இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் ஆட்சி செய்கிற பாரதிய ஜனதா கட்சி என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், அதைப் பின்னிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.என்ற இந்துத்துவா அமைப்புதான் என்பது ஊரறிந்த ரகசியம். இன்று அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக்கொண்டு, இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்கிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வெறும் மத அடிப்படைவாதக் கும்பல் என்று எளிதாக ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாகத் தமிழ்நாடு சங்க மரபின் தொடர்ச்சி, பெரியாரின் மண், திராவிட மாடல் என்று பெருமை பேசி, இந்துத்துவா தமிழ் மண்ணில் காலுன்ற முடியாது என்று பலரும் நம்புகின்றனர். அது, ஏற்புடையதல்ல. பெரும்பான்மை இந்திய மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பினைக் குறைத்து மதிப்பிடுவது தவறானது. இத்தாலியில் முசோலினியின் நாசிசத்தைப் பின்பற்றி மூஞ்சேயினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கிற இந்துத்துவா என்பது வைதிக சநாதனப் பின்புலமுடையது. இந்துத்துவா என்பது இந்து மதத்துடன் தொடர்புடையது அல்ல; வருணாசிரமத்தை வலியுறுத்துகின்ற வைதிக சநாதனத்தை முன்
னிறுத்துகிறது. வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் மேல்-கீழ்கற்பித்து, சமூக அடுக்கில் எப்பொழுதும் பார்ப்பனர்களை உச்சியில் வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கிற இந்துத்துவா. இதை அறியாமல் சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக்கொண்ட வைதிக சநாதனத் தத்துவத்திற்குச் சார்பாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்துத்துவா அமைப்புகளில் திரள்கின்றனர். சிலர் அடியாள்களாகச் செய்கின்ற அடாவடிச் செயல்கள், சமூக விரோதமானவை.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்துள்ள இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவ சேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள்,
எப்படியாவது மதக் கலவரத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட முயலுகின்றன. பாஜக உள்ளிட்ட உதிரி அமைப்புகளில் சேர்க்கப்
பட்டுள்ள/சேர்ந்துள்ள சமூக விரோதிகள், உள்ளூரில்அடாவடி அரசியல் செய்கின்றனர். சொந்த வீட்டில் அடியாள் மூலம் பெட்ரோல் குண்டுகளை வீசி, பரபரப்பு அரசியல் செய்கின்றனர். இன்னொரு புறம் மின்னணு ஊடகம்மூலம் போலியான தகவல்களைப் பரப்பி, சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்கும் வேலையையும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் தொடர்ந்து செய்கின்றனர். அண்மையில் தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சொல்லிப் போலியான வீடியோ தயாரித்து வெளியிட்டு அவதூறு பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவாவைக் கட்டமைப்பதில் நிழலாகச் செயல்படுகின்ற அமைப்புகளை பற்றி தில்லியைச் சார்ந்த அரசியல் பத்திரிகையாளரான திரேந்திரா கே.ஜா கள ஆய்வுகள்மூலம் திரட்டிய தகவல்களை முன்வைத்து எழுதியுள்ள ‘நிழல் ராணுவங்கள்’ புத்தகம் இந்துத்துவாவின் வன்முறைப் போக்குகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. நாடெங்கும் இந்துத்துவாவை முன்னிறுத்திப் பாசிசப் பயங்கரத்தைப் பரப்பிட முயலுகிறஇந்துத்துவா அடிப்படைவாதிகள் பற்றிய புரிதலை வாசிப்பில் ஏற்படுத்துகிறது. எப்பொழுதும் வெறுப்பு அரசியலைப் பேசி, அடியாட் படையைத் திரட்டி, சிவில் சமுகத்தின்மீது தாக்குதலையும் மோது தலையும் ஏற்படுத்துகின்ற இந்துத்துவாவின் உதிரி அமைப்புக்களைப் பற்றிய விவரிப்புகள் முக்கியமானவை. மர்மம், திகில் கலந்த கதையாடல்போல விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், யதார்த்தத்தில் இப்படியெல்லாம் நடக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றன. திரேந்திரா துப்பறிவாளர்போல விவரித்துள்ள நிகழ்வுகள், சுவாரசியமாக விரிந்துள்ளன. இந்துத்துவாவின் பெயரால் உதிரி அமைப்புகளும் அடியாட் படைகளும் செய்கின்ற சமூக விரோதச் செயல்கள், ஒருவகையில் பாசிசத்தின் முன்னறிவிப்புகள்.
