2022 ஆம் ஆண்டே ராக்கெட் பாய்ஸ் முதல் பாகம் வந்துவிட்டது. அப்போதே இந்த சீரிஸ் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலரும் விமர்சனம் எழுதியிருந்தனர். “சரி, பார்க்கலாம்” எனப் பலமுறை நினைத்தேன் ஆனாலும் பார்க்கவில்லை. இந்தியாவில் ராணுவ வீரர்கள் தொடர்பான, ரா புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான கதைகளில் வரும் Monotonous நம்மைப் பாடாய்ப் படுத்திவிடும். சாதாரணமாகவே, இந்தியில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்களில் வலதுசாரி சிந்தனைகள் ஆறாக ஓடும். அதனோடு, அணுசக்தியும், விண்வெளியும் கலந்த கதை என்றால் பாதாளமும் விண்வெளியும் கலங்கிவிடாதா என யோசித்தேன். அதனுடைய இரண்டாம் பாகம் வந்தபிறகு, ‘ராக்கெட் பாய்ஸ் மிகச் சிறப்பாக இருக்கிறது’ எனப் பலரும் பேச ஆரம்பித்தார்கள். நமக்குப் பிடிக்காத சில விசயங்கள் இருக்கின்றன என்பதற்காக அழகான படங்களைப் பார்க்காமல் இருக்க வேண்டுமா என்ன?
இந்த வெப் சீரிஸில் பல குறைகள் இருக்கின்றன. அவற்றை இந்தக் கட்டுரையின் பின்பகுதியில் தருகிறேன். இந்தியாவில் அறிவியல் செயல்பாடுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவும், குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைப் புகுத்தவும் இதுபோன்ற சீரிஸ்கள் பயனுடையவையாக இருக்கும். இரண்டு அறிவியல் அறிஞர்களின் கதை என்றால் மக்கள் விரும்பிப் பார்க்க மாட்டார்கள் என நினைத்துக் கதையில் மசாலாவையும் சேர்த்திருக்கிறார்கள். ராக்கெட் மனிதர்களைப் பற்றிய படமா இல்லை, ஜேம்ஸ்பாண்ட் படமா என யோசிக்க வைக்கும் அளவிற்கு மசாலா!
ராக்கெட் பாய்ஸின் கதையைப் பார்ப்போம்: 1962-இல், இந்திய எல்லையைத் தாண்டி சீனா அத்து மீறல் செய்து போரில் இறங்குகிறது. இது தொடர்பான இந்திய அறிவியல் அறிஞர்கள் கூட்டத்தில், “நேருவின் சகோதரத்துவக் கோட்பாடு எல்லாம் தோல்வியடைந்துவிட்டது. நம்மீது தாக்குதலும் நடந்து விட்டது” என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, “அணுகுண்டு தயாரிக்கும் நேரம் வந்துவிட்டது… நாம் ஏற்கனவே காலம் தாழ்த்திவிட்டோம்” என்று ஹோமி பாபா கூறுகிறார். அதை அறிவியல் அறிஞர்கள் பலரும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக, பாபாவின் ஆருயிர் நண்பர் விக்ரம் சாராபாய் எதிர்ப்பதோடு மட்டுமில்லாமல் அறிவியல் கூட்டமைப்பிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுவதாகக் கூறுகிறார். இப்படி ஒரு முன்னோட்டத்தோடு கதையைத் தொடங்குகிறார்கள்.
கதை பின்னோக்கிச் சென்று 1940களில் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்ட காலம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் விடும் கனவுகளோடு படித்துக்கொண்டிருக்கும் விக்ரம் சாராபாய், போர் காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு இந்தியா வருகிறார். இதே போல மேலை நாடுகளில் அணுசக்தி இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று, பல ஆய்வுகளை நிகழ்த்தி வந்த ஹோமி பாபாவும் போர் காரணமாக இந்தியா வந்துவிடுகிறார். பெங்களூரில் இருக்கும் Indian Institute of Science என்ற நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
நோபல் பரிசு வென்ற சர் சி.வி. ராமன் அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். விக்ரம் சாராபாயும் புதிதாக அந்த நிறுவனத்தில் பணிக்கு வந்து சேருகிறார். அங்கு, Nuclear Phisics தொடர்பாக Robert Millikan பலூன் experiment செய்ததுபோல பாபாவும் ஓர் ஆய்வை மேற்கொள்வதற்கு முயற்சி செய்கிறார். பலூனை மிக உயரத்தில் பறக்கவிட்டு radiation intensity-யைக் கண்டறிவதுதான் இந்த சோதனை. அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருப்பதால், ஜப்பானிலிருந்து வரவேண்டிய ரப்பர் போதுமான அளவிற்கு வராமல் இருக்கிறது. அதனால் இவருடைய ஆய்வு தடைபடுகிறது. அவரிடம் “ரப்பருக்குப் பதிலாக Polyethylene பயன்படுத்தலாமே” என விக்ரம் சாராபாய் யோசனை சொல்கிறார்.
