1997 ஜூன் மாதம் 13ஆம் நாள் தெற்கு தில்லியில் உள்ள உபகார் என்ற தியேட்டரில், படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் இறந்துவிட்டனர். அந்தத் தீ விபத்தில் தங்கள் இரு குழந்தைகளையும் பறிகொடுத்த தம்பதியினர் நீதி கேட்டு இருபது வருடம் போராடுகிறார்கள். இருபது வருடப் போராட்டத்திற்குப் பிறகு தீர்ப்பு வருகிறது. அந்தத் தீர்ப்பைக் கேட்டுவிட்டு அந்த அம்மா சொல்கிறாள்:
“59 பேர் செத்ததுக்குப் பின்னால இந்தக் கோர்ட், இப்படியொரு தீர்ப்ப கொடுத்திருக்கு! அப்பிடின்னா இத என்ன சொல்றதுன்னே தெரியல? இது ஒரு Futile exercise, ஆனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இந்தக் கோர்ட் இன்னைக்கி தெளிவா நிருபிச்சிருக்கு! பணபலமும் ஆள்பலமும் இருக்குறவங்களுக்கு மட்டும்தான் இந்த நாட்ல special rights இருக்குன்னு சொல்லியிருக்கு. இங்க ஒரு குழந்தைய பலி கொடுத்தா அதுபத்தி யாருக்கும் கவல கிடையாது. அதுக்கு தண்டனை கொடுக்க மாட்டாங்க. விடுதலை குடுத்துருவாங்க. இந்தக் கேஸுக்காக இருபது வருஷத்த கழிச்சிருக்கேன். ஒரு கேஸ்ல தீர்ப்பு வர்றதுக்கு உலகத்துல எந்த கோர்ட் 20 வருஷம் time எடுத்துருக்கு. நான் உண்மைய சொன்னா கோர்ட்ட அவமதிக்கிறேன்னு எல்லாரும் சொல்வாங்க. கோர்ட்டுக்காகச் செலவழிக்கிற நேரத்துல நான் என் கைல ஒரு Gun எடுத்திருக்கலாம்…” என்கிறார்.
ஒரு காலத்தில், ஐரோப்பிய நாடுகளில் ஒருவர்மீது குற்றம் சாற்றப்பட்டால், அவர் குற்றமற்றவர் என்பதை நிருப்பிக்க நெருப்பாற்றில் நடந்துகாட்ட வேண்டும். இதற்கு Trial by fire என்று பெயர். நம்மூரிலும் குற்றம் சாற்றப்பட்டவர் கையில் சூடத்தைப் பற்றவைத்து ஏந்துதல், சூடான இரும்புக் கம்பியைப் பிடித்தல், கொதிக்கும் நெய்யில் கைவிட்டு குற்றத்தை மறுத்தல் போன்ற முறைகள் இருந்துள்ளன. நன்னூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர் பெயர் கூழங்கைத் தம்பிரான். இவர் சைவ மடத்தில் இருந்தபோது, அவர்மீது பழிசொல்ல, கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அந்தப் பழிச்சொல்லை அவர் மறுத்ததாகவும், அதனால் அவருடைய கைகள் கூழ் போல ஆயின என்றும், அதனால் அவருக்குக் கூழங்கைத் தம்பிரான் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர்.
ஒரு காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் நெருப்பாற்றில் நடக்க வேண்டும். இப்போது பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகப் போராடும்போது நெருப்பாற்றில் நடக்கவேண்டியதாகிறது. துயரங்கள் சூழ்ந்த கடுமையான நெருக்கடிக்கிடையிலும் நீதிக்காகப் போராடுவதை ஆங்கிலத்தில் Trial by fire என்பர். இந்தப் பெயரில் ஆங்கிலத்தில் ஒரு படமும் வந்திருக்கிறது.
