இந்தியாவில் சுமார் 1100 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 43000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் 11000க்கும் மேற்பட்ட தனித்தவகை கல்வி நிறுவனங்கள் உள்ளன (அனைத்திந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு AISHE 2020-21). 2001 இல் இருந்த அளவைவிட இது சுமார் 400 மடங்கு அதிக எண்ணிக்கை ஆகும். சுமார் ஒன்றரை லட்சம் பள்ளிகள் இதே காலகட்டத்தில் இருந்துள்ளன. தற்போது இவ்விரு எண்ணிக்கைகளும் மிகவும் கூடுதலாக இருக்கலாம்.2020-21 வருடத்தில் உயர்கல்வி ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 27.1 ஆக இருந்தது. 4.13 கோடி இந்தியர்கள், 2020-21 ஆம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இந்த 4.13 கோடியில் பட்டியலின வகுப்பினர் 14.2 விழுக்காடு, பழங்குடியினர் 5.8 விழுக்காடு, இதர பிற்பட்ட வகுப்பினர் 35.8 விழுக்காடு மற்றைய வகுப்பினர் 44.2
விழுக்காடு ஆகவும் பதிவாகியுள்ளது. 27.1 என்கிற உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 2035 க்குள் 50 ஆக உயர்த்துவதையே தேசிய கல்விக்கொள்கை 2020 குறிக்கோளாக வைத்துள்ளது. அப்படியுள்ள பட்சத்தில், உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் பெரிய அளவில் உயரக்கூடும்.
சமீபத்திய உயர்கல்வி குறித்தான நெகிழ்வுமிக்க கொள்கைகளின் அடிப்படையில், வெளிநாட்டு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், இந்தியாவில்தான் இளையோரின் எண்ணிக்கை அதிகம் எனவும் பல்வேறு அறிக்கைக்கள் உறுதி செய்கின்றன. பல்வேறு மாநிலங்களில் ஆதரவும் எதிர்ப்புமாக இருந்தாலும் தேசிய கல்விக்கொள்கை 2020 பரவலாக அமல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்தச் சூழலில், நமது நாட்டின் உயர்கல்வி எதை நோக்கிச் செல்கிறது என்ற பார்வை மிக அவசியமானது. மெக்காலே கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்குகிறது என்ற வாதத்தை ஒரு சாரார், இன்னமும் தேயாமல் உருட்டிக்கொண்டிருக்கும் சூழலில், நமது நாட்டின் உயர்கல்வியானது பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான தொழில்நுட்ப-நிர் வாக-மேலாண்மைப் பணியாளர்களை தயார் செய்யும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்ற பார்வையையும் தற்போது இன்னும் கவனமாக அலச வேண்டியுள்ளது. “அறிவை விரிவு செய்யும் கல்வி” என்ற நிலையில் இருந்து “வேலை வாய்ப்பை உறுதி செய்யும் கல்வி” (எம்பிளாயபில் எஜுகேஷன்) என்ற நிலைக்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே
வந்து விட்டாலும், 2003க்குப்பிறகு அப்பட்டமாக தொழில்துறையின் போக்குக்கு ஏற்றபடி, கல்வித் திட்டத்தையே மாற்றியமைக்கும் சூழலுக்கு நமது உயர்கல்வி அமைப்பு வந்துள்ளது. கல்வியானது, வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்; மாணவர்களிடம் அதற்கான திறன்களை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருப்பது உலகமே ஒற்றைக்கிராமம் எனக்கொள்ளும் உலகமயமான (குளோபலைசேசன்) யுகத்தில் தவிர்க்க முடியாதவொன்று என்ற போதிலும், இந்தியாவுக்கென தனித்துவம் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்த சொல்லாடல்கள் மேலோங்கி வரும் இந்தக் காலகட்டத்தில், இப்படியான உயர்கல்விப் போக்கு ஒரு விதத்தில் ‘‘மறைமுகமாக பன்னாட்டு நுகர்வுக்கு இசைவு கொடுக்கும் போக்கு” என்கிற பார்வையைப் பரிசீலிக்க, இந்தியாவின் உயர்கல்விக்கான கொள்கைகள் மற்றும் அதன் நோக்கங்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னதான இந்திய நிலப்பரப்பில், பெரும்பாலான கல்விக்கூடங்கள் மத அமைப்புகளாலேயே நிர்வகிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் சாதியும் மதமும் அற்ற கல்விமுறையைப் பற்றி நாம் அறியக்கிடைக்கவில்லை. இந்திய நிலப்பரப்பானது பல்வேறு நாடுகளாக, புவியியல் ரீதியாகவும், மொழி, பண்பாடு ரீதியாகவும் தனித்தியங்கிய அந்தக் காலகட்டங்களில் கல்வி அமைப்பானது நெறிப்படுத்தப்பட்டதாகவோ, தரப்படுத்தப்பட்டதாகவோ குறிப்புகள் இல்லை. 