சாம்பலிலிருந்து
தியாகிகளே தியாகிகளே
விடுதலைக்கு உயிர் கொடுத்த உங்கள் அனைவருக்கும்
எங்கள் செவ்வணக்கம்
கல்கத்தா தெருக்களிலும்
சிரிகாகுள மலைகளிலும்
தருமபுரி வட ஆர்காட்டில் நீங்கள் சிந்திய
ரத்தம் வித்தானது.
எங்களோட பிள்ளைகட்கும்
எங்கள் தம்பி தங்கையருக்கு
உங்கள் கதைகளை போதிப்போம்
உங்கள் வழியில் நடக்க வைப்போம்.
விவசாயிகள் தொழிலாளர்கள்
அறிவாளிகள் மாணவர்கள்
துப்பாக்கியைத் தூக்குகின்றனர்
வர்க்கப் போராட்டத்தில் நிற்கின்றனர்
ரத்த வெள்ளம் ஓடினாலும்
நாட்டை நாங்கள் விடுவிப்போம்
அனைவரும் விடுதலை அடைகின்ற வரையிலும் ஆயுதத்தை
நாங்கள் ஏந்தி நிற்போம்
போர் ஆயுதத்தை நாங்கள் ஏந்தி நிற்போம்.

வால்டர் தேவாரம் தலைமையில் நடந்த நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தாவுக்குப் பிறகு தர்மபுரி பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்த மாவோயிஸ்டு கட்சியின் பாடல்.

1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திருப்பத்தூர் போலீசார் காலை 4.30 மணிக்கு ஏலகிரி கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தி கிராம மக்கள் மூவரை நக்சலைட்டுகள் என்று குற்றஞ்சாட்டிக் கைது செய்தனர். போலீசார் அட்டகாசமான நக்ஸல் அறுவடை, ஒரே இடத்தில் மூன்று பேரைக் கைது செய்து விட்டோம் என்று கூறிக் கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களின் ஆடைகளை உள்ளாடை வரை களைந்து, கைகளைப் பின்புறம் முறுக்கிக் கட்டி, ஒரு அம்பாசிடர் காருக்குள் திணித்து பின் சீட்டில் கால் வைக்குமிடத்தில் படுக்கப்போட்டு, அவர்கள்மீது கால்களை வைத்து மிதித்தபடி மூன்று போலீசார் உட்கார்ந்துகொண்டனர். முன்சீட்டில் இன்ஸ்பெக்டரும், ஒரு கான்ஸ்டபிளும், டிரைவரும் இருந்தனர். போலீஸ்காரர்கள் அத்தனைபேரும் தலைமுதல் கால்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர். கார் திருப்பத்தூர் நகரை நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக ஆறு முப்பது மணிக்கு திருப்பத்தூர் காவல் நிலையம் அருகே அம்பாசிடர் காருக்குள் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. மூன்று போலீசாரும் ஒரு கைதியும் உயிரிழந்தனர்.

போலீஸ் தரப்பு, பிடிபட்ட நக்ஸலைட்டுகளில் ஒருவரான சிவலிங்கம் தனது உள்ளாடையில் ஒரு நாட்டு வெடிகுண்டை ஒளித்துவைத்திருந்தார், அதை எடுத்து முன்சீட்டில் இருந்த போலீஸ்காரர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டார் என்று அறிவித்தனர். பின்பு இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்த மக்கள் உரிமைக் கழகம், பியுசிஎல் போன்ற அமைப்புகளின் மனித உரிமை ஆர்வலர்கள் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினர். கைது செய்யப்படுபவர்களை முழுவதும் நிர்வாணமாக்கி, அல்லது வெறும் உள்ளாடையோடு மட்டும் நிறுத்தி சோதிப்பது போலீஸ்காரர்களின் வழக்கம். பின்பு கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தரையில் உட்கார்ந்து எழும்படி உத்தரவிடப்படுவார்கள். இவ்வாறு செய்யும்போது ஆசனவாயில் ஏதாவது வெடிப் பொருட்களை செருகி வைத்திருந்தால் அது வெளியே வந்துவிடும். பின்பு கைதிகளின் கைகளை முறுக்கிப் பின்னால் கட்டிக் கொண்டு செல்வதே காவலர்களின் வழக்கம். இந்த சம்பவத்திலும் அதுவே நடந்தது என்று ஏலகிரி கிராம மக்கள் தெரிவித்தனர்.

கைகள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கைதிகளால் குண்டை எடுத்து முன் சீட்டில் வீசுவது சாத்தியமே இல்லை என்ற முடிவிற்கே இச்சம்பவத்தை ஆராய்ந்த செய்தியாளர்களும், வழக்குரைஞர்களும் வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக குண்டை வீசியதாகச் சொல்லப்படும் நக்ஸலைட் தலைவர் சிவலிங்கம் ஏலகிரி கிராமத்தில் கைது செய்யப்படவேயில்லை என்று அந்த கிராம மக்கள் திட்டவட்டமாக்த் தெரிவித்தனர். நயினார் என்ற நிலப்பிரபுவின் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த நக்ஸலைட் பெருமாள், அவருக்கு ஓரிரவு தங்க இடம் கொடுத்த பதின்ம வயது சிறுவன் செல்வம், பக்கத்து வீட்டுக்காரரான ராஜப்பா என்ற பீடித் தொழிலாளி ஆகியோர் மட்டுமே தங்கள் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர் என்று மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பில் ராஜப்பா காரிலும், மற்ற இருவரும் மருத்துவமனையிலும் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது என்று இந்தியா டுடே குறிப்பிட்டது. (India today seven alleged naxalites killed in so called encounters in Tamilnadu).

இந்த மூவரையும் சுட்டுக்கொன்று அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றியதாகக் கணக்குக் காட்ட போலீசாரே நாட்டு வெடுகுண்டுகளைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றும் அவை தற்செயலாக வெடித்திருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டரின் தொடை சதை பிய்த்து
எறியப்பட்டிருப்பதால் அவர் தனது கால் சட்டைபாக்கெட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்திருக்க வேண்டும் அல்லது வெடிகுண்டு இருந்த பையை மடியில் வைத்திருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.

எம்.ஜி.ஆர். அரசு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் உடலின் மீது அவரது மனைவி புரண்டு அழும் காட்சியைப் புகைப்படமாக எடுத்து மாநிலம் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டியது. இன்ஸ்பெக்டரின் குழந்தையின் பெயரான அஜந்தாவின் பெயரால் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்குவதாக அறிவித்தது.
டி.ஜி.பி. மோகன்தாஸ் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகள், உளவு நடவடிக்கைகள், இவற்றுக்குத் தேவையான ஆயுதங்கள், பணம், ஆட்கள், பயிற்சி போன்றவற்றை ஒருங்கிணைத்தார். வால்டர் தேவாரம் நேரடியாகக் களத்தில் இறங்கி ஒவ்வொரு கிராமமமாகச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டைகளை நடத்தினார். இந்த அனுபவங்களைப் பின்பு வீரப்பன் வேட்டையில் இன்னும் குரூரமான முறையில் பயன்படுத்தினார் அவர்.