இந்தியிலும் Trial by fire என்ற வெப் சீரிஸ் ஜனவரி மாதம் 2023இல் வெளிவந்துள்ளது. தங்கள் இரண்டு குழந்தைகளை நெருப்புக்குப் பலிகொடுத்த பின்பு, நீதி கேட்டுப் போராடும் தம்பதியர் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள். நீதி வழங்க வேண்டிய நீதிமன்றம் அவர்களிடம் சமரசம் மட்டுமே பேசுகிறது. நீதிக்கும் சமரசத்திற்கும் உள்ள வேறுபாட்டை நீதிமன்றங்களே புரிந்துகொள்ளவில்லை. நீதிமன்றங்கள் காலம் தாழ்ந்த தீர்ப்புகளைத் தருகின்றன. அந்தத் தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுட்காலத் தண்டனையாகவே இருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு உணர்வுகளை நம்மிடையே கடத்துகிறது Trial by fire, அதன் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சேகர் கிருஷ்ணமூர்த்தி – நீலம் கிருஷ்ணமூர்த்தி இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். சற்றே வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தில்லியின் நொய்டாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து வணிகம் செய்துவருகிறார்கள். சேகரின் பூர்விகம் தமிழ்நாடு. அவருடைய தந்தையார் பிகாரில் இருந்தவர். பின்னர் அவர்கள் குடும்பம் தில்லிக்குக் குடிபெயர்ந்திருக்கிறது. நீலம் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சேகர் – நீலம் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவள் பெயர் உன்னத்தி, வயது 17. இளையவன் பெயர் உஜ்ஜ்வல், வயது 13.
பெற்றோரிடம் சிணுங்கும் பிள்ளைகள். புத்திசாலிப் பிள்ளைகளின் செல்லக் கோபங்களை ரசிக்கும் பெற்றோர். கொஞ்சம் கண்டிப்பு, நிறைய அன்பு என வாழும் அன்பான குடும்பத்தில் 1997 ஜூன் மாதம் 13ஆம் நாள் மிக இயல்பாக நுழைகிறது. அன்றுதான் ஜே.பி. தத்தா இயக்கியத்தில் உருவான பார்டர் படம் வெளிவருகிறது. முதல் நாள் பகல் காட்சிக்குப் பிள்ளைகள் இருவருக்கும் டிக்கெட் புக் செய்கிறார்கள். உண்மையில் தங்கள் பிள்ளைகளின் இறுதி நாளுக்கு டிக்கெட் வாங்குகிறார்கள் என்பதை அன்று அவர்கள் உணரவில்லை.
தெற்கு தில்லியில் உள்ள உபகார் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது மிகப் பெரிய தீ விபத்து ஏற்படுறது. இந்தத் தீ விபத்தில் தியேட்டரின் பால்கனியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் 59 பேர் இறந்துவிடுகின்றனர். தங்களுடைய இரண்டு குழந்தைகளும் என்ன ஆனார்கள் என சேகரும் நீலமும் தேடி அலைகிறார்கள். தியேட்டரைச் சுற்றி உள்ள பகுதிகள் எல்லாம் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. எல்லா இடங்களிலும் அழுகை, சத்தம், பதற்றம் நிறைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் சிலரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். சிலரை சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். சேகர் ஒரு மருத்துவமனைக்கும், நீலம் ஒரு மருத்துவமனைக்கும் பிள்ளைகளைத் தேடி ஓடுகிறார்கள்.
மிக இயல்பாகத் தொடங்கிய அந்த நாள், முடிவில் ஒரு மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதுபோல அவர்கள் வாழ்வின் எல்லாக் கனவுகளையும் அழித்துவிட்டுச் சென்றுவிடுகிறது. பிள்ளைகளை அடக்கம் செய்து வீட்டிற்கு வந்த பிறகும்கூட பிள்ளைகள் அவர்களின் எண்ணங்களைவிட்டு நீங்காமல் இருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குமேல் இனி அழுது பயனில்லை என நினைக்கிறாள் நீலம். அவள் தன் அழுகையை அடக்குகிறாள்; கேசத்தைக் குறைத்துக்கொள்கிறாள்; 1997 ஜூன் மாதம் 13ஆம் நாள் என்ற அந்த மர்மமான நாளில் என்னதான் நடந்தது என்பதைத் தேடத் தொடங்குகிறாள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றே ஆகவேண்டும் என முடிவு செய்கிறாள். இப்படித்தான் ஒரு நாள் ஒரு குடும்பப் பெண்ணைப் போராளியாக மாற்றுகிறது.
