புனிதரும், புழுக்களும்
அடல்பிகாரி வாஜ்பாய்க்கு ஒரு புனிதப்பூச்சு உண்டு. பண்புள்ள மனிதர், ஆனால் சாக்கடைக்குள் வசிக்கிறார். இதை, மதவாதம் இனவாதத்தை அடியோடு வெறுக்கும் நாகரீகமானவர்கள் மற்றும் எதிரிக்கட்சியினர் அவர் சார்ந்த கட்சியை அப்படி வர்ணித்துக் கேட்டிருக்கிறேன்!
ஆனால், நரேந்திர மோடி, அமித்ஷா வாஜ்பாய்கள் அல்லவே ? அவர்களிருவரும் ஒருபோதும் ஒளிமிக்க மக்களாட்சியை விரும்பியவர்கள் கிடையாது. கழிவுநீர் கால்வாய்க்கடியில், அராஜகச் சகதி பூசிக்கொண்டு வாழ்பவர்கள். வாஜ்பாயை அன்று கொஞ்சமேனும் கொண்டாடியவர்கள் கூட இவர்களிருவரையும் ஒரு விழுக்காடு கூட ஆதரித்ததில்லை. மோசமான பாசிசக் குணம் கொண்டவர்கள் என்று 2013 களின் இறுதியிலிருந்தே எச்சரித்து எழுதினார்கள், பேசினார்கள், இவர்கள்!
அவ்வளவு வெளிப்படையான இனவாதம், மதவாதம் போற்றும் அரசியல்வாதிகளிடம் நாட்டை யாராவது பத்தாண்டுகள் ஒப்படைப்பார்களா ?
நாம் ஒப்படைத்தோம்!
இங்கு நாம் என்றால் தமிழர்களும் சேர்ந்து என்று அர்த்தமல்ல. தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாகத்தான் அது நிகழ்ந்தது. ஆனால் பரவலாக வட இந்தியா முழுமையிலும் அவர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்து தொலைத்தது!
முதல் ஐந்தாண்டுகளே நரகம்தான். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளும் நீங்களே ஆள்க எனக் கொடுத்தார்கள் அல்லவா ? அன்று பிடித்தது நமக்குச் ஜென்மச்சனி!
பின்வரும் காலத்தில், இந்தப் பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சியின் வரலாற்றைப் படிப்பவர்கள் நம்மைப் பரிதாபமாகப் பார்க்கக் கூடும், அல்லது அருவருப்போடு (!)
அவ்வளவு பயங்கரங்களும், அட்டூழியங்களும் நிகழ்ந்த இருண்ட ஆட்சி!
மக்களாட்சியின் நான்காவது தூணாய்க் கருதப்படும், இங்கிருக்கும் பிரபல ஊடகங்களில் பெரும்பாலானவை, அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளைக் கவ்விக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவான சேதிகளை மட்டுமே சொல்வதால், மக்கள் ஒட்டுமொத்தமாகக் கொதிநிலைக்கு செல்லவில்லை!
நல்லவேளை செல்லவில்லை. இல்லையேல் பிரஞ்சுப் புரட்சியைக் காட்டிலும் கோரமான இந்தியப் புரட்சி விளைந்திருக்கலாம்!
பாஜக என்ன செய்துக் கொண்டிருக்கிறது ?
2019 ல், நரேந்திர மோடி மீண்டும் ஒன்றியத்தின் தலைமை அமைச்சராகவும், அமித்ஷா உள்துறை அமைச்சராககவும் பதவியேற்றனர். அவ்வளவுதான். இனி நாக்பூரான்கள் என்ன ஸ்க்ரிப்ட் எழுதித் தருகிறார்களோ, அதை மட்டுமே முதலில் செய்வோம் என இரண்டு குஜராத்திகளும் உறுதிபூண்டனர்!
