தமிழ்நாட்டில் ஏதேனுமொரு பள்ளி அல்லது கல்லூரிக்குப் பேசச் செல்கிற போது மாணவர்களிடம் கை தட்டு வாங்க வேண்டும் என்றால் ஒரே ஒரு சொல்லை மட்டும் உச்சரித்தால் போதும். அந்தச் சொல்லின் பெயர் ‘அம்மா’. அம்மா என்கிற வார்த்தையைச் சொல்லிவிட்டு கடவுள், தீர்க்கதரிசி, நாம் கால் வைக்காத ஆதிப்பெருங்கோள், பிரபஞ்சம், முடிவிலி, மோனப்பெருவெடிப்பு, சூன்யத்தின் சூட்சமம் இப்படி எதை வேண்டுமானாலும் அள்ளி விடலாம். ஒரு பேச்சாளர் ‘தாயின் மீது அன்பு வைத்தாலே போதும். நீங்கள் படிக்காத பாடங்களும் கூட, தொட்டியிலிருக்கிற நீர் குழாய் வழியே வருவதைப் போல் உங்கள் மண்டைக்குள் இறங்கி உள்ளே போய் விடும். தாய்மையின் பேராற்றல் அது’ என்று அகோரியைப் போல் முழங்கிக் கொண்டிருந்தார். பழங்காலத்தில் சாக்த வழி பாட்டில் பக்தர்களை ஒருங்கிணைக்கும் வெறி வந்த பூசாரி கூட இப்படிப் பேசியிருக்க மாட்டார்.
நவீன சமூகத்தில் உறவுகள் அதன் நிஜமான அர்த்தங்களை இழந்து விட்டன. அறம் சார்ந்த எல்லா விழுமியங்களும் இந்தத் தலைமுறையால் கேலிப்பொருளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காதல் கூட இன்று இளைஞர்களால் கொண்டாடப்படுவதில்லை. காதலின் உன்மத்த நிலையில் எழுதப்படும் கவிதைகளை அவர்கள் ‘க்ரிஞ்ச்’, ‘உருட்டு’ ஆகிய நாமங்கள் சூட்டி விளிம்புக்குத் தள்ளி விடுகின்றனர். தாயுடனான அவர்கள் உறவும் கூட சிறப்பானதாக இல்லை. அன்னையர் தினத்தன்று புலனத்தில் நெக்குருகும் நிலைத்தகவல்களை இடுபவர்கள் தாம் சாப்பிட்ட உணவுத் தட்டைக் கூடக் கழுவாமல் அப்படியே வைத்து விட்டு நகர்கிறவர்கள்தான். தான் சுழற்றிப் போட்ட கைலி சுருண்டு நெளியும் மலைப்பாம்பு போல் அதே இடத்தில் அப்படியே கிடக்க அலைபேசியில் பேசிக் கொண்டே சுரணையற்று தாண்டிச் செல்கிற ஈராயிரக் குழவிகள்தான் ‘தாயில்லாமல் நானில்லை’ என்று நெஞ்சில் கை வைத்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
நா. முத்துக்குமாரின் வருகைக்குப் பின்பு ‘அப்பா வியாபாரம்’ அங்கங்கு போணியானாலும் கூட ‘அம்மா செண்டிமெண்ட்’ தமிழர்களின் தனிப்பெரும் நந்தியாகிமற்ற அனைத்து உணர்வுகளையும் வழி மறித்து நிற்கிறது. அம்மாவை எந்தக் குற்ற உணர்வுமின்றி முதியோர் இல்லத்தில் விட்டிருப்பவனும், வேலை பார்க்கும் மனைவி வாங்கித் தந்த புத்தம் புது ஈருருளியை மெல்லிய பகுமானத்தோடு ஓட்டிக் கொண்டிருப்பவனும் ஸ்டிக்கர் ஒட்டுகிறவனைக் கண்டு விட்டால் ஒரே குரலில் பின் முகப்பு வாசகமாக எழுதச் சொல்கிறார்கள் ‘இது என் தாயின் பரிசு.’
