். அவளுக்கு ஏற்படும் சிக்கலைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கும் பிரச்னையிலிருந்து மீண்டபின் அவள் தன் பணியைத் தொடர்வதற்கும் துணைநிற்கிறான். இப்படி ஒரு கண்ணியமான முஸ்லிம் ஆண் குறித்த சித்திரிப்பு சமீபத்திய தமிழ் சினிமாக்களில் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் படம் திரையிட்டுக்காட்டப்பட்டபின் ஃபர்ஹானா மீதான இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தங்கள் சமூகம் குறித்த சித்திரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தங்களுக்கு முதலில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்று கோருவதும் இன்று எல்லா அடையாள அரசியல் அமைப்புகளின் வழக்கமாக இருக்கிறது.
ஒருவகையில் தான்தோன்றித்தனமாக தலித்துகள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள், பால் சிறுபான்மையினர் குறித்த தமிழ் சினிமாக்களின் பாரபட்சமான காட்சிப்படுத்தல்களை இத்தகைய எதிர்ப்புகள் மட்டுப்படுத்துகின்றன.
அதேவேளை இத்தகைய தலையீடுகள் படைப்புச் சுதந்திரத்துக்குக் குறுக்கே நிற்பதுடன் பன்மைத்துவச் சித்திரிப்புக்கான வெளியையும் தடை செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் சினிமா என்பது
பெரும்பாலும் இந்து சினிமாவாகத்தான் இருக்கிறது. மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் த்ரிஷ்யம், ஜோசப் போன்ற படங்களும் இந்து அடையாளங்களுடனே உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம், கிறிஸ்துவ பாத்திரங்களையும் வாழ்வியல் சித்திரிப்புகளையும் கொண்ட தமிழ் சினிமாக்களே அரிதினும் அரிது. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமிய அடையாளங்களைக் கொண்டு ஒரு படம் வெளியானாலே, அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படைப்புதான் என்று முன்தீர்மானத்துடன் எதிர்ப்பு தெரிவிப்பதும் தங்களுக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும் என்று கோருவதும் இத்தகைய படங்கள் வருவதையே முடக்கிவிட வேண்டும்.
அப்படியானால் என்னதான் செய்வது?
\ஒரு படம் தங்கள் சமூகம் குறித்த பாரபட்சமான சித்திரிப்புகளைக் கொண்டிருக்கிறது என்று கருதினால் அதை ஜனநாயகரீதியாக எதிர்கொள்ள மூன்றுவழிகள் இருக்கின்றன.
* அந்தப் படம் எப்படி ஆதிக்கக்கருத்தியலைக் கொண்டிருக்கிறது என்பதை விமர்சித்து அம்பலப்படுத்துவது
* அந்தப் படத்தைப் புறக்கணிக்கும்படி வெகுமக்களிடம் கோருவது
* அந்தப் படத்தின் பொய்யான, பாரபட்சமான சித்திரிப்புகளுக்கு மாற்றாக, உண்மைச்சித்திரிப்புகள் கொண்ட சினிமாக்களைக் கலைநேர்த்தியுடன் உருவாக்குவது.
மூன்றாவது வழியைத்தான் இப்போது பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தலித் இயக்குநர்கள் கைக்கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரும் உரையாடலைப் பொதுவெளியில் உருவாக்குகிறது. முஸ்லிம்களும் தங்கள் வாழ்வியலையும் பிரச்னைகளையும் சித்திரிக்கும் சினிமாக்களைத் தாங்களே எடுக்கவேண்டிய காலமிது. செய்வார்களா?