And if he left off dreaming about you….
Through the Looking-Glass, IV

எங்கும் வியாபித்திருந்த இரவுக்குள் அவன் கரையேறி வந்ததை யாரும் பார்க்கவில்லை, மூங்கில் மரக்கலம் புனிதச்சேற்றில் தரைதட்டி நின்றதையும் யாரும் பார்க்கவில்லை, ஆனால் ஓர் அமைதியான மனிதன் தெற்கிலிருந்து வந்திருப்பதையும் மலைகளின் ஆழச்சரிவுகளுக்கு எதிர்த்திசையில் நதிக்கரைக்கு மேலே அமைந்திருந்த எண்ணற்ற கிராமங்களுள் – அங்கு பேசப்படும் ஜெண்ட் மொழி கிரேக்மொழியால் சற்றும் பாதிக்கப்படவில்லை என்பதோடு தொழுநோயாளிகளும் அரிதாகவே இருந்தனர் – அவனது வீடு இருந்ததென்பதையும் சில நாட்களுக்குள்ளாகவே அறிந்திராதவர் யாருமில்லை என்றானது. உண்மை யாதெனில் அந்தப் பழுப்புநிற மனிதன் தனது உதடுகளால் சேற்றை முத்தமிட்டான், அவனது சதையைக் கிழித்த திரளான முட்புதர்களை விலக்காமல் (அனேகமாக எதையும் உணராமல்) கரையின் மீது தட்டுத்தடுமாறி ஏறினான். ஒரு காலத்தில் நெருப்பின் நிறமாயிருந்து தற்போது சாம்பல் நிறத்திலிருந்த,

கல்லால் ஆன புலி அல்லது குதிரையால் கண்காணிக்கப்பட்ட ஒரு வட்டமான திறந்த வெளியை நோக்கி, மயக்கத்தோடும் ரத்தக்கசிவோடும், தன்னை அவன் இழுத்துச் சென்றான். அந்த இடமென்பது பல காலங்களுக்கு முன்பாக தீப்பிழம்புகளால் அழிக்கப்பட்ட ஒரு கோயில், பிற்பாடு சதுப்புநிலக்காடுகள் அதன் புனிதத்துவத்தைச் சிதைத்திருக்க, அதன் கடவுளுக்கு மனிதர்களின் வழிபாடுகளும் தற்போது கிடைப்பதில்லை. அந்தப் பிரதிமையின் பாதத்துக்குக் கீழே அந்நியன் படுத்துக்கொண்டான்.

உயரத்தில் தலைக்குமேல் தகித்த சூரியனால் எழுப்பப்பட்டு, அவன் கவனித்தான் – எப்படியோ எவ்வித வியப்புமின்றி – அவனுடைய காயங்கள் குணமாகியிருந்தன. வெளிறிய கண்களை மூடி அவன் மீண்டும் உறங்கினான், சோர்வின் காரணமாக அல்ல. மாறாக, அதை அவன் விரும்பியதால். நெறிவழுவாத தனது லட்சியத்துக்குத் தேவையான இடம் இந்தக் கோயில் தான் என்பது அவனுக்குத் தெரியும்; கீழ் நதிப்புறத்தில், நெருப்பால் சூறையாடப்பட்ட, இறந்துபோன தங்களின் சொந்தக் கடவுள்களைக் கொண்ட மற்றொரு அற்புதமான கோயிலின் இடிபாடுகளைக் கட்டுக்கடங்காமல் அங்கு வளர்ந்திருந்த மரங்களால் கூட மூழ்கடிக்க முடியாததும் அவனுக்குத் தெரியும்; தனது முதல் கடமை உறங்குவதுதான் என்பதும் அவனுக்குத் தெரியும். நள்ளிரவை நெருங்கும் பொழுதில், ஒரு பறவையின் துயரம் ததும்பும் அலறலால் அவன் விழித்துக்கொண்டான். காலடித்தடங்கள், சில அத்திப்பழங்கள், ஒரு தண்ணீர்க்குடுவை, இவை யாவும் அருகாமையில் வசித்த மனிதர்கள்
அவன் உறங்குவதை ஒருவித பயபக்தியோடு பார்த்து விட்டு – அவனுடைய பாதுகாப்பைக் கோரியோ அல்லது அவனது மந்திரசக்திக்கு அஞ்சியோ – அங்கு வந்து சென்றிருப்பதைத் தெரிவித்தன. தனக்குள் அச்சத்தின் சில்லிப்பை அவன் உணர்ந்தான், நொறுங்கிக்கிடந்த சுவர்களுக்கு நடுவில் ஒரு மாடக்குழியைத் தேடி, அதற்குள் அவன் அதுவரைக்கும் பார்த்திராத இலைகளைக் கொண்டு தன்னை மூடிக்கொண்டான்.