தமிழின் நீண்ட இலக்கிய மரபில் ‘அம்மா’ என்கிற சொல் பெரிய அளவில் மிகை உணர்ச்சிக்கான கச்சாப் பொருளாய் இருந்ததில்லை. சங்கப் புலவர்களுக்கு ‘தாய்மை’ என்பதே இரண்டு விஷயம்தான்.
- அவள் போருக்கு அனுப்புவதற்காக ஆண்பிள்ளைகளைப் பெற வேண்டியவள்.
(ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே )
- மகனின் வீர உணர்ச்சியை ஆசிர்வதித்தும், அவன் வீரமரணத்தைக் கொண்டாடியும் போர்ச்சூழலின் ஆராதகியாக முன்னிறுத்தப்படுகிறவள்.
ஆனால் ஆபத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கிற வடக்குப் பகுதியை நோக்கி ஆயுதங்களுடன் அமர்ந்து தன் பிள்ளைகளைப் பாதுகாக்கிற நாட்டுப்புற தாய்த் தெய்வங்களின் சாயலை சங்க இலக்கியங்கள் பெண்கள் மீது சுமத்தவேயில்லை.நடைமுறையில் அவையெல்லாம் ஆண்களின் பொறுப்புகள். பெண் வெறும் வாசல். அவள் உயிர்ப்போடு சித்தரிக்கப்படுவதெல்லாம் காதலி வேடம் ஏற்றிருக்கும் போதுதான். அன்னையர்கள் ஊருக்குப் பயந்து பெண்ணைக் கண்காணிப்பவர்கள் மட்டுமே. ஆழமாக நோக்கினால் பெண்ணை வளர்க்கும் செவிலித் தாய்க்கு இருக்கிற இடம் கூட பெற்ற தாய்க்கு இல்லை. அவள் வெறுமனே கவலைப்படுகிறவள். கலித்தொகையின் ஒரு பாடலில்
‘இசை கேட்பவர்க்கு உரியது; யாழுக்குச் சொந்தமானது இல்லை. முத்து அணிபவர்க்குச் சொந்தம்; கடலுக்கு இல்லை. சந்தனம் பூசுகிறவர்க்கு உரியது; மலைக்கு உரிமையானது இல்லை’ என்று ஒரு துறவி தாய்மையின் ‘உரிமை கோரலை’ உவமைகளோடு விளாசி விட்டு, முற்றும் துறந்திருந்தாலும் கூட காதலையே தன் கட்சியாகக் கருதி ஓட்டுப் போடுகிறார்.சங்க இலக்கியக் காலத்தில் வீரத்திற்கும், காதலுக்கும் முன்னால் தாய்மை வெறும் ‘தற்செயல் உறவாக’ அடக்கத்துடன் நிற்பதையே பார்க்க முடிகிறது.
நீதி இலக்கியக் காலத்தில் ‘தாய்மையின்’ அன்பும்,இரக்க குணமும் கூட அறத்திற்கான உரைகற்களாகவே பார்க்கப்பட்டிருக்கின்றன. ‘அன்னையே பசியோடிருந்தாலும் சான்றோர்கள் பழிக்கும் இழி செயலைச் செய்து விடாதே’ என்றும் ‘எப்போதும் உன்னை வெறுக்காத அன்னை கூட சான்றோர்கள் பழிக்கும் கள் அருந்தி வந்தால் முகம் திரிந்து யாரோ போல் பார்ப்பார்’ என்கிறார் வள்ளுவர். அன்னை – மகன் உறவை வைத்து அறத்தின் கடமைகளையே நீதி இலக்கியங்கள் பேசுகின்றன.
பக்தி இலக்கியக் காலத்தில் கடவுளை அடைவதற்கான நான்கு வகை சைவ உருவகங்களில்( சத்புத்திர, தாச, சக, சன் மார்க்கங்கள்) தாய்க்கு இடமில்லை.
