மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவரது மிகக் குறைந்த காலத்தில், பெரும் கவனம் பெற்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் கதைகள் உயிர்மை, ஆனந்த விகடன் உள்ளிட்ட அச்சிதழ்களிலும் தமிழினி, கனலி முதலிய இணைய இதழ்களிலும் வெளியானவை. இணைய இதழ்கள் ஓர் எழுத்தாளரை அடையாளப்படுத்தும் காலம் இது என்பதற்கு மயிலன் நல்ல உதாரணம்.

மயிலன் கதைகளைப் பற்றி இவரது இரண்டாம் தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய பெருந்தேவி மிகச் சிறப்பான உற்று நோக்கல்களை முன்வைத்துள்ளார். தனித்துவம் மிக்க எழுத்து நடை, நேர்த்தியாகக் கட்டப்படும் உள்முடிச்சு, கதை நிகழும் வேறுபட்ட களன்கள், உரையாடல் பெறும் முக்கியத்துவம் முதலிய கூறுகளை எடுத்துக்காட்டிக் கதைகளுக்குள் எளிதாகச் செல்லும் வழியைக் காட்டியிருக்கிறார் பெருந்தேவி. முதல் தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள வண்ணதாசனும் மயிலன் கதைகளுக்குப்  ‘பேச்சும் உரையாடலும் சம்பத்தாக’ அமைவதைச் சுட்டியுள்ளார். சமூக ஊடகங்களிலும் மயிலன் கதைகள் பற்றிய அறிமுகம், குறிப்புகள் பல வெளியாகியுள்ளன. தொடர்ந்து கணிசமாக அவர் எழுதி வருவதும் இத்தகைய கவனப்படுத்தல்களுக்குக் காரணம்.

‘தமிழ்ச் சிறுகதை இன்று’  என்னும் தலைப்பில்  ‘தமிழினி’ இணைய இதழில் எழுதி வரும் தொடரில் மயிலன் கதைகளைப் பற்றி எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள அறிமுகமும் குறிப்பிடத்தக்கது. அதில் ‘மயிலனின் கதைகளில் உடனடியாகக் கவனத்தைக் கவர்ந்தது மருத்துவமனை சார்ந்த கதைகளை மிகச் சுலபமாகவும் நுட்பமான தகவல்களுடன் கச்சிதமாகவும் எழுதுவது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆம், மயிலனின் கதைகளில் சட்டென்று மனதை ஈர்ப்பனவாக இருப்பவை ‘மருத்துவக் கதைகள்.’ மருத்துவமனை பற்றிப் பார்வையாளர் நோக்கில் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் வெளியாகியுள்ளன. புறத்தேயிருந்து மருத்துவமனையையும் மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்களையும் காணும் இவை போலல்லாமல் அகத்தேயிருந்து காணும் பார்வையைக் கொண்டவை மயிலனின் கதைகள்.

ஆகுதி, உலர், அன்நோன், மீன்களின் எல்லைக்கோடு ஆகியவை மருத்துவமனைக்குள் நடப்பவை. நிரபராதம், சாந்தாரம், மறதி, கதை அல்லது கதைகள், ஊழ்த்துணை, ஓர் அயல் சமரங்கம், ஐ-பில், ஔபத்யம், எக்கழுத்தம் ஆகியவை  மருத்துவமனை, மருத்துவர், மருத்துவக் கல்லூரி, மருத்துவ முறை என மருத்துவம் சார்ந்த பின்னணி அமைந்தவை. மருத்துவமனை சார்ந்தவை என்றாலே துயரத்தைப் பிழியும் கதைகளாகத்தான் இருக்கும். மயிலனின் கதைகளும் அதிலிருந்து விலகியவை அல்ல என்றாலும் வெவ்வேறு கோணங்களையும் மனித மனதின் கசடுகளையும் வெளிக்கொண்டு வருகின்றன. நோயாளியைப் பற்றிய மருத்துவர் நோக்குக் கதைகளில் பதிவாவது அனைவரும் அறிந்த ஓர் வெளியில் புதுப்புது அனுபவங்களை வழங்குவதாக மாறுகிறது.