அந்த தருணம் இந்தியாவின் இரண்டு மாபெரும் அறிவியல் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. இரண்டு ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். அதன்பின்பு சர் சி.வி. ராமனோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஹோமி பாபா IISc-யை விட்டுச் சென்றுவிடுகிறார். JRD Tata-வின் நிதி உதவியோடு Tata Institute of Fundamental Research என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் இயக்குநராக இருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாள், நேரு கொடுக்கும் பார்ட்டியில் ஹோமி பாபாவும் கலந்துகொள்கிறார். நேருவிடம் தோரியம் அடங்கிய கல்லைப் பரிசாகக் கொடுக்கிறார். இந்தக் கல்லின்மூலம் எதிர்கால இந்தியா மின்சாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என்பதைச் சிம்பாலிக்காக எடுத்துச் சொல்
கிறார். ஜவஹர்லால் நேரு Mad Scientists என்று ஒரு list வைத்திருக்கிறார் அதில் முதலாவது இடத்தில் இருப்பவர் ஹோமி பாபா. அவரையே இந்திய அறிவியல் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவராக்கிவிடுகிறார்.
ஹோமி பாபாவைத் தலைவராக்கியதால் மெஹ்திரஸா கோபமடைகிறார். அமெரிக்க உளவு அதிகாரிகளோடு செயல்படுகிறார். இடையில் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அழைப்பு வருகிறது. மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு MP-யாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்களவையில் நேருவின் ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்விகளை எல்லாம் பட்டியலிட்டுப் பேசுகிறார். குறிப்பாக, அன்னம் தண்ணீர் இல்லாமல் மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கும்போது அணுசக்திக்காகக் கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவது குறித்துக் கேள்வி கேட்கிறார்.
“எனக்குத் தெரிஞ்சு இனி எந்த நாடும் சமாதான வாதியாக இருக்குற option இருக்காது. Nuclear weapons இருக்குறவங்ககிட்டதான் இதுக்கான privilege கண்டிப்பா இருக்கும். அமெரிக்கா போருக்கு எதிரான பிரகடனத்தை உரிமையோடு வெளிப்படுத்தும். ஏன்னா? அவங்களுக்குத் தெரியும், எந்த ஒரு நாடும் அவங்க நாட்டை attack பண்ணமாட்டாங்க. எந்த நாடு வலிமையான ஆயுதம் வைத்திருக்கிறதோ அந்த நாடுதான் சமாதானத்தைப் பேசும் தகுதியுடைய நாடாக இருக்கும்.” என்பதை நேருவுக்கு எடுத்துச்சொல்கிறார் பாபா.
ஆனால், நேருவால் பாபாவின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “Long term energy through nuclear power மூலம் கொடுப்பேன் எனத் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி குடுத்திருந்தேன். உன்மேல நம்பிக்கை இருந்துச்சு. நம்மனால இதப்பண்ண முடியும்னு நினைச்சேன். உங்க திட்டம் வேலை செய்யலன்னா நான் கோடிக்கணக்கான மக்கள ஏமாத்துனவனா ஆயிருவேன். எல்லாரும் என்னை fraud-ன்னு சொல்லுவாங்க” என வருத்தத்தோடு பாபாவிடம் சொல்கிறார்.
அணுசக்தியின் முதல் பயன்பாடு மின்சாரம் என்பதை பாபாவும் ஏற்றுக்கொள்கிறார். “இந்திய நாட்டு மக்களே! உங்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நாங்கள் அணுசக்தியின் மிகப் பெரும் சக்தியைக் கொண்டு உங்கள் வீடுகளை ஒளிமயமாக்குவோம். அணுசக்தியை மேம்படுத்துவதும், பயன்படுத்துவதும் முன்னேற்றத்தின் முதல்படியாக இருக்கும். நானும் நம் தலைவர் நேருவும் இணைந்து இந்த நாட்டிற்குச் சேவை செய்வோம்” என்று வானொலி மூலம் மக்களிடம் பேசுகிறார் பாபா.
