பியோய் கசரெஸ் லண்டனிலிருந்து திரும்பியபோது முக்கோண வடிவில் கத்திப் பகுதியும் ‘H’ வடிவில் கைப்பிடியும் கொண்ட ஒரு வினோதமான குறுவாளைத் தன்னோடு எடுத்து வந்திருந்தார்; எங்களுக்குப் பொதுவான ஒரு நண்பர், பிரிட்டிஷ் கவுன்சிலைச் சேர்ந்த கிறிஸ்டோஃபர் டூயி, இதுபோன்ற ஆயுதங்கள் இந்தியாவில் இயல்பாகப் பயன்படுத்தப்படுபவை என்று சொன்னார். இரண்டு போர்களுக்கும் மத்தியில் தான் அந்தத் தேசத்தில் பணிபுரிந்ததைக் குறிப்பிட இந்த வாசகம் அவரைத் தூண்டியிருந்தது. (“Ultra Auroram et Gangen,” ஜுவெனாலின்1 ஒரு வரியை மேற்கோள் காட்டுவதாய் தப்பும்தவறுமாக லத்தீன்மொழியில் அவர் சொன்னதை நான் நினைவுகூர்கிறேன்) அன்றிரவு எங்களைக் குதூகலப்படுத்த அவர் சொன்ன கதைகளில், பின்வரும் ஒன்றைத் துணிந்து வெளிப்படுத்த விழைகிறேன். எனது அறிக்கை நேர்மையானதாக இருக்கும்; முக்கியத்துவமற்ற விவர நுணுக்கங்களைச் சேர்த்துச் சொல்லும் சபலத்திலிருந்தும் கிப்ளிங்கின் இடைச்செருகல்களால் இந்தக்கதையின் கீழைத்தேய அம்சங்களைக் குறைத்துவிடாதவகையிலும் அல்லா என்னைக் காப்பாற்றட்டும். ஏறத்தாழ அராபிய இரவுகளில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டது போலிருக்கும் இந்தக்கதையின் – சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட – புராதன எளிமை, அதை இழக்க நேரிட்டால் நிச்சயம் துயரமிக்கதாயிருக்கும் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
நான் விவரிக்கப்போகும் சம்பவங்களின் [டூயி கூறினார்] துல்லியமான நிலவியல் அத்தனை முக்கியமானதல்ல. தவிரவும், ப்யூனஸ் ஐர்ஸில் வசிப்பவர்களிடத்தில் அமிர்தசரஸ் அல்லது ஔத் போன்ற பெயர்களுக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும்? ஆகவே, அந்தக் காலத்தில் ஒரு முஸ்லிம் நகரில் கலவரங்கள் நிகழ்ந்தது என்பதையும் அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு அதன் ஆகச்சிறந்த அலுவலர்களில் ஒருவனை அனுப்பியது என்பதையும் மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். அவன் ஒரு ஸ்காட்லாந்துக்காரன், போர்வீரர்களுக்குப் புகழ்பெற்ற ஓர் இனக்குழுவைச் சேர்ந்தவன், எனவே வன்முறை வம்சாவழியாக அவனது ரத்தத்தில் ஊறியிருந்தது. ஒருமுறைதான் அவனை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் அவனது அடர்த்தியான கறுத்த மயிரையும், துருத்தித்தெரியும் கன்னத்து எலும்புகளையும், ஏதோவோர் வகையில் பேரார்வத்தை வெளிப்படுத்தும் மூக்கையும் வாயையும், அகன்ற தோள்களையும் என்னால் மறக்க முடியாது, ஒரு வைக்கிங்கின் ஆற்றல்மிகு உடைமைகள் இவை. இன்றிரவு எனது கதைக்குள் அவன் டேவிட் அலெக்ஸாண்டர் க்ளென்கெய்ர்ன் என்றழைக்கப்படுவான்; இந்தப் பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகின்றன, ஏனென்றால் இவை இரும்புச்செங்கோலின் துணையால் ஆட்சிபுரிந்த அரசர்களுக்கு உரியவை. டேவிட் அலெக்ஸாண்டர் க்ளென்கெய்ர்ன் (அவனை அவ்வாறு அழைக்க என்னை நானே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்) அனைவரும் அஞ்சிய ஒரு மனிதனாயிருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்; அவனது வருகை குறித்த செய்தி மட்டுமே நகரினை அமைதிக்குள் ஆழ்த்தப் போதுமானதாயிருந்தது. என்றாலும் எண்ணற்ற விதிமுறைகளைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து இது அவனைத் தடுக்கவில்லை. சில வருடங்கள் கடந்தன. நகரமும் அதற்குப் புறத்தேயமைந்த மாவட்டமும் அமைதியாக இருந்தன. சீக்கியர்களும் முஸ்லிம்களும் தங்களின் பழங்காலப் பகைமையை ஒதுக்கி வைத்திருந்தனர். திடீரென்று க்ளென்கெய்ர்ன் காணாமல் போனான். இயல்பாகவே, அவன் கடத்தப்பட்டான் அல்லது கொல்லப்பட்டான் என்பதைப் போன்ற வதந்திகளுக்கு எந்தக்குறையும் இருக்கவில்லை.