சங்பரிவாரங்களின் உறுப்பாகவோ அல்லது தனியாகவோ இயங்கும் அமைப்புகளில் சநாதன் சன்ஸ்த்தா, இந்து யுவ வாகினி, பஜ்ரங்தளம், ராம் சேனா, இந்து ஐக்கிய வேதி, அபினவ் பாரத், ராஷ்ட்ரீய சீக் சங்கத், போன்சாலா ராணுவப்பள்ளி போன்ற அமைப்புகள் பற்றித் திரேந்திரா விவரித்துள்ள தகவல்கள் முக்கியமானவை. இவையல்லாமல் இந்தியாவெங்கும் வலைப்பின்னல்களாக நூற்றுக்கணக்கான இந்துத்துவா அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
பாரத மஸ்தூர் சங் தொழிலாளர் அணி), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அணி), விஷ்வ ஹிந்து பரிஷத் (பண்பாட்டு அணி), பஜ்ரங்தளம் (இளைஞர் அணி) போன்ற முப்பதுக்கும் கூடுதலான துணை அமைப்புகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், சங்பரி
வார் ( சங் குடும்பம்) என்ற பெயரில் நாடெங்கும் விரிந்துள்ளன. இன்றைய மின்னணு யுகத்தில் ஊடகங்களின் கருத்தியல் மேலாதிக்கச் சூழலில் நம்மைச் சுற்றிலும் நடக்கிற அரசியலைப் புரிந்திட திரேந்திராவின் ‘நிழல் ராணுவங்கள்’ நூல் உதவுகின்றது. எங்கோ நடக்கிற விஷயம் என்று ஒதுங்கிட முடியாதவாறு, பற்றிப் படரும் பாசிசத்தின் தன்மையைப் புரிந்தால்தான் அதற்கெதிராகப் போராட முடியும். காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்துள்ள சூழலில் பாசிசத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்திட முயன்றுள்ள திரேந்திரா கே ஜாவின் எழுத்து முயற்சி, காலத்தின் தேவையாக வெளிப்பட்டுள்ளது. இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்ற கருத்தியலுடன் திரேந்திரா விவரித்துள்ள நிழல் ராணுவங்களின் செயல்பாடுகளும் உதிரி அமைப்புகளும் அடியாட் படைகளும் அவற்றின் செயல்பாடுகளும் முக்கியமானவை.
1923 இல் சாவர்க்கர், ‘‘வேதகாலத்து மக்களின் இன வாரிசாகப் பிறந்து, பாரதத்தைத் தனது புனித பூமியாகக் கருதி, இந்துப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டவர்தான் இந்து” என்கிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். நடைமுறையில் இந்துவையும் இந்து மதத்தையும் ஒன்றாக்கி, வைதிக சநாதனப் பின்புலத்தில், இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் போன்ற மதத்தினரை எதிரிகளாக்கி, வெறுப்பு அரசியலை முன்வைக்கின்றது. தமிழ்நாடு ஆளுநர் ரவி போற்றுகின்ற வைதிக சநாதனம் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படையான கோட்பாடு. இந்துத்துவாவின் அடிப்படையான வைதிக சநாதனம் பார்ப்பனர்களைத்தவிர பிற இந்தியர்கள் அனைவருக்கும் எதிரானது. வருணாசிரமக் கோட்பாட்டை முன்னிறுத்தி, பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்துகிற வைதிக சநாதனத்தை எதிர்த்திட வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
வைதிக மதம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யக்ஞம் என்ற வேள்வித்தீயை முன்வைத்து வாய்மொழியாகப் புனையப்பட்ட வேதங்களை முன்னிறுத்தியது. வேதங்கள் எனக் குறிப்பிடப்படுபவை சடங்கியல் நூல்கள். வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல. ரிஷிகளால் கேட்கப்பட்டவை என்று புனிதப் பிரதிகளாக்கப்பட்டன. வேதங்களுக்குப் புனித அடையாளம் கற்பிக்கப்பட்டபோது வேதம், யக்ஞம்,மந்திரம், வேதம் ஓதுகிற புரோகிதன் என எல்லாவற்றையும் புனிதமயமாக்கும் அரசியல் நடந்தேறியது. வேதம் தன்னுடைய புனித பிம்பத்தை பிரம்மன், பிரம்மம், பிராமணர் மூலம் வலுவாகக் கட்டமைத்தது.
வேதங்கள், தொடங்கிப் பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்ற வைதிக சமய நூல்களின் வரிசை வளர்ந்தது. பிரம்மம் என்ற கருத்தியலைத் தத்துவமாக்கிட பயன்பட்ட உபநிடதங்கள் வேதாந்தத்தை உருவாக்கின. இது இந்தக் குணம் என்று சுட்டப்படக்கூடிய எந்தக் குணமும் இல்லாதது பிரம்மம் என்று உபநிடதம் வரையறுத்தது. வைதிகத் தத்துவவாதிகள் அருவமான சூக்குமமான ஒன்றைப் பிரம்மம் என்று வரையறுத்திட முயன்றனர். பிரம்மம் புனிதமானது என்றும் சடப்பொருளான உலகம் தீட்டு என்றும் முன்வைக்கப்பட்ட வைதிகத் தத்துவ விளக்கம் முக்கியமானது. பிரபஞ்சம் சுயம் அற்றது; பிரம்மம் மட்டும் சுயமானது. எனவே சுயமற்ற உலகை அழிப்பதுடன், அதிகாரத்தின் மூலம் பார்ப்பனர் எல்லாவிதமான செயல்களையும் செய்வதற்கு உரிமை வழங்கப்பட்டது. குறிப்பாக விளிம்புநிலையினர்மீது அதிகாரம் செலுத்த
லாம்; சமூகத்தில் நிலவுகிற எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்தலாம்; பெண்களைத் தீட்டுக்குரியவர்களாக ஒதுக்கிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதற்கான வெளிப்பாடான மநு தரும சாஸ்திரம், இன்றளவும் மக்களைப் பிறப்பு, பால் ரீதியில் தீட்டு என இழிவுபடுத்தி ஒடுக்கிட வைதிக சநாதனம் வழி வகுத்துள்ளது.
பொதுவாக வைதிக மதம் எனப்படும் பார்ப்பனீய மதம் காலந்தோறும் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டு இன்றும் அதிகாரத்தில் வீற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவையான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி.