அவனை வழிநடத்திய நோக்கம், இயற்கையை மீறியதாக இருந்தாலும், அது சாத்தியமற்ற ஒன்றல்ல. அவன் ஒரு மனிதனைக் கனவு காண விரும்பினான்; அந்த மனிதனைப் பற்றிய கடைசி நுணுக்கமான தகவல் வரைக்கும் பூரணமாகக் கனவு கண்டு, யதார்த்த உலகத்திற்குள் அவனை விழித்தெழச்செய்ய விரும்பினான். இந்த மர்மமான குறிக்கோள் அவனுடைய மனதின் மொத்தவீச்சையும் திணறடித்தது. எவரும் அவனிடம் அவனது சொந்தப்பெயரையோ அல்லது அதற்கு முந்தைய அவனுடைய வாழ்க்கை பற்றியோ எதையாவது கேட்டிருந்தால், அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றும் அவனுக்குத் தெரிந்திருக்காது. மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் சங்கதிகளை வெகுகுறைவாகவே கொண்டிருந்ததால் இந்தக் கைவிடப்பட்ட, சிதிலமுற்ற கோயில் அவனுக்கு உகந்ததாக இருந்தது. மேலும் ஏனென்றால் அவனது சொற்பத்தேவைகளை அருகாமை கிராமத்தார்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதாலும். அவர்களின் காணிக்கையாக வந்த சோறும் பழங்களும் அவனுடைய உடலுக்குப் போதுமான ஊட்டத்தினை வழங்கின, ஆகவே உறங்கிக் கனவு காண்பது மட்டுமே அவனது ஒரே பணியாக இருந்தது.

ஆரம்பத்தில், அவனுடைய கனவுகள் மிகக்குழப்பமானதாக இருந்தன; பிற்பாடு, அவை தர்க்கமுறைமைகளின்படி அமைந்தன. ஒரு வட்டவடிவப் போட்டி அரங்கின் மத்தியில் தான் இருப்பதாக அந்த அந்நியன் கனவுகண்டான். ஏதோவொரு வகையில் அதுவே எரிந்து போன கோயிலாகவுமிருந்தது. மௌனமான சீடர்களின் கூட்டம் இருக்கைகளின் அடுக்குகளை அங்கு நிறைத்திருந்தது; அவர்களுள் மறுகோடியில் தொலைவிலிருந்தவர்களின் முகங்கள் அவனிடமிருந்து பற்பல நூற்றாண்டுகள் தூரத்தில் நட்சத்திரங்களின் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன, ஆனாலும் அவர்களின் தோற்றக்கூறுகள் தெளிவாகவும் கச்சிதமாகவும் இருந்தன. உடற்கூறு அமைப்பியல், பிரபஞ்ச
வியல் மற்றும் மாந்திரீகம் ஆகியவை குறித்து அந்த மனிதன் உரையாற்றினான். முகங்கள் உற்றுக்கவனித்தன, பிரகாசமாகவும் ஆர்வத்தோடும், தங்களால் இயன்ற மட்டும் அறிவுபூர்வமாகப் பதிலளிக்க முயற்சித்தன. ஏதோ அவனுடைய கேள்விகளின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தாற்போல, ஏனெனில் அவர்களுள் ஒருவனை மாயநிழல் எனும் இருப்பிலிருந்து வெளியேற்றி அவை நிஜவுலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். உறங்கினானோ அல்லது விழித்திருந்தானோ, மோசடியாளர்களால் தான் தவறாக வழிநடத்தப்படுவதை அனுமதிக்காமல் தனது மாயத்தோற்றங்களின் பதில்களை அம்மனிதன் தீர ஆராய்ந்தான். அவர்களின் ஒருவிதக் குழப்பநிலைகளில் கூட ஒரு வளரும் அறிவுத்திறனை அவன் கண்டுணர்ந்தான். நிஜவுலகில் இடம்பிடிக்கத் தகுதியான ஓர் ஆன்மாவை அவன் தேடிக் கொண்டிருந்தான்.
