ஹவானாவில் பிறந்தவர் டுல்ஸ் மரியா லொய்னாஸ்(Dulce Mariya Loynaz) 1902 – 1997. கியூப இலக்கியத்தின் தலையாய இலக்கியகர்த்தாக்களில் ஒருவர். ஸ்பானிய மொழியில் எழுதியவர். 1953 முதலே பிரசுரமாகிவந்தவர். 1959-இல் கியூபப் புரட்சியின் வெற்றியையொட்டி, கியூபாவில் எழுதுவதையும் பிரசுரிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.

எண்பதைத் தாண்டிய பிராயத்தில், தாய்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றன இவரது கவிதைகள். அவற்றில் பல, மெட்டமைக்கப்பட்டு பாடல்களாக இசைக்கப்பட்டவை.

இந்தத் தேர்வில் உள்ள கவிதைகள் 2016-இல் வெளியான ‘அறுதித் தனிமை’ (Absolute Solitude)தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. இதுகாறும் தமிழ்ச்சூழலில் அறியப்படாத பெயர்; காதல் கவிதைகளின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் என்று பட்டதால், காலத்தால் முந்தியவை என்றாலும் இவற்றை மொழிபெயர்க்க முற்பட்டேன்.

லொய்னாஸின் கவிதைகள் வழக்கமான கவிதை உருவத்தைவிட்டு விலகி, உரைநடையின் வரி அமைப்பைப் பின்பற்றுகின்றன. இதே வரிசையில் முன்பு பிரசுரமான சார்லஸ் சிமிக், ஜேஸன் டானிகுச்சி ஆகியோரின் கவிதைகளும் இதே உருவத்தைக் கொண்டவைதாம். ஆனால், அவர்களுடைய கவிதைகள் அடர்த்தியான அறிவார்த்தப் பின்னணி கொண்டவை. கவிதையின் ஜாலத்தை உரைநடை வழியாகவே நிகழ்த்திக் காட்ட முயல்கின்றவை. லொய்னாஸின் கவிதைகள் பெரும்பாலும் இயல்பான, மென்னுணர்வுக் கவிதைகள். மட்டுப்படுத்தப்பட்ட சொற்களில், கட்டுக்கடங்காத உணர்ச்சி வேகத்தை வாசகருக்குக் கடத்த முனைபவை. நிராசையும் வீரியமும் பிடிவாதமும் கொண்ட காதல் மனத்தின் வெளிப்பாடுகள்.

தமிழ் நவீனக் கவிதையின் ஆரம்ப நாட்களிலிருந்தே, இதேபோன்று உணர்ச்சிவேகம் கொண்ட, உணர்வுச்சத்தை வாசகரிடம் நிகழ்த்த விழைகிற, கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன – அவற்றில் காணக் கிடைக்கும் சொல்விரயமும், மிகையான சுட்டலும், உரத்த தொனியும் லொய்னாஸ் கவிதைகளை வாசிக்கும்போது இன்னும் அபத்தமாய் நிரடுகின்றன. இவை தமக்கேயுரிய பிரத்தியேக தர்க்கத்தின்வழி நகர்பவை – ‘கூழாங்கல்’ கவிதையை இதற்கான நேரடி வாக்குமூலமாகக் கொள்ளலாம். மென் தருணங்களைச் சித்தரிக்கும் இக் கவிதைகளின் மொழி பாவனையற்றது. அழுத்தமும் ஆழமுமான உள்மடிப்புகளைக் கொண்டது.

என் துயரங்களின் ஆழமான பள்ளத்தாக்கில்’ என்று தொடங்கும் கவிதை, காதலின் விவரிப்பாய் நகர்ந்து நகர்ந்து சென்று, கடைசிப் பத்தியில் எத்தனை மூர்க்கமாக வேறு துருவத்துக்குப் பெயர்கிறது! ஆச்சரியம் தரும் கவிதை இவற்றின் இன்னொரு சிறப்பம்சமாக நான் உணர்வது, ஆண்-பெண் உறவின் நுட்பமான தருணங்களைப் பதிவு செய்யும் கவிதைகள் சிலவற்றில், கவிதைசொல்லி ஆணா பெண்ணா என்ற குறிப்பும்கூட இல்லாதிருப்பது. இதன் காரணமாக உறவின் நொய்மையை அல்லது அந்தரங்கத்தை அல்லது ஏக்கத்தை அல்லது ஆற்றாமையை மட்டுமே கவனப்படுத்துகிறது; ஒரு தத்துவார்த்தமான வாசிப்புக்கு, மனிதார்த்தம் X இறைமை என்றுகூட நீட்டித்துப் பார்க்கும் வாய்ப்பை நல்குகிறது.
பெயரற்ற பிரம்மாண்டத்தின் முன்னிலையில் தன்னைச் சிறு துகளாக உணர்ந்து புலம்பும் மனம், ஆனாலும் தனது இருப்பு தனித்துவமானது; தனக்கு மட்டுமே சொந்தமானது என்று அழுத்திச் சொல்கிறது…

