குற்றங்களின் காலத்தில் நாம் வாழ்வதாக நம்புகிறோம். ஆனால் எல்லாக் காலத்திலும் வழி வழியாக இந்த நம்பிக்கையை மனிதர்கள் கடத்தி வந்து கொண்டேதான் இருக்கிறார்காள். ஆனால் குற்றங்கள் பெருகினாலும் குற்றவாளிகள் அல்லது குற்றங்களை இழைத்ததாகக் கருதப்படும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் இன்று பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. முன்னர் எல்லாம் குற்றவாளிகளை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்திதான் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற்றார்கள். ஆனால், இன்று இணைய வெளியின் வளர்ச்சியும், கேமிரா உள்ளிட்ட கண்காணிப்புப் பொறியமைப்பின் வளர்ச்சியும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவி விடுகிறது. சந்தேக நபருக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டா இல்லையா? என போலீஸ் இன்று ஆராய்வதில்லை. காரணம் குற்ற ஆவணங்களில் டைரிக்கு மிகப்பெரிய பங்கிருந்தது. ஆனால், அந்த இடத்தில் இன்று மொபைல் வந்து விட்டது. எந்த ஒரு குற்றச் செயலிலும் முதன் முதலாக காவல்துறை மொபைல் போனையே எடுக்கிறது. நமது அந்தரங்க வெளியை இணையம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் கொண்டு வந்து விட்ட இக்காலத்திலும் ஒரு சீரியல் கில்லர் சிக்கிவிடாதபடி டஜன் கணக்கில் கொலைகளைச் செய்கிறார் என்றால் அவர் ஒரு தேர்ந்த கொலையாளியாகவே இருக்க வேண்டும்.
அப்படி ஒரு ஆச்சரியக் கொலையாளியாகத்தான் பார்க்கப்படுகிறார் லூசி லெட்பி. சீரியல் கில்லர்களுக்கு உலக வரலாற்றில் எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால், உலகையே நடுங்க வைத்துள்ள சீரியல் கொலையாளியான லூசி லெட்பியை மரண தேவதை என்றுதான் அழைத்தனர். அதற்குக் காரணம் அவர் அடுத்தடுத்து கொலை செய்தவை அனைத்தும் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளங்குழந்தைகளை!
வெள்ளந்தியான முகம், அப்பாவியான உடல் மொழி, குழந்தைத் தனமான அணுகுமுறை என இவரா இப்படிச் செய்தார் என மொத்த பிரிட்டனும் அதிர்ச்சியில் உறைந்திருக்க லூசி லெட்பி ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது லண்டன் மான்ஸ்டர் கிரவுன் நீதிமன்றம்.
பிரிட்டனில் தூக்குத் தண்டனை கிடையாது. அதிகபட்சத் தண்டனையே ஆயுள் முழுக்க சிறையில் வைத்திருக்கும் தண்டனைதான் என்னும் நிலையில் லூசி லெட்பிக்கு ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
மிகச்சரியாக எத்தனை குழந்தைகளைக் கொன்றார் எனத் தெரியவில்லை.வெறும் ஏழு குழந்தைகளைக் கொன்றது மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 13 குழந்தைகளுக்கும் அதிகமாக லெட்பி கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஊடகங்களிலும் காவல்துறையிலும் நிலவுகிறது. ஆனால் கிட்டத்தட்ட சரிபாதி கொலைகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஏழு குழந்தைகளைக் கொன்று ஆறு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற லூசி லெட்பிக்கு இப்போது வயது 33 மட்டுமே. தனது 26 வயதில் முதல் கொலையை செய்ய முயன்ற லூசி அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர் ஓராண்டுக்குள் டஜன் கணக்கில் பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறார். கொலை செய்த கையோடு அவர் சிக்கிவிடவும் இல்லை ஆவணங்கள், சிகிச்சை டேட்டாஸ் மூலமாகவே லெட்பி ஒரு வேட்டையாளர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
யார் இந்த லூசி லெட்பி?
90-ஸ் கிட்ஸ் என்று சொன்னால் அது லூசி லெட்பிக்குத்தான் பொருந்தும். 1990-ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி இங்கிலாந்தின் ஹியர் போர்ட்டில் ஜாண் லெட்பி- சூசல் லெட்பி தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தையாக பிறந்தவர்தான் லூசி லெட்பி. லூசி லெட்பி பிறந்த பின்னர் பெற்றோர்கள் அளவு கடந்த பாசத்தோடும் அன்போடும்தான் குழந்தையை வளர்த்துள்ளனர். கல்வி, விளையாட்டு ஒழுக்கம் என ஒரு மத்தியத் தரப் பெற்றோர் எப்படி குழந்தையை வளர்க்க ஆசைப்படுவார்களோ அப்படித்தான் லூசி லெட்பியும் வளர்க்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பை முடித்து செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பைத் தொடர்ந்தார். 2010 ஜூன் 1 ஆம் தேதி செஸ்டர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பிரிவில் மாணவர் செவிலியராகத் தன் முதல் வேலை நாளைத் தொடங்கினார். 2011 செப்டம்பரில் குழந்தைகளுக்கான திவீர சிகிச்சைப் பிரிவில் உள்ள குழந்தைகளைக் கண்காணிக்கும் செவிலியராகத் தகுதி பெற்றார்.