ஒன்பது அல்லது பத்து இரவுகளுக்குப் பிறகு, சிறிய கசப்போடு, தனது பாடங்களை எவ்விதச் சலனமுமின்றி ஏற்றுக்கொண்ட மாணவர்களிடமிருந்து தான் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும், ஆனால் அவ்வப்போது குறிப்பிடும்படியான சந்தேகங்களின் வழியே தனது பாடங்களோடு முரண்பட்டவர்களிடம் மட்டுமே நம்பிக்கை வைக்கலாம் என்பதையும், அவன் உணர்ந்து கொண்டான். முந்தைய வகையினர், அன்புக்கும் அக்கறைக்கும் தகுதியானவர்களாக இருந்தாலும், ஒருபோதும் நிஜமானவர்களாக முடியாது; பிந்தைய வகையினர், அவர்களுக்கான தெளிவற்ற வகையில், ஏற்கனவே நிஜமாகியிருந்தனர். ஒரு மாலையில் (இப்போது அவனது மாலைப்பொழுதுகளும் உறக்கத்துக்குத் தரப்பட்டிருந்ததால் விடியற்காலையில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அவன் விழித்திருந்தான்) தன்னுடைய பிரம்மாண்டமான கனவுப்பள்ளியை நிரந்தரமாக நிராகரித்துவிட்டு ஒரேயொரு சீடனை மட்டும் வைத்துக்கொண்டான். அவன் அமைதியானவனாகவும், நோய்மையானவனாகவும், சில சமயங்களில் கீழ்ப்படியாதவனாகவும் இருந்த ஓர் இளைஞன். தன்னைக் கனவு காண்கிறவனை ஒத்தக் கூர்மையான தோற்றக்கூறுகளை அவன் கொண்டிருந்தான். தன்னுடைய சக மாணவர்கள் சட்டென்று காணாமல் போன சங்கதி அவனை வெகுகாலம் தொந்தரவு செய்யவில்லை. மேலும் சில தனிப்பட்ட பாடங்களின் இறுதியில் காணக்கிடைத்த அவனது முன்னேற்றம், அவன் ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வாறாகிலும், ஒரு பேரழிவு குறுக்கிட்டது. ஒருநாள், பிசுபிசுப்பான தரிசுநிலத்தில் இருந்து வெளிவருவதுபோல அம்மனிதன் தனது உறக்கத்திலிருந்து வெளியேறி, வெளிர்ந்த மாலைநேர ஒளியை உற்றுப்பார்த்தான், முதலில் அவன் அதனை விடியலோடு குழப்பிக்கொண்டான், பிறகு தான் கனவு காணவில்லை என்பதை உணர்ந்தான். அன்றிரவு முழுக்கவும் மறுநாளும் கூட, உறக்கமின்மையின் தாங்கவொண்ணாத் தெளிவு அவனைப் பெரும்பாரமென அழுத்தியது. தன்னைக் களைப்படையச் செய்வதற்காக சுற்றிலுமிருந்த காட்டை அவன் ஆராய முயன்றான். ஆனால் அவனால் இயன்றதெல்லாம், அங்கு ஹெம்லாக் புதர்ச்செடிகளுக்கு