இந்தச்சங்கதிகளை எல்லாம் என்னுடைய உயரதிகாரியிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன், ஏனென்றால் அப்போது செய்தித்தணிக்கை மிகவும் கண்டிப்பாக இருந்ததோடு எந்தச் செய்தித்தாளும் க்ளென்கெய்ர்ன் காணாமல் போனது குறித்து எந்தக் கருத்தும் (சொல்வதெனில் அவர்கள் அதைப் பதிவுசெய்யவும் இல்லை, எனது நினைவுக்கு எட்டியமட்டும்) வெளியிடவில்லை. இந்தியா உலகத்தை விடவும் பெரியது என ஒரு சொலவடை உண்டு; க்ளென்கெய்ர்ன், ஏதோவொரு ஆவணத்தின் அடிப்பகுதியில் கிறுக்கப்பட்ட ஒரு கையெழுத்தினால் தனக்கு ஒதுக்கப்பட்ட நகரத்துக்குள் அவன் மிகவும் ஆற்றல்மிகுந்தவனாக இருந்திருக்கலாம், ஆனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் எனும் மகத்தான எந்திரத்தைப் பொறுத்தமட்டில் அவனொரு பல்சக்கரம் மட்டுமே. உள்ளூர்க் காவலர்களின் விசாரணைகளால் எந்தப் பலனும் கிட்டவில்லை; ஓர் எளிய குடிமகனின் மீது அதிக சந்தேகங்கள் வராதென்றும் மேம்பட்ட பலன்கள் கிடைக்குமென்றும் என்னுடைய உயரதிகாரி நம்பினார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு (இந்தியாவில் தொலைவுகள் மிகவும் விசாலமானவை) எனது பணிக்கு நான் அமர்த்தப்பட்டேன். ஒரு மனிதனைச் சட்டென்றுக் காணாமல் போக்கடித்த அந்தச் சாதாரணமான நகரின் வீதிகளில் வெற்றி குறித்த எந்தவித நம்பிக்கையுமின்றி நான் தீவிரமாக அலைந்து கொண்டிருந்தேன்.
