PayTM என்கிற அப்ளிகேஷன் செயல்பட, நம் வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும். அதேபோல, பசவராஜ் பொம்மை சேவை செய்யவும் உங்கள் பையில் கத்தை கத்தையாகப் பணமிருக்க வேண்டும். அதுவும் அவரால் உங்களுக்கு 100 ரூபாய் ஆதாயம் என்றால், நீங்கள்CMமுக்கு, 40% கமிஷனை Pay பண்ண வேண்டும். அதுதான் PayCM.
பேடிஎம் நிறுவனத்தின் அதே வண்ணம், அதே டிசைனில் கர்நாடக முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்களின் முகத்தை அச்சடித்து, ஊரெல்லாம் ஒட்டி, என்றோ தன் பரப்புரையைத் துவங்கியிருந்தது கர்நாடக காங்கிரஸ்!
ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கணிப்பிலேயே அடுத்து அங்கு பாரதிய ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதை நாம் கூடத் தயங்கி ஏற்றுக் கொண்டோம், பாரதிய ஜனதா கட்சி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்குத்தான் கடைசி கட்டத்தில் உதவவும் பல நூறு ஆட்கள் அனைத்து நிலையிலும், அனைத்து துறைகளிலும் இருக்கிறார்களே? மிதமிஞ்சிய அந்த தெனாவெட்டுதான் பொம்மையைத் தூக்கி யெறிய உதவியது!
நீ நடந்தால் நடை அழகு!
கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை தன் நடைப்பயணத்தைத் துவங்கிய ராகுல்காந்தியைக் கட்டியணைத்து, கொடியசைத்து, அவருடன் சில கிலோமீட்டர் தூரம் நடந்து, வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டையும் விஞ்சி, கேரளா,
கர்நாடகாவில் ராகுலின் அந்த நடைப்பயணத்துக்கு, எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பொதுமக்களின் ஆதரவு அவருக்கு கிட்டியது. அது நல்ல பலனையும் அளித்தது!
இன்னொன்றையும் பார்க்க வேண்டும். ராகுலுக்கு கிட்டிய இந்த அபரிமித வரவேற்பு தேசிய அளவில் பிரம்மாண்டமாக இருந்ததால், சொத்தையான ஓர் அவதூறு வழக்கில், அவருக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டு, அவருடைய மக்களவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்குச் சமீபத்தில் இதெல்லாம் நடந்தது மக்கள் மனத்தில் ஆழத் தைத்திருந்தது. வழக்கம் போல் பப்புக்கெல்லாம் நாம என்ன செஞ்சாலும் எல்லாப்பயலும் வேடிக்கை மட்டும்தான் பாப்பாய்ங்க என்றே அலட்சியத்துடன் அதைக் கடந்தது பாரதிய ஜனதா கட்சி!
அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும் திமுக தன் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல நல்ல திட்டங்களையும் இங்கு அமல்படுத்தியதை இந்தியா மட்டுமல்ல, இந்தியர்கள் வாழும் அனைத்துலக நாடுகளிலுமே தெரிந்து, அவைகளுக்குப் பெருத்த வரவேற்பும் கிட்டியதல்லவா? பிறகதை தன் தேர்தல் வாக்குறுதியில் எவரேனும் பயன்படுத்தாமல் இருப்பார்களா? அருகிலிருந்த கர்நாடக காங்கிரஸ் துரிதமாகச் செயல்பட்டு இரண்டு அதிரடி அறிவிப்பை தன் தேர்தல் அறிக்கையில் சேர்த்தது. குடும்பப் பெண்கள் அனைவருக்கும் மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்!
அதுவரை தேர்தல் சமயங்களில் அறிவிக்கப்படும் இலவசங்களால் நாடு அழிகிறது என கிண்டிக் கொண்டிருந்த பாஜக, உடனடியாக அந்த அடுப்பில் நீரூற்றி அணைத்துவிட்டு, தன் பங்குக்குப் பல இலவசங்களை அடுக்க ஆரம்பித்தது. யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணானது!
மதவெறியை கேடயமாகக் கொண்டு வாள்வீசிக்கொண் டிருந்தவர்களிடையே, சித்தராமய்யாவும், சிவகுமாரும் மத நல்லிணக்கத்தையும், சிறுபான்மையினரைக் காப்போம் என்றும், திராவிடக் கொள்கைகளைப் பரப்புரையில் பேசினார்கள்!
