பெருங்கடல் –
யாராவது கூட இருந்தால்
மாலைநேரம் லேசானதாக ஆகிவிடுகிறது
யாராவது கூட வந்தால் தொலைவுப் பயணம்
அண்மைப்பயணம் ஆகிவிடுகிறது
யாராவது கூடச் சாப்பிட்டால்
உணவு
பால்யத்தில் சாப்பிட்டதுபோல்
அவ்வளவு ருசியாக இருக்கிறது
நான் பிறக்கும்போது
வீறிடலின் கடவுளும்
திடுக்கிடலின் ராணியும்
கூட இருந்ததால்
பிறவிப்பெருங்கடல்
ததும்புகிறது ஒரு
சின்னஞ்சிறிய
வாளித்தண்ணீராக
…………
தண்ணீர் பாட்டில் –
அரசு அலுவலகத்தில்
தூசி படிந்த படிக்கட்டில்
சரிந்தபடி கிடக்கிறது , பாதி
காலியான வாட்டர் பாட்டில்
அதன்
கதை எனக்குத் தெரியாது
ஆனால் அதன்
கவிதை
எனக்குத்தெரியும்
குப்பை வண்டியில்
நிரம்பி வழிகின்றன
கிழிந்த அட்டை டப்பாக்கள்
உடைந்த பாட்டில்கள்.
அவற்றின்
கதை
எனக்குத் தெரியாது
ஆனால் அதன்
கவிதை
எனக்குத் தெரியும்
நான் பிறக்கும் முன்பே
கட்டப்பட்ட இவ்
வீட்டில்
சுவர்கள் மிகவும்
பழுப்பேறி இருக்கின்றன
அதன் கதை
எனக்குத் தெரியாது
ஆனால்
கவிதை
எனக்குத் தெரியும்
தொலைக்காட்சியில்
வானிலை அறிக்கை
தெரிவிக்கிறது,
நாளை கனத்த மழை பெய்யுமென்று.
அவ் அறிவிப்பின்
கவிதை எனக்குத் தெரியாது
ஆனால் அதன்
கதைகள்
எனக்குத் தெரியும்
……………..
நெருங்குதல் –
நீ என்னை நெருங்கும்போது
உன் மலர்ந்த முகம் தெரிகிறது
நீ பிரிந்து செல்லும்போது
உனது சட்டையின் பின்புறம்.
நீ சொல்லிவிட்டுச் சென்றாலும்
சொல்லாமல் சென்றாலும்
நம் இடைவெளி
ஒரே மாதிரித்தான்
அதிகரிக்கிறது
இதில்
வருத்தப்பட்டோ
மகிழ்ந்தோ
ஆவதென்ன
மேலும்
நீ சற்று தள்ளித்தள்ளி செல்ல
எல்லாருமாக ஆகிவிடுகிறாய்
இதில்
மகிழ்ந்தோ
வருத்தப்பட்டோ
ஆவதென்ன
……………..
கொண்டாட்டம் –
கடந்த ஐந்து நிமிடங்களாக
என் அலைபேசியில்
பொய்ச் செய்தி
ஏதும் வரவில்லை
தொலைக்காட்சியில்
அரசு
தந்திரமான திட்டங்கள்
எதுவும் அறிவிக்கவில்லை
சாலையில்
எந்தவித வீரிடலும்
கேட்கவில்லை
இந்த ஐந்து நிமிடத்தைக்
கொண்டாடுவேன்
யாரோடு?
இதோ இந்த
சாலையோரம் நிற்கும்
நோஞ்சான் செடியோடு
அதன்
கீழே
உடைந்து கிடக்கும்
கடவுளின் கடிகாரத்தோடு