நடுவே, தொடர்ச்சியற்ற உடைந்த உறக்கங்களைக் கைப்பற்ற முடிந்ததுதான். அவையும் கூட குரூரத்தையும் அர்த்தமற்றதன்மையையும் இயல்பாகக் கொண்டிருந்த நொடிநேரக் கனவுகளால் தீற்றப்பட்டிருந்தன. தனது பள்ளியை அவன் மீண்டும் ஒன்றிணைக்க முயன்றான். ஒருசில சுருக்கமான அறிவுரைகளை அவன் கூறி முடிக்குமுன்பாகவே ஒட்டுமொத்த வகுப்பும் உருத்திரிந்து மறைந்து போனது. அவனுடைய ஏறத்தாழ முடிவேயில்லாத விழிப்புநிலையில், கோபத்தின் கண்ணீர்த்துளிகள் அவனது முதிய கண்களைக் குத்திக் கிழித்தன.

உயர்வானதும் தாழ்வானதுமான ஒழுங்குகளில் அமைந்த சகல புதிர்களையும் தான் ஊடுருவினாலும், கனவுகளின் அர்த்தமற்ற, தலைசுற்றச்செய்யும் உட்பொதிவுகளுக்கு வடிவம் தரும் காரியம்தான் ஒரு மனிதன் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளிலேயே மிகவும் சிரமமானது என்பதை அவன் உணர்ந்தான் – மணலால் ஒரு கயிற்றைத் திரிப்பதை விடவும் அல்லது முகமற்ற காற்றினை உருவாக்குவதை விடவும் மிகக்கடினமானது. தொடக்கநிலை தோல்வியைத் தவிர்க்கவியலாது என்பதையும் அவன் புரிந்து கொண்டான். ஆரம்பத்தில் தன்னைத் தவறாக வழிநடத்திய அளப்பரிய கனவு தரிசனத்தை மறப்பேன் எனச் சூளுரைத்தான். பிறகு வேறொரு முறைமையைத் தேர்ந்தெடுத்தான். அதை முயற்சிப்பதற்கு முன்னால், அவனுடைய காய்ச்சல் விழுங்கிக்கொண்ட உடல்வலுவை மீட்க ஒரு மாதம் செலவழித்தான். கனவுகாண்பது குறித்த அத்தனை எண்ணங்களையும் கைவிட்டு, திடுமென்று, ஒருநாளின் பெரும்பாலான நேரத்தை உறங்கிக் கழித்தான். இந்தக் காலகட்டத்தில் சிலமுறை அவனுக்குக் கனவுகள் வந்தபோதும் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தனது காரியத்தை மீண்டும் கைக்கொள்வதற்கு முன்பு, நிலவு ஒரு பூரண வட்டமாக மாறும்வரைக்கும் அவன் காத்திருந்தான். பிறகு, மாலையில், ஆற்றுநீரில் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, கிரகங்களின் கடவுளர்களை வணங்கி, சகல-வல்லமை கொண்ட பெயரொன்றின் அறுதியிட்ட அசைகளை உச்சரித்து, உறங்கிப்போனான். திடுமென்று, துடிக்கும் இதயம் ஒன்றைக் கனவு கண்டான்.