சத்புத்திர மார்க்கத்தில் கூட கடவுள் தந்தையாகத்தான் உருவகிக்கப்படுகிறாரே தவிர தாயாக இல்லை. ஆனால் யசோதையின் வளர்ப்பான கண்ணனை மற்ற அவதாரங்களை விடக் கூடுதலாக முன்னிறுத்தும் வைணவத்தில் தாய்மைக்குச் சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரியாழ்வார் ஒரு பெண்ணாகவே மாறிப் பாடிய பாடல்கள்தான் தாலாட்டுக்கு இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. ‘அரிசினத்தால் ஈன்ற தாய் அடித்திடினும் மற்றவள் தன் அருள் நினைத்தே அழுங்கிழவி அதுவே போன்றிருந்தேனே’ என்கிறார் குலசேகர ஆழ்வார். தமிழ் வைணவம் பல விஷயங்களில் அழகான விதிவிலக்காகத் திகழ்வதற்கு இதுவுமோர் சாட்சி.
காப்பியங்களில் அன்னைகள் பேசப்பட்டாலும் கூட அவை மிகைச் சித்திரங்களாகவோ, கதையின் மையமாகவோ இருப்பதில்லை. வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட காப்பியங்களோடு நேரடித் தமிழ்க் காப்பியங்களை ஒப்பிட்டாலே இதனை உணர முடியும். சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் தந்தைகளான மாசாத்துவான், மாநாய்கன் என்கிற பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரியும். அன்னையர்களின் பெயர்கள் அடிக்குறிப்பாகக் கூட இடம் பெறவில்லை. கௌந்தியடிகள் கவலைப்பட்ட அளவுக்குக் கூட அவர்கள் கண்ணகியின் வாழ்க்கை குறித்து கவலைப்பட்ட மாதிரி காட்சிகளில்லை. உண்மையில் அவர்களை வைத்து மாபெரும் உணர்வுத் தருணங்களை இளங்கோவடிகள் உருவாக்கியிருக்க முடியும். சிலப்பதிகாரம் ஊருக்கே அன்னையாக உருமாறும் பத்தினிப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் காப்பியம்.
ஆனால் சொந்த அன்னைகளின் கண்ணீரையே இளங்கோ காட்டவேயில்லை. மணிமேகலையில் ‘நீ கண்ணகி மகள்’ என்று மாதவி கூறுவது கூட சமூகப்பாதுகாப்பிற்காகத்தான். மாதவிக்கும், மணிமேகலைக்குமான உணர்வு தருணங்கள் ஒரே ஒரு அத்தியாயத்தோடு முடிந்து போகிறது. இராசமாதேவியின் கண்ணீர் மட்டும் அபூர்வமான விதிவிலக்கு. சீவக சிந்தாமணியில் சீவகன் கைக்குழந்தையாகச் சுடுகாட்டில் பிறக்கும் போதே தகப்பன் செத்து, ஆட்சியும் பறிபோய் விடுகிறது. திருத்தக்க தேவர் நினைத்திருந்தால் சீவகனையும், அவன் அம்மா விசயையையும் வைத்து ஒரு எம்ஜிஆர் படத்தையே ஓட்டியிருக்கலாம். ஆனால் சீவகனின் இலக்கு ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதும், அங்கங்கு பார்க்கும் பெண்களையெல்லாம் மாலை அணிவித்துக் கட்டிலில் கிடத்துவதும்தான். இதற்காகவே திருத்தக்க தேவர் சீவகனுக்கு அவன் அம்மாவுடன் சுடுகாட்டிலேயே பிரிவு உபச்சார விழா நடத்தி விடுகிறார். மீண்டும் சந்தித்தாலும் பெரிய அளவில் உணர்ச்சி வசப்படுவதில்லை.
