‘மாமன்னன்’ திரைப்பட இசைவெளியீட்டு விழா மேடையில் கமல்ஹாசன் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ‘தேவர்மகன்’ திரைப்படம் குறித்து முன்வைத்த கருத்துகள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. ‘விருந்தினராக அழைத்துவந்து கமல்ஹாசனை மாரிசெல்வராஜ் அவமானப்படுத்திவிட்டார்’ என்றும் ’30ஆண்டுகாலத்துக்கு முந்தைய பிரச்னையைத் தேவையில்லாமல் கிளறிவிட்டார்.
மாரிசெல்வராஜுக்குத்தான் சாதிய வன்மம் இருக்கிறது’ என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்னொருபுறம் கமல்
ஹாசன் சாதியவாதி என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்சினிமாவுக்கும் சாதிக்குமான உறவு நீண்டகாலத் தொடர்ச்சியுடையது. தொடக்ககாலத்திலிருந்தே தமிழ் சினிமா சாதியுடன் பயணித்து வந்திருக்கிறது. அடிப்படையில் இந்தியச்சமூகம் சாதியச்சமூகம் என்பதால் இந்தியக்கலை, இலக்கியம், அரசியல் என எல்லாவற்றிலும் சாதி பிரதிபலிப்பது இயல்பானதே.
இன்றளவும் பரதநாட்டியம், கரகாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என எல்லாக் கலைகளும் சாதியப்பாகுபாடுகளை அடிப்
படையாகக்கொண்டே அங்கீகரிக்கப்படுகின்றன. தொடக்ககாலத்தில் சினிமா வந்தபோது எல்லாச்சாதியினரும் அமர்ந்து பார்க்கும் இடமாகத் திரையரங்குகள் உருவானபோது மேல்தட்டுச்சாதியினர் சினிமாவை இழிந்த கலையாகவே பார்த்தனர் என்று பதிவு செய்கிறார் ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். கூத்துக்கலையின்மீது இழிந்த மதிப்பேற்றப்பட்டு ‘கூத்தாடி’, ‘கேலிக்கூத்து’ போன்ற வார்த்தைகள் உருவாகி நிலைபெற்றிருப்பதையும் காண்கிறோம்.என்றாலும் தொடக்ககாலத் தமிழ் நாடகங்கள் மற்றும் தமிழ் சினிமாக்கள் இந்துப்புராணங்களையும் இந்துக்கடவுளர்களையும் பார்ப்பன வழக்காறு
களையும் பிரதிபலிப்பவையாகவே இருந்தன.
திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகுதான் தமிழ்நாடகங்களில் சமூகச்சீர்திருத்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதைப்போலவே சாதிமறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழுணர்வு, திராவிட நாடு ஆதரவு, பெண்ணுரிமை, பெண்கல்வி, விதவை மறுமணம் போன்ற கருத்துகளும் திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் இடம்பெற்று அதன் முகம் மாறியது. அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, திருவாரூர் தங்கராசு, முரசொலிமாறன் என எண்ணற்ற திராவிட இயக்கத்தவர்கள் தமிழ் சினிமாவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.
என்றாலும் எப்படி தொடக்ககாலத் தமிழ் சினிமாவின் முதன்மைப்பாத்திரங்களாகப் பார்ப்பனப் பாத்திரங்கள் அமைந்தனவோ, அதேபோல் திராவிட இயக்க சினிமாவின் முதன்மைப்பாத்திரங்களாகப் பிள்ளைமார், முதலியார் பாத்திரங்களே அமைந்தன. திராவிட இயக்க சினிமாக்களுக்கு வெளி
யிலும் கறுப்பு-வெள்ளை சினிமா காலகட்டத்தில் முதன்மைப்பாத்திரங்களாக இந்த சாதிகளே இருந்தனர்.
ஒரு சமூகத்தின் இயங்கியல் இப்படித்தான் இருக்கமுடியும் என்பது எதார்த்தம். பார்ப்பனர்களை அடுத்து வெள்ளாள-முதலியார் பாத்திரங்கள், பாரதிராஜா வருகைக்குப்பிறகு தேவர் பாத்திரங்கள், தங்கர்பச்சான் வருகைக்குப்பிறகு வன்னியர் கதைமாந்தர்கள், இப்போது பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் வருகைக்குப்பிறகு பள்ளர், பறையர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகள் நாயகர்களாகவும் முதன்மைப்பாத்திரங்களாகவும் இடம்பெறுகின்றனர். இதுவரை தமிழ்த்திரையில் இடம்பெறாத இருளர் போன்ற பழங்குடியினர் வாழ்க்கையும் சித்திரிக்கப்படுகிறது. அருந்ததியர்கள், குறவர்கள், புதிரைவண்ணார் போன்றவர்களின் வாழ்க்கையும் தமிழ்த்திரையில் இடம்பெறும் காலம் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை கொள்ளலாம்.
தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியபிறகு திராவிட இயக்கம் நாடகங்களிலும் சினிமாக்களிலும் கவனம் செலுத்துவது குறைந்தது. தன் இறுதிக்காலங்களில் ‘ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதியது என இறுதிவரை இயங்கியவராகக் கலைஞர் ஒருவரே இருந்தார். கலைஞர் வசனத்தில் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ திரைப்படம் தலித் பிரச்னையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
திராவிட இயக்கம் சமூகச்சீர்திருத்தச் சிந்தனைகளை முன்வைத்தபோதும் திராவிட இயக்க சினிமா என்பது எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்காத லட்சியவாத அணுகுமுறையைக் கொண்டது. 70களின் இறுதியில் பாரதிராஜா தமிழ் சினிமாவுக்குள் வந்தபிறகுதான் அசலான கிராமம் தமிழ்த்திரையில் சித்திரிக்கப்பட்டது. அந்தக் கிராமத்துடன் பல்வேறு சாதியினர், அவர்களுக்கு இடையிலான உறவு – முரண் நிலைகளும் தமிழ்த் திரைவெளியில் உடன் வந்தன.
பாரதிராஜா சினிமாக்களைத் ‘தேவர் சாதிய சினிமா’ என்று சிலர் மதிப்பிட்டு விமர்சித்தாலும் ஒட்டுமொத்தமாக அப்படி முத்திரை குத்திவிட முடியாது.
‘அலைகள் ஓய்வதில்லை’யில் பார்ப்பன – கிறிஸ்துவக்காதல், ‘கிழக்கே போகும் இரயில்’ படத்தில் மருத்துவச்சாதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதல் எனப் பல்வேறு சாதிகளையும் பாரதிராஜா திரையில் கொண்டுவந்தார். சலவைத்தொழிலாளர்கள், முடிதிருத்துபவர்கள், செருப்பு தைப்பவர், படகோட்டும் பெண் எனப் பல்வேறு சிறுபான்மைச்சாதியைச் சேர்ந்தவர்களும் பாரதிராஜாவின் தொடக்ககால சினிமாக்களில் இடம்பெற்றனர். ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிப்படையாகவே பார்ப்பன மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய திரைப்படம்.
‘கருத்தம்மா’, ‘கிழக்குச்சீமையிலே’, ‘தாஜ்மகால்’, ‘பசும்பொன்’ என்று போகப்போக பாரதிராஜாவின் சினிமாக்கள் தேவர் சினிமாக்களாக உருமாறின என்
றாலும் அதற்குள் சுயசாதி விமர்சனம் இல்லாமலில்லை. பெண்சிசுக்கொலையை மையமாகக் கொண்ட ‘கருத்தம்மா’ திரைப்படம் ஆரம்பிக்கும்போதே பசும்
பொன் முத்துராமலிங்கம் சிலையைக் காட்டியே தொடங்கும். இதன்மூலம், எந்தச்சாதியில் பெண்சிசுக்கொலை நடக்கிறது என்பதை பாரதிராஜா தெளி
வாக முன்வைத்து தன் சொந்தச்சாதியிலேயே எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். ‘பசும்பொன்’னும் தேவர் சினிமா என்றாலும் இரண்டாவது திருமணம் செய்து
கொண்ட பெண், அவரின் இரண்டாவது கணவரை ஏற்றுக்கொள்ளாத மகன்கள் என நுட்பமான உறவுச்
சிக்கல்களையும் ஆண் உளவியலையும் சித்தரித்திருப்பார்.