அதற்கு சில காலம் முன்பு ஆந்திர மாநிலத்தில் நடந்த நக்சல் வேட்டைகளில் 380 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திர மாநில போலீஸ் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு போலீஸ்காரர் கூட கொல்லப்படவோ காயம்படவோ இல்லை. அதே பாணியில் ஆபரேஷன் அஜந்தாவை நடத்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசும் மாநில அதிகார வர்க்கமும் திட்டமிட்டன. தருமபுரி, வட ஆற்காடு, சேலம் மாவட்டங்களில் பெரும் போலீஸ் படையும், சிறப்பு அதிரடிப்
படையும் குவிக்கப்பட்டன. பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் போலீசின் மீது குண்டுவீசியவர்கள் என்று கூறப்பட்டு குறைந்தது ஐம்பது பேர் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர்.

தருமபுரி முழுவதும் நன்கறியப்பட்டிருந்த இளம் போராளியான பாலனுக்கு செப்டம்பர் ஆறாம் தேதி சீரியம்பட்டி கிராமத்தில் கூட்டம் நடத்த காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கியிருந்தது. கட்சி பாலனை அந்தக் கூட்டத்திற்கு செல்லவேண்டாம் அவர் தலைமறைவு ஊழியர் அல்ல என்றாலும் நிலைமை ஆபத்தாக மாறிவருகிறது என்று கடுமையாக எச்சரித்தது. இந்த ஒரே ஒரு கூட்டத்திற்கு மட்டும் சென்றுவருகிறேன் என்று கிளம்பிச் சென்ற பாலன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மேடையிலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஒருமணி நேரத்தில் இடதுகால் உடைந்து படுகாயமடைந்த நிலையில் தருமபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்லாயிரம் மக்கள் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பின்பு சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கே மருத்துவமனையில் செப்டம்பர் பனிரெண்டாம் தேதி மரணமடைந்தார்.

இந்தப் படுகொலைகளுக்கு எதிராக மக்கள் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவரும் புகழ்பெற்ற திருப்பத்தூர் வழக்குரைஞருமான பி.வி. பக்தவச்சலம் போராடி வந்தார். அவர்மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் தருமபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் நடந்து வரும் படுகொலைகளை பற்றி விசாரிக்க பி.யூ.சி.எல். அமைப்பு சார்பாக ஒரு உண்மையறியும் குழு திருப்பத்தூர் வந்திருந்தது. அக்குழுவில் சென்னை வழக்குரைஞர் இப்ராஹிம், சூழலியல் செயல்பாட்டாளர் க்ளாட் ஆல்வாரிஸ், பத்திரிக்கையாளர் முகுந்த் சி மேனன், ஜோதி புன்வானி குழுவில் இடம்பெற்றிருந்தனர். குழு முதல்நாள் திருப்பத்தூர் மருத்துவர்கள், மக்கள் ஆகியோரைப் பேட்டியெடுத்தும், மருத்துவமனை ஆவணங்களைப் பார்வையிட்டும் தங்கள் விசாரணையைத் தொடங்கியது. போலீசார் உண்மை அறியும் குழுவுக்கு மக்கள் நடுவே கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
மறுநாள் காலை குழுவுக்கு மோசமாக விடிந்தது.

‘திடீரென்று லாட்ஜுக்கு வெளியே பெருஞ்கூச்சல். ”நக்சலைட்டுகள் ஒழிக. நக்சல் தலைவன் வக்கீல் பக்தவச்சலம் ஒழிக” மாடியை நோக்கி சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. லாட்ஜின் வாயிலை நிறைத்துக் கொண்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். மாடிப்படிகளிலும் ரிசப்ஷனிலும் கலவரக்காரர்கள் நிறைந்திருந்தனர். கூட்டத்தைப் பிளந்து கொண்டு சில சீருடை அணிந்த போலீஸார் எங்களை நோக்கி வந்தனர்.

அதற்குள் கூட்டத்தினர் தாக்கியதில் உண்மையறியும் குழுவினர் சிலரின் கண்ணாடிகள் உடைந்தன. சிலருக்கு மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழியத் தொடங்கியது. கலவரக்காரர்கள் இரண்டு வரிசைகளாகப் பிரிந்து நிற்க போலீஸார் உணமையறியும் குழுவினரை நடுவே கொண்டு சென்றனர். இருபுறமும் இருந்த கலவரக்
காரர்கள் உண்மையறியும் குழுவினரை ஓங்கி ஓங்கி முதுகிலும் முகத்திலும் குத்தினர். எதையும் தடுக்காத போலீஸார் குழுவினரை சாக்குப் பைகளைப் போல வேனுக்குள் தூக்கி வீசினர். குழுவினர் பலத்த காயங்களடைந்திருந்தனர்.

சிறுவர்களான நானும் ராஜாராமும் இரண்டாவது மாடிக்கு நழுவ முயன்றோம். அப்போது திடீரென்று முறுக்கு மீசையுடன் ஒரு பெரிய அதிகாரி நிறைய போலீசார் புடைசூழ வந்தார்

(தேவாரம்.“யார் நீங்க, இங்க என்ன பண்றீங்க” என்று மிரட்டும் தோரணையில் கேட்டார். நான் வக்கீல் பக்தவச்சலத்தின் மருமகன் என்ற உண்மையை உளறினேன்.அதிகாரி ஆக்ரோஷமாக பிஸ்டலை எடுத்து என் வாய்க்குள் சொருகினார். ‘‘தேவடியா பசங்களா! நக்சலைட்டா நீங்க? சுட்டுக் கொன்னு ஜவ்வாது மலக் காட்டுல பொணத்தை வீசிட்டு என்கவுண்டர் கணக்குல எழுதிடுவேன்.” கலவரக் கும்பலில் இருந்தவர்களைப் போலவே உயரமும் உடற்கட்டும் கொண்டிருந்த நால்வர் எங்களை விசாரித்தனர். எங்களை வயிற்றிலும் முதுகிலும் சரமாரியாகக் குத்தினர். முகத்தில் ரத்தம் வழிய கீழேவிழுந்தவர்களை நால்வரும் சுற்றி நின்று பூட்ஸ்கால்களால் மிதித்தார்கள். உதைத்தார்கள். கை கால் முதுகு என உடல் முழுவதும் ரத்தம் வழிந்தது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்.
பின்பு எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். எங்களை அடித்த கலவரக்காரர்களே போலீஸ்காரர்களாக ஸ்டேஷனில் இருந்தனர்” (செம்புழுதிப் பாதையில்- வெ. ஜீவகிரிதரன்).

திருப்பத்தூர் வந்திருந்த உண்மையறியும் குழு கலவரக்காரர்கள் போல வேடமிட்டிருந்த போலீஸ்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு வட ஆற்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. அன்றைய தினமே வழக்குரைஞர் பக்தவச்சலத்தையும் உள்ளூர் சமூக விரோதிகளைக் கொண்டு தாக்கிக் கொல்ல முடிவு செய்திருப்பதாக அவருக்குத் தகவல் வந்தது. பக்தவச்சலம் தன் மனைவி மக்களை வீட்டுக்குள் பூட்டி அவர்கள் கையில் வெட்டுக் கத்தியைக் கொடுத்து தாக்குபவர்களத் தாக்கும் படியும், போரிட்டு சாகும்படியும் சொல்லி விட்டுத்தான் மட்டும் வெளியே ஆயுதத்துடன் கலவரக்காரர்களை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தார் என்கிறார் வெ. ஜீவகிரிதரன். ஆனால் கலவரம் செய்ய போலீஸார் ஏற்பாடு செய்திருந்தவர்கள் வக்கீலைத் தாக்க மறுத்ததால் அந்தத் திட்டம் அப்போதைக்குக் கைவிடப்பட்டது.