ஆகுதி, அன்நோன் ஆகியவை இவ்வகையில் மிகவும் முக்கியமான கதைகள். கூட்டுப் பாலியல் வல்லுறவு ஒன்றின் கொடூரத்தை எந்தவித விவரிப்பும் இன்றி இயல்பில் விரித்துப் பதைபதைப்பை உண்டாக்கிச் செல்லும் கதை  ‘ஆகுதி.’ ஒருவரின் அடையாளத்தை ஆதார் கார்டு போன்ற பலவிதமான அட்டைகளின் மூலம் உருவாக்கிக் கண்காணிப்பு வளையத்தை அரசுகள் இறுக்கும் சூழலில் அடையாளமற்றவர் நிலை என்ன என்பதைப் பற்றிய பரிசீலனை கோரும் கதை ‘அன்நோன்.’ அடையாளமற்று  வாழ்தலின் சுகத்தை அனுபவித்துச் சென்ற ஆயிரக்கணக்கான தலைமுறை மனிதர்களைப் போல இன்றைக்கு வாழ முடியாது. உயிர் வாழ்வதற்கான அடிப்படையே ‘அடையாளம்’ என்றாகிவிட்டது. அடையாளம் அற்றவரை எப்படியாவது தூக்கி எறியவே எல்லாக் கைகளும் பரபரக்கின்றன.

நிரபராதம் என்னும் கதை ஒரு மருத்துவரை உளவியல் ரீதியாக அணுகுகிறது. மிக அழகான முறையில் எழுதப்பட்ட கதை. மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத ஒருவனை, இடம் கிடைத்த ஒருவனின் கோணத்தில் சித்திரிக்கும் கதை ‘உலர்.’ மருத்துவக் கல்லூரி அலுவலகச் சூழல் ஒன்றைச் சாதிப் பாகுபாட்டை உள்ளாக வைத்துக் காட்டுகிறது ‘எக்கழுத்தம்.’ இவ்விதம் ஒவ்வொரு கதையையும் எடுத்து விரிக்கலாம். எல்லாக் கதைகளும் சொல்முறையிலும் சிறந்திருக்கின்றன. ஆலாபனை போலக் களத்தை விரித்து நிதானமாக மாந்தர்களை அதில் நிலைகொள்ளச் செய்து பின்னர் பிரச்சினைக்குள் புகுதல் என்பதான சொல்முறை மயிலன் பாணியாக இருக்கிறது.

ஆண், பெண் உறவு சார்ந்த பிரச்சினைகளை நடைமுறை சார்ந்தும் உளவியல் முறையிலும் அணுகும் கதைகள் பலவற்றையும் மயிலன் எழுதியுள்ளார். எவா, நூறு ரூபிள்கள், ஏதேன் காட்டின் துர்க்கந்தம், ஜோக்கர், ஐ-பில், ஏவாளின் ஆதாம் முதலியவை இவ்வகைக்குள் அடங்குபவை. வெவ்வேறு இடப் பின்னணியில் அமைந்தாலும் உரிப்பொருளில் இவை ஒப்புமை கொள்கின்றன. இளம்பருவக் காதலை குறுகுறுப்புணர்வு ஊடாடச் சித்திரித்துள்ள ‘எவா’ நல்ல கதை. ‘இருள் ஊடுருவும் சாளரம்’ பிரமாதமான வீச்சைக் கொண்டு வசீகரிக்கும் கதை. ஏதேன் காட்டின் துர்க்கந்தம், ஏவாளின் ஆதாம் ஆகியவை மயிலனின் சிறப்பம்சமான உரையாடலைச் சொல்முறையாகக் கொண்டு ஈர்ப்பவை.

