மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் நான் சேர்ந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தன. பறவை அவதானிப்பில் ஆர்வமுடையோர் சனிக்கிழமை கல்லூரி நுழைவாசலருகே காலை 6.30 மணிக்கு வரவும் என்ற அறிவிப்பை பார்த்து விட்டு  பத்து, பன்னிரெண்டு பேர் அங்கு கூடியிருந்தோம். அந்தக் குழுவை நடத்திச் சென்ற இளைஞர் “ என் பெயர் கிஃப்ட்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 400 ஏக்கர் பரப்புடைய அந்த வளாகத்தின் பெருமளவு புதர்க் காடுதான். அந்த நடையில் நான் பார்த்த மணிப்புறா (Spotted Dove ) இன்றும் நினைவிலிருக்கின்றது.

அக்கல்லூரியில் கணிதப் பேராசியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கிஃப்ட் சிரோமணி என் வாழ்நாள் நண்பரானார். நான் மிகவும் மதித்த ஆளுமைகளுள் ஒருவர். கணினி பயன்பாட்டிற்கும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்கும், தமிழக கலைவரலாற்றிற்கும் இவரது பங்களிப்பு இன்னும் சரியானபடி உணரப்படவில்லை என்று நான் நினைக்கின்றேன்.

பன்முக ஆய்வாளர். எளிமையின் உரு. தன் மேதமையைக் காட்டிக்கொள்ளவே மாட்டார். தொல்லியல் தடங்களைத் தேடி மோட்டார் பைக்கில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் என சுற்றி வருவார். அறிவியல் ஆய்வே தனது வாழ்வின் குவிமையம் என்று உறுதிபட நம்பிய கிஃப்ட், அக்கல்லூரியின் முதல்வராகும் வாய்ப்பு வந்த போது, அதை ஒதுக்கி விட்டு ஆய்வில் தனது கவனத்தை செலுத்தினார். அதே சமயம் , கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பிலிருந்து முதுகலை வரை மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடங்களையும் தவறாமல் நடத்தி வருவார்.

1964இல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. இவருக்கு அளிக்கப்பட்ட ஹோமிபாபா நல்கை மூலம் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆறுமாதம் இருந்து கணினி ஆய்வில் ஈடுபட்டார். இவரது ஆய்வுகள் கணினி பயன்பாட்டில் முன்னோடியாக அமைந்தன. Cluster analysis என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டைக் கவனித்து முதன் முதலாக தமிழ் டெலிபிரிண்டர் தட்டச்சுப்பலகையை (keyboard) உருவாக்கினார். இதே கோட்பாட்டின் அடிப்படையில் கற்சிலைகள், கல்வெட்டுகள் இவற்றின் காலத்தைக் கணித்தார். மாமல்லபுரம் இவரது ஆய்வின் முக்கிய களமாயிற்று.

தஞ்சாவூரில் 1932இல் ஆண்டு பிறந்த கிஃப்ட் சிரோமணி, சங்கீத மேதை ஆபிரகாம் பண்டிதரின் தம்பி பேரன். கிஃப்டிற்கும் பாரம்பரிய இசையில் ஈடுபாடு உண்டு. மிருதங்கம் நன்றாக வாசிப்பார். கிறிஸ்தவப் பாரம்பரிய துதிப்பாடல்களான கீர்த்தனைகளில் அவருக்கு நல்ல புலமை உண்டு. மேற்கத்திய இசையிலும் நல்ல பரிச்சயம். பல்லவ சிற்பங்களில் காணப்படும் இசைக்கருவிகளைக் கூர்ந்து கவனித்து, ஒரு நரம்பு கருவியைப்பற்றி எழுதினார். கிஃப்ட் தம்பதியரின் ஒரே மகன், அருள் சிரோமனியும் ஒரு இசைக்கலைஞர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியாராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