ஆனால் பாரதிராஜாவுக்குப் பிறகு 80களிலும் 90களிலும் உருவான கிராம சினிமாக்களில் இத்தகைய முற்போக்கு மற்றும் சுயவிமர்சனக்கூறுகள் நீக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளே முன்வைக்கப்பட்டன. நினைவுச்சின்னம், சேரன் பாண்டியன், சின்னக்கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, கவுண்டர் பொண்ணா கொக்கா, நாட்டாமை, சூரியவம்சம், எஜமான், மறுமலர்ச்சி என்றுஉருவான படங்களின் பட்டியல் நீளம். பெரும்பான்மையான திரைப்படங்கள் கவுண்டர் சாதிப்படங்கள். தேவர் மற்றும் வன்னியரை முதன்மைப்படுத்தும் படங்களும் வந்தன. இந்தப் படங்கள் சாதியப்படங்கள் மட்டுமில்லை, தேர்தல் ஜனநாயகத்துக்கு மாறாகத் தனிநபர் பஞ்சாயத்து நீதிவழங்கும் முறையையும் ‘பொம்பளை ஆம்பளைக்கு அடங்கியிருக்கணும்’ என்ற ஆணாதிக்க மதிப்பீடுகளையும் முன்வைத்தது. இந்தப் படங்களை உருவாக்கிய, நடித்த அத்தனைபேரும் படம் முதன்மைப்படுத்திய சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இவர்களால் மீண்டும் மீண்டும் அத்தகைய சாதியப்படங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தப் படங்களில் தலித்துகள் மற்றும் சிறுபான்மைச்சாதிகளின் இடம்தான் என்ன? சின்னக்கவுண்டருக்குக் குடைபிடிப்பவர்களாக, எஜமான வானவராயரின் காலடிமண்ணைத் தொட்டுக் கும்பிடுபவர்களாக, எஜமான் வானவராயரின் ‘ஆண்மை’யை நிரூபிப்பதற்காகத் தான் ‘கெடுக்கப்பட்டதாக’ வலிந்து பழிசுமக்கும் விசுவாசி பெண்ணாக, பண்ணையார்களுக்கும் நாட்டாமைகளுக்கும் செருப்பு எடுத்துப்போடுபவர்களாக, அவர்கள்முன் கைகட்டிக் குனிந்து நிற்பவர்களாகவே காட்சிப்படுத்தப்பட்டனர். அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளிலும் திரைக்கதைகளிலும், எம்.ஜி.ஆர். திரைப்படங்களிலும் இருந்த
பண்ணையார், நிலப்பிரபுக்கள் எதிர்ப்பு என்பது மழுங்கடிக்கப்பட்டு நிலப்பிரபுக்கள் விசுவாசத்துடன் வணங்கப்படவேண்டியவர்களாக எந்தக் கூச்சமும் இன்றி திருநிலைப்படுத்தப்பட்டனர்.
மலையாளி என்னும் அடையாளத்தை மாற்ற தன்னைக் கொங்குவேளாளர் என்று நிறுவ எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகள், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மெல்லத்தொடங்கி ஜெயலலிதா – சசிகலா ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க.விலும் ஆட்சி நிர்வாகத்திலும் உறுதிப்பட்ட முக்குலத்தோர் ஆதிக்கம், பொள்ளாச்சியிலிருந்து மஞ்சள்பையுடன் திரைப்படமெடுக்க வந்த கொங்கு வேளாளர்களின் மூலதனம், 90களில் நடைமுறைக்கு வந்த உலக
மயமாக்கலின் தொடக்ககாலத்தில் நகரமயமாக்கலுக்கு ஆட்பட்டவர்களின் கிராமப்பொற்காலக் கனவுகள் என இத்தகைய சாதிய நிலப்பிரபுத்துவத் திரைப்படத்துக்குப் பல காரணங்கள்.
ஆனால் இத்தகைய சாதிய, நிலப்பிரபுத்துவப்படங்களில் இருந்து வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் விலகிநிற்கும், மேம்பட்ட படமாகத் ‘தேவர்மகன்’ இருந்தது என்பதை மறுக்கமுடியாது. ‘காட்பாதர்’ படத்திலிருந்து மணிரத்னம் ‘நாயகனு’க்கான உருவாக்கத்தை மேற்கொண்டார் என்றால் கமல்ஹாசன் ‘தேவர்மகனு’க்காக இன்னொரு வகையான உருவாக்கத்தைக் கையகப்படுத்தினார். அதேநேரத்தில் எதார்த்தத்துக்கு நெருக்கமான முக்குலத்தோர் வாழ்வியல் சித்திரிப்புகள், மேம்பட்ட இசை,ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் ஆகியவை தேவர்மகனைக் முக்கியமான கலைப்படைப்பாக மாற்றியது.
தேவர்மகனை அடிப்படையில் சாதியப்படம் என்றோ தலித்துகளுக்கு எதிரான படம் என்றோகூட குற்றம்சாட்டிவிட முடியாது. அடிப்படையில் அது தேவர்
சாதியினரின் வன்முறையையே விசாரணைக்குட்படுத்தியது. அதேநேரம் ‘தேவர்மகன்’ செய்த இரு முக்கியமான பிழைகள், காலத்துக்கும் தீராப்பழியாய்ச் சேர்ந்தது.