சமஸ்கிருத மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி, ஒரே கடவுள் ராமன் என்று பேசுகின்ற பாரதிய ஜனதா கட்சியினர், இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இஸ்லாமியர் என்று தொடர்ந்து சித்திரிப்பதன்மூலம் அவர்கள்மீதான தாக்குதலை நியாயப்படுத்துகின்றனர். இந்துக்கள் மத்தியில் பொய்யான பீதியைக் கிளப்பி, இந்துத்துவாவை முன்னெடுக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்குகளைப் பெற்றிட இந்துத்துவா உதிரி அமைப்புகளும் அடியாட் படைகளும் காலந்தோறும் பெரிதும் உதவுகின்றன.1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெறுமனே இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றியடைந்திருந்த பாரதிய ஜனதா கட்சி, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 309 தொகுதிகளில் வெற்றியடைந்திருப்பது தற்செயலானது அல்ல. பொருளாதாரப் பிரச்சினைகள், வேலையில்லாத் திண்டாட்டம், சுற்றுச்சூழல் சீர்கேடு, பால் சமத்துவமின்மை, சாதிய ஒடுக்குறை, தலித்துகள்மீதான வன்முறை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் அக்கறை கிடை
யாது. வெறுமனே இந்து என்ற சொல்லை முன்வைத்துச் செய்யப்படுகிற மத அடிப்படைவாத அரசியலுக்குப் பின்புலமாக நிழல் ராணுவங்களான கணக்கற்ற அடியாட் படைகளும் உதிரி அமைப்புகளும் செயல்படுகின்றன என்பதுதான் உண்மை.
திரேந்திரா ஆய்வுக்குட்படுத்திய சங் பரிவாரின் நிழல் அமைப்புகளை இரு பிரிவாகப் பிரித்துள்ளார். சங்பரிவாரின் நேரடித் தொடர்பில் பஜ்ரங்தளம், ராஷ்ட்ரிய சீக் சங்கம், இந்து ஐக்கிய வேதி, போன்சாய்ராணுவப் பள்ளி ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன. இந்துத்துவா கொள்கையுடன் செயல்படுகிற சனாதன் சன்ஸ்தா, இந்து யுவ வாகினி, ராம் சேனா, அபினவ் பாரத் போன்ற அமைப்புகள் தனித்து இயங்கினாலும் சங்பரிவார் அமைப்புடன் மறைமுகத் தொடர்பு கொண்டுள்ளன.
நிழல் அமைப்புகளில் சேர்ந்து தீவிரத்துடன் செயல்படுகிறவர்களைப் பற்றிய திரேந்திராவின் பின்வரும் கணிப்பு முக்கியமானது. “அவர்கள் எதைச் செய்தாலும் தெரிந்தே செய்கிறோம் என்ற புரிதலோடு இருந்தனர்.” வன்முறை, வெறுப்புப் பேச்சு, பயங்கரவாதம், அராஜகம், அடாவடித்தனம் போன்றவற்றை மூலதனமாகக்கொண்டு இந்து ராஷ்டிரம் என்ற வைதிக சநாதன லட்சியத்திற்காகச் செயல்படுவதுதான் பெரும்பான்மையான இந்துத்துவாவின் நிழலுலக அமைப்புகளின் செயல்பாடுகளாக உள்ளன.
நிழல் ராணுவம் போலச் செயல்படுகின்ற உதிரி அமைப்புகள் பற்றிய புரிதலுக்காகத் தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சநாதன் சன்ஸ்த்தா
கோவாவில் ராம்நதி கிராமத்தில் ஆசிரமம் ஏற்படுத்தி, தன்னைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஜெயந்தி பாலாஜி அதாவ்லேயின் சநாதன் சன்ஸ்த்தா அமைப்பில் காவியுடை அணிந்த ஆண்,பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு சன்ஸ்த்தா அமைப்பின் உறுப்பினர்களான மல்கொண்டாவும் யோகேஷும் நரகாசுரப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும்போது, வழியிலே அவை வெடித்ததனால் இருவரும் இறந்தனர். இந்து மதத்திற்கான செயல் என்ற போர்வையில் சன்ஸ்த்தா
உறுப்பினர்கள் தொடர்ச்சியான குண்டுகளை வெடிக்க வைத்துப் பலரின் சாவுக்குக் காரணமாக இருந்தனர். எனினும் குற்றவாளிகளுக்கும் சன்ஸ்த்தா அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று ஆசிரம நிர்வாகம் மறுத்தது. 1991 ஆம் ஆண்டு சநாதன் பாரதிய சன்ஸ்கிருதி சன்ஸ்த்தா என்ற பெயரில் அதாவ்லேயினால் தொண்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு, பின்னர் இந்து ஜனக்ருதி சமிதி, சநாதன் பிரபாத், தர்ம சக்தி சேனா போன்ற அமைப்புகளை உருவாக்கியது. சட்டவிரோத நடவடிக்கையின்போது ஏதாவது ஓர் அமைப்பு மாட்டிக் கொண்டால் அத்லாவ்வுக்கு தொடர்பு இல்லை என்று காட்டுவதற்காக அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியானவையாக காட்டப்பட்டன.
