செல்போன்கள், ஈமெயில் எல்லாம் இல்லாத காலம் அது. வெளிநாடு ஒன்றில் அயல்நாட்டுத் தூதரகங்கள் எல்லாம் இருந்த பகுதியில் தீப்பிடித்துவிட்டதாம். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அவசரமாக வெளியேறித் தப்பிவிட்டனராம்.

ஜப்பான் அதிகாரிகள் துரிதமாகத் தீயணைப்புக் கருவிகளை வைத்துத் தீயை அணைக்கத் தொடங்கினராம். இந்திய அதிகாரிகளோ தட்டச்சு இயந்திரத்தில் ‘இங்கே தீப்பிடித்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என ஆலோசனை கேட்டு இந்தியாவில் உள்ள மேல
திகாரிகளுக்குக் கடிதம் ஒன்றைத் தட்டச்சு செய்யத் தொடங்கினார்களாம்.

ஆபத்தான சமயத்தில் சரியோ தவறோ சட்டென்று முடிவெடுக்க வேண்டும். தலைமையை எதிர்பார்த்திருந்தால். தலைக்கே ஆபத்தாகிவிடும். உணர்ச்சிகளும் அதன் விளைவுகளும் ஆபத்துக் காலத்தில் சட்டென்று நம்மை ஆபத்திலிருந்து காப்பதற்காக உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைய நமது உடலில் செயல்படுகின்றன.

மனம் என்பது எண்ணங்கள், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளின் கூட்டணியே. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் எண்ணம் என்பது எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்தோம். எண்ணம் என்பது மூளையில் குறிப்பிட்ட சில பகுதி நியூரான்களின் இயக்கமே.புற உலகை நம் மூளையில் குறியீடாக மாற்றுவதே மொழியாகும். மொழியிலிருந்து பிறந்ததே சிந்தனையும். ஒரு நிமிடம் மொழி இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள். ஒரு ரோஜாவையோ ஒரு குழந்தையையோ பாருங்கள். உங்களுக்குத் தோன்றுவதை மொழி இல்லாமல் சிந்திக்க முடிகிறதா? அழகான ரோஜா, குழந்தையின் சிரிப்பு அழகாக இருக்கிறது –இப்படி எல்லாம் தொடர்ச்சியாக நம் மனதில் வார்த்தைகளால் சிந்தனைகள் எழுகின்றன.

ஆனால் பரிணாமரீதியாக வார்த்தைகளும் மொழியும் மிகச் சமீபமானவை. முதலில் தோன்றியது உணர்ச்சிகள்தான். ஒரு புலி அல்லது சிங்கத்தைப் பார்த்ததும் அது புலி என்று உணர்வதற்கு முன்பே நாம் பயப்பட ஆரம்பித்திருப்போம். விலங்குகளுக்கும் மொழியில்லா ஆதி மனிதனுக்கும் இருந்த முதல் தற்காப்பு உணர்ச்சிகளே ஆகும். மேலே குறிப்பிட்ட ரோஜாவையோ குழந்தையையோ பார்த்த முதல் நொடி நமக்கு மகிழ்ச்சி அல்லது பரவசம் போன்ற ஏதோ ஒரு உணர்ச்சிதானே முதலில் தோன்றும்?.அதன் பின்னர்தானே மனதில் வார்த்தைகள் பிறக்கும்?
உணர்ச்சிகள் பெரும்பாலும் தானியங்கியாகத் (Automatic) தோன்றுபவை. மூளையின் மூன்று பகுதிகளில் மிருகங்களின் பகுதியான லிம்பிக் சிஸ்டம் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகள்தான் உணர்ச்சிகளுக்கான பகுதி எனப் பார்த்தோம். இந்தப் பகுதி மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் ஹைப்போதலாமஸ் (Hypothalamus) என்ற பகுதியோடு தொடர்பில் இருக்கிறது.

இந்த ஹைப்போதலாமஸ் நம்முடைய தானியங்கி நரம்பு மண்டலத்தைக் (Autonomic Nerous System) கட்டுப் படுத்துகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தானியங்கியாகச் செயல்படும். இவை மூளையிலிருந்து கண், குடல், இதயம், நுரையீரல், கல்லீரல் என எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்துகின்றன. இருதயத் துடிப்பைக் கூட்டிக் குறைப்பது, ரத்தக் குழாய்களைச் சுருங்கி விரியடைய வைப்பது தொடங்கி பல்வேறு செயல்களைச் செய்கின்றன இந்த நரம்பு மண்டலம். இது சிம்பதெட்டிக் சிஸ்டம், பேராசிம்பத்தட்டிக் சிஸ்டம் என இரண்டு வகைப்படும். (Sympathetic nerous system, Parasympatheti nervous system) இதற்கும் உணர்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு? நாம் உணர்ச்சி வசப்படும்போது இந்தத் தானியங்கி நரம்பு மண்டலம் அதிவேகமாகச் செயல்படத் தொடங்குகிறது.