1810 இல் இங்கிலாந்து பாராளுமன்றம் கிழக்கிந்திய கம்பெனிக்காக அதிகார வரம்புகள் நீட்டிப்பு குறித்த சட்டத்தை முன்மொழிந்தது. முதன்முதலாக அந்தச் சட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய,“கல்வி” குறித்த கொள்கைகள் இடம்பெற்றன. 1830 இல் கவர்னர் ஜெனரலாக இருந்த சர் வில்லியம் பெண்டிக் பதவிக்காலத்தில், பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை முறைப்படுத்துவது குறித்து கொள்கை அளவிலும் அமைப்பு ரீதியிலும் நிறைய செய்யப்பட்டன. இவரது நிர்வாகக் காலத்தில்தான் தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே, பொதுக்கல்விக்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இந்தியாவில் பொதுக்கல்விகான சாத்தியங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.
1835-இல் வெளியிடப்பட்ட ‘மெக்காலே மினிட்ஸ்’ எனப்படும் அறிக்கையை பொதுக்கல்விக்கான முதலாவது கொள்கை ஆவணம் என்று நாம் கொள்ளலாம். அது பிரிட்டிஷ் இந்தியாவில், கல்வியை அரசே ஏற்று நடத்துவதற்கும், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்குவதற்கும் பொதுவான கல்வி அமைப்புகளை உருவாக்கி நிர்வகிக்கவுமான, ஆரம்பக் கட்ட செயல்முறைகளைப் பரிந்துரைத்தது. மெக்காலே பரிந்துரைகள் இன்றளவும் ‘‘குமாஸ்தா கல்வி முறையை அறிமுகப்படுத்தியது” என்கிற எதிர்க்கருத்தால் விமர்சிக்கப்படுவதைப்போலவே, அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், பலநூறு ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை திறந்து விட்டதும், உருது, சமஸ்கிருத கல்விக்கென கொடுக்கப்பட்ட ஆதரவைக் குறைத்துக்கொண்டு, ஆங்கிலம் என்ற பொதுமொழியில் கல்வியை வழங்கியதன் காரணமாகவும், இன்றைக்கும் மெக்காலே பரிந்துரைகள் குறித்த உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
1855-இல், ஆங்கிலேயர்களால், மேலும் ஒருமுறை ‘சர் சார்லஸ் வுட்’ மூலமாக இந்தியாவில் கல்வி அமைப்புகள் குறித்து ஆய்வும் மீளாய்வும் செய்யப்பட்டு, “வுட்’ஸ் டிஸ்பாட்ச்” என்று அறியப்படும் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அக்கொள்கையின்படி, பிரிட்டிஷ் இந்தியாவில், தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி முறை ஒழுங்கமைவு செய்யப்பட்டது. ஆங்கிலம் கற்பிப்பு மொழியாக இருந்தபோதிலும் இந்திய மொழிகளும் கற்பிக்கப்பட்டன. இதன் பின்னான காலகட்டங்களில் பாம்பே, மெட்றாஸ், கல்கட்டா உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பெற்றன. மாகாண அளவில் கல்வியை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்கு செய்யும் அமைப்புகள் உருவாக்கப்பெற்றன. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டது. முக்கியமாக கல்வி, அரசின் பொறுப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. ‘‘ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நிர்வாகத்தில் வேலை செய்ய குறைந்த செலவில் ஊழியர்கள் தேவை என்பதற்காக ஆங்கிலக் கல்வி அளிக்கப்பட்டது” என்கிற வாதம் ஒற்றைத்தன்மையானது. அதுவரையிலும் அமைப்பாக ஒருங்கிணைக்கப்படாத கல்வியானது, அரசால் நிர்வகிக்கப்படும் பொதுக்கல்வி அமைப்பாக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் அனைத்து வகுப்பினரும் ஆசிரியராகப் பணி செய்ய முடிந்தது. அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம் உள்ளிட்ட மேலைத்தேய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இப்படியாக ஆங்கில அரசால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மாநிலக்கல்லூரியில், மெக்காலே கல்விமுறையில் படித்துத்தான், சர். சி.வி. ராமன் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு இந்தியாவுக்கு முதலாவது நோபல் பரிசினை பெற்றுத்தந்தார்-என்பது ஆங்கிலேயக் கல்விமுறையை வெறும் குமாஸ்தா கல்விமுறையாக குறுக்குபவர்களுக்கு மாற்றாக ஒரு எடுத்துக்காட்டு. ஆங்கிலேயக் கல்வி முறை வெறும் குமாஸ்தாக்களை மட்டும் உருவாக்கவில்லை. அதுகாறும் காட்டப்பட்டிராத மிகப்பெரும் தளங்களுக்கு இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களையும் கூட்டிச் சென்றது. கல்வி அனைவருக்கும் பொதுவாக மாறியது. அரசு அனைவருக்கும் கல்வியை திறந்து விட்டது. கட்டைவிரல் காணிக்கையாகக் கேட்கப்படவில்லை. கல்வியில் கொண்டுவரப்பட்ட இந்த சமூகநீதி முன்னெடுப்புகள் மிகப்பெரும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவே விடுதலைப் போராட்ட நெருப்புக்கு நெய்யூற்றி, சுதந்திரச் சுடரை ஏற்றியது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் “அனைவருக்கும் கல்வி; தொழில்துறை முன்னேற்றம்” போன்றவற்றை மைய நோக்கங்களாகக் கொண்டு, கல்வி அமைப்பில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தினார். இந்தியாவின் பன்மைத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், வேகமாக வளரவேண்டிய தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. நேரு மற்றும் பின்னான இந்திய ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் கல்விக்கான கொள்கைகளை செழுமைப்படுத்தினர். அப்படியான கொள்கைகளைப் பார்க்கும் போது, உடனடித்தேவைகளுக்காக முதலில், உயர்கல்வியும், பிறகு மேல்நிலைக்கல்வியும், அதன் பிறகே அடிப்படைக்கல்வியும், சுதந்திர இந்தியாவில் மேம்
படுத்தப்பட்டதாகப் புரிந்து கொள்ளலாம்.
1948 இல் அறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் உருவாக்கிய பல்கலைக்கழக கல்விக்குழுவின் அறிக்கையே நமது சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்விக்கொள்கை எனக்கொள்ளலாம். ஆனால், அது பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் உயர்கல்வியை மட்டுமே கவனத்தில் கொண்டது. அக்குழுவின் அறிக்கையே இந்தியாவில் பல்கலைக்கழகம் என்றால் என்ன, அதன் நோக்கங்கள் யாவை, எப்படிச் செயல்பட வேண்டும் என்ற கொள்கை விளக்கத்தை வழங்கியது. பெருமைப்பட்டுக்கொள்ளும் விதமாக, உயர்கல்வி என்பது அறிவை விரிவு செய்யவும், படிப்பவரின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இருக்கவேண்டும்; பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் விரிவு செய்பனவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டது. இந்தக் குழுவும் ஆங்கிலக் கல்விமுறை படிப்படியாக குறைக்கப்பட்டு ஏதேனும் இந்திய மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்தக் கொள்கைகளின் பின்னணியில் யு.ஜி.சி.
உள்ளிட்ட கல்வி ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள், தேசிய அளவிலான அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், ஐ.ஐ.டி.க்கள் போன்றவை காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டன.