அதாவ்லேயின் ஆன்மீகப் போதனைகளின் மறுபக்கம் கேடு நிறைந்தது. அவர், 2023 இல் இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதுதான் சன்ஸ்த்தாவின் நோக்கம் என்று பிரகடனப்படுத்தினார். அதேவேளையில் பகுத்தறிவாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற தீயசக்திகளை இப்பூமியில் இருந்து ஒழிப்பதுதான் சன்ஸ்த்தா அமைப்பின் நோக்கம் என்று பிரகடனப்படுத்தினார். அவருடைய அமைப்பில் ஆதிக்க சாதி இளைஞர்கள் சேர்ந்தனர். சன்ஸ்த்தாவின் மூட நம்பிக்கைக்கு எதிராகப் பகுத்தறிவாளர்கள் சவால் விட்டனர். மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பகுத்தறிவு இயக்க முன்னோடியான டாக்டர் நரேந்திர தபோல்கரை 2013 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்தனர். 2015 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த பன்சாரேவும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் வலதுசாரி இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்த முதுபெரும் கன்னட எழுத்தாளர் எம். எம். கல்புர்கியும் அதேமுறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பன்சாரே கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சமீர் கெய்க்வாட், தபோல்கர் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட விரேந்திரா சாவ்டே ஆகிய இருவரும் சநாதன் சன்ஸ்த்தா இயக்கத்தைச் சார்ந்தவர்கள். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலரையும் கொல்லுதல், எதிர்க் கருத்துகளைத் தெரிவிக்கிற ஜனநாயக சக்திகளைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்தல் போன்ற கொடூரமான சம்பவங்கள் எல்லாம் இந்துத்துவாவின் பெயரால் சன்ஸ்த்தா அமைப்பினரால் செய்யப்பட்டுள்ளன.
சநாதன் சன்ஸ்த்தாவின் கொடூரமான செயல்களுக்கு எதிர்ப்பாக ஆசிரமத்தை அகற்றிட கிராமத்தினரின் போராட்டங்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பலன் அளிக்கவில்லை. சன்ஸ்த்தா அமைப்பு பாரதிய ஜனதா கட்சியின் நிழல் ராணுவமாகச் செயல்படுகிறது என்று அழுத்தமாக திரேந்திரா குறிப்பிட்டுள்ளார். சநாதன் சன்ஸ்த்தாவிற்கு ஆதரவு அளிக்கிறவர்கள் பாஜகவில் மட்டுமின்றி பிற கட்சிகளிலும் இருக்கின்றனர் என்ற திரேந்திராவின் கணிப்பு, கவனத்திற்குரியது.
இந்து யுவ வாகினியும் யோகி ஆதித்யநாத்தும்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான ஆதித்யநாத் கோரக்பூர் நகரிலுள்ள கோரக்நாத் கோவில் மடத்தின் பீடாதிபதியாக இருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்பொழுது சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தாலாத் அசிசினுடன் நடந்த சண்டையில் அவருடன் இருந்த தலைமைக் காவலர் சத்ய பிரகாஷ் யாதவ் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தார் என்று ஆதித்யநாத்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுப் பேசிய ஆதித்யநாத் கௌரக் ஷா மன்ச் என் அமைப்பை 1999 இல் தோற்றுவித்தார். தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் ஏற்கனவே இருந்த அமைப்பையும் உள்ளடக்கி ‘இந்து யுவ வாகினி’ என்ற புதிய அமைப்பை நிறுவினார். தொடக்கத்தில் இருந்து இந்துத்துவா நஞ்சு கலந்த பிரச்சாரத்தை யுவவாகினி முன்னெடுத்தது. அது, இஸ்லாமியரை இந்துக்களுக்கு எதிரிகளாகச் சித்திரித்ததுடன் பயத்தையும் அவநம்பிக்கையையும் மக்களிடம் விதைத்தது.
லவ் ஜிகாத், இஸ்லாமியரின் அசைவ உணவுப் பழக்கம் போன்றவற்றை முன்னிறுத்தி வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதால் ஆதித்யநாத்தின் செல்வாக்கு பன்மடங்கு பெருகியது. அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் உதிரி அமைப்புகளின் துணையில்லாமல் யுவ வாகினி அமைப்புடன் செயல்பட்டுத் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளார். இந்து யுவ வாகினியின் உறுப்பினர்கள், களத்தில் ஆதித்யநாத்தைத்தவிர வேறு யாருக்கும் அடிபணியாத அடியாட்கள். அரசியல், மதத் தலைவர் என்பதைவிட தாகூர் சாதியினரின் குண்டர் படைத் தலைவனாகப் பெருமைப்பட்டுக்கொள்கிற ஆதித்ய நாத்தும் அவருடைய யுவ வாகினியும் தொடர்ந்து நடத்திய பிரச்சாரத்தினால் கோரக்பூரில் பெரும் மதக்
கலவரம் வெடித்தது; பலத்த சேதம் ஏற்பட்டது; ஊரடங்கு சில வாரங்கள் நீடித்தது. யுவ வாகினி தொடங்கிய முதலாம் ஆண்டில் ஆறு பெரிய மதக் கலவரங்கள் நடத்தப்பட்டன. 2007 ஆம் ஆண்டில் ஆதித்யநாத் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆதித்யநாத்தும் யுவ வாகினி உறுப்பினர்களும் மதவெறி வெறுப்புப் பேச்சுகளின்மூலம் மக்களை எப்பொழுதும் கொதிநிலையில் வைத்திருந்தனர். இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்திரித்து இந்துக்களின் பாதுகாவலராகக் காட்டிகொள்ள ஆதித்யநாத்துக்கு யுவ வாகினி அமைப்பு துணையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படாதபோதும் ஆதித்யநாத் யுவ வாகினி அமைப்பு மூலம் தன்னுடைய செயல்திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிற காவி உடை அணிந்த ஆதித்யநாத், கோரக்பூர் கோவிலின் மகந்து என்பதை முழுக்க மறந்துவிட்டார். அவருடைய சொந்த சாதியினரான தாகூர் சாதிக்காரர்களை முன்னிறுத்திக் கட்டமைக்கப்பட்ட யுவ வாகினி அமைப்பு, அடிப்படையில் இந்துத்துவாவின் இன்னொரு வடிவம்தான்.