மருத்துவம், ஆண் பெண் உறவு ஆகிய வகைப்பாட்டுக்குள் அடங்காத இடர், ஈடறவு, வீச்சம், சங்கல்பம், ஏகாந்தம் முதலிய கதைகளும் உள்ளன. உழவு வாழ்க்கை சார்ந்த பெருஞ்சித்திரத்தை மயிலனால் வழங்க முடியும் என்னும் உணர்வை இவற்றில் சில கதைகள் தருகின்றன. கஜா புயல் பின்னணியில் எழுதியுள்ள  ‘இடர்’, ஆடு வளர்ப்பைப் பின்னணியாகக் கொண்ட  ‘வீச்சம்’ ஆகியவற்றை இக்கோணத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம். எக்கழுத்தம், ஒற்றை மனை ஆகியவை எதையோ பேசுவது போலத் தோன்றிச் சாதியில் வந்து நிலைகொள்கின்றன. ஆதிக்க சாதி மனதின் உள்ளே படிந்திருக்கும் கறைகளை நுட்பமாக இவை வெளிக்கொண்டு வருகின்றன.

மயிலன் கதைகளின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்கள் ஆக்குவதாகும். அன்நோன், ஆகுதி ஆகியவற்றில் இத்தகைய மனிதர்கள் மையமாக இடம் பெற்றாலும் அவர்களின் கோணத்தில் கதை செல்வதில்லை. சன்னதம், ஏகாந்தம் ஆகியவை அம்மனிதர்களின் கோணத்தைக் கொண்டவை. இன்னும் பல கதைகளில் போகிறபோக்கில் வரும் மனிதர்களுக்கும் பொருட்படுத்தத்தக்க இடம் அமைகிறது.

காப்பியங்களில் ‘கிளைக் கதைகள்’ என்பதற்குத் தனியிடம் உண்டு. முதன்மைக் கதை ஓரிடத்தில் நின்று கிளைக்கதை விரிந்து செல்லும். வாசகர் அதற்குள்ளே போய் சிறுசஞ்சாரம் செய்து திரும்பிய பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் முதன்மைக் கதைக்குள் நுழைய வேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தொடக்க காலக் காப்பியங்களில் ஓரளவு மட்டும் இடம்பெற்ற கிளைக்கதைகள் பிற்காலக் காப்பியங்களில் மிகுதியாயின. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் கிளைக்கதைகளாலேயே கட்டப்பட்டவை என்று சொல்லிவிடலாம். இந்த மரபை மயிலனின் கதைகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

காப்பியக் கிளைக்கதைகளைப் பெரும்பாலும் தனித்துப் பிரித்தெடுத்து விடலாம். சிலவற்றைக் கிளைக்கதைகளாக இடம்பெற்றவை என்று சொன்னால்தான் தெரியும். மகாபாரதத்தில் இடம்பெற்ற நளன் கதையும் இராமாயணத்தில் வரும் இரணியன் கதையும் அப்படிப்பட்டவை. அவை தனித்தியங்கும் ஆற்றல் கொண்டவை. மயிலன் கதைகளிலும் இவ்வாறு கிளைக்கதைகள் உள்ளன. ஒற்றை மையத்தைக் கொண்டது என்று சொல்ல முடியாத வகையில் உள்ளே கிளைக்கதைகளை விரித்துச் செல்கிறார். ஆனால் அக்கிளைக்கதைகளைத் தனித்துப் பிரித்தெடுத்துக் காட்ட முடியாது. கதைச் சம்பவங்களில் பின்னிப் பிணைந்து எல்லாம் சேர்ந்து ஒரே கதைதான் என்று தோற்றம் காட்டுகின்றன.  ‘ஆகுதி’ கதையில் காதல், ஊடல் ஒருபுறம்; மருத்துவச் சம்பவங்கள் ஒருபுறம்; கூட்டு வல்லுறவு ஒருபுறம்; பெண்ணின் மானம் காக்க முயலும் தாய் ஒருபுறம். இப்படி நான்கைந்து பிணைந்து வருகின்றன. இவற்றில் எதையும் தனித்துப் பிய்த்தெடுக்க முடியாது. சிலவற்றை விரிவாக்குகிறார்; சிலவற்றைச் சில சொற்களில் காட்டுகிறார்.  இக்கதைகள் அனைத்தும் கூடிப் பிணைந்துதான் ஒரு கதையின் மையத்தை உருவாக்குகின்றன.