பின்பு வழக்குரைஞர் நீதிமன்றத்துக்கு காரில் செல்லாமல் நடந்து செல்லத் தொடங்கினார். அவர்கள் தன்னை லாரி மோதி கொன்று விட்டு விபத்து என்று நாடக
மாடாமல் தடுக்க இவ்வாறு செய்தாராம். தன்னைக் கொல்ல வேண்டுமானால் ஆயுதத்துடன் நேராக வந்து கொல்ல வேண்டும். அது கொலை என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது பக்தவச்சலத்தின் நோக்கமாகவிருந்தது.

பக்தவச்சலம், சென்னை வழக்குரைஞர் இப்ராஹிம், சூழலியல் செயல்பாட்டாளர் க்ளாட் ஆல்வாரிஸ், பத்திரிகையாளர் முகுந்த் சி.மேனன், ஜோதி புன்வானி போன்ற நாடு அறிந்த அறிவுத் துறையினருக்கு திருப்பத்தூர் நகரின் மையத்தில் இது நடந்தது என்றால் எட்டாக்கையிலுள்ள கிராமங்களில் கல்வியறிவற்ற, வெளியுலகத் தொடர்பு இல்லாத அப்பாவி மக்களுக்கும், அரசு இயந்திரத்தின் பரம விரோதிகளான நக்சலைட்டுகளுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது எளிது.

இந்தக் கொடூரமான கொலைவெறித் தாண்டவத்தில் பலியானவர்களில் அப்போது சிபிஐ எம்.எல். மக்கள் யுத்தம் கட்சியின் ஊழியர்களும் அதிலிருந்து பிரிந்து சென்ற கண்ணாமணி குழுவினரும் இருந்தனர். ஆனால் அந்தக் கட்சிகளைச் சேராத இந்திய பொதுவு டமைக் கட்சி மாநில அமைப்புக் கமிட்டி என்ற இன்னொரு நக்சல் அமைப்பின் ஆதரவாளரான பி.வி.பக்தவச்சலமும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராக தோழர்களைப் பாதுகாக்க நின்றது இந்திய அளவில் புதிய முன்னுதாரணமாகும்.

நக்சல்பாரி இரண்டாவது அலையின் உச்சகட்டம் தருமபுரி, சேலம், வட ஆற்காடு நிகழ்வுகள். தமிழ் நாட்டில் மாலெ இயக்கம் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

எல். அப்பு என்றழைக்கப்பட்ட அற்புதசாமி கோவையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர். முனிசிபல் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், மில் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

பின்பு ஒன்றுபட்ட பொதுவுடமைக் கட்சியின் போக்கில் அதிருப்தி அடைந்து ஏ.கே. கோபாலனின் ஆலோசனையின் பேரில் தீக்கதிர் இதழைத் தொடங்கினார். அது அப்போது வார இதழாகவே தொடங்கப்பட்டது. முதல் முறை கட்சி உடைந்த போது சிபிஎம் சென்ற கோவை தோழர்கள் நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு சிபிஐ எம்.எல். அமைப்பில் இணைந்து கொண்டனர்.

இந்தக் காலகட்டத்தில் சி.பி.ஐ.எம். கட்சியுடனான விவாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் 21 மாவட்டக் குழு உறுப்பினர்களில் 14 பேர் சி.பி.ஐ.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அப்பு, சாரு மஜும்தாரைச் செயலாளராகக் கொண்டிருந்த சி.பி.ஐ. மாலெ அமைப்பின் மையக் குழு உறுப்பினரானார்.
அப்பு தமிழ்நாட்டில் சிபிஐ எம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். இது சி.பி.ஐ.எம்.எல். கட்சிக்கான அடித்தளமாக அமைந்தது. கோவையின் இன்னொரு புகழ்பெற்ற, வீரம்மிகுந்த பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத் தலைவரான கண்ணாமணி, சென்னை வழக்குரைஞரும் முன்னணி தொழிற்சங்க தலைவருமான ஏ எம் கோதண்ட ராமன் ஆகியோர் சிபிஐ எம் கட்சியை விட்டு வெளியேறியவர்களின் முதன்மையானவர்களாவார்கள். (தோழர் எல்.அப்பு குன்றா பெருநெருப்பு- பாவல் இன்பன். கீற்று இணைய தளம்) வர்க்க விரோதிகளின் ரத்தத்தில் கை நனைக்க வேண்டும் என்ற அன்றைய நக்சல்பாரி அரசியலுக்கு ஏற்ப சில தனிநபர் அழித்தொழிப்புகளில் கட்சி ஈடுபடத் தொடங்கியது. தஞ்சையிலும், உடுமலைப் பேட்டையிலும் வெறுக்கத்தக்க நிலப்பிரபுக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் 1970 ஆம் ஆண்டு அப்பு ஒரு தனியார் விடுதியில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. காவல்துறை அதை மறுத்தது. அப்பு ஆந்திரா கொண்டு செல்லப்பட்டு போலி மோதலில் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அப்பாராவ் என்று பெயர் சூட்டப்பட்டு போலீசால் தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும் மூத்த தோழர்கள் நினைவு கூர்கின்றனர்.

மாலெ அமைப்பின் இன்னொரு முக்கிய தலைவரான கண்ணாமணி இயக்கத்திலிருந்து விலகிச் சென்று திமுகவில் இணைந்தார். அவரது தன்வரலாறான ‘‘போராட்டம் என் வாழ்க்கை” நூலில் தான் ஒருபோதும் நக்சல் அரசியலை ஏற்றுக் கொண்டதில்லை என்றே குறிப்பிடுகிறார். (போராட்டம் என் வாழ்க்கை –கண்ணாமணி பொன்னுலகம் பதிப்பகம்).

இருந்த போதிலும் பதினான்குமணி நேர வேலை, அற்ப கூலி, அரைப்பட்டினி என்று இருந்த கோவை தொழிலாளர்களின் வாழ்க்கையை தனது வீரம்மிக்க, தன்னலமற்ற போராட்டத்தின் மூலம் மாற்றிய கண்ணாமணியை தங்கள் அன்புக்குரிய தோழராகவே கோவை பாட்டாளி வர்க்கம் கொண்டாடி வந்தது.

அவரது மரணத்தின் போது அவரது உடல் செங்கொடிகள் போர்த்தப்பட்டே அடக்கம் செய்யப்பட்டது. அவர் மனதளவில் கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார் என்பதை உணர்ந்திருந்த உள்ளூர் திமுகவினரும் அதை ஆட்சேபிக்கவில்லை.