ஆனால் அணுசக்தியின்மூலம் மின்சாரம் எடுப்பதற்கான பாதை மிக நீண்டதாக இருக்கிறது. அவர்கள் நினைத்த காலத்திற்குள் அதை சாதிப்பது மிகக் கடினம். மின்சாரத்தில் தன்னிறைவு பெறவேண்டுமென்றால் அதற்கு “Swimming Pool Reactor” முதல்படியாக இருக்கும் என நினைத்து அதனை உருவாக்குகிறார்கள். அது வெற்றிகரமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதற்கு APSARA என்று பெயரிடுகிறார் நேரு.
இன்னொரு பக்கம், விக்ரம் சாராபாய் Ahamadabad Textile Industry’s Research Association (ATIRA) ஒன்றை ஆரம்பித்து அப்பாவின் ஜவுளித்துறை உற்பத்தியின் வளர்ச்சிக்கு முயற்சி செய்கிறார். தொழில் வளர்ச்சியில் அறிவியலின் பயன்பாட்டைத் தவிர்க்கமுடியாது. இப்போதே வெளிநாடுகளில் நம்மை விடப் பல மடங்கு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அறிவியலின் பாதையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் தொழிற்சாலைகளையே நடத்த முடியாமல் மூட வேண்டிய அபாயம் நேரும். அப்போது பணியாளர்களுக்கு நிரந்தரமாகவே வேலையில்லாமல் போகும்” என்பதைத் தொழிலாளர்களிடம் எடுத்துச் சொல்கிறார் விக்ரம் சாராபாய்.
விக்ரம் சாராபாய் அறிவியல் சாதனைகள் பலவற்றைச் செய்கிறார். மனைவி மிருணாளினியோடு இணைந்து தர்பன் என்னும் நாட்டியப் பள்ளியை உருவாக்குகிறார். கமலா சவுத்திரி என்பவரோடும் உறவில் இருக்கிறார். அவரோடு இணைந்து IIM Ahamadabad என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார். இப்படியாக, விக்ரம் சாராபாய் பயங்கர பிஸியாக இருக்கும் சூழலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது விண்ணில் ராக்கெட் செலுத்த வேண்டும் என்று அவர் கண்ட கனவை மறந்தே போய்விடுகிறார். தூசுதட்டிப்போன அந்தக் கனவை அவரிடம் சீடராகச் சேர்ந்த அப்துல்கலாம் தட்டி எழுப்புகிறார்.
கேரளாவில் இருக்கும் தும்பா என்ற இடம் ராக்கெட் ஏவுகணை செலுத்துவதற்கு ஏற்றது என முடிவுசெய்கிறார்கள். ஆனால், ‘ராக்கெட் செலுத்துவதற்கான நிதி ஒதுக்குவது என்றால் மக்கள் சரமாரியாகக் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு எப்படிப் பதில் சொல்வது’ என நேரு யோசிக்கிறார். அவரிடம் “நாட்டின் பாதுகாப்பிற்கு ராக்கெட் செலுத்துவது முக்கியம் என்பதைச் சொல்லுங்கள். Telecommunication, Satellite Navigation, Weather Mapping, Meteorology ஆகியவற்றை முன்வைத்தால் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். ஆனால், நாட்டின் பாதுகாப்பு என்று சொல்லிவிட்டால் அதுகுறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்” என்பதை எடுத்துச்சொல்கிறார்கள்.
இந்தியாவின் நீண்ட நாள் தேவைக்கு இதபோன்ற அறிவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும் என்பதை நேருவும் புரிந்துகொண்டு அதற்கான நிதியை ஒதுக்கலாம் என நினைக்கும் போதுதான் 1962-இல் இந்திய-சீனப் போர் தொடங்குகிறது. அதுதொடர்பான அறிவியல் அறிஞர்களின் கூட்டத்தில்தான் பாபா அணுகுண்டு தயாரிப்பைப் பற்றிப் பேசுகிறார்.