‘தேவர்மகன்’ பங்காளிகளுக்குள்- ஒரே சாதியில் நிகழ்ந்த வன்முறையைக் கேள்விக்குள்ளாக்கியதே தவிர, சாதியப்படிநிலையில் தனக்குக் கீழுள்ள சாதிகளின்மீதான வன்முறையைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. மேலும் அதன் ‘போற்றிப்பாடடி பெண்ணே’ பாடல் தேவர் சாதிய மனநிலைக்கு ஊக்கமளிக்கும் சாதியகீதமாக மாறியது. ‘தேவர்மகன்’ வெளியான 1992 அக்டோபருக்குப் பிறகும் பல ஆண்டுகள் பல்வேறு விழாக்களில் ‘போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ பாடல் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு பிற சாதியினரைச் சீண்டி சாதிய மோதல்களுக்கு வித்திட்டது. 90களில் தென்மாவட்டங்களில் நடந்த சாதியமோதல்களுக்கு அந்தப் பாடல் உரம் சேர்த்தது. வன்முறைக்கு எதிரான படம் வன்முறைக்கு வித்திட்டது. மேலும் ‘குடிச்ச பால் ரத்தமாப் போகுதுடா’, ‘புள்ள
குட்டிகளைப் படிக்கவைங்கடா’ என்னும் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு, மீசையும் அரிவாளும் தேவரின அடையாளமாக மாற்றப்பட்டு, டஜன்கணக்கில் தேவர் சினிமாக்கள் வரத்தொடங்கின.
‘போற்றிப்பாடடி’ பாடல் ஏற்படுத்திய விளைவுகளுக்குப் பொறுப்பேற்று பின்னாளில் கமல் வருத்தம் தெரிவித்தார். அதேநேரம் மூக்குக்குக் கீழே மீசையையும் முதுகுக்குப் பின்னால் அரிவாளையும் செருகி டஜன் கணக்கில் தேவர் சாதிய சினிமாக்கள் உருவானதற்கும் கமல் பொறுப்பேற்க வேண்டும். ‘மாமன்னன்’ விழாமேடையில் ஒலித்த குரல் மாரி செல்வராஜுடையது மட்டுமல்ல. மாரி செல்வராஜுக்கு மேடையும் கமல்முன் பேசுவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இவை எதுவும் கிடைக்காத, சாதியாதிக்கத்தாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குரல்களின் பிரதிநிதிதான் மாரி
செல்வராஜின் குரல். அதைத்தான் அவர் எதிரொலித்தார். எனவே அந்தக்குரலுக்கான நியாயத்தை உணர்வது தான் அறத்தின் முதல்படி.
அதேநேரம் கமல்ஹாசனை வலதுசாரி இந்துத்துவப் பார்ப்பனர் என்றோ சாதியவாதி என்றோ முழுமையாக அடையாளப்படுத்திவிட முடியுமா?
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பாரிய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியவர். பரிசோதனை முயற்சிகளின் மூலமும் புதியவகை கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலமும் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியவர். அதுமட்டும் கமலின் சிறப்பு அல்ல. தமிழ் சினிமாவில் அரசியலை வெளிப்படையாகவும் பூடகமாகவும் அவர் முன்வைத்தவர் என்பதும் முக்கியமானது.
தன்னைப் பெரியாரிய ஆதரவாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் கமல், கறுப்புச்சட்டை அடையாளத்துடன் பல பொதுமேடைகளில் தோன்றியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘நான் ஒரு பகுத்தறிவுவாதி’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ‘நான் வெட்கப்படுகிறேன்’ என்று கண்டனம் தெரிவித்தவர் கமல்ஹாசன். சினிமாவுக்கு வெளியில் மட்டுமல்ல, சினிமாவுக்குள்ளும் கமல் கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைத்திருக்கிறார். கமலின் சினிமா வெறுமனே தயாரிப்பாளரின் சினிமாவோ இயக்குனரின் சினிமாவோ மட்டுமல்ல, முதன்மையாக அது கமலின் சினிமா. அதில் பேசப்படும் அரசியலுக்கு அவரே பொறுப்பு என்றவகையில் அதைக் கமலின் கருத்துருவாக்க அரசியல் செயற்பாடாகவே கொள்ளவேண்டும்.