அடுத்ததாக, 1952 இல் மேல்நிலை கல்விக்குழு அன்றைய சென்னைப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஆற்காடு லக்ஷ்மண முதலியார் தலைமையில் உருவாக்கப்பட்டு 1953 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இக்குழுவின் அறிக்கை முதன் முறையாக, வேலைவாய்ப்பினையும் பொருளீட்டுவதற்கான திறன்களை வளர்ப்பதையும் கல்வியின் குறிக்கோளாக முன்மொழிந்தது. மேல்நிலைக்கல்வியின் அடிப்படைக்கட்டமைப்பையும் அமைப்பு முறையையும் இந்த அறிக்கை மையநோக்கமாகக் கொண்டிருந்தது. பி.யு.சி – ப்ரி-யுனிவர்சிட்டி கோர்ஸ் எனப்படும் உயர்கல்விக்கு தயார்படுத்தும் முறையை பரிந்துரை செய்தது. தொழில்நிறுவனங்களிடம் கல்விமேம்பாட்டுக்கான வரிவிதிப்பையும், தொழில்நிறுவனங்களின் ஆதரவுடன் வொக்கேஷனல் எஜுகேஷன் எனப்படும் தொழில்சார் கல்வி அமைப்பையும், பெண் கல்வியை மேம்படுத்த தனியாக பெண்கள் கல்வி நிறுவனங்களை அமைக்கவும் இந்த அறிக்கை முன்மொழிந்தது. 1953இல் அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராஜகோபாலாச்சாரி பரவலாக குலக்கல்வித்திட்டம் என்று அறியப்படும் பொதுக்கல்வித்திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரைநாள் பள்ளியிலும் மீதி அரைநாள் தங்களின் தந்தையின் குலத்தொழிலையும் கற்க செலவழிக்கச் வேண்டும் என்கிற திட்டம் தான் அது. அந்தத் திட்டம் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டது. எதிர்க்கப்படவேண்டிய ஒன்றும் கூட. ஒரு பிற்போக்கான திட்டம். தற்போது அதன் ஜனநாயகப்படுத்தப்பட்ட, வேறொரு வடிவமாக, பன்னாட்டு தொழில்நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, கல்வித்திட்டத்தை மாற்றியமைக்கும் போக்கையும் அலச வேண்டியுள்ளது.
1964 ஆம் ஆண்டு, அன்றைய யு.ஜி.சி. தலைவர் பேராசிரியர் டி.எஸ். கோத்தாரி தலைமையில், இந்தியாவில் கல்வி அமைப்புகளை மீளாய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு 1966 இல் அறிக்கை பெறப்பட்டது. ஒப்பீட்டளவில், சுதந்திர இந்தியாவில் கல்விச் சீர்திருத்தத்துக்கென ஒருங்கிணைந்த பரிந்துரைகளை அதிகமாகக் கொடுத்தது கோத்தாரி அறிக்கைதான். இந்த அறிக்கை நாட்டின் கல்வி அமைப்பில் நிலவிய போதாமைகளையும் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டியது. வெவ்வேறு தளங்களிலான 19 குழுக்களின் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு வெளிநாடுகளின் கல்வி அமைப்புகளை ஒப்பிட்டும், மிகவும் விரிவான பரந்துபட்ட தளங்களில் தனது பரிந்துரைகளை அளித்தது.
இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி, கற்பித்தலில் ஆங்கிலம்-இந்தி-பிராந்திய மொழி என்ற மும்மொழிக்கொள்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் கல்வியை உறுதி செய்தல், தேசிய அளவில் 10+2+3 என்ற அளவில் கல்விக்கான கால அளவைப் பொதுமைப்படுத்துதல், தொலைநிலைக்கல்வி, திறந்தநிலைக் கல்வி, வயது வந்தோர் கல்வி போன்றவற்றையும் பரிந்துரை செய்தது. மிக முக்கியமாக, கணிதம்-அறிவியல்-தொழில்நுட்பம் போன்ற தொழில்துறைக்கு இன்றியமையாக கல்விப்புல அறிவினை பாடத்திட்டத்தில் அதிகக்கவனம் கொள்ளப் பரிந்துரைத்தது. கலை, இலக்கியம், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பிற கல்விப்புலங்கள் குறைந்த கவனம் பெற்றன. இந்தப் பரிந்துரைகள் வரும் வரை கல்வி
யானது அரசியல் சாசனத்தின் மாநிலப்பிரிவில் இருந்தது. பிறகாக, 1976-இல் கல்வி, பொதுவான ஒத்திசைவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, ஒன்றிய அரசின் பொதுவான கல்விக்கொள்கைகள் நாடு முழுவதும் பரவலான தாக்கத்தை வெவ்வேறு விதங்களில் ஏற்படுத்தியது.