1962-க்குப் பிறகு நேருக்கு அரசியலில் பலத்த பின்னடைவு ஏற்படுகிறது. அந்தச் சூழலிலும் பாபா நேருவிடம் அணுகுண்டு தயாரிப்பைப் பற்றியே பேசுகிறார். இதனால் நேரு கோபமடைகிறார். அவரிடம் பாபா, “ ஒரு Atom bomb-ம்மை வச்சு நான் என்ன செய்யப் போறேன். என் வீட்டு backyard-ல்ல வச்சுக்கப் போறேனா? இல்ல, பாபா மியூசியத்தில வச்சுக்கப் போறேனா? சீனா போர் தொடங்குன உடனே, நீங்க கென்னடிகிட்ட உதவிக்குப் போனீங்க. அவங்க உதவி செஞ்சாங்களா? ஆயுதத்தால நீங்க தன்னிறைவு பெறாதவரை உங்களுக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டாங்க” என்பதை வலியுறுத்துகிறார்.
இதற்கிடையில் இன்னொரு பக்கம் விக்ரம் சாராபாய் தன்னுடைய ராக்கெட் பாய்ஸ்களைத் தூண்டிவிட்டு தும்பாவில் ராக்கெட் செலுத்துவதற்கான திட்டத்தில் இறங்குகிறார். “Jack of all traders, master of none” என்று சொல்வார்கள். ஆனால் “Often time better than a master of one” என்ற கொள்கையோடு சாராபாய் செயல்படுகிறார். போதிய கல்வியறிவும் வளர்ச்சியும் அடையாத நாட்டில் திறமையாகச் செயல்படும் ஒருசிலர் எல்லா பாரங்களையும் சுமந்தாக வேண்டியது அவசியமாகிறது. “I guess we’ve proven that India and Indian Science is at par with the rest of the world. And sky is the limit for us” என்று இந்தியர்களுக்குக் கூறுகிறார். இத்தோடு முதல் சீசன் முடிகிறது.
இரண்டாவது சீசனில் பல்வேறு இக்கட்டான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இந்தியா 1974-இல் எப்படி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது என்பதை விவரிக்கிறார்கள்.
பாபாவுக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்த நேரு இறந்துபோகிறார். இந்திய அரசியலில் குழப்பம் நிலவுகிறது. சிலர் மொரார்ஜி தேசாய் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். காமராஜர், ப.சிதம்பரம் போன்ற வெகுசிலர் இந்திரா காந்தியை முன்னிறுத்துகிறார்கள். மொரார்ஜி தேசாய் நேருவின் குடும்பத்திற்கு எதிராகச் செயல்படக்கூடும் எனக் கணித்து லால்பஹதூர் சாஸ்திரியைப் பிரதமராக்குகிறார்கள். லால்பஹதூர் சாஸ்திரி பிரதமரான இரண்டு வருடங்களுக்குள், தாஸ்கண்ட் அமைதி ஒப்பந்தத்திற்காகச் சென்ற இடத்தில் மரணமடைந்துவிடுகிறார்.
இந்திய ராணுவம், அணுசக்தித் துறை போன்றவற்றின் ஆதர்சமாக இந்திரா காந்தி இருக்கிறார். அவரிடம் அணுகுண்டு பரிசோதனை செய்வதன் அவசியத்தை பாபா எடுத்துச் சொல்கிறார். இந்திரா காந்திக்கு அதில் பூரண உடன்பாடு இருக்கிறது. ஆனால் அமெரிக்க உளவு நிறுவனம் (CIA), ‘பாபா அணுகுண்டு தயாரித்தால் அது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கையாக இருக்கும்’ என நினைத்து அவரைக் கொல்வதற்குச் சதி செய்கிறார்கள்.
‘விமான விபத்து ஒன்றில் ஹோமி பாபா இறந்தார்’ என்ற ஒரு வரி வரலாற்றுச் செய்தி எனக்குத் தெரியும் என்பதால் படத்தில் ஹோமி பாபா ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறும்போதெல்லாம் அந்தக் காட்சியைப் பதற்றத்தோடுதான் பார்த்தேன். கடைசியாக அந்தக் காட்சியும் வருகிறது. பாபா இறப்பதற்கு முன்பு ஏறத்தாழ ஒருமணி நேரப் படம் அதற்கான tempt-ஐ அதிகரித்துக் காட்டுகிறது. இறுதியில் பாபா பயணம் செய்யும் அந்த விமானக் காட்சியில் நம்முடைய உள்ளமெல்லாம் உறைந்து நிற்கிறது. எதிர்பாராத நேரத்தில் அந்த விமானம் வெடித்துச் சிதறுகிறது.