மாறாக, சங்கிகள் தங்கள் வெறியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். கர்நாடக தேர்தல் பரப்புரை பொறுப்பிலிருந்த அண்ணமலை
அவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தின் துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்க விட, அதைப் பாய்ந்தோடி வந்து தடுத்தார் பாஜக அமைச்சரொருவர்!
கர்நாடகாவில் முதலாவதாக எங்கும் ஒலிக்க வேண்டியது கன்னட தேசியப் பாடல்தான் என்று ஒரு நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார் அவர். குரங்கு வாலில் தீ வைத்த கதை போலானது அந்த நாடகத்தின் முடிவு! தமிழ்த்தாய் இழிவுபட்டதை சற்றும் எதிர்க்காத அண்ணாமலைக்கு மிகப் பெரிய பரிசளித்தது தேர்தல் முடிவு!
ஆடாதடா ஆடாதடா மனிதா!
ஹிஜாப் சர்ச்சையை பொம்மை அரசு எவ்வளவு பெரியதாகக் கொண்டு சென்றது என்பதை முகச்சுளிப்புடன் நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.
உடுப்பி, மங்களூர் போன்ற மாவட்டங்களில் தேவையேயற்ற அந்த நிகழ்வு, இந்தியளவில் ஊதிப் பெரியதாக்கியது எதிர்க்கட்சிகள் அல்ல. சாட்சாத் ஆளுங்கட்சிகள்தான். அதாவது மாநில அரசும், ஒன்றிய அரசும் கைகோர்த்துக் கொண்டு இதில் செயல்பட்டன. கர்நாடக உயர்நீதிமன்றத்தையே ஆட்டுவித்து தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றார்கள் அவர்கள்!
கொடுமை என்னவென்றால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை இன பெண் மாணவர்கள் அந்த வருடம் இறுதித் தேர்வில் பங்கேற்கவில்லை. காரணம் அச்சம்.
ஹிஜாப் அல்லது புர்கா போட்டுக்கொண்டு சாலையில் நடமாடினால் கூட ஜெய்ராம் கோஷங்களுடன் காவி குண்டர்கள் சூழ்ந்து கொண்டு தம்மை ஏதும் செய்துவிடக்கூடும் என்கிற பேரபாயச் சூழலின் காரணமாக அவர்கள் தேர்வெழுத முடியாத சூழல் விளைந்தது!
மாநில அரசோ, ஒன்றிய அரசோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வராதது மட்டுமல்ல, அவர்கள் தேர்வெழுதா விட்டால் என்ன குடியா மூழ்கி விடப்போகிறது என்கிற அலட்சிய மனப்பான்மையில் தான் அதைக் கடந்தார்கள்! போன காங்கிரஸ் ஆட்சியில், இஸ்லாமியர்களுக்கு என்றிருந்த பிரத்யேக இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்தது பாஜகவின் பொம்மை அரசு. ஆனால், காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவோம் என்கிற உத்தரவாதத்தை அளித்தது!
இதனால் சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாகவே காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார்கள். உச்சகட்டமாக, ஒரு பாஜக அமைச்சர், எங்களுக்கு இஸ்லாமியர் வாக்குகளே வேண்டாம் எனத் திருவாய் மலர்ந்திருந்தார்.
ஏற்கனவே, லிங்காயத்துகள் என்கிற பெரும்பான்மையான கர்நாடக மக்களை, அவர்கள் தனி மதத்தவர், இந்துக்கள் அல்ல என்கிற பிரகடனத்தை ஆதரித்திருந்தது காங்கிரஸ். இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சார்ந்த எவரானாலும் அவர்கள் இந்துக்களே என்கிற புது உருட்டை, நீண்ட காலமாகவே சங்கிகள் பரப்பி வந்துள்ளதால், லிங்காயத்துக்கள் இந்துக்கள் அல்ல என்கிற சொல்லாடலை பாஜக ஏற்கவில்லை!
2018க்கு முன்பே அதை காங்கிரஸ் செய்திருந்தும், அந்தப் பொழுதில் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால், முதலமைச்சர்களாக இருந்த எடியூரப்பா மற்றும் பொம்மை போன்றோர் லிங்காயத்து மதப் பெரியோர்களை அணுகிய விதம் பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து தரவே, சங்கி மன நிலையிலிருந்த பல லிங்காயத்துக்கள் தொடர்ந்து விலக ஆரம்பித்தனர். அவர்களை லாவகமாக உள்ளிழுத்துக் கொண்டது காங்கிரஸ்!
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி!