அது துடிதுடிப்புடனும், கதகதப்புடனும், ரகசியமானதாகவும் இருந்ததாக அவன் கனவு கண்டான். ஒரு மூடிய முஷ்டியின் அளவில் அது இருந்தது, ரத்தச்சிவப்பில், இன்னும் முகமோ அல்லது பாலினவேறுபாடோ உருவாகியிராத தெளிவற்ற ஒரு மனிதவுடலில். பதற்றம் நிறைந்த அன்போடு பதினான்கு தெளிந்த இரவுகளுக்கு அவன் அதனைக் கனவு கண்டான். ஒவ்வொரு இரவும் இன்னும் அதிக துல்லியத்தோடு அதை அவன் அனுமானித்தான். அதை அவன் தீண்டவில்லை. ஆனால் அதை உறுதி செய்வதற்கும், கூர்ந்து ஆராய்வதற்கும், அவ்வப்போது ஒரு பார்வையினால் அதைச் சீராக்கவும் மட்டும் தன்னை அனுமதித்தான். தனக்குள் அதை உணர்ந்தான், பல தொலைவுகளில் இருந்தும் பல்வேறு கோணங்களிலும் அதனோடு அவன் வாழ்ந்தான். பதினான்காம் இரவில் நுரையீரலுக்குப் போகும் தமனியை ஒரு விரலால் அவன் தொட்டான், பிறகு ஒட்டுமொத்த இதயத்தையும், உள்ளும் புறமாகவும். அந்தப் பரிசோதனை அவனுக்குத் திருப்தியளித்தது. ஓரிரவு மட்டும் அவன் தெரிந்தே கனவு காணவில்லை; அதன் பிறகு அவன் மீண்டும் இதயத்திடம் திரும்பிச் சென்றான், ஒரு கிரகத்தின் பெயரை வழிபட்டு வரவழைத்து, பிரதான உறுப்புகளில் இன்னொன்றை கற்பனை செய்ய ஆரம்பித்தான். ஒரு வருடம் முடிவதற்கு முன்னால் அவன் எலும்புக்கூடு மற்றும் கண்ணிமைகளுக்கு வந்து சேர்ந்திருந்தான். எண்ணற்ற கேசக்கற்றைகளே அனைத்தையும் விடக் கடினமான காரியமாயிருந்தன. ஒரு முழுமையான மனிதனை, ஓர் இளைஞனை, அவன் கனவு கண்டான். ஆனால் அந்த இளைஞனால் எழுந்து அமர, பேச அல்லது கண்களைத் திறக்க முடியவில்லை. ஒவ்வொரு இரவும் அம்மனிதன் அந்த இளைஞனை உறக்கநிலையில் கனவு கண்டான்.

மறையியல் கோட்பாட்டாளர்களின் பேரண்டத் தோற்றவியலில் (Cosmogonies), தனது சொந்தக் காலில் நிற்கமுடியாத ஆதாமை படைப்புக் கடவுளர்கள் (Demiurges) வார்த்தெடுக்கிறார்கள்; அலங்கோலமான, பக்குவமற்ற, முழுமையுறாத அந்தப் புழுதியால் ஆன ஆதாம் போலவே மந்திரவாதியின் இரவுகளால் உருவாக்கப்பட்ட கனவுகளில் ஆதாமும் இருந்தான். ஒரு மாலையில் தன்னுடைய படைப்பு மொத்தத்தையும் அழித்து விடும் நிலைக்கு அம்மனிதன் வந்தான் (அவ்வாறு அவன் செய்திருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்). ஆனால் இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பூமி மற்றும் நதியின் கடவுள் களுக்காகத் தன்னுடைய பிரார்த்தனைகள் யாவையும்
தீர்த்துவிட்டநிலையில், ஒரு புலியாக அல்லது பொலி குதிரையாக இருந்திருக்கக்கூடிய கல் பிரதிமையின் காலடியில் சென்று வீழ்ந்து, அதன் நிபந்தனையற்ற உதவியை வேண்டினான். அதே மாலையில் அவன் பிரதிமையைக் கனவில் பார்த்தான். உயிர்ப்போடும் துடிதுடிப்போடும் அது இருப்பதைக் கனவு கண்டான்; அது புலிக்கும் பொலிகுதிரைக்கும் இடையிலான இயற்கைக்குமீறிய கலப்பினச் சேர்க்கையாக இருக்கவில்லை.