பாபா இருந்திருந்தால் அறிவியலில் மிகப் பெரிய பாய்ச்சலை இந்தியா நிகழ்த்தியிருக்கும் என்ற உணர்வை வெப் சீரிஸின் மூலம் கடத்தியிருக்கிறார்கள். அது இந்த சீரிஸின் மிகப் பெரிய வெற்றி. Jim Sarbh-இன் நடிப்பை இதற்கு முன்பு பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் பெண்களிடம் செய்யும் flirt, நெருக்கமான காதல் காட்சிகள், அழகான ஆங்கிலம், அப்பாவியான முகத்தோற்றம், நகைச்சுவையான வசனம் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸில் ஹோமி பாபாவின் கேரக்டரில் நூறு சதம் மிகச் சரியாகப்பொருந்தியிருக்கிறார். அவருடைய வழக்கமான சேட்டைகளை எல்லாம் ஹோமி பாபாவின் மேனரிசமாக மாற்றியிருக்கிறார். அதனால், வெப் சீரிஸாக இருந்தாலும் அவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் காட்சி முடிந்த பிறகு உறைந்துபோய் அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு மனம் ஒப்பவில்லை.
பாபாவின் கனவை அடுத்து வரும் விக்ரம் சாராபாய் கொஞ்ச தூரம் கொண்டு செல்கிறார். 1971-இல் விக்ரம் சாராபாயும் இறந்துவிடுகிறார். அதன்பிறகு ரமணா, அப்துல்கலாம் போன்றவர்கள் பாபாவின் அணுகுண்டு கனவை முன்கொண்டு செல்கிறார்கள். இறுதியில் அமெரிக்காவின் உளவுக் கண்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரான் – 1 அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்துகிறார்கள்.
“ஒரு உண்மையான தலைவன் என்பவன் யார் என்றால் அவன் தன் நாட்டை நல்ல நிலையில் உருவாக்கும் எண்ணம் கொண்டிருப்பான். இடையில் அவன் மறைந்தும் போகலாம். அவன் மறைந்தாலும் அவன் எண்ணங்கள் மறையாது” என்ற ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளோடு படத்தை முடிக்கிறார்கள். அழகான நெகிழ்வூட்டும் முடிவுதான்!
உண்மைக் கதையைத் திரைப்படமாகச் சொல்லமுடியாது. கொஞ்சம் நாடகமாக்கித்தான் கொடுக்கமுடியும். விக்ரம் சாராபாய் – மிருணாளினி காதலையும், விக்ரம் சாராபாய் – கமலா சவுத்திரியின் நெருக்கத்தையும், அதனால் குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்களையும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அதே
போல ஹோமி பாபா பிப்ஸியின் காதல் கதையும் சுவையாகக் காட்டியிருக்கிறார்கள். பிப்ஸி இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகும்கூட அவர்களின் கம்பானியன்ஷிப் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாத அந்த நெருக்கத்தைப் படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
லால் பஹதூர் சாஸ்திரியும், ஹோமி பாபாவும் பதிமூன்று நாள் இடைவெளியில் இறந்திருக்கிறார்கள். Homi Babha’s Death: An unfortunate accident of the hands of the crow என்ற நூலை அடிப்படையாக வைத்து அவர்களின் மரணம் தற்செயலானது அல்ல, அவற்றிற்குப் பின்னே அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதி இருக்கிறது என்கிறார்கள். திரைப்படத்திற்கு விறுவிறுப்பு அவசியமானது. இந்தக் கதைக்கு இதைப்பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
முதல் எபிஸோடில், “இந்து மற்றும் முஸ்லிம் ஒரு நாட்ல ஒண்ணா இருப்பாங்கன்னு நினைச்சா நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க. அந்த தப்பு நம்முடைய இந்த நாட்டையே அழிச்சுரும்” என்று முகம்மது அலி ஜின்னா வானொலியில் பேசுகிறார். இதைக் கேட்டுவிக்ரம் சாராபாய் வருத்தம் அடைகிறார் என்றும்; ராமேஸ்வரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிராகப் பேசுகிறார்கள். அங்கிருக்கும் ஒரே ஒரு இஸ்லாமியச் சிறுவன் (மட்டும்) “ ஏன் வெறுப்பை விதைக்கிறீர்கள்… குழந்தைகள் மனத்தில் அன்பை விதையுங்கள்” என்று பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறான். அந்தச் சிறுவன் APJ அப்துல்கலாம் என்றும் காட்டுகிறார்கள். இந்திய தேசபக்தி சீரிஸில் முஸ்லிம்களை இப்படி சித்திரிப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் மன்னிக்கமுடியாத ஒரு பெருந்தவற்றை இந்த சீரிஸை எடுத்தவர்கள் செய்திருக்கிறார்கள்.
