இனிமேல் சாவு வீடுகளில் ‘ஊடகங்கள் உள்ளே வரக்கூடாது’ என்று போர்டு மாட்டுமளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.சமீபகாலமாக பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளில் உயிரிழப்பு ஏற்படும் போதெல்லாம் ஊடகங்கள் அத்துமீறி நடந்துகொண்டதின் விளைவு இது.சமீபத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளின் அகால மரணத்தின் போது இதற்குமேல் அநாகரிகமாக நடந்துகொள்ள முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாவு வீட்டு வாசலில் கும்மாளம் அடித்தார்கள் செய்தியாளர்கள்.இறந்துபோன குழந்தையின் ஆசிரியை ஒருவர் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே வருகிறார்.
அவர் முகத்துக்கு நேரே மைக்கை நீட்டி கேணைத்தனமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒருவேளை அக்கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாலும், அது எவருக்குமே பிரயோசனப்படப் போவதில்லை. அழுகையிலும், அதிர்ச்சியிலும் அவர் பதிலளிக்க மறுக்கிறார். பேசிதான் ஆகவேண்டும் என்று கிட்டத்தட்ட ரவுடித்தனமே செய்தார்கள் ஊடகவியலாளர்கள்.
பாரம்பரியமான அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்கள், “இதுக்கெல்லாம் செய்யுறது யூட்யூப் சேனல்காரனுங்க” என்று ஒரு வரியில் தங்களைக் காத்துக் கொண்டாலும், இதே ஊடகங்களின் யூட்யூப் மைக்குகளையும் அந்த அநாகரிகச் செய்திப்பசி நிகழ்வுகளின் போது காண முடிகிறது.ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வது ஊடகங்கள்தாம். இப்போது ஊடகங்களுக்கு ஊரே உபதேசம் செய்கிறது.
ஆங்கிலத்தில் ‘பேப்பரஸி’ என்பார்கள். பிரபலங்களின் பின்பக்கத்தை எப்போதுமே முகர்ந்துக் கொண்டு, கையில் கேமிராவோடு அலைந்துகொண்டிருக்கும் போட்டோகிராபர்களின் செல்லப் பெயர் அது.பேப்பரஸிகளாகப் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் எந்தப் பத்திரிகை நிறுவனத்தின் ஊழியராகவும் இருக்க மாட்டார்கள்.கிசுகிசு பத்திரிகைகளுக்குப் பரபரப்பான செய்திகளையும், படங்களையும் வழங்கும் ஃப்ரீலான்சர்களாகத்தான் பேப்பரஸிகள் இருப்பார்கள்.பெரிய ஊடகங்கள் மறைமுகமாக இவர்களது சேவையை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டாலுமே கூட, பேப்பரஸிகளோடு தங்களுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டிக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே கருதுவார்கள்.செய்தியாளர்களின் வேலையைத்தான் பேப்பரஸிகளும் செய்தார்கள் என்றாலும், ஊடகம் வேறு, பேப்பரஸிகள் வேறு என்றே ஊடக உலகம் சொல்லிக் கொண்டிருந்தது.அந்தளவுக்கு பேப்பரஸிகள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்பட்டார்கள்.
பிரபலங்களின் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவர்களது அந்தரங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே படம் பிடிக்கும் பேப்பரஸிகளை எவர்தான் விரும்புவார்கள்?எனினும், பேப்பரஸிகள் தரக்கூடிய ‘எக்ஸ்க்ளூஸிவ்’ தகவல்கள் மற்றும் படங்களுக்கு வாசகர்களிடையே வரவேற்பு உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் கணிசமாக வருவாயும் பார்த்து வந்தார்கள்.
பேப்பரஸிகள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது இங்கிலாந்து இளவரசி டயனாவின் மரணத்தின்போதுதான். அவர் எந்தெந்தக் காதலர்களுடன், எங்கெல்லாம் செல்லுகிறார் என்று பின்தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். இவர்களுக்குப் பயந்து அதிவேகத்தில் காரில் பயணித்து விபத்து ஏற்பட்டு மறைந்தார் டயானா.
இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு பேப்பரஸிதான்.
இன்றைய உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், இணையத்தில் புழங்குபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் சவுக்கு சங்கர். அரசியல் மற்றும் சமூகப் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை பல்வேறு வகைகளில் திரட்டி வைத்து, பெயரை கெடுத்துவிடுவேன் என்று அவர்களை பிளாக்மெயில் செய்து பிழைக்கும் சவுக்கு சங்கரும் ஒரு பேப்பரஸியே. தன்னைப் போன்ற கிரிமினல்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகளை ஒரு குழுவாக அமைத்து இன்று பேப்பரஸியை கார்ப்பரேட் தொழில் போல நடத்தி வருகிறான்.