பிள்ளைத் தமிழில் தாய் – சேய் உறவு பேசப்பட்டாலும் அவை இயற்கை வர்ணனைகளாகவே எஞ்சி நிற்கின்றன. பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் சிற்றிலக்கியங்களில் சங்க இலக்கியச் சாயலுடன்தான் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டியவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் கண்ணுக்குப் பிடித்தவனைப் பார்க்க விடாமல் கதவடைத்து வைக்கும் அன்னைகள் மீது மகள்களுக்கு வருகிற ஊமைக்கோபம் அந்தக் காலத்திலேயே அங்கங்கே பதிவாகியி ருப்பது ஆச்சர்யமான விஷயம்.
மிகச் சிறிய வயதிலேயே அம்மாவை இழந்து, தன் வாழ்நாள் முழுவதும் அம்மா பித்துப் பிடித்து அலைந்த பாரதி தன் எழுத்தில் அம்மாவுக்கு அதிக இடம் தரவில்லை. வாழுகிற நாட்டையே கூட ‘தந்தையர் நாடு’ என்கிறான். நவீன எழுத்தாளர்களில் பலரும் அம்மா செண்டிமெண்டுக்கு எதிரானவர்கள். நவீனத்துவம் மிகை உணர்ச்சிகளுக்கே எதிரானது என்பதால் அது அம்மாவையும் இயல்பான பார்வையுடனே அணுகியது. ஜெயகாந்தன்,ஆதவன், சுந்தர ராமசாமி,
சு. வேணுகோபால், ஆகியோர் மட்டுமல்ல. தீவிர அம்பாள் உபசாகரான தி. ஜானகிராமன் சித்தரித்த அம்மாக்கள் கூட சமூகப் பொதுமனதால் ஆராதிக்கப்படும் மரபான அம்மாக்கள் இல்லை.
தமிழின் நாட்டுப்புற வழிபாட்டு மரபில் ‘தாய்மை’ என்கிற உருவகத்துக்கு மிகப்பெரிய இடம் இருந்தது. மதுரை மீனாட்சிக்குத் திருக் கல்யாணம் முடிப்பதற்கு முன்பாகவே பட்டாபிஷேகம் நடத்துகிற சடங்குகள் உண்டு. அவள் குடிமக்களைக் காண திக் விஜயம் செய்கிறாள். அவள்தான் அரசி; அவள் கணவன் அரசனல்லன். கொற்றவை தொடங்கி மாரியம்மன், காளியம்மன், காமாட்சி வரை நம் மண்ணில் தாய் வழிபாட்டுக்கு மிக நீண்ட மரபுண்டு. மலையாள பகவதியோ, ஆந்திரத்தில் இருந்து வந்த சீதளா தேவி, ரேணுகா அம்மையோ, சமணத்தில் இருந்து உருவான இசக்கியோ அனைத்து தாய் தெய்வங்களும் இந்த மண்ணில் மாபெரும் சக்திகளாக வியந்து பார்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் கிறிஸ்தவத்தில் இயேசுநாதரை விட அவர் அன்னை மேரியே கொண்டாட்டத்திற்குரியவர்.ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் உறைந்திருக்கும் தாய்த் தெய்மான ‘பெரிய நாயகியின்’ பெயரை இத்தாலியில் பிறந்த ஜோசப் பெஸ்கி தாம் வணங்கும் புனிதரின் அன்னைக்குச் சூட்டியது கவனிக்கத்தக்கது.
வழிபாட்டு மரபிலும், பண்பாட்டு அம்சங்களிலும் தாய்மைக்கு இருந்த உயர்ந்த இடம் ஒரு காலகட்டத்திற்குப் பின் சமூகத்தில் இல்லாமல் போனதால் இலக்கியங்களில் அவை பெரிதாகப் பிரதிபலிக்கவில்லை. நான் பெண்ணிய நோக்கில் கூறவில்லை. இதனை இயல்பான விஷயமாகவே பார்க்கிறேன்.நுட்பமாகக் கவனித்தால் கண்ணகியை தெய்வமாகவே அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட தமிழ்ப் பொது மனம் மாதவி, மணிமேகலை போல் கண்ணகி பெயரினைக் குழந்தைகளுக்கு அதிகம் வைப்பதில்லை. இந்த உளவியல் காரணியை மேலும் ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான பாதைகள் பிடிபடக் கூடும்.