CAA, NRC, NPR, கஷ்மீர் பிரிவினை, சிறப்புச் சலுகைகளை பறித்தல் என்று இருவரும் குருதிக் குளியலில் திளைத்தனர்! ஒட்டு மொத்த இந்தியாவே கொதித்தெழுந்தது. சிறுபான்மையினர் வெகுண்டெழுந்து அனைத்து நகரங்களிலும் நடுரோட்டில் அமர்ந்து அறப்போர் செய்தனர். ஒரு நாள், இரண்டு நாள்கள் இல்லை. மாதக்கணக்கில் மழை, பனி, குளிர், கடுங்கோடை பாராமல், வேலை வெட்டிக்குப் போகாமல், குழந்தை குட்டிகளுடன் தங்களின் குடி உரிமைக்காகக் குரல் கொடுத்தனர்!
நடுங்கியிருந்திருக்க வேண்டிய ஒன்றிய அரசு, இதை வேடிக்கை பார்த்து ரசித்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையின் போதும் போராட்டக்காரர்கள் கலையாததால் ஆத்திரமடைந்த அமித்ஷா, தலைநகரில் கொடுங்கலவரம் புரிய ஆணையிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள்!
சூடு பிடித்து உச்சகட்டத்தை நோக்கிப் போய் கொண்டிருந்த அந்தப் போராட்டங்களை, கோவிட் வைரஸ் வந்து, கொடூர வைரஸ்களை காப்பாற்றியது என்றால் மிகையில்லை!
கோவிட் பரவலின் போதும் இவர்களுடைய கேவலமான ‘பிரிவினை அரசியலுக்கு’ ஓய்வு தரவில்லை. டெல்லி மாநாடு ஒன்றில் கலந்துக் கொள்ள வந்த தப்ளிக் தொண்டர்களை, சிங்கிள் சோர்ஸ் என்கிற சொல்லாடலால் வர்ணித்து, அவர்களால்தான் இந்தியா முழுமைக்கும் வைரஸ் பரப்புகிறார்கள் என்றனர். அதை அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் அப்படியே சொல்ல வைத்தனர். சமூகவலைத்தளங்கள் மூலம் பரவச்செய்தனர். வெறுப்பை விதைத்தே வாழ்ந்து பழகியவர்கள் அல்லவா ?
இவர்களுடைய தேசிய லாக்டவுன் அறிவிப்பால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே சென்றதைப் பற்றி கிஞ்சித்தும் இரக்கம் கொள்ளவில்லை இவர்கள்
கோவிட் தடுப்பூசி விஷயத்திலும் சரி, ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்திலும் சரி, இவர்களின் அரசியல் கீழ்த்தரமாகவே இருந்தன. விளைவு தினமும் பல்லாயிரம் இன்னுயிர்கள் பறிபோயின!
கொஞ்சம் நிலை சீரடையும் வேளையில் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் நெடிய போராட்டத்தினால் மூக்குடைபட்டு, அதைத் திரும்பப்பெற்றார்கள். ஒரே ஓர் எழுத்தைக் கூட எங்கள் அரசு திருத்தவே திருத்தாது என்று உளறிய வாய்கள் உடை
பட்டன!
சரி என்னத்தைத்தான் பின் நல்லது செய்தார்கள் ?
நல்லதை விடுங்க. அதைத் தம் வாழ்நாள்களில் அவர்கள் செய்யவே போவதில்லை. ஆனால் அவர்களுடைய தலையாய கொள்கையான இராமர் கோயிலை அயோத்தியில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம்புங்கள். கொஞ்மும் கூசாமல் அதைத் தம் சாதனைப் பட்டியலிலும் சேர்த்துக் கொள்வார்கள்!
சனாதன அரசியல்
2020, 2021 முழுக்கவே கோவிட் பரவல், பாதிக்கப்பட்டோர், பலி, தடுப்பூசி இவைகளே பெரும்பாலும் செய்திகளின் முற்பக்கத்தை ஆக்கிரமித்துக் கிடந்தன. 2022 பிறந்து, சூழல் லேசே மாறியதும், சனாதனப் பிரியர்கள் வழக்கம் போல தங்களுடைய லீலைகளை அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!
