உட்கார்ந்திருந்த மரப் பெஞ்சு வழு வழு என்று இருந்தது.
சிதம்பரம் நடுவீட்டுத் தார்சாவில் உட்கார்ந்திருந்து தெருவைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
தெருவைப் பார்க்கப் பார்வை இருந்ததே தவிர, காம்பவுண்டுச் சுவரோரம் நிற்கிற இரண்டு வாழைகள் ஒன்று போலக் குலை தள்ளி இருந்ததுதான் கண்ணில் நிரம்பி இருந்தது. பூ இரண்டும் பன்னீர்ச் செம்பு போலக் கனத்துச் சாம்பல் பூத்திருந்தன. சேலையை இழுத்து மூடிவிடுவதாக வாழை இலைகள் தணிந்து மேலே உயர்ந்து விலகின.
சிதம்பரம் அப்படியே இடது பக்கம் கழுத்தைத் திருப்பினான். பெரியப்பா காயப்போட்டிருந்த சாயவேட்டி மறைத்தது. எழுந்திருந்து போய் நின்று காடியானாவைப் பார்த்தான். முன்பு வில்வண்டி நிறுத்தியிருந்த இடத்தில் இப்போது ஆகாதது போகாதது எல்லாவற்றையும் போட்டு வைத்திருந்தார்கள்..
துத்த நாகத் தகட்டில் செய்த இரண்டு பெரிய கதவுகளையும் திறக்க வேண்டும். சின்ன வயதில் அந்தக் கதவுகளின் கொண்டியை நகர்த்திப் பூட்டுவதும் திறப்பதும் ஒரு விளையாட்டு சிதம்பரத்துக்கு. அப்படிச் செய்யும் போது உண்டாகும் தேய்மானச் சத்தத்தில், ஒரு சினிமாப் பாட்டுப் போல, அவனுக்கு மட்டும் பிடிபடும் ராகம் ஒன்றை அவன் உண்டாக்கி இருந்தான்.
காடியானாவில் பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள் மற்றும் இவன் ஆடின இரண்டு மரக்குதிரைகள் கிடக்கும். தெப்பக் குளம் தண்ணீர் போல பாசிப் பச்சை நிறமுள்ள குதிரை எங்கேயும் இருக்குமா? சிதம்பரத்தின் அப்பா கைப்பட அந்த நிற வார்னிஷை அதற்கு அடித்திருப்பார் .. செங்கோட்டைப் பிரம்பில் செய்த ஓவல் சைஸ் தொட்டில் , பக்கவாட்டுப் பிரம்பு முறிந்து கிடக்கும். அதன் ஆதிப் பிரம்புக் கலர் மங்கவே இல்லை. ரொம்ப காலமாகப் பூனைகளின் பேறுகாலம் அநேகமாக அங்கேதான். இப்போது கூட ஒரு பூனைக்குட்டிச் சத்தத்தை சிதம்பரம் கற்பனை செய்துகொண்டான்.
அதற்கு மத்தியில்தான் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து அலறிப் போய், களிமண் கலரில், மரப்பல்லிகள் போலக் கிடந்தன இரண்டு நாற்காலிகள். ரொம்ப நாளாக உபயோகம் இல்லாமல் கிடந்தால், எடையுமா குறைந்துவிடும்? காற்றாக ஆகிவிட்டிருந்தது தூக்கிப் பார்த்தால்.
சிதம்பரத்திற்கு அந்த நாற்காலிகளைப் பார்த்ததும் அவனுடைய அப்பாவே கைப்படச் செய்த இன்னொரு கருங்காலி நாற்காலி ஞாபகம் வந்தது. சிதம்பரத்தின் அப்பா எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்தான். பெரியப்பாவும் இவருமாகச் சேர்ந்து செய்யும் விவசாயம் உண்டு, அது எல்லாம் போக சிதம்பரத்தின் அப்பாவுக்குத் தச்சுவேலையும் மரத்தைச் செதுக்கி இஷ்டப்பட்ட விதத்தில் ஏதாவது செய்கிறதும் சுலபமாக வாய்த்திருந்தது. வீட்டில் வில்வண்டி அடித்துக் கொண்டிருந்த மாடசாமியின் கன்னம் ஒட்டின முகத்தை அவர் செதுக்கியிருந்த விதம் அருமையானது, அதைத் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. மாடசாமி வசமே கொடுத்துவிட்டார். கைலாச நாதர் கோவில் ரிஷப வாகனத்தைச் சின்ன வடிவில் செய்தார். பீஜமும் செங்கத்தியாக நீண்டிருக்கும் வீரியமுமாகத் திமிர்ந்து நிற்கும் அதைச் சிதம்பரத்தின் அப்பா தன் அறையிலேயே வைத்திருந்தார்.
