துருக்கிய இயக்குநர் நூரியின்( Uzak DISTANT) படம் பற்றிய ஒரு குறிப்பு
“மனித முகம் தான் மிகவும் அழகான தோற்றம் கொண்டது என்று நினைக்கிறேன். முகம் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்கிறது. இது மட்டும்தான் உண்மையை அறிந்துகொள்வதற்கு நம்மிடமிருக்கும் ஒரே வழி. ஏனெனில் பல நேரங்களில் நாம் பேசுகின்ற சொற்கள் உண்மையானது அல்ல. நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மற்றவர்களை ஏமாற்றுகிற போக்கு நம்மிடம் அதிகமாகவே உள்ளது. -Nuri Bilge Ceylan
“ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது” -லூயி மால்-
அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை… – நூரி
எப்போதும் மனித மனது தேங்கிக் கிடக்கும் ஒரு குட்டையை போன்றுதான் உள்ளது. நல்லவைகள் நமது மனதிற்கு சீக்கிரம் நினைவுக்கு வருவதில்லை, ஆனால் கெட்டவைகள் மீது மனதுக்கு ஓர் இயல்பான ஈர்ப்பு இருக்கின்றது.
சினிமாவைப் பொறுத்தவரையில் எத்தனையோ படங்களை நாம் பார்த்தாலும் சில படங்கள் நமது மனதின் இடுக்கில் பதிந்து கனவிலும் நினைவிலும் இருப்பது என்பது இதே மனதில் நிகழும் ஓர் அக நிகழ்வுதான். எத்தனையே வருடங்களுக்கு முன்பு நான் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த ஒரு சினிமாதான் துருக்கிய இயக்குநர் இயக்கிய தொலைவு என்ற இந்தப்படம். பல காலங்களுக்குப் பிறகும் இந்தப் படத்தின் நினைவுகள் மட்டும் ஏனே அழியாமல் இருப்பதும் ஓர் விநோதமான இந்த மனதின் விந்தையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சில படங்கள் நம்மை உயிர்ப்பிக்கும். சில படங்கள் நம்மை, உயிரையும் வருடினால் நினைவுகளில் ஏனோ ஒரு இறக்கி வைக்க முடியாத ஓர் சுமையை இந்தப் பட விம்பங்கள் எனக்குள் ஏற்படுத்தியபடியே இருக்கின்றது.
சில படங்கள் நம்முடைய சுபாவங்களுக்கும் குணத்திற்கும் ஒத்துப்போகம் போது அதுவே நமது மனதில் நம் நினைவுகளில் திரைவெளியில் வந்து செல்லும் காரணங்களாகக் கூட இருக்கலாம். மனதில் உளவியல் வெளியில் உள்ள நமது முகம் நமக்கே சில நேரங்களில் அந்நியதன்மை உள்ளதாக இருப்பதும் இந்தப் படம் எனக்கும் இன்னம் மறக்காமல் இருப்பதற்கு காரணங்களாக இருக்கலாம்.
படத்தில் வரும் தோன்றும் முக்கிய பாத்திரம் அதனுடைய மனோநிலை என்பது சில நேரங்களில் நமது சராசரி மனோநிலையாகவே நமக்கு மிக நெருக்கமான நம்மை நாமே பார்ப்பது போலவே இப்படத்தின் சினிமா மொழியும் உளவியலும் சித்தரிக்கப்பட்டிருப்பது கலை சாதனத்தின் வெற்றியாகவே தோன்றுகின்றது.
மனதின் வரைப்படத்தை இக்மர் பொக்மான் போல் நூரியும் கதாபாத்திரங்களின் செயற்பாடுகளின் வழியாக கண்டறியவே முனைகின்றார். அதனால் இது திரைப்படம் என்ற நிலையிலிருந்து வாழ்வின் ஒரு பொய்மையின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையாகவே இப்படத்தின் சாராம்சம் உள்ளது.
இந்தப் படத்தின் மனித சுபாவங்களின் அண்மை காட்சி என்பது நாம் எத்தனை தூரம் ஒருவருக்கு ஒருவர் உண்மையற்ற மனிதர்களாக, சுபாவ அன்பற்ற வெற்றுக் காகிதங்களாக நாம் வாழ்கிறோம் என்பதை இப்படம் மிகவும் அழகான திரைமொழியிவ் கதைக்கின்றது, அது நம்மை வெட்கப்படுத்துகின்றது.