கமலின் அரசியல் சினிமாக்களில் முக்கியமானது மட்டுமல்ல, இந்திய சினிமாக்களிலும் முக்கியமானது ‘ஹே ராம்’. கலைத்தன்மையும் அரசியலும் இணையும் படமாக அது உருவாகியிருந்தது. ‘காந்தியைப் படுகொலை செய்தது இந்துத்துவ மதவாதமும் பார்ப்பனியமும்தான்’ என்பதை வெளிப்படையாகவே சொன்ன படம் ‘ஹே ராம்’.இந்தியாவின் பல்வேறு மொழிகள், கலாசாரங்களைக் காட்சிப்படுத்தியன்மூலம், ‘இந்தியா என்பது பன்மைத்தன்மையின் மூலம் மட்டுமே நீடிக்கமுடியும்’ என்பதை அழுத்தமாகச் சொன்னதுடன், இந்த பன்மைத்தன்மைக்கு இடையிலும் பார்ப்பனியம் ஒற்றை மனநிலையுடன் இயங்குவதையும் ‘ஹே ராம்’ சொன்னது. சிண்டும் பூணூலும் காற்றில் பறக்க, காந்தியைக் கொல்வதற்காக சாகேத்ராம் கைத்துப்பாக்கியுடன் ஒத்திகை பார்க்கும் காட்சி ஹே ராமின் அரசியலை வெளிப்படையாகவே சொன்னது. ஒரு காட்சியில் ஸ்வஸ்திக் சின்னம் தாமரையாக மாறுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
கமல் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் மேடைகளிலும் தன் சினிமாக்களிலும் சுயசாதி விமர்சனங்களைமுன்வைத்தவர். பார்ப்பனர்களின் வைதீகப்போலித்தனங்களைத் தன் படங்களில் வெகுவாகக் கிண்டலடித்திருப்பார். ‘அவ்வை சண்முகி’யில் அவரது பாத்திரம், ‘மடிசார் அணிந்த மாமிகளைக் கொச்சைப்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டப்பட்டது. தோல் தொழிற்சாலை நடத்திவரும் பார்ப்பனர், மாட்டுக்கறி சாப்பிடும் முஸ்லீமை வேலைக்கு வைத்ததற்காக கோபப்படும்போது, அதன் போலித்தனத்தை ‘அவ்வை சண்முகி’யில் சுட்டிக்காட்டியிருப்பார் கமல். இப்படி கருத்தியல் சார்ந்த ஏராளமான அரசியல் வெளிப்பாடுகள் கமல் படங்களில் உண்டு.
பெரியாரும் அதன்பின் திராவிட இயக்கமும் முன்வைத்த பார்ப்பன எதிர்ப்புக்கான வரலாற்று நியாயங்களை உணர்ந்துகொண்டவர் கமல். அதனால்
தான் அவரை ஒரு பார்ப்பனராக முன்னிறுத்தி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அதைக் குற்றச்சாட்டாக அவர் எங்கும் சொன்னதில்லை. மேலும் தமிழ் சினிமாவில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்பவராக இருக்கும் மிகச்சிலரில் கமலும் ஒருவர். அதற்கு அவர் சொல்லும் பதில் ஏற்புடையதாகவோ பொருத்தமானதாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் கேள்விகளின், விமர்சனங்களின் கதவடைப்பவரில்லை கமல். சுயவிமர்சனங்களை வெளிப்படையாக முன்வைப்பவரும்கூட. ‘பரிசோதனை சினிமாக்கள் வந்த காலகட்டத்தில் தான் நடித்த ‘சகலகலா வல்லவன்’ படம் சினிமாவை வேறுதிசைக்கு மாற்றியது’ குறித்து அவரே பேசியிருக்கிறார்.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் மனநிலை பிறழ்ந்தவர்களைக் கொச்சையாகச் சித்தரித்ததை விமர்சித்து, மன்னிப்பும் கேட்டவர்.’மாமன்னன்’ விழா மேடையில் மாரிசெல்வராஜ் முன்வைத்த விமர்சனத்தைக்கூட அவர் தனக்கு நிகழ்த்தப்பட்ட அவமானமாகக் கருதியதாகத் தெரியவில்லை. கமலே அப்படி கருதாதபோது மாரிசெல்வராஜ் கமல்ஹாசனை அவமானப்படுத்திவிட்டார் என்று மற்றவர்கள் குற்றம்சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கமலைச் சாதியவாதி என்றோ வலதுசாரி இந்துத்துவ பார்ப்பனர் என்றோ அடையாளப்படுத்த முடியாது என்று சொல்லும் அதேநேரம் சாதியம், இந்துத்துவம், தேசிய இனப்பிரச்னைகள், இந்தியத்தேசியத்தின் கருத்தியல் அடிப்படைகள் குறித்த தெளிவின்மை கமலுக்கு உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும். அதனால்தான் ‘அன்பே சிவம்’ படத்தில் கம்யூனிஸ்டாக நடித்த கமல், குருதிப்புனலில் நக்சல்பாரிகளைக் கொச்சைப்படுத்தியிருப்பார். ‘ஊழல் எதிர்ப்பு’ அரசியலின் பின்னுள்ள தூய்மைவாதம் குறித்த புரிதலோ இந்திய தேசியக் கருத்தியலின் பார்ப்பனிய அடிப்படைகள் குறித்த தெளிவோ இல்லாததால்தான் ‘இந்தியன்’ போன்ற படங்களில் நடித்து இந்திய தேசியத்தை வலியுறுத்துபவராகவும் இருக்கிறார்.