1
அந்தப் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால், திறக்கும் ஒவ்வொரு விண்மீனிலும், இறக்கும் ஒவ்வொரு ரோஜாவிலும் இருக்கிறது அது.
அந்தப் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால், வைகறையை வரவேற்கும் புல்வெளிப் பாடும்பறவை அதைச் சொல்கிறது; இரவுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது நைட்டிங்கேல் சொல்கிறது.
நான் அதை சொல்ல மாட்டேன். ஒருவேளை சொல்லிவிட்டால், என் நெஞ்சுக்குள் நைட்டிங்கேல்கள் சிறகடிக்கும்; வாயில் விண்மீன்களின் சுகந்தம் இருக்கும்; உலகில் புதிய ரோஜாக்கள் மலரும்.
2
என் துயரங்களின் ஆழமான பள்ளத்தாக்கில், மௌனமான, எளிதில் சமாதானமுறாத பொற்தூண் போல நிற்கிறாய்.
சூரியனிலிருந்து இறங்கிவந்தவன் நீ. கறுத்தவன். தீர்க்கமானவன். அடர்வனத்தின் பிசின்போல மணப்பவன்.
மெருகேற்றப்பட்ட உனது தசை, வெதுவெதுப்பான கேசத்தின் மணம் சுமந்திருக்கிறது ஒளி. இருண்டும், உஷ்ணமாகவும் இருக்கும் உனது வாய், இப்போதுதான் காற்று ஊதி அணைத்த தழல்போல இருக்கிறது.
சூரிய வம்சத்தவனே, தசைவலு கொண்ட உன் கரங்களால் என்னை அடக்கியாள்வாயாக. இளமையான, மூர்க்கமான மிருகப் பற்களால் என்னைக் கடிப்பாயாக. என் கைகளிலுள்ள துயரத்தைக் கிழித்தெடு. என் கர்வத்தைப் பறித்தெடு. அவற்றைப் புழுதியில் எறி. உனது கொடுங்கோன்மைப் பாதங்களால் அவற்றை நசுக்கித் தள்ளு.
பிறகு, எனக்கு இன்னமுமே தெரியாத ஒன்றை முழுமையாய்ச் சொல்லிக்கொடு. உன் கூர்நகங்களின் பிடியில் வாழவும் சாகவும் எனக்குக் கற்றுக்கொடு.
3
ஆக இருண்டதிலிருந்தும், ஆகப் பிரகாசமானதிலிருந்தும் சுதந்திரமாய் உன்னால் பொறுக்கியெடுக்க முடியுமானால், அபூர்வமான உலோகத்தை நிஜமான ஆபரணமாக வடிக்கும் பொற்கொல்லனின் நடுங்கும் விரல்களுடன் அவற்றைக் கையிலெடுக்க முடியுமானால், கிணற்றில் விழுந்த உதிர்ந்த நட்சத்திரங்கள்போலச் சேந்தியெடுக்க முடியுமானால், வாள்போலக் கூராக்கவும், பட்டுபோல நெய்யவும் உன்னால் முடியுமானால், உனது நிலத்திலிருந்து கோதுமையைப்போல, இருப்பவை அனைத்திலுமிருந்து, தயார் செய்ய முடியுமானால், உமியை அகற்றி உண்டு தீர்க்க முடியுமானால்… அப்போதும்கூட, இங்கிருக்கும் நிசப்தத்தை நிரப்பும் சொற்கள் உன்னிடமிருக்கப் போவதில்லை.
4