2021 மே மாதம், மிகக் கடுமையானச் சூழலில் ஆட்சியைப் பிடித்த திமுக, முதல் நாளன்றே பல முக்கியமான நலத் திட்டங்களை அறிவித்துவிட்டு, நீண்ட லாக்டவுனுக்குள்தான் போனது. அப்படி ஒரு நிலை இருந்ததை அடுத்த நிதிநிலை அறிக்கை வருவதற்குள் சிறப்பாக மாற்றிக் காட்டினார்கள் ஆட்சியாளர்கள். பொறுக்குமோ டெல்லிக்கு ?
ஒன்றிய அரசு பொதுவாகவே தாம் நியமிக்கும் ஆளுநர்கள் தங்களுக்கு விசுவாசமாக தங்களுடைய அரசியலை ஆங்காங்கே பேச வேண்டுமென்றே நினைப்பார்கள். ஆனால், ஆர் எஸ் எஸ்சால் பரிந்துரைக்கப்பட்டு, பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களுக்கோ இரண்டு வேலைகளைப் பார்க்க வேண்டும்!
ஒன்று, ஒன்றிய அரசு தரும் யோசனைகளுக்கேற்ப மாநில அரசை தொடர் டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டும். முக்கியமான மசோதாக்கள் எதற்கும் கையெழுத்திடாமல் அப்படியே மறந்துவிட்டதைப் போல் இருக்க வேண்டும். அதிகாரமே இல்லாவிடினும் உள்ளூர் அரசியலில் தலையிட்டு அரசியல் கருத்துக்களை கூற வேண்டும்; இரண்டாவது, நாக்பூரான்களின் பேராசையான சனாதனம், வர்ணாஸ்ரமம், மநு இவைகளெல்லாம் புரதானமானவை, நம் கலாச்சாரம், பண்பாடு போற்றுபவை, இந்து மதம் போல ஒரு நல்வாழ்வியலை வேறெங்கும் காண முடியாது என்றெல்லாம் பேசி, அவர்களையும் தனியே குளிர்விக்க வேண்டும்!
இந்த இரண்டு வேலைகளையும் தற்போதைய தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி, தவறாமல் செய்கிறார். அட, அதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை போன்ற சட்ட மசோதாக்களுக்கு கூட ஒப்புதல் தந்து கையெழுத்திடாமல், சார்ந்த ஆன்லைன் வர்த்தகர்களிடமே கலந்தாலோசனை செய்ததெல்லாம் உச்ச அவலம். தமிழ்நாடு இதுவரை காணாத அட்டூழியங்களின் ஒட்டுமொத்த உருவமாய் வலம் வருகிறார் ரவி!
பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டுக்கான தலைவரும் அவருடைய கூட்டாளியாய் வலம் வரும் ஆளுநரும் சேர்ந்து அடிக்கும் அரசியல் கொட்டம் காணச் சகியாத ஒன்று. திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாட்ஸ்அப் செயலிகளில் எவராலோ ஃபார்வட் செய்யப்படும் சேதிகளைத் தொகுத்து, சொத்துப்பட்டியல் என வெளியிடுவதும், அதை ஆளுநரிடம் ஒப்படைப்பதும், அவர்களிருவரும் எடுத்துக்கொள்ளும் போட்டோ பத்திரிகைகளுக்கு வரும் முன் குறிப்பிட்டச் சில திமுக பிரமுகர்களின் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், இந்தப் பட்டியலின் அடிப்படையில் சோதனைக்கு வருவதும் வாடிக்
கையான ஒன்று.
சோதனைகள் நடைபெறும் போது, கணக்கில் காட்டாத பல ஆவணங்கள், டாலர்கள், ரியால்கள், பிட் காயின்கள் கிட்டியதாக பல கதைகளெழுப்பப்படும். ஆனால் அதன் பின் கிணற்றடியில் வீசப்பட்ட கல் போல, எவர் கண்ணுக்கும் தெரியாமல் அமுங்கிப் போகும்!