பஜ்ரங்தளம்
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பதையும் ராமர் கோவில் கட்டுவதையும் நோக்கமாகக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை இயக்கமான விஹெச்பியினால் 1984 ஆம் ஆண்டு உருவாக்கபப்ட்ட இளைஞர் குண்டர் படைதான் பஜ்ரங்தளம். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பஜ்ரங்தளம்தான் முன்னணியில் இருந்து தாக்குதலை நடத்தியது. ‘‘ராமருக்குச் சேவை செய்யாத இளைஞர்கள் ஒன்றுக்கும் பயனற்றவர்கள்” என்ற முழக்கத்துடன் செயல்பட்ட பஜ்ரங்தளம், இந்துத்துவாப் பின்புலத்தில் செயல்படுகிறது. ராமர் கோவில் இடிப்புக்குப் பின்னர் பஜ்ரங்தளம் ஆர்.எஸ்.எஸ்.அமைப் பின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. நீலநிறக் கால்சட்டை, வெள்ளை மேல்சட்டை, காவித் தலைப்பட்டை என்ற சீருடை பஜ்ரங்தளம் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டது. எனினும் ஆர் எஸ். எஸ்.போல்
முறையான அமைப்பாக இல்லாமல் சமூக விரோதச் செயல்களை ஊக்குவிக்கவும் சங்பரிவருக்காகக் கலவரங்களை உருவாக்கிடவும் துணைப் படையாகப் பஜ்ரங்தளம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரரீதியில் பின்தங்கிய ஆதிக்க சாதி, இடைநிலைச் சாதியைச் சார்ந்தவர்கள்தான் பஜ்ரங்தளத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். களத்தில் இறங்கிப் போராடுகின்றவர்கள் பெரும்பாலும் இடைநிலைச் சாதியினரும் தலித்துகளும்தான்.
கர்நாடகா மாநிலத்தில் மங்களூர் நகரில் செயல்படும் பஜ்ரங்தளம் கலவரங்கள், வன்முறைகள், மிரட்டல்கள் மூலம் முதலில் பயத்தை உருவாக்கி, பின்னர் பாதுகாப்பைத் தருகின்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் ஷான் பம்ப்வெல் என்ற பஜ்ரங்தளத் தலைவர் தருகின்ற அடியாட் படையின் பாதுகாப்பை இஸ்லாமிய வணிகர்களும் ஏற்றுக் கப்பம் கட்டுகின்றனர். காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாகத்தான் பஜ்ரங்தளம் மங்களூரில் பரவலாகியுள்ளது.
1995 இல் ரபிந்திர குமார் பாலின் தலைமையிலான பஜ்ரங்தளக் குண்டர் படை, ஒடிசாவில் தொழுநோயாளிகளின் நலனுக்காகப் பாடுபட்ட ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரகம் ஸ்டெயினையும் அவருடைய மகன்களான இரு சிறுவர்களையும் பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது. 2002 இல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களை பஜ்ரங்தளம்தான் முன்னின்று நடத்தியது. மகாராஷ்டிராவில் 2006, கான்பூரில் 2008 ஆம் ஆண்டுகளில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட பஜ்ரங்தளம் உறுப்பினர்கள், குண்டு வெடித்து இறந்தனர். அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி அளித்தவர்கள் மேனாள் இந்திய ராணுவ அதிகாரிகள். இந்துத்துவாவின் காவலர்கள் என்ற பெயரில் பஜரங்தளத்தின் குண்டர் படை, ஒருவகையில் நிழல் ராணுவம்போலச் செயல்படுகிறது.
கலவரம் செய்தல், குண்டு வைத்தல் போன்ற பயங்கரவாதச் செயல்களுடன் இந்துப் பண்பாடு, இந்துப் பாரம் பரியம் எனப் பஜ்ரங்தளம் வகுத்துள்ள வரையறைக்குள் இருக்காத எழுத்தாளர்கள், கலைஞர்கள்மீது வன்முறையை ஏவி மிரட்டவும் செய்கிறது. ஓவியர் எம். எஃப்.
ஹுசைன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு பஜ்ரங் தளம் கொடுத்த நெருக்கடிதான் முதன்மைக் காரணம்.
காதலர் தினக் கொண்டாடடத்திற்குத் தடை விதித்ததுடன், பூங்காவில் சந்திக்கிற காதலர்களின் முகத்தில் கரியைப் பூசுதல், ராக்கி கட்டச் செய்தல், தாலி கட்டச் செய்தல், அடித்துத் துன்புறுத்துதல் போன்றவற்றை இந்துத்துவாவின் பெயரில் பஜ்ரங்தளம் அடியாட்கள் செய்கின்றனர். தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான பஜ்ரங்தளத்தின் செயல்பாடுகள் ஹிட்லரின் நாசிப் படையை நினைவூட்டுகின்றன.