இந்த சீரிஸில் வரும் மெஹ்தி ரஸா என்ற கதாபாத்திரம் திரைக்கதையின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம் என்று சொல்கிறார்கள். ஆனால் மெஹ்தி ரஸா என்ற கதாபாத்திரம் மேக்நாத் சாஹா என்ற உண்மையான அறிவியல் அறிஞரின் சாயலைக் கொண்டது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் மாற்றுவது தவறு இல்லைதான். ஆனால் ஒரு வரலாற்று மனிதனைக் கொச்சைப்படுத்துவது பெருந்தவறு. மிக எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் 1970 காலகட்டத்து சினிமா கதையை எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எம்.ஜி.ஆர். அணிவது போன்ற தொப்பி, கண்ணாடி அணிந்துகொண்டு ஒரு நடிகையை பாலியல் சித்திரவதை செய்வதுபோலக் காட்டி, அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறொரு பெயரைச் சூட்டிவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். இதுபோனற கொடுமையைத்தான் இந்தப் படத்தை எடுத்தவர்கள் செய்திருக்கிறார்கள்.
மேக்நாத் சாஹா என்பவர் அன்றைய ஒருங்கிணைந்த வங்காளத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் (நாமசூத்திரன் என்ற வகுப்பில்) பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுதியில் சாதிரீதியான கொடுமைகளை எதிர்கொண்டவர். இருந்தபோதும், கர்ஸனின் வங்கப் பிரிவினையை எதிர்த்துப் போராடியவர். இதனால் அவருக்குக் கிடைத்துக்கொண்டிருந்த கல்வி உதவித்தொகையை இழந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த புரட்சிகர இயக்கமான அனுசீலன் சமிதியில் உறுப்பினராக இருந்தவர். ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கமான ஸின் ஃபென்னின் அயர்லாந்து குடியரசு இயக்கத்தை ஆதரித்தவர்.
அறிவியலில் சாஹாவின் பங்களிப்பு மிகப் பெரியது. சத்தியேந்திரநாத் போஸோடு இணைந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் அறிவியல் கோட்பாடுகளை மொழிபெயர்த்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களை Royal Society அங்கீகரிக்கும். இந்தியாவிலிருந்து ராயல் சொஸைட்டியில் அங்கீகரிக்கப்பட்ட பத்து அறிவியல் அறிஞர்களில் மேக்நாத் சாஹாவும் ஒருவர். 1938ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸோடு இணைந்து இந்தியத் திட்டக்குழுவை உருவாக்கியவர்.
கல்கத்தாவிலிருக்கும் அணு இயற்பியல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இந்தியாவில் முதன் முதலில் Cyclotron என்ற துகளை உருவாக்கியவர். நட்சத்திரங்களின் ஒளி உமிழ்வைப் பற்றிய கணித சூத்திரத்தைக் கண்டறிந்தவர். அதற்கு Saha Equation என்று பெயர். 1951 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து மக்களவை உறுப்பினராகச் சுயேட்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களவையில் நேருவைக் கடுமையாக விமர்சித்தாலும் அவருடைய திட்டக்குழுவை உருவாக்குவதற்குப் பெரும் உதவி செய்தவர். சாஹா ஒரு பகுத்தறிவுவாதியும்கூட.
ஹோமி பாபாவின் சமகாலத்தில் வாழ்ந்த இத்தகைய அறிவியல் அறிஞரின் பெருமையை மறைத்ததோடு, அந்தக் கதாபாத்திரத்தைச் சிதைத்து வில்லனாகவும் காட்டியிருக்கிறார்கள். மேக்நாத் சாஹா என்ற தலித் அறிஞரை வெறுப்புக்குரிய மெஹ்தி ரஸா என்ற இஸ்லாமியப் பாத்திரமாக மாற்றியிருக்கிறார்கள். ஓர் அறிவியல் அறிஞரை இப்படிக் காட்டுவதன் உள்நோக்கம்தான் என்ன?