அப்புவின் மரணத்துக்குப் பிறகு ஏ.எம்.கே. என்றழைக்கப்பட்ட கோதண்டராமன் மாலெ இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குச் செயலராகத் தோர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் 1973 ஆம் கைது செய்யப்பட்டார். சாரு மஜும்தாரின் மரணத்துக்குப் பின்பு தோன்றியிருந்த பிளவுகள் கோதண்டராமனின் கைதுக்குப் பின்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்தன.

இந்தியா முழுவதிலும் நடந்ததைப் போலவே தமிழ்நாட்டிலும் மார்ச்சிய லெனினிய கட்சியானது மூன்று துண்டுகளாக உடைந்தது. புரட்சியானது பல கட்டங்களாக நடக்கும், இப்போது ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. எனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை புரட்சிக்குத் தயார் செய்ய வேண்டும் என்ற நிலையெடுத்த தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இயங்கிய தோழர்கள் மேற்கு பிராந்திய குழு என்றழைக்கப்பட்டனர். இந்தக் குழுவினர் பின்பு தங்களை இந்திய பொதுவுடமைக் கட்சி (மா லெ) (மாநில அமைப்புக் கமிட்டி) என்ற பெயரில் ஒரு கட்சியாக அமைத்துக் கொண்டனர். இது பிரச்சார கட்டம் என்பதால் மக்களிடம் பிரச்சாரம் செய்ய மக்கள் கலை இலக்கிய கழகம் – ம க இ க என்ற அமைப்பை ஏற்படுத்தினர். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்ற இதழ்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினர். பின்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கம், கீழைக் காற்று பதிப்பகம் போன்ற அமைப்புகளை நிறுவியது இந்தக் கட்சி. மாற்று ஊடகங்கள் என்ற முறையில் இக்கட்சியின் இதழ்களும், பதிப்பகமும், பாடல்களும் மிகப் பரந்த அளவில் மக்களைச் சென்று சேர்ந்தவையாகும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திலும் மிக முக்கியமான பங்கு வகித்தது இந்தக் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு.

சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வந்த இந்தக் கட்சி அண்மையில் பெரிய பிளவைச் சந்தித்த பின்பு மறு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆயுதப் போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்து அந்த வழியில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும், தேர்தல் பாதையில் இயங்கியவர்களுக்கும் நடுவே தனது
தனித்தன்மையைக் காத்துக் கொண்டு ஒரு முக்கியமான வரலாற்றுத் தேவையை நிறைவு செய்தது இந்த அமைப்பு.

இதிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு 1983 இல் தன்னை இந்திய பொதுவுடமைக் கட்சி (மாலெ) (தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி) என்ற பெயர் சூட்டிக் கொண்டது. கேடயம் குழு என்று அறியப்பட்டிருந்தது இந்த அமைப்பு. முதலில் ஈழப் போராட்டம் சரியல்ல. தமிழ் பாட்டாளியும் சிங்கள பாட்டாளியும் இணைந்து போராட்ட வேண்டும் என்பது போன்ற நிலைபாடுகள் கொண்டிருந்த இந்தக் கட்சி பின்பு இந்தியப் புரட்சி சாத்தியமில்லை, தனித் தமிழ்நாடே லட்சியம் என்று முடிவெடுத்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்டது.

சாருவின் பாதையை அப்படியே பின்பற்றிய குழுவானது கிழக்கு பிராந்திய குழு என்றழைக்கப்பட்டது. இந்தக் குழு பின்பு வினோத் மிஸ்ரா தலைமை தாங்கிய லிபரேஷன் அமைப்புடன் இணைந்து தமிழ் நாட்டில் பெரிய மார்க்சிய லெனினிய அமைப்பாக மாறியது. இந்த அமைப்பானது தஞ்சை, நெல்லை தூத்துக்குடி, சென்னை, உளுந்தூர் பேட்டை பகுதியில் தீவிரமாக இயங்கியது. இந்தக் கட்சியினர் கூலி விவசாயிகள் சங்கம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற என்ற மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கினர். அதே நேரம் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு அழித்தொழிப்புகளை நடத்தியது. பல்வேறு அழித்தொழிப்புகளில் ஈடுபட்ட லிபரேஷன் அமைப்பின் மச்சக்காளை போன்ற முன்னணி தோழர்கள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நடந்த
மிகப் பெரிய தலித் படுகொலையான கீழ் வெண்மணி தலித் படுகொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது இந்தக் கட்சிதான். தற்போது தேர்தலில் பங்கெடுத்து வருகிறது. கட்சி அண்மையில் பெரிய பிளவைச் சந்தித்தாலும் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐசிசிடியூ தொடர்ந்து வளர்ச்சி
பெற்று வருகிறது.

தருமபுரி, சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் இயங்கிய நக்சல்பாரித் தோழர்கள் தங்களைக் கூட்டக்குழு என்றழைத்துக் கொண்டனர். இந்தப் பிரிவு ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யா வந்தடைந்த முடிவுகளை தனது அனுபவத்தில் கண்டுகொண்டிருந்தது. ஆயுதப் போராட்டத்துடன் மக்கள் போராட்டங்களையும் நடத்த வேண்டும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும், மக்களை அமைப்பாக வேண்டும் என்ற முடிவுகளுடன் இயங்கிய தோழர்கள் மக்கள் கூட்டமாக செயல்படுவதை முன்னிலைப்படுத்தியதால் கூட்டக் குழு என்றழைக்கப்பட்டனர்.
தமிழரசன், பாலன், சீராளன், தமிழ்வாணன், கண்ணாமணி போன்ற பல புகழ்பெற்ற போராளிகளைக் கொண்டிருந்த இந்த அமைப்பில் ஏராளமான இளை
ஞர்கள் இணைந்திருந்தனர். தனிநபர் அழித்தொழிப்பே ஒரே போராட்ட வடிவம் என்பதை இந்த அமைப்பு நிராகரித்தது. ஆயுதப் படைகள் மக்கள் போராட்டங்களிலிருந்தே உருவாக வேண்டுமென்ற முடிவுக்கும் வந்திருந்தது. தமிழரசன் இக்குழுவின் செயலராகவிருந்தார்.
பெரும் நிலப்பிரபுக்களின் அறுவடையைக் கைப்பற்றி மக்களுக்குப் பிரித்து அளிக்கும் இயக்கம் இந்த அமைப்பால் பல இடங்களில் நடத்தப்பட்டது. பணப்பயிர்களை இரவு நேரங்களில் கொள்ளையிட்டு விற்பனை எய்து மக்களுக்கு கொடுப்பது ஒரு முறை அல்லது மக்களை திரட்டி இரவு நேரங்களில் அறுவடை செய்வது. வட ஆற்காட்டில் கண்ணாமணி தலைமையிலான குழு ( இது கூட்டக் குழுவுடன் கருத்து வேறுபாடு கொண்டு தனித்து இயங்கியது) இவ்வகையான அறுவடையைக் கைப்பற்றும் இயக்கங்களை பெரிய அளவில் முன்னின்று நடத்தியது. தென் ஆற்காட்டில் புலவர் தலைமையில் மக்களைத் திரட்டிக் கொண்டு பகல் நேரங்களில் நேரடியாகச் சென்று அறுவடையை கைப்பற்றுவது நடந்தது.