2014 இல் மோடி பிரதமரானவுடன் மதமாற்றம், மாட்டுக் கறி மீதான தடை என்று பஜரங்தாளம் தீவிரத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது. 2015 இல் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணுவதாகப் பரப்பிடப்பட்ட வதந்தி காரணமாக இந்துக் கும்பலால் முகம்மது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டபோது, பஜ்ரங்தளம் கொலையாளிகளுக்குச் சார்பாக நின்றது.
மக்களின் வாழ்வதாரமான பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு, இந்துப் பண்பாடு ஏன்ற பெயரில் மசூதி இடிப்பு தொடங்கி, கலவரம், வன்முறைகளிலும் ஈடுபடுகின்ற பஜ்ரங்தளம் ஒழுங்குபடுத்தப்படாத ரவுடிக் கும்பல் என்பதைவிட நிழலுலக ராணுவம் என்பது முழுக்கப் பொருந்துகிறது.
ஸ்ரீராம்சேனா
முத்தலிக் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்லாண்டுகள் செயல்பட்டவர். 1994இல் கர்நாடகா பஜ்ரங்தளத்தின் மாநிலப் பொறுப்பாளரான முத்தலிக், 2005 இல் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார். அவருடைய தேடலின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீராம்
சேனா என்ற புதிய இந்துத்துவா அமைப்பு. முத்தலிக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் சங்பரிவாரத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு அடிப்படைக் காரணம் ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனீயம்தான். தெருவில் சண்டை போடுதல், கலவரம் செய்தல் போன்ற கீழ்மட்ட வேலைகளை பிற்படுத்தப்பட்ட சாதியினர் செய்தனர். ஆனால் இயக்கத்தின் முக்கியமான பதவிகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் கொந்தளித்த பஜ்ரங்தளத்தின் ஒருங்கிணைப்பாளர் வால்கே அந்த அமைப்பில் இருந்து விலகி முத்தலிக்குடன் சேர்ந்து ஸ்ரீராம்சேனாவை வலுப்படுத்தினார். மங்களூரிலும் சுற்றுவட்டாரத்திலும் நடைபெற்ற பண்பாட்டுக் காவல் நடவடிக்கைகள், கலவரங்கள், வன்முறை போன்றவற்றை முன்னின்று நடத்திய ஸ்ரீராம்சேனா விரைவில் பிரபலமானது.
2009ஆம் ஆண்டு மங்களூரின் இரவு விடுதியில் இளம் பெண்கள் மது அருந்தி, இந்துப் பண்பாட்டை மீறுகின்றனர் என்று ராம் சேனாவின் குண்டர் படை பெண்களைத் தாக்கியது. பெண்கள் அடி வாங்குவதையும் உதை வாங்கு வதையும் காட்சிப்படுத்திய காணொளிக் காட்சி, தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பானது. அந்தத் தாக்குதலின்போது ஆக்ரோசமாக செயல்பட்ட சுபாஷ் பின்னர் அடியாளாக அடையாளம் கணப்பட்டு நில ஆக்கிரமிப்பாளர்களின் கையாளாக மாறினார். தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஸ்ரீஸ்ரீராம்சேனா குண்டர் படையின் அராஜகம் பாசிஸத்தின் வெளிப்பாடுதான். இன்னொருபுறம் லவ் ஜிகாத் என்ற வார்த்தையின்மூலம் இஸ்லாமியர்மீது வெறுப்பை ஏற்படுத்திட முயன்றனர். ‘‘ஸ்ரீராம்சேனா என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவர்களும் தொண்டர்களும் எந்தவொரு கொள்கையிலும் பிடிப்புக் கொண்டவர்கள் அல்ல; பணத்திற்காகச் சட்ட விரோதச் செயல்களைச் செய்தனர்” என்று தெகல்தா பத்திரிகை அம்பலப்படுத்தியது. பாஜக வின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்ட ஸ்ரீராம் சேனா, மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குவதற்கு இந்துத்துவாவை முன்வைத்துச் செயல்படுகிறது.
