மூளை மனம் மனிதன் – 16
பழைய நகைச்சுவை ஒன்று உண்டு
“சார் உங்களுக்கு எப்படி கார் ஆக்ஸிடண்ட் ஆச்சு?
அதோ அங்க ஒரு புளிய மரம் தெரியுதா?
நல்லாத் தெரியுதே
நேத்திக்கு நைட்டு எனக்கு அது தெரியலை! அதான்! ”
எண்ணம், மொழி , பேச்சு, உணர்வுகள், விழிப்புணர்வு, நினைவுகள் எனப் பல்வேறு விஷயங்களும் மூளையில் எந்தெந்தப் பகுதிகளில் எவ்விதம் உருவாகி இயங்குகின்றன என்பதைப் பார்த்து வருகிறோம். அடுத்து நாம் பார்க்க இருப்பதும் மிக முக்கியமான விஷயம்தான். கவனம்! புலன்கள் வாயிலாக ஏராளமான தகவல்கள் நம் மூளையைத் தாக்குகின்றன. ஆனால் ஒரு சில தகவல்களை மட்டும்தான் நான் கவனிக்கிறோம். Attention எனப்படும் இந்த கவனம் புலன்களில் வந்து குவிகிற தகவல்களிலிருந்து நமக்குத் தேவையானதை மட்டும் வடிகட்ட உதவுகிறது. Attention , Concentration ஆகிய இரண்டுக்கும் நாம் கவனம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டுக்கும் சின்ன வேறுபாடு இருக்கின்றது.
அட்டென்ஷன் என்பது நமது கவனத்தைக் குவிக்கும் முயற்சி. ஒரே விஷயத்தில் நீடித்து நமது அட்டென்ஷனை வைத்திருப்பது கான்சன்டிரேஷன். இந்தக் கட்டுரையை அடிப்பதற்காக லாப்டாப்பில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது கவனத்தை (Attention) கணினியில் குவிக்கிறேன் (Focus). திடீரென ஏதோ சத்தம் கேட்க உடனே கவனம் அங்கே திசை திரும்புகிறது ( Shift) . ஏதோ பாத்திரம் விழுந்த ஓசை என்று தெரிந்த பிறகு மீண்டும் கவனம் கணினிக்கு வருகிறது(Revert) . கவனம் என்பதில் இந்த மூன்று விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. தொடர்ச்சியாக ஒரு விஷயத்திலேயே நமது கவனத்தைக் குவிப்பதற்கு ஒருமுகப்படுத்துதல் (Concentration) என்கிறோம் .
மூளையின் மற்ற எல்லாச் செயல்பாடுகளைப் போன்றே கவனம் என்னும் செயல்பாட்டுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம். தலைப்பாக்கட்டு பிரியாணிக் கடையில் ஒரு கட்டுகட்டிவிட்டு மதியம் மூன்று மணிக்கு ‘யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத பிரதியின் பின் நவீனத்துவக் கதையாடல் கூறுகளின் உள்ளீடாக ஊடுபாவுகளாகப் பிணைந்திருக்கும் அமைப்பியல் சிக்கல்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளின் பரிமாணங்கள்……” என்பதுபோல் புள்ளியே வைக்க மறந்த வாக்கியங்களைப் படித்தால் கட்டாயம் நமது விழிப்புணர்வு வீழ்ச்சியடைந்து எதையும் கவனிக்க முடியாது.
கவனம் என்பது நாடக மேடையில் அடிக்கும் ஃபோகஸ்லைட் மாதிரி. அந்தக் கணம் மூளை எந்தத் தகவலைப் பற்றிக் கொள்கிறதோ அதில் அதன் கவனம் குவிகிறது. நூற்றுக்கணக்கான புறத்தூண்டுதல்கள் நமது ஐம்புலன்களையும் கணந்தோறும் தாக்குகின்றன. இவை எல்லாவற்றையும் வடிகட்டி மூளைக்குக் கொடுப்பதற்கு தலாமஸ் (Thalamus) என்ற பாகம் செயல்படுகிறது. மின் காந்த அலைகளில் சிக்னல் ((signal), நாய்ஸ் (noice) என்று இரண்டு விஷயங்களைச் சொல்வார்கள். நமக்குத் தேவையான அலைவரிசையில் வருவதுதான் சிக்னல். தேவையில்லாத தகவல்கள் நாய்ஸ்.
