1
உலகின் முதல் மனிதன்
துரோகத்தை எதிர்கொண்ட போது
ஒரு நட்சத்திரம் மின்னத் துவங்கியது.

பின்
நண்பர்கள்
உறவுகள்
காதலி
எனத் தன் ஆடைகளை
மாற்றத் துவங்கியது

இப்போது லட்சோப லட்சம் நட்சத்திரங்கள்
பல்லாயிரம் மரணங்கள்

இழப்பின் கணம் தாளாமல்
இரவுகள் விழித்திருப்பதுகூட
இதற்குத் தான்
*
2
ஆயிரம் துரோகங்களைச்
சந்தித்தவனின் கண்களைப் பார்த்தேன்
என் முதுகில் குத்தி இருந்த
ஒற்றைக் கத்தியைப் பிடுங்கியபடி சொன்னான்:
‘மூச்சு முடியும் வரை உன் பிணத்தை நீயே சும!’
*
எவ்வளவு நம்பி இருந்தால்
இவ்வளவு உடைந்திருக்க முடியும்
எவ்வளவு நேசித்திருந்தால்
இவ்வளவு வெறுத்திருக்க முடியும்

சொற்களை நம்புகிறவனுக்கு
சொர்க்கத்தின் பாதைகள் இல்லை
*
3
அப்பாவைப் போல்
பாவனை செய்யும் போது
உதட்டில் கறுப்பு வண்ணம் தீட்டும்
என் செல்ல மகனே
வடுக்கள் நிறைந்த
அவன் உள் முதுகை
நீ பார்த்திருக்க மாட்டாய் தானே
*
4
கத்தி எடுத்தவன் வாழ்வு
கத்தியால் முடியுமெனில்
சொல் எடுத்தவன் மரணம்
சொற்களன்றி வேறென்ன?
*
5
‘‘நாளைக்கு மூன்று முறை
திரவியங்கள் பூசுவதேன் சுந்தரா’’
‘‘இறந்தவன் வாசத்தின்
குரல்வளை மூடத்தான் நறுமணா’’
*