”தெற்கு தில்லியில் உள்ள உப்கார் திரையங்கில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட அரைமணி நேரத்திற்குப் பிறகுதான் தீயணைப்பு வண்டி சென்றுள்ளது. திரையரங்குக்கு அருகில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் பழுதடைந்துள்ளதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது” என்று தொலைக்காட்சிச் செய்தியில் கூறுகிறார்கள். தொலைக்காட்சியில் இடையிடையே காட்டும் காட்சிகளில், “நடந்த விபத்துக்குத் தியேட்டர் ஓனர்தான் பொறுப்பு’ன்னு நான் சொல்வேன்” என ஒரு தீயணைப்பு வீரர் சொல்கிறார். “தியேட்டர் உரிமையாளர்கள் மிகவும் அலட்சியமாக இருந்தார்கள்” எனப் பொதுமக்களும் தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்.
உபகார் தியேட்டரின் உரிமையாளர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. தில்லியில் பாதி இடத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆசியாவின் மிகப் பெரிய Property Developers. தில்லியில் எல்லோரும் வியக்கும்படியாக மிகப் பெரிய Mall ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் கோபால் அன்சால் மற்றும் சுஷீல் அன்சால்.
”Victims நிறையபேர் பால்கனியில் இருந்தவர்கள்” என்று செய்தித்தாளிலும் எழுதியிருக்கிறார்கள். நீலத்திற்குச் சில பத்திரிகையாளர்களைத் தெரியும். முதல் கட்டமாகச் சித்தார்த் என்பரிடம் உதவி கேட்கிறாள். அதில் தீ விபத்து நடந்த நாளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாவற்றையும் பார்க்கிறாள். அதில் உபகார் மேனேஜர் பணத்தோடு தியேட்டரிலிருந்து வெளியேறும் காட்சியைப் பார்க்கிறாள். தங்கள் இரண்டு பிள்ளைகளோடு அர்ஜூன் என்பவனும் அன்று படத்திற்குப் போனான். ஆனால் அவன் இறக்கவில்லை. அவனிடம் சென்று விசாரிக்கிறாள்.
அவன், “உஜ்ஜ்வல் பாப்கார்ன் மிஷின் பக்கத்துல எனக்காக வெயிட் பண்றதா சொன்னான். படம் ஆரம்பிச்சிருச்சு. நான் உள்ள போறதுக்கு ரொம்ப ட்ரை பண்ணேன். ஆனா door lock பண்ணியிருந்தது. எதுக்குன்னு தெரியல. மேல அவங்க வெளியில தாழ்ப்பாள் போட்டிருந்தாங்க. Counter-கிட்ட போனேன். அங்கயும் யாரும் இல்ல” எனச் சொல்கிறான்.
இதைக் கேட்டு வந்த நீலம் தன் கணவன் சேகரிடம், “door-ர lock பண்ணிருந்தாங்களாம் சேகர். நம்ம பசங்க உள்ள மாட்டியிருந்தாங்களாம்” எனச் சொல்லி அழுகிறாள். சேகர் நேரடியாக அன்சால் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று இறந்துபோன தன் பிள்ளைகளுக்காக நியாயம் கேட்கப் பார்க்கிறான். ஆனால் அந்த அலுவலகத்திலிருந்த செக்யூரிட்டிகள் அன்சால் சகோதரர்களைப் பார்க்கவிடாமல் சேகரை அடித்துப் படுக்க வைத்துக் கைகால்களைப் பிடித்து அழுத்திக்கொள்கிறார்கள்.
அன்சால் சகோதரர்களை எதிர்த்து எந்த வழக்கும் பதிவு செய்யமுடியாது. தில்லியில் இருக்கும் வழக்கறிஞர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அன்சால் நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அன்சால் சகோதரர்கள், “தெரியாமல் தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அவர்கள் வருத்தப்படவுமில்லை. ‘தப்பு செய்துவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காமல் இருக்கும் அன்சால் சகோதரர்களுக்கு அதன் வலி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதைக் காட்ட வேண்டும்’ என்று சேகரும் நீலமும் முடிவு செய்கிறார்கள்.
உண்மையில், சேகர் – நீலம் தம்பதியினர் அன்சால் சகோதரர்கள்மீது வழக்கு தொடுப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. “மீறி வழக்குத் தொடர்ந்தாலும் அவர்கள் நிச்சயம் வெல்வதற்கான வாய்ப்பே இல்லை” என்று எல்லோரும் எச்சரிக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மூத்த வழக்கறிஞர் துல்சி என்பவர் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்கிறார். முதலில் ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் வழக்கு தொடர்ந்தால் வெற்றிபெறுவதற்குக் கூடுதலான வாய்ப்பிருக்கிறது என்ற உத்தியைச் சொல்லிக்கொடுக்கிறார். அதன்படி உப்கார் தியேட்டர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் இணைந்து Association of the Victims of the Uphaar Tragedy – AVUT என்ற அமைப்பைத் தொடங்கும்படிச் சொல்கிறார்.