மயிலன் கதைகளின் கவனத்திற்கு முக்கியமான காரணம் அவற்றின் நவீனத்தன்மை என்று சொல்லலாம். அறம், ஒழுக்கம் எனப் பலவாக மனித சமூக ஓட்டத்தில் நிலைபெற்றிருக்கும்  விழுமியங்கள் இன்றைய வாழ்வில் மதிப்பற்றுச் சிதறுவதை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காட்டுவதையே இக்கதைகளின் நவீனத்தன்மை என்று சொல்கிறேன். காலந்தோறும் விழுமியங்கள் மாறுவதும் சிதைவதும் உடைவதும் புதிய விழுமியங்கள் தோன்றுவதும் இயல்பு. ஆனால் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டைப் போல அதிவேக விழுமிய மாற்றங்கள் வேறு எக்காலத்திலும் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் சமூக ஊடக வளர்ச்சியோடு இணைந்து விழுமியங்கள் படும் பாட்டைச் சொல்லி முடியாது. ஆண் பெண் உறவில் அதைப் பெரிதும் பார்க்கலாம்.

‘ஜோக்கர்’ கதை சீட்டாட்டத்திற்கு அடிமையாகும் சேகரைப் பற்றியது. உடன் வந்து விளையாடும் நண்பன் பன்னீர் அவ்வவ்போது பண உதவி செய்கிறான். சேகர் மேல் அக்கறை கொண்டு அறிவுரைகள் சொல்கிறான். அதற்கெல்லாம் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. சேகரின் மனைவிதான் பன்னீரின் குறி என்பதை ஒருகட்டத்தில் சேகர் புரிந்து கொள்கிறான். அதை வெளிப்படுத்தியதும் சீட்டாட்டத்திற்கு வராமல் பன்னீர் ஒதுங்கிவிடுகிறான். அடிமையானவன் சீட்டாட்டத்தை ஒருபோதும் விட முடியாது. பன்னீரின் உதவியிருந்தால் சீட்டாட்டத்தைத் தொடர முடியும். சீட்டாட்டமா, மனைவியா என்னும் நிலை வரும்போது எந்தச் சிக்கலும் இல்லாமல் சீட்டாட்டம்தான் என்று சேகர் முடிவெடுக்கிறான்.  ‘சர்ரா… நாஞ் சொன்னேன்னு சொல்லிப் பன்னீரையும் கூப்பிடு… வருவான்’ என்று அனுமதி கொடுக்கிறான். மனைவியை வைத்துச் சூதாடுவதை மகாபாரதக் கதையில் கண்டிருக்கிறோம்.  ‘ஜோக்கர்’ இருப்பத்தொன்றாம் நூற்றாண்டுக் கதை.

ஊழ்த்துணை, நூறு ரூபிள்கள், ஏதேன் காட்டின் துர்க்கந்தம், ஏவாளின் ஆதாம் ஆகியவை சிதையும் விழுமியங்களை எந்தச் சலனமும் இன்றிக் கடந்து செல்பவர்களைப் பற்றியதுதான். திருமணத்திற்கு முன் பாலுறவு கொள்வது தவறு என்பது இன்றைக்குப் பொருட்டில்லை. பாதுகாப்பான பாலுறவுதான் பிரச்சினை. அது தொடர்பாக நேரும் உளச்சிக்கலை ‘ஐ-பில்’ கதை கையாள்கிறது. ஏதேன் காட்டின் துர்க்கந்தம், ஏவாளின் ஆதாம் ஆகியவை ஆண் பெண் உறவில் நிலவும் பழைய விழுமியங்களை எள்ளி நகையாடுகின்றன. மதுபானக் கூடத்தில் தனியாக ஒரு பெண் வந்தமர்ந்து அருந்துவதும் எதிரில் இருக்கும் அந்நிய ஆணுடன் தம் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும் நம் கதைகளுக்குள் வருவது சாதாரணமாக நடந்து விடுவதல்ல. திருமணத்திற்குப் பின் தன் பழைய காதலனை வந்து சந்தித்து ஒருநாள் முழுக்க அவனுடன் அளவளாவும் பெண்ணும் புதியவளே. இவை நவீன வாழ்வின் சுவடுகள் நம் கதைகளுக்குள் தாராளமாக வரத் தொடங்கியிருப்பதன் அறிகுறிகள்.