ஒரு திரையரங்குக்குள் நுழைகிறோம். நுழைந்த அமர்ந்த சில நிமிடங்களுக்கு நம் புலன்களுக்கு ஏராளமான தகவல்கள் சென்று கோண்டே இருக்கின்றன. ஏஸியின் குளிர் நம் உடலைத் தாக்குவது, பக்கத்து சீட்டிலிருந்து பாப்கார்ன் மணம், அவ்வப்போது சிணுங்கும் செல்போன்கள், உங்கள் சீட்டின் அசௌகரியமான பொசிஷன், 3 டி படம் என்றால் கண்ணாடியின் உறுத்தல் எனப் பல தகவல்கள் மூளைக்குச் செல்கின்றன. ஆனால் படம் ஆரம்பித்த பிறகு எல்லாவற்றையும் கவனிக்காமல் திரைப்படத்திலேயே நம் கவனம் குவிந்து விடுகிறது. ஒரு கணத்தில் நம்முடைய கவனத்தில் இருக்கும் விஷயத்தை ஃபோகஸ் என்றும் கவனத்தில் இல்லாத விஷயங்களை மார்ஜின் என்றும் சொல்கிறார்கள்.
திடீரென கவனத்தின் விளிம்பில் இருப்பது கவனத்தின் மையமாகலாம். மையத்தில் இருப்பதி விளிம்புக்குச் செல்லலாம். பக்கத்து சீட்டில் இருப்பவர் திடீரென அய்யோ எனக் கத்தினாலோ, நம் காலை ஒரு எறும்பு கடித்தாலோ நம் கவனம் மாறுகிறது. ஒரு பெரிய விருந்தில் ஏகப்பட்ட இரைச்சல் இருக்கும். அவற்றை எல்லாம் வெறும் நாய்ஸ் என நமது கவனம் விளிம்பில் வைக்கிறது. திடீரென நம் பெயரை யாராவது உச்சரித்தால் சட்டென்று நம் கவனம் அங்கே மையம் கொண்டு நாய்ஸ் என்பது சிக்னல் ஆகிறது.
தேவையற்றவற்றைத் தடுக்கும் இந்த சல்லடை வேலையை செயல்பாடுகளைத் தலாமஸ் என்ற பகுதி செய்கிறது என்று பார்த்தோம். இது சரியாகச் செயல்படாவிட்டால் நமது மூளை வெகுவாகக் குழம்பிவிடும். புற உலகிலிருந்து வரும் தகவல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்ற குழப்பம் மிகுந்து விடும்.
ஒரு அழகான ஜென் கதை உண்டு. ஒரு ஜென் துறவியும் அவரது சீடனும் ஓர் இரவு ஓரு புது ஊரில் தூங்கினார்கள். அவர்கள் தங்கியிருந்த மடத்தின் அருகே நாய்கள் இரவு முழுதும் குறைத்துக் கொண்டே இருந்தன. சீடனால் தூங்க முடியவில்லை. ஆனால் குருவோ அமைதியாகத் தூங்கினார். மறுநாள் காலை அந்த சீடன் குருவிடம் ‘எப்படி நாய்கள் குரைக்கும் சத்தத்தில் தூங்கினீர்கள்? எனக் கேட்க அதற்கு அந்த குரு சொன்னார் ‘ நீ அந்த நாய்கள் குரைக்கக் கூடாது என நினைத்தாய். அது நடக்கவில்லை. நான் அவை குறைப்பது எனக்குக் கேட்க வேண்டாம் என நினைத்தேன். அது நடக்கக் கூடியது” என்றார். புறச்சூழலில் எத்தனை கவனச் சிதறல் ஏற்படுத்துக்கூடிய தூண்டுதல்கள் இருந்தாலும் அவற்றை அலட்சியப் படுத்த நம் மூளையால் மனதால் முடியும்.
