1

ஒரு பிரிவில்
நீ சொல்லும் இறுதி வாக்கியம்
என்னவாக இருக்கும் என்று கேட்டாள் சிநேகிதி

அவ்வளவுதானா எல்லாம் என்கிறபோது
தெரியவில்லை என்று திகைத்துப் போகிறேன்
ஒருமையிலிருந்து துவக்ககால மரியாதைகளுக்கு
வாக்கியங்கள் மீளும் நாளில்
கண் கசிய பிடிவாதமாய்
ஒருமையில் நின்று கொண்டிருப்பேன்

நீ என் வாழ்விலிருந்து வெளியேறிவிடவே
இவ்வளவும் செய்தேன் என்று
யாரும் சொன்னால்
முதலிலேயே சொல்லியிருந்தால்
இவ்வளவு கண்ணீர்
இவ்வளவு இரத்தம்
இறைக்கப்பட்டிருக்காதல்லவா
என்று கேட்க நினைப்பேன்
ஆனால் மாட்டேன்

சகலத்திற்கும் நன்றி என்று
யாரேனும் சொல்லும்போது
காத்திருக்கிறேன் என்று
சொல்லி இருக்கிறேன்
காயப்படுத்தி இருந்தால்
மன்னிக்கவும் என்று கேட்கும் குரலுக்கு
பரவாயில்லை
உனக்கு உரிமையிருக்கிறது என்பேன்

எது இறுதி வாக்கியம் என்றே தெரியாமல்
கைவிடப்படும் மௌனங்களில்
எனக்கு நானே பேசிக் கொள்ளும் வாக்கியங்களில்
ஒரு சொல்லும் பழிக்க மாட்டேன்
ஆனால் இப்படியான தருணங்களில்
எனக்குத் தெரியவில்லை
எப்படி ஒரு இறுதி வாக்கியத்தை
உருவாக்குவதென்று

2

எத்தனை இலட்சம் இலைகள் உதிர்ந்து
எத்தனை ஆயிரம் பூக்கள் நிறம் பிறழ்ந்து
அதுவரை தாவரத்தில் இல்லாத நிறத்துடன்
ஒரு கனி
பூமியின் ஈர்ப்புக்குத் தாழ்கிறது

இந்த இருதயம்
இன்னும் எத்தனை முறை துடித்து
இன்னும் எவ்வளவு கிலோமீட்டர் தூரம்
இந்த இரத்தம் ஓடினால்
உன் ஆறுதலின் அணைப்பு வாய்க்கும்

ஒரு பெரிய காயத்தைத் தைக்க
சில நூறு சிறிய காயங்கள் செய்தால்தான்
முடியுமென்று
சொல்லித்தருகிறது அன்பு

3

அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்
அப்புறம் மன்னிப்பு கேட்டால் போயிற்று
ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்

யாரோ அந்த குரலுக்கு அடிமையாய் இருக்கிறார்கள்
கூப்பிட்ட குரலுக்கு சவக்குழியில்
இருந்தும் எழுந்து வருவார்கள்
யாரோ ஏழுகடல் தாண்டியும்
ஏழு நட்சத்திரம் தாண்டியும்
பார்க்க வருவார்கள்
யாருக்கோ என்ன செய்தாலும்
கோபிக்க முடியாது
எதிர்த்து பேச அஞ்சுவார்கள்

ஆமாம்
இந்த அப்புறங்களின் தூரம் எதுவரை
ஒரு நட்சத்திரம் கருந்துளையாய் மாறும் வரையா
ஒரு டில்டோ கடலடியில் மட்கும் வரையா
அன்பின் தீப்பந்தங்கள்
ஒரு சிதையை முதலில்
எங்கே தீண்டும் என்பதை
யாராவது இப்போதே சொல்லி விட்டால்
எவ்வளவு நன்றாயிருக்கும்

4

நாம் நம் வீடுகளைப் பற்றி
பேசிக்கொண்டிருந்த உரையாடலை
வீடற்ற காலங்களில் இருந்து துவங்கினோம்

பிறகு
பறவைகளும் பூனைகளும்
வளர்க்க முடியாத வீடுகள் குறித்து நீயும்
நாய்களும் மீன்களும் வளர்க்க
அனுமதிக்காதவர்கள் குறித்து நானும்
இசைக்கருவிகள் வாசிக்க இயலாத வீடுகள் குறித்தும்
குழந்தைகள் கிறுக்க இயலாத
சுவர்கள் கொண்ட வீடுகள் குறித்தும்
வளர்த்துப் பெயர்கையில் கைவிட நேர்ந்த
பூச்செடிகள் மரங்கள் குறித்தும்
ஒரு அந்தரங்கமான பாலியல் அத்துமீறல் குறித்தும்
முதல் மைதுனத்தை யாரோ
பார்த்துவிட்டது குறித்தும்
பரஸ்பரம் கதைகள் இருந்தன

ஒட்டகங்களைப் போல்
தொட்டி மீன்களைப் போல்
வாழ நேர்கிற வாழ்வில்
நத்தைகளைப் போல்
வீட்டை முதுகில் சுமந்து திரிகிறவனும்
பட்டாம்பூச்சிகள் போல்
வீட்டைத் தின்று பறப்பவளும் என்று
நாம் நம்மைச் சொல்லிக் கொண்டோம்
“குஞ்சு பொறிக்க மட்டும் வீட்டைக் கட்டிக்கொண்டு
வானத்தில் இரை தேடும் பறவைகள்
எவ்வளவு சுதந்திரமானவை இந்த உலகில்”
என்ற நாடோடியின் பாடலை
மலையுச்சிக் கூடார இரவில்
கணப்பு நெருப்பு முன் பாடினாய்
நல்ல கலவிக்குப் பிறகு
எனக்கு அது பாதி பிடித்திருந்தது
nesmithranonline@gmail.com