சாதாரண மனிதர்களை விட கலைஞர்களம், அறிவுஜீவிகளும், படித்தவர்களும் மிக தந்திரசாலிகளாகவும், சுபாவ அன்பற்றவர்களாக, சுயநலவாதிகளாகவும் தன்னையே தனக்குள் மறைத்து வே’ம் போடுபவர்களாகவும் உள்ளோம் என்பதை பற்றிய ஓர் ஆழமான சுய விசாரணைக்கு அழைக்கின்றது இப்படம்.
இந்தப் படத்தோடு இணைந்து எனக்கொரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகின்றது. அந்த சம்பவம் ஒரு கலைஞனைப் பற்றியதுதான்.
இருபத்தோரு வருடங்களுக்கு முன்பு இந்தப் புகைப்படத்திற்கு பெருமைமிகு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை எடுத்த பாவத்திற்காக, வந்த விமர்சனங்களின் அழுத்தம் தாங்காமல் விருது பெற்ற மூன்று மாதங்கள் கழித்து இதை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். உணவு முகாமை நோக்கி நடக்க முடியாமல் நகரும் இந்தக் குழந்தையைக் கொத்தக் காத்திருக்கும் கழுகைப் போல வறுமை இன்னமும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தெற்கு சூடானில் மட்டுமல்லாமல் உலகின் எல்லா பகுதிகளிலும் தொடர்கிறது.
உலகின் மனசாட்சியை உலுக்கிய இந்தப் படத்தை எடுத்த பத்திரிகையாளனின் மனசாட்சியையும் அது சேர்த்து உலுக்கியதால்தான் அவர் தனது 33வது வயதில் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது.ஆனால் இருபத்தோரு வருடங்கள் கழிந்த பிறகும் சூடானில், அதே வறுமைதான் என்பதை நினைக்கையில், உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லையென்றே தோன்றுகிறது.நாம் மனசாட்சியுள்ள ஒரு நல்ல பத்திரிகையாளனை இழந்து விட்டோம். உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர். அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை. 1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி I am Really, Really Sorry……… முகநுால் பதிவு)
அண்மையில் முகபுத்தக பதிவில் இந்தப் படம் பற்றி சகோதரர் வெங்கி மிக அழகாகப் பதிவு செய்திருந்தார். அவர் எழுதிய பகுதியையும் இத்துடன் இணைப்பது பொருத்தமாக அமையும் என்று நம்புகிறேன்.
நான் பார்த்த வரையில், துருக்கிய இயக்குநர் நூரியின் படங்கள் எல்லாமே, மைனர் ஸ்கேலில் கம்போஸ் செய்யப்பட்ட, முழுதும் கீழ் ஸ்தாயியில் வடிவமைக்கப்பட்ட செவ்வியல் இசை போலத்தான் இருக்கின்றன. ஆனால் அவை உருவாக்கும் உணர்வுகளின் சித்திரம் விஸ்தாரமானதும் ஆழங்களும் கொண்டவை. அவர் படங்களின் காட்சிகள் விரைவதுமில்லை; சப்தங்களிடுவதுமில்லை; ”ஒண்ணும் அவசரம் இல்லை; கூட வாங்க; சேர்ந்தே போகலாம்” என்று நின்று நிதானித்து, கை பிடித்துக்கொண்டு, புன்னகையுடன், நட்புடன் அழைத்துச் செல்கிறார். அவர் படங்களைப் பார்ப்பது, பனிமழை பொழியும் நாளில், துருக்கியின்பனி கவிந்த சாலையில், சாலையோர ஹோட்டல் ஒன்றில், குளிருக்குப் போர்த்திய ஜாக்கெட்டோடு சூடாக டீ குடித்துக்கொண்டே அவருடன் உரையாடுவதைப் போன்றது. குளிரில் விறைத்துப் போன உள்ளங்கைகளை டீ கிளாஸைப் பற்றி, அந்த மென் வெம்மையை குளிருக்கு இதமாக உடலிலும் மனதிலும் ஏற்றிக் கொள்வதைப் போன்றது.