புலவர் கலியபெருமாள் தென்னாற்காட்டில் கரும்பு விவசாயிகளின் உரிமைக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

கரும்பு தோட்டத்திலே ஏழை மக்கள் களை எடுக்கையிலே கருக்கருவா போல சோகை கைகளைக் கிழிக்கும் கசியும் வேர்வை காயத்தில் பட்டு கனலாய் எரியும் உடம்பு தணலாய் தகிக்கும் போன்ற அற்புதமான மக்கள் பாடல்கள் இந்தப் போராட்டங்களில் இருந்து உருவாகி அந்தப் பகுதி முழுவதும் பெரும்புகழ் பெற்றன.
வட தமிழகத்தில் ஏரிகளில் கோடைகாலத்தில் நீர் வற்றும் போது மீன் பிடி திருவிழா நடக்கும். முதல்நாள் பெருந்தனக்காரர்கள் மீன் பிடிப்பார்கள். இரண்டாம் நாள் பாசனக்கட்டு விவசாயிகள் அதாவது இடைநிலைச் சாதிகளைச் சேர்தவர்கள் மீன் பிடிப்பார்கள். மூன்றாம் நாளே தலித்துகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரண்டு நாட்களில் நல்ல மீன்கள் பிடிக்கப்பட்டு அசரை எனப்படும் சிறு சிறு பொடி மீன்களே தலித்துகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் கிடைக்கும். அப்போது ஏரி கலங்கி மோசமான நிலையிலிருக்கும்.

கூட்டக் குழு சமத்துவ மீன் பிடிக்கும் போராட்டம் நடத்தியது. தமிழரசன் இத்தகைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். முதல் நாளே திட்டமிட்ட முறையில் தலித்துகள் உட்பட அனைவரும் மீன் பிடிக்க உதவினார். அதுவரை ஒதுக்கப்பட்டு வந்த வயதானவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் சரியான பங்கு பெற உதவினார்.

(தமிழ்நாட்டில் மாலெ கட்சி உடைந்த 1973 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டுவரை கூட்டக் குழுவிலும், லிபரேஷன் அமைப்பிலும் என்ன நடந்தது என்பது பற்றி கால வரிசையில் தெரிந்து கொள்ள எழுத்து பூர்வமான பதிவுகள் கிடைப்பதில்லை. நூல்கள் எதுவும் எழுதப்பட்டது போலவும் தெரியவில்லை. எனவே தோழர்களுடனான உரையாடல்களிலிருந்தே வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. படிக்கும் நண்பர்கள் இது முழுமையான வரலாறு அல்ல என்பதை மனதில் கொண்டே படிப்பார்கள் என்று நம்புகிறேன்)

நக்சல்பாரி எழுச்சி தோன்றிய காலகட்டத்தில் தோழர் ஏ.எம்.கே. சென்னையில் வளர்ந்து வந்த இளம் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். டன்லப், டி ஐ சைக்கிள், டி.வி.எஸ். போன்ற தொழிற்சாலைகளில் நிர்வாகத்தைன் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களை சமூக விரோதிகளைக் கொண்டு தாக்குவது வழக்கமாகவிருந்தது. இந்த வன்முறைக்கு எதிராக தொழிலாளர்களும் திருப்பித் தாக்கினர். ஒவ்வொரு தெருவிலும் சண்டைகள் நடந்தன. இந்த அடக்குமுறைகளை தொழிலாளர்கள் வெற்றி கொண்டனர். இவற்றின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த ஏ.எம்.கே. இத்தகைய சூழலை எதிர்கொள்ளத்தக்க போர்க்குனமிக்க ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அவசியம் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

நக்சல்பாரியின் அழைப்பை ஏற்று சி.பி.ஐ.எம். கட்சியிலிருந்து வெளியேறி அப்பு போன்ற தோழர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் மாலெ இயக்கத்தை உருவாக்கி
னார். அப்பு கொல்லப்பட்ட பிறகு 1973 வரை கட்சியை நடத்தினார். பின்பு கோதண்டராமன் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா அரசு பல அரசியல் கைதிகளை விடுதலை செய்தது. அப்போது கோதண்டராமனும் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் சிறை சென்ற போது ஒன்றாக இருந்த கட்சி இப்போது மூன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. கோதண்டராமன் அப்போது வீச்சாக இயங்கிக் கொண்டி
ருந்த கூட்டக் குழுவினருடன் இணைந்து கொண்டார். அதே நேரம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாமல், மக்கள் திரள் அமைப்புகள் கட்டுதல், நீதிமன்றம் போன்ற சட்டரீதியிலான அமைப்புகளைப் பயன்படுத்துதல், பாராளுமன்ற அரசியலைப் புறக்கணித்தல் ஆகிய முடிவுகளுக்கு வந்து சேர்திருந்த கொண்டபள்ளி சீத்தா
ராமைய்யா இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு மாலெ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒருக்கிணைப்புக்கு முயன்று வந்தார்.
கொண்டபள்ளி சீத்தாராமைய்யா குழுவும், தமிழ் நாட்டு கூட்டக் குழுவும் இணைந்து சி.பி.ஐ. (எம்.எல்) (மக்கள் யுத்தம்) என்ற கட்சியை உருவாக்கின.

இந்த அமைப்பு தர்மபுரி, வட ஆற்காடு, சேலம் மாவட்டங்களுகு விரிந்து பரவியது. ஆயுதப் போராட்டமாகவும் இல்லாமல், அதே நேரம் குறிப்பிட்ட இடங்களில் கூடிக் கலையும் அடையாளப் போராட்டமாகவும் இல்லாமல் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தருமபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் கந்து வட்டிக் கொடுமையால் அவதிப்பட்டு வந்தனர். தங்களுக்குச் சொந்தமான சொற்ப நிலத்தையும், பண்ட பாத்திரங்களையும் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டு விஷம் போலும் ஏறும் வட்டியைக் கொடுக்க முடியாமல் சொத்துக்களையும், வாழ்க்கையையும் இழப்பது வழக்கமாகவிருந்தது.

மக்கள் யுத்தக் கட்சியின் முன்னணி அமைப்பான முற்போக்கு இளைஞரணி தோழர்கள் ஊர் மக்களை ஊர்வலமாக அழைத்துச் வட்டிக்காரர்களை இழுத்து வந்து அடமானப் பத்திரங்களைக் கைப்பற்றி கிழித்து எறிவதை ஒரு இயக்கமாகவே நடத்தினர்.

பெரிய செட்டி என்ற ஒரு வட்டிக்காரர் மக்களின் ரத்தத்தை எலும்புவரை உறிஞ்சுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தப் பகுதி முழுவதும் மிகத் தீவிரமாக வெறுக்கப்பட்டவர் இவர். இவர் மக்கள் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு பொதுமக்களால் தீர்ப்பளிக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். கட்சி செயல்பட்ட இடங்களில் எல்லாம் இந்தப் போராட்டங்கள் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது.