ED யும் மோடியும்
அமித்ஷா கையிலிருக்கும் பிரம்மாஸ்திரமாக இந்த ED துறையைப் பார்க்கலாம். அதற்கு முன் இந்த ED எனப்படும் அமலாக்கத்துறைத் தலைவருக்கு என்ன நேர்ந்தது எனப் பார்த்துவிடுவோம்!
19 நவம்பர் 2018 அன்று 62 வயதான சஞ்சய்குமார் மிஸ்ரா என்கிற உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த IRS அவர்களை, அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கிறார் அமித்ஷா. அன்றிலிருந்து அவருடைய பதவி இரண்டாண்டுகளுக்கு இருக்கும்!
அவர் ஏன் நியமிக்கப்பட்டார் என்பதை இனி வரும் பட்டியலைக் கண்டமாத்திரத்தில் உங்களுக்கு பிடிபடும்.
பல்லாயிரம் கோடிகளை ஏமாற்றிவிட்டு அண்டை நாட்டுக்கு ஜாலியாக ஓடிப்போய், சொகுசாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விஜய் மல்லைய்யா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சியையெல்லாம் அவர் தேடி வேட்டையாடவில்லை. அனுப்பி வச்சவங்கள மீறி அவர் நடவடிக்கை எடுக்க முடியுமா என்ன ?
மிஸ்ரா என்ன செய்கிறார் என்றால், யாராரெல்லாம் தங்களுடைய கட்சிக்கு, கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் ஏதோ ஒரு கதை கூறி அதிரடிச் சோதனைகள் என்று தன் வேட்டையைத் துவங்கினார். இவர் எடுத்த அத்தனை நடவடிக்கைகளுக்கான ஒத்திகையும், பட்டியலும் நாக்பூரில் தயாரானவைகளே!
ப.சிதம்பரம், கார்த்தி சிசம்பரம், சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, அவருடையக் கணவர் ராபர்ட் வதேரா, கர்நாடகத் துணை முதலமைச்சராக இருக்கும் சிவக்குமார், இன்று அவர்களுடைய ஆளாய் மருவியிருக்கும் அஜீத் பவார், அர்விந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையிலிருந்த பல அமைச்சர்கள், குறிப்பாக மனிஷ், மம்தா அமைச்சரவையிலிருந்த பலர், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த், தெலங்கானா முதலமைச்சரின் மகள், கஷ்மீரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா, தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி, பொன்முடி …
இவருடைய பதவிக்காலம் 2020 ல் முடிவுற்றபோது, அது மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அதுவரை கூட யாருக்கும் உறுத்தவில்லை. திடுக்கென்று இரண்டாண்டுகால பதவி நீட்டிப்பை மேலும் ஓராண்டுக்கு இழுத்து இந்த வருட நவம்பர் 2023 வரை அவரே பதவியில் தொடர்வார் என்றார் அமித்ஷா!
எதனால் அவருடைய பதவி தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என ஜெய்ஷா மகனைக் கேட்டால் கூடச் சொல்லிவிடுவான். ஆனால் இந்த பதவி நீட்டிப்பு ஓர் அநீதி. ஏற்கனவே தேர்தல் ஆணையர் நியமன விஷயத்தில் குட்டு வாங்கிய மோடி அரசு, இந்த பதவி நீட்டிப்பு விஷயத்தில் உதை வாங்கியது. அதுசரி. அதெல்லாம் சூடு, சுரணை உள்ளவர்களுக்குத்தானே உறுத்தும் ? நாம் மிஸ்ராவின் ஆட்டத்தைத் தொடர்வோம்.
வருமானவரித்துறை, சி பி ஐ, போன்றவைகளும் அமலாக்கத்துறையுடன் கைகோர்த்து ஆடினாலும், அமலாக்கத்துறைக்குத்தான் வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தன!