மாறாக ஒரே சமயத்தில் இவ்விரண்டு கொடூரமான மிருகங்களோடு, ஓர் எருது, ஒரு ரோஜா மற்றும் ஒரு இடி மின்புயலின் கலவையாக இருந்தது. இந்த எண்ணிறந்த கடவுள் பூமிசார்ந்து தனது பெயர் நெருப்பு என்பதை அவனிடம் வெளிப்படுத்தியது, அங்கு வட்டக்கோயிலில் (மேலும் அதுபோன்ற பிறவற்றிலும்) ஒருகாலத்தில் அதற்குப் பலிகள் தரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாகவும், அந்த மனிதனின் கனவுகளில் இருந்த ஆவிரூபம் அதன் மந்திரசக்தியால் உயிர்ப்பிக்கப்படும் எனவும் சொன்னது, அதுவும் எவ்விதமென்றால் – நெருப்பையும் கனவுகாண்பவனையும் தவிர – உலகின் சகல உயிர்களும் அவனை ஒரு ரத்தமும் சதையுமான மனிதனாக ஏற்றுக்கொள்ளும் வகையில். தனக்கான சடங்குகளை அறிவுறுத்தப்பட்ட பிறகு, கீழ் நதிப்புறத்தில் அமைந்த மற்ற சிதிலமடைந்த கோயிலுக்கு – அதன் பிரமிடுகள் இன்னும் தப்பிப் பிழைத்திருந்தன – அந்தச் சீடன் அனுப்பப்படவேண்டும் என நெருப்புக் கடவுள் ஆணையிட்டது. அவ்விதமாக, கைவிடப்பிட்ட அந்த இடத்தில் ஏதோவொரு மனிதக்குரல் அதனைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தும். கனவு காண்பவனின் கனவில், கனவு காணப்பட்டவன் விழித்தெழுந்தான்.

மந்திரவாதி இந்தக் கட்டளைகளை நிறைவேற்றினான். தன்னுடைய அடிப்படை மெய்ம்மையான அந்த மாணாக்கனுக்கு பிரபஞ்சத்தின் புதிர்களையும் நெருப்பை வழிபடுவதையும் பழக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை (இறுதியில் அது இரண்டு ஆண்டுகள்
என்றானது) அவன் செலவழித்தான். மனதின் உள் ஆழத்தில், தான் உண்டாக்கிய உயிரிக்கு விடைதருவதென்பது அவனுக்கு மிகுந்த வலியைத்தந்தது.

அவனுக்கு இன்னும் முழுமையாகச் சொல்லித்தருகிற சாக்கில், ஒவ்வொரு நாளும் உறக்கத்திற்கென ஒதுக்கப்
பட்ட நேரங்களை அவன் நீட்டித்தான். கூடவே, ஏதோவொரு வகையில் குறைபாடுடையதாகத் தோன்றிய வலதுதோளையும் அவன் மாற்றியமைத்தான். அவ்வப்போது, இதெல்லாம் ஏற்கனவே நடந்தது என்பதான உணர்வால் மந்திரவாதி அலைக்கழிக்கப்பட்டான். என்றாலும், அவனுடைய நாட்களின் பெரும்பாலான பகுதிகள் மகிழ்ச்சியாகவே கழிந்தன. கண்களை மூடும் நேரங்களில் அவன் எண்ணிக்கொள்வான், “இனி
