பார்வையாளர்
ஆஸ்பத்திரி அறையின்
ஜன்னல் கட்டையில் வந்துஅமர்கிறது
சிட்டுக்குருவி.
அரவமற்ற தவிட்டு நிறமாய் நிற்கிறது,
புதன் கிழமையாக அஸ்தமன வேளையாக
நோயுற்ற வாழ்வின் இந்தத் தருணமாக…
அடுக்கிக்கொண்டே போன மனத்தை
இழுத்து நிறுத்தினேன் – யாருடைய
வாழ்க்கையில் யார் அங்கம்.
அசைந்தால்பறந்துவிடும் என்றஞ்சி
உடலசைக்காமல் உற்றுப் பார்த்தேன். தானும்
அப்படியே நின்றது. நெஞ்சுக்கொன்று
முகத்துக்கொன்று மணிக்கட்டிலும் அரையிடுக்கிலும்
ஒவ்வொன்றென மாட்டிய குழாய்களை
கட்டிலுக்கடியில் கிடக்கும் கழிவுக்கோப்பையை
ஒற்றைக்கால் உச்சியில் தவம்புரியும் சீசாவை
உயிரின் இயக்கம் தொனிக்கும் பச்சை வரித் திரையை
அறைக்குள் பொறுமையின்றிக் காத்திருக்கும்
புலப்படாத நடமாட்டத்தை
மருத்துவர்போல் தலைதிருப்பி
கண்சுழற்றி மேற்பார்வை யிட்டது.
அவரவர் மொழியில் மௌனம் காத்து
உறைந்திருந்தோம். ஒதுக்கப்பட்ட
பார்வையாளர் நேரம்முடிந்ததென
விருட்டென்றுஎழுந்து
பறந்து போனது. நிர்மல வானத்தின்
ஆழத்தில் இன்னமும் பறந்தவா
றிருக்கிறது பிம்பம்.
எனக்கு ஒதுக்கப்பட்டநேரம் எவ்வளவோ.
ஜன்னல் கட்டையை
நீங்காத பார்வையுடன்
காத்திருக்கிறேன்.மறைக்க முயன்ற
கடைசி மேகமும்தோற்று விலகியபின்
மிச்சமிருக்கும் சூரியன்
குருவியைப் போலவே அறைக்குள்
அங்குமிங்கும் பார்க்கிறது
மஞ்சள் விழிகளை அகல விரித்து.
பரவுதல்
நெடுநாளாய்ப் பேணி வந்தகனவொன்றை
நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்.
ஆழ்கடலுக்குத் தனியாய்ப் போன செம்படவன்
பேச்சுத்துணையாகுமென்று வாங்கிப் போனான்.
தோளில் சுமந்த வலையில்
கிடத்திச் சென்றகனவு
ஓயாமல்துள்ளியதாம்.
கவனம் பிசகிய கணத்தில்
படகிலிருந்து எவ்வி
கடலுக்குள் விழுந்ததென்றான்
பின்னொருநாள் பார்த்தபோது.விசாரித்தான்,
கைவசம் வேறேதும் கனவுண்டா அய்யா.
அதைவிடு, கடலில் விழுந்ததன்
கதியென்ன என்றேன். அடுத்த கணமே
இவன் கண்ணெதிரே
பருத்த மீனொன்று கவ்விச்சென்றதுவாம்.
ஐயோ பாவம் செரித்ததோ இல்லையோ.
நான் நினைத்ததைத் தனக்குள் அறிந்து
ஐயோ ஐயோ
எனக்கும் அதுதான் கவலை என்றான்.
இதோ,
தொலைக்காட்சித்திரையைத்
தாண்டிப்பறக்க முயலும்பறவையின்
அலகில்துள்ளும் மீன்
என் கனவைக்கவர்ந்து சென்ற
அதுவேதானோ.
ஒரு கணம் திகைத்தேன்.
உயிர்துடிக்கும் மீன் வாய்
சொட்டிய ஒரு துளி
திரையெங்கும் விசிறியது.
திரைக்கு வெளியே
வீடெங்கும்தெருவெங்கும்
ஆகாய வெளியெங்கும்
அண்டசராசரமெங்கும் சிதறி
என்ஒற்றைக் கனவு
நிரம்பிப் பரவுவதைக்
கண்டேன்.