பெரியநாயகி அம்மன் நல்ல வளர்த்தி, சிறு குமிழ் போன்ற முலைகள். சிதம்பரத்தின் அப்பா செய்த பெரிய நாயகிக்கு உயரம் கம்மி. கனத்த முலைகள். பெருத்த பிருஷ்டம். ஆனால் முகம் அப்படியே குமிண் சிரிப்புடன். ‘ ஏ. இதை வேறு யார்கிட்டேயும் தூக்கிக் கொடுத்துராத, என் கிட்டேயே இருக்கட்டும்’ என்று பெரியப்பா சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார். சிதம்பரம் வெளியே சொல்லவில்லை. பெரியம்மா ஜாடையில்தான் அவனுடைய அப்பா அதை அப்படிச் செய்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் போகத்தான் , ஊரில் இருக்கிற மந்திரத்து ஆசாரியிடம் இருந்து இழைப்புளி, கொட்டாப்புளி , சித்துளி, சுத்தியல் , ஆக்கர் எல்லாவற்றையும் வாங்கி அந்த நாற்காலியைச் செய்ய ஆரம்பித்தாராம். அப்பா அதை ரொம்ப நாளாக ரசித்து ரசித்துச் செய்ததாகச் சொல்வார்கள். முதுகுச் சாய்மானத்திற்கு அவர் மரத்தை எப்படி அவ்வளவு தோதுவாக வளைத்தார் என்று தெரியவில்லை. இரண்டு கைப் பிடிகளுக்கும் கீழ், நான்கு கால்களின் மேல் பக்கம் எல்லாம் அவரே அம்பாசமுத்திரம் கடைசல் பட்டறைக்குப் போய்க் கைப்படச் செய்திருந்த கடைசல் குமிழ்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். சிதம்பரத்துக்கு அதைப் பார்க்க வேண்டும் போலவும் தடவிக்கொடுக்கவும் தோன்றிவிட்டது.
இந்த ஊரை விட்டுப் போகும்போது அப்பா அதை அவரோடு வேலை பார்த்த தங்கசாமி சாருக்குக் கொடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். சிதம்பரத்தின் அம்மா, அவளுடைய ஹிஸ்டீரியா ஜாஸ்தி ஆகும் போதெல்லாம் சத்தம் போடுவாளாம். ‘சிம்மாசனம் போல இருக்கும். அதை அப்படியே தூக்கி அந்தக் கணக்கு வாத்தியானுக்குத் தானம் கொடுத்தாச்சு. வாத்தியாருக்கு என்கிறது மேல் பேச்சுக்கு. எல்லாம் அந்தத் தேவடியா முண்டையை அதிலே கால் மேல கால் போட்டு உட்கார்த்தி வச்சு அழகு பார்க்கதுக்கு’
வீட்டுக்கு உள்ளே போகும் போதே ‘பெரியப்பா’ என்று சத்தம் கொடுத்துக் கொண்டே போனான். பட்டாசல் தாண்டி, இரண்டாம் கட்டில் கீழே உட்கார்ந்து பெரியப்பா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். சம்மணம் போடாமல் காலை மட்டி போட்டு உட்கார்ந்து, இடது கையை அகல விரித்து இலைக்கு முன்னால் ஊன்றிக் கொண்டு வலது கையால் உண்பார். பனி இல்லை, வெயில் இல்லை, மழையில்லை, பக்கத்தில் அவருக்கு விசிறி இருக்க வேண்டும். ஓர் ஆள் போல அது. அவர் அந்த ஓலை விசிறியோடு சில சமயம் பேச்சுக் கொடுப்பார் என்று கூடச் சொல்லலாம்.