தேவர் நாயகனாக கமல் நடித்த இன்னொரு சினிமாவான ‘விருமாண்டி’ அடிப்படையில் மரணதண்டனைக்கு எதிரான படம். விருமாண்டி என்னும் தூக்குத்தண்டனைக் கைதியை ஆவணப்படம் எடுக்க வரும் ரோகிணி, கீழ்வெண்மணியைச் சேர்ந்தவர். குற்றமும் தண்டனைகளும் வெவ்வேறு பார்வைகளையும் வெவ்வேறு சார்பையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கான குறியீடு இது. கீழ்வெண்மணியில் குழந்தைகள் உள்பட 44 பேரை எரித்துக்கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு ‘குற்றவாளியில்லை’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூரும்போதுதான் மரணதண்டனைக்கும் விடுதலைக்குமான சாத்தியங்களின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். ‘விருமாண்டி’யில் மரணதண்டனையை எதிர்த்த கமல்ஹாசன்தான் , ‘உன்னைப் போல் ஒருவ’னில் காமன்மேனாக மாறி, ‘குண்டுவைக்கும் தீவிரவாதிகள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பலனளிக்காது. தந்திரமாக அவர்களைக் குண்டுவைத்துக் கொல்லவேண்டும்’ என்றார்.
இப்படிப்பட்ட அரசியல் புரிதல் கோளாறுகள்தான் கமலின் முதன்மையான பிரச்னைகள். ஆனால் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் உள்பட – யாரிடம்தான் அரசியல் புரிதல் பிரச்னைகள் இல்லை என்று சொல்லிவிட முடியும்? நூறுசதவீத அரசியல் சரித்தன்மை யாருக்குத்தான் கைவரப்பெற்றது? ஒரு படைப்பாளியை, அரசியல்மனம் கொண்டவரை அவரது சரி, தவறுகளுடன் ஏற்றே மதிப்பிட முடியும். அந்தவகையில் கமல்ஹாசன் புரிதல்குறைபாடுகளும் போதாமைகளும் கொண்ட அரசியல் கலைஞன் என்று சொல்லலாம்.
அதனால்தான் தன் சுயசாதிமீது விமர்சனங்கள் கொண்ட கமல்ஹாசனால் இடைநிலைச்சாதி ஆதிக்க உளவியலையும் அதற்கெதிரான, பாதிக்கப்பட்ட தலித் உளவியலையும் இந்துத்துவத்தால் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்படும் இஸ்லாமிய உளவியலையும் புரிந்துகொள்ள இயலவில்லை. ‘ஹேராம்’ எடுத்த கமல்தான் ‘உன்னைப்போல் ஒருவனை’யும் ‘விஸ்வரூப’த்தையும் எடுத்தார். விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான எதிர்வினைகளுக்குப் பிறகு ‘பார்ப்பனர்களின் தேசபக்தி போலியானது’ என்று ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் எடுத்தார்.
ஒரு பொறுப்புள்ள கலைஞனாகத் ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் விளைவுகளை கமல்ஹாசன் உணர்ந்து கொண்டாலும் ஆதிக்கசாதித் தன்னிலைகளை உருவாக்குவதில் சாதி அடையாளங்களையும் சாதி அடையாளங்களைப் பிரதிபலிக்கும் சினிமாக்களின் பங்கையும் அவர் உணரவில்லை. ‘தேவர் மகன்’ சுயவிமர்சனத்துடன் பங்காளிச்சண்டையைச் சித்திரித்துடன் நிற்கவில்லை; அரிவாளையும் மீசையையும் அடுத்தடுத்து வந்த தேவர் சாதிய சினிமாக்களுக்கு கொடையளித்தது. இன்றைய முத்தையா, விக்ரம் சுகுமாரன் வரை விதை, அவர் போட்டது.