வேறொன்றுமில்லை, சாஹா உலகெங்கும் இருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர். அவர் காதர் இயக்கத்தையும், அனுசீலன் சமிதியையும் ஆதரித்ததுபோல முஸ்லிம் லீக்கையும் ஆதரித்திருக்கிறார்.
இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்ற முகம்மது அலி ஜின்னாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். இந்த ஒரே காரணத்திற்காக சாஹாவைக் கதையில் ஒரு முஸ்லிம் கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டார்கள். அவரை ஹோமி பாபாவின் எதிரிபோலச் சித்திரித்துவிட்டார்கள்.
ஹோமி பாபா மெஹ்தி ரஸாவிடம், “உங்கள் நிறுவனத்திற்கு முஸ்லிம் லீக் நிதியுதவி செய்கிறது. தொடர்ந்து நான் இங்கு பணியாற்ற முடியாமல் இந்த அரசியல் என்னைக் கவலைக்குள்ளாக்குது. உங்கள் நிறுவனத்தில் மிகச் சிறந்த state of art facilities இருக்கு. But நாளைக்கு ஒரு வேள லீக் demands முடிஞ்சிருச்சுன்னா அதுக்கு அப்புறம், நீங்க எந்த நாட்ட பலப்படுத்திட்டு இருப்பீங்க?” என்று கேட்பதாக இந்த சீரிஸில் ஒரு காட்சியையும் வைத்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இந்தக் கதையில் வில்லனாக ஒருவரை சித்திரிக்க வேண்டுமென்றால் சர் சி.வி. ராமனைத்தான் சித்திரிக்க வேண்டும் என்பேன். அவர் கோபக்காரராக இருந்திருக்கிறார். அறிவு வளத்தை
மற்றவர்களோடு பகிர்வதில் மிகப் பெரிய இறுக்கத்தைக் கடைபிடித்திருக்கிறார். மேலை நாட்டில் படித்தவரான ஹோமி பாபா சர் சி.வி. ராமனோடு இணைந்து பணியாற்றமுடியாது என்று சொல்லித்தான் TIFS உருவாக்கி அங்கு இயக்குநராகச் செல்கிறார். இந்த வெப் சீரிஸிலும் இதைச் சொல்கிறார்கள். சர் சி.வி. ராமன் பார்ப்பனர் என்பதால் அவரைச் சாந்தமானவராகவும், ஆங்கிலேயரின் ஜாக் கொடியைப் பார்த்தால் கோபம் கொள்பவர் போலவும், தேசப்பற்றாளராகவும் காட்டிவிட்டனர். ஓர் அறிவியல் அறிஞர் தலித் என்பதால் அவரை முஸ்லிம் வில்லனாக்கிவிட்டார்கள்!
அதே நேரத்தில், “அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும் இந்திய சந்தையில் மிகப் பெரிய வியாபாரப் பொருள் என்பதால், வரலாற்றில் அவர்வராத இடத்தில் எல்லாம் வந்ததுபோலக் காட்டியிருக்கிறார்கள். பேசாததை எல்லாம் பேசியதுபோலக் காட்டியிருக்கிறார்கள்” என்று சாராபாயின் ராக்கெட் குழுவில் முக்கிய பங்காற்றிய ஆராவமுதனின் மனைவிகீதா என்பவர் சொல்லியிருக்கிறார். சான்றாக, “தும்பாவில் முதன் முதலில் ராக்கெட் ஏவும்போது அங்கு ஹோமி பாபாவும் விக்ரம் சாராபாயும் இல்லை. அப்துல் கலாமும் இல்லை” எனச் சொல்கிறார் கீதா.
இதுபோல ஏராளமான குளறுபடிகள் இந்த வெப் சீரிஸில் இருக்கின்றன. அணுகுண்டுதான் இந்த உலகத்தில் மிகக் கொடிய ஆயுதம் என நினைக்கிறோம். ஆனால் சினிமா, சீரிஸ் என்ற ஊடகத்தின் வழியாக வலதுசாரி இயக்குநர்கள் இந்திய மக்களின் மனங்களில் விதைக்கும் சாதி, மத துவேசம்தான் இந்த உலகத்தின் மிகக் கொடிய ஆயுதம். வெப் சீரிஸ் என்ற பெயரில் இதைத் தொடர்ந்து செய்கிறார்கள். இந்த எச்சரிக்கையை மனத்தில் வைத்துக்கொண்டுதான் ராக்கெட் பாய்ஸையும் பார்த்து ரசிக்க வேண்டும்!
sankarthirukkural@gmail.com