சிதம்பரம் ’பெரியப்பா’ என்று ஒரு சத்தத்தோடு நிறுத்திக்கொண்டு, அவரைத் தாண்டி அடுப்படிக்குப் போனான். தட்டில் இருந்த வடகத்தை எடுத்து வாயில் போட்டான். நார்த்தங்காய் ஊறுகாய் உப்புப் பொரிந்துபோய் இருந்தது. கிள்ளிப் போட்டுச் சப்பினான். ருசி உச்சிக்குப் போனது. பெரியம்மையை முதுகில் தட்டிக் கொடுத்தான். ‘கிறுக்குப் பிடிச்சுட்டா?’ என்று கேட்டபடி அவள் சிப்பலும் வெங்கலக் கரண்டியுமாக பெரியப்பாவுக்குச் சாதத்தை எடுத்துக்கொண்டு போகும்போது கூடவே போனான்.
பெரியப்பா அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. பெரியம்மையைப் பார்த்து ‘ என்ன உன் மவன் ரொம்பக் கொஞ்சுதான்?’ பொண்ணு பார்க்கச் சொல்லுதானா?’ என்று சிரித்து விட்டு, ஊற்றுகிற மோரைக் கையில் வாங்கிக் குடித்துப் புளிப்பு பார்த்தார். மறுபடியும் கைகளைக் குவித்து வாங்கிச் சோற்றைப் பிசைந்தார். ‘இன்னும் கொஞ்சம் விடட்டுமா’ என்று பெரியம்மா ஊற்றின மோர் பிசிறு பிசிறாகப் பெரியப்பாவின் விரல்களின் மேல் எலும்பு மொழிகளில் அப்பி வழிந்தது.
சிதம்பரம் திரித் திரியாக வழிந்து இறங்கும் மோரின் திவலைகளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அது சருகி இறங்கும் விதத்தோடு அவனும் சரிந்து இளகி, பிசையும் பெரியப்பாவின் விரல்களுக்கு இடையில் இருந்து நாடாவாக வெளியேறி, சாப்பாட்டு இலையில் விழுந்துகொண்டு இருந்தான்.
தங்கசாமி சாரும் அப்பாவும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக வேலை பார்த்தார்கள். தங்கசாமி சார்தான் சிதம்பரத்துக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார். ஏ எம் ராஜா பாடல்களை மட்டும் அருமையாகப் பாடுவார். ‘காலையும் நீயே, மாலையும் நீயே’ , ‘கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’ எல்லாம் நேயர் விருப்பப் பாடல்கள்.
முதுகு கொஞ்சம் கூட வளையாமல் நிமிர்ந்தாற் போல் இருந்தபடி, லேடீஸ் சைக்கிளில் தங்கசாமி சார் வீட்டு மேகலா டீச்சர் டவுணில் இருக்கும் வேதக் கோவில் பள்ளிக்கூடத்திற்குப் போவார்.சாம்பல் நிற அல்லது சிலேட் நிறச் சேலைகளையே அவர் அதிகம் உடுத்துகிறவராக சிதம்பரத்தின் ஞாபகத்தில் வந்தார்.
சிதம்பரம் அன்றைக்கு மினி பஸ்ஸில் செக்கடிக் குரிச்சிக்குப் போய்க் கொண்டு இருந்தான். அவன் கூடப் படிக்கும் தெய்வேந்திரனின் அக்கா தூக்கு போட்டுச் செத்துப் போன கனம் அவனிடம் இருந்தது. பஸ் சன்னல் வழியே தூரத்தில் மேகலா டீச்சர் சைக்கிளில் போய்க்கொண்டு இருப்பது தெரிந்தது. மழை பெய்து ஒய்ந்திருந்த புளிய மரங்கள் கவிந்த சாலையில் மேகலா டீச்சர் போகிற காட்சி அவனுக்குப் பிடித்திருந்தது.
எதனாலோ சிதம்பரம் வீட்டுக்குத் திரும்பியதும் , அப்பாவிடம் மேகலா டீச்சரைப் புளியஞ் சாலையில் பார்த்ததைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல், ‘ டீச்சர் சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறதைப் பார்த்தேன்’ என்று சொன்னான். அப்பா அடுக்களையைப் பார்க்கத் திரும்பிப் பார்த்தார். அவன் சொன்னதிற்குச் சிரித்தார்.