இந்து ஐக்கிய வேதி
கேரள மாநிலத்தில் இந்துத்துவாவைப் பரப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய அமைப்புதான் இந்து ஐக்கிய வேதி. சசிகலா டீச்சர் என்பவரைத் தலைமையில் இயங்கிய இயக்கத்தின் செயல்பாடுகள் முழுக்க ஆர்.எஸ்.எஸ் வடிவமைத்ததுதான். சசிகலாவின் பேச்சுகளில் வெறுப்பு அரசியலும் வகுப்புவாத அரசியலும் வெளிப்படுகின்றன. கேரளாவிலுள்ள கோவில்களின் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைப்பது தொடங்கி, இந்து ஐக்கிய வேதியினரின் பேச்சுகள், முற்போக்கு முகம் கொண்ட கேரள மாநிலத்திற்குப் பிரச்சினைகளை அளிக்கின்றன. இந்துப் பண்பாடு என்ற பெயரில் இந்துத்துவாவின் கருத்துக்களைப் பரப்பிட முயலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவியுள்ளது. அது செய்கின்ற நாசகார வேலைகள் பற்றி மேனாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சதீஷ் மின்னி எழுதியுள்ள நரக மாளிகை புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
அபிநவ் பாரத்
அபிநவ் பாரத் அமைப்பின் தோற்றம் இன்றைக்கும் மர்மமாக இருக்கிறது. 1905 இல் சாவர்க்கர் உருவாக்கிய ரகசிய குழுவின் பெயர்தான் அபிநவ் பாரத் என்று சொல்லப்படுகிறது. இடைக்காலத்தில் செயலற்று இருந்த அமைப்பை 2008 இல் ஆர்.எஸ்.எஸ்.காரர் சமீர் குல்கார்னி மீண்டும் தொடங்கினார். அந்த அமைப்பு கோட்சேயின் நெருங்கிய உறவினரான ஹிமானி சாவர்க்கர் தலைமையில் செயல்பட்டது. அபிநவ் பாரத் இயக்கத் தின் நோக்கங்களை அறியாதது போலக் காட்டி, குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் ஹிமானியின் பேச்சு இருந்தது. இயக்கத்தின் தோற்றம், கட்டமைப்பு, செயல்பாடுகள் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்த நிலை, அந்த அமைப்பின் ரகசியச் செயல்பாடுகளை மர்மமாக்கியது. இந்து ராஷ்டிரம் உருவாக்கிட விரும்புகிற ஆர்.எஸ்.எஸ்., பாஜக அரசியல் சக்திகளிடம் அபிநவ் பாரத்திற்குப் பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ஸ்ரீ காந்த் புரோகித், அபிநவ் பாரத் அமைப்பு உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கின்ற விசைத்தறிகள் நிரம்பிய மாலேகான் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் தொடர்பு இருந்தது.
மாலேகான் குண்டு வெடிப்பில் அபினவ் பாரத்தின் பங்கைக் கண்டறிந்த மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படையினர், அதுவரையிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கும் இந்துத்துவாவினருக்கும் இடையிலான தொடர்பினைக் கண்டறிந்தனர். இந்து ராஷ்டிரம், புதிய கொடி, புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் என்று அபினவ் பாரத் அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர்.
சுதாகர் திவேதி: “ …வேத காலத்துச் ஸ்மிருதிகள்தான் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம்.”.
புரோகித்: “ இந்நாட்டில் வேதக் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட இந்து தர்மமோ அல்லது வேத தர்மமோதான் நமக்கு வேண்டும்.”
‘‘இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் பாதையின் குறுக்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் இருந்து மட்டும் ஒதுக்கி வைக்கப்பட மாட்டார்கள், கொல்லப்பட்டு விடுவார்கள்” என்று ஒரு கூட்டத்தில் புரோகித் பேசிய
பேச்சு, கவனத்திற்குரியது.
அபினவ் பாரத் இயக்கத்தின் தலைவர்கள் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் நேச சக்தியாகக் கருதுகின்றனர்.
போன்சாலா ராணுவப் பள்ளி
மாலேகான் நகரில் 2008ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வுக்குப் பின்னரே, மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் போன்சாலா ராணுவப்பள்ளி சிக்கியது. குண்டுவெடிப்பு தொடர்பான நிகழ்வுகளை விசாரிக் கையில், குற்றஞ் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு அப்பள்ளியோடு தொடர்பிருந்தது கண்டறியப்பட்டது. குண்டுவெடிப்புக்கு முன்னர், அபினவ் பாரத் இயக்கத்திற்கு சில முக்கியமான உதவிகளை ஆர்எஸ்எஸ் நடத்தும் போன்சாலா ராணுவப்பள்ளி செய்திருக்கிறது. மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுப்பதும், பல்வேறு ராணுவ பாதுகாப்புப் பணிக்கான தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவதுமே தங்களது பள்ளியின் பணியென்று போன்சாலா ராணுவப்பள்ளி சொல்கிறது. ஆனால், மதவாத வெறுப்பு எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதாக அப்பள்ளியின்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மகாராஷ்டிராவின் பயங்கரவாதத் தடுப்புப்படையினரால் கண்டறியப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளித்தன.
இந்துத்துவா அரசியல்தான் போன்சாலா ராணுவப் பள்ளி தொடங்கப்படுவதற்கு அடிப்படைக் காரணியாகும் பி.எஸ். மூஞ்சே 1930 களில் ஐரோப்பா சென்றபோது இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி பாசிஸ்டுகளைப் பயிற்றுவிக்கும் பள்ளியைப் பற்றி நேரில் அறிந்தார். இந்துத்துவா அரசியலையும் இந்து ராஷ்டிரத்தையும் ஏற்படுத்திட முயன்ற மூஞ்சேயின் முயற்சி காரணமாக 1937 இல் மத்திய இந்து ராணுவக் கல்விக்
கழகத்தினால் நாசிக்கில் போன்சாலா ராணுவப் பள்ளி நிறுவப்பட்டது. அந்தப் பள்ளி முழுக்க இந்துக்களுக்கானதாகவும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் எதிராகவும் செயல்பட்டது. இன்றுவரையிலும் அங்கே இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவர் ஆசிரியராகப் பணியாற்றவில்லை. இந்து அல்லாத மாணவர் பள்ளியில் சேர்வதும் இல்லை.
