உயர்கல்வி குறித்து நாம் ஏன் தொடர்ச்சியாக கவனம் கொள்ள வேண்டியுள்ளது? பள்ளிக்கல்வியின் தேவை குறித்த மிகப்பரவலான மட்டத்தில் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் உள்ளது. ஆகவே, அநேகமாக எல்லாப் பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிப்பதில் தவறுவதில்லை. சமூகத்தின் ஏனைய அங்கத்தினர்களும் பள்ளிக்கல்வியின் சாதக பாதக அம்சங்களை அலசி உதவுவதோ அறிவுரை சொல்வதோ நடந்து கொண்டுள்ளது. இதே அளவுக்கு உயர்கல்வி குறித்தும் நாம் பேச வேண்டியுள்ளது; புரிந்து கொள்ள வேண்டியுள்ளது; விமர்சிக்க வேண்டியுள்ளது; வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.
இந்தியா மிகவும் இளைய வயதினரை அதிகமாகக் கொண்ட நாடு. தற்போது இருக்கும் உயர்கல்வியின் கட்டமைப்பு மிகப்பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. ஒன்றிய பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் சிறப்புத்தகுதி கொண்ட நிறுவனங்கள் ஆகியனவற்றை தற்போதை உயர்கல்வி கட்டமைப்பின் அலகுகளாகக் கொள்ளலாம். ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் சுமார் 165 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிய அளவில் தனிச்சிறப்பு நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் தற்போதைய கணக்குப்படி, 66 ஒன்றியப் பல்கலைக்கழகங்கள், 475 மாநிலப்பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற அரசு மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் சுமார் 125 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (உலக அளவில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ்- இந்திய அறிவியல் கழகமும், ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமே), சுமார் 448 தனியார் பல்கலைக்கழகங்களும் (மாநில அரசின் தனிச்சட்டங்களால் உருவாக்கப்பட்டு, தனியாரால் நிர்வகிக்கபடும் பல்கலைக்கழகங்கள்) என்பதாக மொத்தம் 1104 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சுமார் 44000க்கும் அதிகாமான கல்லூரிகளும், 11000க்கும் அதிகமான தனித்த (பாலிடெக்னிக், நர்சிங், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளிட்டவை) கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவைபோக, பல்கலைக்கழக மானியக் குழுவால் சுமார் 18 நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியான உயர்கல்விக் கட்டமைப்பில் தான் சுமார் 26.1 விழுக்காடு இந்தியர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் படித்துள்ளார்கள் (2021-22 கணக்குப்படி உயர்கல்வியில் சேர்ந்தவகள் சுமார் 4.1 கோடிப் பேர்கள்). இதைத்தான் ஜி.இ.ஆர் (கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ) அதாவது மொத்த சேர்க்கை விகிதம் என்கிறோம். இந்த 26.1 என்கிற விகிதத்தைத்தான் 50க்கும் அதிகமாக ஆக்குவதாக தேசியக்கல்விக்கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது.
தேசியக் கல்விக்கொள்கையும் பிற கொள்கை அறிவிப்புகளும் இந்திய ஒன்றியத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லும் வேளையில், பரந்து பட்டப் பார்வையில், மிகுதியும் மேலை நாடுகளின் உயர்கல்வி அமைப்புகளையே நாம் பிரதி செய்ய முயல்கிறோம் என்பது நடைமுறையாக உள்ளது. தற்போதைய பட்டம் போன்ற அந்தக் காலத்திய தீக்ஷை என்பது கூட இடைநிற்பவர்களுக்கு வழங்கும் வழக்கம் பண்டைய இந்தியாவில் கூட இருந்தததாக அறியக்கிடைக்கவில்லை. ஆனால் நமது தேசிய கல்விக்கொள்கை, ஏனைய மேலை நாடுகளில் உள்ளதைப் போல நான்கு ஆண்டுகள் இளநிலைப் படிப்பு என்பதை முன்வைக்கிறது. மேலும், பலக்கட்ட நுழைவு மற்றும் பலக்கட்ட வெளியேற்றம் என்பதன் மூலமாக, உயர்கல்வியில் இருந்து பாதியில் வெளியேறுபவர்களுக்கும் அதற்குரிய பட்டங்களை அளிக்கும் மேலை நாடுகளின் நடைமுறையை அறிமுகம் செய்கிறது.