அன்சாலின் வழக்கறிஞர்கள் AVUT-இல் உறுப்பினர்களைச் சேரவிடாமல் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுக்கிறார்கள். புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிதான் அன்சால் சகோதரர்களுக்காக வாதாடியுள்ளார். படத்தில் அவர் பெயரை கேஸ்வானி என மாற்றியிருக்கிறார்கள். இதற்கிடையில், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள். தீ விபத்து நடந்த இடத்தை முறைப்படி ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்கிறார்கள். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் விபரங்களைச் சொல்கிறார்கள்:
”தியேட்டர் கட்டியதன் ஒவ்வொரு மட்டத்திலும் மிதமிஞ்சிய அலட்சியத்தைக் காட்டியிருக்கிறார்கள். தீ பிடித்தது என்று சொல்லப்படுகிற ட்ரான்ஸ்ஃபார்மர் காலையில் இருந்தே நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்திருக்கிறது. தியேட்டர் நிர்வாகம் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் இருந்திருக்கிறது. அசம்பாவிதம் நடப்பது அந்த தியேட்டருக்குப் புதியதில்லை. எப்போதும் ஏதாவது சிறு சிறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. பார்டர் படம் வெளியான அன்று தியேட்டர் ஹவுஸ் ஃபுல். பொய்யான அனுமதி பெற்று ஆட்கள் வெளியேறும் வாசலில் அலுவலகத்தை வைத்திருக்கிறார்கள். 900 பேர் அமர்ந்து சினிமா பார்க்கக்கூடிய அவ்வளவு பெரிய திரையரங்கில் இரண்டே இரண்டு Fire extinguishers-தான் வேலை செய்திருக்கிறது. Public address system, Exit sign, Sprinkler ஆகிய அனைத்தும் செயலிழந்திருக்கின்றன. தீப்பற்றிய சிறிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது யாராலும் எதையும் பார்க்க முடியவில்லை. திரையரங்கம் சுடுகாடாக மாறியிருக்கிறது”.
நீலம் ஒரு மத்திய மந்திரியின் கல்யாண விருந்துக்குச் சென்று உப்கார் தீ விபத்து குறித்து மந்திரியிடம் கேட்கிறாள், “பிரதமர் என்ன சொல்றார்? Just ‘வருத்தம்’ன்ற வார்த்தைகூட அவர் வாயிலர்ந்து வரலையே! பாதிக்கப்பட்ட குடும்பத்து மேல அவருக்கு அக்கறை இருக்கான்’னே தெரியலையே. அவரோட மௌனம் அன்சாலுக்கு support பண்றதுக்கான அடையாளமா?” என்று கேட்கிறாள். ஒரு திருமணத்தில் இப்படிக் கேட்பதால் அந்தச் செய்தி அங்கிருந்த எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.என்றாலும் நீலம் சோர்ந்துபோகிறாள். “அவுங்க இதுல்ல இருந்து தப்பிச்சிருவாங்க’ன்னு நினைக்கிறேன். நாம சொல்றத ஒருத்தர்கூட கேட்க விரும்பல” என வருத்தப்படுகிறாள். சேகர் வீடுவீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறான். பெரும்பாலும் ஏமாற்றங்களையே சந்திக்கிறான். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் பின்வாங்கவில்லை. “இந்த அஸோசியேசன்தான் நம்ம Army. நம்மால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறாங்க. ஒருத்தரோட பலத்த இன்னொருத்தருக்குக் குடுக்கலாம். அதுதான் அவங்களுக்கு மிகப் பெரிய பலவீனமா இருக்கும்” என்கிறான்.
அவர்கள் நம்பிக்கையும் போராட்டமும் வீணாகவில்லை. தியேட்டர் தீவிபத்தில் குடும்பத்தையே பலிகொடுத்த கிஸன் பால் என்பவர் அந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்கிறார். ஒரே ஒரு மகனைத் தீயில் பலிகொடுத்த மிஸஸ் கோயல் சேருகிறாள். மெல்ல பதினெட்டு உறுப்பினர்கள்வரை சேர்ந்தபிறகு முதல்கட்டத் தீர்ப்பு இவர்களுக்குச் சாதகமாக வருகிறது. சுஷில் அன்சாலோடு சேர்த்து பன்னிரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் கைது செய்யப்பட்ட அதே வேகத்தில் வெளியே வந்துவிடுகிறார்கள்.