லிங்காயத்துக்களுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் கொண்ட இனமாகப் பார்க்கப்படுவது ஒக்கலிகர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஒரே காரணம் சாதி. அவர்களின் சாதித் தலைவராக தேவகவுடாவை அவர்கள் மிகவும் நேசித்தனர். தேவகவுடாவுக்கு அதிக வயதாகிவிட்டபடியால் இப்போது அந்த இடத்தை குமாரசாமி அடைந்திருக்கிறார். குமாரசாமியின் மகன் அடுத்து அதை அடைவார்!
2018 தேர்தலில், தனிப்பெருங்கட்சியாக பாஜக 104 தொகுதிகளைப் பெற்று ஆட்சியமைக்க முயன்றது. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் அது தோற்றது. சித்தராமய்யாவின் அரசியல் சாதுர்யத்தால் அன்று குமாரசாமி முதலமைச்சராக, காங்கிரசுடன் சேர்ந்து கூட்டாட்சி அமைந்தது!
அதிகபட்சம் 30 – 35 தொகுதிகளை மட்டுமே வெல்லக்கூடிய தகுதி இருந்தும், குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி எளிதாக இதுபோன்ற சமயங்களில் கிட்டிவிடும். அதைச் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்வார்கள் தந்தையும், தனயனும்.
ஆனால், இரண்டாண்டுகளுக்குள் பல சதிகளைச் செய்து, குமாரசாமியின் எம்.எல்.ஏ.க்களையே விலைக்கு வாங்கியது கர்நாடக பாஜக. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றிருந்த அமித்ஷாவுக்கு இத்தகையச் செயல்களே முழு நேர வேலையாக இருந்தன என்றால் அது மிகை அல்ல!
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே தன் நிலை அறிந்து பதவி விலகினார் குமாரசாமி. விலைபோன அதே எம்.எல்.ஏ.க்கள், இம்முறை பாஜகவில் நின்றார்கள். தாமரையில் வென்றார்கள். எனில், குமாரசாமிக்கென்று எந்தத் தனி தகுதிகளுமே இல்லை, அவருடைய மக்கள் அதிகாரத்திலிருக்கும் எவருக்கும் வாக்களிப்பார்கள் என்று புரிகிறதல்லவா? ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், சில சங்கி ஊடகங்கள் திட்டமிட்டு, 2023இல், அங்கு தொங்கு சட்டசபையே ஏற்படும். குமாரசாமிதான் கிங் மேக்கராகி ஆட்சியை யார் செய்ய வேண்டுமென முடிவெடுப்பார் என்றெழுதினர்! குமாரசாமிக்கு வழக்கமாக வாக்களிக்கும் மக்களுக்கு குழப்பமேற்பட்டது.
ஒருவேளை குமாரசாமி பாஜகவுக்கு ஆதரவளித்தாலோ அல்லது பாஜக ஆதரவுடன் குமாரசாமி முதலமைச்சர் ஆனாலோ இரண்டுமே கர்நாடகாவுக்கு உகந்தது அல்லவே? இவருக்கு வாக்களிப்பதற்கு பதில் பாஜகவின் நிரந்தர எதிரியாக இருக்கும் காங்கிரசுக்கே தம் வாக்குகளை அளித்தாலென்ன என்று பல ஒக்கலிகர்கள் முடிவெடுத்தனர்!
இவர்கள் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் என்கிற பெயரை வைத்திருப்பதால் கணிசமான சிறுபான்மை இன மக்களின் வாக்குகளும் இவர்களுக்கு கிடைத்த வண்ணம்தான் இருந்தன. அவர்களுமே தங்களின் வாக்குகள் சிதறுவது யாருக்கு லாபமளிக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்!
தமிழ்நாட்டில் இனம், மதம் பார்த்து வாக்களிப்பதால் யார் ஆதாயம் பெறுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள் தெளிவாகியது போல், கன்னட மக்களுக்கும் திறப்பு ஏற்பட்டிருந்ததை கடைசிவரை, பாஜகவோ, குமாரசாமியோ, ஒவைசியோ உணரவேயில்லை!
குமாரசாமியின் கோட்டைக்குள் ஓட்டை போட்டது பாஜக அல்ல, காங்கிரஸ். சித்தராமய்யாவும், சிவ குமாரும் கணிசமான ஒக்கலிகர்களின் வாக்குகளை கவர்ந்திருந்தனர்!
இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சங்கிகளின் முன் கணிப்பு சரியாக இருக்கலாம் என்றெண்ணி, உங்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காவிடில், குமாரசாமியிடம் ஆதரவு கோருவீர்களா என்று சில நிருபர்கள், சிவகுமாரிடம் கேட்க, அவர் அதை திட்டவட்டமாக மறுத்தார்.