கிஃப்ட் இயங்கிய இரண்டு தளங்களில் எனக்கும் ஈடுபாடு. பறவை அவதானிப்பது பற்றி அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதே போல் தொல்லியல் துறையில் அவரது நிபுணத்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. வரலாற்றியலில் கல்வெட்டு மட்டுமே மூலத்தரவாகப் பயன்படும் என்று பாரம்பரிய வல்லுனர்கள் கூறிக்கொண்டிருந்த போது கிஃப்ட் சிலைகளின் உருவ நியதிகள் (Iconography) மூலம் காலக்கணிப்பு செய்ய முடியும் என்று வாதிட்டார். மாமல்லபுரத்து பல்லவ சிற்பங்களில் உள்ள ஆடை, அணிகலனைக் கொண்டு, அது எந்த மன்னரின் காலத்தில் செதுக்கப்பட்டது என்றறிய முற்பட்டார். தரவுகளை கணினியில் ஏற்றி அவரது ஆய்வை தொடர்ந்தார். முதன்முறையாக கலைவரலாற்றில் காலக்கணிப்பிற்கு கணினி பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் இவர் எழுதிய “தென்னிந்திய கோவில் சிற்பங்கள் ” (Temple Carvings of Southern India) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை IBM கம்பெனி சஞ்சிகை 1985இல் வெளியிட்டது.

தொல்லியல் ஆய்விற்குக் களப்பணி முக்கியமானது என்பது அவரது நிலைப்பாடு. ஒரு முறை அவருடன் மதுரைக்கருகே உள்ள நாகமலை சமணச்சின்னங்களைக் காணச் சென்றேன். சமண உருவங்களைப்பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் . அந்த மலையின் மீது நாங்கள் இருந்த போது மதுரையைச் சுற்றி சமணச்சின்னங்கள் கொண்ட மலைகள் இருப்பதையும், அந்த வட்டத்தின் நடுப்புள்ளிபோல் மீனாட்சியம்மன் கோவில் இடம்
பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அறுபதுகளில் மதராஸ் அருங்காட்சியகத்தில் தென்னிந்திய தொல்லியல் கழகம் (Archaeological Society of South India) மாதமொருமுறை கூடுவது வழக்கம். இங்கு நான் மயிலை சீனி வெங்கிடசாமி, டி.என். ராமச்சந்திரன் போன்றவர்களை சந்தித்ததுண்டு.. இந்தக் கூடுகைகளில் கிஃப்ட் தனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வாதிடுவதைக் கேட்டிருக்கின்றேன். சிறப்பாக இவர் பல்லவ தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதினார். சுதந்திர இந்தியாவில் இயங்கிய பெருவாரியான தொல்லியலாளர்கள் உண்மையில் மொழியியலாளர்தாம். சமஸ்கிருதத்தில் பட்டம் வாங்கிவிட்டு, தொல்லியல் துறையில் நுழைந்து தொல்லியலாளர் என்று அறியப்பட்டார்கள்.  ஆகவே அவர்களது ஆய்வுகளில் கல்வெட்டு, இலக்கிய சான்று என சொற்களையே ஆதாரமாகத் தேடுவர். கிஃப்ட் முற்றிலும் புதிய தடயங்களைத் தேடினார்.

பறவையியலில் இவரது ஈடுபாட்டின் மூலம் திருக்கழுக்குன்றம் கழுகுகளைக் கவனிக்க ஆரம்பித்தார். 1977ஆம் ஆண்டில் எழுதிய இதுபற்றிய ஒரு கட்டுரையில் மஞ்சள் கழுகு என்றறியப்படும் இப்பறவைகள் இரண்டு அக்கோயிலின் விமானத்திலேயே கூடுகட்டி குஞ்சு பொறித்திருப்பதை பதிவு செய்தார். ஒரே இடத்தில், தலைமுறை தலைமுறையாக, பழைய கூட்டையே புதுப்பித்து இனவிருத்தி செய்யும் பழக்கமுடையவை இக்கழுகுகள். கடந்த ஐம்பதாண்டுகளாக கோவிலுக்கு இந்த கழுகுகள் வருவதில்லை. இந்தப்பகுதியில் தென்படவும் இல்லை. இந்தியாவில் டிக்லோஃபினாக் என்ற வலிநிவாரணி மருந்து கால்நடைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இறந்து போன இந்த மிருகங்களை இரையாகக்கொண்ட Egyptian vulture (Neophron percnopterus) என்றறியப்படும் இப்பறவைகளின் உடலில் அம்மருந்து கலந்து அவை இனப்பெருக்கம் செய்ய முடியாமல் செய்து விட்டது. இந்தப்பறவைகளை இன்று வெகு அரிதாகவே காண முடிகின்றது. எல்லாவகை கழுகுகளுமே, செம்பருந்து உட்பட இந்த வேதியல் பொருளால் ஏறக்குறைய இன்று அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