வீரம் என்கிற பெயரிலான இந்தப்பெருமித உணர்வு இழைக்கும் தீங்கு குறித்தே தலித் தரப்பு தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால் கமல்ஹாசனோ இதைத் தன் படைப்புச்சுதந்திரத்துக்கு எதிரான குரல் என்றே ‘சண்டியர்’ பிரச்னையின்போது புரிந்துகொண்டார். ‘தேவர்மகன்’ விளைவுகளுக்காக அவர் வருந்தியபோதும் கௌதம்கார்த்திக் நடிப்பில் ‘முத்துராமலிங்கம்’ என்ற சாதிய அடையாளத்துடன் உருவான படத்துக்காக அதே இளையராஜா இசையில் கமல் இன்னொரு ‘போற்றிப்பாடடி பெண்ணே’ வகை பாடலைப் பாடினார். ‘சபாஷ் நாயுடு’ என்று மீண்டும் சாதி அடையாளத்துடன் ஒரு படத்தை அறிவித்தார்.
தமிழ் சினிமா உள்ளேயும் வெளியேயும் சாதியத்தைச் சுமப்பது. தமிழ் சினிமா ரசிகமனநிலையும் சாதியத்திலிருந்து தப்பவில்லை. தென்மாவட்டங்களில் முக்குலத்தோரால் கார்த்திக் ரசிகர் மன்றங்கள் நிறுவப்பட்டன. எதிர்வினையாகப் பள்ளர்களால் பிரசாந்த் ரசிகர் மன்றங்கள் நிறுவப்பட்டன. இப்போது விக்ரம் ரசிகர் மன்றங்கள் நிறுவப்படுகின்றன. சினிமாவிலிருந்து வந்த கார்த்திக், சரத்குமார், கருணாஸ் போன்றோர் சாதியையே அரசியல் மூலதனமாக வரித்துக்கொண்டனர். ஆனால் இவர்கள் அனைவருமே சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது முரண்நகை. முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்த கார்த்திக் பழங்குடிப்பெண்ணான ரோகிணியை மணந்தபோதும் அவர் தேவர் சாதி அடையாளமாக முன்னிறுத்தப்பட்டார்.
சாதிமறுப்புத் திருமணத்தில் பிறந்த கௌதம் கார்த்திக்கும் மீண்டும் சாதி அடையாளமாக முன்னிறுத்தப்பட்டார். அவரோ மலையாளப்பெண்ணான மஞ்சிமா மோகனை மணந்துகொண்டார். சரத்குமார், கருணாஸ் என சாதிமீறித் திருமணம் செய்துகொண்டவர்களும் தங்கள் சுய ஆதாயத்துக்காக சாதிய அடையாளங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் இதை உணராமலே இத்தகைய சாதிய அரசியலைத் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் தேவர் மகனில் முன்வைக்கப்பட்ட வன்முறை எதிர்ப்பு, சுயவிமர்சனக் கூறுகளை அகற்றிவிட்டு அதன் சாதிய அடையாளத்தை மட்டுமே பெருமிதமாக மாற்றிவிட்ட இடைநிலைச்சாதி மனநிலை தொடர்கிறது. இதைக் கமல் உணராதவரை தன்மீதான விமர்சனங்களுக்கு அவர் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
சில குறிப்புகள்
* ‘தேவர்மகன்’ குறித்த மாரி செல்வராஜ் கருத்துகள் குறித்த விமர்சனங்களுடன் தன் படத்தில் நடிக்கும் நடிகர்களையும் உதவி இயக்குனர்களையும் மாரிசெல்வராஜ் அடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாரி செல்வராஜ் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களுக்கு இத்தகைய ஆண்டை மனோபாவம் இருக்கிறது. அது நிச்சயம் கண்டனத்துக்குரியது என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம் மாரிசெல்வராஜின் இத்தகைய அணுகுமுறை தனித்து விமர்சிக்கப்படவேண்டியதே தவிர, அவரது குரலின் நியாயத்தை மழுங்கடிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடாது. பாரதிராஜா நடிகர்களை அடித்ததையும் பாலச்சந்தரிடம் மோதிரக்கையால் குட்டு வாங்கியதையும் பெருமையான தகவல்களாகப் பார்த்தவர்கள் மாரிசெல்வராஜ் நடத்தையை மட்டும் குற்றம்சாட்டுவது பக்கச்சார்புள்ள மனநிலை என்றுதான் சொல்லவேண்டும்.