பயிற்சி நர்சிங் மாணவியாக லிவர் பூல் மகளிர் மருத்துவமனையிலும், செஸ்டர் மருத்துவமனையிலும் பணியாற்றிய லூசி லெட்பி தன் அழகான தோற்றம் அதிர்ந்து பேசாத மொழி, செவிலியருக்கே உரிய தாய்மை அணுகுமுறை, குழந்தைகளின் பெற்றோருடன் பழகும் பாங்கு, அதை எல்லாம் விட குழந்தைகள் வார்டில் அவரது துடிப்பான அர்ப்பணிப்பு மிக்க பணி என அனைவரயும் கவர்ந்தார்.
மாணவியாக வாழ்வைத் தொடங்கிய லூசி 2012-ஆம் ஆண்டு Countess of Chester மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் ஊதியத்துக்குப் பணி செய்யும் செவியலாரகப் பணியில் சேர்ந்தார். முதன் முதலாக ஊதியத்துக்குப் பணியாற்றித் தன்னை ஒரு தனித்துவமான பெண்ணாகவும் மாற்றிக் கொண்டார்.
பிரசவத்துக்கு பிந்தைய பச்சிளங்குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வார்டுக்கு வந்த பின்னர் இங்கிலாந்தின் NHS அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் செஸ்டர் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் பணியமர்த்தப்பட்டார். செவிலித்தாயாக மிகச்சிறப்பாக பணியாற்றியதோடு குழந்தைகள் வார்டை மேம்படுத்தும் பிரச்சார இயக்கத்திலும் பங்கேற்றார். எல்லாம் நல்லபடியாகவே நடந்து வந்தது.
2015-ஆம் ஆண்டு ஒன்பது வாரங்களுக்கு முன்னர் அதே செஸ்டர் மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தை ஒன்றுக்கு ரத்தத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் அந்தக் குழந்தை பிறந்த செஸ்டர் மருத்துமனையின் குழந்தைகள் வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. அந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட 2015 ஜூன் 8-ஆம் தேதி இரவு டியூட்டிக்கு குழந்தைகள் வார்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார் லூசி லெட்பி. அவர் டியூட்டியை கவனித்துக் கொள்ளத் துவங்கிய 90-ஆவது நிமிடத்தில் அந்தக் குழந்தை அசாதரணமாக இறந்தது. திடீரென உயிர் குலைந்து மூச்சு விடப் போராடிய அந்தக் குழந்தையைக் காப்பாற்ற சீனியர் மருத்துவர்கள் போராடினார்கள் அவர்கள் அந்தக் குழந்தையின் தோலின் நிறம் மாறுவதைக் கண்டார்கள். ஆனால், அதை மருத்துவப் பிழை என மட்டுமே கருதினார்கள்.
பொதுவாகவே குழந்தைகள் வார்டின் பிரசவ காலத்தில் தாயோ குழந்தையோ இறக்கும். ஆனால் அது குழந்தை இறப்பு விகிதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட இங்கிலாந்தில் அசாதரணம். இந்தியாவில் அது சாதாரணம். முதல் குழந்தை இறந்த பின்னர் அதே பாணியில் அதே வார்டில் லூசி லெட்பியின் டியூட்டியில் பிறந்த சில மாதங்களே ஆன சில குழந்தைகள் அடுத்தடுத்து மரணித்தன.
லூசி லெட்பி குழந்தைகள் வார்டில் பணியில் இருந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் 17 க்கும் மேற்பட்ட குழந்தை கொலை முயற்சிகள். 2015 ஜூன் மாதத்தில் மட்டும் லூசி லெட்பியின் டியூட்டியில் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் மரணம். செஸ்டர் மருத்துவமனையின் குழந்தைகள் வார்ட் மரணம் அசாதரணமானவை என உணர்ந்த மருத்துவர்களுக்கு இது கொலை என்ற சந்தேகம் எந்த இடத்திலும் வரவில்லை. காரணம் மிகச்சிறந்த செவிலிப் பெண்ணான லூசி லெட்பி மீது இருந்த நம்பிக்கை.