வழக்கமாகப் பாதிக்கப்பட்டவர்கள்தாம் சிபிஐ-க்கு வழக்கை மாற்றுமாறு கேட்பார்கள். ஆனால் இந்த வழக்கில் அது தலைகீழாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைக் கேட்காமலேயே வழக்கை சிபிஐ-க்கு மாற்றுகிறார்கள். அதன்பிறகு வழக்கு ஆமை வேகத்தில் போகிறது. ஆவணங்கள் சிதைக்கப்படுகின்றன. “அன்சால் சகோதரர்கள் நிறைய தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார்கள். அவர்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வி பெறுகிறார்கள். இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தும் நீலத்திற்கு டிவியில் இண்டர்வியூ கொடுப்பது ஒரு பொழுதுபோக்கு. அவர் நீதிக்கும் பழிவாங்குவதற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்” என வழக்கறிஞர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள்.
“நான் கோர்ட்டுக்கு வந்தது நீதியைப் பெறுவதற்குத்தானே தவிர பணத்துக்காக இல்லை. நீதிக்காகப் போராடும் எங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். ஓர் அநியாயத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடினால், அது தொடர்பான கேள்விகளைக் கேட்கும்போது பதில் சொன்னால் எங்களை வில்லன்களாக்கிவிடுகிறார்கள்” என நீலம் சொல்கிறாள்.
ஒரு வழக்கு இருபது வருடங்கள் நடக்கிறது. அந்த இருபது வருடங்களில் அநேகமாக எல்லா நாட்களிலும் நீலம் நிதிமன்றத்திற்குச் செல்கிறாள். இருபது வருடத்தில் எண்ணற்ற முறை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. பல்வேறு விண்ணப்பங்கள் சேர்க்கப்படுகின்றன. பல்வேறு நீதி ஆவணங்கள் மறைந்து போகின்றன. சாட்சிகள் பலர் பிறழ் சாட்சிகளாகிறார்கள். கால இடைவெளி எல்லோரையும் சோர்வடையச் செய்கிறது. பலர் நீலத்தை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்கள். என்றபோதும் அவர்கள் தங்கள் கொள்கையில் இம்மியும் விட்டுக்கொடுக்காமல் போராடுகிறார்கள். இருபது வருடங்கள் கழித்து அன்சால் சகோதரர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. ஆனால், அப்போதும் அவர்களின் வயதைக் காரணம் காட்டி விடுதலை செய்கிறார்கள்.
“ஓர் நியாயத்துக்காக இருபது வருடம் போராட வேண்டியிருக்கிறது. இருபது வருடப் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளியின் வயதைக் காரணம் காட்டி விடுதலை செய்தால் எப்படி சரியாகும். அப்படியென்றால் இருபது வருடமாக வாழும்போதே மரண தண்டனை அனுபவிக்கும் எங்களுக்கு என்னதான் பதில்?” என்று கேட்கிறாள் நீலம். (நமக்கு முப்பது வருடங்கள் கழித்து ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அடுத்த சில நாள்களில் விடுதலையானதும் நினைவுக்கு வருகின்றன.)
சிபிஐ வழக்கில் அன்சால் சகோதரர்கள் விடுதலை பெற்றாலும், ஆவணங்களைச் சிதைத்த வழக்கில் 2021 ஆம் ஆண்டு அன்சால் சகோதரர்கள் தண்டனை பெற்றார்கள். ஆனாலும் அடுத்த ஆறு மாதத்தில் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று வெப் சீரீஸை நிறைவு செய்துள்ளார்கள்.
இருப்பது ஒன்றை இழக்கும்போதுதான் மனிதன் மிகப் பெரிய துயரத்திற்கு ஆளாகிறான். எதிர்பாராத நேரத்தில், சட்டென்று மறைந்துவிட்ட பிள்ளைகளின் டூத்பிரஸை கணவனும் மனைவியும் பத்திரப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒட்டிவைத்த ஸ்டிக்கர்களைப் பிரித்தெடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த போது பேசியவைகளைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். அவர்களது புகைப்படங்கள்தாம் அந்தவீட்டின் ஆகப்பெறும் இருப்பாகப் பார்க்கிறார்கள். அவர்கள் இல்லாத நாளில் வரும் பிறந்த நாள் துக்க நாளாக மாறுகிறது. அன்றைய தினம் சாப்பிட நேர்ந்த கேக்கைபோலக் கசப்பான கேக்கை அவர்கள் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை என்றாகிறது. “இத்தனை ஏக்கங்களோடு வாழ்வதைவிட நீங்கள் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கலாமே?” என்றுகூட சேகர்- நீலம் தம்பதியினரிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். ”எங்கள் பிள்ளைகள் பொம்மைகள் இல்லை” என மறுத்துவிட்டார்கள்.