தலாமஸ் மட்டுமல்ல மூளையின் பிற பகுதிகளும் நாம் ஒரு விஷயத்தைக் கவனிப்பதற்கு உதவுகின்றன. தலாமஸ் ஒரு வடிகட்டி போல் நமக்குத் தகவல்களை அளிக்கிறது அதன் பின் நமக்கு வரும் தகவல்களில் எதைத் தேர்ந்தெடுப்பதில் மூளையின் சிங்குலேட் கார்டெக்ஸ் (Cingulate cortex) என்ற பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் காதலியும் கணக்கு வாத்தியாரும் ரோட்டில் நடந்து வரும்போது யாரைக் கவனிப்பது என்ற முக்கியத்துவத்தை இந்தப் பகுதிதான் செய்கிறது.
பரிணாம ரீதியாக இந்த சிங்குலேட் பகுதி நமக்கு உடனடியாக எதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுக்க உதவுகிறது. அதாவது குவிந்திருக்கும் மெயில்கள், குறுஞ்செய்திகளில் எதற்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என முடிவெடுப்பது போல் வெளியுலகில் உள்ள தகவல்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முடிவெடுப்பது இதுதான். அதே சாலையில் ஒரு புலியும், காதலியும் வந்தால் புலிக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.
பரிணாம ரீதியாக இந்தப் பகுதியின் செயல்பாட்டில் இன்னொன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகம் இருக்கும் போது எப்பவுமே மூளை இருப்பதிலேயே அதிகம் எதிர்மறையான சாத்தியக் கூறையே யூகிக்கும். இருட்டில் குழாயா பாம்பா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றால் பாம்பாகத்தான் இருக்கும் என்றே முடிவு செய்து ஜாக்கிரதையாகச் செல்வோம். இப்படி இருந்தால்தான் உயிர்பிழைக்கும் வாய்ப்பு அதிகம் (Survival advantage).
இந்தப் பகுதி சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகச் செயல்படக் கூடும். குறிப்பாக நாம் பதட்டத்தில் இருக்கும் போது. ஒரு பெரிய பங்களாவில் தனியாக இரவில் இருக்கிறீர்கள் என்றால் சின்னச் சின்னச் சத்தங்களைக் கூட அதிமுக்கியமான விஷயங்களாக எண்ணிப் பதட்டப் படுவோம். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் இப்பகுதி சில சமயம் தாறுமாறாக இயங்கத் தொடங்கும். அப்போது சாதாரண விஷயங்கள் கூட அச்சுறுத்துவதாக இருக்கும். தெருவில் யாரோ சென்றால் நம்மைக் கண்காணிப்பதாக எண்ணிக் கொள்வோம்; யாரேனும் உணவை கொடுத்தால் அதில் விஷம் இருப்பதாகக் கருதுவோம்; மனப்பிறழ்வுகளும், பிரமைகளும் ஏற்படுகிண்றன (Delusions and Hallucinations). டோப்பமின் என்ற ரசாயனம் அதிகமாகச் செயல்படுவதால் இந்த விளைவுகள் ஏற்படுகிறதாம்.
ஒரே விஷயத்தில் கவனத்தைக் குவிப்பது, தியானம் செய்யும் போது என்ன ஆகிறது, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் மல்டி டாஸ்கிங்க் செய்தால் என்ன ஆகிறது, இந்த செல்போன் யுகத்தில் கவனச்சிதறல் ஏன் ஏற்படுகிறது? இவை பற்றி எல்லாம் அடுத்த கட்டுரையில்.