செஸ்டர் மருத்துவமனையின் தலைமை ஆலோசகர் டாக்டர் ஸ்டீபன் ப்ரேரி அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் ஏன் அசாதாரணமான முறையில் இறந்து போயின எனக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால், அவரால் எதனையும் புதிதாகக் கண்டறிய முடியவில்லை. இறந்த நான்கு குழந்தைகளும் கடுமையான நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தன. இவை நோய்க்குறைபாடுகள் என்ற அளவில் இந்த மரணங்கள் முடிக்கப்பட்டன. 2015- ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் 21 ஆம் தேதிக்குள் நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை நான்கு மணி வரை இந்தக் குழந்தைகள் இறந்திருக்கின்றன என்பதை மருத்துவக்குறிப்புகள் காட்டுகின்றன. அப்போது டியூட்டில் இருந்தவர் லூசி லெட்பி மட்டுமே!
டாக்டர் ப்ரேரி தன் சக ஊழியரும் மூத்த மருத்துவருமான ரவி ஜெயராமிடம் ஆலோசிக்கிறார். டாக்டர் ரவி ஜெயராம் இந்திய வம்சாவளி செஸ்டர் மருத்துவமனையின் புகழ் பெற்ற மருத்துவர் தொலைக்காட்சிகளிலும் மருத்துவ நிகழ்ச்சிகளில் கலந்து பேசுகிறவர் என்பதால் அவர் செல்வாக்கானவரும் கூட!
தனது ஐந்தாவது கொலையை லூசி லெட்பி 2015 ஆகஸ்டில் செய்கிறார். இரட்டைக் குழந்தைகளைக் கொல்ல முயல்கிறார். அதில் ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இன்னொரு குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உயிர் பிழைக்கிற்து.
மீண்டும் செப்டம்பரில் ஒரு கொலை முயற்சி. பச்சிளங்குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவுக்கு பவுடர் பாலைக் கொடுத்து கொல்ல முயல இறுதி நேரத்தில் அந்தக் குழந்தை காப்பாற்றப்பட அந்தக் குழந்தை உயிரோடு இருக்கிறது. ஆனால், நிரந்தரமான ஊனத்துடன்..
அடுத்த 2015- செப்டம்பரில் மீண்டும் ஒரு குழந்தையை வயிற்றில் ஊசி மூலம் காற்றைச் செலுத்திக் கொன்றார். பரிதாபமாக நள்ளிரவில் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.
கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகளுக்கு மேல் இறந்து விட அந்தக் குழந்தைகள் வார்ட் மேலாளர் எரியன் பாவெல் தனிப்பட்ட முறையில் அந்த மரணங்களை ஆய்வு செய்தவர் எல்லா மரணங்களும் லூசி லெட்பியின் டியூட்டில் நடந்துள்ளததைக் கண்டறிந்தார்.
தனிப்பட்ட ஆர்வத்தில் தலைமை மருத்துவர் டாக்டர்ப்ரேரிக்கு “இந்த நிலை ஆபத்தானது துரதிருஷ்டமானது. எல்லா மரணங்களும் லூசி லெட்பியின் டியூட்டில் நடந்துள்ளது” எனச் சுட்டிக்காட்டுகிறார்.
2015 ஜுன் மாதத்தில் நான்கு குழந்தைகளைக் கொன்ற லூசி லெட்பி ஜூலை மாதம் எந்தக் கொலைகளையும் செய்யவில்லை. ஆனால், மருத்துவ நிர்வாகம் இதைக் கவனிக்கிறது என்பதை அறிந்திருந்தார். ஆனாலும் தன் மீது எவருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதையும் உறுதி செய்தும் கொண்டார். மீண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளைக் கொல்ல முயல்கிறார்.
ஆகஸ்ட் மாதம் இரண்டு முயற்சிகள். செப்டம்பர் மாதம் 5 குழந்தைகளைக் கொல்ல முயல்கிறார். அக்டோபர் மாதம் 3 குழந்தைகளை கொல்ல முயல்கிறார்.
2015- நவம்பரில் டாக்டர் இயன் ஹார்வி குழந்தை இறப்பு விகிதம் செஸ்டர் மருத்துவமனையில் அதிகரித்து வருவதை அறிந்து அதில் கவனம் கொள்கிறார் அதே நாட்களில் நவம்பரிலும் ஒரு குழந்தையைக் கொல்ல முயன்றார்.
2015- ஜூன் மாதத்திலேயே சக தாதிகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களும் இந்த மரணங்கள் தொடர்பாக சந்தேகங்கள் வருகின்றன. அந்த ஆண்டு இறுதியில் இந்தச் சந்தேகங்கள் உறுதிப்படுகின்றன.