கோத்தாரி அறிக்கையின் பிரதான அம்சங்கள், 1986இல் உருவாக்கப்பட தேசிய கல்விக்கொள்கையில் மறு உள்ளீடு செய்யப்பட்டன. 1986 இல் ராஜிவ் காந்தி
ஆட்சிக்காலத்தில் இறுதி செய்யப்பட்டாலும், தேசிய கல்விக்கொள்கை, உலகமயமாக்கலுக்குப் பின், 1992 இல் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் மீளாய்வு செய்யப்பட்டும் திருத்தப்பட்டும் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்), தகவல் தொழில் நுட்பத்தின் கூறுகளை உள்வாங்குதல், தேசம் முழுமைக்குமான பொதுவான கல்விக் கட்டமைப்பு, கல்வியில் சமத்துவம், பன்னாட்டு உறவுகள், முறை சாராக்கல்வி, உயர்கல்வியில் நெகிழ்வுத்தன்மை, மொழித்திறனுக்கு முன்னுரிமை உள்ளிட்ட கூறுகள் இக்கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்தன. குறிப்பிடத்தக்க மாற்றமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்கும் வழிமுறைகள் இக்கொள்கையின் விளைவாக எளிமையாக்கப்பட்டன. இதன் காரணமாக, கரிகுலம்-சிலபஸ் எனப்படும் பாடத்திட்டங்களை உயர்கல்வி நிறுவனங்கள் காலத்துக்கேற்பவும், தொழில்துறையின் போக்குக்கு ஏற்பவும், தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இக்கல்விக்கொள்கையின் ஐந்தாம் பிரிவில், DELINKING DEGREES FROM JOBS என்ற தலைப்பில், பொறியியல், மருத்துவம், சட்டம், கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளைத் தவிர்த்து, பொதுவான தொழிற்புலங்களில் அடிப்படைத் தகுதியாகப் பட்டப்படிப்பு இருக்க வேண்டும் என்பதைத் தளர்த்த அறிவுறுத்துகிறது. பட்டப்படிப்பு இருந்தால் தான் வேலைக்குப் போகமுடியும் என்ற நிலையை மாற்றுவதற்காக முன்மொழிந்தாலும், வேலைக்குத் தேவையான திறன்களைக் கொண்ட பாடத்திட்டத்தோடு பட்டப்படிப்புகள் மாற்றம் பெற இத்தகைய பரிந்துரைகள் அடிக்கோலின. தேசியக் கல்விக்கொள்கை 2020 குறிப்பிடும் அறிவும் ஆன்மீகமும் இணைந்த இந்தியப் பாரம்பரியப் பெருமிதத்தை தேசியக் கல்விக்கொள்கை 1986ஆம் குறிப்பிடுகிறது. கொள்கை அளவில் அறிவையும் உள்ளார்ந்த மெய்யியலையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், ”வேலைக்கான திறன்களையும், அதற்கான தயார்படுத்துதலையும் அடிப்படையாகக் கொண்டே உயர்கல்வியானது நடைமுறையில் இயங்கி வருகிறது.’’
பலத்த விவாதங்களை எழுப்பிய, கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்த, இன்னமும் சில மாநிலங்களால் முழுமையாக ஏற்கப்படாததுமான, தேசியக் கல்விக் கொள்கை 2020, உயர்கல்வியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட வெகுசில மாநிலங்கள் தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் எதிர்ப்பு காட்டியுள்ளன. ஆனாலும், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் அலகுகளின் சுற்றறிக்கைகள், கொள்கை விளக்கங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றின் வழியாக, நாடு முழுவதும், பெரிய அளவில் தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உயர்கல்வி குறித்த தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்த நினைவூட்டல்களையும் இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன. கொள்கை அளவில் தேசியக் கல்விக் கொள்கை 2020 , கல்வி வெறும் வேலை வாய்ப்புக்கான கல்வியாக இருந்துவிடக்கூடாது; அது சமூகப்பொறுப்பு, அறிவாற்றல், மற்றும் திறமையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்றே சொல்கிறது.
உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் படிப்படியாக தன்னாட்சி வழங்குவது, மொத்த சேர்க்கை விகிதத்தை 26.8 இல் இருந்து 50 ஆக உயர்த்துவது, அனைத்து
வகை கல்வி நிறுவனங்களையும், பல்துறைக் கல்வி நிறுவனங்களாக மாற்றம் செய்வது, இணையவழி-தொலைநிலைக் கல்வியை ஊக்குவிப்பது, இளநிலைப்பட்டப்படிப்பினை நான்கு வருடங்களுக்கு வழங்குவது (வெளிநாடுகளில் நான்கு வருட இளநிலைப்படிப்பையே மேல்நிலைப்படிப்புகளுக்கு தகுதியாகக் கொண்டிருக்கிறார்கள்; இங்கே மூன்றுவருட இளநிலைப்பட்டம் பெற்றவர்கள், வெளிநாடுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர முடியாது) போன்ற கொள்கைகளை முன்வைக்கிறது தேசிய கல்விக்கொள்கை 2020. இது போக நான்கு வருடப் பட்டப்படிப்பில் ஒரு வருடம் படிப்பையும் குறிப்பிட்ட அளவு தொழிற்கல்வி முடித்தவர்கள் படிப்பில் இருந்து வெளியேறும் பட்சத்தில், இளநிலைப் பட்டத்திலிருந்து இடைநின்றாலும், சான்றிதழ் படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்படும்; இரண்டாவது ஆண்டில் வெளியேறினால் பட்டயப்படிப்புக்கான அங்கீகாரம் (டிப்ளோமா) வழங்கப்படும்; மூன்றாவது ஆண்டில் வெளியேறினால் பட்டப்படிப்புக்கான டிகிரி வழங்கப்படும்; நான்கு ஆண்டுகள் தொடர்ந்தால் இளநிலைப் பட்டத்தோடு ஹானர்ஸ் தகுதியும் வழங்கப்படும்; இதை ஆங்கிலத்தில் மல்ட்டிப்பிள் எண்ட்ரி மல்ட்டிப்பிள் எக்சிட் என்கிறார்கள். இது இந்தியா போன்ற பொருளாதரா தன்னிறைவு கொள்ளாத சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்த வளரும் நாட்டில் மாணவர்கள் இடைநிற்பதை அதிகப்படுத்தும்.
19-24 வயதுக்குட்பட்ட ஊழியர்களில், அமெரிக்காவில் 52% ஊழியர்களும், ஜெர்மனியில் 75% பேரும், கொரியாவில் 96% பேரும் முறையான தொழிற்கல்வி (வொக்கேஷனல் எஜுகேஷன்) பெற்றுள்ளனர் என்றும், இந்தியாவில் 19-24 வயதுக்குட்பட்ட ஊழியர்களில் சுமார் 5% பேர்களே முறையான தொழிற்கல்வி பெற்றுள்ளனர் என்றும் தேசியக் கல்விக்கொள்கை 2020 குறிப்பிடுகிறது. இதனைக் காரணமாகக் கொண்டு தொழிற்கல்வியை, கல்விக்கொள்கை வெகுவாக முன்னிறுத்துகிறது. வழக்கமாக, மதிப்பெண்கள் குறைவாக எடுத்தவர்கள் அல்லது ஏனைய படிப்புகளில் சேர்வதற்கான வசதி இல்லாதவர்கள்தான் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்கிறார்கள்; மேலும் முறையான ஐ.டி.ஐ. படிப்பு இல்லாமலும் கூட எலக்ட்ரீசியனாகவும் பிளம்பராகவும் பணி செய்பவர்கள் உள்ளனர். இந்த இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டிருப்பது வரவேற்புக்குரியதே.