உயர்கல்வி தரநிர்ணய அமைப்புகளான நேக் மற்றும் என்.பி.ஏ. போன்றவற்றின் தரநிர்ணய அளவீடுகளும் மதிப்பீடுகளுமே கூட அடிப்படையில் மேலை நாடுகளில் இருந்து சுவீகரிக்கப்பட்டவைதான். பூனையைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் புலி. ஆகவேதான் இப்படியான தரமதிப்பீடுகள் மிகுந்த உழைப்பைக்கோரும் மற்றும் முறைகேடுகளுக்கு வழிகோலுவதாகவும் உள்ளது. இப்படியான செயல்முறைகள் அடிப்படைக் கட்டமைப்புகளை உறுதி செய்தல், மாணவர் நலன்களைப் பிரதானமாக்குதல், புதிய இலக்குகளுக்கு இட்டுச்செல்லுதல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்களுக்கு கல்வி நிறுவனங்களை உந்திச் செலுத்துகின்ற என்ற போதிலும் இயல்பாக இல்லாத பல்வேறு அம்சங்களை, தர மதிப்பீடுகளுக்காக செய்ய நேர்வது சவாலாகவும் இருக்கிறது.
மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு அதாவது சுமார் 60 கோடிப்பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இருக்கும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தோரயமாக 5-6 கோடிப்பேர்கள் மட்டுமே உயர்கல்விக்கு வருகிறார்கள். இந்தத் கணக்கு வரும் ஆண்டுகளில் மிக அதிகம் ஆகலாம். ஆகவேதான் தற்போதைய உயர்கல்விக் கட்டமைப்பு போதாது என்பதையும் உணர்ந்து இணைய வழி மற்றும் தொலைநிலைக்கல்வியை அரசு ஊக்குவிக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் கல்வி நிறுவனங்கள் அதிகமாகவும் சேர்க்கை குறைவாகவும் உள்ளது. இந்தக் காரணத்தாலும், இந்தியாவில் உள்ள மிகப்பெரும் இளையோர் மக்கள் வளத்தாலும், வெகு விரைவில், வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்படலாம். தேசியக்கல்வி கொள்கை வழியாக இது விரைவில் நடந்தேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போதுகூட, வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு சேர்க்கைப் பெற்றுத்தருவது மிகப்பெரும் வணிகமாக உள்ளது இதனால்தான். இந்தியாவில் உள்ளவர்கள் வெளிநாட்டுக்கல்வியை சகஜமாக பெறும் அளவுக்கு வாழ்வாதாரமும் வாய்ப்புகளும் உயர்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.
ஆனால் இந்தப் போக்கு இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியையும் சவாலையும் கொடுக்கும். குறிப்பாக, உயர்கல்வியில் சுமார் 70 விழுக்காடு பங்குகொண்டுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் கடும் போட்டியையும் சவாலையும் எதிர்க்கொள்ள வேண்டும். இது அரசின் கல்வி நிறுவனங்களை மேலும் பாதாளத்தில் தள்ளக்கூடும். தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கம், அரசின் நிதியுதவியில் சிக்கல்கள், நிதித்தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணிகளால் அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் பெரும்பாலானவை சரிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. மிகத்தீவிரமான கவனிப்பு செய்தாலன்றி இவற்றின் சரிவைத்தடுப்பது மிகக்கடினம். இது காலத்தின் கட்டாயம் அல்ல. காலத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாத சூழல் என்பதுதான்.
ஐ.ஐ.டி உள்ளிட்ட தனிச்சிறப்பு நிறுவனங்கள் தவிர மரபான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், கல்வி-ஆராய்ச்சி-சமூகப்பொறுப்பு இவை மட்டுமன்றி அங்கீகாரம் பெறுதல், அதைத் தக்க வைத்தல், ஒவ்வொரு ஆண்டும் கட்டுப்பாடு அமைப்புகளின் (ஏ.ஐ.சி.டி.இ போன்றவை) ஆய்வுகளுக்குத் தயார் செய்தல், தரமதிப்பீடுகளுக்கு தயார் செய்தல், அதை எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு நிர்வாகப்பணிகளில் அதிக உழைப்பையும் நேரத்தையும் செலவிடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில், ஐ.ஐ.டி உள்ளிட்ட தனிச்சிறப்பு நிறுவனங்கள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேக் தரமதிப்பீடு அவசியமாக உள்ளது. பொறியியல் கல்லூரிகள், அல்லது பொறியியல் கல்வி அளிக்கும் பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.யிடம் செர்க்கைக்கான அனுமதியும் அங்கீகாரமும் பெற வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குப் போகும் உயர்புத்தி மாணவர்களை உருவாக்கும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு, நேக் என்.பி.ஏ., ஏ.ஐ.சி.டி.இ. போன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால் அவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளில் மட்டுமே உழைப்பைச் செலவிடுகிறார்கள். ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் தமது போட்டியைச் சமாளிக்கவும், தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும் மிகுதியான உழைப்பை இதில் செலவிடுகிறார்கள். அது கல்வியின் அடிப்படையில் சமரசம் செய்யும் நிலைக்குச் செல்கிறது.