ஒருபோதும் அந்த நிலை வராது. காங்கிரஸ் மிக எளிதாக 140 தொகுதிகளில் வெல்லும், குமாரசாமியிடம் ஆதரவுக்கு எந்த அவசியமும் இருக்காது என்றார்!
அவ்வளவு தன்னம்பிக்கையுடன் காங்கிரஸ் தேர்தலை அணுக, தன் சாதி, தன் மதம், Paid Mediaக்களின் பொய்த் திணிப்புகளை நம்பி, பாஜகவும், மஜதவும் களம் கண்டன!
நாட்டுக்கொரு சேதி சொல்ல நாடாளும் கோமாளி வந்தேனுங்க!
ராகுல் நடந்த பொழுதுகளில் எல்லாம் அதை கேலி செய்தும், சிறுமைப்படுத்தியும், அந்த நடையால் எந்த விளைவும் ஏற்படாது என்று பரப்பி வந்த சங்கிகள் என்ன நினைத்தார்களோ? திடுக்கென ஒரு நாள் நாடாளும், நாடறிந்த கோமாளி ஒருவரை அழைத்து வந்து நீங்களும் நடங்கஜி என்றார்கள்!
ஒன்றியத் தலைமை அமைச்சரைக் கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வரும் எவருக்கும் தெரியும், அவர் ஒரு பம்பரம், எங்கு வேண்டுமானாலும் போய் கலர் கலராகச் சுற்றுவார், ஆனால் அவர் சுழல் வதற்கான சாட்டை எங்கோ உள்ளது. எனவேதான் அவரை எந்த வேடம் பூணச் சொன்னாலும் அதை மறுக்காமல் போட்டுக் கொள்வார். அப்படித்தான் அந்த ரோட்ஷோ கடைசி கட்டத்தில் முடிவானது!
ஆனால் அது இன்னமும் மோசமான பின்னடைவையே தந்தது என்றால் நாக்பூரான்களால் கூடச் சீரணிக்கவியலாது!
தலைநகர் பெங்களூருவில் இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி, மக்கள் பெருஞ் சிரமத்திற்கு உள்ளானார்கள். சினமும், அறச்சீற்றமும் கொண்டனர். படித்த மக்களிடையே மேலும் இழிவிற்குள்ளானார்கள் சங்கிகள்!
இவையாவுமே வாக்குப்பதிவன்று வெடித்தன. பாஜகவுக்கு எதிரானவர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய, பாஜகவுக்கு ஆதரவானவர்களில் பலர் இவர்களுடைய செயல்கள், பேச்சுக்களால் வெறுத்து வீட்டில் முடங்கிக் கிடந்தனர்!
எனக்கென்னமோ இந்தக் கோமாளியை 2024 தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள நாக்பூரான்கள் தயங்கலாம் என்றே படுகிறது, பார்ப்போம்!
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கர்நாடகாவில் என்ன செய்யப் போனார்?
பரப்புரை செய்யப் போனார் என்பவர்கள் சிலர். பணம் விநியோகிக்கப் போனார் என்பவர்களே பலர். ஆமாம், சாலை வழியாகப் பயணித்தால் கூட சோதனை என்கிற பெயரில் சோதனை வரும் என்று அவதானித்து, ஹெலிகாப்டர் மூலம் பல கோடிகளை அவர் அங்கு எடுத்துச் சென்றதாக கர்நாடக உள்ளூர் ஊடகங்கள் சந்தேகித்தன.
பிதர் மாவட்டத்தின் சந்தையில் இரண்டு நாட்களாக விற்பனைக்கு ஒரு மூட்டையைக் கூட உழவர்கள் கொண்டு வரவில்லை. துவரை, கடலை, பச்சைப்பயிறு, உளுந்து, சோயா மொச்சை, நிலக்கடலை, எள்ளு, பருத்தி … எதுவுமே வரவில்லை. அதாவது சரியாக தேர்தலுக்கு முந்தைய இரு தினங்கள் அவை. அவர்களைத் தடுத்து நிறுத்திய காரணிகளில் தலையானது, பாஜக கட்சி கணிசமாக ஒவ்வொரு தலைக்கும் பல ஆயிரங்கள் கொடுக்கவிருப்பதாக அதே கட்சியின் உள்ளூர் ஆட்கள் பரப்பியிருந்தது. சொன்னதைப் போலவே ஒவ்வொரு வாக்குக்கும் உத்தரவாதங்கள் பெறப்பட்டு பல ஆயிரங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் பாருங்கள், நாங்கள் இலவசங்களை அறிவிப்பதில்லை, வாக்குகளுக்கு பணம் கொடுப்பதில்லை என்றெல்லாம் பேசுவார்கள். சொல் ஒன்று செயல் வேறு.