சந்தைகளில் விற்பனை செய்வதற்கான பொருட்களை தலைச்சுமையாகக் கொண்டு வரும் விவசாயிகளிடம் பெரிய தொகை கட்டணமாக வசூலிக்கும் முறை இருந்து வந்தது. இடைவிடாத போராட்டங்களின் விளைவாக கட்டணம் குறைக்கப்பட்டது. விவசாயப் பொருட்களை குறைந்து விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்த கமிஷன் மண்டிகளின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டது.

நிலப்பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றங்களில் சுமுகமாகத்தீர்க்கப்பட்டன. இது குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. ஒரு விவசாயி தனது நிலப்பிரச்சினைக்கு தீர்வு கோரி குறி சொல்பவரை அணுகினாராம். குறிசொல்பவர் அவரை நாயக்கன் கொட்டாய் சென்று தோழர்களைப் பார்க்கும்படி குறி சொன்னாராம்.

உயர் சாதிகளைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்கள் மக்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்படும் போது விசித்திரமான சூழல்கள் ஏற்பட்டன. ஒருமுறை சில செங்கல் சூளை முதலாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி பத்து தோப்புக் கரணம் போட வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது.
முதலாளிகள் தாங்கள் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிடுவதாகவும், தோப்புக் கரண தண்டனையை ரத்து செய்யும்படியும் கோரினர்.
மக்களில் சிலர் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விரும்பிய போது நக்சல் தோழர்கள் தோப்புக்கரண தண்டனையின் அவசியத்தை விளக்கினர். நிலப்பிரபுக்
களின் போலி கௌரவத்தையும், பரம்பரை திமிரையும் ஒடுக்க இந்த தண்டணை தேவைப்படுகிறது. அதானாலேயே பணத்தை இழந்தும் உடல்ரீதியிலான தண்டனைகளைத் தவிர்க்க இவர்கள் விரும்புகின்றனர் என்று விளக்கினர். பின்பு தண்டனை செயல்படுத்தப்பட்டது.

மக்கள் நீதிமன்றங்கள் முற்றிலும் அமைதியாகவும் நடந்து விடவில்லை. சில இடங்களில் நிலப்பிரபுக்களும், கள்ளச்சாராயக் காரர்களும், கந்துவட்டிக்காரர்களும், கொத்தடிமைகளை வைத்திருந்தவர்களும் எதிர்த்துப் போராட முன்ற போது தவிர்க்க இயலாத விதத்தில் அழித்தொழிப்புகள் நடந்தன. அதே நேரம் தேனீர் கடைகளில் இரட்டை குவளை முறை போன்றவற்றை ஒழிக்கும் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடன் நடைபெற்றன. சாதாரண மக்களைப் போலவே வறுமையிலிருக்கும் இந்த சிறுகடைக்காரர்கள் முதலில் எச்சரிக்கப்பட்டனர். பின்பு உள்ளூர் இடைநிலைசாதியினர், தலித்துகள் அடங்கிய ஊர்வலம் நடத்தப்பட்டு தனிக்குவளைகள் ஒழிக்கப்பட்டன.

கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதிபெற தோழர்கள் செல்லும்போதும் மக்கள் கூட்டமாக இணைந்து கொள்ள அவை ஊர்வலங்களாக மாறின.

மூன்று மாவட்டங்களில் மக்கள் யுத்தக் கட்சியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தினர் நக்சல்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் படி அப்போதை ஆளும் கட்சியான அதிமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அரசும், அதிகார வர்க்கமும், காவல்துறையும் மக்கள் யுத்தக் கட்சி முன்னேறுவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. போட்டி அரசு நடப்பதாக வலதுசாரிகள் கூச்சலிட்டனர். மெல்ல மெல்ல நக்சல்பாரி அமைப்பின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களை அரசும் காவல்துறையும் ஒருங்கிணைத்து பதில் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கின. அதுவரை பெரும்பாலும் ஆயுதமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த தோழர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், நெருக்கடி ஏற்படும் போது உயிருக்கு ஆபத்து இல்லாத இடத்தில் வீசி பீதி ஏற்படுத்தி விட்டு பின்வாங்கிவிடும் படியும் கட்சி அறிவுறுத்தியது. போலீஸுடனான நேரடி மோதல்களைத் தவிர்க்க கட்சி முயன்று வந்தது.

இந்தச் சூழ்நிலையில் தான் ஏலகிரி கிரமத்திலிருந்து போலீஸ்காரர்கள் சென்ற காரில் குண்டு வெடித்தது. அரசு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. தமிழ்நாட்டில் இதற்கு முன்கண்டிராத விதத்தில் வெறியாட்டம் தொடங்கியது.

மக்கள் யுத்தக் கட்சி தமிழ்நாட்டில் போலீஸ் மீது எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை, அதே நேரம் தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்கள், இயக்கத்தை இன்னும் விரிவாக எடுத்துச் செல்வது ஆகியவற்றின் மூலம் அடக்குமுறையை எதிர்கொண்டது. கலைஞர்கள், எழுத்தாளர்களை இணைத்து புரட்சிப் பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்பு பெரும் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதில் அங்கம் வகித்தனர். செந்தாரகை, சமரன் போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. ஜனநாயக விவசாயிகள் சங்கம் போன்ற புதிய அமைப்புகள் கட்சியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு வளர்ச்சி பெற்றன.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும், ஈழத்திலும் தேசிய இனப்போராட்டங்கள் எழுச்சி பெற்றன.

மக்கள் யுத்தக் கட்சி தமிழ் தேசிய இன விடுதலையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழரசனும், புலவர் கலியபெருமாளும் கட்சியை விட்டு வெளியேறி தமிழ்நாடு விடுதலைப் படையை அமைத்தனர். தென்னாற்காடு மாவட்டத்தில் கட்சி பலவீனப்பட்டது. தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெற்று விட்ட முந்திரிகாட்டுப் போராட்டம் தொடங்கியது.

1984 வாக்கில் மக்கள் யுத்தக் கட்சியின் தமிழ்நாடு குழு, ஆந்திராவில் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, மஹாராஷ்ட்ரா கட்சியின் செயலராக இருந்த கோபட் காந்தி ஆகியோர் கொண்ட பள்ளி சீத்தாராமைய்யாவுடன் முரண்பாடு கொண்டனர். இந்தப் பிளவு ஆந்திராவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சத்யநாராயண் சிங் பிஹாரின் புகழ்பெற்ற நக்சலைட் தலைவராவார். 1968-69 ஆம் ஆண்டுகளில் பிஹாரில் முஷாஹரி பகுதியில் நடந்த விவசாயிகள் எழுச்சியை தலைமை வகித்து நடத்தினார். பல்லாயிரம் விவசாயிகள் பங்கு கொண்ட அந்த எழுச்சியானது பின்பு கெரில்லாப் போராட்டமாக மாறியது. அந்தக் காலகட்டத்திலிருந்தே சத்யநாராயண் சிங் சாரு மஜும்தாரின் தனிநபர் அழித்தொழிப்பு நடவடிக்கை மேல் அதிருப்தியும் விமர்சனமும் கொண்டிருந்தார். இது பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டினார். 1971 இல் சத்யநாராயண் சிங் தலைமையிலான தோழர்கள் போட்டி தலைமைக் குழு அமைத்து சாரு மஜும்தாரை கட்சியிலிருந்து வெளியேற்றியதாக அறிவித்தனர்.

