1.காற்று

நண்பா, நீ உன் ஜன்னலில் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன்
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு
எதிலும் பங்குகொள்ளாத பார்வையாளனாய்.

நான் பனிக்கட்டியாகவும், நீ ஏறக்குறைய ஒரு நிழலாகவும்,
கடந்து போகும் நாவாயில் பயணிக்கும் சிறு பிள்ளையைப்
போல நான் கையசைத்தேன்.

இதுவெல்லாம் ஒரு பொருட்டா என்ற தடுமாற்றத்தில்,
புதிரான இந்தக் காற்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
என்று பிரியப்படுகிறேன்.

நம் நுரையீரலின் தொடர்பால் காற்று, எப்படி தன்னை மறுஉருவகித்துக்
கொள்ள வேண்டிக் கதறுகிறது பார்த்தாயா,
இருப்பதிலே எளிமையானதொரு கவிதை நம் மூச்சுக்காற்று;
உள்ளேயும் வெளியேவுமாக ஈரடியில்
அது யோசிக்காமல் நாம் எழுதும் கவிதை, போகாதே இரு.

பச்சையம் நிறைந்து, சுவாசிக்கின்ற நம் குடும்பத்திற்காக
நாம் நம் இடத்தில் உயிரோடு இருக்கவேண்டியருக்கிறது.
நாம் விடும் பொருமூச்சுகளைக் கூட ஒளியின் துணை
கொண்டு அது இனிய உணவாக மாற்றிவிடுகிறது.

எத்தனை நயம்! எவ்வளவு அருள்!
எளிமையானவைகளை எளிமையாக இருக்க விடு
அதை சத்தியம் என்று உணர்,
யாரும் இதைப் பற்றிப் பேசாவிட்டாலும்,
மரங்கள் சுவாசிப்பதற்கு நாமும் காரணமாகிறோம்.

2.இந்தக் கவிதை கிளிகளைப் பற்றியது அல்ல

வீடு திரும்பும் பேருந்தில் ஆண்கள் இருவர் பேசிக்கொண்டே வந்தார்கள்.
மற்ற சத்தங்கள் எல்லாம், ஒன்று மௌனித்தன அல்லது வேறு புறம்தள்ளி சாய்ந்துகொண்டன.
பொறுக்கமுடியாமல் ஒரு பெண் பேருந்திலிருந்து இறங்கி விட்டாள்.

நான் என் காதிலிருந்து கேட்பான்களை அகற்றினேன். சூழல் அடர்ந்திருந்தது.
இருவரும் கோபமாகயிருந்தார்கள். குருட்டுப் பூச்சிகளாக அவர்கள் வாயிலிருந்து
வந்த வார்த்தைகள் பேருந்தின் ஜன்னல்களில் மோதின.
‘எங்கே பார்த்தாலும் அவர்கள் தான் இருக்கிறார்கள்’
7 நிறுத்தங்கள் தாண்டிதான் நான் இறங்கவேண்டும்
‘நம் நாடு திரும்ப நம்கைக்கு வரவேண்டும், நமக்கு வேண்டியது அவ்வளவுதான்’
என் அக்குளில் வியர்வை கசிந்து உறுத்தத் தொடங்கியது.
எதையாவது வீசியெறிந்துவிட்டு இறங்கிவிட வேண்டும் என்றிருந்தது.
‘இது நியாயமான கோரிக்கைதானே’
ஆனால் என் வீட்டைவிட்டு நான் வெகுதொலைவில் இருக்கிறேன். அதனால்
என் தெருவில் வசிக்கும் கிளிகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.
‘அரசாங்க இருப்பிடங்கள் அனைத்தையும் அவர்களே ஆக்கிரமித்துள்ளார்கள்’
அந்தக் கிளிகள் எங்கள் தெருவிற்கு முதலில் எப்படி வந்தன என்று அவர்களிடம்
சொல்ல விரும்பினேன்.
‘வேலை வாய்ப்புகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்ளவே வந்தவர்கள்’
ஒரு படப்பிடிப்பிற்காக 60 களில் எங்கள் இருப்பிடத்திற்கு கொண்டுவரப்பட்ட
கிளிகள் அவை கூண்டிலிருந்து தப்பித்து விட்டன.
‘பிச்சைக்காரர்கள், ஏமாற்றிப் பிழைப்பவர்கள்’
மோசமான பருவ நிலையிலும் தங்கள் பாடல்களை விடாது பாடிக்கொண்டிருக்கும்
அந்த கிளிகளைப் பற்றி அவர்களிடம் சொல்ல ஆசைப்பட்டேன்.
‘ஏன் இவ்வளவு இரைசல் செய்கிறார்கள்’
ஏப்ரல் மாதத்தின் கடும் மழையால்கூட அந்தக் கிளிகளின் வண்ணங்களை
கழுவிப்போக்க முடியவில்லை.
‘நம்மோடு இயைந்து வாழ சிறு முயற்சிகூட செய்யமாட்டார்கள்’
அந்த கிளிகள் எவ்வளவு புத்திசாலிகள், மனிதர்களைப்போல பேசக் கற்றுக்
கொண்டன, மனிதம் பேசக் கற்றுக்கொண்டன என்று சொல்ல நினைத்தேன்.
‘ஆங்கிலத்தை சரியாக பேசக்கூட தெரியாது’
அவர்கள் சத்தமாக முனங்கிக்கொண்டே இருந்தார்கள்.
‘நமக்கு பேசுவதற்குக் கூட உரிமையில்லையா?’
என் வீட்டின் அருகில் வசிக்கும் இந்த மரகதப் பச்சைக் கிளிகள் பறப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்து மிக வெளிச்சமும் அழகுமான
பறவைகள் அவையே.