எண்ணங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பெரும்பாலும் வெளியுலகில் ஏற்படும் மாற்றங்களை நம் ஐம்புலன்கள் வாயிலாக நம் மூளை உணர்வதால் தோன்றுகின்றன எனப் பார்த்தோம். பலவருடங்களாகப் பார்க்காத நண்பனைத் திடீரென ரோட்டில் பார்த்தால் அவனைப் பற்றிய எண்ணங்கள் தோன்றும்.

வழியில் ஒரு சினிமா போஸ்டரைக் கண்டால் அது பற்றிய எண்ணங்கள். அதே போன்றுதான் உணர்ச்சிகளும் புற உலகில் ஏற்படும் மாறுதல்களை நாம் புலன்களால் உணர்ந்து எதிர்வினை ஆற்றுவதில் தொடங்குகிறது. நடந்து போகும்போது காலில் எதையாவது மிதித்துவிட்டாலோ, திடீரென எதேனும் ஒலியைக் கேட்டாலோ, ஒரு உருவத்தைப் பார்த்தாலோ சட்டென்று புலன்கள் நம் மூளைக்குத் தகவல் தெரிவிக்கின்றன. மூளையில் உள்ள தலாமஸ் (Thalamus) என்ற பகுதிக்குத் தான் ஐம்புலன்களிலிருந்தும் வரும் தகவல்களைச் சேகரித்து, ஆராய்ந்து, வடிகட்டி மூளையின் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குப் பிரித்து அளிக்கிறது ஒரு பொறுப்பான போஸ்ட்மேன் மாதிரி. இந்தத் தலாமஸும் மேலே சொன்ன லிம்பிக் சிஸ்டம் என்னும் பகுதியில் பங்கெடுக்கிறது.

மேலும் இந்த லிம்பிக் சிஸ்டத்தில் தானியங்கி நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமஸும் இணைந்திருக்கிறது. ஆகவே புலியோ, கடன் கொடுத்தவரோ, மனைவியின் சத்தமோ புலன்கள் வழியே வரும் ஒரு தகவல் தலாமஸிலிருந்து சட்டென ஹைப்போத
லாமஸுக்குச் செல்கிறது. உடனே தானியங்கி நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. குறிப்பாக, சிம்பதட்டிக் சிஸ்டம். இந்த நரம்பு மண்டலம் நமக்கெல்லாம் பரிச்சயமான அட்ரினலின் என்ற ரசாயனத்தைச் சுரக்கிறது. மூளையில் மட்டுமின்றி சிறுநீரகத்திற்கு மேலே இருக்கும் அட்ரினல் சுரப்பியிலிருந்தும் அட்ரினலினைச் சுரக்க வைக்கிறது சிம்பத்தட்டிக் நரம்பு மண்டலம். (Adrenal – சிறுநீரகத்துக்கு மேலே)
பதட்டம், பயம், கோபம், சந்தோஷம்.போன்ற ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான எதிர்வினையை ஆற்றுகிறது என ஆரம்பத்தில் கருதினார்கள். முதலில் உடலில் எதிர்வினை தன்னாலே நடக்கிறது. பிறகு அந்த எதிர்வினையை நாம் உணர்ந்து சம்பந்தப்பட்ட உணர்ச்சியை அனுபவிக்கிறோம் என்பது ஆதிகால தியரி. அதாவது நம்முடைய செல்போனை மனைவி எடுத்துப் பார்த்தால் முதலில் ஆட்டோமேட்டிக்காகக் கை நடுக்கம், இருதயப் படபடப்பெல்லம் வருகிறது. இந்த மாறுதலை. உணர்ந்ததும் நாம் பயம் என்னும் உணர்ச்சியை உணர்கிறோம். என்கிறது அந்த தியரி. இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது.

ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சந்தோஷமாக இருக்கும்போதும் நம் உடலில் படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருக்கும். கோபப்படும் போதும் இருக்கும்.ஆகவே நம்முடைய சூழல் நம்முடைய உடலின் எதிர்வினை இரண்டையும் வைத்தே நாம் பதட்டமோ, எரிச்சலோ, மகிழ்ச்சியோ அந்த உணர்ச்சியை உணர்கிறோம் என்கிறது அடுத்த தியரி.

எல்லா உணர்ச்சிகளிலும் இரண்டு சமாச்சாரங்கள் இருக்கின்றன ஒன்று உடலில் ஏற்படும் விளைவுகள். இரண்டு மனம் உணரும் உணர்ச்சி. இந்த இரண்டையுமே முட்டையா கோழியா எனப் பிரித்துப் பார்க்கமுடியாது .

உணர்ச்சிகளுக்கும் நினைவுகளுக்கும் என்ன தொடர்பு? ஏன் உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் மட்டும் நினைவில் இருக்கின்றன? அடுத்த வாரங்களில்…

ramsych2@gmail.com