நான் என் மகனுடன் இருப்பேன்.” அல்லது, எப்போதாவது, “நான் ஈன்றெடுத்த மகன் எனக்காகக் காத்திருக்கிறான், அவனிடம் நான் போகாவிட்டால் அவன் உயிர்த்திருக்கமாட்டான்.” மெல்ல மெல்ல, அந்த இளைஞனை அவன் யதார்த்தத்துக்குப் பழக்கினான். ஒரு சமயம், தொலைதூரச் சிகரத்தில் ஒரு கொடியை நாட்டும்படி இளைஞனுக்கு அவன் ஆணையிட்டான். மறுநாள், அங்கு சிகரத்தில், செந்தீவண்ணத்தில் ஒரு கொடி ஒளிர்ந்தது. இதேபோன்ற மற்ற பயிற்சிகளையும் முயற்சித்தான். ஒவ்வொன்றும் அதற்கு முன்பிருந்ததை விடக் கடினமானதாக இருந்தன. தன் மகன் பிறக்கத் தயாராகி, அனேகமாகப் பொறுமையிழந்தவனாக இருக்கிறான் என்பதை, ஒருவிதக் கசப்புணர்வோடு அவன் உணர்ந்தான். அன்றிரவு அவனை முதன்முறை முத்தமிட்டு நதியின் கீழ்க்கோடியில் மற்ற கோயிலுக்கு அனுப்பிவைத்தான். யாரும் ஊடுருவ இயலாத கானகம் மற்றும் சதுப்புநிலங்களின் பற்பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் அந்தக்கோயிலின் வெண்ணிறச் சிதிலங்களை இன்னும் பார்க்க முடிந்தது. கட்டக்கடைசியில் (ஆக தான் ஒரு ஆவிரூபம் என்பதை அந்தப் பையன் என்றும் அறியாதிருக்கவும், மற்ற எல்லா மனிதர்களைப் போலவே தானும் ஒரு மனிதன்தான் என எண்ணும்படியும்) அவனது நீண்ட பயிற்சிக்கால வருடங்களை அவனுடைய மனதிலிருந்து முழுமுற்றாக மறந்துபோகச் செய்தான் மந்திரவாதி.

அவனது வெற்றியும் நிம்மதியும் ஒரு சிறிய அயர்ச்சியினால் ஒளிகுன்றிப் போயின. காலையிலும் மாலையிலும் நிலவும் அரையிருளுக்குள், கல் பிரதிமைக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக அவன் விழுந்து வழிபடுவான். அனேகமாய், தனது மாய மகனும் கீழ் நதிப்புறத்தின் மற்ற வட்டச் சிதிலங்களுக்கு மத்தியில் இதே சடங்குகளைச் செய்து கொண்டிருப்பான் எனக் கற்பனை செய்பவனாக. இரவில் அதன்பிறகும் அவன் கனவு காணவில்லை அல்லது எல்லா மனிதர்களும் கனவு காண்பதைப் போலவே அவனும் கனவு கண்டான். ஒருவிதத் தெளிவின்மையுடன் உலகத்தின் ஒலிகளையும் வடிவங்களையும் அவன் தற்போது கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான், ஏனென்றால் மங்கிக்கொண்டு வந்த மந்திரவாதியின் பிரக்ஞையிலிருந்தே தனக்கான ஆற்றலை அங்கு இல்லாத அவன் மகன் பெற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது; ஒருவிதப் பரவசநிலையில் அவன் வாழ்ந்து வந்தான்.