குளமும் நானும்
ஆகாயத்துடனானமௌன உரையாடலில் கிறங்கியோ
தன்னுள் தான் முயங்கியோ
சலனமேயில்லாமல் கிடக்கும் குளத்தை
கண்மாய் என்றும் ஏரியென்றும்கூட
சொல்வார்கள். கேட்டிருக்கிறேன். காற்றின்
தாளத்துக்கிசைந்துசிற்றலைவீசி எந்நேரமும்
உல்லாசமாய்க் கிடக்கும். சிறுகல்லோ தவளையோ
கவனம் பிசகிய அலகு உதிர்க்கும் சுள்ளியோ
தியானம் கலைத்தால்சற்று
அதிகமாய் நடுங்கிக் காட்டும் – அந்தரங்கம்
முழுக்கக்குலுங்கியதா, மேலோட்டப் பாசாங்கா
யாரறிவார். நிலவோ சூரியனோ,
ஓரிடம் நிலைக்காத மேகத் துணுக்கோ
அவரவர் முகத்தை பேதமின்றிக் காட்டும். நீர்ப்பாம்பு
கீறி நகர்ந்தபோது கிழிபட்டு
உடனடியாய் மீண்டதையும் பார்த்திருக்கிறேன். அந்தக்
கணத்தில் என்னைக் காட்டும் கண்ணாடிபோல
மினுங்கியது. நடு ஆழ மீன்களை
வேட்டையாட விரையும் சிறுபடகை
தடுக்கவியலாமல் பதறுவதைக் கண்டதுண்டு.
மத்தியில் இறுகிய தீவுத் திட்டில்
இருளும் ரகசியமும்மண்டிய முள்மரக்கூட்டத்தில்
பிள்ளைபெற வந்த வலசைப் பறவைக்கு
தாய்வீடு போல உணவளித்து
தஞ்சமளிக்கும்நேசம் உண்டு. கோடையில்
சுருங்கியும் மழைநாளில் மதர்த்தும் என
மெலியும் நாளிலும் சதையூறிப் பெருகும் காலத்தும்
புத்தன் போன்ற பாவனை மிளிரும்
குளத்தைவியந்து மாளாது எனக்கு. இன்று
தன்போக்கில் பறந்திருந்த ஒற்றை மீன்கொத்தி
மனோவேகத்தில் பாய்ந்து
அலகுநுனியால் தீண்டி எழுந்தபோது
தேகம்சிலிர்த்தது –
ஓடும் பேருந்துக்குள் தாண்டிப்போகும்
முன்னறியாச் சேலைத் தலைப்பு உரசி
கிளுகிளுக்கும்என்னைப்போல.
ரகசியம்
பதின்வயதில் எனக்குள் கடல்
நுழைந்தது. முன்னர் முல்லையாறு
புகுந்த அதே வழியாக.
கட்டிப்போட்ட யானைபோலக் கால்மாற்றி
இருந்த இடத்திலேயே இருந்தது
ஒன்று. மற்றதுவோ
தினவெடுத்த மலைப்பாம்பென
தந்திரமாய் நகர்வது.
எப்படியோ,
நன்னீரும் உவர்நீரும் கலந்து நிறைந்த
கலயமானேன். குடுவைக்குள்போலத்
தேங்கிநிற்காதுஎந்நேரமும்
பாய்ந்து கறங்கும் நீரோட்டம்.
ஒவ்வொரு சமயம்,
இணக்குற்றோ பிணக்குற்றோ,
திறக்கும் துவாரங்கள் வழி
வெளியேறிச் செல்லும். மயிர்க்காலும்
விலக்கில்லை. காலியான இடத்தில்
தானே ஊறி நிரம்பவும் செய்யும்.
செத்துப்போன
அத்தைப்பாட்டியை
இறுதியாய்க் கிடத்த இடம்பெயர்த்தபோது
கைபிறழ்ந்து தலை புரண்டதால்
‘கொடக்’கென்று வெளிப்போந்த கோடு
இளம்பெண்ணின் உமிழ்நீர்போல்
தித்திப்பாய் மணக்கவில்லை. மேலும்
பார்வைக்கும் மனத்துக்கும்
கொஞ்சமும் உவக்கவில்லை.
இப்படித்தான்,
நீரின்
ரகசியமொன்றை
அறியக் கிடைத்தது எனக்கு. மற்றபடி,
நீர் அறியும்
என் ரகசியங்கள்அனைத்தும்.
சிலேடைக் கவி
ஒரே இடத்தை உற்றுப் பார்க்கும் சிசு
தனக்குத்தானே சிரிக்கும்போது
கவிஞனாகிறது. கவிதைக்குள் இடம்பெற
ஆசைகொண்ட பேரண்டம்
கைகட்டி நிற்கிறது. பொல்லாத நாளில்
வந்துற்ற
ரம்மியமான வேளையென்று
கண்ணீர் மல்குகிறது. தாபம் மண்டிய
கோரிக்கைக்கு மனமிளகும் தோரணையில்
இன்னொரு தடவை சிரிக்கிறது சிசு.
பரிந்தூட்டும் தாய்முலை நீங்கிக்
கண்ணயரும் வேளையில்
தானே கவிதையாகிறது. அப்போதும்
புன்னகை. கவிதைபோல்
மர்மம்.
அதேபோல உறுபொருள்
அதே வடிவ வசீகரம்
வாசிக்கத் திணறி
மறுபடி மறுபடி வந்து
புருவம் சுருக்கி நிற்கிறது
பேரண்டம்.