பெரியப்பா ஏப்பம் விடுவது கேட்டது. சாப்பிட்டு முடித்துவிட்டார் என்று அர்த்தம் அதற்கு. சாப்பிட்டதற்கு அடுத்த பொழுதில் கொஞ்ச நேரம் உட்கார்வதற்கு ஒவ்வொருத்தரும் ஓர் இடத்தை வைத்திருக்கிறார்கள். பெரியப்பா அவருடைய ஈசி சேரில் சாய்ந்துகொண்டு இன்னொரு ஏப்பம் நீண்டதாக இட்டார். சிதம்பரத்தைப் பார்த்து, ஜன்னல் விளிம்பில் இருந்த தண்ணீர்ச் செம்பை எடுக்கச் சொன்னார். குடித்துவிட்டு ஈசிசேரின் வலது பக்கத்திலேயே வைத்துக் கொண்டு சிரித்தார். செம்பு மூடியின் சத்தத்திற்கும் அவர் சிரிப்புக்கும் பொருத்தமாக இருந்தது. ‘ என்னமோ கேட்டியே?’ என்று சிதம்பரத்தைப் பார்த்தார்.
அந்த நாற்காலியைப் பார்க்கவேண்டும் என்று இப்போதும் அவனுக்குள் இருந்தது. சின்னப் பிள்ளை போல இதைப் போய் கேட்கிறோமோ? ’ஒன்றுமில்லை பெரியப்பா’ என்று பேசாமல் இருந்துவிடலாம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. வாசலில் இருக்கும் வாழை மரங்கள் குலை தள்ளியிருப்பது அல்லது அந்த வாழைப்பூக்கள் பற்றிப் பேச்சுக கொடுக்கலாம் என்று தீர்மானித்த சமயம், அதை எல்லாம் தாண்டி.
‘அப்பா செஞ்ச நாற்காலியைப் பார்க்கணும் போல இருக்கு பெரியப்பா’ என்ற வார்த்தைகள் குதித்துவிட்டன.
பெரியப்பாவுக்கு அப்பா ஞாபகம் வந்துவிட்டது போல. ‘இங்க வா’ என்பது போல சிதம்பரத்தைப் பக்கத்தில் வரச் சொல்லிச் சைகை காட்டினார். பக்கத்தில் போனதும் கையைப் பிடித்துக்கொண்டார். மேகலா டீச்சரைப் பெரியப்பா ஒருமையில் மேகலா என்றுதான் சொல்வார். ‘மேஹ்லா’ என்பது போன்ற ஒரு மிருதுவான உச்சரிப்பாக அது இருக்கும்.
‘மேஹ்லாவை தங்கசாமியோ அவன் மகளோ, மருமகனோ கூடப் பார்க்க முடியலை. அப்படியே பெரியாஸ்பத்திரியிலே இருந்து பொட்டலம் கட்டி எடுத்துட்டுப் போயி அவங்களே தகனம் பண்ணீட்டாங்க. இதுல உங்க அப்பன் வெளியூரில இருந்து புறப்பட்டு வந்து எங்கே பார்க்க?’ தகரம் தகரமா கட்டி தெருவையே மறிச்சு அல்லவா வச்சிருந்தாங்க. எனக்கே கண்ட்ராவியா இருந்தது. தகரத்துல ஒட்டியிருந்த போஸ்டரில் மேஹ்லா முகத்தை வளஞ்சு வளஞ்சு பார்க்கிறதுக்கு. உங்க பெரியம்மைக்குக் கூடத் தெரியாது. சுவத்தில ஒட்டியிருந்த மேஹ்லாவோட ஒரு போஸ்ட்டரை உங்க அப்பனுக்காகக் கிழிச்சுக் கொண்ணாந்து வச்சிருந்தேன்.’
சிதம்பரம் குனிந்து கீழே இருந்த தண்ணீர்ச் செம்பை எடுத்துக் குடித்துவிட்டு வைத்தான். பெரியப்பாவையே பார்த்தான். பெரியம்மை உட்கட்டில் இருந்து வெளியே வந்து, ‘தங்கசாமி வாத்தியார் இப்போ இங்கே இல்லை. வீட்டைப் பூட்டிப் போட்டுட்டு மக வீட்டோடு அருவங்குளம் போயிட்டாரு ,சேம்பா’ என்றாள்.