சிங், ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய அவசர நிலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார். அவசர நிலைக்குப் பின்பு சிங்கின் நிலை மேலும் மென்மை யடைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் செய்தார். இதெல்லாம் நக்சல் அரசியலில் நினைத்தே பார்க்க முடியாதவை
யாகும். அடுத்து சிங் தேர்தலில்களில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தவும் செய்தார்.

போஜ்பூரில் மிகப் பெரிய எழுச்சியை நடத்தியது சிபிஐஎம்எல் லிபரேஷன் கட்சி ஆகும். இதன் தலைவராக ஜோஹரும் மேற்கு வங்க செயலராக வினோத் மிஸ்ராவும் இருந்தனர்.

1970 ஆம் ஆண்டு இருபத்திமூன்று வயதேயாகியிருந்த வினோத் மிஸ்ரா நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு துர்க்காபூர் கட்சிக்குழுவின் செயலரானார். அங்கு கைது செய்யப்பட்ட அவர் போலீசால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை
யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு 1972 ஆம் ஆண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல், விசாரணை இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார். இது கட்சியில் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பர்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். கட்சியில் ஏற்பட்ட பல பிளவுகளுக்குப் பிறகு 1974 ஆம் ஆண்டு தோழர் ஜோஹருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். ஜோஹர், வினோத் மிஸ்ரா, ரகு ஆகியோர் இணைந்து சி.பி.எம்.எல்.லிபரேஷன் அமைப்பை உருவாக்கினர்.

இந்தக் கட்சியின் மேற்கு வங்க செயலராக வினோத் மிஸ்ரா இயங்கி வந்தார். அவரது தலைமையில் பல கெரில்லாக் குழுக்கள் உருவாகி செயல்பட்டு வந்தன. 1975இல் ஜோஹர் கொல்லப்பட்ட பிறகு வினோத் மிஸ்ரா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டு டார்ஜிலிங் மாவட்டத்தில் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டைகளில் அமோல் என்ற முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். வினோத் மிஸ்ரா படுகாயப்படுத்தபப்ட்டாலும் நேமு சிங் என்ற கெரில்லா குழுத் தலைவர் போலிஸ் முற்றுகையை உடைத்து வினோத் மிஸ்ராவைக் காப்பாற்றினார்.

1976 ஆம் ஆண்டு லிபரேஷன் கட்சியானது ஆயுதப் போராட்டத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பு ஜனநாயக முன்னணியையும் உருவாக்கி இணைத்து நடத்த வேண்டும் என்ற நிலை எடுத்தது.

1977 ஆம் ஆண்டு லிபரேஷன் அமைப்பானது வெளிப்படையாக இயங்கக் கூடிய இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியது. முன்னணி அதன் முன்னணி அமைப்பாக இருந்தது. இதன் மூலம் கட்சி லிபரேஷன் கட்சி தலைமறைவுக் கட்சியாக இருக்க இந்திய மக்கள் ஜனநாயகவாதிகள், காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள், ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. காந்தியவாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய மக்கள் முன்னணியில் இணைந்தாலும், அரசியல் கட்சிகளிடையே இந்திய மக்கள் முன்னணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது தனித்து வளர முடியாத நிலையில் கட்சியின் முன்னணி அமைப்பாகவே இருந்து வந்தது.

1992 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த பேரணியில் வினோத் மிஸ்ரா 25 ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கையைக் கைவிட்டு வெளியே வந்தார். இன்று லிபரேஷன் அமைப்பு இந்தியாவின் மூன்றாவது பெரிய இடதுசாரி கட்சியாகவுள்ளது. பிஹாரில் வலிமைவாய்ந்த அமைப்பாக இயங்கி வருகிறது. இன்றைய இந்திய சூழலில் இடதுசாரி கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பரவலாக இயங்கும் அமைப்பாகவும், முக்கியமான தொழிற்சங்கங்களைக் கொண்ட அமைப்பாகவும் லிபரெஷன் உள்ளது.

நக்சலைட் இயக்க வரலாற்றில் பஞ்சாபின் கதை விசித்திரமானது.

1970 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி ஜலந்தர் போலீஸ் தாங்கள் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்று பெரிய தலைவர்களை கொல்லும் சதியை முறியடித்து விட்டதாகப் பரபரப்பு செய்தி வெளியிட்டது. கொல்லப்பட்டவர் பெயர் பாபா புஜ்ஜா சிங். அவருக்கு வயது 82. புஜ்ஜா சிங் 1930களில் கதர் புரட்சிகர இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய சுதந்திரப் போராட்ட வீரர். பகத் சிங்கின் மாமாவான அஜீத் சிங்கின் தோழர். பின்பு கிர்தி கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு அந்தக் கட்சியைத் தடை செய்தது. பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1960 களில் நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய போது புஜ்ஜா சிங் அதில் இணைந்து கொண்டார்.

தோழர்களுக்கு மார்க்சிய வகுப்பு எடுக்க புஜ்ஜா சிங் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது போலீசால் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். புஜ்ஜா சிங்கின் கொலை பஞ்சாப் முழுவதும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அவரது கொலையை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட போதும் அது நடைமுறையில் இழுத்தடித்து காலம் கடத்தி மறக்கச் செய்யும் நடவடிகையாகவே அமைந்தது.

புஜ்ஜா சிங்கைப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், பப்பர் அகாலி அமைப்பை சேர்ந்தவர்களும் நக்சல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றினர். லட்சியவாதம், வீரம், தூய்மை ஆகிய குணங்களில் ஒத்தவர்களாக இருந்த இந்த மூத்த தோழர்களுக்கும், நக்சல் இளைஞர்களுக்கும் ஆழமான தோழமை தோன்றியது. பஞ்சாபில் நக்சல் இயக்கம் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்துகள் நடுவிலும், வறுமையில் வாடும் விவசாயிகள் நடுவிலும் செல்வாக்கு பெற்றிருந்தது. பசுமைப் புரட்சியின் காரணமாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி பெருமளவு பஞ்சாபில் அதிகரித்திருந்தது.

சாருவின் காலத்தில் வர்க்க விரோதிகளை அழித்தொழிக்கும் செயல்திட்டத்தை நிறைவேற்றிய நக்சல்பாரிகள் பின்பு பஞ்சாபிய சமூகத்தையும், விவசாயிகளையும் வாட்டி வதைத்து வந்த அடிப்படை பிரச்சினைகளுக்காக வெளிப்படையான மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கினர். இந்த அமைப்புகள் மிக விரைவில் வளர்ச்சியடைந்து பஞ்சாபில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை வீச்சுடன் நடத்தத் தொடங்கின.
எந்த ரகசியத் தன்மையும் இல்லாமல், ஆயுதப் போராட்ட வழியைக் கைவிட்டு வெளிப்படையாக இயங்கிய நக்சல் அமைப்புகளின் மீது அரசும் அதன் கூலிப்படை
களும் நடத்திய தாக்குதல்களில் சில தலைவர்கள் கொல்லப்பட்டு அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப் பட்டன. நக்சலைட்டுகளைப் பொது அரசியலுக்கு இழுப்
பதற்கு பதில் அந்த இயக்கங்களின் செயல்பாடுகளை இரக்கமின்றி ஒடுக்கிய அரசின் செயல் வேறு விதமாக அதன் தலையிலேயே விடிந்தது.
விவசாயிகளின் அமைப்புகள் நாசமாக்கப்பட்டு விட்டன. ஆனால் அவர்களின் பிரச்சினைகள் தீரவில்லை.