இப்படியான தர மதிப்பீடுகளும் அங்கீகாரக்கட்டுப்பாடுகளும் இயல்பாக இருந்த காலக்கட்டங்களில், அழுத்தம் ஏதுமின்றி கற்பித்தல் நடந்த காலக்கட்டங்களில் நடந்த அறிவுப்பரிமாற்றம் தற்போது குறைவு பட்டுள்ளது. புரஜெக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள், எல்.எம்.எஸ் (லேர்னிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்), பல்வேறு சாஃப்ட்வேர்கள், ஸ்மார்போன்கள் முதலான ஐ.சி.டி டூல் எனப்படும் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் கற்பித்தல் முறைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன என்று நாம் அறியும் வேளையில், ஆசிரியருக்கும் மாணவருக்குமான நேரடித் தொடர்புகள் குறைந்து கொண்டு வருவதையும் பேச வேண்டியுள்ளது. இதை தொழில்நுட்பப் புரட்சி என்றும் சொல்லலாம்; ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உயர்கல்வியின் போதாமை என்றும் சொல்லலாம். வேலைக்கு தேர்வுகள் நடத்தும் மனிதவள மேம்பாடு வல்லுநர்கள், தற்போது வேலைக்கு வருபவர்களின் அடிப்படை அறிவு குறைவாக உள்ளது; எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது; உழைக்கும் எண்ணம் குறைவாக உள்ளது என்றெல்லாம் ஒரு பக்கம் புலம்புகிறார்கள்.
அதில் உண்மை இல்லாமலில்லை. தொழில் நிறுவனங்களில் வேலைக்குப் போவதற்க்கான திறன்களை முன்னிலைப்படுத்தும் பாடத்திட்டம் கல்வியின் ஆன்மாவை சேதப்படுத்துகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்த குறைந்த பட்ச திறன்களையும் முழுமையாகக் கடத்திவிட முடியாத படிக்குத்தான் சூழல் உள்ளது. துறைசார் அடிப்படை அறிவினைக் கொடுக்கும் வகுப்பறை ஆய்வறைக்கல்வியை விடவும், தொழிலுக்குத்தக்க திறன்களை அறிமுகம் செய்யும் இண்டெர்ன்ஷிப், சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் ஆளுமைத்திறனுக்கான பயிற்சிகள், தகவல் பரிமாற்றத் திறன்கள் போன்றவை முன்னிலை பெறுகின்றன. கல்வி அறிவுக்கு என்பதைக் கடந்து கல்வி, வேலைக்கானது என்ற நிலைக்கு வந்து விட்டது. இதை நேயர் விருப்பம் என்று கடந்து செல்லல் ஆகாது. தேசியக் கல்விக்கொள்கை போன்ற அரசின் கொள்கை முடிவுகள் இந்த நிலையை சரி செய்ய வேண்டும்.
ஆனால் பெரும்பாலான அம்சங்கள் வகுப்பறைக்கு வெளியிலான பயிற்சிகளை ஊக்குவிப்பதாக உள்ளது. போட்டிகள் நிறைந்த கல்வித்துறையில், தரமதிப்பீடுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் வரிசைப்படுத்தப்படும் சூழலில், கொள்கை அளவில் மாற்றம் ஏற்படாத வரையில் பெரிய மாற்றம் நிகழப் போவதில்லை. தற்போது வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நம் நாட்டில் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் வேலைசெய்வதோடு தலைமைப் பொறுப்புகளிலும் உள்ளார்கள் என்பதையெல்லாம் கடந்து, அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்பதையும் எதற்காக நமது கல்வி முறை அவர்களைத் தயார் செய்தது என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது.
குறைந்த சேர்க்கை விகிதம், கல்வித்தரத்தை மேம்படுத்துதல், அரசியல் தலையீடுகள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, அங்கீகாரக்கட்டுப்பாடுகள், வெளிநாட்டுப் போட்டிகள், நிதிப்பற்றாக்குறை, தொழில்துறையின் போக்குகள், சமவாய்ப்பின்மை என்று உயர்கல்விக்கான சவால்கள் வளர்ந்துகொண்டே போகும் சூழலில் அரசின் கொள்கை சார் நடைமுறைகள் மற்றும் கல்வித்துறை பங்காளர்களின் ஒருங்கிணைந்த புரிந்துணர்வு இரண்டும் இயைந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் நிலைமை அப்படி இல்லை என்பதே கசப்பாண உண்மை. கொள்கையும் களமும் வேறாக உள்ளது.