அவரின் எல்லாப் படங்களிலும், துருக்கியின் நிலப்பரப்பும், காலநிலைகளும் தான் எத்தனை அற்புதமாகப் பதிவாகிறது! நூரி துருக்கியின் நிலப்பரப்புகளின் காதலர். அதே போல் துருக்கியின் எல்லா காலநிலைகளுக்கும்; கோடையாகட்டும், குளிர் காலமாகட்டும், மழைக் காலமாகட்டும், வசந்தமாகட்டும், எல்லாவற்றையும் தன் கண்களால், காட்சிகளில் மனதை விட்டு அகலாதவாறு பதித்து விடுகிறார். அடிப்படையில் அவர் ஒரு ப்ரொஃபெஷனல் ஃபோடோகிராபர். அதன்பின் ஒளிப்பதிவிற்கும், இயக்கத்திற்கும் நகர்ந்தவர். அவர் படங்களில் ஒளிப்பதிவிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் சமரசங்களற்றது. ஒவ்வொரு காட்சியும், அபாரமான, துல்லியமான ஒரு ஸ்டில் ஃபோட்டோவைப் போன்றது. இதுவரையில் நான் பார்த்த அவரின் படங்கள் எல்லாவற்றிலும், காட்சிகளில் அசைவுகள் என்பது குறைவு. “மினிமலிஸம்” என்பார்களே, காட்சிகளில் அசைவுகளின் மினிமலிஸத்தைக் கடைப்பிடிப்பவர் அவர் என்று நினைக்கிறேன். ஆனால் சொல்ல வேண்டியதை, அழுத்தமாக, ஆழமாக அவரின் காட்சிகள் சொல்லிவிடுகின்றன.
”Uzak”-ன் கதை – பொருளாதார மந்த நிலை காரணமாக, இளைஞன் யூசுஃப் வேலை செய்யும், அவன் வசிக்கும் சிறு நகரத்தின் ஃபேக்டரி மூடப்படுகிறது. அவனோடு சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு வேலையில்லாமல் போகிறது. அவன் அப்பாவும் அதே ஃபேக்டரியில் வேலை செய்து வேலையிழந்தவர்தான். ஏழ்மையான குடும்பம். வறுமை. யூசுஃப் அதிகம் படிக்காதவன். இஸ்தான்புல்லில் கப்பலில் ஏதேனும் வேலை கிடைத்தால் நல்லதென்று நினைத்து, வேலை தேடுவதற்காக இஸ்தான்புல்லில் வசிக்கும் உறவினர் மஹ்மூத் வீட்டிற்கு வருகிறான்.
இஸ்தான்புல்லில் அந்த அபார்ட்மெண்ட் வீட்டில் தனியாகத்தான் வசிக்கிறார் மஹ்மூத். கொஞ்சம் வசதியானவர். ப்ரொஃபஷனல் ஃபோடோகிராஃபர். சலிப்பான வாழ்க்கை அவருடையது. இண்ட்ராவர்ட். மனைவி நாஜனுடன் விவாகரத்தானவர். அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் இன்னொருவரின் மனைவியுடன் காதல் உறவில் இருக்கிறார். அவரின் நாட்கள் வெறுமையும், உற்சாகமின்மையும் கொண்டவை.
யூசுஃப் அவர் வீட்டில் தங்கி, குளிர்காலத்தின் பனிமழை பொழியும் அந்நாட்களிலும் தினமும் வேலை தேடி அலைகிறான் (அவனிடம் போட்டுக் கொள்வதற்கு ஒரு நல்ல ஷூ கூடக் கிடையாது). அவன் நினைத்தது போல் வேலை சீக்கிரம் கிடைக்கவில்லை. துறைமுகத்திலும், கப்பலிலும் வேலை இல்லை என்கிறார்கள். வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. அம்மா ஃபோனில் தனக்கு பல்வலி எனவும், டாக்டரிடம் போகக் கூட காசில்லை என்றும் சொல்கிறார். யாரிடமாவது கடன் வாங்கிக்கொண்டு போய் டாக்டரைப் பார்க்குமாறும், தனக்கு வேலை கிடைத்ததும் பணம் அனுப்புவதாகவும் சொல்கிறான் யூசுஃப்.
மஹ்மூத்-திற்கு யூசுஃப் வீட்டில் தங்கியிருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனுடன், அவருக்கு அவ்வளவாக ஒத்துப் போவதில்லை. வெளியில் போய்விட்டு வந்தால் ஷூவை, ஷூ ரேக்கில் வைப்பதில்லை, அறையில் விளக்குகள் போட்டால் அறையிலிருந்து வெளியேறும்போது அணைப்பதில்லை என்பது போன்று சின்னச் சின்ன எரிச்சல்கள் யூசுஃப் மேல் அவருக்கு உண்டாகிறது. யூசுஃப் உடனிருப்பதால் இரவுகளில் அவருக்குப் பிடித்த பார்ன் படங்கள் பார்க்க முடிவதில்லை (அவன் உடனிருந்தால், தனக்குப் பிடித்த ”ஆண்ட்ரேய் டர்கோவ்ஸ்கி”-யின் படங்களைப் பார்ப்பது போல் நடிக்கிறார். அவன் தூங்கப்போன பின், பார்ன் பார்க்கிறார். அவன் திடீரென்று பெட்ரூமிலிருந்து வெளியில் வர அவசர அவசரமாக சேனலை மாற்றுகிறார்). அவனுக்கு வேலை கிடைத்து சீக்கிரம் போய்விடுவான் என்று முதல் வாரம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாயிருக்கிறார்.