‘நீ அந்த நாக்காலியைப் பார்த்து இப்போ என்ன பண்ணப் போறே. உங்க அம்மைக்குத் தெரிஞ்சா குதியா குதிப்பா’ . உனக்கு ஒண்ணும் இல்லை. உங்க அப்பா பாடுதான் சங்கடமாப் போகும்’ – சொல்லிக்கொண்டு சிதம்பரத்தின் தோளில் கையை வைத்தார்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திப் பூட்டிக் கண்களைச் செருகினாற்போல மூடியிருந்த பெரியப்பா, ‘இல்லை , அவன் போயிட்டு வரட்டும். ‘ என்று இரண்டு பேருக்கும் நடுவில் இருந்த வெளியைப் பார்த்துச் சொன்னார். ‘நியாயமா பார்த்தா நானும் உன் கூட வரணும்’ என்று மறுபடி சொல்லி, ஏற்கனவே சொன்னதை அடர்த்திப் படுத்தினார்.
‘போகிற ரோடு கொஞ்சம் மோசமா இருக்கும். நம்ம டி வி எஸ் ல போயிட்டு வந்திருவியா பாரு. இல்லை போஸ்ட் ஆபீஸ்காரர் வீட்டில் இருந்து பைக் எடுத்துக்கிட்டுப் போ. ரெண்டு பைக் சும்மா தான் நிக்கும்’ என்றார்.
சிதம்பரம் டி வி எஸ் 50 ஐயே எடுத்துக்கொண்டான். பெரியப்பாவும் பெரியம்மையும் வாசலுக்கு வந்தார்கள். இரண்டு பேரும் மாறி மாறிப் பேசினார்கள்,
‘ முத்தாரம்மன் கோயில் தெரு. தங்கசாமி மகள் பேரு கஸ்தூரி. பேங்கில வேலை பார்க்காண்ணு கேள்வி’ என்று பெரியம்மை சொன்னாள். ‘ அதெல்லாம் தங்கசாமி வாத்தியார்னு சொன்னா தெரியாமலா இருக்கும்? கஸ்தூரி என்ன கஸ்தூரி’ பெரியப்பா சத்தத்தை உயர்த்தினார்.’
‘நாக்காலியைப் பார்க்க வந்தேன். ஸ்டூலைப் பார்க்க வந்தேன்னு என்னத்தையாவது சொல்லிக்கிட்டு இருக்காதே. சிரிக்கப் போறாங்க. பொதுப்படையா, பெரியப்பா வீட்டுக்கு வந்தேன், உங்க எல்லாத்தையும் பாக்கணும்னு தோணுச்சுண்ணு சொல்லு சேம்பா’ பெரியம்மா சிதம்பரத்திடம் சொல்லிக்கொண்டே வாசலில் தாறுமாறாகக் கிடந்த இரண்டு மூன்று ஜோடிச் செருப்புகளைக் காலால் ஒழுங்காக நகர்த்தி வரிசையில் வைத்தார்.
’வெயில் தாழப் போயிருக்கலாம். முன்னேயும் இல்லாம, பின்னேயும் இல்லாம, எல்லாரும் குறுக்கைச் சாய்க்கிற நேரத்தில் போறே’ என்று பெரியம்மை கதவைச் சார்த்தினார். ஏற்கனவே வீட்டுக்குள் போயிருந்த பெரியப்பாவிடமிருந்து, ‘இன்னைக்கும் நாளைக்கும் லீவுதானே. நாளைக்குச் சாச்சுக்கிடட்டும் எல்லாத்தையும்’ என்று சத்தம் வந்தது.
பெரியம்மா சொன்னது போல ஆட்கள் மட்டும் அல்ல, தெருவே பாதிக் கிறக்கத்தில்தான் இருந்தது. முத்தாரம்மன் கோவிலில் உட்கார்ந்திருந்தவர்கள் கஸ்தூரி, பேங்கில் வேலை பார்க்கிறவர் என்று சொன்னதுமே வீட்டு அடையாளம் சொல்லிவிட்டார்கள். ‘ நம்ம ஆர் ஐ வீடுதானே’ என்று கஸ்தூரியின் கணவர் பெயரைச் சொல்லி ஒருத்தர் வழி சொன்னார். அதை விடவும் உப்பு விற்றுக் கொண்டு போனவர் , ‘ பூவரச மரம் பக்கத்தில இருக்கும் கம்பி அழிப் பாய்ச்சின வீடு’ என்று சொன்னது சரியாக இருந்தது உப்புவிற்கிறவர் கை வண்டியில் இருந்த சணல் சாக்கில் படிகம் படிகமாக லேசாகக் கசிந்து பளீரென்ற வெண்மையோடு வெயிலில் மினுங்கிக்கொண்டு இருந்த பரல்களின் முனைகளில் தங்கசாமி சாரின், பாட்டுக் கிழிபட, மேகலா டீச்சர் சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார்.