ஆனால் எல்லாக் கதைகளிலும் இந்த விழுமியச் சிதைவு நேர்வதில்லை. உழவு வாழ்க்கை தொடர்பான கதைகளில் விழுமியங்கள் காப்பாற்றப்படுகின்றன. தம் தோட்டம் சிதைவதைக் காணச் சகியாதவர் உயிரை விடுகிறார். தம் மகளின் மானமே பெரிதெனக் கருதும் தாய் அவளைக் கொலை செய்கிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பின்னணிக்கு ஏற்ற வகையில் விழுமியங்கள் செயல்படுகின்றன. மயிலனுக்கு விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றோ சிதைக்க வேண்டும் என்றோ கடப்பாடு எதுவும் இல்லை. வெவ்வேறு தலைமுறைகள் வாழும் சமூகத்தில் எல்லாவற்றுக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது. எந்தப் பின்னணி கொண்ட மனிதர்கள், அவர்கள் எத்தகைய விழுமியங்களைப் பின்பற்றுபவர்கள் என்பவற்றில் தெளிவோடு கதைகளை எழுதுகிறார் மயிலன். தன் பார்வைகளை உள்ளொடுக்கிக் கொண்டு மாந்தர்களின் பார்வைகளை உலவ விடுவது சாதாரணமல்ல.

பெரும்பாலும் ஒற்றைச் சொல் தலைப்புகளையே கதைகளுக்குச் சூட்டுகிறார். மூன்று தொகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் முப்பத்திரண்டு கதைகள் உள்ளன. ஐந்தாறு கதைகளைத் தவிர மற்றவை அனைத்தும் ஒற்றைச் சொல் தலைப்பைக் கொண்டவையே. இந்த ஒற்றைச் சொற்களையும் எங்கிருந்து எடுக்கிறார் என்றே தெரியவில்லை. சில சொற்களுக்குப் பொருள் கண்டுணர்வது கஷ்டம். அவற்றை வட்டாரச் சொற்கள் என்றும் தீர்மானிக்க முடியவில்லை. அகராதிச் சொற்கள் என்றும் சொல்ல முடியவில்லை.

‘எக்கழுத்தம்’ என்று ஒரு கதைக்குத் தலைப்பு. மருத்துவக் கல்லூரி அலுவலகப் பணியாளர்களைப் பற்றிய கதை. பிறரோடு ஒட்டாமல் தனித்திருக்கும் ஒருவரின் ஆழ்மனதில் சாதி ஆதிக்கம் பதிந்திருப்பதைப் படிப்படியாக வெளிப்படுத்திக் காட்டும் கதை. ‘எக்கழுத்தம்’ என்னும் சொல் கதைக்குள் எங்கும் வரவில்லை. ஆகவே சூழல் சார்ந்து பொருள் கொள்ள இயலவில்லை. எனக்கு இந்தச் சொல் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரத்தை’ நினைவுக்குக் கொண்டு வந்தது.