3. இதோ இங்கிருக்கிறாயே நீ!

ஒரு புதன் கிழமைகான கவிதை

இந்த குளிர் நாளில்
அடுப்பில் நீரைக் கொதிக்க வைத்துக்கொண்டு
இதோ இங்கேதானே இருக்கிறாய்
உலர்ந்த ரோஜா மற்றும் முள்ரோஜா இதழ்களை
கொதிநீரில் தூவியபடி
ட்யூலிப் மலர்கொத்துகளை வாங்கியபடி
அம்மலர்களையே உற்றுப் பார்த்தபடி
மேசையருகில்
உன் இதயத்தையே உன் கையில் ஏந்தியபடி
இதோ இங்கிருக்கிறாயே.

‘ப்ளீஸ் ப்ளீஸ்’ என்று அங்கே சமையலறையின்
யாருமற்ற வெறுமையிடம் இறைஞ்சியபடி
இங்கே தானே இருக்கிறாய்

இது எவ்வளவு கனமானது , எவ்வளவு கடினமானது .
எனினும் இது எவ்வளவு அழகானது , நீ செய்யும்
சிறு சிறு காரியங்கள் ஒவ்வொன்றும்.
நீ செய்யும் இச்செயல்கள் எல்லாமுமே
பலன்தரலாம் தராமலும் போகலாம்..

ஆனால் நீ வாழ விரும்புகிறாய் என்று
நீ சொல்லாவிட்டாலும்
இந்த அழகான செயல்கள் சொல்கின்றன

4.கனவென்பது ஒரு அறிவுச் செயல்பாடு

‘தான்’ என்ற அகந்தையால் உந்தப்படுவதை
யாராலும் தவிர்க்க முடியாது.
கனவு காண்பதென்பது ஒரு வகையான
அறிவார்ந்த செயல்.
‘தலையைத் தலையணையில் சாய்த்து
மறுநாள் எழுந்தால் புத்தம்புதிய
ஒன்றைக் கையில் ஏந்தலாம்’
என்பது போன்ற மிக இலகுவான ஒன்றாக
அது இருக்கக் கூடாது என்பதில்
அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
நான் சொன்னதைத் தான் நான் சொன்னேன்
நான் சொன்னதாக நீங்கள் சொல்லியதை அல்ல.
பன்றிகள் வீட்டிற்கு வெளியே உள்ளன ஆனால்
இம்முறை பக்கத்து வீட்டின் கதவருகில்.
எங்களுக்குள் நிலவும் உறவு இதனால்
உறுதியாக சிதைவடையும்.
பூனை என்னை மிகவும் நேசிக்கிறது ஆனால்
வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாது.
அதற்கான மரபணு அதனிடம் உள்ளது
ஆனால் அது செயல்படத் தொடங்கவில்லை-
இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்து …
எல்லாமே அறிவாக உணர்வுகளே அற்ற…
வாயை மூடு.. ஃப்ராய்டைப் பற்றிப் பேசாதே.

 

விக்டோரியா அடுக்வேய் புல்லே

இவர் கானா நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் கலைஞர். இங்கிலாந்தின் எஸெக்ஸில் பிறந்து வளர்ந்தவர். Girl B என்று ஒரு துண்டறிக்கையின் வடிவில் முதன்முதலில் தன்னுடைய கவிதைகளை வெளியிட்டார். 2022 இல் Quiet என்ற முதல் கவிதைத் தொகுப்பு வந்தது. கார்டியன் இதழில் இந்த தொகுப்பைப் பற்றிய விமர்சனத்தில் இவரை ‘பேருன்னதமான கவித்திறமை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Mother Tongue -தாய்மொழி என்ற தலைமுறைகளைக் கடந்த ஒரு செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் புலம்பெயர்ந்த ஆங்கிலம் அல்லாது வேறு மொழிகளைப் பேசக் கூடிய பெற்றொர்களை உடைய ஆங்கிலத்தில் எழுதக்கூடிய கவிஞர்களின் கவிதைகளை அவர்களின் தாய்மார்களைக் கொண்டே மொழிபெயர்த்து வெளியிட வைத்தவர்.
Quite என்ற தொகுப்பு 2022இல் T.S.Elliot பரிசிற்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. இத்தொகுப்பிற்கு 2023 இல் Folio விருதும், John Pollard International Poetry Prize என்ற விருதும் வழங்கப்பட்டது.
அமெரிக்கா, ப்ரேசில் போன்ற நாடுகளின் அருங்காட்சியக ஆய்வு மாணவியாகச் செயல்பட்டவர். தற்போது Royal Holloway பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவியாக லண்டனில் வசிக்கிறார்.

anuradha_anand@yahoo.com