தோட்டத்தில்
குழி தோண்டிப் புதைத்த
அம்மை
நள்ளிரவில்
பக்கத்தில் விழித்தபடி படுத்திருப்பதைப்போல்
ஓர் நொடி
உறையவைத்துவிடுகிறது
நம்மை.
நீயா
நிசமாகவே நீதானா
என்று பதைக்கிறது.
பிறகு நீயுமா என்று தேம்புகிறது.
நீயாவிலிருந்து நீயுமாவை அடைவதற்குள்
உடைந்து தூளான
ஓராயிரம்
கண்ணாடிச் சில்லுகளைக்
கடக்க வேண்டியிருக்கிறது
ரத்தக் கால்களோடு.
அதுவரை நம்பிய
அத்தனை உறவுகளின்
முகத் தசையையும்
பித்துப் பிடித்துப் பற்றியிழுத்து
முகமூடி தேடச் செய்கிறது.
கடந்துபோன
பிரிய கணங்களை
சந்தேகக் கல்லில்
அடித்துத் துவைத்து
பிழிந்து உலரவைத்து
நிறமழிக்கிறது.
தன் தவறுதானென
தனது நம்பிக்கையின் மீது
தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்கிறது.
ஆன்மாவின்
கழுத்தை இறுக்கித் தற்கொலைக்கு முயல்கிறது.
இயலாமல்
இறுதியாக
உடைந்து அழுகிறது.
ஒரு துரோகத்தால் என்ன செய்யமுடியும்?
புதுப் புதுக் கிளை தேடி
அமர்கிற பறவையின்
எச்சரிக்கை உணர்வுடனே
என்றென்றைக்குமாக
இனி உறவுகளை
அணுகும் மனதைப் பரிசளிப்பதைத்தவிர.