கிராமப்புறப் பகுதி ஒன்றுக்கு ஃபோட்டோக்கள் எடுக்கச் செல்லும்போது யூசுஃபையும் உதவிக்கு உடன் அழைத்துச் செல்கிறார். திரும்பியதும் அவனுக்கு அதற்கான சம்பளத்தைக் கொடுக்கிறார். யூசுஃப் அப்பணத்திலிருந்துதான் அம்மாவிற்கு மருத்துவச் செலவிற்கு பணம் அனுப்புகிறான்.
ஒருமுறை மஹ்மூத்தின் சகோதரி அம்மாவிற்கு உடம்பு சரியெல்லையென்று ஃபோன் செய்ய, யூசுஃபை தனியே வீட்டில் விட்டு, அம்மா வீட்டிற்குப் போய்விட்டு ஓரிரு நாட்கள் கழித்து திரும்பும் மஹ்மூத், வீட்டை யூசுப் வைத்திருந்த நிலையைக் கண்டு அவன் மேல் இன்னும் கோபமாகிறார். யூசுஃபிற்கு வேலை கிடைத்தபாடில்லை. ஒரு கட்டத்தில் யூசுஃபிடமே “எப்ப உனக்கு வேலை கிடைக்கும்? எப்ப இங்கேருந்து கிளம்புவே?” என்று நேரடியாகக் கேட்டே விடுகிறார்.
ஒருநாள் வாட்ச் ஒன்றைக் காணோமென்று வீடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார் மஹ்மூத். யூசுஃப், தன்னைத்தான் அவர் சந்தேகப்படுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, தான் அதைப் பார்க்கவில்லையென்றும், தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றும் மறுபடி மறுபடி சொல்கிறான். மஹ்மூத் மறந்து வைத்த இடத்தில் வாட்ச் இருக்கிறது; ஆனால் வாட்ச் கிடைத்ததை மஹ்மூத் யூசுஃபிற்குச் சொல்லாமல் விடுகிறார். மனம் குமையும் யூசுஃப் மறுநாளே, மஹ்மூத்திடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
எத்தனை பொருத்தமான தலைப்பு “Uzak” (Distant)! தூரம்/தொலைவு; மனங்களுக்குள்தான் எத்தனை தூரம்/இடைவெளிகள்… பணமிருக்கும் மஹ்மூத், ஏழை யூசுஃப் இருவர் மனங்களின் வித்தியாசம்; அவற்றுக்கிடையிலான தூரம்; மஹ்மூத்திற்கும், அவன் விவாகரத்திற்கு கையெழுத்திடும் அவன் மனைவி நாஜனுக்கும் இடையிலான தூரம்; அதே தெருவில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணிடம் (எப்ரு செலான்) தன் விருப்பத்தைச் சொல்ல முடியாமல் தயங்கித் தயங்கி பின்வாங்கும் யூசுஃபிற்கும் அப்பெண்ணிற்குமான தூரம், தன் புதிய ஸ்நேகிதியிடம் கூட தன்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாத மஹ்மூத்தின் மனதின் தூரம்…
”Uzak”-ன் தயாரிப்பாளரும் நூரிதான். திரைக்கதை எழுதி இயக்கியதோடு, படத்திற்கு ஒளிப்பதிவும் அவர்தான். குளிர்கால, பனிமழை பொழியும் ’இஸ்தான்புல்’லின் அழகை அள்ளி எடுத்திருக்கிறார். “Uzak” – மனங்களின் தனிமையைப் பேசும் ஆகச் சிறந்த படம்.
சகோதரர் வெங்கடேஷன் எழுதிய இந்த பதிவு நாம் எவராக இருந்தாலும் சரி நண்பர்களே, நம்மிடம் அன்பும் மனித நேயமும் இல்லையெனில் நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்.
”நான் மனுசர் பாi’களையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகின்ற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தாக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை.
”உன்னைப்போல் பிறனை நேசி” என்ற இயேசு கிறிஸ்துவின் பிரதானமான போதனை எவ்வளவு வலிமையானது என்பதை இந்த நூற்றாண்டு மிகவும் அழுத்தமாக உணர்த்தகிறது. அன்பில்லா இந்த உலகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று பைபிள் மிக அழகான விதத்தில் பேசியுள்ளத. அது சமகாலத்திற்கு எத்தனை பொருத்தமானது என்று பாருங்கள்.
”கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்ற அறிவாயாக. எப்படியெனில் மனுசர்கள் தற்பிரியராயம், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயம், தூசிக்கிறவர்களாயும், தாய், தகப்பன்மாருக்குக் கீழ்படியாதவர்களாயம், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயம், இச்சைடயக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், துரோகிகளாயம், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்..’என்று கடைசிக்காலத்தின் மனித சுபாவம் எத்தகையது என்பதை பேசுகின்றது.
இஸ்தான்புல்லின் நகரத்தில் ஒரு வசதியான அபார்ட்மெண்ட் வீட்டில் தனியாக வசிப்பவன் மஹ்மூத். அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலை தேட வருகின்றான். இளைஞனான யூசுப், தனிமையில் சுதந்திரமாகவும் பல போராட்ட மனோ நிலையோடும் வாழும் மஹ்மூத் வாழ்க்கையில் இவனின் வருகை, அவனின் மன சித்திரங்களை கலைக்கின்றது. இவர்கள் இருவருக்கும் நடக்கும் தனிப்பட்ட மனோநிலையில் நடக்கும் மனோ நிலை பிரச்சினையே இப்படம் பேசும் மொழி. அன்பற்ற ஒரு மனிதன் சக மனிதனுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை. எல்லாம் தனக்கு மட்டும் சரியாக இருந்தால் போதும் என்ற வாழ்பவர்களின் நிலையை இப்படம் மிக அருகில் கொண்டு வந்து காட்டுகிறது.
ஒரு கலைஞனாக இருந்தாலும் அன்பற்ற தன்மை என்பது அவனை தனிமை எனும் மரணத்திற்கு தள்ளும் வல்லமை கொண்டது. தனிமை என்பதும் பாவத்தின் விளைவுதான் என்பதை இப்படம் மௌனமாகவே பேசுகிறது.
சாதாரண ஒரு மனிதனுக்கு பிரச்சினையோடு வாளும் ஒரு சகநண்பனுக்கு உதவி செய்வதற்கான மனமற்ற ஓர் சுயநலமான மனதை கொண்டவனின் இருப்பு என்பது வெறுமையாக போகின்றது என்பதற்கு இப்படத்தில் வரும் மஹ்மூத் நல்ல உதாரணம். கலை, சினிமா, அரசியல், மதம் எல்லாம் கொண்ட ஒரு மனித மனது சக மனிதனை நேசிக்காத போது, உணவு உடை உறையுள் அடிப்படை ஆதாரம் ஏதுமற்று போராடும் மனித குலத்திற்கு கலையும் வாழ்க்கையும் அன்பை வாழ்ந்து காட்டாவிட்டால் அந்த வாழ்க்கை என்பது கைவிடப்பட்ட பாழ் நிலமே.
”மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுசனுக்கு இல்லையென்று அறிந்தேன்.’
சாரமோன் ஞானியின் கடைசி நேரத்தின் ஞானம் இதுதான். சாலமோன் போல் உலகில் ஞானியாக வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை., அவனுடைய இறுதி நேரத்தில் இந்த உடல் மாயை என்று தெரிந்து கொள்கிறான்.
எல்லா மனிதனம் ஒரு அன்புக்காக ஏங்கித் தவிக்கிறான். இந்த உலகம் அன்பற்ற நதியாக வறண்டு தவிக்கின்றது. கலைஞனாக உள்ள மனிதனோ தனது கலையை நேசிக்கிறான். ஆனால் சக மனிதனை மறந்து போகிறான். அதிகமான பொய்களும், புனைவும், ஒப்பனை உள்ள இடங்களாக கலை சாலைகள் உள்ளது.
இந்தத் திரைப்படத்தில் மனிதனுக்குகு குறிபாக கலைஞனுக்குள் மறைந்திருக்கும் இரட்டை தன்மையை பற்றிய சுயத்தை படத்தின் இயக்குநர் தன்னை வைத்து சுய விசாரணை செய்கிறார். படத்தில் வரும் கலைஞனின் தனிமை உணர்ச்சிக்கும், வெறுமைக்கும் காரணங்கள் அவனின் சுயநலம், சுயநீதியம், அவனுக்குள் மறைந்திருக்கும் “பாவம்’ என்ற உளவியல் வியாதியுமே காரணம்.
+94 76371 2663
Mariemahendran134@gmail.com