2016 மார்ச் வார்ட் மேலாளர் பாவெல் இந்த மரணங்கள் தொடர்பாக மீண்டும் மெயில் அனுப்புகிறார். ஆனால், இம்முறை அவர் தலைமைச் செவிலியர் அலிசன் கெல்லிக்கு அனுப்புகிறார். லூசி லெட்பி மீது நேரடியாக முதன் முதலாக சந்தேகம் கொண்டவர் வார்ட் மேலாளர் பாவெல்தான். அவர் அனுப்பிய முதல் மெயிலில் லூசி லெட்பி பற்றிக் குறிப்பிட்டும் தலைமை மருத்துவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
சரி இரவு டியூட்டியில்தான் இப்படி மரணங்கள் நடக்கின்றன என லூசி லெட்பியை 2016 ஏப்ரல் மாதம் இரவு டியூட்டியில் இருந்து பகல் டியூட்டிக்கு மாற்றுகிறார்கள். பகலோ இரவோ ஒவ்வொரு மாதமும் ஒன்று முதல் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் வரை லூசி லெட்பி கொலை செய்ய முயற்சிக்கிறார். அது ஜூன் 2016 வரை தொடர்கிறது. இறுதியாக 2016 ஜூன் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைக் கொல்ல முயல்கிறார். அதில் இரண்டு குழந்தைகள் இறந்து விடுகின்றன. நான்கு குழந்தைகள் காப்பற்றப்பட்டன.
அதே மே மாதம் டாக்டர் ப்ரேரியும் தலைமைச் செவிலியர் கெல்லிக்கு லூசி லெட்பியின் டியூட்டியில் இத்தனை குழந்தை இறந்தது தொடர்பாக மெயில் அனுப்பி, தன்னை சந்திக்கும்படிச் சொல்கிறார். தலைமைச் செவிலி கெல்லி அனுப்பிய பதில் மெயிலில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் நாம் எப்படி ஒரு செவிலியைச் சந்தேகிக்க முடியும் ? இந்த இறப்புகள் தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்.
இந்தக் கொலைகளை சர்வசாதரணமாகச் செய்த லூசி லெட்பி இரவு விருந்துகளுக்கு நண்பர்களுடன் சென்றார். அவருக்குப் பிடித்தமான சல்சா நடன விருந்துக்கும் சென்று வந்தார்.
2015-ஆம் ஆண்டே லூசி லெட்பி குழந்தைகளைக் கொன்று விளையாடத் துவங்கிய நிலையில் 2016 ஜூன் மாதத் துவக்கத்திலேயே குழந்தைகளை லூசி லெட்பி கொலை செய்வதாக அங்குள்ள தலைமை மருத்துவர்கள் முதல் கீழ் மட்ட பணியாளர்கள் வரை தெரிந்துவிட்டது. உயர்மட்ட அளவில் பரஸ்பரம் மெயில்களைப் பரிமாறிக் கொண்டனர். கீழ் மட்ட அளவில் கிசு கிசு போன்று இந்த மரணங்கள் பற்றியும் லெட்பி பற்றியும் பேசிக்கொள்கிறார்கள். சந்தேகம் உறுதியானாலும் யாரும் விசாரணைக்கு போலீஸை அழைக்கவில்லை. “நீங்கள் ஒரு கொலைகாரிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள்” என்று சக ஊழியர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது. அனைவரும் சுதாரித்துக் கொள்வதற்குள் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது.
தலைமைச் செவிலியர் கெல்லி மருத்துவ இயக்குநர் ஹார்விக்கு “ஒரு செவிலியர் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம். இது பற்றி விசாரிக்க வேண்டும்” என வெளிப்படையாகவே 2016 ஜூன் மாதம் மீண்டும் மெயில் அனுப்புகிறார்.
பல்வேறு மெயில் பரிமாற்றங்களுக்குப் பின்னர் கடந்த ஓராண்டில் அதிகரித்த மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்யலாம் என்ற முடிவைத் தலைமை மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள். அதுவரை லூசி லெட்பியைக் குழந்தைகள் வார்டில் இருந்து அகற்றி வேறுபணிகளில் ஈடுபடுத்த முடிவும் எடுக்கிறார்கள்.
2016 ஜூன் மாதத்தில் ஒரு வார கால விடுமுறையில் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல தீர்மானித்த லூசி விடுமுறையில் செல்வதற்கு முன்பு ஒரு குழந்தையைக் கொல்ல முயல்கிறார். அந்தக் குழந்தை கடைசி நேரத்தில் காப்பாற்றப்படுகிறது. நண்பர்களுடன் சுற்றுலா சென்ற லூசி ஒரு வார விடுமுறைக்குப் பின்னர் அதே குழந்தைகள் வார்டில் பணியைத் தொடர்கிறார். ஜூன் மாதம் 26-ஆம் தேதி பணிக்குத் திரும்பும் லூசி லெட்பி பணியில் சேர்ந்த சில மணி நேரங்களுக்குள் இரண்டு குழந்தைகளைக் கொல்ல முயல்கிறார். அதில் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்து போகிறது. ஒரு குழந்தை இறுதிச் சிகிச்சையில் காப்பாற்றப்படுகிறது.