இப்போதிருக்கிற மிகை உணர்ச்சியின் பாற்பட்ட அன்னையர் கொண்டாட்டங்களை நமக்குப் பழக்கியவை திரைப்படங்களே என்று ஊகிக்கிறேன். தமிழ்த் திரையுலகின் அடையாளங்களாகக் கருதப்படும் கலைஞர், எம்ஜிஆர், இளையராஜா ஆகியோர் அதி தீவிர அம்மா உபாசகர்கள். இவர்களில் இளையராஜா தவிர மற்ற இருவரும் அதனை சாக்த வழிபாட்டோடு இணைக்காதவர்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அதி தீவிர அம்மா பிள்ளை என்றாலும் அவர் படைப்புகளில் அதன் தாக்கம் குறைவு. நவீன இசையின் தமிழ் அடையாளமாக அவர் கொண்டாடப்பட்டதால் அவருக்கு அம்மா பாடல்களுக்கு இசையமைப்பதற்கான தேவை குறைவாக இருந்திருக்கலாம் (அழகு நிலவே எனது விழியில், காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா, தீயில் விழுந்த தேனா ஆகியவை விதிவிலக்குகள்).
தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா ஆகியோர் கோலோச்சிய காலத்திலோ புராணப் படங்களின் பொற்காலங்களிலோ இந்த நிலை இல்லை. கலைஞர் கதை வசனம் எழுதிய ‘மனோகரா’ திரைப்படத்தில்தான் இந்த உணர்வெழுச்சி உருவாகியிருக்கக் கூடும். அவர் ‘அன்னை ‘ என்பதை மரபான ஆன்மீகப் படிமங்களில்
இருந்து விடுவித்து ‘தாய் ‘ நாவலில் வருகிற அன்னை போல் சமூக விடுதலையின் குறியீடாக்கினார். ‘பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா’ என்கிற ஒற்றைத் தொடர் எல்லோராலும் உணர்வெழுச்சியோடு கொண்டாடப்பட்டது.அன்னை என்கிற சொல்லுக்கான பொது சமூகத்தின் மாற்று உருவகம் இங்கிருந்தே கண்டடையப்பட்டிருக்க வேண்டும். கலைஞரின் பிந்தைய படங்களிலும் இந்த அம்சத்தைக் காண முடியும்.
‘அம்மா’ குறித்த மிகை உணர்ச்சியைத் தன் வெகு ஜன பிம்பத்திற்கும், அரசியலுக்கும் உரியதாக கவனத்தோடு வடிவமைத்தவர்.
எம்.ஜி.ஆர். தமிழின் நீதி இலக்கியங்கள் ‘அம்மா’ என்கிற உருவகத்தைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நிகரானது இது. அவர் கதைகளைக் குறிப்பிட்ட சட்டங்களுக்குள்ளேயே இயக்குநர்கள் உருவாக்கினார்கள். அவற்றில் தவறாமல் ஒரு அம்மா பிம்பம் இருக்கும். பெரும்பாலும் அப்பா இருக்க மாட்டார். அந்த அம்மா மகனின் உயர்ந்த நோக்கங்களுக்கு ஆசி வழங்கி அவற்றுக்கான உந்து சக்தியாக இருப்பார். சில படங்களில் அந்த அம்மா தனி நபர்களாலோ, ஒரு கூட்டத்தாலோ பாதிக்கப்பட்டிருப்பார். அந்த அம்மாவுக்காக நேர்மையான முறையில் எம்ஜிஆர் பழி வாங்க முயன்று கடைசியின் தாயின் பெயரால் மன்னித்துவிடுவார். எம்ஜிஆர் படங்களில் சிகரெட் குடிக்க மாட்டார். குடிக்க மாட்டார். எல்லோரிடத்திலும் கனிவாக நடந்து கொள்வார். அநீதியைக் கண்டால் தட்டிக் கேட்பார். பெண்களிடத்தில் மரியாதையோடு நடந்து கொள்வார் (பாடல்கள் மட்டும் விதிவிலக்கு). பொய் பேச மாட்டார். வாக்குத் தவற மாட்டார். இந்த அனைத்து நற்குணங்களுக்கும் அவர் அன்னை மீது வைத்திருக்கிற மரியாதையும், அன்புமே காரணம் என்கிற மாதிரி கதை உருவாக்கப்பட்டிருக்கும். நீதி போதனைக் கருத்துக்களில் இருந்து மதத்தையும், தத்துவ அடித்தளத்தையும் உருவி விட்டு அந்த இடத்தில் தாயை வைத்தவர் எம்ஜிஆர். பொது சமூகத்தில் அம்மா என்கிற பிம்பத்தை எவரும் சுலபத்தில் தொட்டு விடவே முடியாத அளவிற்கான கதையாடல்கள் அவரால்தான் உருவாக்கப்பட்டன. அந்த பிம்ப உருவாக்கமே அவருக்குத் தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றுத்தந்தது.