பிள்ளைகளை இழந்த பிறகு இனி எதற்குச் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து அவர்களுடைய வருவாயை எண்பத்தைந்து விழுக்காடு குறைத்துவிட்டார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொருமுறையும் சேகர்- நீலம் தம்பதியினரிடம் உங்களுக்கு இழப்பீடாக எவ்வளவு பணம் வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் மறுபடியும் மறுபடியும் தங்களுக்கு நீதிமட்டுமே வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருமுறை, கோபால் அன்சாலும், சுஷீல் அன்சாலும் தண்டனையாகக் கட்டிய பணத்தில் சப்தர்ஜங்க் மருத்துவமனையில் AVUT கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். ஏழைகள் மருத்துவப் பரிசோசனை செய்யுமிடமாகத்தான் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று விதிமுறை எழுதியிருக்கிறார்கள். என்றாலும் கோவிட் -19 காலகட்டத்தில் பணக்காரர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் இடமாக அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் பணமயம்!
சுப்ரீம் கோர்ட் நீதிபதி நீலம்-சேகர் தம்பதியினரைப் பார்த்து, “உங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் அந்தத் தீ விபத்தில் நிறைய உயிர்களை இழந்துவிட்டோம். நிச்சயமாக அந்த உயிர்களுக்கு ஈடாக நாம் எதையும் கொடுக்கமுடியாதுதான். ஆனால் நீங்கள் கொஞ்சம் புரிந்துகொள்ளவேண்டும், எங்களுடைய கொள்கை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்று பழிவாங்குவதில்லை. நாங்கள் அவர்களுடைய வயதையும் நினைத்துப் பார்க்கிறோம். நீங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பைப் பற்றிக் கூறும்போது, “இதுதான் அநீதி. ஒரு குற்றவாளி பணக்காரராகவும் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்துவிட்டால் நம்மால் நீதிமன்றத்திடம் நம்பிக்கை வைக்கமுடியவில்லை. நான் நீதிமன்றத்திற்குச் சென்றதன்மூலம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். இந்த அமைப்பு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது” என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நீலம் கூறியுள்ளார்.
உபகார் சம்பவத்தைப் பற்றியும், அதன்பிறகான நீதிமன்ற அலைக்கழிப்புகள் பற்றியும் Trial by Fire: The Tragic Tale of the Uphaar Fire Tragedy என்ற நூலை நீலம் கிருஷ்ணமூர்த்தியும், சேகர் கிருஷ்ணமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு பிரசாந்த் நாயர், கெவின் லுபெர்சினோ இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். பிரசாந்த நாயர்தான் இயக்கியுள்ளார். ஒருசில பகுதிகளை ரந்தீப் ஜா என்பவரும், தேஷ்பாண்டே என்பவரும் இயக்கியுள்ளனர்.
திரைக்கதையில் ஓர் அழகு இருக்கிறது. எடுத்தவுடன் உபகார் தீ விபத்தைக் காட்டாமல் அதன் முன் பின் சம்பவங்களை விளக்கியுள்ளனர். வெறுமனே சேகர் – நீலம் தம்பதியினர் கதையாக இல்லாமல் ஹர்தீப் சிங்க் என்ற ராணுவ வீரரின் கதையையும் இடையில் இணைத்திருக்கிறார்கள். அவர் 1965 இந்திய சீனப் போரில் கலந்துகொண்டவர். 1971 இந்திய பாகிஸ்தான் போரில் கலந்துகொண்ட குஷ்வந்த் சிங்க் என்பவரின் நண்பர். பார்டரில் நின்று போரில் சண்டைபோட்டபோதுகூட சாகாத ராணுவ வீரர், பார்டர் படம் பார்க்கும்போது தப்பிக்கவே முடியாமல் பலியாகிவிட்டார் என்பது எவ்வளவு பெரிய நகைமுரண்!