நீண்ட காலத்துக்குப் பிறகு – ஒருசில கதைசொல்லிகள் வருடங்களிலும் மற்றவர்கள் பாதி-பத்து வருடங்களாகவும் அதைக் குறிப்பிடுகிறார்கள் – ஒரு நள்ளிரவில் இரண்டு படகோட்டிகளால் அவன் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டான். அவர்களுடைய முகங்களை அவனால் பார்க்க முடியவில்லை, ஆனால் தொலைவில் வடக்குப்பகுதியில் ஒரு கோயிலில் தீக்கிரையாகாமல் நெருப்பின்மீது நடக்கும் மாயமனிதனைப் பற்றி அவனிடம் அவர்கள் சொன்னார்கள். மந்திரவாதி சட்டென்று கடவுளின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான். உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளிலும், அவன் மகன் ஒரு மாயரூபம் என்றறிந்தது நெருப்பு மட்டும்தான் என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது. இந்த நினைவுகூரல், ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும், இறுதியில் அவனை வதைக்கத் தொடங்கியது. இந்த வினோதமான சலுகையை எண்ணி அவன் மகன் தீர யோசித்து, ஏதேனும் ஒருவகையில் தனது நிலையென்பது வெற்றுத்தோற்றமே என்பதைக் கண்டுபிடித்து விடுவானோ என மந்திரவாதி அஞ்சினான். உண்மையான மனிதனாக அல்லாமல் மற்றொரு மனிதனுடைய கனவுகளின் வெளியுருவாக இருப்பது – என்ன
வொரு இணையற்ற அவமானம், எத்தனை பைத்தியக்காரத்தனம்! குழப்பமோ அல்லது மகிழ்ச்சியோ மிகுந்த ஒரு தருணத்தில் தான் தோற்றுவித்த குழந்தையைப் பற்றி எந்தத் தகப்பனும் – அதற்கு அவன் அனுமதித்திருக்கிறான் என்பதால் – அக்கறை கொள்ளவே செய்வான். ஆக, ஆயிரத்தொரு ரகசிய இரவுகளில் ஒவ்வொரு அங்கமாக ஒவ்வொரு குணாம்சமாக யோசித்து தான் உருவாக்கிய மகனின் எதிர்காலத்தை எண்ணி மந்திரவாதி அச்சம் கொண்டான் எனும்போது, அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் பதற்றங்களின் முடிவு திடீரென்று வந்தது, ஆனால் ஒருசில சமிக்ஞைகள் அதனை முன்னறிவித்தன. முதலில் (நீண்ட வறட்சிக்குப் பிறகு) மலையுச்சியின் மீது தோன்றிய தொலைதூர மேகம், பறவை போல மெலிதான உடலோடு; அடுத்ததாக, தெற்குத்திசை நோக்கிய
வானம், சிறுத்தையின் ஈறுகளை ஒத்த ரோஜா நிறத்தை வரித்துக்கொண்டது; பிறகு, இரவுகளின் உலோகத்தைத் துருப்பிடிக்கச் செய்யும் தூண்களாய் எழுந்த புகை; இறுதியாக, கானக விலங்குகளின் வெருண்டோடும் பீதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது எதுவோ அதுவே மீண்டும் நிகழ்ந்தது. நெருப்புக் கடவுளுடைய கோயிலின் சிதிலங்கள் நெருப்பால் அழிக்கப்பட்டன. பறவைகளற்ற ஒரு விடியற்பொழுதில் நெருப்பின் வட்டச்சுழல்கள் தன்னை நெருங்குவதை மந்திரவாதி பார்த்தான். ஒரு கணம், நதிக்குள் தஞ்சம் புகலாம் என அவன் எண்ணினான், ஆனால் அதன்பிறகு, அவனுடைய வாழ்க்கைக்கு மகுடம் சூட்டி அவனது துயரங்களில் இருந்து அவனை விடுவிக்கவே மரணம் வருகிறது என்பதை உணர்ந்தான். உயர்ந்தெழும்பி காற்றில் ஆடிய நெருப்புப் பிழம்புகளுக்குள் அவன் நுழைந்தான். அவனுடைய தசையை அவை வெட்டிப் பிளக்கவில்லை, ஆனால் எவ்வித சூடோ தகிப்போ இல்லாமல் அவனை அரவணைத்து விழுங்கிக் கொண்
டன. ஒரு மீட்சியில், ஓர் அவமானத்தில், ஒரு பேரச்சத்
தில், அவன் புரிந்து கொண்டான், தானும் ஒரு புறத்தோற்றம்
தான் என்பதை. வேறு யாரோவொருவர் தன்னைக் கனவு கண்டு கொண்டிருந்தார்கள் என்பதையும்.
karthickpandian@gmail.com