இவரது ஆய்வுத்தளம் பரந்த ஒன்று. கோலத்தைப்பற்றிய ஒரு முக்கியான கட்டுரை எழுதினார். தாம்பரம் வளாகத்திலிருக்கும் செடிகொடிகளைக் கூர்ந்து கவனித்து சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட தாவரங்களை இனங்கண்டு ஆவணப்படுத்தினார்.  இதுதான் வாகை மரம் என்றும் இந்த மரம்தான் கட்டுமரம் செய்யப் பயன்படுத்தப்படுவது என்றும் எங்களுக்கு சுட்டிக்காட்டுவார். வண்ணத்துப்பூச்சிகளும் இவரது பார்வைக்குத் தப்பவில்லை. நரிக்குறவர் பற்றி ஆராய்ந்து அவர்களது மொழியான வக்கிரபோலி பற்றி ஒரு நூல் எழுதினார். வானியலில் ஆர்வம் கொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் இரவில், தொலைநோக்கியை வைத்துக்கொண்டு, கல்லூரி மொட்டைமாடியில் ஆர்வமுடையவர்களுக்கு வகுப்பெடுப்பார்.

இவர் புள்ளியியல் துறை தலைவரானபின்,  1970களில் மாணவர்களை வைத்து புள்ளியியல் கருதுகோள்களின் அடிப்படையில் மதிப்பாய்வுகள் (survey) நடத்தினார். முதலில் தாம்பரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கை ரிக்ஷாக்காரர்களைப்பற்றிய ஒரு ஆய்வு. பின்னர் சென்னையில் உள்ள சிறுவர்கள் பலரின் பார்வை ஏ வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றிய இந்த தகவல் பிரதமர் இந்திரா காந்தி வரை சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் தேர்தல் சமயத்தில் இந்தத்துறை மதிப்பாய்வு செய்து, யார் தேர்தலில் வெல்ல வாய்ப்பிருக்கின்றது என்பதைத் துல்லியமாக கணித்தது. அவர் நடத்திய எல்லா மதிப்பாய்வுகளிலும் கணிப்பு சரியாகவே வந்தது. தேர்தல் காலங்களில் ‘‘கிறிஸ்த கல்லூரியின் மதிப்பாய்வு என்ன சொல்கின்றது” என்று விவரமறிந்தவர்கள் கேட்பது வழக்கம். எல்லா தேர்தலுக்கு முன்னும் நடத்தப்பட்ட இந்த மதிப்பாய்வு பழக்கம் 1998இல் சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது.

அவர் பணி செய்துகொண்டிருந்த அந்தத் துறையிலேயே விரிவுரையாளராக இருந்த ராணிக்கும் இவருக்கும் திருமணம் 1955இல் நடந்தது. இருவரும் இணைந்து கணினி பயன்பாடு சார்ந்த பல தலைப்புகளில் ஆய்வு செய்து முன்னோடி கட்டுரைகளை வெளியிட்டனர். 1970 ஆண்டு இந்தக் கல்லூரியில் புள்ளியியல் துறை ஆரம்பித்த போது கிஃப்ட் அதன் தலைவரானார்.