குடும்பத்தில் இருந்தாலும் எம்ஜிஆரின் அம்மா சமூகத்திற்கான அம்மா. கோவிலில் இருக்கிற தாய் படிமமோ, வீடுகளில் பணிந்து நடக்கிற பத்தினி உருவகமோ இல்லை.
அவருடைய போட்டியாளரான சிவாஜிதான் எம்ஜிஆரை விட அதிகமாகக் குடும்பப் படங்களில் நடித்தார். ஆனால் அவருடைய படங்களில் அம்மா குறித்த மிகைச் சித்திரங்கள் அதிகமாக இருக்காது. மாறாக, அவரே வயதானவராக நடித்து ‘தந்தை’ குறித்த பல்வேறு பிம்பங்களால் நம் நினைவுகளில் நீடித்தார். குறிப்பாக, எதிர் நாயகனின் தந்தைக்கு உருவாகும் உளவியல் சிக்கல்களை மிக அழகாகத் திரையில் பிரதிபலித்தார் (தங்கப்பதக்கம், கீழ் வானம் சிவக்கும்). ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா, தங்கை, காதலி/ மனைவி என்கிற முக்கோணங்களின் மையமாக தன்னை இருத்திக் கொண்டார். நாற்பது வயதுக்குப் பிறகு நாயகனாக நடித்தாலும் பெரும்பாலும் படங்களில் அவருக்குக் குழந்தை பிறந்திருக்காது. பல படங்களில் இறுதிக் காட்சியில்தான் திருமணமே நடக்கும். எம்ஜிஆர் ஒரு
தாயின் லட்சிய மகனாகவே நீடித்து நாயகிகளுக்கும், தமிழ் கூறும் நல் உலகத்திற்கும் தன் நீதி போதனைகளை வாரி வழங்கினார். அவரால் எப்போதும் ‘அம்மா’ என்கிற பிம்பத்தை விட்டு நகரவே முடியவில்லை.
சுதந்திர இந்தியாவில் நக்சல்கள் எழுந்து வந்த காலத்தில் வெகுஜன மக்களின் கோபத்திற்கான வடிகால் பாத்திரங்களாக இந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் ரஜினியும் உருவாகி வந்தனர். எம்ஜிஆரைப் போல் லட்சியங்கள் கொண்ட கதாநாயகனாக இல்லையென்றாலும் சமூகத்தின் மீது தீராத கோபம் கொண்டவனைச் சாந்தப்படுத்தும் ஒரே காரணியாக இருந்து அன்பைப் பொழியும் ‘ஆற்றுப்படை அன்னைகள்’ ரஜினி படங்களுக்காக உருவாக்கப்பட்டார்கள். அவர்களின் லட்சியமெல்லாம் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தன் மகனைச் சரி செய்து ஒரு நல்ல பெண்ணிடம் ஒப்படைப்பது மட்டுமே. சுட்டு விரல் நீட்டி வழி காட்டிக் கொண்டிருந்தவள் வீட்டிற்கு வருகிற ரௌத்ரனுக்கு ஆயாசம் தருகிற தலையணையாகிப் போனாள். ஆனால் அந்தத் தலையணை இல்லையென்றால் வீடும் இல்லை; அந்த கோபத்திற்குப் பொருளுமில்லை என்றே பார்ப்பவர்கள் புரிந்து கொண்டார்கள்.