மறு நாள் 24-ஆம் தேதி ஒரு குழந்தையைக் கொல்கிறார். அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. 15-ஆம் தேதி ஒரு குழ்ந்தையைக் கொல்ல முயல்கிறார். விடுமுறைக்குச் சென்று வந்த மூன்றே நாட்களில் மட்டும் நான்கு குழந்தைகளைக் கொல்ல முயன்று அதில் இரண்டு இறந்து விடுகிறது. அவர் இறுதியாக வார்டில் பணி செய்த கடைசி மாதமான ஜூன் மாதத்தில் மட்டும் 6 குழந்தைகள் மீது கொலை முயற்சியை மேற்கொண்டார்.
சீனியர் மருத்துவர் ப்ரேரி ஜூன் மாத மரணங்களையடுத்து நர்சிங் இயக்குநருக்குத் தொலைபேசி செய்து உடனடியாக லூசி லெட்பியைக் குழந்தைகள் வார்டில் இருந்து அப்புறபப்டுத்துமாறு சொல்கிறார். லூசி லெட்பி எதுவுமே நடக்காதது போன்று ”நான் எப்போது மீண்டும் குழந்தைகள் வார்டில் பணியமர்த்தப்படுவேன்” எனக் கேட்கிறார். குழந்தைகள் வார்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட லூசி லெட்பியை வேலையை விட்டு நிர்வாகம் அனுப்பவில்லை. அவருக்கு வேறு பணிகளை ஒதுக்கியது.
செஸ்டர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் ரவி ஜெயராம் இந்திய வம்சாவளியினரான அவரும், டாக்டர் ஹர்வியும் ,ப்ரேரியும் இப்போதுதான் நிலமையின் தீவிரத்தை உணர்கிறார்கள். மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்று நடந்திருப்பதாக அவர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால், லூசி லெட்பிதான் இந்த மரணங்களின் சூத்திரதாரி என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் முறையாக விசாரணை நடத்தக் காவல்துறையை அழைக்கலாமா என்பது பற்றி ஆலோசிக்கிறார்கள். காவல்துறை வந்தாலோ, லூசி லெட்பியை விசாரித்துப் பின்னர் அவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்தாலோ அது மருத்துமனையின் நற்பெயருக்குக் களங்கத்தை உருவாக்கி விடும் என்று நினைத்துத் தயங்குகிறார்கள்.
கடந்த ஓராண்டில் நடந்த மரணங்கள் தொடர்பாக உள்வட்ட விசாரணையை நடத்துமாறு உத்தரவிடுகிறது மருத்துவமனை நிர்வாகம். செப்டம்பர் மாதம் லூசி லெட்பி அந்த மையத்தின் விசாரணைக்கு ஆஜராகிறார்.
லூசி லெட்பி மருத்துவமனையின் சுகாதரக் குறைபாடுகளே குழந்தைகள் மரணத்துக்குக் காரணம் என்கிறார். விசாரணை நடந்து வந்த இதே காலகட்டத்தில் மருத்துவர்கள் இன்னொரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். அது லூசி லெட்பி குழந்தைகள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் குழந்தைகள் மரணம் வெகுவாகக் குறைந்தது. அதிலும் குறிப்பிட்ட ஒருவரின் டியூட்டியில் மீண்டும் மீண்டும் மரணங்கள் நிகழவே இல்லை.
2017 மே 2-ஆம் தேதி தலைமை மருத்துவர் பரேரியின் வேண்டுகோளை ஏற்றுத் தலைமை நிர்வாகி டோனி காவல்துறையை முறையான விசாரணைக்கு அழைக்கிறார்.
2018- ஜூலை மூன்று அதிகாலை 6 மணிக்கு கதவு தட்டப்படுவதைக் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த லூசி லெட்பி கதவைத் திறந்த போது காவலர்கள் நின்றார்கள். கேஷுவலாக அவர்களை வீட்டுக்குள் வரச் சொல்லி வரவேற்ற லூசி லெட்பியை சிறிது நேரத்தில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது செஸ்டர் நகரக் காவல்துறை. போலீசார் கைவிலங்கிடும் போதோ அழைத்துச் செல்லபப்டும் போதோ எதிர்ப்பு எதனையும் லூசி தெரிவிக்கவில்லை.