சீவக சிந்தாமணியை அவர் பதிப்பித்த போது அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஓரிடத்தில் ‘ஏக்கழுத்தம்’ என்னும் சொல்லைப் பற்றிக் குறிப்பு தருகிறார். அதன் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள உ.வே.சா.வால் இயலவில்லை. பின்னர் அச்சொல் சிறுபஞ்சமூலம், நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களிலும் இடம்பெறுவதைத் தேடிக் கண்டடைந்து சொல்லின் மூல வடிவம் எது என்பதை ஆராய்ந்து அறிகிறார். ஏக்கழுத்தம், எக்கழுத்தம் ஆகிய இரண்டு வடிவங்களும் சுவடிகளில் உள்ளன. பல கோணத்தில் ஆராய்ந்து நச்சினார்க்கினியர் கூறும் ‘ஏக்கழுத்தம்’ என்பதே சரியான வடிவம் என உ.வே.சா. முடிவு செய்கிறார்.

கழுத்தை மேல் நோக்கி உயர்த்துதல் என்னும் பொருள் கொண்டது இச்சொல். சீவக சிந்தாமணியிலேயே வேறொரு இடத்தில் ‘ஏக்கழுத்தம் – தலையெடுப்பு’ என்று நச்சினார்க்கினியரே பொருள் தருகிறார். இச்சொல்லைப் பற்றி இரண்டு பக்க அளவில் விவரித்து எழுதும் உ.வே.சா. ‘புதிய தேசத்தைக் கண்டுபிடித்தாற்கூட இவ்வளவு சந்தோஷமிராது’ என்று சொல்கிறார்.  ஏக்கழுத்தம் என்பதற்குத் தலையெடுப்பு, இறுமாப்பு, வீற்றிருக்கை ஆகிய மூன்று பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது. தலையெடுப்பு என்னும் பொருளுக்குச் சிறுபஞ்சமூலச் செய்யுளைச் சான்றாகத் தருகிறது. இறுமாப்பு, வீற்றிருக்கை ஆகியவற்றுக்குச் சான்றுத் தொடரைத் தரவில்லை.

மயிலனின் ‘எக்கழுத்தம்’ கதைத் தலைப்புக்கு ‘இறுமாப்பு’ என்கிற பொருள் பொருந்துகிறது. தம் ஆதிக்க சாதி அடையாளம் தரும் இறுமாப்பு கொண்டு பிறருடன் முரண்பட்டு நிற்கும் ஒருவரைப் பற்றிய கதை அது.  ஏக்கழுத்தம் என்பதன் வட்டார வழக்கு வடிவம் ‘எக்கழுத்தம்’ என வழங்குகிறதா என்று தெரியவில்லை. எங்கிருந்து இச்சொல்லை எடுத்து மயிலன் தலைப்பாகக் கொடுத்தாரோ? மேலும் ஒற்றைச் சொல் தலைப்புகளில் பல வழக்கிழந்த சமஸ்கிருதச் சொற்களாக இருக்கின்றன. ஆகுதி, ஔபத்தியம், நிரபராதம், சன்னதம், நியமம், ஏகாந்தம், போகம், ஸ்படிகம், சங்கல்பம் எனப் பட்டியலிடலாம். எக்கழுத்தம் போல ஊழ்த்துணை, ஈடறவு, உலர், இடர், ஊடுவெளி, வழிச்சேறல் எனப் பழந்தமிழ் வாடை கொண்ட சொற்தலைப்புகளும் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். தலைப்பைக் கதையோடு பொருத்திக் காண இன்றைய வாசக மனம் இத்தனை முயற்சி எடுக்குமா என்று தெரியவில்லை.

இப்படிப் பல்வேறு வகையாகச் சிந்திக்க வாகானவை மயிலன் கதைகள்.

000

பயன்பட்ட நூல்கள்:

மயிலன் ஜி சின்னப்பன், நூறு ரூபிள்கள், 2021, உயிர்மை பதிப்பகம், சென்னை.

மயிலன் ஜி சின்னப்பன், அநாமதேயக் கதைகள், 2021, தமிழினி, சென்னை.

மயிலன் ஜி சின்னப்பன், சிருங்காரம், 2022, உயிர்மை பதிப்பகம், சென்னை.

உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு.

—–