ஆனால், இதே போக்குதான் வேறு விதமாக, வேறு வழியில், மற்றைய கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளிலும் தற்போது பரவலாக உள்ளது. இதற்கும் தேசியக்கல்விக்கொள்கைக்கும் நேரடித்தொடர்பில்லை என்றாலும், இந்தப் போக்கு கடந்த சில ஆண்டுகளாகக் தொடர்ந்தாலும், இப்போதைய தேசியக் கல்விக்கொள்கை இந்தப் போக்கினை ஆதரிப்பதாகவும் அங்கீகரிப்பதாகவும் உள்ளது.
கல்வியின் நோக்கம் வேலைக்கு தயார் படுத்துவது மட்டுமல்ல என்று கொள்கை சொன்னாலும் அது வேலைக்கான திறன்களை வளர்த்தெடுப்பதையும், தொழில் நிறுவனங்களின் உதவியுடன் அதை துரிதப்படுத்துவதையும் ஆதரிக்கவும் செய்கிறது. ஏற்கனவே நிலவி வரும் இந்தப் போக்கு, இக்கொள்கையின் காரண
மாக வலுப்பெறுகிறது.
கரிக்குலம் சிலபஸ் எனப்படும் பாடத்திட்டத்தை, தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் தேவைக்கேற்ப, புதுப்பித்துக்கொள்ளலாம். அப்படியான புதுப்
பித்தல்களின்போது, அந்தக் குழுக்களில் தொழில்துறை பிரதிநிதிகள் அவசியம் இருப்பதை கல்வி நிறுவனங்கள் விரும்புகின்றன. உயர்கல்வியின் பல்வேறு தரநிர்ணயக்கட்டமைப்புகளும் இந்தப் போக்குக்கு அதிக முக்கியத்துவமும் ஆதரவும் கொடுக்கின்றன. இதன் நோக்கம் கல்வித்திட்டத்தை வேலைவாய்ப்புள்ளதாக மாற்றுவதே. இதன் காரணமாக, ஒரு இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புக்கான அடிப்படை அறிவினை விடவும், அந்தத் துறைசார் தொழிற்துறையின் தற்போதைய போக்கிற்கு ஏற்ப, பாடங்களை மாற்றுவதும், புகுத்துவதும் இயல்பாகவே நடக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், உலகின் போக்கிற்கு ஏற்ப, இன்றையதேதிக்கு என்ன தேவையோ அதைப் பாடத்திட்டமாக வைக்கிறோம் என்றுதான் தோன்றும். ஆனால், கல்வியின் நோக்கம் அதுமட்டுமல்ல. வேலைக்குத் தயார் படுத்துவதோ, வேலை வாங்கிக்கொடுப்பதோ கல்வியின் நோக்கம் அல்ல என்றுதான் எல்லாக் கொள்கைகளும் சொல்கின்றன. ஆனால் நடைமுறையில், கல்வி வேலைக்கான தகுதி என்பதாகவே உள்ளது.
இந்தப் புதிய போக்கினால், மாணவர்கள் துறைசார் அடிப்படை அறிவினைப் பெறுவது குறைவாகவும், துறைசார் திறன்களை மட்டும் வளர்த்துக்கொள்வதாகவும் அமைகிறது. இப்படியாக அடிப்பையான கல்விப்புபுல அறிவு குறைவாகவும், வேலை செய்வதற்கான நடைமுறைத் திறன்களும் கொண்ட, வேலைக்குத் தயாரான, படித்தவர்கள் தொகுதி பெருகிக்கொண்டு வருகிறது. இவர்கள் வேலைக்கும் போகிறார்கள்; வேலையும் செய்கிறார்கள். ஆனால் இத்தகைய வேலைகளுக்கான அடிப்படைத் தளம் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவர்கள் அறிவில் உருவானதை நாம் செயல்படுத்துகிறோம். காலகாலமாக அறிவார்ந்த தனித்த ஞானமுள்ள சமூகம் என்று தேசியவாதிகளால் பெருமைகொள்ளும் ஒரு நாட்டில், வெளிநாடுகளில் எந்தக் கல்வி அல்லது எந்தத்துறை வளர்கிறதோ அதே திசையில் கல்வி செல்கிறது என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. படிக்கிற காலத்தில், விடுமுறை நாட்களில், இண்டெர்ன்ஷிப் எனப்படும் தொழிற்புல அனுபவத்தைப் அனைத்து மாணவர்களும் பெறுவதை கல்வி நிறுவனங்களும், அரசின் தர