கூழாங்கல் கூழாங்கல்தான்; நட்சத்திரம் நட்சத்திரம்தான். ஆனால் கூழாங்கல்லை என் கையில் எடுக்கும்போது, அதைப் பிதுக்கும்போது, தரையில் வீசியெறியும்போது, மீண்டும் எடுத்துக்கொள்ளும்போது, என் விரல்களுக்கிடையில் முன்னும் பின்னும் உருட்டும்போது…
விண்மீன் விண்மீனேதான்; ஆனால், கூழாங்கல் என்னுடையது. அப்புறம், நான் அதை நேசிக்கிறேன்!
5
உன் பெயரை நான் உச்சரித்ததேயில்லை; ஆனாலும், எனக்குள் இருக்கிறாய் – வானம்பாடி பாடாமல் இருக்கும்போதும் அதன் தொண்டைக்குள் இருக்கும் பாடலைப் போல.
6
எம் பிதாவே, என்னிடமிருக்கும் சகலத்துக்காகவும் என்னை மன்னிப்பீராக. உமக்கு எட்டிவிடாதபடி நான் அழுத்தி வைத்திருக்கும் சகலத்துக்காகவும்.
நானே உம்மைச் சேர்ந்த பொருள்தான் என்றாலும், எல்லாவற்றையும் உம்மிடமிருந்து காத்து வைத்திருக்கிறேன். எனக்குள் நான் அழிக்கிற, கட்டுப்படுத்தியிருக்கிற, வென்று தீர்க்கிற அனைத்துக்காகவும் என்னை மன்னிப்பீராக.
ஏழு பூட்டுகளால் என் ஆன்மாவைப் பூட்டி வைத்திருப்பதற்காக; நீர் கதவைத் தட்டும்போது திறக்காதிருப்பதற்காக என்னை மன்னிப்பீராக. என் உடம்பைத் தோற்கடித்ததற்காக, உமக்கு எட்டாதபடி அதை ஒரு சுவரில் அறைந்து வைத்திருப்பதற்காக என்னை மன்னிப்பீராக. என் உடலின்மீதும் ஆன்மாவின்மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காக, உம்மைவிட அதிக வல்லமையுடன் இருப்பதற்காக, ஏன் என்னைவிடவுமே அதிக வல்லமையுடன் இருப்பதற்காக என்னை மன்னிப்பீராக.
இவ்வளவு உறுதியாய் இருப்பதற்காக என்னை மன்னிப்பீராக. இத்தனை உறுதியை நான் விரும்பியதேயில்லை. ஆனால், இப்படித்தான் இருக்கிறேன். இப்படித்தான் இருப்பேன்.
ஜேக்கப் ஓர் இரவு முழுவதும் ஒரு தேவதையுடன் மல்லுக்கட்டினான். ஆனால், நான் அவனுடன் என் ஆயுள்முழுவதும் மல்லாடியிருக்கிறேன். இருந்தாலும், என் பாதத்தடியில் குருதி கசியும் தேவதையின் முகத்தை இன்னும் நான் பார்த்ததில்லை.
7
இவை என் சந்தோஷங்கள். இவற்றைக் கணக்கெடுத்து வைத்திருக்கிறேன். இருந்த இடத்திலேயே அத்தனையும் இருக்கின்றன என்று நம்புகிறேன். நீ எடுத்துக்கொள். உனது இரவுகளில் அவற்றைப் பாடு. உன் சமுத்திரங்களில் வீசி எறி. உன் உதடுகளில் அவை சாகட்டும்.
இவை என் துயரங்கள். என்னால் கணக்கெடுக்க முடியாதவை. ஆனால், என்னை விசுவாசமாய்த் தொடர்கின்றன என்பதை அறிவேன். நீ எடுத்துக்கொள். இவை உன் நிலத்துக்கு உரமாகட்டும். உன் ரொட்டியை நொதிக்க வைக்கட்டும். உன் கணப்பை ஊதி விசிறட்டும்.
இதுதான் நான். எனது இருளுடன் ஒன்றியிருக்கிறேன். முழுமையாய் இருக்கிறேன். அப்புறம், உன் இதயத்தில் என்னைக் கிடத்திக்கொள். நான் எடை குறைந்து இருப்பதால்; வேறு தலையணையோ வேறொரு கனவோ என்னிடம் இல்லாததால்.