க்ளென்கெய்ர்னின் விதியை ரகசியமாக வைத்திருக்க விரும்பிய ஒரு சதியின் இருப்பை நான் அங்கு உடனடியாக உணர்ந்தேன். அந்த ரகசியம் குறித்து அறிந்திராத, மேலும், அதை வெளியிடுவதில்லை என்றுச் சூளுரைக்காத ஒரு ஆன்மா கூட (நான் சந்தேகித்தேன்) இந்த நகரில் இல்லை. விசாரணையில் கேள்விகள் கேட்கும்போது, பெரும்பாலான ஆட்கள் ஓர் எல்லையற்ற அறியாமையை வெளிப்படுத்தினார்கள்; க்ளென்கெய்ர்ன் யாரென்றே அவர்களுக்குத் தெரியவில்லை, ஒருபோதும் அவனைப் பார்த்ததில்லை, அவனைப் பற்றி யாரும் பேசிக்கூடக் கேட்டதில்லை. மற்றவர்களோ, அதற்கு நேர்மாறாக, கால் மணி நேரம் முன்புதான் யாரோ ஒருவரிடம் அவன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்கள், பிறகு அவர்களிருவரும் நுழைந்த வீட்டிற்கு என்னைக் கூட்டிப்போகவும் செய்தார்கள், அங்கு யாருக்கும் அவர்களைப் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை, அல்லது அக்கணம்தான் அவர்கள் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றிருந்தார்கள். அத்தகைய அண்டப்புளுகர்களை அடித்துச் சாய்க்கும் அளவுக்கு நான் போனேன். எனது கோபாவேசத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட சாட்சிகள் பிறகு வேறு பொய்களை உருவாக்கத் தொடங்கினார்கள். நான் அவர்களை நம்பவில்லை, ஆனால் அவர்களைப் புறக்கணிக்கும் மனத்தைரியமும் எனக்கு இருக்கவில்லை. ஒரு மதியப்பொழுதில், ஒரு முகவரி எழுதப்பட்ட துண்டுச்சீட்டை உள்ளடக்கிய ஓர் உறை என்னிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு நான் சென்றபோது கதிரவன் கீழிறங்கியிருந்தான். நகரின் அப்பகுதி ஏழ்மை நிரம்பியதாக இருந்ததேயொழிய மோசமானதாக இருக்கவில்லை; வீடு சற்றுத் தாழ்வாக இருந்தது; கற்கள் பரவாத தொடர்ச்சியான உள்முற்றங்களையும், எங்கோ அதன் மறுகோடியில் ஒரு பாதையும் இருப்பதையும் வீதியிலிருந்து நான் பார்த்தேன். அங்கே, ஒருவித இஸ்லாமியச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது; சிவப்புநிற மரத்தால் செய்த யாழ்போன்ற வாத்தியத்துடன் ஒரு பார்வையற்ற மனிதன் உள்ளே நுழைந்தான்.
என் பாதத்தினருகில், ஒரு பருப்பொருளைப் போல சலனமேயின்றி, வயதான, மிக வயதான ஒரு மனிதன் நுழைவாயிலில் குத்தவைத்து அமர்ந்திருந்தான். அவன் எப்படியிருந்தான் என்பதை விளக்குகிறேன், ஏனென்றால் அவன் இந்தக்கதையின் மிக முக்கியமான ஓர் அங்கமாயிருக்கிறான். ஓடும் நீர் ஒரு கல்லை மெருகூட்டுவது போல, அல்லது பல தலைமுறைகளாக மனிதர்கள் ஒரு வரியை மெருகூட்டுவது போல, அம்மனிதன் கடந்துவந்த வருடங்கள் அவனைக் களைப்புறச்செய்து மிகவும் மிருதுவாக மாற்றியிருந்தன. நீளமான கந்தல்துணிகள் அவனைப் போர்த்தியிருந்தன, அல்லது அப்படித்தான் எனக்குத் தோன்றியது, மேலும் அவன் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியையும் மற்றொரு கந்தல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அரையிருட்டுக்குள், வெண்தாடியுடன் கூடிய கறுத்த முகத்தை அவன் நிமிர்த்தினான். எவ்விதப் பீடிகையுமின்றி அவனோடு நான் பேசத் தொடங்கினேன், ஏனென்றால் டேவிட் அலெக்ஸாண்டர் க்ளென்கெய்ர்னைக் கண்டுபிடிக்கும் சகல