அதைப் பேசவும் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கவும் பஞ்சாபில் ஒருவரும் இல்லாத நிலை தோன்றியது. அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியது.
அந்த வெற்றிடத்தை ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நிரப்பினர். பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினைகளோடு பஞ்சாபி மொழி, சீக்கிய மதம் ஆகியவற்றை இணைத்து தனி நாட்டுக்கான போராட்டத்தை தொடங்கினர் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்.
இந்தியாவில் நக்ஸல்பாரி இயக்கம் வெடிப்பதையும் அது ஒடுக்கப்படுவதையும் பாகிஸ்தான் கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தது. லட்சியவாதிக
ளான நக்ஸலைட்டுகள் பாகிஸ்தான் அரசையும் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அடக்குமுறை அரசு என்றே வகைப்படுத்தியிருந்தனர். இது போன்ற அரசுகளுடன் உறவுகொள்வதை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. சீனாவுடனான நக்சல்பாரி அமைப்புகளின் உறவும் கூட தத்துவார்த்த அடிப்படையிலேயே இருந்தது. பணமோ ஆயுதங்களோ பயிற்சியோ தங்கிடமோ பெறுவதற்காக நக்சலைட்டுகள் ஒருபோதும் சீனாவை நாடியதில்லை.

ஆனால் பிந்தரன்வாலேவையும், அவருடனிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளையும் ஒழிக்க இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு உருவான காலிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதத்தில் தங்கள் தனிநாடு கோரும் போராட்டத்துக்கு பாகிஸ்தானைப் பின்புலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பாகிஸ்தானும் தாராளமாக ஆயுத பண உதவிகளை இந்த காலிஸ்தான் அமைப்புகளுக்குச் செய்தது.

காலிஸ்தான் போராட்டம் இந்திரா காந்தி உட்பட இந்திய ஆளும் வர்க்கங்களில் ஏராளமானவர்களைப் பலிவாங்கியது. டெல்லியும், மற்ற அதிகார மையங்களும் தாக்குதலுக்குள்ளாகின. காங்கிரஸ் தலைவர்களும் அமைச்சர்களும் இரும்புச் சட்டைக்களுக்குள்ளும், கண்ணாடிக் கூண்டுகளுக்குள்ளும் அடைக்கலம் புகுந்தனர். இந்தப் போராட்டம் பஞ்சாப்பையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.
பஞ்சாப் நக்ஸலைட்டுகளில் ஒருபகுதியினர் காலிஸ்தான் போராளிகளாக மாறினர். இன்னொரு பகுதியினர் காலிஸ்தான் எதிர்ப்பாளர்களாயினர். பிந்தரன்வாலே நாத்திகர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியதால் எல்லா கட்சிகளையும் சேர்ந்த சுமார் முன்னூறு கம்யூனிஸ்டுகள் காலிஸ்தான் தீவிரவாதிகளால் பஞ்சாப் முழுவதும் கொல்லப்பட்டனர்.

நட்சத்தர் சிங் ரோடே என்பவர் ஒரு முக்கியமான நக்சல் தலைவராவார். இவர் பிந்தரன்வாலேவின் ஆதரவாளராகி காலிஸ்தான் போராளியாக மாறினார். இந்துத்வ இதழான இந்த் சமாச்சாரின் ஆசிரியர் ஜகத் நாராயணனை சுட்டுக் கொன்றார். இதிலிருந்தே பஞ்சாபில் காலிஸ்தான் போராளிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. ரோடேவைப் போல பல நக்சல்கள் காலிஸ்தான் போராளிகளாக, கிராமப்புறங்கள் போர்க்களங்களாயின.

பாஷ், ஜெய்மால் சிங் போட்டா என்ற இரண்டு நக்சல் தலைவர்கள் காலிஸ்தான் போராளிகளுக்கு எதிரான நிலையெடுத்தனர். இவர்கள் இருவரும் சீக்கியர்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்தவர்கள். அப்பாவி சீக்கியர்கள் ராணுவத்தாலும் போலீசாலும் வேட்டையாடப்படுவதை எதிர்த்து ஓய்வில்லாமல் போராடியவர்கள். அதே நேரம் மதவாத சீக்கிய போராட்டத்தை நோக்கிக் கேள்விகளும் எழுப்பினர். இவர்கள் இருவரும் காலிஸ்தான் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

பஞ்சாப் நக்சலிசமும், காலிஸ்தான் போராட்டமும் வெவ்வேறு விதமானவை என்றாலும் இரண்டுக்கும் ஒற்றுமைகளும் இருந்தன. ரோடே கைது செய்யப்
பட்டவுடன் கொடுத்த வாக்குமூலம் இதைத் தெளிவுபடுத்துகிறது. சிறுவிவசாயியான தான் தனது பொருளாதார பிரச்சினைகளினால்தான் நக்சல்பாரி இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டதாகவும், நக்சல் இயக்கம் ஒடுக்கப்பட்ட பின்பு போராடியே தீர வேண்டிய அரசியல் சூழலில் காலிஸ்தான் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கைது செய்யப்பட்ட பிறகு வாக்குமூலம் அளித்தார். நக்சல் இயக்கம் இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று வரையறுத்திருந்ததால் தான் தனது கொள்கைகளுக்கு எதிராக மாறவில்லை என்றார்.

காலிஸ்தான் போராளிகள் நக்சலைட் அமைப்புகளின் செயல்களை அப்படியே பின்பற்றத் தொடங்கினர். மக்கள்
நீதிமன்றங்களை நடத்தினர். தேர்தல்களைப் புறக்கணித்தனர். தங்கள் மத நம்பிக்கை இடம் கொடுத்தவரை சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசானது மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அவற்றைப் பற்றிப் பேசியவர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் நக்சல்பாரி எழுச்சியை விட பன்மடங்கு உக்கிரமான, பன்னாட்டுத் தன்மை கொண்ட காலிஸ்தான் போராட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. பலியான எண்ணற்ற உயிர்களைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் ஒரு மரணம், கொலை என்பது மரத்திலிருந்து இலை உதிர்வதைப் போன்றது.
குறிப்பு: இக்கட்டுரையில் தமிழ்நாடு தொடர்பான விவரங்களை அறியத் தந்த தோழர்கள் விநாயகம், ஞானம் ஆகியோருக்க மனமார்ந்த அன்பும் நன்றியும். எனது கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளித்த இத்தோழர்களின் விலைமதிப்பற்ற உதவியினாலேயே இக்கட்டுரை சாத்தியமானது.

iramurugavel@gmail.com