தன் குடும்பத்தையே தீ விபத்தில் பறிகொடுத்த கிஸன்பால் என்பவரது கதை மனத்தை உருக்கக்கூடியது. ஆறுவயது குழந்தை உள்பட ஏழுபேரை இழந்த அவர், பிணங்களை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் நிலைகுலைந்து நிற்பது பெரும் சோகம். கிஸன் பாலாக நடித்தவர் அதிகம் பேசவில்லை என்றாலும், அவருடைய உருவமே பல விசயங்களைக் கடத்திவிடுகிறது.
தியேட்டர் ஊழியரின் கதையையும்; தில்லி மின்சார வாரியத்தில் பணியாற்றிய ஒருவரின் கதையையும்; அன்சாலுக்காக அடியாள் வேலை செய்யும் சூரி என்பவரின் கதையையும் இடையில் இணைத்திருக்கிறார்கள். தீ விபத்து சிலருக்கு இழப்புகளையும், சிலருக்கு ஆதாயங்களையும் தந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். திரைக்கதை இப்படிப் பல்வேறு நபர்களையும் காட்டிவிட்டுக் கடைசியில் தியேட்டரில் நடக்கும் தீ விபத்து சம்பவத்தோடு நிறைவு பெறுகிறது.
இந்த வெப் சீரிஸில் குறைகள் இல்லாமல் இல்லை. உண்மைச் சம்பவங்களில் மேலும் அழுத்தம் காட்டாமல் விட்டுவிட்டார்கள். அன்றைய தில்லி முதல்வர் யார்? பிரதமர் யார்? தொடர்ந்து எல்லாப் பிரதமர்களும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? சிபிஐ மூலமாக வழக்கைத் தாமதப்படுத்தியவர்கள் யார்? சிபிஐ அதிகாரிகள் என்ன செய்தார்கள்? போன்ற பல்வேறு விசயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்திய நீதிமன்றங்களை ஓரளவுக்குமேல் விமர்சிக்க முடியாது. என்றாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் வழங்கிய தீர்ப்பு என்ன? தீர்ப்பு வழங்கியவர்கள் யார்? என்பதைக் காட்டியிருக்கலாம். நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதே தெரியாமல், நீலம் கொடுக்கும் பேட்டியை வைத்து அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இன்னும்கூட திரைக்கதையையும் வசனத்தையும் நன்றாக எழுதுவதற்கான வாய்ப்பிருந்தும் அதைச் சற்றே தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. என்றாலும் பல மலிவான படங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தக் காலத்தில், உண்மைச் சம்பவத்தை உண்மைக்கு அருகில் கொண்டுசென்று காட்டியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்ளவேண்டும். சேகர் கிருஷ்ணமூர்த்தியாக நடித்த அபேய் தியோல் படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவருடைய தேவ்-டி மிகச் சிறந்த படம். நீலம் கிருஷ்ணமூர்த்தியாக நடித்திருக்கும் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே அற்புதமாக நடித்துள்ளார். அவர் நிஜத்திலும் போராட்டக் குணம் உள்ளவர். நடிப்பு என்பதே தெரியாத அளவிற்கு நிஜத் தம்பதியினரைப் போலவே படமெல்லாம் வருகிறார்கள். இந்தித் திரையுலகம்தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது!
”நியாயம் என்பது தண்ணீரைப்போல விழவேண்டும். நீதி என்பது நீரோடையைப் போல ஓடவேண்டும்” என்கிறது பைபிள். அதாவது நீதி மிக இயல்பாகக் கிடைக்கவேண்டும் என்பது பொருள். ஆனால், இந்த வெப் சீரிஸ், நீதி கிடைப்பதற்காக நடந்து செல்லும் பாதை எவ்வளவு தூரமானது, எவ்வளவு கடினமானது என்பனவற்றை உணர்த்துகிறது. ”குற்றவாளிகளோடு கைகோர்த்து நிற்கும் இந்திய நீதிமன்ற அமைப்பு துரதிஷ்டமான ஒன்றுதான் என்றாலும், எத்தனை வீழ்ச்சி வந்தாலும் உறுதியோடு எழுந்து நின்று போராட வேண்டும் என நினைப்பவர்களுக்கு எங்களுடைய கதை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்” என்கிறார் நீலம் கிருஷ்ணமூர்த்தி. உண்மைதான்.