இத்தனை செய்தும் முடிவுகள் வெளியான அன்று துவக்கத்திலிருந்தே பரிதாப நிலையிலிருந்தது பாஜக.
அண்ணாமலை பரப்புரை செய்த பல தொகுதிகளில் பாஜக தன் டெபாசிட் தொகையையே இழந்திருந்தது. நம்ப மாட்டீர்கள். ஓர் ஆளுங்கட்சி 30 தொகுதிகளில் டெபாசிட் இழக்குமளவுக்கான மோசமான தோல்வியை பாஜகவுக்குத் தந்திருந்தார்கள் கர்நாடக மக்கள். கனக
புரா தொகுதியில் சிவக்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையுமே டெபாசிட் இழக்கச் செய்திருந்தார்!
அண்ணாமலையின் இந்தக் கீர்த்தி என்னை மெய் சிலிர்க்கச் செய்துள்ளது. இவரை இந்தியா முழுமைக்கும் பாஜக ஆதரவு தேர்தல் பரப்புரைக்கு அனுப்பி வைத்தால், 2024 ராகுலுக்கு மிக எளிதாக இருக்கும்!
ஒன்றிய பாஜக அரசு வீசும் எலும்புத் துண்டுகளுக்காக கண்ட பொய்களை எழுதிப் பரப்பும் ஊடகங்களின் அத்தனைக் கணிப்புகளையும் பொய்யாக்கி, தனிப்பெரும் பான்மையுடன் பெரு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது காங்கிரஸ்! காங்கிரஸ் வாங்கிய தொகுதிகளின் பாதி எண்ணிக்கையைக் கூட பாஜகவால் தாண்ட இயலவில்லை. குமாரசாமியை இருபதுக்குள் முடக்கி வைத்தது!
யார் முதலமைச்சர் என்கிற அவலை வெற்று வாய்களுக்குள் அள்ளிக் கொட்டியது காங்கிரஸ். போன வருடத்திலேயே யார் முதலமைச்சர் ஆவார் எனத் திட்டமிட்டு விட்டிருந்தது காங்கிரஸ்.ஆனால் சங்கி மீடியாக்கள் என்னவெல்லாம் எழுதும் எனப் பார்க்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மகிழ்ச்சியை இரண்டு நாட்கள் கழித்து உடைப்போம் என்று அந்தப் பேச்சு வார்த்தையை நீளவிட்டது காங்கிரஸ்!
இந்து தமிழ் பத்திரிகையெல்லாம் பகிரங்கமாக பாஜக ஆதரவு பத்திரிக்கையாகி நீண்ட வருடங்கள் ஆகி விட்ட தல்லவா? தேர்தல் முடிவுகளைக் கண்டு அவர்கள் எழுதிய வன்ம கட்டுரைகள் நகைப்பையே தந்தன. முதலமைச்சர் இழுபறியை அவைகள் கொண்டாடித் தீர்த்தன! போதுமா, நல்லா ஜாலியா இருந்துச்சா, இறங்கு என்பதைப் போல சிவகுமார் துணை முதலமைச்சர், சித்தராமய்யா மீண்டும் முதலமைச்சர் என்கிற அறிவிப்பு வெளியானது. பதவியேற்பு விழாக்களில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது!
தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதானமாக வீற்றிருந்து அந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல். 888 இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம், சாவர்க்கரின் பிறந்த நாளன்று திறக்கப்பட்டிருக்கிறது.
நாட்டு விடுதலையை மத ரீதியாக அணுகியவரும், பிறகு, இந்தியா விடுதலை பெறும்வரை, முழுக்க வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்து, அவர்கள் விட்டெறிந்த கூலியை வாங்கிக் கொண்டு, விடுதலை வீரர்களைக் காட்டிக் கொடுப்பவராக வாழ்ந்த ஒருவரின் பிறந்த நாளில் இதைத் திறக்கிறார்கள் என்றால், இந்தியா பற்றிய எதிர்காலத்தை இவர்கள் எப்படிக் கட்டமைக்கவிருக்கிறார்கள் என நன்கு விளங்குகிறது அல்லவா?
இவர்களே மீண்டும் இந்தியாவை ஆண்டால் இந்தியா என்கிற உலகப் பெரு மக்களாட்சி நாடு இருக்குமா?
வாய்ப்பில்ல ராஜா.
rashraja1969@gmail.com