உதிரும் காலம்

இவ்வளவு

இலைகள் உதிரும்

ஒரு மரத்தடியில்தான்

நான் ஒரு வாழ்வை

கனவு காண்கிறேன்

ஒரு பிரியத்தை கனவு காண்கிறேன்

அன்பே

உன்னை நான் கனவு காண்கிறேன்

 

அவ்வளவு இதயமற்று

இலைகள் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன

நீ கொஞ்சம் தாமதித்து உதிரேன்

நீயே கடைசி இலையாக இரேன்

 

இலைகள் உதிர்ந்த கிளைகளின் வழியே

காணும் நிலவு

நிலவைப்போலவே இல்லை

வாடிய ஒரு முகம்போல இருக்கிறது

◊◊

மனப்பிறழ்வின் மாலைகள்

‘என் கூடவே இரு’ என்பது

மாலை நேரத்து மயக்கமோ

அந்தியின் துக்கமோ

எதனாலும் இருக்கலாம்

 

என் ஊர் வெகுதொலைவில்

மலையடிவாரத்தில் இருக்கிறது

மலைச்சரிவில் இறங்கிவரும்

காட்டெருது ஒன்று

அந்தியின் மஞ்சள் சூரியன் வீழ்வதை

உற்று நோக்குகிறது

அது அவ்வளவு தனிமையுணர்கிறது

 

‘என் கூடவே இரு’ என்பது

ஒரு உள்ளங்கையை

இன்னொரு உள்ளங்கையில் வைத்து

அழுத்திக்கொள்வதும்

கொஞ்சம் அதற்கு மேலும்

 

மனப்பிறழ்வின் மாலைகளில்

யாரேனும் கூட இருந்தால்

இந்த இருள்

இவ்வளவு எடை மிகுந்ததாக இருக்காது

◊◊

 

காலத்தின் பட்டு நூல்

காலத்தின் பட்டு நூலை

எவ்வளவு கவனமாக

கத்தரிப்பது என்று

உங்களுக்குத் தெரியுமா?

 

இதோ

ஒற்றை நரைமுடியை

இந்தக் கத்தரிக்கோலால்

எவ்வளவு கவனமாக

கத்தரிக்கிறீர்களோ

அவ்வாறேதான்

◊◊

manushyaputhiran@gmail.com