நம்பிக்கைகளையும் அக்கணத்தில் நான் இழந்திருந்தேன். அந்த முதியவனுக்கு நான் சொன்னது புரியவில்லை (அனேகமாக நான் பேசியது எதுவும் அவனுக்குக் காதில் விழவில்லை), ஆகவே க்ளென்கெய்ர்ன் ஒரு நீதிபதி என்பதையும் அவனை நான் தேடிக் கொண்டிருந்தேன் என்பதையும் அவனிடம் விளக்க வேண்டியிருந்தது. இந்த வார்த்தைகளைப் பேசுகையில், நிகழ்காலமென்பது ஒரு மங்கலான வதந்தி என்பதைத் தாண்டி வேறேதுமில்லை என்றிருக்கும் இந்த முதியவனைக் கேள்விகள் கேட்பதில் இருந்த அர்த்தமின்மையை நான் உணர்ந்தேன். இந்த மனிதன் எனக்கு சிப்பாய்க் கலகம் அல்லது அக்பரைப் பற்றிய செய்திகளைத்தான் தரக்கூடும் (என நான் எண்ணினேன்) ஆனால் க்ளென்கெய்ர்னைப் பற்றி அல்ல. அவன் சொன்ன சங்கதி என்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
“ஒரு நீதிபதி!” மெல்லிய ஆச்சரியத்தோடு அவன் அலறினான். “தன்னையே தொலைத்துவிட்டுத் தேடப்படுகிற ஒரு நீதிபதி. நான் சிறுவனாக இருந்தபோது அது நிகழ்ந்தது. தேதிகளைப் பற்றி எனக்கு ஏதும் நினைவுகளில்லை, ஆனால் அப்போது நிக்கேல் செய்ன் (நிக்கல்ஸன்2) டெல்லியின் சுவருக்கருகில் வைத்து இன்னும் கொல்லப்பட்டிருக்கவில்லை. காலம் அது கடந்து போனபிறகும் ஞாபகத்தில் நீடிக்கிறது; ஆகவே அப்போது நிகழ்ந்தது என்னவென்பதை என்னால் நினைவுகூர முடியும். கடவுள், தனது கடுங்கோபத்தின் காரணமாக, மனிதர்களைச் சீரழிவுக்குள் விழ அனுமதித்திருந்தார்; மனிதர்களின் வாய்கள் முழுக்க தெய்வநிந்தனைகளாலும் வஞ்சகங்களாலும் மோசடிகளாலும் நிறைந்திருந்தன. எனினும் அனைவருமே தீயவர்களாக இருக்கவில்லை, ஆக இங்கிலாந்தின் சட்டத்தை இங்கு இந்த நிலத்தில் நிலைநாட்ட மகாராணி ஒரு ஆளை அனுப்பவிருக்கிறார் எனத் தெரிய வந்தபோது, தீவினைகளில் அதிகமும் ஈடுபடாதவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள், ஏனென்றால் சீர்குலைவைக் காட்டிலும் சட்டம் மேலானது என அவர்கள் எண்ணினார்கள். அந்தக் கிறித்துவன் எங்களிடம் வந்தான். ஆனால் அவனும் கூட எங்களை ஏமாற்றுவதற்கும் ஒடுக்குவதற்கும் வெகுகாலம் ஆகவில்லை. சகித்துக்கொள்ளவியலாத குற்றங்களை மறைக்கவும் தீர்ப்புகளை விற்கவும் தொடங்கினான். ஆரம்பத்தில் நாங்கள் அவனைக் குற்றம் சொல்லவில்லை. அவன் பரிபாலனம் செய்த ஆங்கிலச் சட்டம் எங்களில் எவருக்கும் பரிச்சயமற்றதாயிருந்தது. புது நீதிபதியின் வெளிப்படையான வரம்புமீறல்கள் சில குறிப்பிடத்தகுந்த, நியாயமான, ரகசியக் காரணங்களுக்காவும் கூட நிகழ்ந்திருக்கலாம். அவனுடைய புத்தகத்தில் அனைத்திற்கும் ஒரு நியாயம் இருக்கக்கூடும். என்று நம்பவே நாங்கள் விரும்பினோம். ஆனால், உலகம் முழுதும் காணக்கிடைக்கும் மோசமான நீதிபதிகளோடு அவனுக்கிருந்த ஒற்றுமை எளிதில் கடந்துபோக முடியாத அளவுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது, ஆகவே கடைசியில் அவனும் வெறுமனே ஒரு கேவலமான மனிதன்தான் என்பதை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அவனும் ஒரு கொடுங்கோலன் என்று தெரிய வந்தது, துரதிர்ஷ்டம் பீடித்த மக்கள் (ஒருகாலத்தில் அவன் மீது