* சில தலித் தரப்பு விமர்சனங்களில் உள்ள போதாமைகளையும் இங்கு குறிப்பிட வேண்டும். தங்கள் சாதியைச் சேர்ந்த / தங்கள் அபிமானத்துக்குரிய இயக்குநர்களின் திரைப்படங்களை மட்டும் கொண்டாடுவது, அவை சிக்கலுக்குள்ளாகும்போது மட்டும் எதிர்வினை புரிவது, ‘மாவீரன் கிட்டு’, ‘விட்னஸ்’ போன்ற திரைப்படங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பது போன்ற போக்கு ஆரோக்கியமானதல்ல.
மேலும் ‘தேவர்மகன்-போற்றிப்பாடடி’ பெண்ணே பாடல் விளைவுகளில் கமலுக்கு எப்படி பங்கிருக்கிறதோ அதேபோல் இளையராஜாவுக்கும் பங்கிருக்
கிறது. ஆனால் கமல்ஹாசனைக் குற்றம் சாட்டும் பலர் இளையராஜாவைப் புனிதப்படுத்தி அவரை விமர்சனங்களில் இருந்து காப்பாற்றி நியாயப்படுத்தும் வினோதத்தையும் பார்க்கிறோம். 80களின் தமிழ் சினிமாக்களில் சாதியக்கூறுகள் குறித்த ஆய்வுகளை முன்வைக்கும் பலர் அந்த சினிமாக்களின் இயக்கு
நர்கள், நடிகர்களை மட்டும் விமர்சனத்துக்குள்ளாக்கிவிட்டு, அத்தகைய திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் மனநிலையை
உருவாக்கியதில் இளையராஜா இசையின் பங்கு குறித்து கவனமாகத் தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் தனிப்பட்ட கருத்துகளையோ அவரது சமீபத்திய மோடி ஆதரவு கருத்துகளையோ விமர்சிக்கும் அனைவரையும் சாதிவெறியர்களாக முத்திரை குத்தி, இளையராஜாவைப் புனிதப்படுத்தும் போக்கும் அநீதியானது. அடையாள அரசியலின் ஆபத்துகளில் இதுவும் ஒன்று.
* சமீபத்தில் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்து ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படம் வெளியானது.’தேவர்மகன்’ கலைநேர்த்தியுடன் அந்தப் படத்தை ஒப்பிட முடியாது என்றாலும் உண்மையில் கமல் தேவர்மகனை அரசியல் சரித்தன்மையுடன் எடுத்திருந்தால் இப்படித்தான் எடுத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.
‘தேவர்மகன்’ ஒரே சாதிக்குள்ளான வன்முறையைப் பேசியது என்றால் ‘கழுவேத்தி மூர்க்கன்’ தலித் சாதி மீது செலுத்தப்படும் வன்முறையைப் பேசியதுடன் ஜனநாயக உணர்வுள்ள இடைநிலைச்சாதியினர் ஒடுக்கப்படும் தலித் மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும் வர்ணாசிரமப்படிநிலையில் முக்குலத்தோரும் பார்ப்பனர்களுக்குக் கீழ்ப்படிநிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. சாதி என்பது தலித்துகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே சுமை, சாதியம் தன் சொந்தச்சாதியினரையும் பலிகொள்ளத் தயங்காது என்பதையும் அழுத்தமாக முன்வைத்தது. இதைப் பலர் கொண்டாடியது வரவேற்கத்தக்கது என்றாலும் சிலர் தங்களுக்கேயுரிய பாரபட்ச சார்பு நிலையுடன் ஒதுங்கிநின்றதும் கவனிக்கத்தக்கது. மலக்குழி மரணங்களுக்கு எதிரான ‘விட்னஸ்’ திரைப்
படத்துக்கும் இத்தகைய மௌனமே சாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் சாதி குறித்த வெளிப்படையான உரையாடல் எப்படிச் சாத்தியம்?
‘பெரியாரும் தி.மு.க.வும் ஆதிக்கச்சாதியினருக்கு ஆதரவாளர்கள், தலித் விரோதிகள்’ என்று சிலர் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டிவருகிறார்கள். ஆனால் கலைஞர் குடும்பத்திலிருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், தலித் ஆதரவு படங்களான நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்களில் நடிக்கிறார். நூற்றாண்டுகாலத் தமிழ் சினிமாவில் பன்றியைக் கையில் ஏந்தியபடி காட்சிதரும் முதல் தமிழ் சினிமா நாயகன் உதயநிதிதான். இடைநிலைச்சாதியத்தின் மீது விமர்சனம் வைத்து தலித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தில் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த அருள்நிதி நடிக்கிறார். ஆனால் திராவிட இயக்க வெறுப்பு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் உதயநிதி, அருள்நிதியின் செயற்பாடுகள் குறித்து எங்காவது கருத்து தெரிவித்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.