2015 ஜனவரி முதல் 2016 ஜூன் வரை செஸ்டர் மருத்துவமனை லூசி லெட்பி பராமரிப்பின் போது குழந்தைகள் மரணித்தது தொடர்பாக காவல்துறை விசாரித்த போது, “ஆமாம் அங்கு நிறைய மரணங்கள் நடந்தன. ஆனால், நான் அங்கு இருந்தேன் என்பதற்காக அந்த மரணங்களோடு என்னை தொடர்புபடுத்துகிறார்கள்” என்றே மீண்டும் மீண்டும் சொன்னார்.
“இந்த மரணங்கள் தொடர்பாகக் கவலை கொள்கிறாயா?” என்ற கேள்விக்கு சாதுவான குரலில் “ஆம்” என்று ஒற்றை வரியில் பதில் சொல்கிறார்.
லூசி லெட்பி குழந்தைகளைக் கொன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பிரிட்டன் ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் ஆனது. லூசி லெட்பி கைது செய்யப்படும் வரை பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது கூடத் தெரியாது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தை மருத்துவக் குறைபாடு காரணமாக இறந்ததாகவே நினைத்தார்கள். சிலருக்குச் சந்தேகம் இருந்தாலும் அதை எப்படி யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் இருந்தனர்.
இத்தனை கொலைகளைச் செய்த போதும் ஏன் எவருக்கும் லூசி மீது சந்தேகம் வரவில்லை என்பது முக்கியமான கேள்வி. ஒவ்வொரு முறை குழந்தைகளைக் கொன்ற போதும் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ஆண்டு தோறும் அந்த குழந்தையின் நினைவாக நினைவு அஞ்சலிக் குறிப்புகளை தவறாமல் அனுப்பியதோடு அவர்களிடம் கனிவோடும் ஆறுதலாகவும் நடந்து கொண்டார் லூசி. அடுக்கடுக்கான ஆதாரங்களோடு குழந்தையை இறந்தவர்கள் வந்து சாட்சியம் சொன்ன பின்னர்தான் லூசி மீதான முடிச்சு இறுகியது.
லூசி லெட்பி கைது செய்யப்பட்ட போது ஆண்டுக்கு 75 ஆயிரம் பவுண்டுகள் ஊதியம் பெரும் தாதியாகவே கைது செய்யப்பட்டார். இந்தியப் பணத்துக்கு சுமார் 30 லட்ச ரூபாய் அவரது ஊதியம். கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவரை செஸ்டர் மருத்துவமனை பணி நீக்கம் செய்தது. அதுவரை விஷயம் தெரிந்தால் தற்கொலை செய்து கொள்வார் என்பதால் காவல்துறையுடன் இணைந்து அனைத்தையும் ரகசியமாகவே செய்து வந்தது செஸ்டர் மருத்துவமனை.
லூசியின் கைதுக்குப் பின்னர் செஸ்டர் மருத்துவமனையின் பெயர் உடைந்து நொறூங்கிப் பொனது. சில மருத்துவர்கள் ஓய்வை அறிவித்து விட்டுப் பணியில் இருந்து சென்று விட்டார்கள்.
லூசி லெட்பே வேலைக்குச் சேர்ந்த பின்னர் 2016-ஆம் ஆண்டில் செஸ்டர் நகரத்தில் இருந்து சற்றுத் தொலைவில் சுமார் இரண்டு லட்சம் பவுண்டுகளைச் செலவழித்து சொந்தமாக வீடு ஒன்றை வாங்கினார். அதைத் தனது கனவு இல்லம் போல ஜோடித்திருந்தார்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் லூசியின் வீட்டில் சோதனை செய்த காவல்துறை லூசியின் வீட்டைக் கண்டு மிரண்டு போனது. காரணம் ஒரு சீரியல் கில்லரின் வீடு அழுக்காக நாற்றமாக இருக்கும் என நினைத்துக் காவல்துறை சென்றது. ஆனால், அது குழந்தைகள் வாழும் வீடு போன்று இருந்தது. அலங்கரிக்கப்பட்ட அழகிய வீடாக அது இருந்தது லூசி லெட்பியைப் போலவே.
நிறைய பொம்மைகளோடுதான் படுக்கையில் உறங்கும் லூசி லெட்பேவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அப்படி அவர் மறைத்து வைத்திருந்த ரகசிய டைரி ஒன்றை காவல்துறை கைப்பற்றியது அதில் 2016 திவீரமாக கொலைகளைச் செய்த காலத்தில் “எனக்கு வாழத் தகுதியில்லை. அவர்களைப் பராமரிக்கும் அளவுக்கு நான் நல்லவள் அல்லள். நான் பயங்கரமானவள். நான் இதைச் செய்தேன். நான் மிக மோசமானவள்” என எழுதியிருந்தார். லூசி லெட்பியின் வழக்கில் மிக முக்கிய ஆவணமானது இதுதான்.