எனவே இவர்கள் சோதனைக்கு வந்தாலே தங்களுடைய எதிரி இனி ஒழிந்தான் என்கிற ரீதியிலே அகில உலகளவில் பாஜகவினர் எண்ணினார்கள்.
ஒரு காலத்தில், அதாவது ஒரு சிபிஐ யின் டைரிக்குறிப்பு என்கிற முதல் படத்தில் மம்முட்டி நடித்த பொழுதில், அது எப்படி அதிசய சக்திகள் கொண்ட துறை எனக்கட்டமைக்கப்பட்டிருந்ததோ, அதைக்காட்டிலும் அதிகமாக இப்போது அமலாக்கத்துறைக்கும் இங்கு பிரமிக்கத்தக்க அளவில் பில்ட்அப்கள் உண்டு.
ஆனால் பல வழக்குகளில், குறிப்பாக 2 G வழக்கில், சி பி ஐயின் வாதங்கள் தூள் தூளானது. எத்தனை வருடங்களாகத் தனியே காத்திருந்தேன், ஒரே ஓர் ஆதாரத்தைத் தர உங்களுக்கு வக்கில்லையா எனக் கேட்ட ஓ பி ஷைனியால், அன்று தலை கவிழ்ந்த சி பி ஐ, இன்றுவரை எழவில்லை!
சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கு, ஒரிய இரயில்கள் மோதல் சதி வழக்கு என பெரிய பெரிய
வழக்குகளை சி பி ஐதான் விசாரிக்கிறது. ஆனால் லோக்கல் போலிஸ் விசாரணையைக் காட்டிலும் மிக மோசமாக, மெதுவாக நகர்கிறது. நீதிமன்றங்களில் இவைகளையெல்லாம் நிருபிக்க படாதபாடு படுகிறார்கள் அவர்கள்!
எனவேதான் வருமானவரித் துறை, சி பி ஐ, இந்த இரண்டு ஆயுதங்களை விட அமலாக்கத்துறை பலமான அமைப்பு. அதை முழுக்கத் தங்களுக்குச் சாதகமாக பிரயோகிக்கலாமென்று இரு குஜராத்திகளும் பல லீலைகள் புரிந்தவண்ணமுள்ளனர்!
அஜீத்பவார், ஏக்நாத் ஷிண்டே போன்றவர்களை எளிதே பயம்காட்டி, தன்வயப்படுத்தி, பல கட்சிகளை உடைத்து, பல்வேறான ஆட்சிகளைச் சிதைத்தாலும் எதுவும் நிலைக்கவில்லை!
என்ன ஆச்சு ?
குமாரசாமி ஆட்சியின்போது, அவருடைய எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி, கர்நாடாகவில் ஆட்சியைச் சிதைத்து, பசவராஜ் பொம்மை என்கிற மஹா ஊழல்வாதியை முதலமைச்சர் ஆக்கினார்கள். ஹிஜாப் கலவரங்கள் மூலம் பேரளவில் இந்து மத வாக்குகளைக் கவர எண்ணினார்கள். அந்தோ பரிதாபம்!
கிட்டத்தட்ட 35 இடங்களில் ஓர் ஆளுங்கட்சி, கட்டுத்தொகையையே பறிகொடுத்து ஆட்சியையும் இழந்தது. பாஜகவை விட ஒரு மடங்கு அதிகத் தொகுதி பெற்று காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தது!
பெருங்கோடிசுவரரான சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையின் பாச்சா கடைசிவரை பலிக்கவில்லை. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரையும் டெபாசிட் இழக்கச் செய்து துணை முதலமைச்சராக உலா வந்துக் கொண்டிருக்கிறார் சிவக்குமார்!
சிவக்குமாரை மட்டும் காங்கிரசிலிருந்து அமலாக்கத்துறை பூச்சாண்டி காட்டி பிரித்திருந்தால், மீண்டும் யாரையாவது டம்மி முதலமைச்சராக்கிவிட்டு ஆள்வோம் எனக் கனவு கண்டுக்கொண்டிருந்த அமித்ஷாவுக்கு முதல் சாவுமணி அடித்திருப்பது கர்நாடகாதான்!