ஒரு காலத்தில் இதுபோன்ற பேப்பரஸிகளைக் கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்ட ஊடகங்கள், இன்று தாங்களே பேப்பரஸிகளாக மாறிவிட்டார்கள் என்பதையே சமீபகால வைரல் வீடியோக்களை வைத்து உணரமுடிகிறது.
நடிகர் மாரிமுத்து மரணம், விஜய் ஆண்டனி மகள் தற்கொலை போன்ற நிகழ்வுகளில் துக்க வீட்டில் இவர்கள் நடந்து கொண்ட அருவருப்பான நடவடிக்கை எவருமே ஜீரணிக்க முடியாதது.
துக்க வீடுகளில் மட்டுமல்ல. பிரபலங்களின் அந்தரங்கங்களிலும் இவர்கள் அத்துமீறுவதற்கு சமீப சான்று, நடிகரும் இயக்குநருமான சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு இடையேயான குடும்பப் பஞ்சாயத்தைச் செய்திகளாக்கிய விதம்.
ஊடகம் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வேலை என்று நம்பக்கூடிய ஒரு காலம் இருந்தது. அன்று பத்திரிகையாளர்களே பத்திரிகைகளை நடத்தினார்கள். அவரவர் நம்பிய கொள்கைகளுக்கு ஆதரவாகச் செய்திகளையும், கருத்துகளையும் வெளியிட்டார்கள்.
பத்திரிகைத் தொழிலிலும் லாபம் பார்க்கலாம் என்கிற நிலை வந்தபோதுதான் தொழிலதிபர்கள் ஊடகத்தொழிலில் குதித்தார்கள்.தகவல்களும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விளம்பரங்கள் பிரதான இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன.விளம்பரங்களைப் பெற வேண்டுமானால், பத்திரிகை அதிகமான எண்ணிக்கையில் விற்கப்பட வேண்டும். அதற்காகச் செய்திகளை மலினப்படுத்த ஆரம்பித்தார்கள்.
டிவி ஊடகம் வந்தபோது இந்தப் போக்கு வேகமாக அதிகரித்தது.ஊடகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக இன்று இணையம் உருமாறி இருக்கும் வேளையில், முன்பு ஊடகங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பொறுப்புணர்ச்சியும் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் ரேடியோ, டிவி போன்றவற்றில் தங்கள் குரல் ஒலிக்காதா, முகத்தைக் காட்டமாட்டார்களா என்று ஏங்கிய பிரபலங்கள் உண்டு. பத்திரிகைகளில் தங்களைப் பற்றி எதிர்மறையாகவாவது ஒரு துணுக்குச் செய்தி போடமாட்டார்களா என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பார்கள்.
ஊடகங்களில் ஒரு வரிச் செய்தி வந்தாலே ஒருவர் பிரபலம்தான் என்று மக்கள் நம்பிய காலமும் இருந்தது.இன்று பிரபலங்கள் மீதான ஒவ்வாமை மக்களுக்கு வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏனெனில் எல்லா பிரபலத்தையும் வைத்துக் கல்லா கட்டும் ஆசையில், தண்டங்களையெல்லாம் கூட பிரபலம் என்று நிறுவுவதற்கு ஊடகங்கள் மெனக்கெடுகின்றன.
பிரபலங்களைக் குறித்து சர்ச்சையாக ஏதேனும் செய்திகள் வந்தால் அதை உடனடியாக லைக் செய்து, ஊருக்கே ஷேர் செய்யும் வில்லத்தனமான மனப்பான்மைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.
1984இல் இந்திராகாந்தி மறைந்தபோது டிவி பிரபலமாகத் தொடங்கியிருந்தது. படுகொலை செய்யப்பட்ட அவரது மரணத்தைப் பரபரப்பாக அணுகாமல், அவர் மரணம் குறித்து ஒரு சாதாரண குடிமகனுக்கு என்ன என்னவெல்லாம் சந்தேகம் ஏற்படுமோ அதையெல்லாம் தெளிவாக்கக்கூடிய செய்திகளையே தூர்தர்ஷன் அப்போது ஒளிபரப்பியது. இந்திரா காந்தி குறித்த மற்ற பிரபலங்களின் அபிப்ராயங்களைப் படம் பிடித்து மக்களுக்குக் காட்டியது. பின்னர் எம்.ஜி.ஆர் மறைந்தபோதும் கூட இதே மாதிரியான அணுகுமுறையில்தான் டிவி நடந்துகொண்டது. துக்கம் விசாரித்து வெளியே வந்துகொண்டிருந்தவர்களின் மூக்குக்கு நேராக அப்போது யாரும் மைக்கை நீட்டவில்லை.