இந்து மகா சபையின் தலைவரான மூஞ்சேயினால் தொடங்கப்பட்ட போன்சாலா இராணுவப் பள்ளி, அவருடைய மறைவுக்குப் பின்னர் 1950களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. சங்பரிவாரின் உறுப்பினராக இருந்துகொண்டு பிராந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிடலாம் என்று பள்ளியின் நிர்வாகியான குல்கர்னி சொல்லியிருப்பது கவனத்திற்குரியது. அண்மையில் பாஜக அக்னிபாத் என்ற பெயரில் பகுதி நேர ராணுவத்தினரை உருவாக்கும் பணியானது, பாசிசத் தொண்டர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடு என்று உருவான சர்ச்சையுடன் போன்சாலா ராணுவப் பள்ளியை ஒப்பிடலாம்.
இராஷ்ட்ரிய சீக் சங்கத்
ராஷ்ட்ரிய சீக் சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதற்கான பின்புலமாக ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் காரணங்கள், இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடுகள். 1984 நவம்பரில் சீக்கிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களினால் அவர்களிடம் ஏற்பட்டிருந்த பயஉணர்வினைப் பயன்படுத்தி, அதன்மூலம் ‘சீக்கியர்கள் இந்துக்கள்தான்’ என்கிற இந்துத்துவா அரசியலை முன்வைப்பதற்காகவே ராஷ்ட்ரிய சீக் சங்கத் என்னும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரலாற்றாசிரியரான ராம் ஸ்வரூப் 1985 இல் எழுதிய ‘இந்து-சீக்கிய உறவுமுறைகள்’ நூல் முன்வைத்துள்ள அரசியல்தான் சீக்கியர் பற்றிய புதிய வரையறையை உருவாக்கிட முயலுகிறது. அந்த நூலில் சீக்கியர்கள் தனியான மதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், இந்து மதத்தின் ஒரு சிறுபிரிவினர்தான் என்றும், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் சீக்கியர்களுக்குத் தனியான அடையாளம் இருப்பதுபோன்ற மாயை உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கியர்களின் தனித்த அடையாளத்தை அழித்திட முயலும் ஆர்.எஸ்.எஸ். அரசியல், அகண்ட இந்து ராஷ்டிரம் என்ற கருத்தியல் பின்புலமுடையது. சீக்கிய மதத்தின் முதன்மை மடத்தின் மதகுருவான ஜோகிந்தர் சிங் வேதாந்தி விடுத்த ஆர்.எஸ்.எஸ்.பற்றிய கடுமையான விமர்சனம் பின்வருமாறு: ‘‘தோற்றத்தில் ஔரங்கசீப்பைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும். கத்தி முனையிலோ அல்லது வேறு வழியிலோ அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறவேண்டும் என்று ஔரங்கசீப் விரும்பினார். அதேபோன்று எல்லோரையும் இந்து மதத்திற்கு மாற்ற விரும்புகிறது ஆர் எஸ் எஸ். அதன் சித்தாந்தம் சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் ஆபத்தானதுதான்.”
இன்று இந்துத்துவா சக்திகள், அரசாங்கத்தின் நிர்வாகம், நீதி, ராணுவம் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டுகளை விதித்து, தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டுவர முயலுகின்றன. இன்னொருபுறம் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய நிழல் ராணுவங்களான உதிரி அமைப்பு
கள், அடியாட் படைகள், போக்கிரிகள், துணை ராணுவப் பயிற்சி பெற்ற குண்டர் படைகள் மூலம் தெருக்களில் கட்டுப்பாட்டை நிறுவிட முயலுகின்றனர். கார்ப்பரேட்டுகளின் கணக்கற்ற நிதியுதவியும், வலிமைமிக்க தெருச் சண்டியர் அமைப்புகளும் இந்துத்துவாவின் கரங்களை வலுப்படுத்திட உதவுகின்றன.
இந்தியாவை மனுஸ்மிருதியின் கட்டளைகளின் அடிப்படையில் இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனீயத்தின் மேலாதிக்க நாடாக மாற்றிடும் முயற்சி, வெவ்வேறு வழிகளில் தொடர்கின்றது. இதனால்தான் காவி பாசிஸ்டுகள், இந்துத்துவா என்ற பெயரில் ஒற்றைத்தன்மைக்கு முட்டுக்கொடுக்கின்றனர். மதம், பழங்குடி, மரபினம், தேசிய இனம், மொழி, சிறுபான்மையினர், அகதிகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், விளிம்புநிலையினர், ஒடுக்கப்பட்டோர் போன்றோருக்கு எதிரான கொள்கைகளை வலியுறுத்துவதன்மூலம் புதிய பாசிசத்தை அமல்படுத்த முயலுகின்றனர். இத்தகு சூழலில் புதிய பாசிஸ்டுகள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை நுணுக்கமாகக் கண்டறிந்து அறிவித்துள்ள திரேந்திராவின் நிழல் ராணுவங்கள் நூல் எச்சரிக்கை விடுக்கின்றது. திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்ட்டுகள், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அவசியம் நிழல் ராணுவங்கள் நூலை வாசிக்க வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.
மூல நூல்
நிழல் ராணுவங்கள்: இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட் படைகளும். திரேந்திர கே.ஜா. (தமிழில்: இ.பா.சிந்தன்) பொள்ளாச்சி: எதிர் வெளியீடு. பக்கம்: 200; விலை: ரூ.230/-. தொடர்புக்கு: 99425 11302.
murugesapandian2011@gmail.com