இரண்டு மூன்று தடவை கூப்பிட்டு, கதவுக் கம்பியிலும் கையால் தட்டிய பின் கை வைத்த பனியன் அணிந்திருந்த ஒருவர் வந்து கதவைத் திறந்தார். ‘தங்கசாமி சார் ஸ்டூடண்ட் ’ என்றான் சிதம்பரம்.. அப்பா பெயரையும் பெரியப்பா பெயரையும் சொன்னான். கதவைத் திறக்க வந்தவர் அதிகம் நெற்றியைச் சுருக்கவில்லை. மேலுக்கு மேல் விசாரணை செய்யவில்லை. உள்ளே வரச் சொன்னார். ‘ சைட் ஸ்டாண்ட் வேண்டாம். செண்டர் ஸ்டாண்ட் போட்டிருங்க. சாயாம இருக்கும்’ என்று யோசனை சொன்னார்.
பிராமணக்குடி வீடு மாதிரி இருட்டாகவும் தட்டுத் தட்டாக நீளமாகவும் இருந்தது. சுவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தது. ஒரு பாக்குப் பொட்டலம் போல சுவர்கள் சிதம்பரம் மீது படிந்து அவனைப் பொதிந்து கொள்ள ஆரம்பித்தன. இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். இருட்டின் மேல் அமர்வது போல இருந்தது..
எடுத்த எடுப்பில், மன்னிப்புக் கேட்கும் குரலில், ‘ இன்றைக்குக் கரண்ட் கிடையாது. மெயிண்டெனன்ஸ் ஆஃப் ’ என்றார். இருட்டுக்கான காரணம் சொன்ன பிறகும் இருட்டு இருட்டாகவே இருந்தது.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மனைவி கஸ்தூரியும் பிள்ளைகளும் வெளியூர் போயிருப்பதையும் இன்று பிந்தின இரவில்தான் வருவார்கள் என்றும் தங்க சாமி சாரைப் பார்த்துக் கொள்வதற்காக தான் மட்டும் வீட்டில் இருப்பதாகச் சொன்னார்.
சிதம்பரம் அவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் போதே, சிதம்பரத்தின் அப்பா பற்றியும் அவர் செய்யும் கை வினைப் பொருட்கள் பற்றியும் தங்கசாமி சாருக்கு அவர் அன்பளித்த , அவரே செய்த நாற்காலியைப் பற்றியும் எதிரில் இருந்தவர் சொல்லிவிட்டார்.
அந்த நாற்காலி எங்கே இருக்கிறது என்று கேட்பதில் ஒரு தயக்கம் இருந்தது. ‘தங்கசாமி சார் நல்லா இருக்காங்களா? பார்க்கலாமா?’ என்று சிதம்பரம் கேட்டான். ‘’தூங்கிக்கிட்டு இருந்தாங்க என்றால் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’ .என்று குரலைத் தாழ்த்தினான்.
’இருங்க பார்த்துட்டு வந்திருதேன்’ என்று அவர் எழுந்து போனார். அடுத்த வீட்டுப் பின்வாசலில் அடி பைப் இருக்க வேண்டும். மிகத் தொடர்ந்தும் மிகச் சத்தமாகவும் அடிக்கிற பைப்பின் சத்தம் தரையைக் கீறலிட்டபடி வாசல் வரை ஓடியது.
மலம் , மூத்திரம் வாசனை வந்தது. அடுத்து டெட்டால் வாசனை, பவுடர் வாசனை எல்லாம் வந்தது. பத்தி கொழுத்தி வைத்தவுடன் உண்டாகும் ஒரு ஆரம்பக் காட்டமான மணம் பரவியது. எதிரே பின் கட்டில் இருந்து கைகளைத் துடைத்துக்கொண்டே அவர் வந்துகொண்டு இருந்தார். வீடு முழுவதும் வெளிச்சத்தில் இருக்கிறது போல, எந்தத் தடங்கலும் இல்லாத நடை அவருடையது.
‘வாங்க’ என்றார். ’கொஞ்சம் இருட்டா இருக்கும்’ என்று சிதம்பரத்தின் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போனார். அந்த அறை பக்க வாட்டில் இருந்தது. கதவுகளை அகலத் திறந்து, வெளிச்சம் போதாது என்பதால் ஒரு பருமனான மெழுகுத்திரியையும் ஏற்றிவைத்திருந்தார்.