தமிழ்ச் சமூகத்தில் எழுபதுகளில் தொடங்கி, எண்பதுகளில் சுழன்றடித்து, தொண்ணூறுகளிலும் வேகம் குன்றாத மாபெரும் அலையாகத் திகழ்ந்தவர் இளையராஜா. அவர்தான் வித்தியாசமான அம்மா உருவகத்தை இளைஞர்கள் மனதில் உருவாக்கினார். அவருடைய அம்மா பாடல்கள் எம்ஜிஆர் படங்களின் அம்மா பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எம்ஜிஆரின் அம்மா நீதி இலக்கிய மரபின் தொடர்ச்சி என்றால் ராஜாவின் அம்மா பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சி. ஆனால் வழிபாட்டுணர்வுக்குப் பதிலாக அவர் தன்னிரக்கத்தையும், குற்ற உணர்வையும் கேட்பவர்கள் மனதில் விதைத்தார். கூட்டுக் குடும்பங்களும், கிராம வாழ்க்கையும் மெல்ல மெல்ல இல்லாமலாகி நகர்ப்புற விரிவாக்கம் நடந்து கொண்டிருந்த காலங்களில் அவருடைய அம்மா பாடல்கள் திருமண
மாகி தனிக்குடித்தனம் போய்விட்ட தமிழ் நாட்டு ஆண்களை ஏங்கி ஏங்கி அழ வைத்தன. ‘என் தாயென்னும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடிகிளியே; என் வாயும் வயிற்றையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே; என்னைத் தொட்டாலும், பார்த்தாலும் தோஷமடி கிளியே; எனக்கேழேழு ஜென்மத்திலும் மோட்சமில்லை கிளியே ‘ என்று ஆண் பிள்ளைகளைத் தனிமையில் புலம்ப வைத்தன ராஜாவின் பாடல்கள்.’ உடலை, சுய அடையாளத்தைக் கடக்க முடியாமைக்கான குற்ற உணர்வின் முரணான பதிலியாக இளைய
ராஜாவின் அம்மா பாடல்கள் உருவாக்கப்பட்டன.
கணவனில்லாமல் தனித்து வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தியாகத் தாய்களின் மீது இரக்கத்தை உருவாக்கும் வகையில் பல படங்கள் தொண்ணூறுகளில் உருவாக்கப்பட்டன. மனோரமா இந்த உளவியலை மிகச் சரியாகப் பிரதிபலித்தார். பல படங்களில் சூது, வாது தெரியாத வெள்ளந்தியான ஆண் பிள்ளைகளைப் பெற்று அவர்களாலேயே பெருந் துயரத்தை சந்திக்கும் அம்மா பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன (சின்ன தம்பி, கிழக்கு வாசல், செந்தமிழ்ப் பாட்டு)
இந்தக் கதைகளில் மகன்களுக்காக அம்மாக்கள் செய்கிற தியாகமே அடிக்கோடிடப்பட்டு முன்னிலைப்
படுத்தப்பட்டது.