நிர்ணய அமைப்புகளும் ஆதரிக்கின்றன. ஆராய்ச்சித்திட்டங்கள் பகுதியாக உள்ள படிப்புகளில்கூட ஆராய்ச்சித்திட்டங்களுக்குப் பதிலாக தொழிற்புல அனுபவம் முன்வைக்கப்படுகின்றன. படிக்கும்போதே தொழிற்புலங்களுடன் தொடர்பு (இண்டஸ்ட்ரி கனெக்ட்) என்பதை, அடிப்படை கல்விப்புல அறிவுக்கும் மேலாக முன்வைக்கும் போக்கு தீவிரமாகி வருகிறது. நெகிழ்வுத்தன்மையுடன்கூடிய இன்றைய கல்விச் சூழலில், மாணவர்கள் இடைநிற்றலும், அந்தந்த பட்டப்படிப்புக்கான அடிப்படைப் புல அறிவினைக் குறைவாகப் பெற்றிருப்பதும் நடக்கிறது. திறன்களை வளர்க்கிற அல்லது தொழிற்புல அனுபவங்களைக் கொடுக்கிற கல்வித்திட்டங்கள் வேலைக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். ஆனால் கல்விப்புல அறிவையும் அது உறுதி செய்வதாக இருக்க வேண்டும். வேலை வேண்டும் தான். வேலைக்கான திறமையும் வேண்டும் தான். ஆனால், துறைக்கான அறிவு அவசியம் வேண்டும். அது இல்லாமால் போனால் துறைக்கான அறிவுள்ளவர்கள் சொல்வதை நாம் செய்யும் நிலைக்கு இருக்க வேண்டும். பெரும்பாலும் நாம் மேலை நாடுகளில் உருவாக்குவதை பிரதி செய்கிறோம். அது தொழில்நுட்பமோ, பொருளோ, பட்டப்படிப்போ, அங்கே உருவாகிறது. நாம் சுவீகரித்துக்கொள்கிறோம். இந்தியா எனும் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு, உலகின் உற்பத்திப் பொருள்களுக்குப் பெரிய சந்தை. அதுபோக, உலகின் உற்பத்தித்துறைக்கும் சேவைத்துறைகளுக்கும் தேவையான பணியாளர்களுக்குமான மிக மலிவான சந்தை. இந்தியர்கள் பல்வேறு புகழ்மிக்க நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளனர் என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் அதன் பின்னணியில், இந்தியர்கள் மிகத்திறமையான வேலைக்காரர்கள் (ஒர்க் ஃபோர்ஸ்) என்பதே தொக்கியுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் அளவுக்கு வேகமாகவும், அர்ப்பணிப்போடும், கடினமாகவும் உழைக்கும் வேலைக்காரர்கள் குறைவு. அவர்கள் மூளைக்காரர்களாக இருந்து தொழில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். கடின உழைப்பு, வேகம் அர்ப்பணிப்
பினைக் கொண்ட, அவற்றை உறுதி செய்யக்கூடிய இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரிகள் தொடங்கி பல்வேறு மட்டங்களில் பணியாளர்களாக உள்ளனர்.
இந்தியா ஒரு வளரும் நாடு. பொருளாதாரத் தன்னிறைவும் தேவை. சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்பதை பொருளாகப் புரிந்துகொள்ளாமல், அறிவுச்செல்வங்களாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது கல்வி வேலைக்கான திறன்களை வழங்க வேண்டும். அது இன்றைய நெருக்கடிகளை சமாளிக்கவும், இன்றைய உலகளாவிய வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவும் உதவும் என்றாலும் நீண்ட கால நோக்கில், உயர்கல்வியில், அடிப்படையான துறைசார் அறிவினை அதிகப்படுத்தும் மற்றும் உறுதிப்படுத்தும் கவனமும் இருக்க வேண்டும். நாளடைவில், வெறும் வேலைக்கான தொழிற்புலக் கல்வியாக எஞ்சி விடக்கூடாது என்பதே ஆதங்கம்.
Jayaprakashvel@gmail.com