பல ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் லூசி லெட்பியைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தண்டனையை அறிவிப்பதாகச் சொன்னது. இந்தத் தீர்ப்பைக் கேட்க குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், ஏராளமான வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் நீதிமன்றத்துக்கு வந்த போதும் லூசி லெட்பி தீர்ப்பைக் கேட்க நேரில் வரவில்லை.
” இது போன்ற தீர்ப்புகளில் குற்றவாளிகள் கட்டாயம் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் தனக்கில்லை” என்று சொன்ன நீதிபதி லூசி லெட்பேவுக்கு மரணம் வரை சிறையில் இருக்கும் கடுந்தண்டனையை அளித்தார்.
மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுதான் பிரிட்டன். ஒருவேளை மரணதண்டனை இங்கிலாந்தில் இருந்தால் நிச்சயம் லூசி லெட்பிக்கு மரணதண்டனைதான் கிடைத்திருக்கும். தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜேம்ஸ் காஸ் லூசி லெட்பேயின் கொலை நோக்கங்களை விவரித்தார். ஈவிரக்கமின்றிக் குழந்தைகளைக் கொன்றுள்ள லூசி ஒரு குழந்தையை முதலில் கொல்ல முயல்கிறார். அந்தக் குழந்தை பிழைத்து விட சில நாட்கள் கழித்து அந்தக் குழந்தையை கொன்றதை எல்லாம் சுட்டிக்காட்டினார். நீங்கள் செய்த குற்றங்களுக்காக உங்களுக்குக் குற்ற உணர்ச்சியே இல்லை என்பதையும் சொன்ன நீதிபதி காஸ் 14 ஆயுள் தண்டனையை லூசிக்கு வழங்கியிருக்கிறார். 7 கொலைக்குற்றம், 7 கொலை முயற்சிகள் என மொத்தம் 14 குற்றங்கள் நிரூபிக்கப்பட அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆயுள் என 14 ஆயுள் தண்டனையை வழங்கியிருக்கிறார்.
பிரிட்டன் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் படி ஒரு ஆயுள் தண்டனை என்பது 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.ஆனால் லூசி சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்க வேண்டி வரும். தவிரவும் இந்தச் சிறைத் தண்டனைக்காலத்தில் லூசிக்கு பரோல் உரிமைகள் எதுவும் பொருந்தாது என்றும் கடுமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பின் பின்னர் செஸ்டர் மருத்துவமனையில் நடந்த குழந்தைக் கொலைகள் தொடர்பாகப் பல மர்மங்கள் நீடிக்கின்றன.
எப்படிக் கொன்றார்? எத்தனைக் குழந்தைகளைக் கொன்றார்? ஏன் கொன்றார் என எந்தக் கேள்விக்கும் உருப்படியான பதில் இல்லை என்றே பிரிட்டன் ஊடகங்கள் நினைக்கின்றன.
எப்படி ஒரே ஆண்டில் இத்தனைக் குழந்தைகளைக் கொன்றார் என்ற கேள்விதான் மருத்துவ உலகையே அச்சுறுத்துகிறது. பல குழந்தைகளுக்கு ஊசியின் மூலம் இன்சுலினை ஏற்றிக் கொலை செய்திருக்கிறார்.
இன்னும் சில குழந்தைகளுக்கு ஊசி மூலம் வயிற்றில் காற்றை செலுத்திக் கொன்றிருக்கிறார்.சில குழந்தைகளுக்கு முச்சு முட்டும் அளவுக்குப் பாலூட்டிக் கொன்றிருக்கிறார்.இன்னும் சில குழந்தைகளின் தொண்டையில் ஏதேனும் பொருளை செலுத்தி அவர்களின் மூச்சுகுழாயை சிதைத்துக் கொன்றிருக்கிறார்.இவை எல்லாம் சாத்தியமா என்பதுதான் அனைவரையுமே அச்சுறுத்தும் கேள்வியாக இருக்கிறது.தோற்றத்தில் அப்பாவி போன்று இருக்கும் லூசி லெட்பி என்ன காரணத்திற்காக இதைச் செய்தார் என்பதுதான் இன்னும் தெளிவிடப்படாத பகுதி.செஸ்டர் மருத்துவமனையில் பணியாற்றும் திருமணமான ஒரு மருத்துவர் மீது லூசி லெட்பிக்கு காதல் ஏற்பட அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இதைச் செய்திருக்கிறார் என்பது ஒரு பார்வை. அந்த மருத்துவருடன் லூசி லெட்பி கொஞ்சல் மொழியில் பேசிய வாட்சப் சாட்டுகளும் நீதிமன்றத்தில் சமர்க்கப்பட்டன.