தமிழ் எழுத்துருவில் பேராசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு.பத்து குறள்களை எடுத்துக்கொண்டு வெவ்வேறு காலகட்ட தமிழ் எழுத்தில் குறள் பாக்கள் எப்படி எழுதப்பட்டிருந்தன என்பதைக் காட்ட கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் நூலை வெளியிட்டார்.  பிராமி எழுத்துரு பற்றிய இவரது ஆய்வு சிறப்புக் கவனம் பெற்றது. அதிலும் இந்த எழுத்துருவில் புள்ளியின் இடத்தைப்பற்றி கிஃப்ட் விளக்கி எழுதினார் “தமிழ் பிராமி ஆய்வில் கிஃப்ட் சிரோமணி ஒரு சாக்ரடீஸ். யாருடைய முடிவையும் ஆய்வில்லாமல் ஏற்றுக்கொள்ள மாட்டார். கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருப்பார்” என்று ஐராவதம் மகாதேவன் தனது கட்டுரை ஒன்றில் ஆரம்பிக்கின்றார்.

அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் தேடி எடுத்த பழங்கற்கால தொல்சின்னங்களைக் கணினியின் துணை கொண்டு காலக்கணிப்பு செய்தார். அதே போல் கல்வெட்டுகளின் ஒளிப்படங்களில் கணினியின் மூலம் ஒரு புதிய தெளிவை உருவாக்கி எழுத்துவாசிப்பதை  எளிதாக்கினார்.

மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் 33 ஆண்டுகள் பணி செய்த காலத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள மாணவர்கள் அவரிடம் ஆலோசனை கேட்க வருவார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்த அவரது வீட்டின்முன், போடப்பட்டிருந்த ஓலைப்பந்தல் கீழ் அமர்ந்து, மாலையில் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். பலரது முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, திருத்தி ஆலோசனை கூறுவார். ஆய்வுக்கட்டுரையில் மூல ஆதாரங்கள் எவ்வாறு பட்டியலிடவேண்டும் (documentation) என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் இவர்தான். தான் அறிந்ததை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார். இவரது நூல்களில், கட்டுரைகளில் “இதிலிருந்து விவரங்களை எடுத்துப் பயன்படுத்த அனுமதி தேவையில்லை” என்ற குறிப்பு இருக்கும்.

ஐராவதம் மகாதேவனின் சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வால் இவர் ஈர்க்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இவர் காலமாகும் சமயம், சிந்து சமவெளி சித்திரமுத்திரையில் காணும் எழுத்துருவங்கள் பற்றிய, புள்ளியியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பல கட்டுரைகள் எழுதினார். அகால மரணம் தலையிட்டிருக்காவிட்டால் சிந்துவெளி எழுத்துரு பற்றிய சில புரிதல்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம்.

கணினி பற்றிய இவரது சில முக்கியமான ஆய்வுக்கட்டுரைகள் A Perspective in Theoretical Computer Science (1989) என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. கலை வரலாறு சார்ந்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றை, நண்பரும் சக ஆய்வாளருமான மைக்கேல் லாக்வுட் (Michael Lockwood) தொகுப்பாசிரியராக 1992இல் வெளியிட்ட Indological Essays; Commemorative volume II for Gift Siromoney) என்ற நூலில் காணலாம். திருக்கழுக்குன்றம் பட்சிகள் பற்றிய கட்டுரை இதில் அடக்கம். தம் வாழ்நாள் எல்லாம் அறிவியல் நோக்கிற்காகவும் அதிலும் கணினி பயன்பாட்டிற்கும் இவர் உழைத்ததை மனதில் கொண்டு ரோஜா முத்தையா நூலகத்தில் கிஃப்ட் சிரோமணி அறக்கட்டளை பெயரில் வருடம் ஒரு பேருரை நிகழ்த்தப்படுகின்றது.

எப்போதும் ஒர் இளம் புன்னகையுடன் காணப்படுவார். பேச்சில் நல்ல நகைச்சுவை உணர்வு இழையோடும். ஒரு முறை சேத்துப்பட்டு கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளிக்கு ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார். நாங்கள் பின்னால் அமர்ந்திருந்தோம். விரைப்பாக, மெதுவாக வந்த ஜனாதிபதி தனது இருக்கையில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தார். எங்கள் வரிசைக்குப் பின்னிருந்த கிஃப்ட், எங்களுக்கு மட்டும் கேட்கும்படி “மந்திரி ..மாதம் மும்மாரி மழை பொழிகின்றதா?” என்றார்.

theodorebaskaran@gmail.com