தாங்கள் வைத்திருந்த தவறான நம்பிக்கைகளுக்குப் பழிதீர்த்துக் கொள்வதற்காக) அவனைக் கடத்திச் சென்று தண்டனை வழங்கிடும் எண்ணத்தில் உழலத் தொடங்கினார்கள். பேசுவது மட்டும் போதுமானதாயிருக்கவில்லை; திட்டங்களில் இருந்து அவர்கள் செயலுக்கு மாற வேண்டியிருந்தது. அனேகமாக யாருமே, மிகப்பெரிய முட்டாள்கள் அல்லது மிகவும் இளையவர்கள் தவிர, இந்தக் கண்மூடித்தனமான திட்டத்தைச் செயல்படுத்தமுடியும் என நம்பவில்லை, ஆனால் ஆயிரக்கணக்கான சீக்கியர்களும் முஸ்லிம்களும் தங்களின் வார்த்தைகளைக் காப்பாற்றினார்கள், ஒருநாள், தங்கள் ஒவ்வொருவருக்குமே சாத்தியமற்றதாகத் தோன்றிய – எளிதில் நம்ப முடியாத – அந்த விசயத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். நீதிபதியைக் கடத்திச்சென்று, நகரத்தின் எல்லைக்கு அப்பாலிருந்த ஒரு பண்ணைவீட்டில் அவனைக் கைதியாக வைத்தனர். பிறகு அவனால் தீங்கிழைக்கப்பட்ட யாவரையும் அவர்கள் ஒன்றுகூட்டினார்கள், அல்லது, சிலரைப் பொறுத்தமட்டில், அநாதைகளையும் கைம்பெண்களையும் அழைத்தார்கள், ஏனெனில் அக்காலங்களில் மரணதண்டனை நிறைவேற்றுபவனின் வாள் ஓய்வு கொள்ளவேயில்லை. இறுதியில் – அனேகமாக, இருப்பதிலேயே இதுதான் மிகவும் கடினமானது – நீதிபதிக்கு நீதிவழங்கும் நீதிபதியைத் தேடிப்பிடித்து அவர்கள் அழைத்து வந்தார்கள்.
இந்தப் புள்ளியில், வீட்டிற்குள் நுழைந்த சில பெண்களால் முதியவனின் பேச்சு தடைப்பட்டது. பிறகு அவன் பேச்சைத் தொடர்ந்தான், மெதுவாக.
“உலகின் ரகசியத்தூண்களாக விளங்குவதோடு கடவுளிடம் அதை நியாயப்படுத்தும் நான்கு நியாயவான்களைத் தங்களுக்குள் கொண்டிராத எந்தத் தலைமுறையும் இருக்கமுடியாதென்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததுதான்; இவர்களுள் ஒருவர் மிகப்பொருத்தமான நீதிபதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களோ, தங்களைத் தொலைத்தவர்களாகவும் பெயரற்றவர்களாகவும் உலகத்தைச் சுற்றி அலைந்து திரியும்போது, தங்களுக்குள் பார்த்துக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் தெரியாதவர்களாக, தங்களின் கீர்த்திமிகு ஊழ்விதியையும் கூட அறியாதவர்களாக இருக்கிறார்களெனில் எங்கு சென்று அவர்களைக் கண்டுபிடிப்பது? ஞானவான்களைக் கண்டுபிடிக்க விடாமல் விதி நம்மைத் தடுக்குமாயின் ஏன் ஞானமற்றவர்களை நாம் தேடிக் கண்டுபிடிக்கக்கூடாது என யாரோ வாதிட்டார்கள். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. குரானின் மாணவர்கள், நீதியின் காவலர்கள், ஒற்றைக் கடவுளை வழிபடுவதோடு சிங்கங்களின் பெயரைத் தாங்கி நிற்கும் சீக்கியர்கள், எண்ணற்றக் கடவுளர்களை வழிபடும் இந்துக்கள், கால்களைச் சற்று அகட்டியவாறு இருக்கும் மனிதனைப் போலிருப்பதே பிரபஞ்சத்தின் வடிவம் எனப் போதிக்கும் மகாவீரத் துறவிகள், நெருப்பை வழிபடுபவர்கள், கறுப்பு யூதர்கள் ஆகியோர் அந்த நீதிமன்றத்தில் அங்கம் வகித்தனர், ஆனால் இறுதித்தீர்ப்பு ஒரு பைத்தியக்காரனிடம் ஒப்படைக்கப்பட்டது.”
இந்நேரத்தில் சடங்கை முடித்துவிட்டு வெளியேறும் மனிதர்களால் முதியவனின் பேச்சு தடைப்பட்டது.