வாசலுக்கு இரண்டு அடி முன்னால் சிதம்பரத்தை நிறுத்தி, அவன் தோள்களில் கை வைத்தவர் அவனிடம் சொன்னார், ‘தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாமாவுக்கு, அதுதான் தங்கசாமி சாருக்கு உங்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. உங்களை மட்டும் அல்ல. யாரையும். ஏன் என்னை உட்பட.. பேச்சு சுத்தமாக நின்றுவிட்டது.
இன்னொன்றைச் சொல்வது உங்களுக்குச் சந்தோஷமாகவும் இருக்கும். கஷ்டமாகவும் இருக்கலாம். நல்ல மருத்துவப் படுக்கை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தால் கூட, உங்கள் அப்பா செய்த நாற்காலியில் தான் அவர் பெரும்பாலும் உட்கார்ந்திருக்கிறார். சாப்பிடுகிறார். தூங்குகிறார். கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மிருதுவான பெல்ட்டால் அவரை நாற்காலியோடு கட்டி வைத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை.’
அவரோடு அந்த அறைக்குள் நுழைந்த போது தங்கசாமி சார் முன் பக்கம் சாய்ந்து விழுவது போல நாற்காலியில் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்.. கைகளின் மெலிவு தெரியாமல் இருக்க, சிதம்பரம் வந்த பிறகு துடைத்து, முழுக்கை சட்டையை மாட்டியிருக்கவேண்டும்.. கீழிருந்து இரண்டாவது பொத்தான் மூன்றாவது துளையில் மாட்டப்பட்டு இருந்தது. முகத்தை நிமிர்த்தி அவர் பார்க்கவே இல்லை.
“வேண்டுமானால் நீங்கள் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். தொடலாம். கைகளை எடுத்து உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளலாம். புதிய தொடுகைகள் அவருக்கு நல்லது பண்ணும்” என்றார்.
அவர் இட்ட ஸ்டூலில் சிதம்பரம் அமர்ந்தான். அவர் கைகளை எடுத்து அவனுடைய கைகளில் வைத்துக் கொண்டான். அப்பா செய்த நாற்காலி என்பதை முற்றிலும் சிதம்பரம் மறந்து போயிருந்தான். சிதம்பரத்தின் கைகளிலிருந்து தங்க சாமி கைக்கு ஏதாவது பாயும் என்றால், அவரின் கைகளுக்கு உள்ளிருந்து சிதம்பரத்தின் கைகளுக்குள் ஏதேனும் பெருகும் என்றால் நடக்கட்டும் என அப்படியே உட்கார்ந்திருந்தான்.
அந்த வீட்டின் வளர்ப்புப் பூனையாக இருக்கலாம். அது சிதம்பரத்தின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. அதன் உடலை அசைத்து ஒரு சௌகரியமான குழிவை அவன் மடியில் உண்டாக்கித் தலையைச் சாய்த்துக் கொண்டது. சிதம்பரம் இதுவரை இரண்டு கைகளிலும் அவர் கையை வைத்திருந்தது போக, அவர் தன் விரல்களைத் தளர்த்தி, சிதம்பரத்தினுடைய விரல்களைப் பொத்தி அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.
அந்த அசைவின் மாற்றத்தில் சிதம்பரத்துக்கு முதுகு சொடுக்கியது. அவன் பக்கத்தில் நிற்கிறவரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் சிதம்பரம் பக்கத்தில் வந்து தோள்களில் கையை வைத்தார்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சின்னஞ்சிறு பூனைக்குட்டிகள், சிதம்பரத்தின் மடியில் ஏறி, அங்குப் படுத்திருந்த பூனையை ஒட்டிப் படுத்துக் கொண்டன.
இந்த மெழுகுத் திரி வெளிச்சம் இல்லாவிட்டால் கூட, இந்த அறை, இச் சமயம் ஒளிமயமாக இருக்கும் என்று சிதம்பரம் நினைத்தான். அவனுடைய கைகளை தங்கசாமி சார் மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தார்.
மிகத் தெளிவான குரலில் ‘ராம்தாஸ்’ என்றார்.
‘எங்க அப்பா பெயர்’ என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் சொல்லிக்கொண்டே சிதம்பரம் அழ ஆரம்பித்தான்.