சரி, அருகிலிருக்கும் மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் போவோமா ?
மராட்டியத்தில் தங்களின் பழைய கூட்டாளியான உத்தவ் தாக்கரேவை, பதவி ஆசையால் பறிகொடுத்திருந்தும், அதைப்பற்றிச் சிந்திக்காமல், உத்தவ் தங்களுக்கு துரோகமிழைத்து விட்டதாகவே பரப்பி வந்தனர். முதலில் அஜீத்பவாரின் மீது பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டைக் காட்டி அமலாக்கத்துறையை ஏவினர். ஆனால் அது கைகூடவில்லை என்றதும், சிவசேனாவை இரண்டு துண்டுகளாக்க ஏக்நாத்திடம் பேரம் பேசினார்கள். பேரம் படிந்தது. இருந்தாலும் உத்தவ்வுடன் ஒப்பிட்டால் ஏதுமற்ற ஏக்நாத்தைக் காட்டிலும் பல்லாயிரம் கோடி சொத்துகளைக் கொண்ட அஜீத்பவார் தங்களுடையப் பக்கம் வந்தால், அடுத்த தேர்தலைச் சந்திக்க உதவும் எனக் கணக்கு போட்டு, நாளொரு நாடகம், பொழுதொரு துரோகமாக அங்கு காட்சிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி அஜீத்பவார் அந்தப் பக்கம் போயிருந்தாலும் பலியாடாக ஏக்நாத் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார் என்றொரு சேதி. இப்போதைய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீசையுமே அப்படிச் செய்துவிடுவார் அஜீத் என்று கண்ணடிக்கின்றனர் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர். காலம் அனைத்தையும் நமக்குச் சொல்லிவிடும்!
மத்தியப்பிரதேசத்தில், மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிர் ஆதித்தியாவை இழுத்து, காங்கிரசை உடைத்து, ஆட்சியை பின் வாசல் வழியாகக் கைப்பற்றியது அமித்ஷா & கோ. அங்கு நடந்து கொண்டிருப்பது புல்டோசர் ஆட்சி. சட்டத்தைத் தாமே கையிலெடுத்துக் கொண்டு எதிர்ப்பவர்களின் வீடுகளையெல்லாம் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய ஆள்கள் குடித்துவிட்டு, பழங்குடிகள், தலித் மக்களின் முகங்களின் மீது சிறுநீர் அபிஷேகம் செய்கிறார்கள். பாதிகப்பட்டவரை விட்டுவிட்டு, யாரோ ஒரு தலித்தைப் பிடித்து அவருடையக் கால்களைக் கழுவி, பாவ விமோச்சனம் என்று காதில் பூவைச் சுற்றுகிறார் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர். கர்நாடகாவில் எப்படி அதிரடியாகத் தொகுதிகளை கைப்பற்றியதோ, அதைக்காட்டிலும் அதிகளவு தொகுதிகளை இம்முறை காங்கிரஸ் அங்கு கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்கிறார்கள். ஜோதிர் ஆதித்தியா தாய்வீடு திரும்ப மாட்டாரா என்ன ?
இராஜஸ்தானில் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் இப்போதுவரை காங்கிரசில் இருந்தாலும்,
அங்கும் தம் லீலைகளை ஓயாமல் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றனர் நம்ம அமித்ஷா கோஷ்டியினர்! சச்சினும் உள்ளுக்குள் இருந்துக்கொண்டே, ஆட்சிக்கெதிராகக் கலகங்கள் பல புரிந்தாலும்,
காங்கிரஸ் அரசு அங்குத் திடமாக இருப்பதால், அவர்களுடைய அலையே இப்போதுவரை அங்கு வீசிக் கொண்டுமிருப்பதால், அசோக் கெலாட் எனும் காங்கிரசின் சீனியரிடம் தங்களுடையத் தகிடுதத்தங்கள் பலிக்காமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது அந்தக் கோஷ்டி!