தொண்ணூறுகளுக்குப் பின் லட்சியவாதமோ, சமூகக் கோபமா இல்லாத எளிய விடலைகளின் கதைகளில்
விஜய், அஜித் ஆகியோர் நடிக்க ஆரம்பித்த போது மகனின் காதல் சார்ந்த நுண் உணர்வுகளை அடையாளம் காணுகிற நாசூக்கான அம்மாக்கள் திரையில் காட்டப்பட்டனர். ஸ்ரீ வித்யா நடித்த அந்த இறுதிக் காட்சிக்காகவே வெற்றிகரமாக ஓடிய ‘காதலுக்கு மரியாதை’ இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
இரண்டாயிரங்களுக்குப் பிறகு மற்ற விஷயங்களைப் போல் அம்மா குறித்த திரை உருவாக்கத்திலும் மிகப்பெரிய மாற்றம் வந்தது. ‘ராம்’ படத்தில் தியாகத் தாயாகவலம் வந்த சரண்யா ‘எம்டன் மகன்’ படத்திற்குப் பிறகு நகைச்சுவையும், குறும்பும், தேவைக்கேற்ற நெளிவு, சுழிவும் கொண்ட தோழமை அன்னையாக மாற்றப்பட்டார். யதார்த்தம் போல் தோற்றமளிக்கும் புனைவை அவரால் வெற்றிகரமாகத் தன் நடிப்பில் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்தப் படங்களிலும் தாய்மையின் புனிதம், குடும்ப அமைப்பின் அடிப்படை விதிகள், மகனே அன்னையின் வாழ்க்கையாக இருத்தல் ஆகியவை மீறப்படவேயில்லை. இரண்டாயிரத்துக்குப் பிந்தைய இளைஞர்களின் உளவியலுக்கேற்ப சரண்யா தோழி போன்ற அன்னை.குறும்புகள் செய்து சிரித்துக் கொண்டே தியாகம் செய்கிற யதார்த்தம் கலந்த புனிதப் படிமம்.
மணிரத்னம் ‘தளபதி’யில் உருவாக்கிக் காட்டிய அன்னை கிட்டத்தட்ட காதலின் இழப்புணர்வை தாய்மையின் வழியே உணர வைப்பவள்.
கண்ணாம்பாள், சி.எஸ். லட்சுமி, மனோரமா, ஸ்ரீ வித்யா, சரண்யா ஆகிய ஐவரும் நடித்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி யோசித்தாலே எழுபது ஆண்டுகளாக மாறி வந்திருக்கிற ‘அம்மா’ குறித்த பொது உளவியலின் பரிணாமத்தை அறிய முடியும். இந்த பொதுப் புத்தியில் இருந்து விலகி நிற்கிற அம்மா பாத்திரங்கள் அரிதினும் அரிதே. எல்லா விஷயத்திலும் விலகி நின்று கம்பு சுத்தும் கமல்தான் ‘குணா’ படத்தில் வேசித் தொழில் செய்கிற அம்மாவைக் காட்டி ‘அம்மா அழுக்கு அப்பா அழுக்கு நான் அழுக்கு.. எல்லாம் அழுக்கு’ என்று பேசவைத்தார். அதே நேரத்தில் நம் நினைவில் நிற்கும் அத்தனை அம்மாக்களும் நாயகர்களின் அம்மாக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாயகியர்களின் அம்மாக்கள் பெருந் தடயங்கலின்றி சாதாரணமாகவே வந்து போயிருக்கிறார்கள்.
‘நாற்பது வயதிற்குள்
நீ நுழையும் போது
உன் ஒப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய்.
தலைமுடியை
நீளமாகவோ,குறுகலாகவோ
தரித்துக் கொள்கிறாய்.
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும்
அழகிய மயில்
உன் மகளின் தோள்களில் அமர்ந்து
தோகை விரிப்பதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்.
காலியான கிளைகளில்
மெல்ல அமர்கின்றன
அஸ்தமனங்கள்
சூர்யோதயங்கள்
மற்றும் அன்பின் பதட்டம்’
என்று நுட்பமான உணர்வுடன் பேசுகிற தேவதச்சனைப் போல் மகள்களைப் புரிந்து கொள்ளாத, மகள்களால் புரிந்து கொள்ளப்படாத அம்மாக்களைத் தமிழ் பேசும் திரைகளில் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?
maanaseegan24@gmail.com