“ஒரு பைத்தியக்காரனிடம்,” அவன் திரும்பவும் சொன்னான், “ஆக அதன் மூலம் கடவுளின் ஞானம் அவனுடைய வாயின் வழியே வெளிப்பட்டு மனிதனின் வீண்பெருமையைத் தலைகுனியச் செய்யும். அவனது பெயர் மறக்கப்பட்டு விட்டது, அல்லது ஒருபோதும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவன் தெருக்களில் நிர்வாணமாக அலைந்து கொண்டிருந்தான் அல்லது கந்தல்களைச் சுற்றித் திரிந்தான், கட்டைவிரலால் தன் விரல்களை எண்ணியபடியும் மரங்களைப் பரிகசித்தபடியும்.”
என்னுடைய பகுத்தறிவு இதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தது. தீர்ப்பை ஒரு பைத்தியக்காரனின் கையில் கொடுப்பதென்பது விசாரணையை நாசமாக்குவதற்கு ஒப்பானது என்று கூறினேன்.
“பிரதிவாதி நீதிபதியை ஏற்றுக்கொண்டான்,” என்பதே முதியவனின் பதிலாயிருந்தது, “அனேகமாக, அவர்கள் அவனை விடுவித்தால் சதிகாரர்கள் மேற்கொண்டு தரக்கூடிய சிக்கல்களை உணர்ந்தவனாக, மேலும் ஒரு பைத்தியக்கார மனிதனிடம் மட்டும்தான் அவன் மரணத்தைத் தண்டனையாக எதிர்பார்க்காமல் இருக்கமுடியும். நீதிபதி யாரென்று அவனிடம் சொன்னபோது அவன் சிரித்தான் என்று கேள்விப்பட்டேன். பல பகல்களும் இரவுகளும் நீடித்தது அந்த விசாரணை, சாட்சியங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போக அதுவும் நீண்டுகொண்டே போனது.”
முதியவன் நிறுத்தினான். ஏதோவொன்று அவனைத் தொந்தரவு செய்தவாறிருந்தது. அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டி, எத்தனை நாட்கள் என நான் அவனிடம் கேட்டேன்.
“குறைந்தபட்சம் பத்தொன்பது,” என அவன் பதிலளித்தான்.
சடங்கை முடித்துக்கொண்டு வெளியேறிய மனிதர்கள் மீண்டும் அவன் பேச்சில் குறுக்கிட்டனர்; மதுரசம் முஸ்லிம்களுக்கு மறுதலிக்கப்பட்ட ஒன்று, ஆனால் அங்கு உலவிய முகங்களும் குரல்களும் குடிகாரர்களினுடையதாக இருந்தன. ஒருவன், போகிறபோக்கில், முதியவனிடம் எதையோ கத்தினான்.
“பத்தொன்பது நாட்கள் – துல்லியமாக,” என்று அவன் சொன்னான், சங்கதிகளை உறுதிப்படுத்துபவனாக. “தீர்ப்பு சொல்லப்படுவதை அந்த நம்பிக்கையில்லாத நாய் கேட்டுக்கொண்டான், கத்தி அவனுடைய தொண்டையை ருசி பார்த்தது.”
முதியவன் மகிழ்ச்சியோடும் ஆவேசத்தோடும் பேசினான். தற்போது வித்தியாசமான குரலில் கதையை அவன் முடிவுக்குக் கொண்டுவந்தான். “அவன் அச்சமின்றி செத்தான்; மிகவும் கேவலமான மனிதர்களிடம் கூட சில நற்குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.”
“இதெல்லாம் எங்கு நடந்தது?” நான் கேட்டேன், “ஒரு பண்ணைவீட்டிலா?”
முதல்முறையாக, அவன் எனது கண்களுக்குள் பார்த்தான். பிறகு நிதானமாக, வார்த்தைகளை அளந்து பேசியபடி, அவன் சங்கதிகளைத் தெளிவுபடுத்தினான். “அவன் ஒரு பண்ணைவீட்டில் சிறைவைக்கப்பட்டான் என்றுதான் கூறினேன், அங்கு வைத்து விசாரிக்கப்பட்டான் என்றல்ல. அவன் இந்த நகரத்தில்தான் விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டான், வேறெந்த வீட்டைப் போலவும் இருக்கும் ஒரு வீட்டில். ஒரு வீடு மற்றொரு வீட்டிலிருந்து மீச்சிறு அளவே வேறுபட்டிருக்கும்; முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த வீடு கட்டப்பட்டிருப்பது சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பதே.”