யாமறிந்த ஒரே கலை
இந்தியாவில் குஜராத், உத்திரப்பிரதேசத்தைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் நேர்மையாக வெற்றி பெற்று, ஒழுங்கான ஆட்சி அமைத்ததே இல்லை பாஜக.
புதுவையை எடுத்துக் கொள்ளுங்கள். நமச்சிவாயம் எனும் காங்கிரஸ்காரரை ஆட்சியின் கடைசி கட்டத்தில் வலைவீசிப் பிடித்தது. ரங்கசாமியை ஏமாற்றி, ஆட்சியில் பங்கு, முக்கியத் துறைகளை கைப்பற்றி
அழிச்சாட்டியம் புரிந்தது. ஆந்திராவில் சந்திரபாபுவுடன் உறவாடிக்கொண்டே, அவருடையப் பகையான என் டி இராமாராவ் மகளுக்கு கட்சித் தலைவர் பதவியை வாரி வழங்குகிறது. பீகாரில் நிதிஷைக் கவர்ந்திழுத்து, இப்ப அவர் நழுவி தப்பி வந்துவிட்டார்!
அரசியலைத் தாண்டி, சமூகநீதி விஷயங்களில் மிகவும் மெத்தனமாக கையாலாகாமல் இருக்கிறது பாஜக. மிகவும் அவமானகரமான பல செயல்கள் தொடர்ந்து நடந்து, அது உலகளாவிய கவனம் பெற்ற போதும் எனக்கென்ன என்பது போல ஒன்றியத் தலைமை அமைச்சர் இருப்பது வெட்கக்கேடானது!
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பிரிஜ்பூஷன் என்பவர், நம் நாட்டுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த சில மல்யுத்தப் பெண் வீரர்களிடம் பாலியல் வன்முறைகள் செய்ததாகப் பல புகார்கள் எழுந்தன. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு எழுப்பப்பட்ட இந்தப் புகாரில் எந்த நடவடிக்கைகளையும் அமித்ஷா அரசு அல்லது மோடி அரசு எடுக்கவேயில்லை. புதுதில்லியில் காவல்துறை அமித்ஷா நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களும் பல மாதங்கள் கடுமையான குளிர், மழை, கொடூர வெயிலில் கூட களமிறங்கிப் போராடிப் பார்த்துவிட்டனர். அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாக, அந்தப் போராட்டங்களில் பங்கு பெற்றார்கள். ம்ஹூம். ஒருகட்டத்தில் இவ்வளவு இரக்கமற்ற, கீழ்த்தரமான அரசைக் கண்டிராதவர்கள், தாங்கள் பெற்ற சர்வதேச, தேசியப் பதக்கங்களையெல்லாம் ஆற்றில் வீசப்போவதாக அறிவித்தனர். அசரலையே ? நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் புறப்பட்டபோதுதான் கொஞ்சம் நெளிந்தனர். ஆனால் தம்முடைய காவல்துறையைக் கொண்டு கொடூரமாக அவர்களை அடக்கிக் கைது செய்தனர் அமித்ஷாவின் அடியாள்கள்!
தாரை தாரையாக கண்ணீர்விட்டு, கறுஞ்சாபம் இட்டபடி தற்காலிகமாகப் போராட்டங்களைக் கைவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள் அந்தப் பெண் வீரர்கள். இதுபோன்ற அரிய வழக்குகளிலெல்லாம் பிணையே கொடுக்க மாட்டார்கள். ஆனால் பிரிஜ்பூசன் மீது 1500 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை எழுதப்பட்டு விட்ட பின்னரும் அவருக்குப் பிணை அளித்திருக்கிறது நீதிமன்றம். ஒரே காரணம் ஆள்வது பாஜக. சார்ந்த பாலியல் வன்முறைக் குற்றவாளியும் பாஜக!