அப்போதெல்லாம் அச்சு ஊடகங்களும்கூட இதேபோன்ற பாணியில்தான் செய்திகளை வெளியிடுவார்கள். விஷூவலாகக் காட்ட முடியாத பல விஷயங்களைச் செய்திகளாகவோ, கட்டுரை பாணியிலோ தருவார்கள்.
ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அதுதான் அளவுகோல்.பொதுவாக ஊடகங்களை இருவேறு பாணியில் பிரித்துச் சொல்வார்கள்.ஒன்று, பிபிசி பாணி. தகவல்களை அப்படியே தகவல்களாகத் தருவது. நம்மூர் தூர்தர்ஷன், தினத்தந்தி போன்றவை மோடி ஆட்சிக்கு முன்பு இந்தப் பாணியில்தான் செய்திகளை தந்துகொண்டிருந்தார்கள்.
மற்றொன்று, சி.என்.என். பாணி. தகவல்களுக்கு மசாலா பூசி, யூகங்களைத் தூவி, என்னவெல்லாம் நடக்கலாம் என்று ஜோசியம் கூறி சுவாரஸ்யப்படுத்துவது. பெரும்பாலான தனியார் நியூஸ் சேனல்கள், தினமலர் போன்ற பத்திரிகைகளின் பாணி இது.இன்றைய யூட்யூப் ஊடகங்கள் நடந்துகொள்வது சி.என்.என்-னுக்கே பாடம் சொல்லும் பாணியாக இருக்கிறது.ஒருவர் தற்கொலை செய்துகொண்டதுமே, ராவாக அச்செய்தியைச் சொன்னால் சுவாரஸ்யப்படாது என்பதால் முதலில் மன அழுத்தத்தால் தற்கொலை என்று ஃப்ளாஷ் நியூஸ் போடுகிறார்கள்.
மன அழுத்தம் இருந்தால்தானே ஒருவர் தற்கொலை முடிவுக்கு போக முடியும் என்று எதிர்க்கேள்வி கேட்கத் தொடங்கியதுமே அவர் மனநல சிகிச்சை பெற்றவர் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் செய்தியை சென்சேஷனல் ஆக்கி விடுகிறார்கள்.தற்கொலையோ, கொலையோ.. காவல்துறை, நீதிமன்றமெல்லாம் விசாரிப்பதற்கு முன்பே தங்களது கற்பனைத்திறன் கொண்டு எவ்வளவெல்லாம் அந்த கேஸுக்கு கவர்ச்சி கொடுக்க முடியுமோ, அவ்வளவு கவர்ச்சியை ஏற்றி ஏதோ ஒரு தீர்ப்பை இவர்களாகவே சொல்லி விடுகிறார்கள்.
பின்னாளில் உண்மை வெளிப்பட்டு, இவர்கள் சொன்னதெல்லாம் பொய்யென்று தெரியவந்தாலும் அதைப் பற்றி எந்தக் கவலையும் இவர்களுக்கு இல்லை. உண்மை வெளிப்படும்போது இவர்கள் வேறெதுவோ பொய் சொல்வதில் பிஸியாக இருப்பார்கள்.இந்தத் திருட்டுப் பூனைகளுக்கு யாரோ ஒருவர் மணி கட்டித்தான் ஆகவேண்டும்.இனிமேல் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களின் துக்கவீடுகளுக்கு ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்.
டிவி சேனல்களில் குறிப்பிட்ட தொகுப்பாளர்கள் தொகுக்கும் விவாத நிகழ்ச்சிகளுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியினரும் தங்கள் பிரதிநிதிகளை பேச அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.கலை மற்றும் அரசியல் துறையை சார்ந்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஊடகப் புறக்கணிப்பு என்கிற நிலையை எட்டியிருக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டே போனால் எல்லா ஊடகங்களையும் சுடுகாட்டில் புதைக்க வேண்டியதுதான். ஊடகவியலாளர்கள் சமூக ஊடகங்களில் சமையல் குறிப்புகள் எழுதப் போக வேண்டியதுதான்.