அதாவது லூசி லெட்பி குழந்தைகளைச் சிதைத்து விட்டு அவை உயிருக்குப் போராடும் போது சிகிச்சையளிக்க வேண்டிய இடத்தில் இருந்தவர் அந்த மருத்துவர். அவர் மீதுதான் லூசி காதல் கொண்டிருந்ததாக போலீஸ் கூறுகிறது. அந்த மருத்துவர் வந்து குழந்தைகளைக் காப்பற்ற சிகிச்சையளிக்கும் போது அவரோடு இருக்கும் அந்த நேரத்துக்காகவும் அவரோடு ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ளவுமே இது போன்று செய்திருக்கலாம் என்கிறது போலீஸ். அப்படி என்றால் குழந்தைகளைக் கொல்வது லூசி லெட்பியின் நோக்கம் இல்லையா? திவீர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு ஏதேனும் காயத்தை அல்லது உடல் சுகவீனத்தை ஏற்படுத்தி மருத்துவரை அழைப்பதுதான் லூசியின் நோககமா என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.
ஆனால், இது ஒன்று மட்டுமே காரணமாக இல்லை என்கிறார்கள் உளவியலாளர்கள் இது போன்றோர் கொலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் படியே கொலை செய்ய எது வசதியாக இருக்கும் என்று ஒன்றைத் தெரிவு செய்கிறார்கள். லூசி லெட்பி உடல் நலம் குன்றிய பிஞ்சுக் குழந்தைகள் வார்டை தெரிவு செய்தது கொலை செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
லூசி இப்போது சிறையில் இருந்தாலும் அவர் இந்த நிமிடம் வரை இந்தக் குற்றங்களை ஒத்துக் கொள்ளவில்லை. தங்களின் ஒரே மகள் கொலைக்குற்றவாளியாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது ஒவ்வொரு நீதிமன்ற அமர்வுக்கும் பெற்றோர்கள் வந்து சென்றனர்.புரிந்து கொள்ள முடியாத மர்மங்களுடனும், ஓராயிரம் கேள்விகளுடன் இப்போதைக்கு லூசி லெட்பே சிறைக்குச் சென்று விட்டார். லோ நியூட்டனில் உள்ள கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கொண்ட சிறையில் கடுமையான குற்றங்கள் புரிந்தவர்களுடன் அடைக்கப்பட்டுள்ளார் லூசி லெட்பே.
பிரிட்டனின் வரலாற்றில் இயன் பிராடி, மைரா ஹிண்டலி, சாரா எவரார்டின், வெய்ன் கூசன்ஸ், டேவிட் புல்லர் என பல சீரியல் கில்லர்கள் பேசப்பட்டாலும் பிரிட்டனின் நவீன வரலாற்றில் பெவர்லி ஆலீட்டையும் லூசி லெட்பியையும்தான் ஒப்பிடுகிறார்கள். காரணம் இருவருமே செவிலிகள். லூசி போன்றே குழந்தைகள் வார்டில் பணியாற்றிய பெவர்லி நான்கு குழந்தைகளைக் கொன்றமைக்காக 13 ஆயுள் தண்டனையைப் பெற்றார். சிறையில் வாழ்வைக் கழிக்கும் பெவர்லிக்கு இப்போது 54 வயதாகிறது. பிரிட்டனின் பல ஊடகங்கள் லூசி லெட்பேயை காப்பிகேட் என்று எழுதுகிறார்கள். காரணம் பெவர்லி ஆலிட்டும் குழந்தைகளுக்கு இன்சுலின் கொடுத்தும் இன்ஜெக்சன் மூலம் காற்றைச் செலுத்தியும் கொன்றதால் அவரைக் காப்பியடித்து லூசி லெட்பே கொன்று விட்டதாகக் கூறுகிறார்கள்.மிகச்சிறந்த குழந்தைப் பருவத்தோடு வாழ்வைத் துவங்கி சிறந்த பள்ளிமாணவியாகச் சிறகடித்துப் பறந்த லூசி லெட்பி, பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பிலும் பின்னர் பயிற்சி மாணவியாகவும் தென் வேலையில் படு சுட்டியாகவே இருந்துள்ளார்.
எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நினைவுகளில் வாழ்க்கை தடம் புரள்வது போல ஒரு புயல் லூசி லெட்பேயையும் புரட்டிப் போட்டு விட்டது. தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செய்தாரோ இல்லையோ அவர் செய்திருப்பது உலகக் கொலை வரலாற்றில் மாபெரும் குற்றம்.காரணம் ஒரு குழந்தை வார்ட் என்பது ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொடுக்கும் உயர்ந்த உன்னதமான இடம். ஒவ்வொரு நர்சும் ஒரு தாய். அதனால்தான் அவர்களைச் செவிலித்தாய் என்கிறோம். செவிலித்தாய் லூசி லெட்பே தோற்றதும் அந்த இடத்தில்தான்…!