சதிகாரர்களுக்கு என்ன நேர்ந்ததென்பதைப் பற்றி நான் அவனிடம் கேட்டேன்.
“எனக்குத் தெரியாது,” அவன் என்னிடம் பொறுமையாகச் சொன்னான். “இந்தச் சங்கதிகள் யாவும் இப்போதைக்குப் பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்து மறந்தும் போய்விட்டன. அனேகமாக அவர்களின் செயல்கள் மனிதர்களில் பலராலும் கண்டிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கடவுளால் அல்ல.”
இதைச் சொல்லிவிட்டு, அவன் எழுந்துகொண்டான். அவனது இந்த வார்த்தைகள் என்னை அங்கிருந்துக் கிளம்பச் சொல்லுவதாக உணர்ந்தேன். மேலும், அந்தக் கணத்திலிருந்து அவனைப் பொறுத்தமட்டில் நான் அங்கு இல்லவே இல்லை. பஞ்சாபின் அத்தனை மூலைகளில் இருந்தும் வந்திருந்த ஆண்களும் பெண்களும் எங்களை மொய்த்தனர், பிரார்த்தித்தபடியும் உச்சாடனங்களைச் சொல்லியபடியும், கிட்டத்தட்ட எங்களைத் தள்ளிக்கொண்டு சென்றனர். நீண்ட வழிப்பாதைகள் என்பதை விடச் சற்றுப் பெரிதாயிருந்த மிகக் குறுகலான தாழ்வாரங்களுக்குள் இருந்து எப்படி அத்தனை மனிதர்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க முடியும் என நான் வியந்தேன். மற்றவர்கள் பக்கத்து வீடுகளில் இருந்தும் வந்தார்கள்; அவர்கள் சுவர்களின் மீதேறிக் குதித்து வந்ததாகத் தோன்றியது. இடித்துத் தள்ளியபடியும் திட்டியபடியும் நான் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தேன். ஆகக்கடைசியாக இருந்த தாழ்வாரத்தின் இருதயப்பகுதியில், மஞ்சள் மலர்களால் செய்த கிரீடத்தைத் தலையில் சூட்டியிருந்த ஒரு நிர்வாண மனிதனைக் கண்டேன் – அவன் கையில் ஒரு வாளை ஏந்தியிருந்தான் – அனைவரும் அவனை ஆரத்தழுவி முத்தமிட்டுச் சென்றனர். வாளில் ரத்தக்கறை படிந்திருந்தது, ஏனென்றால் அதுதான் க்ளென்கெய்ர்னுக்கு அவனுடைய மரணத்தை வழங்கியிருந்தது. பின்புறமிருந்த தொழுவங்களில் அவனது சிதைக்கப்பட்ட உடலை நான் கண்டேன்.
குறிப்புகள்:
- ஜுவெனால் (Juvenal) – ரோம சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த கவிஞர். கி.பி.முதலாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர். அவர் எழுதிய பத்தாவது வசைக்கவிதையின் ஆரம்ப வரிகளுக்கு ‘usque Auroram et Gangen – சூரியவுதயமும் கங்கையும் எட்டும் வரை’ என்று அர்த்தம். இந்தக்கதையில் அது ‘Ultra Auroram et Gangen – சூரியவுதயத்துக்கும் கங்கைக்கும் அப்பால்’ என்று தவறாக மேற்கோள் காட்டப்படுகிறது.
- நிக்கல்ஸன் (John Nicholson) – கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரி. பஞ்சாபில் நடைபெற்ற பல்வேறு போர்களில் ஆங்கிலத்துருப்புகளுக்குத் தலைமை தாங்கி சீக்கியக் கிளர்ச்சிகளை அடக்கியவர். சிப்பாய்ப்புரட்சியின்போது 1857-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அவருடைய மரணத்திற்குப் பிறகு சக ஆங்கில அதிகாரிகளால் “Hero of Delhi” மற்றும் “Lion of the Punjab” என்று புகழப்பட்டார்.