வடகிழக்கிந்தியா எரிகிறது
உள் நாட்டிலேயே அப்பாவி மக்களை அகதிகளாக்கி முகாம்களில் தங்க வைப்பது, அதுவரை ஒற்றுமையாய் வாழ்ந்த மக்களை ஒருவருக்கொருவர் அடித்துக் கொல்லத் தூண்டுவது, வன்கலவி, சூறை, தீவைத்தல் எனக் கலவரங்களை அவர்களுக்கிடையே மத, இன வெறியைத் தூண்டி உருவாக்குவது, இவைகள் யாவும் சங்கிகளுக்குப் பல்லாண்டுகாலமாகக் கைவந்த கலை.
அஸ்ஸாம் vs மிசோரம் எல்லைச் சண்டையில் அரசு காவலர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி பல உயிர்களைக் கொன்றதுதான் இவர்களுடைய உள்நாட்டு நிர்வாகம். அந்த நிர்வாக இலட்சணத்தால்தான் வெடித்தது மணிப்பூர் கலவரம். இனம் வேறு வேறாக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்த மக்களை, இந்து vs கிருத்துவர் என்று மதரீதியாகப் பிளவுபடுத்தி,அங்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள், பல்லாயிரம் பேர் படுகாயம், பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சேதம், மணிப்பூர் ஆளுங்கட்சி ஆசியுடன், அங்கிருக்கும் காவல்துறை ஒத்துழைப்புடன் நடக்கும் வல்லுறவுகள், வன்கலவிகள் ;
சிறுபான்மையினப் பெண்களை நிர்வாணப்படுத்தி, பல கிலோமீட்டர் தூரம் அடித்திழுத்துச் சென்று, பின் கூட்டுப் பாலியல் வன்முறை செய்து, அவையெல்லாம் படமாக்கப்பட்டு, 75 நாள்கள் கழித்து அது உலகிற்குத் தெரிந்தபின், அய்யய்யோ என்ன நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறது என்று மோடியும், அமித்ஷாவும் நம்மைப் பார்த்துக் கேட்கும் போது, நமக்குக் கிட்டத்தட்ட நெஞ்சடைப்பு வரும்!
இத்தனை களேபரங்களுக்கிடையே இவர்கள் பொது சிவில் சட்டம் என்றொரு குழப்பத்தை விதைக்க நினைத்து, கடுமையான எதிர்ப்புகள் வர, அந்த வெடிகுண்டை இப்போதைக்கு அணைத்து எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார்கள்!
INDIA
இவர்களை இத்தோடு துரத்துவதே இந்தியாவைக் காப்பாற்ற ஒரே வழி என ஒரு சிலருக்கு இப்போதாவது புரிந்ததே என மகிழ்ச்சி கொள்ளலாம். 2019 லியே இதை உணர்ந்து சரியான முடிவெடுத்தவர் நம் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் அதை அன்று கிண்டல் செய்தவர்களும் இன்று கைகோர்த்து, ஒரே மேடையில் கையுயர்த்தி ஒன்று சேர்த்திருப்பது நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம் மக்களாட்சி முறை தொடரும். மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் சக்திகள் படிப்படியாக ஒழிக்கப்படும். இங்க ஒரு தமாஷ். இந்தியாவுக்குப் போட்டியாக தேசிய அதானி வளர்ச்சிக்காகப் பாடுபடும் NDA வும் தன்னுடைய 38 கூட்டணிக் கட்சியினருடன் சேர்த்து ஒரு கூட்டம் நடத்தியது!
ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். வெந்தது, வேகாதாது, நொந்தது, நொண்டிக்கிட்டுப் போனது என்று கையாலாகாத தண்டக் கருமாந்திரங்களை அழைத்து வந்து … போதும். இதுக்கும் மேல எழுதினா அது அந்த மொக்கைக் கூட்டணியை மேலும் பெருமைப் படுத்துவதாக அமைந்துவிடும்!
rashraja1969@gmail.com